Tuesday, March 10, 2015

திருநங்கை ரோசின் காதலர் தின சிந்தனைகள்

"ஒருவனுக்கு ஒருத்தி என்பதே திணிப்புத்தான்"


மணி  ஸ்ரீகாந்தன்

காதலர் தினம் சம்பந்தமாக கருத்து சொல்ல வி.ஐ.பி.களை வானவில்லுக்காக தேடியதில் சென்னை கே.கே.நகர் 10வது செக்ட்டர் பார்க்கில் சிக்கியவர்தான் நம்ம விஜய் டிவி புகழ் இப்படிக்கு ரோஸ் பார்ர்க் பெஞ்சில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தவரின் கவனத்தை காதலர் தினத்திற்காக எம் பக்கமாக திசை திருப்பினோம்.

"வாவ் காதல் தினமா?" என்று  ரொம்பவே உற்சாகமான ரோஸ்! "நான் அப்போ ரொம்பவே வெளிப்படையாக பேசுவேன், பேசலாமா?" என்று எம்மிடம் அனுமதி கேட்டுவிட்டே தொடர்ந்தார்.

"காதல் என்பது ரொம்பவும் ஆழமான இயற்கையான மனித வாழக்கையை புரட்டிப் போடக் கூடிய ஓர் உணர்வு. ஒருவருக்கு காதல் உணர்வு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து அவ்வளவு சுலபமாக மீண்டு விட முடியாது. ஆனால் அதற்காக ஒரு தினம் வைத்துக் கொண்டாட அவசியமில்லை.

கிறிஸ்தவ ஆதிக்கத்தில் உருவாக்கப் பட்டதுதான் இந்த தினம். உலகலாவிய அளவில் ஏகாதியபத்திய வியாபாரிகள்  இது போன்ற தினங்களை எடுத்து அதன் மூலமாக மக்களுக்கு செலவீனங்களை ஏற்படுத்துகிறார்கள். பெப்ரவரி 14 என்பது வியாபாரிகளுக்குதான் நன்மையாக அமைகிறது. அந்த சமயத்தில் பார்த்தீங்கன்னா "வைரம் வாங்குங்க உங்க காதலை கௌரவப்படுத்துங்க" என்று விளம்பரம் செய்வாங்க. உண்மையிலேயே காதலுக்கும் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
அதாவது நம் மீது பொருள் ஆதிக்கத்தை திணிக்க பார்க்கிறார்கள். அதனால் காதலர் தினம் என்கிற விசயம் வாத்தக மயமாகி விட்டது. ஆனால் காதல் என்பது ஒரு உண்தமான உணர்வு. அது மறுக்க முடியாத விசயம். இந்தியாவை பொறுத்த வரையில் காதலர் தினத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், இங்கே வந்து சாதி ஆதிக்கம் அதிகமாக இருக்கு! இங்கே காதல் ஏற்றுக்கொள்ளப்படாத விசயம். முக்கியமாக இங்கே இருக்கிற ஆதிக்க வெறியர்கள், சாதி வெறியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு சாதியே மேலோங்கி இருப்பதற்காக, மற்ற மனிதர்கள் எல்லாம் சாதி வாரியாக பிரித்து வைத்திருக்க வேண்டும் இவர்களுக்கு. காதலில் நீங்கள் சாதி பார்க்க மாட்டீர்கள். உங்களுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களோடு அன்பு செலுத்த முயற்சிப்பீர்கள். திருமணம் கூட முக்கியம் கிடையாது. திருமணம் என்பது ஒரு சடங்கு. காதல் இருக்கிறவரைக்கும் அன்பாக ஒன்றாக வாழலாம். காதல் என்பது திடீரெனக் குறையவும் வாய்ப்பு இருக்கு. அப்படி குறைந்தால் அவங்க பிரிவதும் நல்லது." என்று வில்லங்கமாகவே தமது கருத்தை முன் வைத்த ரோஸிடம் "அப்போ ஒருவனுக்கு ஒருத்தி...?" நாம் ஆரம்பித்து முடிப்பதற்கு முன்பாகவே ரோஸ் முந்திக் கொண்டார்.

"அதெல்லாம் பொய்யான விசயம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே திணிப்புதான். ஆதிக்கவாதிகள் மதம்,கடவுள் என்கிற பெயரில் நம்மீது திணித்த ஒரு விடயமாகவே நான் அதை கருதுகிறேன். திருமணம் என்று ஒன்று இல்லையென்றால் பொருள் தேட ஓட மாட்டோம். நம்ம பிள்ளைக்காக சொத்து சேகரிக்கிற அவசியம் இருக்காது. ஆனால் அந்த ஓட்டம்தான் இன்று உலகம் முழுவதும் நடக்கிறது.இன்று உலகத்தில் நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் அதுதான் காரணம்.
அது இயற்கையே கிடையாது.அது நமக்கு சொல்லிக் கொடுத்த விசயம்.சமுதாயம் என்பது இப்படித்தான் ஆண் என்றால் பொருள் தேடி ஓடணும்,அப்படி பொருள் தேடி சாதித்தால் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணுக் கிடைப்பா. அப்புறம் கல்யாணத்திற்குப் பிறகு புள்ளக்குட்டிக்காக ஓடணும். இது ஒரு வெளித்தோற்றம். ஆனால் உள்ளுக்குள்ள ஒவ்வொரு ஆணுக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒண்ணும் கிடையாது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் வரும். அப்புறம் கொஞ்ச நாளில மறையும் இப்படி மாறி, மாறி வருகிற விசயம்தான் காதல். ஒரு காதலை வச்சி வாழ்க்கை முழுவதற்குமாக நாம் திட்டம் போட முடியாது. ஆனால் இந்த சமுதாயம் அந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்குது.அதுவும் காதல் ரீதியாக இல்லை. நீங்கள் ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும். இதுதான் இந்திய ஆதிக்க சக்தியினரின் கொள்கையாக  இருக்கிறது. தமக்கு கீழே உள்ள மக்களை அடிப்படுத்துவதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். நம் தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரையில் காதல் என்றாலே ஒரு பயம்தான்.

அது இயற்கையான விசயம் என்பதால் மக்களுக்கு அதன் மீது ஒரு மோகமும் இருக்கு. ஆனால் நம்ம ஆளுங்க எல்லோரும் ரெட்டை வேசம் போடத் துவங்கி விட்டார்கள். வெளியே ஒரு வாழ்க்கை உள்ளே ஒரு வாழ்க்கை. அதனால்தான் திருட்டுத்தனமாக படகு மறைவிலும்,குடை மறைவிலும் காதல் செய்ய அவன் தள்ளப்படுகிறான். ஒரு பெண் மீது இருக்கும் காதலை வெறும் காமமாக மட்டும் பயன்படுத்திவிட்டு அவளை தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடுவது போன்ற விசயங்கள் நடைபெறுகிறது. ஏனென்றால் இவனால் அந்த விசயத்தை வெளியே காட்ட முடியாது.காரணம் ஒருவனுக்கு ஒருத்தி திணிப்பு.அவன் பெயரை கெடுத்துக்க கூடாது நல்லவன் மாதிரி நடிக்கணும்.இப்படி எல்லோரையும் பொய்யர்களாகவும் ஆக்கிவிட்டது இந்த சமுதாயம்.என்று சமுதாயத்தின் மீது எரிந்து விழும் ரோஸின் பேச்சில் அனல்.

"இந்த விசயம் கொஞ்சம் மாறிட்டுதான் வந்தது ஆனால் சமீபகாலமாக மீண்டும் ஆதிக்க வெறியர்கள் தமிழ் நாட்டுக்குள் புகுந்துவிட்டார்கள். இப்போது சாதி ஆதிக்க வெறியர்களின் கை ரொம்பவே ஓங்கிவிட்டது. இது நம் தமிழ் மக்களுக்கு புரியவில்லை. புரிந்தால் அவர்களை விரட்டி விடலாம். ஆனால் நம் மக்கள் மூடர்களாகவே இருக்கிறார்கள். நாம் மூடர்களாக இருப்பதின் காரணத்தினால்தான் இவர்களால் நம்மை இலகுவாக பிரிக்க முடிந்தது, பிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

எனவே தினம் தினம் காதலர் தினம்தான் காதல் போற்றப் பட வேண்டிய விடயம். அது இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கிற விசயம். அன்பின் ஒரு வெளிப்பாடு. காதலும் அன்பும் போற்றப்பட்டால் வக்கிரம், வன்மம் குறைந்து எங்கும் சமாதானம் பரவும். காதலிப்பவர்களை சுதந்திரமாக விட்டாலே போதும். அதுவே இந்த உலகத்தை மாற்றி விடும்" என்றவரிடம்   "காதலர்களை சுதந்திரமாக நடமாட விட்டால் எல்லை மீறிவிடுவார்களே" என்று ஒரு கொக்கியை போட்டோம்.

"அதை எல்லை மீறுதலாக நான் பார்க்கலைங்க அவங்க அவங்களோட சமுதாயத்தில் வாழும் போது ஒருவனுக்கு ஒருத்தியான திணிப்பினால் அவங்க நசுக்கப்படுறாங்க, ஆனால் அவங்களுக்கு அது உண்மையில்லை. மனிதனின் இயற்கையான உள் உணர்வு, அங்கே ஒரு காதலையும் இங்கே ஒரு காதலையுமே தேடச் சொல்லுது. இதுதான் உண்மை. அப்படியான ஒரு சூழலில் தன்னோட காதலை, அழகை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் மறைவான இடத்தில் காதலை கொச்சையாக வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

இப்போ ஒரு பையனை ஒரு பொண்ணு காதலிக்கிறாள். அவனை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அவள் "அம்மா நான் அவனைத்தான் காதலிக்கிறேன்" என்று சொன்னால் அம்மா "ஓ அப்போ நீங்க ரெண்டு பேரும் மேல் மாடியில போய் காதல் பண்ணுங்க"னு  சொல்லுவாளா..? இல்லையே அதனால அவள் பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது இருட்டில்தான் காதல் செய்ய வேண்டி உள்ளது. அதனால்தான் பார்க், பீச் போன்ற இடங்களில் இயற்கை சூழ்ந்த இடங்களில் அந்த உணர்வு அதிகமாகவே தூண்டப்படுகிறது. இயற்கையை இயல்பாகவே விட்டாலே மனிதன் உன்னதமானவனாக மாறிவிடுவான். அவங்க கடவுள் தன்மையை அடைந்து விடுவார்கள்" என்ற ரோஸிடம் திருநங்கைகளின் காதல் உணர்வு பற்றி கேட்டோம்.

"நிச்சயமாக திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு இருக்கிறது. ஆனால் இந்த சமுதாயம் திருநங்கையின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணும், பெண்ணும் காதல் செய்வதையே சாதி, மதம், ஏழைப் பணக்காரன் என்று பிரித்து பாடாய் படுத்துபவர்கள், ஒரு திருநங்கை, ஒரு ஆணை காதலிப்பதை எப்படி ஏற்பார்கள்?
இன்னைக்கு ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. திருநங்கையின் காதலை மிகவும் கேவலமாகவே சித்தரிக்கிறார்கள். சமீபத்தில் 'ஐ' என்று ஒரு படம் பார்த்தேன். அதில் விக்ரமை விரும்பும் ஒரு திருநங்கையின் காதலை மிகவும் கேவலமாக சித்தரிப்பதோடு. மிகவும் அவலட்சனமான ஒரு திருநங்கையை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்து திருநங்கைகளை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.அந்த திரைப்படம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது.

இன்றைய நாட்களில் திருநங்கைகளுக்கு நிறைய காதல் பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். திருநங்கைகளை காதலிக்கும் ஆண்கள் கொஞ்ச நாளிலேயே அவளை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அதற்குக் காரணம் சமுதாயம்தான் சமுதாயத்தை எதிர்த்து திருநங்கையோடு வாழ அவனுக்கு தைரியம் இல்லை. அதனால் திருநங்கைகள் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள். காதல் தோல்விகளால் மனம் கசந்து போய் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். ஆனாலும் சில ஆண்கள் இப்போது தைரியமாக திருநங்கைகளோடு வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். அதை 'ஐ' மாதிரியான பெரிய படங்கள் கெடுக்காமல் இருந்தால் நல்லதுதான்.

காதலில் ஈடுப்படாத திருநங்கையே இருக்க முடியாது. திருநங்கையை ஆண்கள் காதலிப்பதும் பிறகு அவளை பிரிந்து செல்வதும், அதன் பிறகு வேறு ஒரு ஆண் வருவதும் அவனும் சில நாட்களில் சென்று விடுவதும் தொடர, திருநங்கைகள் மனமுடைந்து விடுகிறார்கள். எனக்கு அப்படியான அனுபவங்கள் நிறைய இருக்கு! அதனால் சில கட்டத்துக்கு மேல் ஆண்கள் என்றாலே ஒரு வெறுப்பு,'சீ!' இவர்கள் என்ன மனிதர்கள்!" என்ற எண்ணமே தோன்றுகிறது." என்ற தமது கருத்தோடு காதலர் தின வாழ்த்துக்களையும் கூறி தமது நேர்காணலை ரோஸ் நிறைவு செய்தார்.

2 comments: