Saturday, February 28, 2015

இருள் உலகக் கதைகள்

காதலியைத் தேடி வந்த நிஷ்டூர ஆவி

 

 வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை


கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

அனோமாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. இருந்தாலும் கட்டுக்கலையாத உடல்வாகு பார்ப்போரை கிறங்கடிக்கத்தான் செய்யும். எதுராகலை பிரதேசத்தில் வசித்து வரும் அனோமாவின் மீது வயசுப் பயலுங்களுக்கு ஒரு கண் இருந்ததில் வியப்பிருக்க முடியாதுதான்.

அவள் வசிக்கும் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது ஒரு பாலர் பாடசாலை. தினமும் காலையில் மகளை அங்கே விட்டு விட்டு வரும் அனோமா, பிறகு பிற்பகலில் பாடசாலைக்குச் சென்று மகளை அழைத்து வருவாள். அன்றும் வழமைபோல மகளை அழைத்து வர பாடசாலை நோக்கி நடந்தாள் அனோமா.
வழமைக்கு மாறாக அன்று அந்த சிறிய குறுக்குப் பாதை ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. அலரி மலர்களின் தோட்டமாகக் காட்சியளிக்கும் அந்த 'கெரகோப்பு' (சுடுகாடு) பார்க்க ரம்மியமாக இருந்தாலும் அனோமாவிற்கு உள்ளுக்குள் மெல்லியதாக ஒரு அச்ச உணர்வு எட்டிப் பார்க்கத்தான் செய்யும். அலரி பூக்களின் வாசனையை நுகர்ந்த படி இரண்டடி நடந்த போது அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பாதைக்கு எதிர்ப்புறத்து மேட்டு நிலத்தில் புதர் மண்டிக் கிடந்த பற்றைக் காட்டிலிருந்து ஒரு கருப்பு நிற மிருகம் புறப்பட்டு மின்னலென பாதையைக் கடந்து மறைந்தது. அது பன்றியா, மாடா, நாயா என்பதைக் கூட அவளால் கணிக்க முடியவில்லை. அனோமாவின் இதயம் திக்திக் என அடித்துக் கொள்ள பிரம்மை பிடித்தவள் போல ஸ்தம்பித்துப் போனாள். பிறகு சுதாகரித்துக் கொண்ட அனோமா, அது பன்றியாகத்தான் இருக்கும் என்று தனக்குத் தாமே சமாதானம் சொல்லிக் கொண்டு நடக்க முற்பட்டபோது, அவள் தலையில் விழுந்தது ஓர் அலரிப் பூ. நடுவகிட்டில் நின்ற பூ பின்னர் புரண்டு அவளின் தோளைத் தடவி விட்டு அவளின் பாதத்திற்கருகில் விழுந்தது. அந்தப் பூ பார்க்க அழகாக இருக்கவே கீழே குனிந்து எடுக்க முயன்றாள். ஆனால் அந்தப் பூ இரண்டடி நகர்ந்து போனது. பூ காற்றினால் தான் அடித்துச் செல்லப்படுவதாக உணர்ந்த அவள் மீண்டும் அந்தப் பூவை எடுக்க முயற்சி செய்தபோது மீண்டும் அந்தப்பூ. சிறிது தூரம் நகர்ந்தது. அனோமாவிற்கு அப்போதுதான் அந்த விபரீதம் புரிந்தது. அடுத்த நிமிடமே அவள் உடல் வெலவெலத்துப்போய் மூர்ச்சையாகி நிலத்தில் சரிந்தாள்.

அனோமா மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட சிலர் அவளை வீட்டில் கொண்டு வந்து கிடத்தினார்கள். பாதுக்கை ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றும் அனோமாவின் கணவன் பியந்த பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அப்போது அனோமா எழும்பி இயல்புக்கு வந்துவிட்டாள்.

