Friday, March 20, 2015

இருள் உலகக் கதைகள்

பேய் வலையில் வீழ்ந்த வட்டி சுமணா

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்:   மணி ஸ்ரீகாந்தன்

கரந்தன பிரதேசத்தில் சுமணாவதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 'சீட்டு சுமணா' என்றால் எல்லோருக்கும் தெரியும். சீட்டுப் பிடிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். வயது ஐம்பதைக் கடந்து விட்டிருந்தாலும், பெரிய தைரியசாலி. அந்த ஏரியா சண்டியர்கள் கூட சுமணாவைக் கண்டால் கொஞ்சம் ஒதுங்கித்தான் போவார்கள்.
சுமணாவுக்கு இரண்டு மகன்கள். அவர்களும் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் சென்று விட்டார்கள். 'யார் தயவும் எனக்குத் தேவையில்லை' என்று முரட்டு பிடிவாதம் பிடிக்கும் சுமணா, அறுபத்தைந்து வயதாகும் தமது கணவன் சமரபாலவுடன் தனியாக வசித்து வந்தாள்.

சமரபால வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை இடித்துப் போடுவதோடு அவர் வேலை முடிந்து விடும். அந்த வீடே சுமணாவதியின் அதிகாரத்தில் தான் இயங்கி வந்தது. சீட்டுப் பிடிப்பதோடு, வட்டிக்கும் பணம் கொடுத்தும் வந்தார் சுமணா.

அன்று மாலை கரந்தனையை ஒட்டியுள்ள தோட்டத்தில் சம்பள நாள். வட்டிப் பணத்தை வசூலித்து வர, அந்த தோட்டத்து குறுக்குப் பாதை வழியாக சென்றாள் சுமணா. மழை பெய்து கொண்டிருந்ததால் ஆங்காங்கே வீட்டுக் கூரைகளின் கீழ் நின்று, நின்று போக, நேரமாகி விட்டது. வசூலித்த வட்டிப் பணத்தை சுருட்டி மடியில் முடிச்சுப் போட்டு கட்டிக் கொண்டு, வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள் சுமணா. அப்போது எதிரே வந்த 'சூன்பாண்' ஆட்டோவை மறித்து இரவு சாப்பாட்டுக்காக ஒரு இறாத்தல் பாணும், 'மாலுபாண்' இரண்டும் வாங்கி, ஷொப்பிங் பேக்கில் போட்டு பிடித்துக் கொண்டு நடந்தாள். அப்போது நேரம் இரவு ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது. சுப்ரமணி கங்காணி செய்து கொடுத்த கால் போத்தல் மண்ணெண்ணெய் தீப் பந்தமும் எண்ணெய் தீர்ந்து போகும் தறுவாயில் இருந்தது. மண்ணெண்ணெய் காலியாவதற்குள் வீடு போய்விட வேண்டும் என்ற அவசரம் சுமணாவின் நடையில் தெரிந்தது.

தெப்பக்குளத்து சந்தியை கடந்தால் வீடுதான். ஆனால் அந்தச் சந்திப் பக்கம் ஆறு மணிக்குப் பிறகு ஆள் நடமாட்டம் இருக்காது. துஷ்ட ஆவிகள், அந்தப் பகுதியில் நடமாடுவதாக ஒரு கதை. நீண்ட காலமாக ஊரில் உலவி வந்தது. ஆனால் அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் சுமணா கிடையாது. இருந்தாலும் அன்று அவள் நடையில் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. முச்சந்தியை கடக்கப் போகும் போது எதிரே ரோட்டின் குறுக்கே யாரோ படுத்திருப்பதை அவள் அவதானித்தாள். சம்பள நாள் என்பதால் நன்றாக குடிச்சிட்டு கவுந்திருப்பானுங்க என்று நினைத்தப்படி அந்த உடலை காலால் தாண்டியப்படி நடந்தாள். அப்படி அவள் சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள்.
அப்போது சுமணாவதியின் கையிலிருந்த தீப்பந்தத்தை யாரோ வாயால் ஊதி அணைப்பதைப் போல 'உஸ்' என்று வந்த காற்று தீப்பந்தத்தை அணைத்தது. சுமணா கும்மிருட்டில் சிக்கிக் கொண்டாள். திடீரென்று வெளிச்சம் இல்லாது போனதால் சுமணாவதியால் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றாள். அப்போது தூரத்தில் சாக்குருவியில் மரண ஓலம் அந்த நிசப்த இரவு வேளையை சிதைத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களுக்கு அந்த ஒற்றையடிப் பாதை மங்களாகத் தெரிய, இனி இந்த தீப்பந்தத்திற்கு வேலை இல்லை என்று நினைத்து அதை முற்புதருக்குள் வீசி எறிந்தாள். பந்தம் டமார் என்ற சத்தத்தோடு வீழ்ந்து புதைந்தது.

