Friday, March 27, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 13

ஆயாசத்தை ஏற்படுத்தும் 'ஆய்வு' கட்டுரைகள்


அருள் சத்தியநாதன்

லங்கைக்கு வந்த அரேபியருக்கு நல்ல உணவு மற்றும் ஆரோக்கியத்தோடு போன இடத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையும் தேவையாக இருந்தது.இவை தொடர்ச்சியான தொலைவான இடங்களுக்கு பயணிக்கவும் வர்த்தகம் செய்யவும் ஒத்தாசையாக அமைந்தன.உடற்பசியை பாதுக்காப்பான வகையில் தீர்த்துக் கொள்ளவதற்க்கும் மனைவிமார் இவர்களுக்கு தேவையாக இருந்தனர்.
இதேமுறையை இலங்கையில் ஒல்லாந்தர் பின்பற்றினர். சிறிய நாடான ஒல்லாந்தில் இருந்து தமக்கு விசுவாசமான படையினரையும் சேவகர்களையும் இறக்குமதி செய்து கொண்டிருப்பது என்பது நடைமுறை சாத்தியமானதாகாது என்பதால் இங்குள்ள ஒல்லாந்தர்கள் உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் முடிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர். இவர்களின் சந்ததியினரே பறங்கியர் என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரச பதவிகள் வழங்கப்பட்டன. இவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக ஒல்லாந்தர் கருதினர். ஆங்கிலேயர் காலத்திலும் பறங்கியருக்கு கௌரவம் இருந்தது. சுதந்திரத்தின் பின்னரேயே நிர்க்கத்திக்குள்ளான இச்சமூகம், வெளிநாடுகளில் குடியேறியது. பண்பான, விசுவாசம் கொண்ட, ஆங்கில அறிவு படைத்த ஒரு சமூகத்தின் சேவையை நாம் இழந்துபோனோம்.
அல்லம்மா எம்.எம்.உவைஸ் அரங்கு
அக்காலத்தில் மாட்டு வண்டிக்காரர்களும் தாம் செல்லும் இடங்களில் பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வது வழக்கம். இந்தியாவில் தூர பயணங்களை மேற்கொள்ளும் லொறி சாரதிகளிடமும் இப்பண்பைக் காணலாம்.

தஞ்சாவூரில் நறுமண வணிகர் குழுவினரும் படைவீரர்களும் ஒரு குழுவாக இணைந்து கொண்டனர். இக்குழு அத்தர் ஜமாத் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இவர்கள் ஒருவரை ஒருவர் தோழமையுடன் அழைத்துக் கொள்வதற்கு 'சாஹிபஉ' என்ற அரபுச் சொல்லைப் பயன்படுத்தினர். இது, சாயிபு என்றாகி பெயரின் பின்னால் இணைந்து கொண்டது. ஆங்கில ஆட்சியில் கௌரவம் மிக்க இந்துக்களுக்கு ராவ் சாஹிப் என்ற பட்டமும் முஸ்லிம்களுக்கு கான் சாஹிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. குதிரை வணிகர்களைக் குறிப்பதே ராவுத்தர் என்ற பட்டப் பெயர். பின்னர் இது கௌரவப் பெயரானது. துருக்கி முஸ்லிம்கள் துருக்கர் என அழைக்கப்பட்டு துலுக்கராயினர். இதில் இருந்து தோன்றியதே துலுக்காணம். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இஸ்லாமியரை கொச்சையாக விளிக்க இச்சொல் பயன்படுகிறது.

தஞ்சாவூருக்கு முஸ்லிம்கள் வருவதற்கு சோழ மன்னர்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. நாகப்பட்டின துறைமுகமும் காரணம். தஞ்சைப் பகுதி இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட கால நல்லுறவு நிலவி வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கொடநாட்டு கருப்பூர் கோவிலுக்கு இஸ்லாமியர் காணிகளை கொடையாக அளித்துள்ளனர். இராமநாதபுர மாவட்டத்தின் உத்திரகோசமங்கை கோவில், மாணிக்கவாசகர் பாடல் பெற்றதலம். இக்கோவிலுக்கும் இஸ்லாமியர் காணிக்கொடை செய்துள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்றைக்கும் வழிபாட்டில் இருக்கும் உமாமகேஸ்வரர் சிலையை கொடையாக அளித்தவர் அன்வர்தீன்கான் என்ற இஸ்லாமியர். திருச்சி மாவட்டம் கருப்பூர் பெருமாள் கோவில் கொடிக்கம்பத்தை கொடையாக அளித்தவர் சையத் அலிகான் என்ற இஸ்லாமியர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
ஆட்காடு நவாப்பின் படைத்தள பதியாக விளங்கிய மராட்டிய வீரர் கனாசாஹிபு ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் பிரகடனம் செய்தார். மதுரை கள்ளர் சமூகத்தினர் இவரைத் தலைவராக ஏற்று அவர் படையில் சேர்த்தனர். இறுதியில் கான்சாஹிபுவை ஆங்கிலேயர் தோற்கடித்தனர். அவரது வீடு தரைமட்டமானது. அந்த இடம் இன்றைக்கும் மதுரையில் 'கான்சாஹிபு மேட்டுத்தெரு' என அழைக்கப்படுகிறது. தொண்டியைச் சேர்ந்த குணக்குடி மஸ்தான் சென்னையில் வாழ்ந்த இடம் இப்போதும் தொண்டியார் பேட்டை (தண்டயார் பேட்டை) என வழங்கப்படுகிறது.

(இக்கட்டுரையை எழுதுவதற்கான தகவல்கள், முனைவர் எம். பரீதாபேகம் எழுதிய தஞ்சை மாவட்டத்தில் இஸ்லாம் மற்றும் காரைக்குடி எம். எஸ். ராஜா முகம்மது எழுதிய தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு ஆகிய கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டவை)

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு பற்றிய நூல்கள் உள்ளனவா? இதுபற்றி ஆராயும் தனி ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளதா? என்ற கேள்வி ஜனவரி இதழில் எழுப்பப்பட்டிருந்தது. தனி ஆய்வு நூல் இல்லை, ஆனால் வெவ்வேறு ஆசிரியர்களினால் எழுதப்பட்ட நூல்கள் உள்ளன என்று தீரன் நௌஷர் எமக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. மணிப்புலவர் மருதூர் மஜீத் இலங்கை முஸ்லிம் வரலாறு தொடர்பாக ஒரு  நூல் எழுதியிருப்பதாகவும் எம். ஏ. எம். சுக்ரி, எம். ஐ. எம். அஸீஸ், காலிதீன் ஆகியோர் இது தொடர்பாக நூல்கள் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.

இவ்வாண்டில் கிழக்கிலங்கையில் இஸ்லாமிய இலக்கிய மாநாடொன்று நடைபெறவிருப்பதாகவும் எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை பின்னணியாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த ஏற்பாடுகளுக்கு பின்னால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு அரசியல் தலைமை இல்லாமல் இவ்வாறான ஒரு மாநாட்டை பிரமாண்டமான முறையில் நடத்த முடியாதுதான். முதலாவது இஸ்லாமிய இலக்கிய மாநாடு கிழக்கிலேயே நடைபெற்றது. பின்னர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழிகாட்டலின் கீழ் கொழும்பில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்திலும் மலேசியாவிலும்; பல இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடைபெற்ற முடிந்துவிட்டன. இங்கெல்லாம் எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளுடன் மாநாடுகள் நடத்தப்பட்டன என்பதை இங்கெல்லாம் போய் வந்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள், அறிஞர்கள் அறிவார்கள். அங்கெல்லாம் நடைபெற்ற குற்றங்குறைகளையும் குத்து வெட்டுகளையும் நம்மவர்கள் அறிவார்கள்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புவோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்நின்று ஏற்பாடு செய்யும் இலக்கிய விழா என்பதால் கட்சி அரசியல் புகுந்து விளையாடுமே என்ற அச்சமும் சில இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் இருக்கவே செய்கிறது. இது இலக்கிய மாநாடாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஏனெனில் ஜூன் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த இலக்கிய விழா தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்பது ஐயம் தெரிவிக்கும் இலக்கியவாதிகளின் சந்தேகமாக இருக்கிறது.

இப்படி ஒரு இலக்கிய விழா நடைபெறப் போவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராமலேயே கசிந்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இக்கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணம் இம்மாநாடு நடைபெறுவதற்கான மிகப் பொருத்தமான இடம். விருந்தோம்பலை ஒரு கலையாகக் கைவரப் பெற்றவர்கள் இவ் இலங்கைக்காரர்கள். உல்லாச ஹோட்டல்கள் இல்லாவிட்டாலும், வசதியானவர்களின் பிரமாண்டமான வீடுகள் இப்பகுதியில் உள்ளன. ஏற்பாடுகளை கனகச்சித்தமாகச் செய்து முடிக்கக் கூடியவர்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டால் அது நிறைவான மாநாடாக அமைவதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதேசமயம், ஜூன் மாதத்துக்கு முன்பாக மாநாட்டை நடத்தி முடிப்பதுதான் தீர்மானம் என்றால், ஆய்வுக் கட்டுரைகள் கோரல், மலர் தயாரிப்பு போன்றவை அரைவேக்காடாக முடிந்து விடாதா? என்ற கேள்வியும் எழுவதால், அதையும் இங்கே சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்து விடுகிறோம்.

ஆய்வுக் கட்டுரைகள் எனும்போது சில கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகள்தானா என்ற சந்தேகம் எழுந்து விடுகிறது. தொடர்ச்சியாக இத்தகைய இலக்கிய ஆய்வு மாநாடுகளுக்கு செல்பவர்களுக்கு இந்த சந்தேகம் எழக்கூடும்.

சிலருக்கு இம்மாநாடுகளில் கட்டுரை சமர்ப்பிக்காவிட்டால் தூக்கமே வராது. ஆனால் புதிதாக எழுத சரக்கு கைவசம் இருக்காது. எனவே, உளுந்து மா கரைசலே தோசையாகவும் இட்லி, வடையாகவும் மாறுவதுபோல் தான் ஏற்கனவே சமர்பித்த சரக்கையே கொஞ்சம் தாளித்துக் கொட்டி இன்னொரு 'ஆய்வ' கட்டுரையாகத் தயாரித்து சமர்ப்பித்து விடுவார்கள். ஒரு நண்பர், 'ஒரு பேராசிரிய பண்டிதரைக் குறிப்பிட்டு இவர் ஒரே கட்டுரையை நான் அறிந்தவரை ஐந்து ஆறு தடவைகள் வெவ்வேறு மாநாடுகளில் சமர்ப்பித்து விட்டார்' என்ற தகவலை செம்மொழி மாநாட்டின்போது என்னிடம் சொன்னார்.

மாநாட்டு அமைப்பாளர்களுக்கு இன்னொரு பிரச்சினை. பல நாடுகளில் இருந்தும் எமது மாநாட்டுக்கு ஆய்வறிஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று பறை சாற்ற வேண்டிய கட்டாயத்தால், வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும். சுமாரான கட்டுகரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. உள்ளுரில், தமக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. இதனால் தரமற்ற அல்லது மாநாட்டுக்கு வளம் சேர்க்க உதவாத 'ஆய்வு' கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் பெரும்பாலான மாநாடுகள் துறைகளைக் குறிப்பிடாமல் திறந்த மட்டத்தில் ஆய்வுக் கட்டுரைகளை கோருகின்றன. இது குப்பைகளை அல்லது அம்மாநாட்டோடு பெரிதும் சம்பந்தபடாத கட்டுரைகளை வரவழைத்து விடுகின்றன.

No comments:

Post a Comment