பியந்தவின் தகப்பனார் சிரிசேன அந்தப் பகுதியில் உள்ள ஒரு பௌத்த தேவாலயத்தில் பூசகராக இருப்பவர். அதனால் தமது மருமகளை காத்து கறுப்புத் தீண்டி விட்டிருக்கலாம் எனக் கருதிய அவர், மகன் வீட்டுக்கு வந்தார். தன் மருமகளுக்கு மந்திரித்த கயிற்றை கையில் கட்டி விட்டார். எதுவானாலும் இனி சரியாகி விடும் என்று சொல்லி விட்டுப் போனார் சிரிசேன. அதனால் தன் மனைவிக்கு வந்திருக்கக் கூடிய பிரச்சினை உடனடியாக நீர்த்துப் போய் விட்டதாகக் கருதி மன நிறைவு அடைந்தான் பியந்த. அடுத்த சில நாட்கள் விக்கினமின்றி கழியவே, அனோமாவும் ஏனையோரும் அந்த பூ சம்பவத்தை மறந்து விட்டனர். ஆனால் தினங்கள் கழியக் கழிய அனோமாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நள்ளிரவில் எழுந்து கூச்சல் போடத் தொடங்கினாள். கை கால்களை முறுக்கி பற்களை நறநறவென கடித்தபடி வீட்டில் உள்ளோரை குலை நடுங்கச் செய்தாள். இதைக் கண்டு பியந்த நன்றாகவே பயந்து போனான்.
தமது மனைவிக்கு வந்த பிரச்சினையைத் தீர்க்க தனக்குத் தெரிந்த மந்திரவாதிகளை அழைத்து வந்தான். அவர்களும் பல்வேறு பரிகாரங்களைச் செய்தனர். பணம் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினர். ஆனால் இந்தப் பரிகாரங்களும், தொவில்களும் அனோமாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இறுதியாக அவர் வீரசிங்கம் பூசாரியைப் பற்றி கேள்விப் படவே, அவரிடம் வந்து தன் பிரச்சினையைச் சொல்லி புலம்பியிருக்கிறார். வீரசிங்கம் அவருடன் பியந்த வீட்டை சென்றடைந்தார். வாய் கொப்பளித்து  சீனி பிளேன்டீ குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வீரசிங்கம், கொடியில் இருந்து ஒரு தளிர் வெற்றிலை பறித்து காம்பு கிள்ளி புகையிலை பாக்குடன் வாயில் அடக்கிக் கொண்டார். புளிச்சென எச்சில் துப்பி, சரி, காரியம் பார்க்கலாம் என்றார் பியந்தவிடம். சமையலறையில் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த அனோமாவை வாசல் படியில் இருந்தே உற்றுப் பார்த்தார் வீரசிங்கம். திருஷ்டிகளைப் பார்த்து பார்த்து பழகிப்போன அந்த எக்ஸ்ரே கண்களுக்கு அந்தப் பெண்ணுக்குள் ஒரு கெட்ட ஆவி குடிகொண்டிருப்பது பளிச்சென புலப்பட்டது.

"நாளையே பேயோட்டும் வேலையை ஆரம்பித்து விடலாம் மஹாத்தயா" என்றவர் பூஜைக்கான ஏற்பாடுகளை பியந்தவிடம் விவரமாகச் சொல்லி, பூஜை பொருட்களுக்கான ஒரு லிஸ்டையும் தந்தார். அனோமாவின் வீட்டில் 'தொவி'லுக்கான ஏற்பாடுகள் அப்போதே ஆரம்பமாகின.

மறுதினம் தமது சகாக்களோடு அனோமாவின் வீட்டுக்குச் செல்ல வீரசிங்கம் பூசாரி தயாராகிக் கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"பூசாரி, அனோமா செய்கிற சேட்டை தாங்க முடியலை... ஆகவே எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக வாங்க சாமி" என்று அழாக்குறையாக வேண்டிக் கொண்டார் அனோமாவின் கணவன்.

வீரசிங்கம் மறுநாள் சகாக்களோடு அந்த வீட்டைச் சென்றடைந்தார். வீரசிங்கத்தின் சகாக்கள் அனோமாவின் வீட்டில் பூஜைப் பொருட்களை முறையாக அடுக்கி சக்கர வியூகம் அமைத்த அடுத்த நிமிஷம் வீரசிங்கம் அதில் நடுநாயகமாக அமர்ந்து தமது குலதெய்வத்தை நினைத்து கும்பிட்டார். அப்போது அவரின் உடல் சிலிர்த்தது. அடுத்த சில நிமிடங்களில் அனோமாவை அழைத்து வந்து அச்சர கோட்டிற்கு எதிரே அமர வைத்தார்கள். வீரசிங்கம் இஷ்ட தேவதைகளை அழைத்து அனோமாவை உடம்பிற்குள் குடியிருக்கும் துர்தேவதைகளை கண்டுபிடிக்க கட்டளை பிறப்பித்தார். ஆனாலும் அவரின் எந்த வேலையும் அங்கே எடுபடவில்லை. அனோமா சாதாரணமாகவே இருந்தார். எந்த மாறுதலும் அவளிடம் தென்படவில்லை. வீரசிங்கத்தின் பலமணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.

அப்போது நேரம் நள்ளிரவை கடந்து விட்டிருந்தது. வீரசிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஞாபகம் வந்தவராக திடீரென்று எழுந்த வீரசிங்கம் அனோமாவின் வீட்டின் பூஜை அறைக்குள் நுழைந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது! அங்கிருந்த புத்தர்சிலை பாதத்தில் 'அட்டப் பிரிக்கர'என்று அழைக்கப்படும் பிச்சை பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. தமது மந்திர வேலைகள் பலிக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்பதை புரிந்து கொண்ட அவர், உடனடியாக தனது மாந்திரிக வேலைகளை வீட்டுக்கு வெளியே செய்யத் தீர்மானித்தார். அடுத்த அரைமணி நேரத்தில் வீரசிங்கத்தின் சகாக்கள் அந்த வீட்டுக்கு வெளியே
பந்தல் போட்டு சக்கர வியூகத்தை அமைத்து அதில் வீரசிங்கத்தை அமர வைத்தார்கள்.

அதன் பிறகு பூசாரியின் மந்திர உச்சாடனங்கள் அந்தப் பகுதியை அதிர வைத்த போது அனோமா பேயாட்டம் போடத் தொடங்கினாள். முதலில் அவள் உடம்பிலிருந்து ஒரு கிழவியின் ஆவியே வெளி வந்து பேசியது.

"நான் ஒரு நாள் இங்கிரிய சந்தைக்குப் போய் மீன் வாங்கிட்டு வரும்போது கல் தடுக்கி கீழே விழுந்தேன். ஆசையாக வாங்கி வந்த மீனை சமைச்சு சாப்பிடாமலேயே என் உயிர் பிரிந்தது. அதனால் சாப்பாடு ஆசையால்தான் இவள் உடம்பில் குடியிருக்கேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க" என்று கிழவி அரற்றினாள்.

கிழவி இதைச் சொல்லி அடங்கவும் இரண்டாவதாக ஒரு இளைஞனின் ஆவி வெளிப்பட்டது. அது தனது பாட்டிக்கு துணையாக இருப்பதற்காகவே இந்த உடம்புக்குள் நுழைந்ததாகவும் பாட்டி போகும் போது தானும் கிளம்பி போய் விடுவதாகவும் பூசாரியிடம் ஒப்புதல் அளித்தது. அதனால் வீரசிங்கத்திற்கு அந்தப் பேய்களை விரட்டுவது இலகுவாகிப் போனது.

ஆனால் அனோமா ஆட்டத்தின்போது காட்டும் ஆவேசம், பற்களை கடித்து உடம்பை முறுக்குவதைப் பார்த்தாள் மிகவும் ஆபத்தான ஒரு தீய சக்தி அவளின் உடம்பிற்குள் மறைந்திருப்பதையும் அது தனக்கு பூச்சாண்டி காட்டுவதையும் தனது மந்திர சக்தியால் கண்டு கொண்டார் பூசாரி. அந்தத் தீய சக்தியை வெளியே கொண்டு வர சில சக்தி வாய்ந்த தெய்வங்களை உதவிக்கு அழைக்க வேண்டியிருந்தது. அப்போது அனோமா அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தாள். பூசாரியை வெறித்தனமாக முறைத்துப் பார்த்த அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால் அவள் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அனோமா வாயில் இருந்து காற்று வந்ததே தவிர சத்தம் வரவில்லை. பூசாரி மிகவும் குழம்பிப் போனார். பிறகு பூசாரி போட்ட மிரட்டல் சத்தத்திற்கு மிரண்டு போன அவள் மண்ணில் சிங்கள மொழியில் எழுத ஆரம்பித்தாள். 'டேய் பூசாரி! என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா? நான் தான்டா ரங்க! என்ன உன்னால ஒண்ணும் பண்ண முடியாதுடீ!' என்று அனோமா நிலத்தில் எழுதியதை படித்த பூசாரியும் ஊர் வாசிகளும் அதிர்ந்து போனார்கள்.

"நீ எதற்காக இந்தப் பெண்ணோட உடம்பில் தங்கியிருக்க? உன்னால் பேச முடியாதா?" என்று பூசாரி கேட்டதற்கு, 'என்னோட முறைப் பொண்ணுதான் இந்த அனோமா. நான் அவளை ஒரு தலையாக காதலித்தேன். ஆனால், நான் என் காதலை அவளிடம் சொல்வதற்கு முன்பாகவே அவளை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். அதனால் நான் மனம் விரக்தியடைந்து இறப்பர் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டேன். அப்படி நான் தொங்கும் போது என் கழுத்து உடைந்து விட்டது. அதனால் என் பேச்சு போய் விட்டது' என்று ரங்க எழுதியதை ஊர் மக்கள் உண்மைதான் என்றும் ஆனால் அனோமாவை அவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்த விசயம் யாருக்கும் தெரியாது என்றும் பூசாரியிடம் கூறினார்கள். ரங்கவின் கொட்டத்தை அடக்கி அந்த ஆவியை வெளியேற்றுவதற்கு பூசாரி மேற்கொண்ட பிரயத்தனங்கள் பலனளிக்கவில்லை. ஆவி வெளியேற சம்மதிப்பதாக இல்லை. 'நான் போகும் போது அனோமாவைக் கூட்டிட்டுத்தான் போவேன்' என்பதில் அது உறுதியாக இருந்தது.

முதல் நாள் இரவு தொடங்கிய பேயோட்டும் வேலை, அடுத்த நாள் பகல் 12 மணியை கடந்த பின்னரும் ரங்கவின் துஷ்ட ஆவி அனோமாவை விடுவதாக இல்லை. பூசாரியும் களைத்துப் போனார். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் பூசாரி திணறிக் கொண்டிருந்தார்.

"அம்மா, அப்பா, எப்படி சுகமா இருக்கீங்களா? நான் தினமும் நம்ம வீட்டுக்கு முன்பாக இருக்கிற ரம்புட்டான் மரத்தில்தான் உட்கார்ந்திருப்பேன். நான் சாகிறதுக்கு முன்னர் இருபதாயிரம் சீட்டு பணம் எனக்குக் கிடைத்தது. அதை அவசர தேவையா கேட்ட என் நண்பன், டேவிட்டுக்கு கொடுத்தேன். அவன் அதை திருப்பிக் கொடுத்திட்டானா?" என்று ரங்க எழுதியதை வாசித்த அவன் பெற்றோர்கள், கண்ணீர் சிந்தியபடி 'அவன் அதில் பத்தாயிரம்தான் கொடுத்தான். மிச்சத்தை இன்னும் தரவில்லை' என்று சொன்னார்கள்.

கூட்டத்தில் நடக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேவிட்டுக்கு உடல் உதறல் எடுத்தது. அடுத்த நிமிடம் அனோமா அவனை சுட்டிக்கட்டி அவனை அழைத்த போது அவன் குலை நடுங்கிப் போனான். பின்னால் இருந்தவர்கள் அவனைப் பிடித்து ஆவியிடம் தள்ளிவிட நடுங்கியபடி வந்தவனை முறைத்த ஆவி ,

"நீ சீக்கிரமே அந்த பணத்தை என் அம்மா, அப்பாவிடம் கொடுத்து விடு, இல்லையேல் உன்னை சும்மா விடமாட்டேன், அம்மா நான் கட்டிய டொய்லட் பாதியில் அப்படியே கிடக்கு அதை டேவிட் தரும் பணத்தைக் கொண்டு கட்டி முடித்து விடுங்கள்' என்று ரங்கவின் ஆவி எழுதியதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள்.

அந்த நேரம் வீரசிங்கத்தின் மனதில் ஒரு யோசனை மின்னலடித்தது. அவர் ரங்கவின் பெற்றோரை ஒரு பக்கமாக அழைத்து அவனது பலம், பலவீனம் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல உணவிலும் சாராயத்திலும் விருப்பு கொண்டவன் என்பதை அறிந்து கொண்ட அவர், உணவும், சாராயமும் கொடுத்து ரங்கவை மடக்க திட்டமிட்டார். உடனடியாக அவனுக்கு பிடித்த உணவு அயிட்டங்கள் வரவழைக்கப்பட்டு பெரிய படையல் போடப்பட்டது. பெரிய மெகா போத்தலில் கள்ளும், சாராயமும் வைக்கப்பட்டது. ரங்கவின் ஆவி அந்த உணவு குவியலை சில நிமிடங்களிலேயே கபளீகரம் செய்து முடித்திருந்தது. இரண்டரை லீட்டர் மெகா போத்தலில் இருந்த கள்ளை ஒரே மூச்சில் குடித்த விதம் கூடியிருந்தவர்களை அச்சத்தில் உறைய வைத்தது. ரங்க சாப்பாட்டில் மெய் மறந்து இருந்த நேரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூசாரி, ரங்கவின் வீட்டிற்கு முன்னாள் இருந்த ரம்புட்டான் மரத்தை வெட்டி சாய்க்கச் செய்தார்.
அந்த வேலையை அவரின் சகாக்கள் கச்சிதமாக முடித்திருந்தார்கள். அனோமாவின் வீட்டிற்கு முன்னாள் மரக் கட்டைகளை அடுக்கி பெரிய தீ வளர்க்கப்பட்டிருந்தது. உண்ட மயக்கத்தில் இருந்த ரங்கவின் ஆவியை மிரட்ட ஆரம்பித்த பூசாரி அனோமாவின் உடம்பை விட்டு ரங்காவின் ஆவி போகாவிட்டால் தீயில் தள்ளி எரித்து விடுவதாக எச்சரித்தார். இனிமேலும் தமது வேலைகள் பூசாரியிடம் பலிக்காது என்பதை புரிந்து கொண்ட அந்த தீய ஆவி, பூசாரியிடம் மண்டியிட்டது. அந்த சில நிமிடங்களில் அனோமாவின் உச்சந்தலை மயிர் கத்தரிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டது. ரங்கவின் ஆவியோடு, இருந்த மற்ற இரண்டு ஆவிகளின் கதையையும் பூசாரி முடித்தார். இரண்டு நாள் வேலை ஒரு வழியாக முடிந்து விட்டதை நினைத்து அப்பாடா என பூசாரி பெருமூச்சு விட்டார். ஆவியை புதைக்கும் பரிகார வேலைகளை சுடுகாட்டில் முடித்து விட்டு அனோமாவின் வீட்டிற்கு பூசாரி வந்த போது மயக்க நிலையில் இருந்த அனோமா நினைவு திரும்பி எழுந்திருந்தாள். தனது கணவனிடம்,

"எனக்குச் சரியான பசி, உயிர் போகுது... உடனே சாப்பாடு வேணும்" என்று கேட்க, அவளின் கணவன் ஆச்சர்யத்தோடு பூசாரியை பார்த்தான்.

அவ்வளவு உணவையும் மதுவையும் கபளீகரம் செய்தது ரங்க. இப்போ பசி எடுப்பது அனோமாவிற்கு. அவளுக்கு உணவை கொடுங்கள் பாவம் என்றார் வீரசிங்கம்.

இப்போது அனோமா கணவர், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதாக பூசாரி சொல்கிறார்.

No comments:

Post a Comment