Tuesday, March 31, 2015

குழந்தைகளை முத்தமிடாமல், அரவணைக்காமல் வளர்க்கும் லண்டன் பெற்றோர்

லண்டனில் எங்கள் தாய்ப்பாசம்!


இளைய அப்துல்லாஹ்

குழந்தைகளை எவருமே விரும்பாமல் இருப்பதில்லை.
குழந்தைகளோடு பேசுவதும் சிரிப்பதும் அவை பேசுகின்ற மொழியும் எப்போதும் மனதை சந்தோசிக்கச் செய்பவை. குழந்தைகளோடு வாழவே நாம் விரும்புகிறோம். குழந்தையின் உலகம் கவலையில்லாதது என்று சொல்லிக்கொண்டு குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம்.
குழந்தைகள் ஒரு குடும்பத்தை மனம் மகிழச் செய்கின்றன. எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி கலியாணம் முடித்து எட்டு வருடங்களுக்குப் பின்னர்தான் பிள்ளை உண்டாகி இருக்கிறா.

எங்களுக்கு எல்லாம் இனிப்பு கொண்டுவந்து தந்து அவவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா. அவவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம், தான் கர்ப்பமாக இருப்பது தொடர்பாக இருந்தது. குழந்தைகள் எமது இந்தியக் கலாசாரத்தில் முக்கிய விடயம். அது இல்லாத தம்பதியினரை சமூகம் பார்க்கும் விதமே தனியாகத்தான் இருக்கிறது. மலடி என்ற அடைமொழியை நீக்குவது ஒரு குழந்தையின் பணியாக இருக்கிறது.

இங்கும் ஆண்மீதான குறைபாடு இருந்தாலும் பெண்ணுக்குத்தான் அந்தப்பட்டப்பெயர் சூட்டப்படுகிறது. வஞ்சிக்கப்படுவது அநேகமாகப் பெண்கள்தான். கடந்த மாதம் லண்டனில் வாகன நெரிசல் மிக்க தெருவொன்றில் வைத்து ஒரு பெண்மணி எனது காரை பின்பக்கமாக இடித்துவிட்டா. அவ லண்டனில் நல்லதொரு வேலையில் இருக்கிறா என்பது அவவின் நடை உடைபாவனையிலிருந்து எனக்குத் தெரிந்தது.

அவவின் காரும் புதிதாக இருந்தது. பிழை முழுக்க அவவில்தான். பொறுமையாக வராமல் பின்பக்கம் அவசரப்பட்டு வந்து முட்டிவிட்டா. அவவுக்கும் தெரியும். அந்த விபத்தை அல்லது அவ எனது காரில் முட்டியதை இன்சுரன்ஸ் கம்பனி ஊடாக டீல் பண்ணினால் பெரும் தொகையை அவ இழக்கவேண்டிவரும். எனவே அவ காரைவிட்டு இறங்கிவந்து சொன்ன முதல் வாசகம். "காருக்குள் குழந்தை இருக்கிறது". அப்பொழுதுதான் பார்த்தேன். மிக அழகான "மொழுக்" என்று ஒரு குழந்தை பின் சீற்றில் உலகத்தை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தையைப் பார்த்தவுடன் எனக்கு மனம் முழுக்க பரவசம். இரக்கம். இந்தக் குழந்தையின் தூக்கத்தை கலைக்கக்கூடாது என்ற மனநிலை தானாக வந்துவிட்டது. எனக்கு அவ சொன்னா:
"நான் குழந்தையை கொண்டு வீட்டுக்குப் போகவேண்டும். மற்றது இன்சுரன்ஸ் கம்பனிக்குப் போகவேண்டாம". போனால் அவவின் மாதக் கட்டணம் கூடும். ஆனால் இங்கே லண்டன் போன்ற நாடுகளில் கார் விபத்து தொடர்பாக யாருடனும் இரக்கம் காட்டக்கூடாது என்று எனது நண்பன் அடிக்கடி சொல்வான்.

ஏனெனில் அதே இடத்தில் அவவின் காரை நான் பின்பக்கமாக இடித்திருந்தால், காருக்குத் திருத்தச் செலவு, அவவுக்கு பேர்சனல் இன்யறி கிளைம், குழந்தைக்கு வருத்தமாகிவிட்டது என்றெல்லாம் எனது இன்சூரன்சிலிருந்து பெரும்தொகை பணத்தை உருவி எடுத்திருப்பா. யாரும் காரை ஓடும்போது வேறு யாரும் வந்து எமது காரை முட்டினால் பெரும்தொகை பணத்தை கறந்து விடுவது இங்கு ஐரோப்பிய நாடுகளில் சாதாரணமான விடயம்.

காருக்குள் குழந்தை அழகாக தூங்குகிறது. உண்மையில் அந்தக் குழந்தைக்காக மட்டும் அதன் முகத்திற்காக மட்டும் அவ தந்த மிகக் குறைந்த காசை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இன்னும் அந்தக் குழந்தை கார் பின்பக்கம் சீற்றில் பேபி சீற் வைத்து அழகாக தூங்கும் காட்சி மனதுக்குள் இருக்கிறது.
எனது நண்பர் ஒருவர் கலியாணம் முடித்து 3 வருடங்கள். இன்னும் லண்டனிலிருந்து ஊருக்குப் போகவில்லை. காரணம் கேட்டால் ஊருக்குப் போனால் "ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை" என்று கிராமமே கூடிவந்து கேட்டு நச்சரிக்கிறதாம்.

இங்கு லண்டனில் வாழும் தமிழ் மக்களும் சரி, இந்தியா, சிலோனிலிருந்து வந்து இங்கு இருப்பவர்களும் சரி ஆரம்பத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ளாமலிருப்பதை ஒரு பெஷனாகவே வைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு வருடம் உழைத்து நன்றாக ஊர் சுற்றிவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு முறையை வைத்திருக்கின்றனர்.

அதுவே அவர்களுக்கு வினையாக வந்துவிடுகிறது. கர்ப்பம் தங்காமல் இருப்பதற்கான மாத்திரைகளைப் பாவிக்கும்பொழுது பின்னர் அதன் பக்க விளைவுகளினால் கர்ப்பம் ஒருபோதுமே ஆகாத பெரும் விளைவுகளை அவர்கள் சந்திக்கின்றனர். பிறகு குழந்தை வேணும் என்று தவம் கிடந்தாலும் குழந்தை இல்லாமலே ஆகிவிடுகிறது. கோயில், குளம், வைத்தியர் என குழந்தைக்காக அலையவேண்டியவர்களாக இருக்கின்றனர். எனக்குத் தெரிந்த இன்னொருத்தி இருக்கிறா. அவ தனது அழகு போய்விடும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறா. குழந்தையின் அழகான சிரிப்புக்கு முன்னால் பெண்களின் பேரழகு எம்மாத்திரம்! எங்களின் கிராமத்தில் ஒருவர். அவருக்குப் 16 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தக் காலத்தில் வீடு நிறைய பிள்ளைகளும் குழந்தைகளும் ஒரே குதூகலமாக இருக்கும் அவர்கள் வீட்டில். நான் சிறுவனாக இருந்தபொழுது அங்குபோய்தான் விளையாடுவேன்.

அந்த அம்மா 16 பிள்ளைகளையும் வளர்த்தெடுத்த விதம்தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. கூச்சல், குழப்பம், விளையாட்டு, அடி, தடி என்று நித்திரைக்குப் போகும் நேரத்தைத்தவிர ஒரே களேபரமாக இருக்கும் அந்த வீடு. பிள்ளை பெற்றுக்கொள்வது என்றைக்குமே ஊரில் எவருக்கும் சிரமமாகத் தோன்றுவதில்லை.

குழந்தைகள் எமது கிராமத்தில் தானாக வளரும். எல்லாம் இயற்கையாகக் கிடைத்த காலம் அது. அரிசி, மரக்கறி, மீன் (குளத்தில்), இறைச்சி என எல்லாமே எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததை சாப்பிட்டு வளர்ந்த காலம் எங்களுடையது. இப்பொழுது எல்லாமே பணம் கொடுத்து வாங்கிக்கொடுக்க வேண்டும். அதனால்தான் குழந்தை பெரும் பாரமாக இருக்கிறது இன்றைய மனிதனுக்கு நான் குழந்தையாக இருந்தபொழுது என்னை பக்கத்துவீட்டு அன்னலட்சுமி அக்காதான் வளர்த்தவா என அம்மா அடிக்கடி சொல்லுவா, காலையில் நித்திரைவிட்டு எழுந்ததும் அன்னலட்சுமி அக்கா தூக்கிக்கொண்டு போய்விடுவாவாம். குளிப்பாட்டி, பவுடர்போட்டு, பொட்டு வைத்து, சோறும் பருப்புக்கறியும் தீத்திவிட்டு வளர்த்தெடுத்திருக்கிறா அன்னலட்சுமி அக்கா. அதனாலோ என்னவோ எனக்குப் பருப்புக்கறி என்றால் இன்றும் கொள்ளை ஆசை.

இங்கு லண்டனில் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் ஒரு வீட்டுக்கு குழந்தை பார்க்கப் போயிருந்தோம். போய் கொஞ்ச நேரத்தில் "குழந்தையை கொண்டு வாருங்கள் பார்ப்போம்" என்று எனது மகன் சொன்னான். குழந்தையின் அம்மம்மா சொன்னா  "குழந்தை பால் குடிக்கிறது" என்று. எங்களுக்கு உண்மையில் ஆச்சரியம். நானும் மூத்த மகளும் மகனும் மனிசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

ஏனெனில் குழந்தையின் அம்மா எங்களோடு இருந்து பேசிக்கொண்டிருக்கிறா. குழந்தை எப்படி பால் குடிக்கிறது என்பதுதான் பிரச்சினை. பார்த்தால் குழந்தையின் சின்னம்மா அந்த ஒரு மாதக் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்திருக்கிறா. "அம்மாவின் பால் கொடுக்காமல் ஏன் புட்டிப்பால் கொடுக்கிறீர்கள்?" என்று எனது அதிருப்தியைத் தெரிவித்தேன்.

அதற்கு குழந்தையின் அம்மா சொல்கிறா, "நான் குழந்தையை தூக்குவதுகூட குறைவு" என்று. எனக்கு இந்த தமிழ் தாய்மார்களை நினைத்து மிகுந்த கவலையாக இருக்கிறது குழந்தையின் அம்மா ஒரு எக்கவுண்டன். அவ குழந்தைப் பேறு விடுப்புக்குப் பிறகு உடனடியாக வேலைக்குப் போகவேண்டும். ஆறு மாதத்திற்குப் பிறகு தூக்கித் தூக்கி வைத்திருந்தால் அம்மாவின் சூடுபட்டு அம்மா இல்லாவிடில் அது அழும். எனவே குழந்தையைக் கடமைக்காகப் பெற்றுவிட்டு தூக்குவதும் இல்லை, பால் கொடுப்பதும் இல்லை.

இந்த நிலமைதான் இங்குள்ள அநேகமான பெற்றோர்களின் நிலையாக இருக்கிறது. சில தாய்மார்கள் குழந்தைகளை முத்தமிடுவதும் இல்லை. வெள்ளைக்காரர் தங்களுடைய வேலைக்காக இப்படித்தான் வளர்க்கிறார்கள். அதேபோல தமிழ் பெற்றோர்களும் இப்படித்தான் வளர்க்கிறார்கள். நாங்கள் எங்கள் குழந்தைகளை தூக்கி தூக்கி கொஞ்சி கொஞ்சி பால் கொடுத்து எவ்வளவு அருமையாக வளர்த்தோம். அப்படி அன்பு காட்டி வளர்த்த பிள்ளைகளே சிலதுகள் அப்பா, அம்மாவின் சொல் கேட்காமல் தறுதலையாகத் திரியும்பொழுது, அணைக்காமல், முத்தமிடாமல் அன்பு காட்டாமல் வளரும் குழந்தைகள் எப்படி அம்மா, அப்பாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்?

18 வயது வந்தவுடன் அம்மா, அப்பாவை விட்டுவிட்டு தனிய ஓடிவிடும் பிள்ளைகளைத்தான் இந்த வளர்ப்புமுறை கொண்டுவந்துவிடுகிறது கடைசியில். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு இளம் தம்பதியினர் நன்றாகக் குழந்தை வளர்க்கின்றனர். காலையில் அம்மா வேலை. மாலையில் அப்பா வேலை. மாறி மாறி இருவரும் குழந்தையைப் பராமரிக்கின்றனர். அவன் பெற்றோரோடு நல்ல பாசமாக வளருகிறான்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர்கள் குழந்தைகள்மீது தமது மன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். குழந்தைகளைத் துன்புறுத்துகின்றனர். தங்களது ஆற்றாமையை குழந்தைகள்மீது வன்முறையாக அழுத்துகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்து அந்நிய நாடொன்றில் வாழும்பொழுது ஏற்படும் பிரச்சினைகள், வாழ்க்கை முறை, பொருளாதார நெருக்கடி என்பன பெரியவர்களை நெருக்கும்பொழுது ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கு அதற்கும் மேலதிகமாகக் கொலை செய்யும் அளவுக்குகூட தமிழ் பெற்றோர்கள் போயிருக்கிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியும் கவலையுமாகும்.

தமிழர்கள் மத்தியில் இருக்கும் பொருளாதார பேராசை இதற்கு ஒரு காரணம் என்று மன அழுத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கும் கவுன்சிலர் ஜோசப் தெரிவிக்கிறார்.
அளவான சேமிப்பு அதிலிருந்து செலவழித்தல் என்ற கட்டுப்பாடான வழியை மீறி கடன் வாங்கி ஆடம்பரமான செலவுகளை மற்றவர்கள் போல் செய்துவிட்டு கடனைக் கட்டமுடியாமல் வேலை வேலை என்றும் பணம் சேர்க்க ஓடும் பெற்றோரால் குழந்தையை உண்மையாக வளர்க்க முடிவதில்லை.

குழந்தைகளைப் பணம்கொடுத்து வேறு யாரிடமோ வளர்க்கக் கொடுத்துவிட்டு அவர்கள் வளர்ந்தவுடன் உழைத்துத் தரவேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்க, பாசமில்லாத பெற்றோரைவிட்டு விட்டு பல மைல் தூரம் ஓடிப் போகின்றனர் பிள்ளைகள். தமிழ் பெற்றோருக்கும் தமிழ் பிள்ளைகளுக்குமிடையிலான இடைவெளியை காலம் இன்னும் இன்னும் கூட்டிக்கொண்டே போகிறதே தவிர குறைப்பதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் அன்போடு அணைத்து முத்தமிட்டு, பால் கொடுத்து குழந்தைகளை வளர்ப்பதை எமது கிராமங்களுக்கு வந்துதான் பார்க்கவேண்டும். லண்டனில் இனிமேல் பார்க்க முடியாது.

Monday, March 30, 2015

லண்டன் டயறி

நாய் கடித்தாலும் வருமானம்தான்


இளைய  அப்துல்லாஹ்

ணவு என்பது வெறுமனே வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமா? இல்லையே! ரசித்து, சுவைத்து அனுபவித்து உண்ண வேண்டாமா? ஆனால் பலர் அந்த சுவையின் அற்புதத்தை  அனுபவிக்க மாட்டார்கள்.
எனது பாடசாலை அதிபர் ஆ.தா.ஆறுமுகம் நல்ல ஆஜானுபாகு தோற்றம் உடையவர். 6 ஆம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவர்தான் அதிபர். உணவின் சுவையை அனுபவித்து சாப்பிடும் ஒரு அற்புதமான மனிதர். ரசித்து சுவைப்பதில் அவர் ஒரு கிங். லண்டனுக்கு போன புதிதில் இலங்கைச் சுவையை, கொஞ்சம் நாக்குக்கு உறைப்பானதைத் தேடித் திரிய வேண்டிய ஒரு இக்காட்டான நிலை எனக்கு ஏற்பட்டது.

நாங்கள் இருந்த இடத்தில் இந்திய, பாகிஸ்தானிய கடைகளும் ரெஸ்ரூரண்ட்டுகளும் இருந்தன. 'தண்தூரி' கோழி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்குமே தவிர, எடுத்து வாயில் வைத்தால் சப்பென்று இருக்கும்.

எங்கள் தமிழ் ருசியைத் தேடி அலைந்தோம். உண்மையில் உறைப்பு சாப்பிடுவதற்கென்றே ஒரு மணித்தியாலம் கார் ஓடினோம்.

அதற்குப் பிறகு தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு வந்ததன் பின்தான் வாயும் வயிறும் சப்பு கொட்டின. 'சுள்'ளென்று படும் உணவு வகைகளை தமிழர்களது உணவகங்கள் இப்பொழுதும் தருகின்றன.

இலங்கை பிளேன்ரீ, வறுத்து இடித்த கோப்பி என்று எல்லாம் கிடைக்கும் ஈஸ்ட்ஹம், அல்பேட்டன், வெம்பிளி, ஹரோ போனீர்களென்றால் தமிழ், தமிழ், தமிழ் மயமே. 2 சோடி பால் அப்பம் 3 பவுண்ஸ்கள், 10 இடியப்பம், உறைப்புக்கறி, ஒரு சொதி பக்கட் 3.50, சோறு, கறி 3.50, கொத்துரொட்டி 4 பவுண்ஸ், பிலாக்கொட்டை 250 கிராம் 2 பவுண்ஸ், முருங்கைக்காய், கதலி வாழைப்பழம், பாண், பணிஸ், மாலு பாண் என்று எல்லாமே கிடைக்கும். இலங்கைச் சுவை பிலாக் கொட்டையில் இருந்து பொல் சம்பல் வரைகிடைக்கும். அங்கு சாப்பாட்டுப் பார்சல் ஒரு வெற்றிகரமான பிஸ்னஸ். பலர் வரி இல்லாத பிஸ்னஸாக அதனை கையகப்படுத்தி உள்ளனர். வீடுகளில் சமைத்து கடையில் வைத்து விற்பனை செய்யலாம். ஒரு சாப்பாட்டுப் பார்சலுக்கு 2 பவுண்ஸ் லாபம் கிடைக்கும் இப்போதைய இலங்கை ரூபா கிட்டத்தட்ட 400 என்று வையுங்கள். ஒரு பவுண் இப்பொழுது 200 ரூபா....
லண்டனில் இன்னுமொரு டக்ஸ் கட்ட தேவையில்லாத அல்லது கட்டாமல் இருக்கக் கூடியலாபமுள்ள வீட்டுத் தொழில் ரியூசன். இலங்கையில் இருந்து வரும் ஆங்கிலம் தெரியாத பிள்ளைகளுக்கென்று ஆரம்பித்த ரியூசன் வகுப்புகள் இப்பொழுது எல்லாப் பாடங்களுக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

பிள்ளைகளை ரியூசனுக்கு விடுவதென்பது தாய்மார்களின் தினக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது. லண்டனில் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று எதனைத் திறந்தாலும் விளம்பரப் பக்கத்தில் தமிழர்கள் நடத்தும் ரியூசன் வகுப்புகளைப் பற்றிய விளம்பரம் இருக்கும். பெரிய கொட்டகை போட்டு ரியூசன் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது ஒரு தொழில் என்று வந்து விடும். கவர்மென்டுக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.

இது, வீட்டில் ஒரு ஹோலில் ஏழு, எட்டு வாங்குமேசை போட்டு 'ரியூசன்' வகுப்புகள் வலு மும்மரம். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்று வகுப்புகள் நடக்கின்றன. தமிழ் வகுப்புகளும் உண்டு. தமிழ் வகுப்பில் ஒரு முறை "அ-அம்மா, ஆ-ஆடு, உ-உரல்" என்ற ரீச்சரை பிள்ளை எழும்பிக் கேட்டது     “what ural”  என்று ரீச்சருக்கு அந்த சிறுமியின் யூகம் கூட விளங்கவில்லை. எமது தமிழ் நெடுங்கணக்கு மட்டையை வைத்து "உ-உறி" என்று பாடம் நடத்துபவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆங்கில மொழியில் சிந்திக்கின்ற தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த பொருட்களை சேர்த்துக் கொண்டு விளங்கப்படுத்த வேண்டும் என்ற கரிசனையே இல்லாமல் தமிழ்ப் பாடங்களை எமது பழைய உபாத்தியாயர்களும் உபாத்தியாயினிகளும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  
ஐரோப்பிய நாடுகளில் வாகன ஹோர்னை (ஒலிப்பான் என்று எழுதுவதில் எமக்கு உடன் பாடில்லை. விளங்கும் விதமாக இருக்கட்டும்) கோபம் வந்தால் அடிப்பார்கள் அல்லது அதிக சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் அடிப்பார்கள். இங்கு செவிப்பறை கிழிந்து போகும் வரை அடிக்கிறார்களே ஏன்? ஒரு முறை இந்தியர்கள்

கிரிக்கெட்டில் வென்றதற்காக "சவுத்ஹோல்" பகுதியில் அடித்தார்களே "ஹோர்ண்" அப்படி ஒரு சத்தம்! அதற்காக யாரும் கோபப்படவில்லை. பின்னர் "ரொனி பிளையர்" வென்ற நேரம், அதற்குப் பிறகு ஒரு முறை தீயணைப்புப் படையினர் வேலை நிறுத்தம் செய்த போது அவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆதரவாக ஹோர்ன் அடித்திருக்கிறார்கள். தினமும் கொழும்பில் பயணம் செய்பவர்கள் ஏதோ சபிக்கப்பட்டவர்கள் போல எமக்குத் தெரிகிறார்கள்.

சுத்தம் என்பது எவ்வளவு முக்கியமானது! லண்டனில் கண்ட இடத்தில் "ஸிப்பை" திறந்ததற்காக ஒரு நாள் பொலிஸ் ஸ்ரேஸனில் ஒரு தமிழர் தடுத்து வைக்கப்பட்டு கவுன்ஸிலிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

சுத்தம் பற்றி சின்ன வயதில் இருந்தே வெள்ளைக்காரர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு புரிய வைக்கிறார்கள். அவர்கள் அதனைக் கடைப்பிடிக்கின்றனர். வீதியில் ஏதாவது பேப்பர்துண்டு இருந்தால் கூட, பெரியவர்கள் முதல் பிள்ளைகள் வரை எடுத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள்.

எமது நண்பனின் அண்ணா ஸ்கொட்லாந்தில் கலியாணம் முடித்து இருக்கிறார். அண்ணி ஒரு பல் டொக்டர். பாதையில் நடந்து போகும்போது, அண்ணா ஒரு பேப்பரை நிலத்தில் வீசிவிட்டார். வெள்ளைக்கார அண்ணிக்கு அது பிடிக்கவில்லை. "நீ என் நாட்டை அசுத்தப் படுத்துகிறாய்" என்று சொல்லி ஒரு நாள் முழுக்கப் பேசவில்லையாம். நண்பன் சொன்னபோது நான் வியப்படையவில்லை.

இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். ரம்மியமான மலைப்பாங்கான இடம். பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் தோதுவான இடம். எனது வைத்திய நண்பர் காலில் கட்டுப்போட்டிருந்தார். அவர் வீட்டுக்கு ஓய்வு நாட்களில் போவேன்.

இம்முறை வலு கஷ்டப்பட்டார். அது ஒரு பெரிய கதை என்று வைத்திய நண்பரின் மனைவி சொன்னா. நண்பர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்பவர். அப்படி நடைப்பயிற்சியின் போது, வேறு ஒருவர் தனது நாயோடு பயிற்சிக்கு வந்திருக்கிறார்.

திடீரென்று நாய் கடித்துவிட்டது. அது உயரமான வகையைச் சேர்ந்த நாய். நாய்ச் சொந்தக்காரர் மிகவும் கலவரப்பட்டுப் போனார். அது கடிக்கக் கூடிய நாயென்றாலும் மாதமொரு முறை சிகிச்சை, பரிசோதனை எல்லாம் செய்த நாய்தான். பல் ஆழமாகப் பட்டுவிட்டது. காலின் கீழ் சள்ளையில் வாகான கடி. உடனடியாக மருந்துவ மனைக்கு போயிருக்கிறார். நண்பரும் நாயும் உடனடியாக பரிசோதனைக்கு ஆளானார்கள். நாய்க்கு வருத்தமில்லை.
நாய் கடித்ததற்கு வழக்குப் போட்டார் இவர். தீர்ப்பு உடனடியாக வந்தது. நாய் கடித்ததற்கு நண்பருக்கு நாய்ச் சொந்தக்காரர் ஐயாயிரம் பவுண்ஸ் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அவர் மனரீதியான உளைச்சலுக்கும் சேர்த்து இது. அடுத்தது நாய்க்கு உடனடியாக வாய்க்கு பூட்டு போட வேண்டும். (நாய்க்கான வாய்ப்பூட்டு கடையில் இருக்கிறது) தொடர்ந்து மருத்துவ செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டும். நாய் கடித்தாலும் காசு.

Friday, March 27, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 13

ஆயாசத்தை ஏற்படுத்தும் 'ஆய்வு' கட்டுரைகள்


அருள் சத்தியநாதன்

லங்கைக்கு வந்த அரேபியருக்கு நல்ல உணவு மற்றும் ஆரோக்கியத்தோடு போன இடத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையும் தேவையாக இருந்தது.இவை தொடர்ச்சியான தொலைவான இடங்களுக்கு பயணிக்கவும் வர்த்தகம் செய்யவும் ஒத்தாசையாக அமைந்தன.உடற்பசியை பாதுக்காப்பான வகையில் தீர்த்துக் கொள்ளவதற்க்கும் மனைவிமார் இவர்களுக்கு தேவையாக இருந்தனர்.
இதேமுறையை இலங்கையில் ஒல்லாந்தர் பின்பற்றினர். சிறிய நாடான ஒல்லாந்தில் இருந்து தமக்கு விசுவாசமான படையினரையும் சேவகர்களையும் இறக்குமதி செய்து கொண்டிருப்பது என்பது நடைமுறை சாத்தியமானதாகாது என்பதால் இங்குள்ள ஒல்லாந்தர்கள் உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் முடிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர். இவர்களின் சந்ததியினரே பறங்கியர் என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரச பதவிகள் வழங்கப்பட்டன. இவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக ஒல்லாந்தர் கருதினர். ஆங்கிலேயர் காலத்திலும் பறங்கியருக்கு கௌரவம் இருந்தது. சுதந்திரத்தின் பின்னரேயே நிர்க்கத்திக்குள்ளான இச்சமூகம், வெளிநாடுகளில் குடியேறியது. பண்பான, விசுவாசம் கொண்ட, ஆங்கில அறிவு படைத்த ஒரு சமூகத்தின் சேவையை நாம் இழந்துபோனோம்.
அல்லம்மா எம்.எம்.உவைஸ் அரங்கு
அக்காலத்தில் மாட்டு வண்டிக்காரர்களும் தாம் செல்லும் இடங்களில் பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வது வழக்கம். இந்தியாவில் தூர பயணங்களை மேற்கொள்ளும் லொறி சாரதிகளிடமும் இப்பண்பைக் காணலாம்.

தஞ்சாவூரில் நறுமண வணிகர் குழுவினரும் படைவீரர்களும் ஒரு குழுவாக இணைந்து கொண்டனர். இக்குழு அத்தர் ஜமாத் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இவர்கள் ஒருவரை ஒருவர் தோழமையுடன் அழைத்துக் கொள்வதற்கு 'சாஹிபஉ' என்ற அரபுச் சொல்லைப் பயன்படுத்தினர். இது, சாயிபு என்றாகி பெயரின் பின்னால் இணைந்து கொண்டது. ஆங்கில ஆட்சியில் கௌரவம் மிக்க இந்துக்களுக்கு ராவ் சாஹிப் என்ற பட்டமும் முஸ்லிம்களுக்கு கான் சாஹிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. குதிரை வணிகர்களைக் குறிப்பதே ராவுத்தர் என்ற பட்டப் பெயர். பின்னர் இது கௌரவப் பெயரானது. துருக்கி முஸ்லிம்கள் துருக்கர் என அழைக்கப்பட்டு துலுக்கராயினர். இதில் இருந்து தோன்றியதே துலுக்காணம். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இஸ்லாமியரை கொச்சையாக விளிக்க இச்சொல் பயன்படுகிறது.

தஞ்சாவூருக்கு முஸ்லிம்கள் வருவதற்கு சோழ மன்னர்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. நாகப்பட்டின துறைமுகமும் காரணம். தஞ்சைப் பகுதி இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட கால நல்லுறவு நிலவி வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கொடநாட்டு கருப்பூர் கோவிலுக்கு இஸ்லாமியர் காணிகளை கொடையாக அளித்துள்ளனர். இராமநாதபுர மாவட்டத்தின் உத்திரகோசமங்கை கோவில், மாணிக்கவாசகர் பாடல் பெற்றதலம். இக்கோவிலுக்கும் இஸ்லாமியர் காணிக்கொடை செய்துள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்றைக்கும் வழிபாட்டில் இருக்கும் உமாமகேஸ்வரர் சிலையை கொடையாக அளித்தவர் அன்வர்தீன்கான் என்ற இஸ்லாமியர். திருச்சி மாவட்டம் கருப்பூர் பெருமாள் கோவில் கொடிக்கம்பத்தை கொடையாக அளித்தவர் சையத் அலிகான் என்ற இஸ்லாமியர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
ஆட்காடு நவாப்பின் படைத்தள பதியாக விளங்கிய மராட்டிய வீரர் கனாசாஹிபு ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் பிரகடனம் செய்தார். மதுரை கள்ளர் சமூகத்தினர் இவரைத் தலைவராக ஏற்று அவர் படையில் சேர்த்தனர். இறுதியில் கான்சாஹிபுவை ஆங்கிலேயர் தோற்கடித்தனர். அவரது வீடு தரைமட்டமானது. அந்த இடம் இன்றைக்கும் மதுரையில் 'கான்சாஹிபு மேட்டுத்தெரு' என அழைக்கப்படுகிறது. தொண்டியைச் சேர்ந்த குணக்குடி மஸ்தான் சென்னையில் வாழ்ந்த இடம் இப்போதும் தொண்டியார் பேட்டை (தண்டயார் பேட்டை) என வழங்கப்படுகிறது.

(இக்கட்டுரையை எழுதுவதற்கான தகவல்கள், முனைவர் எம். பரீதாபேகம் எழுதிய தஞ்சை மாவட்டத்தில் இஸ்லாம் மற்றும் காரைக்குடி எம். எஸ். ராஜா முகம்மது எழுதிய தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு ஆகிய கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டவை)

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு பற்றிய நூல்கள் உள்ளனவா? இதுபற்றி ஆராயும் தனி ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளதா? என்ற கேள்வி ஜனவரி இதழில் எழுப்பப்பட்டிருந்தது. தனி ஆய்வு நூல் இல்லை, ஆனால் வெவ்வேறு ஆசிரியர்களினால் எழுதப்பட்ட நூல்கள் உள்ளன என்று தீரன் நௌஷர் எமக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. மணிப்புலவர் மருதூர் மஜீத் இலங்கை முஸ்லிம் வரலாறு தொடர்பாக ஒரு  நூல் எழுதியிருப்பதாகவும் எம். ஏ. எம். சுக்ரி, எம். ஐ. எம். அஸீஸ், காலிதீன் ஆகியோர் இது தொடர்பாக நூல்கள் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.

இவ்வாண்டில் கிழக்கிலங்கையில் இஸ்லாமிய இலக்கிய மாநாடொன்று நடைபெறவிருப்பதாகவும் எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை பின்னணியாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த ஏற்பாடுகளுக்கு பின்னால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு அரசியல் தலைமை இல்லாமல் இவ்வாறான ஒரு மாநாட்டை பிரமாண்டமான முறையில் நடத்த முடியாதுதான். முதலாவது இஸ்லாமிய இலக்கிய மாநாடு கிழக்கிலேயே நடைபெற்றது. பின்னர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழிகாட்டலின் கீழ் கொழும்பில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்திலும் மலேசியாவிலும்; பல இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடைபெற்ற முடிந்துவிட்டன. இங்கெல்லாம் எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளுடன் மாநாடுகள் நடத்தப்பட்டன என்பதை இங்கெல்லாம் போய் வந்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள், அறிஞர்கள் அறிவார்கள். அங்கெல்லாம் நடைபெற்ற குற்றங்குறைகளையும் குத்து வெட்டுகளையும் நம்மவர்கள் அறிவார்கள்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புவோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்நின்று ஏற்பாடு செய்யும் இலக்கிய விழா என்பதால் கட்சி அரசியல் புகுந்து விளையாடுமே என்ற அச்சமும் சில இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் இருக்கவே செய்கிறது. இது இலக்கிய மாநாடாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஏனெனில் ஜூன் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த இலக்கிய விழா தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்பது ஐயம் தெரிவிக்கும் இலக்கியவாதிகளின் சந்தேகமாக இருக்கிறது.

இப்படி ஒரு இலக்கிய விழா நடைபெறப் போவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராமலேயே கசிந்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இக்கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணம் இம்மாநாடு நடைபெறுவதற்கான மிகப் பொருத்தமான இடம். விருந்தோம்பலை ஒரு கலையாகக் கைவரப் பெற்றவர்கள் இவ் இலங்கைக்காரர்கள். உல்லாச ஹோட்டல்கள் இல்லாவிட்டாலும், வசதியானவர்களின் பிரமாண்டமான வீடுகள் இப்பகுதியில் உள்ளன. ஏற்பாடுகளை கனகச்சித்தமாகச் செய்து முடிக்கக் கூடியவர்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டால் அது நிறைவான மாநாடாக அமைவதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதேசமயம், ஜூன் மாதத்துக்கு முன்பாக மாநாட்டை நடத்தி முடிப்பதுதான் தீர்மானம் என்றால், ஆய்வுக் கட்டுரைகள் கோரல், மலர் தயாரிப்பு போன்றவை அரைவேக்காடாக முடிந்து விடாதா? என்ற கேள்வியும் எழுவதால், அதையும் இங்கே சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்து விடுகிறோம்.

ஆய்வுக் கட்டுரைகள் எனும்போது சில கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகள்தானா என்ற சந்தேகம் எழுந்து விடுகிறது. தொடர்ச்சியாக இத்தகைய இலக்கிய ஆய்வு மாநாடுகளுக்கு செல்பவர்களுக்கு இந்த சந்தேகம் எழக்கூடும்.

சிலருக்கு இம்மாநாடுகளில் கட்டுரை சமர்ப்பிக்காவிட்டால் தூக்கமே வராது. ஆனால் புதிதாக எழுத சரக்கு கைவசம் இருக்காது. எனவே, உளுந்து மா கரைசலே தோசையாகவும் இட்லி, வடையாகவும் மாறுவதுபோல் தான் ஏற்கனவே சமர்பித்த சரக்கையே கொஞ்சம் தாளித்துக் கொட்டி இன்னொரு 'ஆய்வ' கட்டுரையாகத் தயாரித்து சமர்ப்பித்து விடுவார்கள். ஒரு நண்பர், 'ஒரு பேராசிரிய பண்டிதரைக் குறிப்பிட்டு இவர் ஒரே கட்டுரையை நான் அறிந்தவரை ஐந்து ஆறு தடவைகள் வெவ்வேறு மாநாடுகளில் சமர்ப்பித்து விட்டார்' என்ற தகவலை செம்மொழி மாநாட்டின்போது என்னிடம் சொன்னார்.

மாநாட்டு அமைப்பாளர்களுக்கு இன்னொரு பிரச்சினை. பல நாடுகளில் இருந்தும் எமது மாநாட்டுக்கு ஆய்வறிஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று பறை சாற்ற வேண்டிய கட்டாயத்தால், வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும். சுமாரான கட்டுகரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. உள்ளுரில், தமக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. இதனால் தரமற்ற அல்லது மாநாட்டுக்கு வளம் சேர்க்க உதவாத 'ஆய்வு' கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் பெரும்பாலான மாநாடுகள் துறைகளைக் குறிப்பிடாமல் திறந்த மட்டத்தில் ஆய்வுக் கட்டுரைகளை கோருகின்றன. இது குப்பைகளை அல்லது அம்மாநாட்டோடு பெரிதும் சம்பந்தபடாத கட்டுரைகளை வரவழைத்து விடுகின்றன.

தேவதாசி வரலாறு -6

சிறந்த கர்னாடக இசைக் கலைஞராக விளங்கிய பெங்களுரு நாகரத்தினம்மா.


அருள் சத்தியநாதன்

ந்துமதம் சாதியை ஒரு தூணாகக் கொண்டது. மனிதர்கள் தொழில் அடிப்படையில் சாதிகளாக வகுக்கப்பட்டனர். ஆண்களுக்கு இன்பத்தையும் ஓய்வு - அமைதியையும் அளிக்கும் கடமை இவ்வகையில் பரத்தையர் குலத்துக்கு விதிக்கப்பட்டது. ஆண்களுக்கு இன்பம் அளிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்தலே இவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம். அதனால், அன்றைய இந்திய சமூகத்தின் சிருங்காரச் சுவையை பேணி வளர்க்கும் பொறுப்பு இவர்களிடம் வந்து சேர்ந்தது. பிற்காலத்தில் வெகுஜன கலை என்பது நாடகமாகவும், சினமாவாகவும் மாறிப்போனது. பண்டைய இந்தியச் சூழலில் பத்து, இருபது பேர் அமர்ந்து ஒரு கணிகைப் பெண் ஆடும் சிருங்கார நடனத்தைப் பார்த்து பரவசப்பட்டு மகிழ்ந்தார்கள். இன்றைக்கு அதே சுவையை இன்றைய காலச் சூழல்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சினமாவும் இசை நிகழ்ச்சிகளும் தருகின்றன. பழைய கள் புதிய மொந்தையில் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.

கோவில் உற்சவங்களில் பெண்கள் இன்றைக்கு நடனமாடுவதில்லை. அது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் அதன் இன்னொரு வடிவம் பரத நாட்டியமாக கோவிலுக்கு வெளியே அரங்கேறுகிறது காதலனை நினைத்து பெண் விரகதாபம் மேலிட உருகுவது போன்ற சிருங்கார அம்சங்களைக் கொண்ட நாட்டியங்களே இன்றைக்கும் அரங்கேறி வருகின்றன. கண்ணன் - ராதை, கண்ணன் கோகுல மங்கையர், ரதி - மன்மதன், ராமனை எண்ணி சீதை உருகுதல் போன்ற நடனக் கதைகளின் மூலமே நளினமான, சிருங்கார சுவை மிக்க நடன மற்றும் அங்க அசைவுகளை பார்வையாளர்களை சொக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்த முடிகிறது. தமிழ்ப் படங்களை எடுத்துக் கொண்டாலும், காதலைத்தான் திரும்பத் திரும்ப தீவிரமாகவும், மிகையாகவும், மெல்லியதாகவும் எதிர்மறையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் சிருங்காரச் சுவை என்பது மனிதனைப் பொறுத்தவரை நகமும் சதையும் போன்றது. மனிதனுக்கு அது ஊக்குவிப்பு டொனிக். மனிதனின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் இயங்கு சக்தியாகவும் சிருங்காரம் திகழ்கின்றது. சிருங்காரத்தை மறுதலிக்க முயன்ற எந்த சமய, கோட்பாடும் நிலைத்ததும் இல்லை, மக்கள் அபிமானத்தைப் பெற்றதும் கிடையாது. அவை பின்னர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதே வரலாறு.

தமது பிறப்பு உறுப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆடை கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் முதலில் தமது பிறப்புறுப்புகளைத்தான் மறைத்துக் கொண்டார்கள். மிக நீண்ட காலமாக பெண் மார்பகங்கள் ஆண்களினால் கவர்ச்சி உறுப்புகளாகப் பார்க்கப்படவில்லை. மிகப் பிற்காலத்தில்தான் மார்பகங்களைப் பெண்கள் மறைத்துக் கொண்டார்கள். பெண்களை வர்த்தகமயப்படுத்தும் சூழல் ஏற்பட்ட பின்னரேயே, மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளாகின.
இந்திய கலாசாரம் பெண்களை சிருங்காரத்தின் அடையாளமாகப் பார்த்தது உண்மையென்றாலும் பெண்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கவும் தயங்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை அர்த்த நாரீஸ்வர கோட்பாடு புகட்டுவதாக உள்ளது. பெண் தெய்வங்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது. பெண், சக்தியின் வடிவமாகப் பார்க்கப்பட்டாள். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையின் ஆரம்ப கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கம், பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெண்களைப் பாதுகாக்காவிட்டால், இனப்பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட முடியும் என்பதே அக்கட்டுப்பாடுகளுக்கான ஆதார அம்சமாக விளங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனினும் பிற்காலத்தில் இக்கட்டுப்பாடுகள் ஆண்களினால் பெண் அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டமை ஒரு சோக வரலாறு.
தேவதாசியர் வரலாற்றில் இறுதியாக புகழ்பெற்று விளங்கி மறைந்தவராக நாம் நாகரத்தினம் அம்மாளைக் குறிப்பிட முடியும். வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் என்பவர் ஆங்கிலத்தில் நாகரத்தினம் அம்மாளைப் பற்றி DEVADASI AND THE SAINT என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் பத்மா நாராயணனால் தமிழ்ப்படுத்தப்பட்டு தேவதாசியும் மகானும் என்ற பெயரில் காலச் சுவடு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு தேவதாசியின் மகளாக 1878 ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் திகதி இவர் கர்நாடகம் தேவண்ண கோத்தா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய அம்மாவின் பெயர் புட்ட லக்ஷம்மா வைஷ்ணவி.

புட்ட லக்ஷம்மா இவரை வளர்த்து ஆளாக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே பாட்டு, நடனம், வயலின், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் என பல வித்தை வேண்டும் என்பதே புட்ட லக்ஷம்மாவின் இலட்சியமாக இருந்தது. நாகரத்தினம் தேவதாசியின் மகள் என்பதால், அழைப்பதற்கு அவருக்கு அப்பா இல்லை. தேவதாசி மகள், மகன்மார் எப்போதும் தாய் வழியாகவே அறியப்படுவர். நாகரத்தினத்தின் அப்பா மைசூரைச் சேர்ந்த சுப்பண்ணா என்ற பிரபலமான பிராமணர் என்று அறிய முடிகிறது. அக்காலத்தில் புட்ட லக்ஷம்மாவை ஆதரித்து வந்தவர் சுப்பாராவ் என்ற ஒரு பிரபலமான சட்டத்தரணி.

புட்ட லக்ஷம்மா காசநோய் கண்டு மரணமடைந்தார். அச்சமயத்தில் பல்மொழித் தேர்ச்சியும், ஆடல் பாடல்களில் சிறப்புப் பெற்றவராகவும் நாகரத்தினம்மா திகழ்ந்தார். அப்போது நாகரத்தினம் பெரிய அழகி அல்ல. நடு உயரம். சிவந்த மேனி. பருமனான உடல். ஆனால் சருமம் மாசுமருவின்றி பளபளப்பாகக் காட்சியளித்தது. சுருண்ட கரிய கூந்தல். அழகிய வசீகரிக்கும் கண்கள் அவளது பெரும் சொத்தாக விளங்கியதோடு வெகு புத்திசாலியாகவும் திகழ்ந்தார். இவற்றையெல்லாம் அனுமானித்த அந்தத் தாய் இவள் இனி தனியாகவே பிழைத்துக் கொள்வாள் என்ற நிம்மதியுடன் உயிரைவிட்டாள்.

வரலாற்றில் பல புகழ்பெற்ற தேவதாசிமார் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நாகரத்தினம்மாள் புகழ் பூத்த கடைசி தேவதாசி என்று நிச்சயமாகக் கூற முடியும்.

அவர் தன் வாழ்நாளில் தன்னை ஒரு தேவதாசி என்பதை என்றைக்கும் மறைக்க முனையவில்லை. அவர் காலத்தில் அவர் கண்முன்பாகவே தேவதாசி முறை படிப்படையாக சமூக அந்தஸ்தை இழக்க ஆரம்பித்தது. இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களுக்கும், திருமணமாகாத பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடுதல் என்ற சமூக நடைமுறை வியர்வையும் முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பாதிரிமார் இந்து சமயத்துக்கு எதிரான தமது பிரசாரங்களுக்கு, பெண்களை நேர்ந்து விடும் இம்முறையை, ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
1927இல் கெதரின் மேயோ என்ற அமெரிக்க பத்திரிகையாளர் இம்முறையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவ்வழக்கம் குறித்து ஆய்வு செய்து 'மதர் இன்டியா' என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். பல இந்து பழக்க வழக்கங்களைக் கண்டித்து எழுதிய அவர், ஏன் அரசாங்கம் இவற்றைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பும் தெரிவித்திருந்தார். தேவதாசி முறையை தடை செய்யும்படி விக்டோரியா மகா ராணியாருக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் காலணி நாடுகளில் காணப்படும் மத, கலாசார விடயங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை லண்டன் கடைப்பிடித்து வந்ததால் இம்மனு நிராகரிக்கப்பட்டது. டில்லியை மையமாகக் கொண்ட ஆங்கிலேய அரசின் ஆட்சியாளர் வைஸ்ராயுக்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்பு மனுக்களும் இதே காரணத்தின் அடிப்படையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

(தொடரும்) 

Wednesday, March 25, 2015

அடேங்கப்பா..! -05

அன்றும் இன்றும் - மணி ஸ்ரீகாந்தன்

1880ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் எப்படிக் காட்சியளித்திருக்கும் என்பதை முதல் படத்திலும் அதன் இன்றைய தோற்றத்தை அடுத்த படத்திலும் காணலாம்.1900இன் பின்னர் இத்தோற்றம் மாறத் தொடங்கியது.1500களின் கோட்டை இராஜதானி காலத்தில் இங்கே ஒரு சிறிய இறங்குதுறை இருந்தது.அதன் பெயர் ‘கொலம்தொட்ட’ அதுதான் கொழும்பு என்பதன் வேர்ச்சொல்.

அடேங்கப்பா..! -04

அன்றும் இன்றும் - மணி ஸ்ரீகாந்தன்

இது ஒரு அபூர்வமான படம்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தலதா மாளிகை எப்படி இருந்திருக்கும்.எவ்வளவு அமைதியான சூழலில் இருந்திருக்கும் என்பதை இப்படம் அற்புதமாக விவரிக்கிறது.ராஜசிங்கன் காலத்திலும் இப்படித்தான் காட்சியளித்திருக்க வேண்டும்.இதே கோணத்தில் இன்றைய மாளிகையை படம் எடுப்பது கஷ்டம் என்பதால் கூடுமானவரை அதே கோணத்தில் எடுக்கப்பட்ட படமொன்றையும் வெளியிடுகின்றேன்.

அடேங்கப்பா..! -03

அன்றும் இன்றும்- மணி ஸ்ரீகாந்தன்

Friday, March 20, 2015

இருள் உலகக் கதைகள்

பேய் வலையில் வீழ்ந்த வட்டி சுமணா

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்:   மணி ஸ்ரீகாந்தன்

கரந்தன பிரதேசத்தில் சுமணாவதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 'சீட்டு சுமணா' என்றால் எல்லோருக்கும் தெரியும். சீட்டுப் பிடிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். வயது ஐம்பதைக் கடந்து விட்டிருந்தாலும், பெரிய தைரியசாலி. அந்த ஏரியா சண்டியர்கள் கூட சுமணாவைக் கண்டால் கொஞ்சம் ஒதுங்கித்தான் போவார்கள்.
சுமணாவுக்கு இரண்டு மகன்கள். அவர்களும் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் சென்று விட்டார்கள். 'யார் தயவும் எனக்குத் தேவையில்லை' என்று முரட்டு பிடிவாதம் பிடிக்கும் சுமணா, அறுபத்தைந்து வயதாகும் தமது கணவன் சமரபாலவுடன் தனியாக வசித்து வந்தாள்.

சமரபால வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை இடித்துப் போடுவதோடு அவர் வேலை முடிந்து விடும். அந்த வீடே சுமணாவதியின் அதிகாரத்தில் தான் இயங்கி வந்தது. சீட்டுப் பிடிப்பதோடு, வட்டிக்கும் பணம் கொடுத்தும் வந்தார் சுமணா.

அன்று மாலை கரந்தனையை ஒட்டியுள்ள தோட்டத்தில் சம்பள நாள். வட்டிப் பணத்தை வசூலித்து வர, அந்த தோட்டத்து குறுக்குப் பாதை வழியாக சென்றாள் சுமணா. மழை பெய்து கொண்டிருந்ததால் ஆங்காங்கே வீட்டுக் கூரைகளின் கீழ் நின்று, நின்று போக, நேரமாகி விட்டது. வசூலித்த வட்டிப் பணத்தை சுருட்டி மடியில் முடிச்சுப் போட்டு கட்டிக் கொண்டு, வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள் சுமணா. அப்போது எதிரே வந்த 'சூன்பாண்' ஆட்டோவை மறித்து இரவு சாப்பாட்டுக்காக ஒரு இறாத்தல் பாணும், 'மாலுபாண்' இரண்டும் வாங்கி, ஷொப்பிங் பேக்கில் போட்டு பிடித்துக் கொண்டு நடந்தாள். அப்போது நேரம் இரவு ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது. சுப்ரமணி கங்காணி செய்து கொடுத்த கால் போத்தல் மண்ணெண்ணெய் தீப் பந்தமும் எண்ணெய் தீர்ந்து போகும் தறுவாயில் இருந்தது. மண்ணெண்ணெய் காலியாவதற்குள் வீடு போய்விட வேண்டும் என்ற அவசரம் சுமணாவின் நடையில் தெரிந்தது.

தெப்பக்குளத்து சந்தியை கடந்தால் வீடுதான். ஆனால் அந்தச் சந்திப் பக்கம் ஆறு மணிக்குப் பிறகு ஆள் நடமாட்டம் இருக்காது. துஷ்ட ஆவிகள், அந்தப் பகுதியில் நடமாடுவதாக ஒரு கதை. நீண்ட காலமாக ஊரில் உலவி வந்தது. ஆனால் அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் சுமணா கிடையாது. இருந்தாலும் அன்று அவள் நடையில் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. முச்சந்தியை கடக்கப் போகும் போது எதிரே ரோட்டின் குறுக்கே யாரோ படுத்திருப்பதை அவள் அவதானித்தாள். சம்பள நாள் என்பதால் நன்றாக குடிச்சிட்டு கவுந்திருப்பானுங்க என்று நினைத்தப்படி அந்த உடலை காலால் தாண்டியப்படி நடந்தாள். அப்படி அவள் சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள்.
அப்போது சுமணாவதியின் கையிலிருந்த தீப்பந்தத்தை யாரோ வாயால் ஊதி அணைப்பதைப் போல 'உஸ்' என்று வந்த காற்று தீப்பந்தத்தை அணைத்தது. சுமணா கும்மிருட்டில் சிக்கிக் கொண்டாள். திடீரென்று வெளிச்சம் இல்லாது போனதால் சுமணாவதியால் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றாள். அப்போது தூரத்தில் சாக்குருவியில் மரண ஓலம் அந்த நிசப்த இரவு வேளையை சிதைத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களுக்கு அந்த ஒற்றையடிப் பாதை மங்களாகத் தெரிய, இனி இந்த தீப்பந்தத்திற்கு வேலை இல்லை என்று நினைத்து அதை முற்புதருக்குள் வீசி எறிந்தாள். பந்தம் டமார் என்ற சத்தத்தோடு வீழ்ந்து புதைந்தது.

அந்தக் கண் இமைக்கும் நேரத்தில் சுமணாவின் தோள் பக்கமாக இருந்து நீண்டு வந்த ஒரு கை. அவளின் கையிலிருந்த பாண் பேக்கை பற்றி இழுக்க பேக் தவறி பாதையில் விழுந்தது. அதை சுமணாவதி குனிந்து எடுக்க முயன்ற போது ஒரு வெள்ளை முயல் அந்தப் பற்றைக்குள் இருந்து மின்னலென பாயந்து ஓடியது.

அந்தத் தருணத்தில் ஒரு ஆபத்தில் தான் மாட்டிக் கொண்டிருப்பதை சுமணாவதி உணர்ந்தாள். ஆனாலும் அவள் பயப்படவில்லை. வாயில் வந்த கெட்ட வார்த்தைகளால் அந்த தீய சக்தியை திட்டியபடி வீட்டை அண்மித்த போது அந்த கிராம வாசிகள் விழித்துக் காது கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அடுத்த நாள் 'சுமணாவதி பேயோடு கட்டிப் பிடித்து சண்டை போட்டாளாம்' என்று ஆளுக்கு ஆளு கதைகளை அள்ளிவிட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்தக் கதைகளுக்கு விளக்கம் சொல்லும் நிலையில் சுமணா இல்லை. அவளுக்கு குளிர் காய்ச்சல் வர, பன்சலையில் மந்திரித்துத் தந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்து விட்டான் சமரபால.

சில நாட்களுக்குப் பிறகு சமரபால சுமணாவதியிடம் 'சாப்பிடுவதற்கு ஏதாவது தா' என்று கேட்க உடனே முகத்தை சிலிர்த்தாள் சுமணா.
"உனக்கு ஒரு மண்ணும் கிடையாதுடா" என்று சுமணாவதி கத்தியதைப் பார்த்து சமரபால குலை நடுங்கிப் போனான். அதற்குப் பிறகு நிலைமையைப் புரிந்து கொண்ட சமரபால தமது மகன்களை அழைத்து அம்மாவுக்கு ஏதோ ஆகியிருக்கிறது என்பதைச் சொன்னான். அவர்கள் தமக்கு அறிமுகமான தேவா பூசாரியிடம் சென்றனர். விஷயத்தை சொல்லி பரிகாரம் கேட்க, அவரும் அந்த வீட்டில் ஒரு கெட்ட சக்தி குடி கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். உடனே ஒரு திகதியைக் கொடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.
தேவா பூசாரி
குறிப்பிட்ட அந்த அமாவாசை அன்று தேவா தமது சகாக்களுடன் கரந்தனையில் உள்ள சுமணாவதியின் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வீட்டிற்குள் நுழையும் போதே சில அமானுஷ்யமான ஓசைகள் அவர் காதில் விழுந்தன. ஆனாலும் முருகனின் துணை தமக்கு பக்க பலமாக இருப்பதால் தம்மை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்ற உறுதி அவரின் முகத்தில் பிரகாசமாக தெரிந்தது.

படையல் போட்டு, பேயை விரட்ட போடப்படும் அட்சர சதுரங்க கோடுகளும் வரையப்பட அதில் தேவா பூசாரி அமர்ந்து மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்.

அப்போது சுமணாவதி "டேய் பூசாரி நீ இடம் தெரியாம வந்திட்டே! திரும்பிப் பார்க்காம ஓடிடு உன்னே மன்னித்து விட்டுறேன்" என்று கர்ஜிக்க ஆரம்பித்தாள். தேவா அசருவாரா என்ன! "உன் மாதிரி ஆயிரம் பேயை பார்த்துட்டேன்! என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா?" என்று மிரட்டியபடி மந்திரங்களை ஓதி எரியும் குண்டத்தில் எண்ணெய்யை ஊற்ற, சுமணாவின் உடம்பில் ஒளிந்திருக்கும் தீய சக்தியின் சத்தம் கொஞ்சம் அடங்கிப் போனது. ஆனாலும் தேவா விடவில்லை. தீய சக்தியை ஆட்டம் போட வைத்தார்.

அந்தத் தீய சக்தி நூறு வருடங்களுக்கு முன் செத்துப் போன பொடிமெனிக்கே என்பதை தெரிந்து கொள்ள தேவாவுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. "ஏன் சுமணாவின் உடம்பில் புகுந்தாய்?" என்று பொடிமெனிக்கேயின் ஆவியிடம் கேட்டார்.

"என் மகன் வீட்டுக்குப் போவதற்காக தெப்பக்குளத்து சந்திக்கு ரோட்டு வழியால் வரும்போதுதான் சுமணாவதியை கண்டேன். பாவம் போவட்டும் என்று பாதை ஓரமா ஒதுங்கினேன். ஆனால் திமிர் புடிச்ச இவ கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை விட்டு அடித்தாள். அது மண்டையில் பட்டது. அதுக்குப் பிறகுதான் எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதற்காக மாலுபாணை பறிச்சேன். அதுக்குப் பிறகும் அவள் சும்மா இருக்கலை. என்னை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டினாள். அதனால்தான் அவள் உடம்பிற்குள் போனேன். அதுக்குப் பிறகு விசயத்தை தெரிந்து கொண்ட இவள் புருஷன் என்னை தீர்த்துக் கட்ட பூசாரியை ஏற்பாடு செய்தான். விடுவேனா, அவன் கதையையும் முடிச்சிட்டுத்தான் இனி வெளியில போவேன்"  என்று சுமணாவின் உடம்பிலுள்ள தீய ஆவி சபதம் போட்டது.
தேவா பூசாரியும் கூடி இருந்தவர்களும் குழம்பிதான் போனார்கள். 'எங்களைத் திட்டுறதை நாங்க பொறுத்துக்குவோம். பேய் பொறுத்துக்குமா...' என்று கூடியிருந்தவர்களில் சிலர் முணுமுணுப்பதும் தேவாவின் காதில் விழத்தான் செய்தது.

பிறகு தேவா ஒரு வழியாக ஆவியின் பலவீனத்தை கண்டு பிடித்து அதற்குப் பிடித்த உணவு வகைகளை சாப்பிடக் கொடுத்தார். அதன் கோபத்தை தணித்தார். ஏனெனில் மெனிக்கே நல்ல சாப்பாடு இல்லாமல் ஏங்கிச் செத்தவள். பிறகு அது கண்களை மூடி அசந்திருக்கும் நேரம் பார்த்து அதை மடக்கிப் பிடித்து அதன் கதையை முடிக்க முற்பட்ட போது, மெனிக்கே ஆவி இன்னொரு தந்திரம் செய்தது. தனது தாயை பிடிக்க எதிரே வந்த சுமணாவதியின் மகன் மீது தீய சக்தி பாய்ந்தது அவன் உள்ளே புகுந்து கொண்டது. பிறகு அவன் ஆட ஆரம்பித்தான்.

இதனால் தேவாவிற்கு வேலை கொஞ்சம் தாமதமானது. பிறகு அந்தப் பேயை ஒரு வட்டத்திற்கு கொண்டு வந்து எங்கும் சென்று விடாதபடி மந்திரக் கட்டுப் போட்டு, பிடித்து போத்தலில் அடைத்த பின்னரே தேவா பூசாரி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் தேவா தமது சகாக்களோடு புறப்பட்டார். கரந்தனை பகுதியில் இப்போதும், சுமணாவதியின் சீட்டுக் கம்பனி, வட்டி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறதாம்.

Thursday, March 19, 2015

சினிமானந்தா பதில்கள் -23

ஜெனிலியா இனி நடிக்க மாட்டாரா?
பா. துர்க்கா, ரொசட்

எத்தனை பேர் லூசுப் பொண்ணு பாத்திரத்தில் நடித்தாலும் அதில் இதுவரை சோபித்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அந்த நடிப்பில் அவர்களை மிஞ்ச எவரும் இல்லை. ஒருவர் ஜெனிலியா மற்றவர் லைலா. இவர்கள் இருவரும் சாத்சாத் லூசுப் பெண்கள்தான். அவர்கள் நடிப்பில் அத்தனை தத்ரூபம். எனினும் இவர்களை அப்பாத்திரங்களில் நடிக்க வைத்து படங்களை ஹிட் ஆக்கும் திராணி டைரக்டர்களிடம் இல்லையே!
 ஜெனிலியாவுக்காக 'சந்தோஷ் சுப்ரமணியத்தையும்', லைலாவுக்காக 'பிதாமகனையும்' இ (எ) ப்போதும் பார்க்கலாம்.

குழந்தையும் குடித்தனமுமாக பம்பாயில் இருக்கிறார். நடிக்கத்தான் இருந்தேன். ஆனால் குழந்தை பொறுப்பு, குடும்பப் பொறுப்பு அதிகமாகிவிட்டது. இப்போதைக்கு முடியாது. குழந்தை பெரியவனானதும் பார்ப்போம் என்கிறார் ஜெனிலியா.

அதிக நாட்கள் ஓடிய படம் எது?
கவிதா, ஹேவாகம, பாதுக்க

ஹிந்தியில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' தமிழில் 'ஹரிதாஸ்' இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடிய படம் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'தான் மும்பாய் மினர்வா தியேட்டரில் 1995 அக்டோபர் 20 ஆம் திகதி வெளியான இப்படம் கடந்த மாதம் (2015) பெப்ரவரி 18 ஆம் திகதி வரை தொடர்ந்து ஓடியுள்ளது. இப்போதுகூட வார இறுதியில் ஹவுஸ்புல் காட்சிகளாம்.
ஷாருக்கான், கஜோல் நடித்த இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம். 10க்கு மேற்பட்ட பிலிம்பெயார் விருதுகளையும் வென்றது.
அதற்கடுத்து 1975 இல் வெளியான 'ஷோலே' மும்பை மினர்வா தியேட்டரில் 286 வாரங்கள் (5 வருடங்கள்) ஓடியது. 1960 இல் வெளியான 'மொகலே அசாம்' 150 வாரங்கள் 1949 இல் வெளியான ராஜ்கபூரின் 'பர்சாத்' (100) வாரங்கள் ஒரே தியேட்டரில் ஓடின.
தமிழில் அதிக நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடிய படம் என்ற பெருமையை எம். கே. தியாகராஜ பாகவரின் ஹரிதாஸ் (1944) பெறுகிறது. ஒரே தியேட்டரில் 3 வருடங்கள் ஓடி சாதனை படைத்தது.


தமிழ்ப் படத்துறையில் பெண்கள் கதாநாயகிகளாகத்தான் பிரபலம் பெற்றுள்ளனர். ஏனைய பிரிவுகளில் பெண்கள் பிரபலம் பெற்றுள்ளார்களா?  புவனேஸ், ஹட்டன்
சிம்ரன்,                                         பானு
பணியாற்றுவது மட்டுமல்ல பெயரும் வாங்கியுள்ளார்கள். தமிழ்ப் படவுலகில் ஒப்பனையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஆண்கள்தான் கோலோச்சுகின்றனர். இத்துறையில் உள்ள ஒருசில பெண்களில் முதலிடத்தில் இருப்பவர்தான் பானு. தமிழில் ஒப்பனைக் கலைஞர் ஒருவரின் நாள் சம்பளம் 2 ஆயிரம் ரூபாதான். ஆனால் இவரது நாட்சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஏனெனில் இவர் சங்கர் படத்தில் பணியாற்றுபவர். 'சிவாஜி'யில் இவர் போட்ட மேக்அப் ரஜினிக்கு பிடித்துப் போக ரஜினியின் ஆஸ்தான் மேக்அப் வுமனாக மாறியிருக்கிறார் பானு. 'லிங்கா'வில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி என்று மூவருக்கு மேக்அப் போட்டதால் இவருக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 65 ஆயிரம் ரூபா. 'லிங்க'|வில் இரண்டு ரஜினிகளையும் இளமையாக்கிக் காட்டிய இந்த மேக்அப் வுமன், பெண் மயன்தான். பழம்பெரும் டைரக்டர் பி. ஆர். பந்துலுவின் மகள் விஜயலஷ்மி ஒளிப்பதிவு துறையில் பெயர் வாங்கினார். படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கினார். ஆனால் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. டைரக்ஷன் துறையில் அஷ்டாவதானி பானுமதி, விஜய நிர்மலா ஆகியோர் பெயர் வாங்கினார்கள். இப்போது லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் பெயர் வாங்கி இருக்கிறார்கள்.

இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்து அக்ஷன், கட் சொல்லப் போகிறவர் சிம்ரன். இவர் இயக்கப் போவது ஒரு அதிரடிப் படமாம்.

Monday, March 16, 2015

கலைஞர் எம்.உதயகுமாரின் நினைவலைகள்.

குருவியும் காட்டுக் கோழியும் வேட்டையாடி சாப்பிட்ட அந்தப் புங்குடுதீவு வாழ்க்கை...


மணி  ஸ்ரீகாந்தன்

'இலங்கைத் தமிழ் நாடக உலக வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் கலாபூஷணம் கலைஞர் உதயகுமார். ஈழத் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய நட்சத்திரங்களில் மிக முக்கியமான மூத்த கலைஞர். ஆனாலும் இவர் தற்போது நம்மிடையே இல்லை. தனது 77வது வயதில், அன்மையில் காலமாகி விட்டார்.  உதயகுமார் 13 வயதில் நடிப்புலகுக்கு வந்து கடினமான முட்பாதைகளில் கலைத்தாகத்துடன் நடைபயின்று நாடக, சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர். இவரது வாழ்க்கை ஈழத்து நாடக உலகுடன் ஒட்டிச்சென்றிருப்பதால், இவரது வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.'
"ங்கள் ஊரில் புங்க மரம் அதிகமாகக் காணப்படும். அதனால் தான் எங்க ஊரை புங்குடுதீவு என்று அழைத்தார்கள். என் அப்பா பெயர் பிலிப். அம்மா பெயர் எலிஸபெத்.

எட்டு வயசு வரைக்கும் நான் புங்குடுதீவில்தான் இருந்தேன். எனது ஆரம்ப கல்வி புங்குடிதீவில்தான் ஆரம்பித்தது. முதல் முதலாக நான் பாடசாலைக்கு சொன்றது இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அக்கா லெயொனிதான் என்னைப் பாடசாலைக்கு அழைத்து போனா. அங்கே போன எனக்கு அது புது இடமாகஇருப்பதால் அங்கு இருக்க பிடிக்கவில்லை. அக்காவுடன் வந்து விட அழுது அடம்பிடித்தேன். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியையாக இருந்த ரெஜினா என்னை பிரம்பை காட்டி மிரட்டி வகுப்பில் அமர வைத்தார்.

அதற்கு பிறகு அக்கா போயிட்டா. நான் என் வீட்டையும், என் பெற்றோர் அக்கா சுகோதரர்களையும் நினைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாதோ என்ற பயம் எனக்கு. பிறகு பள்ளி வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது.

எனது நண்பர்களான சாமிநாதன், விக்டர், பாலந்த, திருச்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பாடசாலைக்கு பக்கத்திலிருந்த எலும்புருக்கி பூவை பறித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...” என்று தனது பள்ளி வாழ்க்கையைப் பற்றி மேலும் கூறத் தொடங்கினார் உதயகுமார்.
‘கடமையின் எல்லையில்’
உதயகுமார்
“குருவியை பிடித்து பொரித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குருவி பிடிக்க முதல் நாளே கண்ணி செய்து வைத்து விடுவோம். மாட்டு வால் மயிரை பிடுங்கி எடுத்து அதில் முடிச்சு போட்டி சுருக்கு கயிறு செய்வோம். அதை ஈக்கில் குச்சியில் கட்டி வைத்துக் கொள்வோம்.

இது தான் நாங்கள் தயாரிக்கும் கண்ணி. அந்தக் காலத்தில் இப்போது போல் நைலான் கயிறு இல்லை. அதனால் தான் மாட்டு வால் மயிரை பிடுங்கி சுறுக்கி கயிறு செய்தோம். செய்த கண்ணியை ஸ்கூல் பேக்கில் வைத்து எடுத்துக் கொண்டு போய் வழியில் எங்காவது மறைத்து வைத்து விடுவோம். ஸ்கூல் முடிந்து வரும்போது குருவி வேட்டையை தொடங்கிடுவோம்.

நாங்கள் விரும்பிப் பிடிப்பது ஆள்காட்டி குருவிதான். நாங்கள் வைக்கும் கண்ணியில் ஏமாளியாக மாட்டிக் கொள்வதும் அந்தக் குருவிதான். பிடித்த குருவிகளை உரித்து மசால பொடி, உப்புத்தூள் தூவி பொரித்தெடுத்து சாப்பிடுவது எனக்கு பொழுதுபோக்கு. நொட்டான்குருவி என்ற ஒரு பையன் எங்கள் ஊரில் இருந்தான். அவனின் நிஜப்பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. அவன் எங்களோடு குருவி வேட்டைக்கு வருவான்.

நொட்டான் குருவியை அவன் தேடிப்பிடித்து வேட்டையாடுவதால் அவனுக்கு நொட்டான் குருவி என்று பெயர். புங்குடுதீவு கடலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து போகலாம். முழங்கால் அளவுதான் தண்ணீர் இருக்கும்.

அங்கே நடந்து சென்றால் நிறைய பாறைகள் இருக்கும். அதன் இடுக்குகளில் விலாமீன், கலவாய், கருவாய் போன்ற மீன்கள் இருக்கும். அங்கே வலைப்போட்டு மீன்களை பிடிப்போம். அதற்கு 'பார்வலைதல்' என்று சொல்லுவார்கள்.
‘மாமியார் வீடு’படத்தில்
இந்திய நடிகை ஜெயா குகநாதனுடன்
இதில் கலவாய் மீனில் ஒடியல் மா போட்டு கூழ் காய்ச்சி சாப்பிடுவோம். ரொம்பவும் ருசியாக இருக்கும். கடல் தண்ணீருக்குள் இருக்கும் கடல் தாமரையை குத்தி எடுத்து சாப்பிவோடும்.

அப்புறம் கடலில் கிடைக்கும் தாலங்காயை எடுத்து அவித்து சாப்பிடவேண்டும். இப்படியான புங்குடு தீவு உணவுகளை சாப்பிட்டு வளர்ந்ததால் தான் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன்” என்று நெஞ்சு நிமித்துகிறார் கலைஞர் உதயகுமார்.

சின்ன வயதிலேயே ரொம்பவும் யோசித்துக் கொண்டிருப்பாராம். அப்படி பாடசாலையில் தீவிரமாக இவர் யோசிக்கும் போது நடந்த சம்பவத்தை விபரிக்கிறார்.

“புங்குடுதீவு தமிழ்பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் வகுப்பில் ஏதோ ஒரு யோசனையில் நான் ஆழ்ந்திருந்த போது ரெஜீனா டீச்சர் என்னருகில் வந்து ‘ஆதாம், ஏவளைத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான் ‘ஆதாமைத் தெரியும், வரும் வழியில் தான் புல் வெட்டிக் கொண்டிருக்கிறார். என்று பதில் சொன்னதும் வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது. எனக்கு அப்போது தான் விசயமே புரிந்தது! ஆசிரியை கேட்டதோ முதல் மனிதன் ஆதாமை! உணர்ந்ததும்-வெட்கத்தால் கூனிக் குறுகி விட்டேன். என்னுடைய நிஜப் பெயர் மைக்கல். வீட்டுல என்னை மைக் என்றுதான் கூப்பிடுவார்கள்.
அப்பா கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்தார். மாதத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். அதனால் அப்பாவுடன் எனக்கு நெருக்கமில்லை. எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டுதான் செல்வேன். அம்மாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டுத்தான் என் முதல் காதலை துறந்து விட்டு அம்மா சுட்டிக்காட்டிய பெண்ணை மணந்தேன் என்று தனது முதல் காதலை நினைத்து கவலைப்படும் உதயகுமார், அந்த நினைவுகளுக்கு எம்மை அழைத்துச் செல்கிறார். கொழும்பு ரட்ணம் வீதியில் நாங்கள் வசித்து வந்தோம். எங்கள் வீட்டுக்கு ஒரு நாலு வீடு தள்ளித்தான் என் கனவு கன்னியின் வீடு. அவளின் பெயர் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பாடசாலை விட்டு வரும்போது வாசலில் நிற்பா.

என்னையே பார்த்துக் கொண்டிருப்பா. நானும் பார்ப்பேன் அவளின் கண்கள் ஏதோதோ பேசும். நாட்கள் செல்லச் செல்ல அவள் அந்த பாதையோரத்தில் உள்ள தண்ணீர் குழாயடிக்கு வந்து நான் வரும் சமயத்தில் குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருப்பா. எனக்கு அவ்விடத்தில் வரும்போதுதான் தாகம் எடுக்கும்! ஆரம்பத்தில் அவளிடம் தண்ணீர் வாங்கி குடிக்கும் போது கைகள் நடுங்கின. பிறகு அது பழகி விட்டது. அதற்கு பிறகு நான் வரும்போது அவள் தண்ணீர் குடத்துடன் எனக்கு தண்ணீர் கொடுக்க ஆயத்தமாக இருப்பா! அவள் குடத்திலிருந்து தண்ணீரை கீழே ஊற்ற நான் குனிந்து இரண்டு கைகளையும் குவித்து நீர் பருகுவேன். அந்தத் தண்ணீர் அவ்வளவு ருசி. அவ்வளவு ருசியான தண்ணீரைப் பின்னர் அருந்தியதே இல்லை.

சும்மாவா சொன்னான் கவிஞன், பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்; நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய் என்று. பிறகு அம்மாவுக்கு இந்த விடயம் தெரிய வர என்னை அவசரமாக மன்னாருக்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்கும் பஞ்சமணி என்ற பெண்னுக்கும் திருமணப் பதிவு நடைபெற்றது.

அம்மா சொன்னதால் நான் மறுக்காது பதிவுத் திருமணத்திற்கு சம்மதித்தேன். அதன் பிறகு குழாயடிக் கன்னியை நான் காணவில்லை. அவளுக்கு விசயம் தெரிந்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவள் என்னைப் பார்ப்பதை தவிர்த்து விட்டாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.

இப்போது அவள் எங்கேயிருக்கிறாளோ...! பெருமூச்சு விடுகிறார் உதயகுமார். புங்குடு தீவிலிருந்து கொழும்பு வந்ததும் விவேகானந்த மேட்டிலுள்ள சென் அந்தனீஸ் பாடசாலையில்தான் படித்தேன். பந்து விளையாடுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஜிந்துபிட்டி மைதானத்திற்கு செல்வேன். அப்படிப்போகும் போது அங்கே ஜிந்துபிட்டி சந்தியில், மனோரஞ்சித கான சபாவில் நாடகம் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். கே.பி. ராஜேந்திர மாஸ் டர்தான் கலைஞர்களை இயக்கி கொண்டிருப்பார்.

நான் அந்த அறையின் கதவு ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கெண்டிருப் பேன். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வரப்பிரகாசம் என்ற கலைஞர் எண்ணப் பார்த்து, ‘நீ நல்ல வடிவாகத்தான் இருக்கிற.... நாடகத்தில் நடிக்கிறியா?’ என்றார். நானும் உடனே சம்மதித்து விட் டேன். அதன் பிறகு எனது நாடக பயணம் தொடர்ந் தது” என்று சொல்லும் உதயகுமார் தம்மோடு நடித்த சக நடிகர்கள் தொடர்பான ஞாபகத்தையும் பதிவு செய்கிறார்.

‘தமிழகத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆரம்பத்தில் இங்கேதான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள எலிஸ்டொப் பிளேசில் ஒரு லொண்டரி இருந்தது. அங்கே எடு பிடி வேலை செய்து கொண்டிருந்தார் சந்திரன். லொன்றிக்கு எதிரே உள்ள பாய்வீட்டில் மோகன் என்பவர் வேலை செய்தார். இவர் ஒரு நாடக கலைஞரும் கூட. அவர்தான் சந்திரனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு தருவார். அதை சாப்பிட்டுவிட்டு அந்த லொண்டரியிலேயே தங்கிவிடுவார். அப்போதுதான் எனக்கு சந்திரன் பழக்கமானார். பிறகு சந்திரன் சிங்கள சினிமாவின் ஒளிப்பதிவாளராக இருந்த லெனின் மொராயஸ்சின் உதவியோடு விஜயா ஸ்டுயோவில் லைட் போயாக வேலை செய்தார். சந்திரனும் நானும் நடித்த ‘கலிங்கத்து கைதி’ நாடகம் புத்தளம் நுரைச்சோலையில் மேடையேறியது. அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.

நாடகத்தில் நான் ராஜ குருவாகவும், சந்திரன் சிஷ்யனாகவும் நடித்தோம். ஒரு காட்சியில் நான் சிஷ்யனைப் பார்த்து ‘சிஷ்யா! நமது அரண்மனைக்குள் எதிரிகள் ஊடுருவி இருக்கிறார்கள்” என்றேன்.

அதற்கு சந்திரன் ‘அப்படியா குருவே! எந்த ரூமில் அவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லுங்கள் அவர்களை பினிஷ் பன்னி விடுகிறேன்” என்றார் சரித்திர நாடக வசனத்தில் ஆங்கிலம் கலந்து விட்டதை உணர்ந்த நான் நிலைமையை சமாளிக்க சாதுரியமாக “ஆங்கிலயர்கள் நம் அரண்மனைக்குள் அடிக்கடி வந்து போவதால் நீயும் தமிழோடு ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டாயா?” என்று இட்டுக் கட்டினேன். நாடகம் முடிந்ததும் ராஜேந்திரன் மாஸ்டருக்கு ஆத்திரம் தாங்காமல் எஸ்.எஸ். சந்திரனுக்கு பிரம்பால் விளாசித் தள்ளினார். ‘எப்படி சார் என்னுடைய சமாளிப்பு? என்று நான் புத்திசாலி தனமாக பேசியதாக நினைத்து மாஸ்டரிடம் கேட்டேன். மாஸ்டருக்கு ஆத்திரம் மேலும் அதிகமாகியது.

அவனுக்குத்தான் அறிவில்லை எண்டா உனக்கு எங்கேடா போச்சு புத்தி? இந்த கதை நடந்தாக சொல்லப்படும் காலத்தில் வெள்ளக்காரன் எங்கேடா இந்தி யாவிற்குள் வந்தான்?’ என்றார் அன்றிரவு எஸ்.எஸ். சந் திரனை அறைக்கு வெளியே போட்டு கதவைச் சாத்திவிட்டார். பாவம் சந்திரன்! அன்றிரவு முழுவதும் அறைக்கு வெளியேதான் படுத்திருந்தார்.

சிறிது காலத்தின் பின் அவர் இந்தியாவுக்கு சென்று விட்டார். ஒரு நாள் சந்திரன் எனக்கு போஸ்காட் அனுப்பியிருந்தார். அதில் மெரினா பீச்சில் நான் கடலை விற்கிறேன். உங்களுக்கு அனுப்பியிருக்கும் போஸ்ட் காட் செலவில் இங்கே ஒரு வேளை சாப்பாடு சாப்பிடலாம். எப்படியாவது நான் முன்னுக்கு வருவேன்’ என்று நம்பிக்கையோடு எழுதியிருந்தார். எஸ்.எஸ். சந்திரனை கொழும்பு லொண்டரியில் சந்திக்க போகும் போதெல்லாம் நீதிமன்றத்துக்கு பக்கத்திலிருந்த இக்பால் ஹோட் டலில் ஆட்டுக்கால் சூப், பானோடு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது அந்த ஹோட்டல் லொண்டரி, என்று எதையுமே அங்கு காணமுடியவில்லை. காலம் வேமாக ஓடிக் கொண்டிருக் கிறது என்பது மட்டும் புரிகிறது” என்கிறார் கலைஞர் உதயகுமார்.

திருமணம் எங்கே நடை பெற்றது? என்று கேட்டோம்.

“1964ல் தான் எனது திரு மணம் நடைபெற்றது. அப்போது எனக்கு இருபத்தி நான்கு வயது. புங்குடுதீவு புனித சவோரியார் ஆலயத்தில் பாதர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. ஊர்ப் பெரியவர்கள் வந்திருந்தார்கள். யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இருந்த ஞானம் ஸ்டூடியோ வில்தான் திருமண போட்டோ எடுத்தோம். அந்த ஸ்டுடியோ இப்போ இருக்கி றதோ தெரியாது. மன்னார் பன்றிவிரிச்சான் தான் என் மனைவியின் ஊர். இங்கே அதிகமானோர் வேட்டைக்கு போய் காட்டு விலங்குகளை கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு நாள் எனது மனைவி காட்டுக் கோழி என்று சொல்லி தந்த இறைச்சியை சாப்பிட்டேன்.
ஹெலன்குமாரியுடன்,
மஞ்சள் குங்குமத்தில்
ரொம்பவும் சுவையாக இருந்தது. அதன் பிறகு எனக்கு வேட்டையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பன்றிவிரிச்சானில் வேட் டைக்காரர்களாக இருந்த செல்லையா, மார்சலின், சின்னதம்பி, யோசப் ஆகியோருடன் சேர்ந்து நானும் வேட்டைக்கு போனேன். அப்போது விவசாய நிலம் உள்ளவங்களுக்கு அரச அனுமதியோடு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அப் போது துப்பாக்கி ஒன்றை 250 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். மன்னார் கச்சேரிக்கு பக்கத்திலுள்ள அயன் ஸ்டோரில்தான் தோட்டா வாங்குவோம்.

 ஒரு தோட்ட முப்பத்தைந்து சதம். ஒரு நாள் நானே காட்டுக் கோழியை வேட்டையாடி என் மனைவியிடம் சமைக்கச் சொன்னேன். ஆனால் ருசியில் சிறிது மாற்றம் இருந்தது. அப்போதுதான் என் மனைவி, ‘நீங்கள் அன்றைக்கு சாப்பிட்டது உடும்பு இறைச்சி. காட்டுக் கோழி என்று சொல்லி சாப்பிட வைத்தேன். உடும்பு என்றால் நீங்கள் சாப்பிட மாட்டீங்களே? என்றாள் என்னிடம். என்று அனுபவங்களை அவிழ்த்து விட்டவர் இன்னொரு தகவலையும் எடுத்து வைத்தார்.

“சின்ன வயதில் எனக்கு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கு வைத்தியர் வருவார். அவர் பெயர் (சிறிதுநேரம் யோசித்து விட்டு) இலுவல் சேட் பரியாரியார். அவரை எனக்கு நல்லாத் தெரியும் மருந்து பெட்டியுடன் சைக்கிளில் தான் வருவார். அவரோட உயரம் ஆறு அடி இருக்கும் இதேபோல் புங்குடுதீவில் ரொம்பவும் பெயர் பெற்றவர், சண்டியன் சண்முகநாதன் அவரை நான் கண்டதே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன். அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு நான் கொழும்புக்கு வந்து விட்டேன். புங்குடுதீவு வாழ்க்கை முடிந்த கதையாகி விட்டது.

இங்கே கொழும்பு துறைமுகத்தில் நான் வேலை பார்த்த போது கம்பஹா-தொம்பேயில் குடும்பத்துடன் ஒரு ஆறுவருடம் தங்கியிருந்தேன். தினமும் கொழும்பிலிருந்து வீட்டுக்கு போய் வருவேன். பின்னேரம் வேலை முடிந்து தொம்பேக்கு போய் இறங்கும் போது இரவு பத்து மணியாகிவிடும். எனக்கு தினமும் மது அருந்த வேண்டும்.

அந்த சந்தியில் ஒரு குடிசை வீட்டில் புஞ்சி நோனா என்ற அம்மா மது விற்று வந்தாள். வழமையாக அங்கே சென்று ஒரு கிளாஸ் போட்டுவிட்டுதான் மேலே நடப்பேன். அந்த அம்மாவின் மகனான சோமசந்திர எனக்கு நண்பரானார். அதன் பிறகு அர்த்த ராத்திரியில் அந்த குடிசைக்கு சென்றாலும் எனக்காக அங்கே ஒரு கிளாஸ் மது இருக்கும். இப்போது அக்குடிசையை அங்கே காணவில்லை. புஞ்சி நோனாவும், சரத் சந்திரவும் எங்கே போனார்களோ தெரியவில்லை” என்கிறார்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள்?

“நீர்கொழும்பு முத்துலிங்கம், கிங்ஸ்லி செல்லையா என்கிறார் கலைஞர் உதயகுமார். கடவுள் நம்பிக்கை- எப்படி என்றதும் நம்ம குல தெய்வம் மகா விஷ்ணு என்றார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மைக்கல் உதயகுமாராகி, இப்போது குல தெய்வம் மகாவிஷ்ணுவாகி....

வாழ்க்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? உதயகுமார்?

திரும்பிப் பார்க்கும்போது நினைவாக இருக்கிறது. ஆரம்பத்தில் என்னுடன் கலைப்பயணத்தில் பலர் வந்தார்கள். இப்போது இவர்களில் பலர் இல்லை. அனாலும் நான் வெறுமையாக இல்லை. கலைச் சேவை பசுமையாக இருக்கி றது. பல சிரமங்களுக்கு மத்தியில் பல வேலைகளைச் செய்து முடித்திருக் கிறேன். பாரதியார் காலத்தில் எத்தனைப் பேருக்கு பாரதியைத் தெரியும்? ஆனால் இன்று தமிழ் வீரியத்தின் மங்காதச் சின்னம் அவர். இதுபோல் நானும் எனக்கு பின்னர் வாழ்வேன் என்ற நம்பிக்கை திரும்பவும் எனக்கு நிறைவைத் தருகிறது.....

(2009-10-11.தினகரன் வாரமஞ்சரியில் வெளியான எனது படைப்பு)

Saturday, March 14, 2015

ஆனந்த விகடன் புகழ் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகிறார்.

"கார்ட்டூன் வரைவதற்கு மண்டையில் நிறைய சரக்கு வேண்டும்"


உரையாடியவர்: மணி  ஸ்ரீகாந்தன்

'வந்தார்கள் வென்றார்கள் எழுதிக் கொண்டிருந்தபோது நீங்களே படமும் போட்டால் பிரமாதமாக இருக்குமே என்றார்கள். வரைந்து பார்த்தேன். அக்பரையும் பாபரையும் வரைந்து பார்த்தால் அவர்கள் சிரிப்புத் திருடர்கள் போல் இருக்கவே, படம் வரையும் ஆசையை விட்டுவிட்டேன்'
மிழ் கார்ட்டூனிஸ்ட் படைப்பாளர்களில் மதனுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. குறைந்தளவில் கோடுகளை பயன்படுத்தி தத்துரூபமான கார்ட்டூண்களை படைப்பதில் மதன் கைதேர்ந்தவர். கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடனில் மதன் வரைந்த ஜோக்ஸ்சுகளுக்கு பெரும் மவுசு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த நாட்களில் ஆனந்த விகடனை வாங்கியதும் எல்லோரும் முதலில் படிப்பது மதன் ஜோக்ஸ்தான். மதன் என்றாலே அவரின் படங்களில் வரும் நீண்ட மூக்கும், நீண்ட தலையும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து கொண்டே எழுத்துத் துறையிலும் சினமாவிலும் தடம் பதித்த ஒரு பன்முக படைப்பாளர். இப்போதெல்லாம் அவரை ஜோக்ஸ் படங்களில் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது. தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். என்ன நடந்தது மதனுக்கு என்பதை தெரிந்து வர சென்னை மந்தை வெளியில் உள்ள வீடு வரைக்கும் போய் பார்த்தோம்.
"வாங்க சார் நான் இங்கே தான் இருக்கேன். நான் இப்போ ஆனந்த விகடனில் படம் போடுவதில்லை. ஆனால் புதிதாக வெளியாகும் 'ஜன்னல்' சஞ்சிகையில் கார்ட்டூண் போடுறேனே. நீங்க பார்க்கலையா, டீவியிலயும் வாரேனே.." என்று ரொம்ப ஜாலியாகவே பேசுகிறார்.

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட மதனின் நிஜப்பெயர் கோவிந்தகுமார். கிருஸ்ணசாமி, ராதா தம்பதியினரின் நான்கு பிள்ளைகளில் மூத்தப்பிள்ளை இந்த மதன்.

"கலைகளுக்குப் பெயர்போன தஞ்சாவூரில் பிறந்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். பெரிய பெரிய படைப்பாளர்கள் எல்லாம் இந்த மண்ணில்தான் பிறந்திருக்காங்க. அதனால அந்தப் பட்டியலில் இப்போ நானும் சேர்ந்துகிட்டேன் என்று சொல்லும் போதே மதனின் முகத்தில் மின்னலடிக்கிறது மகிழ்ச்சி.

கார்ட்டூணை முறையாக கற்றுக்கொண்டீர்களா? எப்படி இந்தத் துறையை தேர்ந்து எடுத்தீர்கள்? என்று கேட்டோம்.

"நான் காலேஜில் படித்தது பௌதீகம். சித்திரம் அது கைப்பழக்கம். சின்ன வயசுலேயே சும்மா பொழுது போக்கா வரைவேன். ராமர் பட்டாபிஷேகம் ஆஞ்சநேயர், வீரசிவாஜி, மகாபாரத பாத்திரங்கள் உள்ளிட்ட காட்சிகளை பார்த்து வரைவேன். திடீர்னு ஒரு நாள் கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மனின் கேலிச்சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அது எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அவர் மாதிரி நானும் வரைந்து பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணினேன். அது எனக்கு ரொம்ப சுலபமாகவே வந்தது. அன்றிலிருந்து கார்ட்டூன் போட எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு கார்ட்டூனுக்கு குரு என்று யாரும் கிடையாது. எல்லாம் பயிற்சியும் அனுபவமும்தான். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் கோபுலு, ஸ்ரீதரின் ஜோக்ஸ் படங்கள் நிறையவே வெளியாகும்.  அப்போது என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி ஆனந்த விகடனில் அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர்தான். பிறகு அவர் எனக்கு கார்ட்டூன் போடும் வாய்ப்பை கொடுத்து விட்டு அவர் விலகிக் கொண்டார். ரொம்ப நல்ல மனிதர்" என்று கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் பற்றி நன்றியோடு சொல்லி நெகிழ்ந்து போகிறார்.
ரெட்டைவால் ரங்குடு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி சிரிப்புத் திருடன் சிங்கார வேலு உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ் வாசகர்களிடையே அவர்களை கார்ட்டூன்களில் மாஸ் ஹீரோக்களாக படைத்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.

"ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில் எனது கார்ட்டூண் கதாபாத்திரங்களே ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அந்தளவிற்கு வாசகர்களிடையே வரவேற்பு இருந்தது. அதன் பிறகு அவற்றை நூலாகவும் விகடன் வெளியீட்டு வெற்றியும் கண்டது" என்று படபடன்னு பேசும் மதனிடம்,

"ஓவியம், கார்ட்டூண் இந்த இரண்டில் கற்றுக்கொள்ள ரொம்ப இலகுவானது எது?" என்று கேட்டோம்.

"ஓவியனாகுவது ரொம்பவும் இலகுவான விடயம். குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் படம் வரையத் தொடங்கிவிடலாம். ஆனால் கார்ட்டூனிஸ்டாக வருவது கஷ்டம். அதற்கு ஐடியாக்கள் நிறைய வேண்டும். நாட்டு நடப்போடு அரசியல் நெளிவு சுழிவுகள் தெரிந்திருக்க வேண்டும். மண்டையில் கிண்டலும், கேலியும் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கார்ட்டூன் வழியாக நகைச்சுவை கலந்து சொல்ல முடியும். ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட்க்கு இவை கட்டாயம். மற்றவரிடம் ஐடியா கேட்டு எத்தனை நாளைக்கு கார்ட்டூன் போடுவது? நாமே ஐடியா பண்ணி செய்வதே சிறப்பு. இப்படி நிறைய விசயங்கள் இருப்பதால்தான் கார்ட்டூண் துறையை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. நூறு ஓவியர்களுக்கு இரண்டு கார்ட்டூண்கள்தான் இருக்கிறார்கள்" என்று கார்ட்டூனிஸ்டுகள் ஏன் குறைவு என்பதற்கான காரணத்தை விளக்கும் அவர், தனக்கு ஆர்.கே. லக்ஷ்மணனின் தாக்கம்  இருப்பது பற்றியும் கூறுகிறார்.

"ஆர்.கே. லக்ஷ்மணனின் பாதிப்பு என்னில் இருந்தாலும் நான் அவரை கொப்பி அடிக்கவில்லை. எனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டேன். எனது கார்ட்டூன்களின் முகங்களில் ஒரு நையாண்டி ரேகை தெரியும். ஆனால் அவலட்சணமாக வரைய மாட்டேன்" என்று மனந்திறந்து பேசுபவரிடம்,
"கார்ட்டூன்களில் சில முகங்களை கொண்டுவர கஷ்டம் என்கிறார்களே?" என்று எமது சந்தேகத்தை கேட்டோம்.

"பழகிட்டா எல்லாமே ஈஸியாகிடும். இப்போ கருப்பு கண்ணாடி, போட்டு சின்னதாக ஒரு மீசைபோட்டு வரைந்தால் அது கலைஞர்னு எல்லோரும் கண்டுபுடிச்சிடுவாங்க. அப்படி மக்கள் பார்த்து பழகிட்டா எல்லா முகமும் அவங்களுக்கு பரிச்சியமாகிடுமே. இப்போ ஒருத்தர் தலைவர் ஆகிட்டால் அவர் கட்டாயம் கார்ட்டூன்ல வந்தேதான் ஆகணும். அப்படி வந்தாதான் அவர் மக்களுக்கு அறிமுகமான தலைவராகத் தெரிவார். அப்படி வராவிட்டால் யாராவது ஒரு கார்ட்டூனிஸ்ட்க்கு போன் போட்டு என்னையும் காட்டூன்ல கொண்டு வாங்க என்று கெஞ்சனும். ஏனென்றால் கார்ட்டூணுக்கு அப்படி ஒரு பவர் இருக்கு. தலைவர்கள் அரசியலுக்கு வந்துட்டா போக மாட்டாங்க. கதிரையை இறுக்கி புடிச்சிட்டு உட்கார்ந்துடுவாங்க. அப்படி அன்னைக்கு உட்கார்ந்தவங்கதான் கலைஞர் ஜெயலலிதா, வைகோ, ராமதாசுன்னு இன்னைக்கு வரைக்கும் இருக்காங்க. அதனால் நானும் எல்லாத் தலைவர்களையும் என்னோட தூரிகையில் கொண்டு வந்துட்டேன்"என்றார். "கார்ட்டூன் வரைபவர்களுக்கு தத்துரூபமான படங்கள் வரைய வராது. அப்படியே வந்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்காது." ஆனால் மதன் ஆரம்பத்தில் தத்துரூபாமான படங்களை வரைந்திருக்கிறார்.

"இப்போது எனக்கு அப்படி தத்துரூபமான ஓவியங்களை வரைய வராது. அப்படியே வரைந்தாலும் அது கார்ட்டூன் மாதிரி இருக்கும். நான் 'வந்தார்கள் வென்றார்கள்' என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபோது சிலர் என்னிடம் 'நீங்களே இந்த கட்டுரைத் தொடருக்கு படமும் வரைந்திருக்கலாமே அப்படி நீங்கள் செய்திருந்தால் புத்தகமும் எழுதி அதற்கு படமும் வரைந்த பெருமையை நீங்கள் பெற்றிருப்பீர்களே?' என்று கேட்டார்கள். "நான் ட்ரை பண்ணிதான் பார்த்தேன் அக்பரையும், பாபரையும் வரைந்து விட்டுப் பார்த்தேன். அவர்கள் சிரிப்பு திருடன் சிங்கார வேலு மாதிரி இருந்தாங்க. அதனால்தான் விட்டுவிட்டேன்" என்று கூறி சிரிக்கிறார் மதன்.

எழுத்து, சினிமா துறைகளுக்குள் எப்படி வந்தீர்கள்?

"நான் கார்ட்டூன் வரையத் தொடங்கி பதினைந்து வருஷம் கழித்துதான் எழுத்து துறைக்கு வந்தேன். எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்த விசயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படி ஒரு நாள் அக்பர் பற்றிய ஒரு விடயத்தினை ஆசிரியரிடம் கூறிய போது அவர் 'இதை ஏன் நீ எழுதக்கூடாது?' என்று கேட்க அப்போது தொடங்கியதுதான். 'வந்தார்கள் வென்றார்கள்'| அர்த்தமே இல்லாத கேள்வி பதில்கள் வரும்போது ஆக்கபூர்வமான விடயங்களை வாசகர்களுக்கு சொல்லலாமே என்பதற்காக படித்த விசயங்களை பதில்களாக சொன்னதுதான் 'ஹாய் மதன்!' சினிமா வாய்ப்பு திடீரென வந்ததுதான். கமல் என்னோட நல்ல நண்பர். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தப்ப எனக்கு அன்பே சிவம் படத்திற்கான கதையைச் சொன்னார். ரொம்ப நல்லா இருந்தது. 'யாரு வசனம்' என்று கேட்டேன் பட்டென, 'நீங்க தான்' என்றபோது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா போயிடுச்சு. பிறகு 'அது ஒண்ணும் கஷ்டமான காரியம் இல்லை' என்று சொல்லி என்னை அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுத வைத்தார்.

ஆனால் எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்துவிட்டது. சினிமாவில் ஒரு சிலர்தான் உண்மையாக வெளிப்படையாக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் நம்மை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள். என்னோட குட்டிச் சாம்ராஜ்ஜியத்தில் நான் தலைவனாக இருக்கிறேன். ஆனால் அங்கே நான் போனால் பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவேன். இருந்தா ரஜினி - கமல் மாதிரி இருக்கணும், இல்லன்னா மரியாதையும் கிடைக்காது; கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திவிட்டு தூக்கிப் போட்டு விடுவார்கள்." என்று சொல்லும்போதே மதனின் முகத்தில் வெறுப்பு தீயாக...

"வளர்ந்து வரும் கார்டூட்ன் கலைஞர்களுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்...?"

"கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிற தமிழ் நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு ஐந்து பேர்தான் கார்ட்டூனிஸ்டுகளாக இருக்கிறாங்க. அப்புறம் எங்கே வளர்ந்து வாரவங்க இருக்காங்க.... இருந்தால்தானே சொல்வதற்கு" என்று விரக்தியுடன் சொல்லி தமது நேர்காணலை மதன் நிறைவு செய்தார்.

Tuesday, March 10, 2015

திருநங்கை ரோசின் காதலர் தின சிந்தனைகள்

"ஒருவனுக்கு ஒருத்தி என்பதே திணிப்புத்தான்"


மணி  ஸ்ரீகாந்தன்

காதலர் தினம் சம்பந்தமாக கருத்து சொல்ல வி.ஐ.பி.களை வானவில்லுக்காக தேடியதில் சென்னை கே.கே.நகர் 10வது செக்ட்டர் பார்க்கில் சிக்கியவர்தான் நம்ம விஜய் டிவி புகழ் இப்படிக்கு ரோஸ் பார்ர்க் பெஞ்சில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தவரின் கவனத்தை காதலர் தினத்திற்காக எம் பக்கமாக திசை திருப்பினோம்.

"வாவ் காதல் தினமா?" என்று  ரொம்பவே உற்சாகமான ரோஸ்! "நான் அப்போ ரொம்பவே வெளிப்படையாக பேசுவேன், பேசலாமா?" என்று எம்மிடம் அனுமதி கேட்டுவிட்டே தொடர்ந்தார்.

"காதல் என்பது ரொம்பவும் ஆழமான இயற்கையான மனித வாழக்கையை புரட்டிப் போடக் கூடிய ஓர் உணர்வு. ஒருவருக்கு காதல் உணர்வு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து அவ்வளவு சுலபமாக மீண்டு விட முடியாது. ஆனால் அதற்காக ஒரு தினம் வைத்துக் கொண்டாட அவசியமில்லை.

கிறிஸ்தவ ஆதிக்கத்தில் உருவாக்கப் பட்டதுதான் இந்த தினம். உலகலாவிய அளவில் ஏகாதியபத்திய வியாபாரிகள்  இது போன்ற தினங்களை எடுத்து அதன் மூலமாக மக்களுக்கு செலவீனங்களை ஏற்படுத்துகிறார்கள். பெப்ரவரி 14 என்பது வியாபாரிகளுக்குதான் நன்மையாக அமைகிறது. அந்த சமயத்தில் பார்த்தீங்கன்னா "வைரம் வாங்குங்க உங்க காதலை கௌரவப்படுத்துங்க" என்று விளம்பரம் செய்வாங்க. உண்மையிலேயே காதலுக்கும் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
அதாவது நம் மீது பொருள் ஆதிக்கத்தை திணிக்க பார்க்கிறார்கள். அதனால் காதலர் தினம் என்கிற விசயம் வாத்தக மயமாகி விட்டது. ஆனால் காதல் என்பது ஒரு உண்தமான உணர்வு. அது மறுக்க முடியாத விசயம். இந்தியாவை பொறுத்த வரையில் காதலர் தினத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், இங்கே வந்து சாதி ஆதிக்கம் அதிகமாக இருக்கு! இங்கே காதல் ஏற்றுக்கொள்ளப்படாத விசயம். முக்கியமாக இங்கே இருக்கிற ஆதிக்க வெறியர்கள், சாதி வெறியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு சாதியே மேலோங்கி இருப்பதற்காக, மற்ற மனிதர்கள் எல்லாம் சாதி வாரியாக பிரித்து வைத்திருக்க வேண்டும் இவர்களுக்கு. காதலில் நீங்கள் சாதி பார்க்க மாட்டீர்கள். உங்களுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களோடு அன்பு செலுத்த முயற்சிப்பீர்கள். திருமணம் கூட முக்கியம் கிடையாது. திருமணம் என்பது ஒரு சடங்கு. காதல் இருக்கிறவரைக்கும் அன்பாக ஒன்றாக வாழலாம். காதல் என்பது திடீரெனக் குறையவும் வாய்ப்பு இருக்கு. அப்படி குறைந்தால் அவங்க பிரிவதும் நல்லது." என்று வில்லங்கமாகவே தமது கருத்தை முன் வைத்த ரோஸிடம் "அப்போ ஒருவனுக்கு ஒருத்தி...?" நாம் ஆரம்பித்து முடிப்பதற்கு முன்பாகவே ரோஸ் முந்திக் கொண்டார்.

"அதெல்லாம் பொய்யான விசயம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே திணிப்புதான். ஆதிக்கவாதிகள் மதம்,கடவுள் என்கிற பெயரில் நம்மீது திணித்த ஒரு விடயமாகவே நான் அதை கருதுகிறேன். திருமணம் என்று ஒன்று இல்லையென்றால் பொருள் தேட ஓட மாட்டோம். நம்ம பிள்ளைக்காக சொத்து சேகரிக்கிற அவசியம் இருக்காது. ஆனால் அந்த ஓட்டம்தான் இன்று உலகம் முழுவதும் நடக்கிறது.இன்று உலகத்தில் நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் அதுதான் காரணம்.
அது இயற்கையே கிடையாது.அது நமக்கு சொல்லிக் கொடுத்த விசயம்.சமுதாயம் என்பது இப்படித்தான் ஆண் என்றால் பொருள் தேடி ஓடணும்,அப்படி பொருள் தேடி சாதித்தால் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணுக் கிடைப்பா. அப்புறம் கல்யாணத்திற்குப் பிறகு புள்ளக்குட்டிக்காக ஓடணும். இது ஒரு வெளித்தோற்றம். ஆனால் உள்ளுக்குள்ள ஒவ்வொரு ஆணுக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒண்ணும் கிடையாது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் வரும். அப்புறம் கொஞ்ச நாளில மறையும் இப்படி மாறி, மாறி வருகிற விசயம்தான் காதல். ஒரு காதலை வச்சி வாழ்க்கை முழுவதற்குமாக நாம் திட்டம் போட முடியாது. ஆனால் இந்த சமுதாயம் அந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்குது.அதுவும் காதல் ரீதியாக இல்லை. நீங்கள் ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும். இதுதான் இந்திய ஆதிக்க சக்தியினரின் கொள்கையாக  இருக்கிறது. தமக்கு கீழே உள்ள மக்களை அடிப்படுத்துவதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். நம் தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரையில் காதல் என்றாலே ஒரு பயம்தான்.

அது இயற்கையான விசயம் என்பதால் மக்களுக்கு அதன் மீது ஒரு மோகமும் இருக்கு. ஆனால் நம்ம ஆளுங்க எல்லோரும் ரெட்டை வேசம் போடத் துவங்கி விட்டார்கள். வெளியே ஒரு வாழ்க்கை உள்ளே ஒரு வாழ்க்கை. அதனால்தான் திருட்டுத்தனமாக படகு மறைவிலும்,குடை மறைவிலும் காதல் செய்ய அவன் தள்ளப்படுகிறான். ஒரு பெண் மீது இருக்கும் காதலை வெறும் காமமாக மட்டும் பயன்படுத்திவிட்டு அவளை தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடுவது போன்ற விசயங்கள் நடைபெறுகிறது. ஏனென்றால் இவனால் அந்த விசயத்தை வெளியே காட்ட முடியாது.காரணம் ஒருவனுக்கு ஒருத்தி திணிப்பு.அவன் பெயரை கெடுத்துக்க கூடாது நல்லவன் மாதிரி நடிக்கணும்.இப்படி எல்லோரையும் பொய்யர்களாகவும் ஆக்கிவிட்டது இந்த சமுதாயம்.என்று சமுதாயத்தின் மீது எரிந்து விழும் ரோஸின் பேச்சில் அனல்.

"இந்த விசயம் கொஞ்சம் மாறிட்டுதான் வந்தது ஆனால் சமீபகாலமாக மீண்டும் ஆதிக்க வெறியர்கள் தமிழ் நாட்டுக்குள் புகுந்துவிட்டார்கள். இப்போது சாதி ஆதிக்க வெறியர்களின் கை ரொம்பவே ஓங்கிவிட்டது. இது நம் தமிழ் மக்களுக்கு புரியவில்லை. புரிந்தால் அவர்களை விரட்டி விடலாம். ஆனால் நம் மக்கள் மூடர்களாகவே இருக்கிறார்கள். நாம் மூடர்களாக இருப்பதின் காரணத்தினால்தான் இவர்களால் நம்மை இலகுவாக பிரிக்க முடிந்தது, பிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

எனவே தினம் தினம் காதலர் தினம்தான் காதல் போற்றப் பட வேண்டிய விடயம். அது இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கிற விசயம். அன்பின் ஒரு வெளிப்பாடு. காதலும் அன்பும் போற்றப்பட்டால் வக்கிரம், வன்மம் குறைந்து எங்கும் சமாதானம் பரவும். காதலிப்பவர்களை சுதந்திரமாக விட்டாலே போதும். அதுவே இந்த உலகத்தை மாற்றி விடும்" என்றவரிடம்   "காதலர்களை சுதந்திரமாக நடமாட விட்டால் எல்லை மீறிவிடுவார்களே" என்று ஒரு கொக்கியை போட்டோம்.

"அதை எல்லை மீறுதலாக நான் பார்க்கலைங்க அவங்க அவங்களோட சமுதாயத்தில் வாழும் போது ஒருவனுக்கு ஒருத்தியான திணிப்பினால் அவங்க நசுக்கப்படுறாங்க, ஆனால் அவங்களுக்கு அது உண்மையில்லை. மனிதனின் இயற்கையான உள் உணர்வு, அங்கே ஒரு காதலையும் இங்கே ஒரு காதலையுமே தேடச் சொல்லுது. இதுதான் உண்மை. அப்படியான ஒரு சூழலில் தன்னோட காதலை, அழகை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் மறைவான இடத்தில் காதலை கொச்சையாக வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

இப்போ ஒரு பையனை ஒரு பொண்ணு காதலிக்கிறாள். அவனை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அவள் "அம்மா நான் அவனைத்தான் காதலிக்கிறேன்" என்று சொன்னால் அம்மா "ஓ அப்போ நீங்க ரெண்டு பேரும் மேல் மாடியில போய் காதல் பண்ணுங்க"னு  சொல்லுவாளா..? இல்லையே அதனால அவள் பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது இருட்டில்தான் காதல் செய்ய வேண்டி உள்ளது. அதனால்தான் பார்க், பீச் போன்ற இடங்களில் இயற்கை சூழ்ந்த இடங்களில் அந்த உணர்வு அதிகமாகவே தூண்டப்படுகிறது. இயற்கையை இயல்பாகவே விட்டாலே மனிதன் உன்னதமானவனாக மாறிவிடுவான். அவங்க கடவுள் தன்மையை அடைந்து விடுவார்கள்" என்ற ரோஸிடம் திருநங்கைகளின் காதல் உணர்வு பற்றி கேட்டோம்.

"நிச்சயமாக திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு இருக்கிறது. ஆனால் இந்த சமுதாயம் திருநங்கையின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணும், பெண்ணும் காதல் செய்வதையே சாதி, மதம், ஏழைப் பணக்காரன் என்று பிரித்து பாடாய் படுத்துபவர்கள், ஒரு திருநங்கை, ஒரு ஆணை காதலிப்பதை எப்படி ஏற்பார்கள்?
இன்னைக்கு ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. திருநங்கையின் காதலை மிகவும் கேவலமாகவே சித்தரிக்கிறார்கள். சமீபத்தில் 'ஐ' என்று ஒரு படம் பார்த்தேன். அதில் விக்ரமை விரும்பும் ஒரு திருநங்கையின் காதலை மிகவும் கேவலமாக சித்தரிப்பதோடு. மிகவும் அவலட்சனமான ஒரு திருநங்கையை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்து திருநங்கைகளை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.அந்த திரைப்படம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது.

இன்றைய நாட்களில் திருநங்கைகளுக்கு நிறைய காதல் பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். திருநங்கைகளை காதலிக்கும் ஆண்கள் கொஞ்ச நாளிலேயே அவளை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அதற்குக் காரணம் சமுதாயம்தான் சமுதாயத்தை எதிர்த்து திருநங்கையோடு வாழ அவனுக்கு தைரியம் இல்லை. அதனால் திருநங்கைகள் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள். காதல் தோல்விகளால் மனம் கசந்து போய் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். ஆனாலும் சில ஆண்கள் இப்போது தைரியமாக திருநங்கைகளோடு வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். அதை 'ஐ' மாதிரியான பெரிய படங்கள் கெடுக்காமல் இருந்தால் நல்லதுதான்.

காதலில் ஈடுப்படாத திருநங்கையே இருக்க முடியாது. திருநங்கையை ஆண்கள் காதலிப்பதும் பிறகு அவளை பிரிந்து செல்வதும், அதன் பிறகு வேறு ஒரு ஆண் வருவதும் அவனும் சில நாட்களில் சென்று விடுவதும் தொடர, திருநங்கைகள் மனமுடைந்து விடுகிறார்கள். எனக்கு அப்படியான அனுபவங்கள் நிறைய இருக்கு! அதனால் சில கட்டத்துக்கு மேல் ஆண்கள் என்றாலே ஒரு வெறுப்பு,'சீ!' இவர்கள் என்ன மனிதர்கள்!" என்ற எண்ணமே தோன்றுகிறது." என்ற தமது கருத்தோடு காதலர் தின வாழ்த்துக்களையும் கூறி தமது நேர்காணலை ரோஸ் நிறைவு செய்தார்.

Sunday, March 8, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு உலா

"நூல் வாங்கும் பழக்கம் அருகி வருகிறது"


மணி  ஸ்ரீகாந்தன்

ஆசியாவில் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியாக வருடாந்தம் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி, இவ்வருடம் சென்னை நந்தனத்தில் உள்ள வை.எம்.சி. கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

38வது ஆண்டில் வெற்றி நடைப்போடும்.இக் கண்காட்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் "பபாசி" அமைப்பினர் வெகு சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.

1977ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி மதராஸ்-இ-ஆதம் பள்ளியில் 10 புத்தக பதிப்பகங்கள், இருபது மேஜைகளில் தொடங்கியது. இன்று இந்தப் புத்தகப் பயணம் எழுநூறு அரங்குகளை கடந்திருக்கிறது.
ரவி தமிழ்வாணன்,சிரிப்பானந்தா,இந்தியன் போஸ்ட் அசோகன்,சஹாநாதன்
வருடாந்தம் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் இக் கண்காட்சியை காண்பதற்காக உலக முழுவதிலுமிருந்து வாசகர்கள் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக நம் இலங்கையிலிருந்து செல்லும் புத்தக பிரியர்கள்,படைப்பாளர்கள் புத்தகங்களை கொள்முதல் செய்வதோடு புத்தக வெளியீடுகளையும் அங்கேயே செய்வதில் பெருமையும் அடைகிறார்கள்.

சுனாமி அலையாக ஆர்பரிக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுநாளில் புத்தகக் கடைகளை மொய்த்துக் கொண்டிருக்கும் வாசர் கூட்டத்திற்குள் நாமும் நுழைந்தோம்.

அந்த விசாலமான புத்தக சந்தையின் உள்ளே மொத்தமாக ஒன்பது தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தெருக்களுக்கு ராசேந்திர சோழன், வேலு நாச்சியார், இராசஇராச சோழன், ராணி மங்கம்மா, சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றெல்லாம் தமிழர்களுக்கே உரிய வீர மரபைப் பின்பற்றி பெயர்களை சூட்டியிருந்தார்கள்.
"களமாடிய வீர மன்னர்களுக்கும் புத்தகத்துக்கும் என்னங்க சம்பந்தம்? கம்பன், பாரதி உள்ளிட்ட இலக்கியவாதிகளின் பெயர்களை சூட்டியிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டப்படியே ஒரு புத்தகக் கடைக்குள்ளியிருந்து வெளியே வந்தார்; 'சவுத் இந்தியன் போஸ்ட்' பத்திரிகையின் பத்திரிகையாளர் டி.அசோகன். அவரோடு பேசியப்படியே ராசேந்திரன் வீதியில் நடந்தோம்.ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனித்துவமாக பளீச்சிடும் நம்ம சிரிப்பானந்தா நம் கண்ணில் பட பேச்சுக் கொடுத்தோம்.

"நான் இப்போ பதினைந்து வருடங்களுக்கு மேலாக புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். ஆரம்பத்துல முப்பதுக்குள்தான் கடைகள் இருக்கும். பார்வையாளர்களும் ரொம்பவே குறைவாகவே வருவார்கள் இப்படி கூட்டம் இருக்காது. அப்படியே நாளுக்கு நாள் கூடிட்டே வந்திருச்சு. புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தால் மனதுக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நிறைய படைப்பாளர்கள், நண்பர்கள், அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து பேசவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு புத்தகங்களைப் பற்றி உரையாடுவதற்கும், வெவ்வேறு வகையான புத்தகங்களின் தரம் பற்றியும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும்  ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. புதிய புத்தகம் ஒன்றை வாங்கி அதை ஆவலோடு திறக்கும் போதே ஒரு வாசனை வருமே அந்த சுகத்தை எந்த ஒரு இலக்ட்ரோனிக் மீடியாவும் நமக்கு தரமுடியாது.முக்கிமாக புத்தகம் வாசிப்பது கண்களுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. 'எதற்கு புத்தகம் வாங்கி பணத்தை வீணாக்குவானேன் நமக்குதான் வீட்டுல கம்பியூட்டர் இருக்கே' னு, கம்பியூட்டரில் புத்தகம் படிப்பதை பெரிய கௌரவமாக கருதுபவர்களுக்கு அது கண்ணுக்கு கேடு என்பது புரியுமா?" என்று கம்பியூட்டரில் புத்தகம் படிப்பவர்களுக்கு சிரிப்பானந்தா ஒரு போடு போட்டார்.
'தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமை' என்கிற நூலை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் வெளியிட மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ. கே. டீ. பாலன் பெற்றுக் கொள்கிறார்,அருகில் ஓவியர் புகழேந்தி
533வது கூட்டத்தில் மணிமேகலை பிரசுரத்தின் அதிபர் ரவி தமிழ்வாணன் பளீர் சிரிப்புடன் நம்மை வரவேற்றார்.

"38வது புத்தக கண்காட்சியில் மணிமேகலையின் முப்பதெட்டு புதிய நூல்களை வெளியிட்டோம்.அதில் எனது தந்தை முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய இயற்கை வைத்தியம் என்ற நூலை தமிழ் தெரியாதவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக 'நேச்சர் க்யூர்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டோம். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படைப்பாளனின் நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவது முக்கிய சிறப்பம்சம். அந்த நூலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது" என்று கூறிய அவர், "இலக்ட்ரோனிக் மீடியாவின் பாதிப்பால் இளைய தலைமுறையினர் வாசிப்பில் இருந்து கொஞ்சம் விலகிப் போவது உண்மைதான், முன்பெல்லாம் வருடம் முழுவதும் புத்தகங்களை வாங்குவார்கள். இப்போது அப்படி அல்ல. வருடத்திற்கு ஒரு முறை புத்தக திருவிழாவில் வாங்குவதோடு முடித்துக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருடம்தோறும் பெரிய விழாவாக நடைபெறும். அப்போது சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் மண்பாண்ட உண்டியலில் திருவிழாவிற்காக வருடம் முழுவதும் காசு சேர்த்து திருவிழா நடைப்பெறும் காலத்தில் அதை உடைத்து செலவழிப்பார்கள். அது மாதிரிதான் சென்னை புத்தக கண்காட்சியிலும் பத்து சதவீதம் தள்ளுப்படி கிடைக்கிறதே என்பதற்காக. அழகருக்கு உண்டியலை உடைப்பது போல வருடத்தில் ஒரு முறை மட்டும் உடைத்து புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டுதான் புத்தகங்களை தேடி வருகிறார்கள்" என்று கூறியபடியே வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கும் ரவியிடமிருந்து
மணவை அசோகன்,சிரிப்பானந்தா,
வானொலி அண்ணா ஆகியோருடன் மணி

விடைப்பெற்று திரும்பிய போது மணிமேகலை கூட்டத்தின் ஓரத்தில் ஒரு சிறிய மேஜையில் சில புத்தகங்களோடு விற்பனைக்காக காத்திருந்த ஒரு இளைஞனை பார்த்தோம். விசாரித்ததில் அவர் பெயர் 'சஹாநாதன்' என்றார். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் படைப்பாளர்களில் அவரும் ஒருவர்.

"நான் இந்த புத்தக கண்காட்சிக்கு வருவது இதுதான் முதல் தடவை. நான் அமெரிக்காவில் சொப்ட்வெயார் மேனஜராக இருக்கிறேன். கடந்த ஆண்டுகளில் என்னை சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைத்தும்; லீவு கிடைக்காததால் வரமுடியவில்லை. எழுத்து என்பது என்னோட ஆத்ம திருப்திக்காக பண்ணுற ஒரு விசயம், அதோட மனிதர்கள் வாழ்வது சந்தோசத்திற்காகத்தான் என்பதை உணர்ந்ததினால் அதைப் பற்றி சொல்வதற்காக நான் எழுத ஆரம்பித்தேன். என்னோட ஆறு புத்தகங்களை இங்கே காட்சிக்காக வைத்திருக்கிறேன். புத்தக கண்காட்சியில் நான்  தொடர்ச்சியாக ஏழு நாட்கள் இருந்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் மனதில் ஒரு புது மாற்றம், நம்ம உடம்ப பார்த்துக்கணும், நம்ம மனச பார்த்துக்கணும் என்ற அக்கறையில் அதை இங்கே வந்து தேடுவதை அவதானிக்க முடிகிறது. தெய்வாதீனமாக அவங்க தேடுகிற இரண்டு விசயமும் நாம எழுதுகிற விசயமாக இருந்தது. மனதையும் உடலையும் சரி பண்ணி எப்படி அமைதியான வாழ்க்கையை வாழ்வது என்பது நான் பெற்ற பயன், அனுபவம். அப்படி நான் இப்போது இருக்கிற நிலையை என்னோட படைப்புகள் மூலமாக வாசகர்களுக்கு சொல்லி கொடுக்கிறேன்" என்று சஹாநாதன் ரொம்பவும் மகிழ்ச்சியாக பேசுகிறார்.
புத்தக கடை வீதியில்; பளீர் சிரிப்போடு இருந்த 'நித்தியானந்தா கேலரியா'  நம் கண்ணில் பட அதை கொஞ்சம் நெருங்கி பார்த்தோம். விற்பனையாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருந்தார்கள். கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே வரச் சொல்லி அழைத்தார்கள். நித்தியானந்தாவின் ஏகப்பட்ட நூல்கள் அந்த கூடத்தை நிறைத்திருந்தது. 'கட்டணம் இல்லாமல் உடல் மன நலனுக்கு தியான சிகிச்சையும்,108 கிரியையும் கற்றுத்தரப்படும் என்ற பதாகையையும் தொங்க விட்டிருந்தார்கள். ஆனால், கூடத்தில் ரஞ்சிதா மட்டும் கண்ணில் படவேயில்லை. நித்தியானந்தாவின் லேட்டஸ் சீடி ஏதாவது இருந்தாலும் வாங்கியிருக்கலாம். வெருங்கையோடு திரும்பினோம். அணிவகுத்து நின்ற புத்தக கடைகளில் ஈழப்போர், பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்கள் அதிகளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தைக் கண்டோம். பத்தி நூல்களைப் போல இவையும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தமிழக வாசிகள் இலங்கைப் பிரச்சினையை உணர்ச்சி பூர்வமாகவே பார்க்கிறார்கள். அதற்கு இவை தீனி போடுகின்றன. அன்றைய தினத்தில் ஓவியர் புகழேந்தி எழுதிய 'தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமை' என்கிற நூலை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் வெளியிட மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ. கே. டீ. பாலன் பெற்றுக் கொண்டார்.

புத்தகக் காட்சியை முடித்து விட்டு வெளியே வந்து நண்பர் சிரிப்பானந்தா அன்பாக வாங்கிக் கொடுத்த கோப்பியை ருசித்துக் கொண்டிருந்து போது காதுக்கு தோடு போட்டுக் கொண்டு வந்த சில மொடர்ன் பையன்களும் டீக்கடையை சுற்றி நின்று டீ குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"மச்சி பத்து ரூபா டிக்கட் எடுத்து உள்ளே வந்து ஒண்ணுக்கும் உருப்படியில்லாம போச்சுடா!"

"ஏன்டா நல்ல புக்கு கிடைக்கலையா?"

"அட நம்மளாம் எப்போடா புத்தகம் படிச்சோம்! யாராவது சினிமா நடிகர்கள் வந்தா அவங்களோட நின்னு ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்குல போடலாம்னு வந்தேன். இன்னைக்கு ஒருத்தரும் வரலை சரி, நாளைக்கு வந்து பார்ப்போம். இன்னைக்கு பத்து ரூபா வேஸ்ட்" என்று புலம்பியபடியே அந்த இடத்தை அந்த கும்பல் காலி செய்தது. சென்னை புத்தகக் காட்சியை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபி எடுக்கவும் பெருங்கூட்டம் குறிப்பாக இளசுகள் அதிகளவில் படையெடுக்கிறார்கள். ஏனெனில்    'அப்பொயின்ட்மென்ட்' இல்லாமலேயே புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கக் கூடிய இடம்தான் இந்தப் புத்தகக் கண்காட்சி.