Saturday, March 7, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 12

அப்துல் காதரின் குலேபகாவலி கிஸ்ஸாவே எம்.ஜி.ஆர்.படமாக வெளிவந்தது


அருள் சத்தியநாதன்

சங்கம் மருவிய காலத்தின் பின்னரான காலப்பகுதியை வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் காலம் என அடையாளம் காண்கின்றனர். இக்களப்பிரர் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும், கன்னடம் பேசும் இனத்தவரே களப்பிரராக அறியப்படுகின்றனர். கி.பி. 3 முதல் 6ம் நூற்றாண்டுவரை களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. கலாசாரம் புரிந்திருக்கவில்லை. இவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்துமதம் ஒடுக்கப்பட்டது. பௌத்தமும் சமணமும் ஓங்கியது. தமிழ் மொழியும் இலக்கியமும் தேக்க நிலை அடைந்தன. இதனால்தான் இக்காலப்பகுதி தமிழ் வரலாற்றின் முதல் இருண்ட காலம் என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான கருத்து என்றும், இந்து மதம் ஒடுக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் இக்காலப்பகுதி இருண்ட காலம் என வழங்கப்படுகிறது என்றும் ஆனால் களப்பிரர் காலத்தில் தமிழ் வளர்ந்ததற்கான சான்றுகள் தெளிவாக இருப்பதாகவும் புதிய ஆய்வுகள் கூறுவதாக ஒரு மாற்றுக் கருத்தும் உண்டு. நாம் இதற்குள் ஆழமாகச் செல்ல வேண்டிய தேவை இல்லை.
தமிழர்களின் இரண்டாவது இருண்ட காலம் எனத் தமிழ் ஆர்வலர்கள் குறிப்பிடும் காலம் மிக நீண்டது. அது 14ம் நூற்றாண்டில் தொடங்கி 19ம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது. இங்கே முக்கிய செய்தி, இக்காலப்பகுதியில் தமிழர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யவில்லை என்பதுதான். 14 ஆம் நூற்றாண்டில் மோகலாயர்களின் ஆட்சி நடக்கிறது. 15 முதல் 17ம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர், இவர்கள் தெலுங்கு பேசும் நாயக்கர்கள். இவர்கள் வழி வந்தவர்களே கண்டியில் நாயக்க வம்சத்து ஆட்சியை ஏற்படுத்துகின்றனர். கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தமிழ்பேசும் தெலுங்கு நாயக்க மன்னன்.

17 முதல் 18ம் நூற்றாண்டுவரை நவாப் ராஜ்யம் நடக்கிறது. இக்காலப்பகுதியில் ஐரோப்பியர்கள் ஆள்வதற்கு வந்து விடுகின்றனர். இறுதியாக ஆண்ட ஆட்காடு நவாப் பெரும் கடனாளியாகி 1801ம் ஆண்டு நவாப் ஆட்சிப் பிரதேசம் ஆங்கிலேயர் வசம் வீழ்கிறது. அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் பெறும்வரை தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிதான். இதனால்தான் இக்காலப்பகுதி இரண்டாம் இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது.

எனினும் ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிட்டபடி, இந்த இருண்ட காலத்தில் இஸ்லாமிய புலவர்களும், தமிழ் அறிஞர்களும் தமிழ் குன்றாமல் பாதுகாத்து வந்துள்ளனர் என்பது முக்கியமான விடயம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு அடித்தளமிட்ட சேகு இஸ்ஹாக் என்ற மதுரை வண்ணப்பரிமளப் புலவர், தன் புகழ்பெற்ற ஆயிரம் மசலா என்ற அதிசயப் புராணத்தை கி.பி. 1572 இல் பாடி இயற்றுகிறார். உமறு புலவரின் சீறாப்புராணம் 1703 இல் இயற்றப்படுகிறது.

பல்லவர் காலத்திலும் பின்னர் விஜயநகர பேரரசின் எழுச்சியின்போதும், நாயக்கர் காலத்திலும் தமிழ்ப் புலவர்கள் ஓய்ந்திருந்த வேளையில், சுமார் 800கும் மேற்பட்ட முஸ்லிம் புலவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியங்களைப் படைத்தனர். பேரிலக்கியங்களும், பிரபந்தங்களும், பக்தி, ஞானப் பாடல்களும் இவற்றுள் அடங்கும். நொண்டி நாடகம், படைப்போர், கிஸ்ஸா, நாமா, மசலா, முனாஜத் என புத்திலக்கியங்களும் படைக்கப்பட்டன.
1771 ஆம் ஆண்டு அருணாசலக் கவிராயர் இராம நாடக கீர்த்தனையை இயற்றுகிறார். இதைப்பின்பற்றி கோட்டாறு செய்யது அபுபக்கர் புலவர் 1812 இல் 828 பாடல்கள் கொண்ட சீறாக் கீர்த்தனத்தை இயற்றினார். 17, 18ம் நூற்றாண்டுகளில் பள்ளுவாகவும், குறவஞ்சியாகவும், நொண்டி நாடகமாகவும், கீர்த்தனையாகவும் நடைபெற்ற நாடகக் கலை, 19ம் நூற்றாண்டில்தான் தெருக்கூத்தாக வடிவம் பெறுகிறது. இவை நாட்டார் நாடகமாக அறியப்பட்டன. தமிழில் நாடக நூல் என்றால் அது நொண்டி, குறவஞ்சி, பள்ளு என்பனவே. இதற்கு முற்பட்ட நாடக நூல் தமிழில் கிடையாது. பள்ளு வகை நாடகங்களை விட குறவஞ்சி வகை நாடகங்களையே இஸ்லாமிய புலவர்கள் அதிகம் படைத்துள்ளனர்.

பேட்டை அப்துல்காதர் சாயுபு எழுதிய குலேபகாவலி கிஸ்ஸா புகழ்பெற்றது. இதைக்கண்ட சங்கரலிங்க கவிராயர், இதை குலேபகாவலி என்ற பெயரில் நாடகமாக்கினார். இதுவே பின்னர் எம். ஜி. ஆர் நடித்த வெற்றிப்படமாக குலேபகாவலி வெளிவந்தது.

முஸ்லிம் புலவர்கள் வடித்த நாடகங்கள் படிப்பதற்காக மட்டுமே, நடிப்பதற்காக அல்ல. எனினும் பிற்காலத்தில் இந்நாடகங்கள் நடிக்கப்பட்டன. நாகூர் நைனா மரைக்காயர் எழுதிய லால் கௌஹர் என்ற காதல் நாடகம் பிற்காலத்தில் நாகப்பட்டினத்தில் மேடை நாடகமாக போடப்பட்டபோது பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இஸ்லாமிய நாடகங்களில் தொழில் ரீதியாக சில நாடகங்கள் வெற்றிபெற்றன. அவற்றுள் ஒன்று, அலிபாதுஷா. இந்நாடகத்தை எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்குக் கைகொடுத்த ஒரிஜினல் போய்ஸ் கம்பனி நாடகக்குழு, கன்னையா நாயுடுவின் இந்து விநோத நாடகசபா, பாலமனோகரா சபா ஆகிய சபாக்கள் பல தடவைகள் தமிழகத்தில் மேடையேற்றி வெற்றி கண்டன. இந்நாடகம் பற்றிய சுவையான விஷயம் ஒன்றிருந்தது.

இந்நாடகத்தில் சல்மான்ராஜா என்ற ஒரு பாத்திரம். இப்பாத்திரத்தில் மட்டும் ஒரே நடிகர் தொடர்ந்து நடிப்பதில்லை. வெவ்வேறு நடிகர்கள் இவ்வேஷத்தை ஏற்று நடிப்பார்கள். நாடகத்தின் கதைப்படி, அலிபாதுஷாவின் மனைவி சபுரியத்தை சல்மான்ராஜா பலவந்தமாக அடைய முயல்வான். இதனால் ஆத்திரமடையும் சபுரியத்து, சல்மான்ராஜாவுக்கு சாபமிட்டு பாடுவாள். இந்த சாபவரிகளை ஒரே நடிகரே தினசரி கேட்டால் சாபம் பலித்துவிடும் என அஞ்சியதால் பல்வேறு நடிகர்கள் இப்பாத்திரத்தை ஏன்று நடிக்க வேண்டியிருந்ததாம்.

நாகூர் நைனா மரைக்கார், தேவாரத்தைப் பின்பற்றி தேவார மஞ்சரி என்ற பெயரில் கவிதை பாடியிருக்கிறார். அதன் இறைவணக்கப்பா இவ்வாறு ஆரம்பிக்கிறது:

ஆதியே போற்றி! ஓங்கும்
அமலனே போற்றி! மாறா
நீதியே போற்றி! வாழ்வின்
நிருமலானந்தம் போற்றி!
சோதியே போற்றி! நான்காம்
சுருதியின் முடிவே போற்றி!
நாதியே போற்றி! நித்திய நாதனே
போற்றி! போற்றி!

சேதுபதி மன்னர் கருணையால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இஸ்லாமிய புலவர் ஒருவரே காரணம் என்பார்கள்.

1901ம் ஆண்டு பாண்டித்துரை தேவரும், பாஸ்கர சேதுபதி மன்னரும் நாகூருக்குச் சென்றிருந்தனர். அங்கே சென்றபோது நன்னூல் விளக்கம், பொருந்த விளக்கம் ஆகிய நூல்களை எழுதிய குலாம் காதிறு நாவலரை சந்திக்க விரும்புகின்றனர். அப்போது அவர் நாகூர் தர்காவில் வித்வானாக வீற்றிருக்கிறார். அவரைச் சந்தித்த சேதுபதி மன்னர், புலவரே உமக்கு என்ன வேண்டும்? எனக் கேட்கிறார். புலவரோ மன்னரைப் புகழ்ந்துரைத்து,
ஆற்காடு நவாப்
"முற்றக் காக்கும் கொற்றக் குடையோய், தமிழ் வளர்த்தருளுமின்" என்று தனக்காக எதுவும் கேளாது, தமிழை வளருங்கள் என்கிறார். இவ்வேண்டுகோளை ஏற்ற அரசன் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் அமைக்கிறார். இத்தமிழ்ச் சங்கத்தில் நாவலர் பணிபுரியும் காலத்தில் மதுரை தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப் படையை இயற்றுகிறார். பின்னர் 'நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர்' என்ற சிறப்புப் பெயரால் போற்றவும்படுகிறார்.

வணிகர்களாக தமிழகம் வந்த அராபியர்களே பின்னர் இந்தியர்களைத் திருமணம் செய்ததால் முஸ்லிம் சமூகம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாகத் துறைமுகப் பட்டினங்களில் வேரூன்றியது என்பது தெரிந்ததே. ஆனால் அந்தப் பகுதியின் சிறப்பியல்புகளுக்கு உட்பட்டு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சிறப்பியல்புகளை இச்சமூகம் வெளிப்படுத்தியது. இன்றைக்கு அவை தனித்துவமான இலக்கிய செழுமையைக் கொண்டுள்ளன.

தஞ்சாவூரின் பழைய பெயர் அழகாபுரி. தஞ்சனபூரி, தஞ்சாய் என்றும் அழைக்கப்பட்டிருந்தது. தஞ்சாய் என்பது ஒருவகைக் கோரைப் புல்லைக் குறிக்கிறது. தஞ்சாறை என்பதில் வரும் ஆறை, கோட்டை மதிலைக் குறிக்கும். இவை இணைந்ததன் மூலமே தஞ்சாவூர் பிறந்தது.

தஞ்சை முஸ்லிம்கள் முதலில் படை வீரர்களாக வந்து இங்கே குடியேறியவர்களாம். இன்னொரு பிரிவினர் அரசனுக்கு வாசனைப் பொருட்களை விற்பதற்காக வந்த வணிகர் கூட்டம். இவர்கள் அனைவரிடமும், தாம் எங்கு அடிக்கடி செல்கிறோமோ அங்கெல்லாம் உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு குடும்பமும் குடித்தனமுமாகி விடும் இயல்பு இயற்கையாகவே இருந்திருக்கிறது. இம் முஸ்லிம் வணிகர்கள் நீண்ட பயணங்களை மேற்கொண்டனர். மீண்டும் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல பல ஆண்டுகள் பிடிக்கும். வணிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு குடும்ப வாழ்க்கை தேவையாக இருந்ததோடு, தாம் அடிக்கடி புழங்கும் பகுதிகளில் தமது நம்பிக்கைக்குரியவர்களை வைத்திருக்க வேண்டிய தேவையும் இருந்தது.

No comments:

Post a Comment