Tuesday, March 31, 2015

குழந்தைகளை முத்தமிடாமல், அரவணைக்காமல் வளர்க்கும் லண்டன் பெற்றோர்

லண்டனில் எங்கள் தாய்ப்பாசம்!


இளைய அப்துல்லாஹ்

குழந்தைகளை எவருமே விரும்பாமல் இருப்பதில்லை.
குழந்தைகளோடு பேசுவதும் சிரிப்பதும் அவை பேசுகின்ற மொழியும் எப்போதும் மனதை சந்தோசிக்கச் செய்பவை. குழந்தைகளோடு வாழவே நாம் விரும்புகிறோம். குழந்தையின் உலகம் கவலையில்லாதது என்று சொல்லிக்கொண்டு குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம்.
குழந்தைகள் ஒரு குடும்பத்தை மனம் மகிழச் செய்கின்றன. எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி கலியாணம் முடித்து எட்டு வருடங்களுக்குப் பின்னர்தான் பிள்ளை உண்டாகி இருக்கிறா.

எங்களுக்கு எல்லாம் இனிப்பு கொண்டுவந்து தந்து அவவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா. அவவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம், தான் கர்ப்பமாக இருப்பது தொடர்பாக இருந்தது. குழந்தைகள் எமது இந்தியக் கலாசாரத்தில் முக்கிய விடயம். அது இல்லாத தம்பதியினரை சமூகம் பார்க்கும் விதமே தனியாகத்தான் இருக்கிறது. மலடி என்ற அடைமொழியை நீக்குவது ஒரு குழந்தையின் பணியாக இருக்கிறது.

இங்கும் ஆண்மீதான குறைபாடு இருந்தாலும் பெண்ணுக்குத்தான் அந்தப்பட்டப்பெயர் சூட்டப்படுகிறது. வஞ்சிக்கப்படுவது அநேகமாகப் பெண்கள்தான். கடந்த மாதம் லண்டனில் வாகன நெரிசல் மிக்க தெருவொன்றில் வைத்து ஒரு பெண்மணி எனது காரை பின்பக்கமாக இடித்துவிட்டா. அவ லண்டனில் நல்லதொரு வேலையில் இருக்கிறா என்பது அவவின் நடை உடைபாவனையிலிருந்து எனக்குத் தெரிந்தது.

அவவின் காரும் புதிதாக இருந்தது. பிழை முழுக்க அவவில்தான். பொறுமையாக வராமல் பின்பக்கம் அவசரப்பட்டு வந்து முட்டிவிட்டா. அவவுக்கும் தெரியும். அந்த விபத்தை அல்லது அவ எனது காரில் முட்டியதை இன்சுரன்ஸ் கம்பனி ஊடாக டீல் பண்ணினால் பெரும் தொகையை அவ இழக்கவேண்டிவரும். எனவே அவ காரைவிட்டு இறங்கிவந்து சொன்ன முதல் வாசகம். "காருக்குள் குழந்தை இருக்கிறது". அப்பொழுதுதான் பார்த்தேன். மிக அழகான "மொழுக்" என்று ஒரு குழந்தை பின் சீற்றில் உலகத்தை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தையைப் பார்த்தவுடன் எனக்கு மனம் முழுக்க பரவசம். இரக்கம். இந்தக் குழந்தையின் தூக்கத்தை கலைக்கக்கூடாது என்ற மனநிலை தானாக வந்துவிட்டது. எனக்கு அவ சொன்னா:
"நான் குழந்தையை கொண்டு வீட்டுக்குப் போகவேண்டும். மற்றது இன்சுரன்ஸ் கம்பனிக்குப் போகவேண்டாம". போனால் அவவின் மாதக் கட்டணம் கூடும். ஆனால் இங்கே லண்டன் போன்ற நாடுகளில் கார் விபத்து தொடர்பாக யாருடனும் இரக்கம் காட்டக்கூடாது என்று எனது நண்பன் அடிக்கடி சொல்வான்.

ஏனெனில் அதே இடத்தில் அவவின் காரை நான் பின்பக்கமாக இடித்திருந்தால், காருக்குத் திருத்தச் செலவு, அவவுக்கு பேர்சனல் இன்யறி கிளைம், குழந்தைக்கு வருத்தமாகிவிட்டது என்றெல்லாம் எனது இன்சூரன்சிலிருந்து பெரும்தொகை பணத்தை உருவி எடுத்திருப்பா. யாரும் காரை ஓடும்போது வேறு யாரும் வந்து எமது காரை முட்டினால் பெரும்தொகை பணத்தை கறந்து விடுவது இங்கு ஐரோப்பிய நாடுகளில் சாதாரணமான விடயம்.

காருக்குள் குழந்தை அழகாக தூங்குகிறது. உண்மையில் அந்தக் குழந்தைக்காக மட்டும் அதன் முகத்திற்காக மட்டும் அவ தந்த மிகக் குறைந்த காசை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இன்னும் அந்தக் குழந்தை கார் பின்பக்கம் சீற்றில் பேபி சீற் வைத்து அழகாக தூங்கும் காட்சி மனதுக்குள் இருக்கிறது.
எனது நண்பர் ஒருவர் கலியாணம் முடித்து 3 வருடங்கள். இன்னும் லண்டனிலிருந்து ஊருக்குப் போகவில்லை. காரணம் கேட்டால் ஊருக்குப் போனால் "ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை" என்று கிராமமே கூடிவந்து கேட்டு நச்சரிக்கிறதாம்.

இங்கு லண்டனில் வாழும் தமிழ் மக்களும் சரி, இந்தியா, சிலோனிலிருந்து வந்து இங்கு இருப்பவர்களும் சரி ஆரம்பத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ளாமலிருப்பதை ஒரு பெஷனாகவே வைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு வருடம் உழைத்து நன்றாக ஊர் சுற்றிவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு முறையை வைத்திருக்கின்றனர்.

அதுவே அவர்களுக்கு வினையாக வந்துவிடுகிறது. கர்ப்பம் தங்காமல் இருப்பதற்கான மாத்திரைகளைப் பாவிக்கும்பொழுது பின்னர் அதன் பக்க விளைவுகளினால் கர்ப்பம் ஒருபோதுமே ஆகாத பெரும் விளைவுகளை அவர்கள் சந்திக்கின்றனர். பிறகு குழந்தை வேணும் என்று தவம் கிடந்தாலும் குழந்தை இல்லாமலே ஆகிவிடுகிறது. கோயில், குளம், வைத்தியர் என குழந்தைக்காக அலையவேண்டியவர்களாக இருக்கின்றனர். எனக்குத் தெரிந்த இன்னொருத்தி இருக்கிறா. அவ தனது அழகு போய்விடும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறா. குழந்தையின் அழகான சிரிப்புக்கு முன்னால் பெண்களின் பேரழகு எம்மாத்திரம்! எங்களின் கிராமத்தில் ஒருவர். அவருக்குப் 16 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தக் காலத்தில் வீடு நிறைய பிள்ளைகளும் குழந்தைகளும் ஒரே குதூகலமாக இருக்கும் அவர்கள் வீட்டில். நான் சிறுவனாக இருந்தபொழுது அங்குபோய்தான் விளையாடுவேன்.

அந்த அம்மா 16 பிள்ளைகளையும் வளர்த்தெடுத்த விதம்தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. கூச்சல், குழப்பம், விளையாட்டு, அடி, தடி என்று நித்திரைக்குப் போகும் நேரத்தைத்தவிர ஒரே களேபரமாக இருக்கும் அந்த வீடு. பிள்ளை பெற்றுக்கொள்வது என்றைக்குமே ஊரில் எவருக்கும் சிரமமாகத் தோன்றுவதில்லை.

குழந்தைகள் எமது கிராமத்தில் தானாக வளரும். எல்லாம் இயற்கையாகக் கிடைத்த காலம் அது. அரிசி, மரக்கறி, மீன் (குளத்தில்), இறைச்சி என எல்லாமே எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததை சாப்பிட்டு வளர்ந்த காலம் எங்களுடையது. இப்பொழுது எல்லாமே பணம் கொடுத்து வாங்கிக்கொடுக்க வேண்டும். அதனால்தான் குழந்தை பெரும் பாரமாக இருக்கிறது இன்றைய மனிதனுக்கு நான் குழந்தையாக இருந்தபொழுது என்னை பக்கத்துவீட்டு அன்னலட்சுமி அக்காதான் வளர்த்தவா என அம்மா அடிக்கடி சொல்லுவா, காலையில் நித்திரைவிட்டு எழுந்ததும் அன்னலட்சுமி அக்கா தூக்கிக்கொண்டு போய்விடுவாவாம். குளிப்பாட்டி, பவுடர்போட்டு, பொட்டு வைத்து, சோறும் பருப்புக்கறியும் தீத்திவிட்டு வளர்த்தெடுத்திருக்கிறா அன்னலட்சுமி அக்கா. அதனாலோ என்னவோ எனக்குப் பருப்புக்கறி என்றால் இன்றும் கொள்ளை ஆசை.

இங்கு லண்டனில் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் ஒரு வீட்டுக்கு குழந்தை பார்க்கப் போயிருந்தோம். போய் கொஞ்ச நேரத்தில் "குழந்தையை கொண்டு வாருங்கள் பார்ப்போம்" என்று எனது மகன் சொன்னான். குழந்தையின் அம்மம்மா சொன்னா  "குழந்தை பால் குடிக்கிறது" என்று. எங்களுக்கு உண்மையில் ஆச்சரியம். நானும் மூத்த மகளும் மகனும் மனிசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

ஏனெனில் குழந்தையின் அம்மா எங்களோடு இருந்து பேசிக்கொண்டிருக்கிறா. குழந்தை எப்படி பால் குடிக்கிறது என்பதுதான் பிரச்சினை. பார்த்தால் குழந்தையின் சின்னம்மா அந்த ஒரு மாதக் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்திருக்கிறா. "அம்மாவின் பால் கொடுக்காமல் ஏன் புட்டிப்பால் கொடுக்கிறீர்கள்?" என்று எனது அதிருப்தியைத் தெரிவித்தேன்.

அதற்கு குழந்தையின் அம்மா சொல்கிறா, "நான் குழந்தையை தூக்குவதுகூட குறைவு" என்று. எனக்கு இந்த தமிழ் தாய்மார்களை நினைத்து மிகுந்த கவலையாக இருக்கிறது குழந்தையின் அம்மா ஒரு எக்கவுண்டன். அவ குழந்தைப் பேறு விடுப்புக்குப் பிறகு உடனடியாக வேலைக்குப் போகவேண்டும். ஆறு மாதத்திற்குப் பிறகு தூக்கித் தூக்கி வைத்திருந்தால் அம்மாவின் சூடுபட்டு அம்மா இல்லாவிடில் அது அழும். எனவே குழந்தையைக் கடமைக்காகப் பெற்றுவிட்டு தூக்குவதும் இல்லை, பால் கொடுப்பதும் இல்லை.

இந்த நிலமைதான் இங்குள்ள அநேகமான பெற்றோர்களின் நிலையாக இருக்கிறது. சில தாய்மார்கள் குழந்தைகளை முத்தமிடுவதும் இல்லை. வெள்ளைக்காரர் தங்களுடைய வேலைக்காக இப்படித்தான் வளர்க்கிறார்கள். அதேபோல தமிழ் பெற்றோர்களும் இப்படித்தான் வளர்க்கிறார்கள். நாங்கள் எங்கள் குழந்தைகளை தூக்கி தூக்கி கொஞ்சி கொஞ்சி பால் கொடுத்து எவ்வளவு அருமையாக வளர்த்தோம். அப்படி அன்பு காட்டி வளர்த்த பிள்ளைகளே சிலதுகள் அப்பா, அம்மாவின் சொல் கேட்காமல் தறுதலையாகத் திரியும்பொழுது, அணைக்காமல், முத்தமிடாமல் அன்பு காட்டாமல் வளரும் குழந்தைகள் எப்படி அம்மா, அப்பாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்?

18 வயது வந்தவுடன் அம்மா, அப்பாவை விட்டுவிட்டு தனிய ஓடிவிடும் பிள்ளைகளைத்தான் இந்த வளர்ப்புமுறை கொண்டுவந்துவிடுகிறது கடைசியில். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு இளம் தம்பதியினர் நன்றாகக் குழந்தை வளர்க்கின்றனர். காலையில் அம்மா வேலை. மாலையில் அப்பா வேலை. மாறி மாறி இருவரும் குழந்தையைப் பராமரிக்கின்றனர். அவன் பெற்றோரோடு நல்ல பாசமாக வளருகிறான்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர்கள் குழந்தைகள்மீது தமது மன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். குழந்தைகளைத் துன்புறுத்துகின்றனர். தங்களது ஆற்றாமையை குழந்தைகள்மீது வன்முறையாக அழுத்துகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்து அந்நிய நாடொன்றில் வாழும்பொழுது ஏற்படும் பிரச்சினைகள், வாழ்க்கை முறை, பொருளாதார நெருக்கடி என்பன பெரியவர்களை நெருக்கும்பொழுது ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கு அதற்கும் மேலதிகமாகக் கொலை செய்யும் அளவுக்குகூட தமிழ் பெற்றோர்கள் போயிருக்கிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியும் கவலையுமாகும்.

தமிழர்கள் மத்தியில் இருக்கும் பொருளாதார பேராசை இதற்கு ஒரு காரணம் என்று மன அழுத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கும் கவுன்சிலர் ஜோசப் தெரிவிக்கிறார்.
அளவான சேமிப்பு அதிலிருந்து செலவழித்தல் என்ற கட்டுப்பாடான வழியை மீறி கடன் வாங்கி ஆடம்பரமான செலவுகளை மற்றவர்கள் போல் செய்துவிட்டு கடனைக் கட்டமுடியாமல் வேலை வேலை என்றும் பணம் சேர்க்க ஓடும் பெற்றோரால் குழந்தையை உண்மையாக வளர்க்க முடிவதில்லை.

குழந்தைகளைப் பணம்கொடுத்து வேறு யாரிடமோ வளர்க்கக் கொடுத்துவிட்டு அவர்கள் வளர்ந்தவுடன் உழைத்துத் தரவேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்க, பாசமில்லாத பெற்றோரைவிட்டு விட்டு பல மைல் தூரம் ஓடிப் போகின்றனர் பிள்ளைகள். தமிழ் பெற்றோருக்கும் தமிழ் பிள்ளைகளுக்குமிடையிலான இடைவெளியை காலம் இன்னும் இன்னும் கூட்டிக்கொண்டே போகிறதே தவிர குறைப்பதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் அன்போடு அணைத்து முத்தமிட்டு, பால் கொடுத்து குழந்தைகளை வளர்ப்பதை எமது கிராமங்களுக்கு வந்துதான் பார்க்கவேண்டும். லண்டனில் இனிமேல் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment