Saturday, March 14, 2015

ஆனந்த விகடன் புகழ் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகிறார்.

"கார்ட்டூன் வரைவதற்கு மண்டையில் நிறைய சரக்கு வேண்டும்"


உரையாடியவர்: மணி  ஸ்ரீகாந்தன்

'வந்தார்கள் வென்றார்கள் எழுதிக் கொண்டிருந்தபோது நீங்களே படமும் போட்டால் பிரமாதமாக இருக்குமே என்றார்கள். வரைந்து பார்த்தேன். அக்பரையும் பாபரையும் வரைந்து பார்த்தால் அவர்கள் சிரிப்புத் திருடர்கள் போல் இருக்கவே, படம் வரையும் ஆசையை விட்டுவிட்டேன்'
மிழ் கார்ட்டூனிஸ்ட் படைப்பாளர்களில் மதனுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. குறைந்தளவில் கோடுகளை பயன்படுத்தி தத்துரூபமான கார்ட்டூண்களை படைப்பதில் மதன் கைதேர்ந்தவர். கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடனில் மதன் வரைந்த ஜோக்ஸ்சுகளுக்கு பெரும் மவுசு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த நாட்களில் ஆனந்த விகடனை வாங்கியதும் எல்லோரும் முதலில் படிப்பது மதன் ஜோக்ஸ்தான். மதன் என்றாலே அவரின் படங்களில் வரும் நீண்ட மூக்கும், நீண்ட தலையும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து கொண்டே எழுத்துத் துறையிலும் சினமாவிலும் தடம் பதித்த ஒரு பன்முக படைப்பாளர். இப்போதெல்லாம் அவரை ஜோக்ஸ் படங்களில் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது. தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். என்ன நடந்தது மதனுக்கு என்பதை தெரிந்து வர சென்னை மந்தை வெளியில் உள்ள வீடு வரைக்கும் போய் பார்த்தோம்.
"வாங்க சார் நான் இங்கே தான் இருக்கேன். நான் இப்போ ஆனந்த விகடனில் படம் போடுவதில்லை. ஆனால் புதிதாக வெளியாகும் 'ஜன்னல்' சஞ்சிகையில் கார்ட்டூண் போடுறேனே. நீங்க பார்க்கலையா, டீவியிலயும் வாரேனே.." என்று ரொம்ப ஜாலியாகவே பேசுகிறார்.

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட மதனின் நிஜப்பெயர் கோவிந்தகுமார். கிருஸ்ணசாமி, ராதா தம்பதியினரின் நான்கு பிள்ளைகளில் மூத்தப்பிள்ளை இந்த மதன்.

"கலைகளுக்குப் பெயர்போன தஞ்சாவூரில் பிறந்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். பெரிய பெரிய படைப்பாளர்கள் எல்லாம் இந்த மண்ணில்தான் பிறந்திருக்காங்க. அதனால அந்தப் பட்டியலில் இப்போ நானும் சேர்ந்துகிட்டேன் என்று சொல்லும் போதே மதனின் முகத்தில் மின்னலடிக்கிறது மகிழ்ச்சி.

கார்ட்டூணை முறையாக கற்றுக்கொண்டீர்களா? எப்படி இந்தத் துறையை தேர்ந்து எடுத்தீர்கள்? என்று கேட்டோம்.

"நான் காலேஜில் படித்தது பௌதீகம். சித்திரம் அது கைப்பழக்கம். சின்ன வயசுலேயே சும்மா பொழுது போக்கா வரைவேன். ராமர் பட்டாபிஷேகம் ஆஞ்சநேயர், வீரசிவாஜி, மகாபாரத பாத்திரங்கள் உள்ளிட்ட காட்சிகளை பார்த்து வரைவேன். திடீர்னு ஒரு நாள் கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மனின் கேலிச்சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அது எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அவர் மாதிரி நானும் வரைந்து பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணினேன். அது எனக்கு ரொம்ப சுலபமாகவே வந்தது. அன்றிலிருந்து கார்ட்டூன் போட எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு கார்ட்டூனுக்கு குரு என்று யாரும் கிடையாது. எல்லாம் பயிற்சியும் அனுபவமும்தான். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் கோபுலு, ஸ்ரீதரின் ஜோக்ஸ் படங்கள் நிறையவே வெளியாகும்.  அப்போது என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி ஆனந்த விகடனில் அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர்தான். பிறகு அவர் எனக்கு கார்ட்டூன் போடும் வாய்ப்பை கொடுத்து விட்டு அவர் விலகிக் கொண்டார். ரொம்ப நல்ல மனிதர்" என்று கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் பற்றி நன்றியோடு சொல்லி நெகிழ்ந்து போகிறார்.
ரெட்டைவால் ரங்குடு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி சிரிப்புத் திருடன் சிங்கார வேலு உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ் வாசகர்களிடையே அவர்களை கார்ட்டூன்களில் மாஸ் ஹீரோக்களாக படைத்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.

"ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில் எனது கார்ட்டூண் கதாபாத்திரங்களே ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அந்தளவிற்கு வாசகர்களிடையே வரவேற்பு இருந்தது. அதன் பிறகு அவற்றை நூலாகவும் விகடன் வெளியீட்டு வெற்றியும் கண்டது" என்று படபடன்னு பேசும் மதனிடம்,

"ஓவியம், கார்ட்டூண் இந்த இரண்டில் கற்றுக்கொள்ள ரொம்ப இலகுவானது எது?" என்று கேட்டோம்.

"ஓவியனாகுவது ரொம்பவும் இலகுவான விடயம். குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் படம் வரையத் தொடங்கிவிடலாம். ஆனால் கார்ட்டூனிஸ்டாக வருவது கஷ்டம். அதற்கு ஐடியாக்கள் நிறைய வேண்டும். நாட்டு நடப்போடு அரசியல் நெளிவு சுழிவுகள் தெரிந்திருக்க வேண்டும். மண்டையில் கிண்டலும், கேலியும் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கார்ட்டூன் வழியாக நகைச்சுவை கலந்து சொல்ல முடியும். ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட்க்கு இவை கட்டாயம். மற்றவரிடம் ஐடியா கேட்டு எத்தனை நாளைக்கு கார்ட்டூன் போடுவது? நாமே ஐடியா பண்ணி செய்வதே சிறப்பு. இப்படி நிறைய விசயங்கள் இருப்பதால்தான் கார்ட்டூண் துறையை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. நூறு ஓவியர்களுக்கு இரண்டு கார்ட்டூண்கள்தான் இருக்கிறார்கள்" என்று கார்ட்டூனிஸ்டுகள் ஏன் குறைவு என்பதற்கான காரணத்தை விளக்கும் அவர், தனக்கு ஆர்.கே. லக்ஷ்மணனின் தாக்கம்  இருப்பது பற்றியும் கூறுகிறார்.

"ஆர்.கே. லக்ஷ்மணனின் பாதிப்பு என்னில் இருந்தாலும் நான் அவரை கொப்பி அடிக்கவில்லை. எனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டேன். எனது கார்ட்டூன்களின் முகங்களில் ஒரு நையாண்டி ரேகை தெரியும். ஆனால் அவலட்சணமாக வரைய மாட்டேன்" என்று மனந்திறந்து பேசுபவரிடம்,
"கார்ட்டூன்களில் சில முகங்களை கொண்டுவர கஷ்டம் என்கிறார்களே?" என்று எமது சந்தேகத்தை கேட்டோம்.

"பழகிட்டா எல்லாமே ஈஸியாகிடும். இப்போ கருப்பு கண்ணாடி, போட்டு சின்னதாக ஒரு மீசைபோட்டு வரைந்தால் அது கலைஞர்னு எல்லோரும் கண்டுபுடிச்சிடுவாங்க. அப்படி மக்கள் பார்த்து பழகிட்டா எல்லா முகமும் அவங்களுக்கு பரிச்சியமாகிடுமே. இப்போ ஒருத்தர் தலைவர் ஆகிட்டால் அவர் கட்டாயம் கார்ட்டூன்ல வந்தேதான் ஆகணும். அப்படி வந்தாதான் அவர் மக்களுக்கு அறிமுகமான தலைவராகத் தெரிவார். அப்படி வராவிட்டால் யாராவது ஒரு கார்ட்டூனிஸ்ட்க்கு போன் போட்டு என்னையும் காட்டூன்ல கொண்டு வாங்க என்று கெஞ்சனும். ஏனென்றால் கார்ட்டூணுக்கு அப்படி ஒரு பவர் இருக்கு. தலைவர்கள் அரசியலுக்கு வந்துட்டா போக மாட்டாங்க. கதிரையை இறுக்கி புடிச்சிட்டு உட்கார்ந்துடுவாங்க. அப்படி அன்னைக்கு உட்கார்ந்தவங்கதான் கலைஞர் ஜெயலலிதா, வைகோ, ராமதாசுன்னு இன்னைக்கு வரைக்கும் இருக்காங்க. அதனால் நானும் எல்லாத் தலைவர்களையும் என்னோட தூரிகையில் கொண்டு வந்துட்டேன்"என்றார். "கார்ட்டூன் வரைபவர்களுக்கு தத்துரூபமான படங்கள் வரைய வராது. அப்படியே வந்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்காது." ஆனால் மதன் ஆரம்பத்தில் தத்துரூபாமான படங்களை வரைந்திருக்கிறார்.

"இப்போது எனக்கு அப்படி தத்துரூபமான ஓவியங்களை வரைய வராது. அப்படியே வரைந்தாலும் அது கார்ட்டூன் மாதிரி இருக்கும். நான் 'வந்தார்கள் வென்றார்கள்' என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபோது சிலர் என்னிடம் 'நீங்களே இந்த கட்டுரைத் தொடருக்கு படமும் வரைந்திருக்கலாமே அப்படி நீங்கள் செய்திருந்தால் புத்தகமும் எழுதி அதற்கு படமும் வரைந்த பெருமையை நீங்கள் பெற்றிருப்பீர்களே?' என்று கேட்டார்கள். "நான் ட்ரை பண்ணிதான் பார்த்தேன் அக்பரையும், பாபரையும் வரைந்து விட்டுப் பார்த்தேன். அவர்கள் சிரிப்பு திருடன் சிங்கார வேலு மாதிரி இருந்தாங்க. அதனால்தான் விட்டுவிட்டேன்" என்று கூறி சிரிக்கிறார் மதன்.

எழுத்து, சினிமா துறைகளுக்குள் எப்படி வந்தீர்கள்?

"நான் கார்ட்டூன் வரையத் தொடங்கி பதினைந்து வருஷம் கழித்துதான் எழுத்து துறைக்கு வந்தேன். எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்த விசயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படி ஒரு நாள் அக்பர் பற்றிய ஒரு விடயத்தினை ஆசிரியரிடம் கூறிய போது அவர் 'இதை ஏன் நீ எழுதக்கூடாது?' என்று கேட்க அப்போது தொடங்கியதுதான். 'வந்தார்கள் வென்றார்கள்'| அர்த்தமே இல்லாத கேள்வி பதில்கள் வரும்போது ஆக்கபூர்வமான விடயங்களை வாசகர்களுக்கு சொல்லலாமே என்பதற்காக படித்த விசயங்களை பதில்களாக சொன்னதுதான் 'ஹாய் மதன்!' சினிமா வாய்ப்பு திடீரென வந்ததுதான். கமல் என்னோட நல்ல நண்பர். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தப்ப எனக்கு அன்பே சிவம் படத்திற்கான கதையைச் சொன்னார். ரொம்ப நல்லா இருந்தது. 'யாரு வசனம்' என்று கேட்டேன் பட்டென, 'நீங்க தான்' என்றபோது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா போயிடுச்சு. பிறகு 'அது ஒண்ணும் கஷ்டமான காரியம் இல்லை' என்று சொல்லி என்னை அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுத வைத்தார்.

ஆனால் எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்துவிட்டது. சினிமாவில் ஒரு சிலர்தான் உண்மையாக வெளிப்படையாக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் நம்மை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள். என்னோட குட்டிச் சாம்ராஜ்ஜியத்தில் நான் தலைவனாக இருக்கிறேன். ஆனால் அங்கே நான் போனால் பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவேன். இருந்தா ரஜினி - கமல் மாதிரி இருக்கணும், இல்லன்னா மரியாதையும் கிடைக்காது; கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திவிட்டு தூக்கிப் போட்டு விடுவார்கள்." என்று சொல்லும்போதே மதனின் முகத்தில் வெறுப்பு தீயாக...

"வளர்ந்து வரும் கார்டூட்ன் கலைஞர்களுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்...?"

"கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிற தமிழ் நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு ஐந்து பேர்தான் கார்ட்டூனிஸ்டுகளாக இருக்கிறாங்க. அப்புறம் எங்கே வளர்ந்து வாரவங்க இருக்காங்க.... இருந்தால்தானே சொல்வதற்கு" என்று விரக்தியுடன் சொல்லி தமது நேர்காணலை மதன் நிறைவு செய்தார்.

1 comment: