Monday, March 2, 2015

கொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி

நேர் கண்டவர் : மணி ஸ்ரீகாந்தன்

'வாணி விலாசுக்கு எதிரில் ஒரு பால் பண்ணை இருந்தது. ஹோட்டலுக்கு அங்கிருந்துதான் பால் வரும். விற்றது போக மிகுதி பாலை அக்கம் பக்கத்தாருக்கு இலவசமாகக் கொடுத்து விடுவோம்'

'அன்றைக்கு சிலர் நன்றாக சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் ஓடி விடுவார்கள். கேட்டால், ஒளிந்திருந்து ஹோட்டலுக்கு கல் எறிவார்கள்'

இலங்கை சைவ உணவக வரலாற்றில் கொழும்பு வாணி விலாஸ்சுக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது. கடல் தாண்டி வந்த திருநெல்வேலிக்காரர்களின் கைமணம் ஐம்பதாண்டுகளைக் கடந்து இன்னமும் சுவை குன்றாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை.

தனது பதின்மூன்றாவது வயதில் முண்டா பணியனுடன் கொழும்பிற்கு வந்த வாணி விலாஸின் அதிபர் சுப்பாராமனின் அனுபவங்களும், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்லாவைப் போல இனிப்பாகத்தான் இருக்கிறது.

"என் மாமா சுப்பா ரெட்டியார்தான் என்னை கொழும்புக்கு கூட்டி வந்தார். வறுமையின் காரணமாகத்தான் பிழைப்புக்காக வந்தேன். ஆனா நான் அன்று அணிந்த பனியனை 'பாடி'னு சொல்லுவாங்க. கையில்லாத பனியனைப் போலத்தான் இருக்கும். ஆனால் முரட்டு பருத்தித்துணியால் தைக்கபட்டிருக்கும். இந்த பாடி, வேட்டியோட 'இர்வின்' என்ற கப்பலில் இலங்கை வந்தேன்.
அந்தக் காலத்துப் பயணம் இப்போ மாதிரி இலகுவானதாக இல்லை. ரொம்ப சிரமமான பயணம். திருநெல்வேலியிலிருந்து தனுஷ்கோடிக்கு நீராவி ரயிலில் வந்து அங்கிருந்து கப்பலில் ஏறினேன். நாலு மணி நேரத்தில் மன்னாருக்கு வந்து விடலாம். பிறகு மீண்டும் நீராவி கோச்சியில் ஏறி கொழும்பிற்கு வந்தேன். அந்தக் கப்பல் பயணம் ரொம்பவும் ஜொலியாக இருந்தது. எல்லோரும் தரையிலும் பெஞ்சிலுமாக அமர்ந்து கதை பேசியபடியே கொழும்பிற்கு வந்ததை இன்று நினைத்தாலும் இனிக்கிறது" என்று அந்தக் காலத்து நினைவுகளை அசைபோடும் சுப்பாராமன் அந்தக் கப்பல் பயணத்தில் தான் சந்தித்த ஒரு ஐரோப்பிய தம்பதியைப் பற்றிச் சொல்கிறார்.

"அவங்க நன்றாகவே தமிழ் பேசினாங்க. நாலு மாதமாக மதுரையில் தங்கி இருந்தாங்களாம். அந்த வெள்ளைக்கார துரை காலையில ஐந்தரை மணிக்கெல்லாம் எழும்பி மதுரை வீதிகளில் நடை பயில போவாராம். அப்போது அங்கே வீடுகளில் வசிக்கும் பெண்கள் முற்றத்திற்கு சாணம் தெளித்து, கோலம் போடும் அழகையும், தங்கள் கணவர்மார் வேலைக்குப் போகும்போது வாசல் வரை வந்து இன்முகத்தோடு அலுவலகம் அனுப்பி வைக்கும் காட்சிகளையும் நெகிழ்ச்சியுடன் சொல்லி பெருமைப்பட்டார்.

ஆனா எங்க நாட்டு (பிரிட்டன்) கலாசாரம் அப்படி அல்ல. அது ரொம்ப மோசம். இப்போ சிலோனுக்கு என்னோட வர்ர இவ அங்கே போனதும் வேறு ஒருவனுடன் போய் விடுவாள்..." என்று தன் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டே சகஜமாக பேசிய அந்த துரையும்.

'அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க வேண்டும்' என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. அடடே, நம்ம நாட்டு கலாசாரத்தில் இவ்வளவு விசயம் இருக்கிறதா? இது தெரியாதவங்க வெள்ளைக்காரனை உசத்தியா நினைச்சுட்டு இருக்கானே! என்று நானும் தமிழனின் பெருமையை எண்ணி பெருமிதம் கொண்டேன். ஆனா இன்னைக்கு நம்ம கலாசாரம் அப்படியா இருக்கு? மெட்ராசில் கல்யாணமான பொண்ணுங்க கழுத்தில் தாலியைக் காணோம். வேலைக்கு போகும் சமயத்தில் 'இது எதுக்குன்னு' வீட்டுல மாட்டி வச்சிட்டு வர்றாங்க. வீட்டில் இருக்கும் போது மட்டும் கழுத்தில் மாட்டிக்குவாங்களாம். ஐ. டி. கம்பனியும், கோல் சென்டரும் நம்ம ஊருக்கு வந்ததோடயே கலாசாரமும் செத்துப் போயிடுச்சு! டீவியை போட்டா நாடகத்தில் வரும் வில்லன்கள் எல்லோருமே பொம்பளைங்களாகத்தான் இருக்கிறாங்க. அதுங்க தண்ணி, சிகரட் பாவிப்பதாக வேற காட்டுறாங்க" என்று நம் சமூகத்தின் மீது வெறுப்பை வீசும் சுப்பாராமனின் முகத்தில் கவலை ரேகைகள்.
தனது மகன், மகளுடன்
சுப்பாராமன்
மெகா சீரியல்களில் நாதஸ்வரம், வம்சம், தென்றல், வாணி ராணி என்று சன் டீவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பெயர்களை பிழையின்றி வரிசைப்படுத்துகிறார். சீரியல்களை தவறாமல் பார்ப்பீர்களோ என்று கேட்டால், பதில் சிரிப்பாகவே வந்து விழுகிறது.

சுப்பராமனுக்கு எழுப்பத்தேழு வயது கடந்து விட்டிருந்தாலும் இன்னும் அவரின் பேச்சு தளர்ந்து போகாமல் பதில்கள் டாண் டாண் என வந்து விழுகிறது.

"என் மாமா சுப்பா ரெட்டியோடு கொழும்புக்கு வந்த நான், மேட்டுத் தெருவில் இருக்கும் சென் லூசியாஸ் பாடசாலையில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படிச்சேன். அதன் பிறகு என் மாமா கடையில் வேலைக்கு ஆள் இல்லைன்னு என்னையும் உதவிக்கு வைத்துக் கொண்டார். அதனால் என் படிப்பும் பாதியோடு நின்று விட்டது. ஹோட்டலில் எல்லா வேலைகளையும் செய்தேன். என் மாமாவுக்கு ரொம்பவும் விசுவாசமாகவும் இருந்தேன்.

வாணி விலாசுக்கு எதிரில் எங்களோட பெரிய மாட்டுப் பட்டி இருந்தது. அங்கே நூறு மாடுகள் வளர்க்கப்பட்டன. பால் வியாபாரமும் பெரிதாக நடந்தது. அப்போது கொழும்பில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதனால் பால் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. அதனால் ஆமர் வீதி சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பால் விநியோகம் செய்தோம். ஹோட்டலில் பெரிய அண்டாவில் பால் கொதித்துக் கொண்டிருக்கும். தோட்டத்து ஆட்கள் வந்து கேட்டால் சும்மா கொடுப்போம். இந்த ஏரியா ஆளுங்க எல்லோரும் எங்க பாலை குடிச்சு வளர்ந்தவங்கதான்... 83 கலவரத்தில் எங்க கடை தப்பியதும் அந்தப் பால் தானம் செய்த புண்ணியம்தான் என்றே நினைக்கத் தோணுது" என்கிறார் சுப்பாராமன்.

"அந்தக் காலத்தில் பவுடர் பால் கிடையாது. அப்படி யாராவது வெளிநாட்டில இருந்து கொண்டு வந்து உணவகங்களில் பாவிப்பது தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது அவ்வளவு பெரிய குற்றம். ஆனால் இன்னைக்கு தெருவில் போட்டு பால் பவுடர் விக்கிறான், என்ன கொடுமை இது?" என்று கண்களில் வியப்புக் காட்டுகிறார் சுப்பாராமன்.

திருநெல்வேலி மூலைக்கரைப் பட்டியில் உள்ள முருகன்தான் இவரின் குல தெய்வமாம். இவரின் துணைவியாரின் பெயர் விஜயலட்சுமி,

"அந்தக் காலத்தில் உணவகங்கள் இப்போ மாதிரி நேர்த்தியாக இருக்காது. சும்மா ஒரு நாலு மேஜையை போட்டு, பெரிய குவளையில் தண்ணீரை வைத்து இலையைப் போட்டு பரிமாறுவோம். பரிமாறும் சர்வர் சிலரைத் தவிர பலர் மேல் சட்டை அணியாமல் வேட்டியோடுதான் வேலை பார்ப்பார்கள். அதை அப்போது பெரிய தவறாக யாரும் நினைக்கவில்லை. ஆமர்வீதியின் இந்தத் தெருவில் மாட்டு வண்டிதான் ஓடும். வாகனம் கிடையாது. டிராம் கார் மட்டும் ஒரு நாளைக்கு நாலு முறை போய் வரும். தெருக்கள் அமைதியாக கிடக்கும். மாட்டு வண்டி ஓடுவதால் வீதிகளில் சாணம் கிடக்கும். கள்வர்களும் அதிகமாகவே இருந்தார்கள். மாலை ஆறு மணிக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் குறைந்து விடும். குறிப்பாக கல்குழி (குவாரி வீதி கொழும்பு -12) வீதி பக்கம் மக்கள் போகவே அஞ்சுவார்கள். ஏனென்றால் அது கள்வர் குகையாக இருந்தது. அங்கே தெரியாமல் போனால் பணத்தையோ, நகையையோ பறிகொடுத்து விட்டுத்தான் வரவேண்டும்.
கொழும்பின் பெரும்பாலான முட்டுச்சந்துகள் வழிப்பறி நடக்கும் இடங்களாகவே காணப்பட்டன. காடைப் பையன்களாலும் எங்களுக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். இந்தக் கஸ்டமர்மார் சில சமயம் சாப்பிட்டு விட்டு பில் கட்டாமல் எழுந்து ஓடிவிடுவார்கள். அடுத்த நாள் ஆளைப் பிடித்து திட்டினால் மூனாவது நாள் வீதியில் நின்று கல்லால் எறிந்து விட்டு ஓடிவிடுவான்கள். நல்ல பழக்கங்கள் கஸ்டமர்மாரிடம் இருக்கவில்லை. வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தையே கொட்டும். அதற்குக் காரணமாக அப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது நிலமைகள் எவ்வளவோ மாறி விட்டது. சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் எல்லோரும் மாறி விட்டார்கள். அன்றைக்கு ரௌடித்தனம் செய்த பரம்பரையைச் சேர்ந்தவங்க இன்னைக்கு பிச்சை எடுப்பதை பார்க்கிறேன். பார்த்தீர்களா காலச் சக்கரம் எப்படி சுத்துகிறது என்கிறதை..." என்று பல சம்பவங்களை கண்டு அனுபவித்த முதிர்ச்சியுடன் அவர் எம்முடன் பேசினார்.

உணவின் சுவை இப்போ எப்படி இருக்கிறது என்று மேலும் அவரை பேசவைத்தோம்.

"அப்போது ஒரு சுவை என்றால் இப்போ ஒரு சுவை. புதிய உணவுகளின் வருகையினால் ருசியும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ருசியைவிட விலையில் தான் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போ ஒரு போத்தல் பால் அறுபது சதத்திற்கும், ஒரு கப் பால் டீ இருபத்தைந்து சதத்திற்கு விற்பனையானது. இப்போது அந்த காசுக்கு மிட்டாய் கூட வாங்க முடியாது. எங்களோட மாட்டுப் பட்டிக்கான புல்கட்டு ஒன்றின் விலை 50 சதம். மட்டக்குளியில் உள்ள பாம் ரோடு, பேலியகொடை, வெல்லம்பிட்டி எல்லாம் காடுகளாக இருந்தன. அங்கே இருந்துதான் புல் வெட்டி எடுத்து வருவாங்க. என் மாமாவுக்கு மட்டக்குளியில் பி. சி. பெரேரா என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு பொல்கஹாவெலயில் பெரிய தென்னந்தோட்டம் இருந்தது. அதில் அவர் இருநூறுக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்ந்தார். சில சமயங்களில் என் மாமாவுக்கு தந்தி அடிக்கும் அவர், 'பத்து மாடுகளை கூட்ஸ் ரயிலில் அனுப்புறேன்' என்று தகவல் அனுப்புவார். நாங்க உடனே ஸ்டேஷனுக்கு சென்று கூட்ஸ் ரயிலில் இருந்து மாடுகளை இறக்கி கூட்டிட்டு வருவோம். அவருக்கு அதற்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. நாங்க அவை போடும் கன்றுகளையும் மாட்டையும் கொடுத்துவிட்டால் போதும். பாலை நாங்களே எடுத்துக்குவோம். மாதத்திற்கு ஒருமுறை வரும் அந்த மனிதர் பட்டிக்குப் போய் மாடுகளை பார்வையிடுவார். அப்போ பணியில் இருக்கும் வேலை ஆட்கள் 'இதெல்லாம் அந்த மாடு போட்ட குட்டி தாங்கன்னு' சொல்லி அவரை மகிழ்ச்சிப்படுத்தி அவர் சந்தோஷத்தில் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொள்வாங்க" என்று சொல்லிச் சிரிக்கிறார் சுப்பாராமன்.

ஆரம்பகாலத்தில் வாணி விலாசில் வேலை செய்து கொண்டே கோப்பிக் கொட்டைகளை பதமாக வறுத்து அதை அரவைக் கல்லில் அரைத்து பாரத் கோப்பி என்ற பெயரில் பாக்கட் செய்து விற்பனையும் செய்து வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கோப்பி மாமா என்ற சிறப்பு பெயரும் இருந்திருக்கிறது. உழைப்பால் உயர்ந்த சுப்பாராமனுக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

No comments:

Post a Comment