Friday, March 27, 2015

தேவதாசி வரலாறு -6

சிறந்த கர்னாடக இசைக் கலைஞராக விளங்கிய பெங்களுரு நாகரத்தினம்மா.


அருள் சத்தியநாதன்

ந்துமதம் சாதியை ஒரு தூணாகக் கொண்டது. மனிதர்கள் தொழில் அடிப்படையில் சாதிகளாக வகுக்கப்பட்டனர். ஆண்களுக்கு இன்பத்தையும் ஓய்வு - அமைதியையும் அளிக்கும் கடமை இவ்வகையில் பரத்தையர் குலத்துக்கு விதிக்கப்பட்டது. ஆண்களுக்கு இன்பம் அளிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்தலே இவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம். அதனால், அன்றைய இந்திய சமூகத்தின் சிருங்காரச் சுவையை பேணி வளர்க்கும் பொறுப்பு இவர்களிடம் வந்து சேர்ந்தது. பிற்காலத்தில் வெகுஜன கலை என்பது நாடகமாகவும், சினமாவாகவும் மாறிப்போனது. பண்டைய இந்தியச் சூழலில் பத்து, இருபது பேர் அமர்ந்து ஒரு கணிகைப் பெண் ஆடும் சிருங்கார நடனத்தைப் பார்த்து பரவசப்பட்டு மகிழ்ந்தார்கள். இன்றைக்கு அதே சுவையை இன்றைய காலச் சூழல்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சினமாவும் இசை நிகழ்ச்சிகளும் தருகின்றன. பழைய கள் புதிய மொந்தையில் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.

கோவில் உற்சவங்களில் பெண்கள் இன்றைக்கு நடனமாடுவதில்லை. அது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் அதன் இன்னொரு வடிவம் பரத நாட்டியமாக கோவிலுக்கு வெளியே அரங்கேறுகிறது காதலனை நினைத்து பெண் விரகதாபம் மேலிட உருகுவது போன்ற சிருங்கார அம்சங்களைக் கொண்ட நாட்டியங்களே இன்றைக்கும் அரங்கேறி வருகின்றன. கண்ணன் - ராதை, கண்ணன் கோகுல மங்கையர், ரதி - மன்மதன், ராமனை எண்ணி சீதை உருகுதல் போன்ற நடனக் கதைகளின் மூலமே நளினமான, சிருங்கார சுவை மிக்க நடன மற்றும் அங்க அசைவுகளை பார்வையாளர்களை சொக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்த முடிகிறது. தமிழ்ப் படங்களை எடுத்துக் கொண்டாலும், காதலைத்தான் திரும்பத் திரும்ப தீவிரமாகவும், மிகையாகவும், மெல்லியதாகவும் எதிர்மறையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் சிருங்காரச் சுவை என்பது மனிதனைப் பொறுத்தவரை நகமும் சதையும் போன்றது. மனிதனுக்கு அது ஊக்குவிப்பு டொனிக். மனிதனின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் இயங்கு சக்தியாகவும் சிருங்காரம் திகழ்கின்றது. சிருங்காரத்தை மறுதலிக்க முயன்ற எந்த சமய, கோட்பாடும் நிலைத்ததும் இல்லை, மக்கள் அபிமானத்தைப் பெற்றதும் கிடையாது. அவை பின்னர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதே வரலாறு.

தமது பிறப்பு உறுப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆடை கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் முதலில் தமது பிறப்புறுப்புகளைத்தான் மறைத்துக் கொண்டார்கள். மிக நீண்ட காலமாக பெண் மார்பகங்கள் ஆண்களினால் கவர்ச்சி உறுப்புகளாகப் பார்க்கப்படவில்லை. மிகப் பிற்காலத்தில்தான் மார்பகங்களைப் பெண்கள் மறைத்துக் கொண்டார்கள். பெண்களை வர்த்தகமயப்படுத்தும் சூழல் ஏற்பட்ட பின்னரேயே, மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளாகின.
இந்திய கலாசாரம் பெண்களை சிருங்காரத்தின் அடையாளமாகப் பார்த்தது உண்மையென்றாலும் பெண்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கவும் தயங்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை அர்த்த நாரீஸ்வர கோட்பாடு புகட்டுவதாக உள்ளது. பெண் தெய்வங்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது. பெண், சக்தியின் வடிவமாகப் பார்க்கப்பட்டாள். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையின் ஆரம்ப கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கம், பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெண்களைப் பாதுகாக்காவிட்டால், இனப்பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட முடியும் என்பதே அக்கட்டுப்பாடுகளுக்கான ஆதார அம்சமாக விளங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனினும் பிற்காலத்தில் இக்கட்டுப்பாடுகள் ஆண்களினால் பெண் அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டமை ஒரு சோக வரலாறு.
தேவதாசியர் வரலாற்றில் இறுதியாக புகழ்பெற்று விளங்கி மறைந்தவராக நாம் நாகரத்தினம் அம்மாளைக் குறிப்பிட முடியும். வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் என்பவர் ஆங்கிலத்தில் நாகரத்தினம் அம்மாளைப் பற்றி DEVADASI AND THE SAINT என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் பத்மா நாராயணனால் தமிழ்ப்படுத்தப்பட்டு தேவதாசியும் மகானும் என்ற பெயரில் காலச் சுவடு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு தேவதாசியின் மகளாக 1878 ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் திகதி இவர் கர்நாடகம் தேவண்ண கோத்தா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய அம்மாவின் பெயர் புட்ட லக்ஷம்மா வைஷ்ணவி.

புட்ட லக்ஷம்மா இவரை வளர்த்து ஆளாக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே பாட்டு, நடனம், வயலின், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் என பல வித்தை வேண்டும் என்பதே புட்ட லக்ஷம்மாவின் இலட்சியமாக இருந்தது. நாகரத்தினம் தேவதாசியின் மகள் என்பதால், அழைப்பதற்கு அவருக்கு அப்பா இல்லை. தேவதாசி மகள், மகன்மார் எப்போதும் தாய் வழியாகவே அறியப்படுவர். நாகரத்தினத்தின் அப்பா மைசூரைச் சேர்ந்த சுப்பண்ணா என்ற பிரபலமான பிராமணர் என்று அறிய முடிகிறது. அக்காலத்தில் புட்ட லக்ஷம்மாவை ஆதரித்து வந்தவர் சுப்பாராவ் என்ற ஒரு பிரபலமான சட்டத்தரணி.

புட்ட லக்ஷம்மா காசநோய் கண்டு மரணமடைந்தார். அச்சமயத்தில் பல்மொழித் தேர்ச்சியும், ஆடல் பாடல்களில் சிறப்புப் பெற்றவராகவும் நாகரத்தினம்மா திகழ்ந்தார். அப்போது நாகரத்தினம் பெரிய அழகி அல்ல. நடு உயரம். சிவந்த மேனி. பருமனான உடல். ஆனால் சருமம் மாசுமருவின்றி பளபளப்பாகக் காட்சியளித்தது. சுருண்ட கரிய கூந்தல். அழகிய வசீகரிக்கும் கண்கள் அவளது பெரும் சொத்தாக விளங்கியதோடு வெகு புத்திசாலியாகவும் திகழ்ந்தார். இவற்றையெல்லாம் அனுமானித்த அந்தத் தாய் இவள் இனி தனியாகவே பிழைத்துக் கொள்வாள் என்ற நிம்மதியுடன் உயிரைவிட்டாள்.

வரலாற்றில் பல புகழ்பெற்ற தேவதாசிமார் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நாகரத்தினம்மாள் புகழ் பூத்த கடைசி தேவதாசி என்று நிச்சயமாகக் கூற முடியும்.

அவர் தன் வாழ்நாளில் தன்னை ஒரு தேவதாசி என்பதை என்றைக்கும் மறைக்க முனையவில்லை. அவர் காலத்தில் அவர் கண்முன்பாகவே தேவதாசி முறை படிப்படையாக சமூக அந்தஸ்தை இழக்க ஆரம்பித்தது. இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களுக்கும், திருமணமாகாத பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடுதல் என்ற சமூக நடைமுறை வியர்வையும் முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பாதிரிமார் இந்து சமயத்துக்கு எதிரான தமது பிரசாரங்களுக்கு, பெண்களை நேர்ந்து விடும் இம்முறையை, ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
1927இல் கெதரின் மேயோ என்ற அமெரிக்க பத்திரிகையாளர் இம்முறையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவ்வழக்கம் குறித்து ஆய்வு செய்து 'மதர் இன்டியா' என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். பல இந்து பழக்க வழக்கங்களைக் கண்டித்து எழுதிய அவர், ஏன் அரசாங்கம் இவற்றைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பும் தெரிவித்திருந்தார். தேவதாசி முறையை தடை செய்யும்படி விக்டோரியா மகா ராணியாருக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் காலணி நாடுகளில் காணப்படும் மத, கலாசார விடயங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை லண்டன் கடைப்பிடித்து வந்ததால் இம்மனு நிராகரிக்கப்பட்டது. டில்லியை மையமாகக் கொண்ட ஆங்கிலேய அரசின் ஆட்சியாளர் வைஸ்ராயுக்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்பு மனுக்களும் இதே காரணத்தின் அடிப்படையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

(தொடரும்) 

No comments:

Post a Comment