Wednesday, February 18, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11

இலங்கை முஸ்லிம்கள்: முழுமையான வரலாறு நம்மிடம் இருக்கிறதா?


அருள் சத்தியநாதன்

கோம்பையாரின் யாதும் ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு உறங்கச் சென்ற போது பல விஷயங்கள் மனதில் எழும்பின. கேள்விகள் பிறந்தன.

கோம்பை அன்வர் என்ற ஒரு ஊடகவியலாளர் தன் சொந்த முயற்சியால் ஒரு தமிழ் முஸ்லிம் தன் வேர்களைத் தேடிப் பயணிப்பது போல ஒரு ஆவணப் படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க முடிந்திருக்கிறது. இதனால் அவருக்கு பொருட் செலவு ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒன்றும் செல்வந்த குடும்பத்தில் இருந்து வந்தவருமல்ல. இப்படத்தைத் தன்னால் வெற்றிகரமாக சந்தைப்படுத்த முடியுமானால் இதன் அடுத்த பாகத்தையும் எடுத்து முடிப்பேன் என்றும் அயரமாட்டேன் என்றும் கூறுகிறார் கோம்பை.
கோம்பை அன்வர்
இந்த ஆவணப்படம் ஆதாரபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். கொச்சின், மதுரை, தஞ்சை என பயணப்பட்டு, பல ஆதாரங்களை சேகரித்திருக்கிறார். பலரையும் பேட்டி கண்டு ஆதாரங்களை அவர்கள் வாய் வழியாகக் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில், பல சரித்திர புத்தகங்களைப் புரட்டி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை எளிமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பா. ஜ. க. வினர் தமிழகத்தில் வெளிப்படையாகவே மத வெறுப்பைக் கக்கும் இவ்வேளையில் இந்த ஆவணப்படம் அதற்கு எதிரான வலுவான ஆயுதமாகத் திகழ்வதாகவே கருத வேண்டியிருக்கிறது.

இலங்கையில் செறிந்தும் பரந்துமாக முஸ்லிம் சமூகம் வசித்து வருகிறது. இலங்கையுடனான இஸ்லாமிய தொடர்பு மிகப் பழையது. கிரேக்கர்களும், சீனர்களும் இலங்கை வருவதற்கு முன்னரேயே அராபியர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வந்துபோக இருந்திருக்கிறார்கள். எப்படியோ இலங்கைக்கு வருவதற்கான கடல்வழி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. வாசனைத் திரவியங்கள், முத்து, ரத்தினக் கற்கள், தந்தம் போன்றவற்றை எடுத்துச் சென்று கொழுத்த இலாபத்தில் அவற்றை மேற்கு நாடுகளுக்கு விற்று வந்தார்கள். இந்திய உபகண்டம் மற்றும் ஆபிரிக்கக் கண்டம் இரண்டும் அராபியருக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டித் தந்தன.
போர்த்துக்கேயர் தற்செயலாக இந்தியாவையும் இலங்கையையும் கண்டு பிடிப்பதற்கு முன்வரை இந்து சமுத்திர கடலாதிக்கம் அராபியர் வசமே இருந்தது. மலபாருடனான அராபிய தொடர்பு இஸ்லாத்துக்கு முற்பட்ட கால முதல் இருந்து வந்திருக்கிறது என்றால் அதே காலப்பகுதியில் அவர்கள் இலங்கையுடனும் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கைத் தீவுக்கு வெளியார் தொடர்பு, தென்னிந்தியர்களுக்கு அப்பால், அராபியர்களுடனேயே இருந்திருக்க வேண்டும். கிரேக்கர், சீனர் மற்றும் எகிப்தியருடனான உறவை விட அராபியருடனான சிங்கள மன்னர்களுக்கு இருந்த உறவு மிகவும் சினேகபூர்வமாகவும் நெருக்கம் மிகுந்ததாகவும் இருந்திருக்க வேண்டும். அராபியர்கள் இந்நாட்டுக்கு அடிக்கடி வந்து போகின்றவர்களாகவும், அரசனுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்றித் தரக்கூடியவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள மன்னர்களுடன் அவர்களால் நெருக்கமான உறவை பேண முடிந்திருக்கிறது. நாட்டின் உட்பகுதிக்குள் சென்றுவர முடிந்திருக்கிறது. சிங்கள கிராமவாசிகளுடன் நட்புணர்வை அவர்களால் பேண முடிந்திருக்கிறது. இது சாதாரண விஷயமல்ல.
காலி துறைமுகத்தில் கப்பலை நிறுத்திவிட்டு படகுகள் மூலம் அவர்கள் களுத்துறைக்கு வந்து களுகங்கை ஊடாக அரபு வர்த்தகர்கள் இரத்தினபுரியை சென்றடைந்திருக்கிறார்கள். மன்னாருக்கு வந்த அரபு வர்த்தகர்கள் புத்தளம் வரை செல்வாக்கோடு வர்த்தக ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். மன்னார் அல்லது புத்தளத்தில் இருந்து கண்டி இராச்சியத்துக்கு அவர்கள் சென்று கண்டி அரசனோடு வர்த்தக உறவை பேணி வந்திருந்ததினால், களுத்துறையில் இருந்து களுகங்கையூடாக இரத்தினபுரிக்கு வரவு, இரத்தினபுரியில் இருந்து அடர்ந்த கானகத்தின் ஊடாக பயணித்து 'ஆதாம் மலை'யை சென்றடையவும் அவர்களுக்கு கண்டி அரசன் அனுமதி வழங்கியிருக்கிறான். ஏனெனில் சிங்களக் கிராமங்களுக்கு வெளியார் செல்வதும் வியாபாரத் தொடர்புகளை நேரடியாக மேற்கொள்வதும் அக்காலத்தில் சாத்தியமான விஷயமல்ல.
ஆதாம் மலை
ஆதாம் மலையைக் கண்டு பிடித்து அதில் ஏற வழியை உருவாக்கியவர்கள் அராபியர்களாகவே இருக்க வேண்டும். இலங்கையை கடல் வழியாக அண்மிக்கும் போது சிவனொளிபாதமலையின் கம்பீரத் தோற்றமே முதல் அடையாளமாகத் தெரிந்திருக்கிறது. மணல் குன்றுகளை மட்டும் பார்த்து வளர்ந்தவர்களை இம்மலைச் சிகரம் ஈர்த்ததில் அதிசயமில்லை. மலைச் சிகரத்தில் ஒரு பெரும் காலடிச் சுவடு பாறைப் பதிவாக இருப்பதை உள்ளுர் கிராமவாசிகளின் ஊடாகத் தெரிந்து கொண்ட அவர்கள் கப்பல் சங்கிலிகளைப் பயன்படுத்தி மலையில் ஏறி அப்பாதச் சுவட்டைப் பார்த்திருக்க வேண்டும்.

இதன் பின்னரேயே ஆதாம் மலைக் கதை தோற்றம் பெற்றிருக்கிறது. இம்மலையுடன் தொடர்பு கொண்ட புத்தர், இந்திரன், சிவன் கதைகள் எல்லாம் பின்னர் தோன்றியவையே. தமது மதத்தில் குறிப்பிடப்படும் ஆதாம் என்ற முதல் மனிதனின் காலடிப்பதிவே இது என நம்பிய அரபு வர்த்தகளுக்கு, ஆதாம் மலை சஞ்சாரத்தினால் இரண்டு நன்மைகள் கிட்டின. அவர்களால் சுலபமாக இரத்தினபுரிக்கும் உட்புற கிராமங்களுக்கும் வரக்கூடியதாக இருந்ததோடு சிங்கள கிராமவாசிகளுடன் நட்பைக் கட்டி எழுப்பவும் முடிந்தது. இரண்டாவதாக, இரத்தினபுரியை விட்டுச் செல்லும்போது அவர்களால் பெருமளவு யானைத் தந்தங்கள், இரத்தினக் கற்கள் வாசனைத் திரவியங்கள் மற்றும் கானக உயிரினங்கள், விலையுயர்ந்த மரங்கள் என்பனவற்றையும் ஒவ்வொரு தடவையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடிந்தது.

இலங்கைக்கு வந்த வெளிநாட்டாரிலேயே, உள்ளுர் மக்களுடன் சினேகபூர்வமாக, ஒத்தாசையுடன் கூடிய அணுகுமுறையையும் கொண்ட உறவைப் பேணி வந்த ஒரே இனம், முஸ்லிம் வர்த்தகர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் கரையோரப் பகுதிகளில் பண்டகசாலைகளை மட்டுமே அமைத்தார்கள். உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். கோட்டை அமைக்க வேண்டும், இத்தனை கிராமங்கள் வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை சிங்கள அரசர்களிடம் முன்வைக்கவில்லை. உள்ளுரில் நிகழ்ந்த போர்களில் படைவீரர்களாகவும், குதிரை வீரர்களாகவும், பராமரிப்பாளர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சிங்கள மன்னர்கள் நடத்திய போர்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை அந்நியப்படுத்தி பார்க்கவில்லை. தமக்கு கிடைத்த வளமாகவே முஸ்லிம்களைக் கருதி வந்தார்கள். இத்தனைக்கும் முஸ்லிம்களின் மதமும், பழக்க வழக்கங்களும் உடைகளும், பேசும் மொழியும் எவ்வகையிலும் சுதேசிகளின் பழக்க வழக்க, பாரம்பரிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதாக இருக்கவில்லை. நாம் அடிக்கடி சொல்வோமே, வேற்றுமையில் ஒற்றுமை என்று, அதைச் சரியாக நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்றைய முஸ்லிம்களே என்று குறிப்பிடுவது, மிகைக் கூற்றாகாது.

சிங்கள - முஸ்லிம், சிங்கள - தமிழ் உறவுகள் பற்றி இப்படி ஏராளமான தகவல்கள் உள்ளன. பல ஆய்வுக்கு உரியவை. கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ முடிந்தது ஏன்? அதற்கான அன்றைய சூழ்நிலைகள் யாவை? என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன. கண்டிக்கும் கேகாலைக்கும் இடையே மாவனல்லையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதற்கு, வணிகர்களாக கண்டி இராச்சியத்துக்கு வந்த இஸ்லாமியர்களை கண்டி மன்னர் மாவனல்லையில் குடியேற்றியதே காரணம் எனக் கூறப்படுகிறது. கொழும்பு அல்லது புத்தளத்தில் இருந்து கண்டிக்கு பொருட்களை ஏற்றி வரும் முஸ்லிம் வர்த்தகர்கள் மாவனல்லையில் பொருட்களை சேகரித்து வைக்கக் கூடிய மற்றும் இடையில் தங்கிச் செல்லக் கூடிய இடமாகவும் மாவனல்லை திகழ்ந்திருக்கிறது.

கோம்பை அன்வர் இலங்கையில் 'வேர் தேடும்' ஒரு பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு இம்மண்ணில் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

கோம்பையை விடுவோம். 'இலங்கை முஸ்லிம்களின் வரலாறு' என்ற ஒரு வரலாற்று நூல் இங்கே எழுதப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. முழுமையான ஒரு வரலாற்று நூல் தமிழில் எழுதப்பட்டிருக்குமானால் அது பற்றி அறிந்தவர்கள் எமக்குத் தெரிவிக்கலாம். ஆனால் கண்டி முஸ்லிம்கள் வரலாறு, மாத்தளை முஸ்லிம் வரலாறு என்பது போன்ற பிரதேசவாரியான தகவல் திரட்டுகள் நூல் மற்றும் கட்டுரை வடிவில் உள்ளன. ஆனால் இதை ஒரு ஆய்வாக மேற்கொண்டு அராபியர்களின் முதல் வருகை, சிங்கள மன்னர்களுடனான தொடர்புகள், அவர்களின் வழித்தோன்றல்கள் கிழக்கு பகுதிக்கு குடிபெயர்ந்த காரணம், இலங்கையின் ஆரம்பகால வணிகத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு, யுத்தங்களில் அவர்களின் பங்களிப்பு, பெரும்பாலான தொடர்புகள் சிங்கள மன்னர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் இருந்தாலும் பெருந்தொகையானோரின் தாய்மொழியாக தமிழாக இருப்பதன் காரணம் என்பது போன்ற பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?

இஸ்லாமிய இலக்கிய மாநாடு கொழும்பில் ஒரு தடவை நடத்தப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணிகளுடனான அல்லது அவற்றை ஆய்வுக்குட்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகள் அம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெறவும் போகின்றன. இவற்றிலாவது, இலங்கை முஸ்லிம்களின் தோற்றம், வணிகம், நல்லுறவு தொடர்பிலான காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நான் அறியவில்லை.

இரண்டு மணித்தியாலங்களுக்குள் கோம்பை அன்வர், தென்னாட்டுக்கு அராபியர் வருகை, வணிகம், இலக்கிய முயற்சிகள், இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றியெல்லாம் காட்சி வழியாக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். அவ்வாறான ஒரு முயற்சியை காட்சி ரூபமாக இல்லாவிட்டாலும் எழுத்து வழியாகவும் மேற்கொள்ளலாம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறான ஒரு முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான எல்லாத் தகுதியும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கிறது.

(தொடரும்)

No comments:

Post a Comment