அந்தக் கண் இமைக்கும் நேரத்தில் சுமணாவின் தோள் பக்கமாக இருந்து நீண்டு வந்த ஒரு கை. அவளின் கையிலிருந்த பாண் பேக்கை பற்றி இழுக்க பேக் தவறி பாதையில் விழுந்தது. அதை சுமணாவதி குனிந்து எடுக்க முயன்ற போது ஒரு வெள்ளை முயல் அந்தப் பற்றைக்குள் இருந்து மின்னலென பாயந்து ஓடியது.

அந்தத் தருணத்தில் ஒரு ஆபத்தில் தான் மாட்டிக் கொண்டிருப்பதை சுமணாவதி உணர்ந்தாள். ஆனாலும் அவள் பயப்படவில்லை. வாயில் வந்த கெட்ட வார்த்தைகளால் அந்த தீய சக்தியை திட்டியபடி வீட்டை அண்மித்த போது அந்த கிராம வாசிகள் விழித்துக் காது கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அடுத்த நாள் 'சுமணாவதி பேயோடு கட்டிப் பிடித்து சண்டை போட்டாளாம்' என்று ஆளுக்கு ஆளு கதைகளை அள்ளிவிட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்தக் கதைகளுக்கு விளக்கம் சொல்லும் நிலையில் சுமணா இல்லை. அவளுக்கு குளிர் காய்ச்சல் வர, பன்சலையில் மந்திரித்துத் தந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்து விட்டான் சமரபால.

சில நாட்களுக்குப் பிறகு சமரபால சுமணாவதியிடம் 'சாப்பிடுவதற்கு ஏதாவது தா' என்று கேட்க உடனே முகத்தை சிலிர்த்தாள் சுமணா.
"உனக்கு ஒரு மண்ணும் கிடையாதுடா" என்று சுமணாவதி கத்தியதைப் பார்த்து சமரபால குலை நடுங்கிப் போனான். அதற்குப் பிறகு நிலைமையைப் புரிந்து கொண்ட சமரபால தமது மகன்களை அழைத்து அம்மாவுக்கு ஏதோ ஆகியிருக்கிறது என்பதைச் சொன்னான். அவர்கள் தமக்கு அறிமுகமான தேவா பூசாரியிடம் சென்றனர். விஷயத்தை சொல்லி பரிகாரம் கேட்க, அவரும் அந்த வீட்டில் ஒரு கெட்ட சக்தி குடி கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். உடனே ஒரு திகதியைக் கொடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.
தேவா பூசாரி
குறிப்பிட்ட அந்த அமாவாசை அன்று தேவா தமது சகாக்களுடன் கரந்தனையில் உள்ள சுமணாவதியின் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வீட்டிற்குள் நுழையும் போதே சில அமானுஷ்யமான ஓசைகள் அவர் காதில் விழுந்தன. ஆனாலும் முருகனின் துணை தமக்கு பக்க பலமாக இருப்பதால் தம்மை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்ற உறுதி அவரின் முகத்தில் பிரகாசமாக தெரிந்தது.

படையல் போட்டு, பேயை விரட்ட போடப்படும் அட்சர சதுரங்க கோடுகளும் வரையப்பட அதில் தேவா பூசாரி அமர்ந்து மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்.

அப்போது சுமணாவதி "டேய் பூசாரி நீ இடம் தெரியாம வந்திட்டே! திரும்பிப் பார்க்காம ஓடிடு உன்னே மன்னித்து விட்டுறேன்" என்று கர்ஜிக்க ஆரம்பித்தாள். தேவா அசருவாரா என்ன! "உன் மாதிரி ஆயிரம் பேயை பார்த்துட்டேன்! என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா?" என்று மிரட்டியபடி மந்திரங்களை ஓதி எரியும் குண்டத்தில் எண்ணெய்யை ஊற்ற, சுமணாவின் உடம்பில் ஒளிந்திருக்கும் தீய சக்தியின் சத்தம் கொஞ்சம் அடங்கிப் போனது. ஆனாலும் தேவா விடவில்லை. தீய சக்தியை ஆட்டம் போட வைத்தார்.

அந்தத் தீய சக்தி நூறு வருடங்களுக்கு முன் செத்துப் போன பொடிமெனிக்கே என்பதை தெரிந்து கொள்ள தேவாவுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. "ஏன் சுமணாவின் உடம்பில் புகுந்தாய்?" என்று பொடிமெனிக்கேயின் ஆவியிடம் கேட்டார்.

"என் மகன் வீட்டுக்குப் போவதற்காக தெப்பக்குளத்து சந்திக்கு ரோட்டு வழியால் வரும்போதுதான் சுமணாவதியை கண்டேன். பாவம் போவட்டும் என்று பாதை ஓரமா ஒதுங்கினேன். ஆனால் திமிர் புடிச்ச இவ கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை விட்டு அடித்தாள். அது மண்டையில் பட்டது. அதுக்குப் பிறகுதான் எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதற்காக மாலுபாணை பறிச்சேன். அதுக்குப் பிறகும் அவள் சும்மா இருக்கலை. என்னை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டினாள். அதனால்தான் அவள் உடம்பிற்குள் போனேன். அதுக்குப் பிறகு விசயத்தை தெரிந்து கொண்ட இவள் புருஷன் என்னை தீர்த்துக் கட்ட பூசாரியை ஏற்பாடு செய்தான். விடுவேனா, அவன் கதையையும் முடிச்சிட்டுத்தான் இனி வெளியில போவேன்"  என்று சுமணாவின் உடம்பிலுள்ள தீய ஆவி சபதம் போட்டது.
தேவா பூசாரியும் கூடி இருந்தவர்களும் குழம்பிதான் போனார்கள். 'எங்களைத் திட்டுறதை நாங்க பொறுத்துக்குவோம். பேய் பொறுத்துக்குமா...' என்று கூடியிருந்தவர்களில் சிலர் முணுமுணுப்பதும் தேவாவின் காதில் விழத்தான் செய்தது.

பிறகு தேவா ஒரு வழியாக ஆவியின் பலவீனத்தை கண்டு பிடித்து அதற்குப் பிடித்த உணவு வகைகளை சாப்பிடக் கொடுத்தார். அதன் கோபத்தை தணித்தார். ஏனெனில் மெனிக்கே நல்ல சாப்பாடு இல்லாமல் ஏங்கிச் செத்தவள். பிறகு அது கண்களை மூடி அசந்திருக்கும் நேரம் பார்த்து அதை மடக்கிப் பிடித்து அதன் கதையை முடிக்க முற்பட்ட போது, மெனிக்கே ஆவி இன்னொரு தந்திரம் செய்தது. தனது தாயை பிடிக்க எதிரே வந்த சுமணாவதியின் மகன் மீது தீய சக்தி பாய்ந்தது அவன் உள்ளே புகுந்து கொண்டது. பிறகு அவன் ஆட ஆரம்பித்தான்.

இதனால் தேவாவிற்கு வேலை கொஞ்சம் தாமதமானது. பிறகு அந்தப் பேயை ஒரு வட்டத்திற்கு கொண்டு வந்து எங்கும் சென்று விடாதபடி மந்திரக் கட்டுப் போட்டு, பிடித்து போத்தலில் அடைத்த பின்னரே தேவா பூசாரி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் தேவா தமது சகாக்களோடு புறப்பட்டார். கரந்தனை பகுதியில் இப்போதும், சுமணாவதியின் சீட்டுக் கம்பனி, வட்டி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறதாம்.

No comments:

Post a Comment