Saturday, February 28, 2015

இமான் அண்ணாச்சியின் காதல் கருத்துகள்

“முதல் காதலுக்கு நோ சொல்லிவிட்டேன்"


நேர்காணல்:  மணி ஸ்ரீகாந்தன்


"காலுன்னு ஒரு இழவும் இல்லையடா,அந்த வேலையெல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..."
என்கிற தத்துவத்தை சொல்கிறது ஒரு கமல் படப்பாடல். ஆனால் காதல் புனிதமானதாகவும், உன்னதமானதாவும் கருதி உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் நம் தமிழ் சமூகத்தை சார்ந்த சில அமைப்புகள் "காதலே கூடாது, அது நம் சமூகத்தின் சாபக் கேடு" என்று சொல்லி அதற்கு எதிரான பிரசாரங்களிலும், போராட்டங்களிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதனால் இந்த காதலர் தினத்தில் அதன் உண்மை நிலையை அறிந்து வர நாம் சென்னை பக்கமாக ஒரு நடைப்போட்டோம்.

சென்னை கோயம்பேடு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாநகராட்சி பூங்காவில் வைத்து நமது இமான் அண்ணாச்சியை ரவுண்டு கட்டினோம்.

"காதலுக்கு நான் எதிரி கிடையாது.ஆனால் காதலர்கள் பொது இடங்களில் எல்லை மீறாமல் நடந்துக் கொண்டால் ரொம்பவும் நல்லது. மும்பையோடு ஒப்பிடும் போது தமிழ் நாடு ரொம்பவும் நல்ல நாடு. அங்கே கடற்கரைக் காதலர்கள் ரொம்ப கேவலமா நடந்துகிறாங்க, இந்த காதலர் தினத்தில் காதலியுங்கள், தப்பில்ல, ஆனா, வீட்டுக்கு தெரிஞ்சு உங்களுக்காக பார்த்து வச்சிருக்கிற பொண்ணையோ, பையனையோ காதலிங்க..! இளம் வயதில் காதல் செய்கிற வேகத்தில் ஊர் பேர் தெரியாம, யாரையோ காதலிச்சு பாதளத்துல விழுந்துடாதீங்க. குறிப்பா பேஸ்ஃபுக்ல காதலிக்கிறவங்க ரொம்ப கவனம்.

அப்படியும் காதல் வந்துட்டா அந்த விசயத்தை வீட்டுல சொல்லுங்க, அவங்க பார்த்து ஓகே சொன்னா கொண்டாடுங்க. காதலுக்கு ஒரு எல்லை இருக்கு அந்த எல்லைக்குள்ளேயே காதல் பண்ணுனீங்கன்னா எல்லோரும் சந்தோசப்படுவாங்க.

காதல் பொதுவானது காதல் பண்ணாத மனிதர்களே இல்லை.எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் நிச்சயம் கடந்து போயிருக்கும்.

சாதி, மதம், கருப்பு, சிவப்பு, பணக்காரன், ஏழை, அழகானவன், அழகற்றவன், உடல் ஊனமுற்றவன் என்று எதையும் பார்க்காது வருவதுதான் காதல். அதற்காக காதலுக்கு கண் இல்லை என்று சொல்லிவிட முடியாது. மனசு பார்த்து வருவதுதான் காதல" என்று தனது நீண்ட கருத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்ட இமான்,சில கடும்போக்குவாதிகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் காதலர்களை அடித்து விரட்டுவது,காதல் வாழ்த்து அட்டைகளை தீயிட்டு கொளுத்துவது போன்றகாரியங்களில் ஈடுபடுவது பற்றியும் தன் கருத்தைச் சொன்னார்.

"அவங்களுக்கு இந்த விசயத்தை சொல்லத் தெரியவில்லை, பொது இடங்களில் வரம்பு மீறாதீர்கள் என்ற விடயத்தை நான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுப்போல சொல்கிறேன். ஆனால் அவர்கள் அடிதடி என்று வரம்பு மீறுகிறார்கள். காதல் பண்ணுறவனை கிராமத்தை விட்டே தள்ளி வைக்கணும், காதலே கூடாதுன்னு சொல்லுறது தவறு. அதற்காக பீச்சிலும், படகு மறைவிலும், குடை மறைவிலும் பண்ணுவதை காதல் என்று நான் சொல்ல வரவில்லை அதற்கு வேறுப் பெயர் இருக்கிறது.
இன்னைக்கு இன்டர்நெட்டை எடுத்து காதலர் பற்றி தேடிப்பார்த்தால் பீச்சில் காதல்கள் நிர்வாணமாக இருக்கும் படங்கள்தான் கிடைக்கிறது.இதெல்லாம் எந்த தைரியத்தில் நடக்கிறது என்றுதான் தெரியவில்லலை.பார்க்கவே ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. இதற்குப் பெயர் காதல் அல்ல. இதனால்தான் காதல் என்றாலே பெற்றோர்கள் அலறுகிறார்கள்.நான் என்ன சொல்லுகிறேன் என்றால் உன்னுடைய தாகத்தையும்,வேகத்தையும் தணிப்பதற்கு பொது இடத்தை பயன்படுத்தாதே என்பதுதான்.

உடலும் உடலும் உரசுவதால் வருவதல்ல காதல், "இன்னைக்கு இந்த டிரஸ் நல்லா இல்ல, உங்களுக்கு பிங்க் கலர் ரொம்ப நல்லாயிருக்கும்" என்று நம்மீது ஒருவர் அக்கறை எடுத்து பேசும் போது 'அட நம்மீது இவரு ரொம்ப அக்கறை எடுத்துக்கிறாரேன்னு' நீங்க நினைப்பீங்களே, அப்போ வருவது காதல்தான்" என்று சொல்லும் அண்ணாச்சிக்கும் நிறையவே காதல் அனுபவம் இருக்கும்போல. அது பற்றி அவரிடம் கேட்டோம். "அய்யய்யோ நம்மள விடுங்க நான் இருந்த கஷ்ட்ட காலத்துல எனக்கு எப்படிங்க காதல் வரும்,?"ஆனா நமக்கும் ஒரு காதல் வந்திச்சுங்க. சத்தியமா நான் அந்தப் பொண்ண நினைக்கலை அந்தப் பொண்ணுதான் என்னை ஒருதலையாக காதல் பண்ணிச்சு. எனக்கு அதுப்பற்றி ஒண்ணும் தெரியாது. அந்தப் பொண்ணுதான் என்னை காதலிக்கிறதா சொல்லிச்சு! ஆனா அந்தப் பொண்ணு பெரிய பணக்கார இடத்தைச் சேர்ந்த பொண்ணு. அதனால எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ரொம்ப தூரம்னு எனக்குத் தெரியும். நான் அப்போ மளிகை கடையில வேலை செய்திட்டு இருந்தேன். அந்தப் பொண்ணோட விருப்பத்தை தெரிஞ்சிக்கிட்ட நான் அதை அடியோட மறுத்திட்டேன். "இப்போ உனக்கு வந்திருக்கிற காதல் வயசுக் கோளாறுல வந்திருக்கு! இது நமக்கு சரிப்பட்டு வராதும்மா என்னோட பாதையே வேற" என்று சொல்லிட்டேன்.

அதோட அந்தக் காதல் முடிஞ்சிப் போச்சு இப்போ அந்தப் பொண்ணு திருமணம் முடித்து சந்தோசமா இருக்கு. நான் எடுத்த முடிவுக்குப் பெயர்தான் பகுத்தறிவு. நல்லது ,கெட்டது எது என்பதை அறிந்து செயல்ப்பட்டால் வாழ்க்கை வசந்தமாக மாறிவிடும்" என்று ரொம்பவே ஜாலியாக பேசும் அண்ணாச்சி தமது திருமணம் நிச்சயிக்கப்பட்டதுதான் என்கிறார்.

"என் அண்ணன் பணம் வாங்கி வருவதற்காக என்று சொல்லி  ஒரு வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். பொண்ணுப்பார்க்க போறோம்ன்னு சொன்னா நான் வர மாட்டேன்னு அவருக்குத் தெரியும். ஏன்னா எனக்குன்னு ஒரு கொள்கை இருந்தது. ரொம்ப கஷ்டப்படுற குடுப்பத்துல இருந்து பெண் எடுக்க வேண்டும். அதுவும் பத்து பைசாக் கூட சீதனம் வாங்காமல் கல்யாணம் செய்திட்டு. சென்னைக்கு அழைத்து வந்து காய்கறி வியாபாரம் செய்து அதுல டெய்லி ஐம்பது, நூறுன்னு மிச்சம் பிடித்து என்னோட முயற்ச்சியில அவளுக்கு நூறு பவுண்ல நகை செய்துப் போட்டு மத்தவங்க நம்மள பார்த்து மெச்சுற அளவுக்கு வாழ்ந்துக் காட்டணும்னு நினைத்திருந்தேன். அதனால அண்ணன் எனக்கு விசயத்தை சொல்லவில்லை. அந்தப் பொண்ணுதான் எனக்கு டீ எல்லாம் போட்டு கொடுத்திச்சு. பிறகு அண்ணனோடு கிளம்பி வரும்போதுதான் அவரு விசயத்தை சொன்னாரு அது வரைக்கும் எனக்கு விசயமே தெரியாது. அந்தப் பொண்ணு டீச்சர் வேலை செய்யுது. அதோட அவங்க கொஞ்சம் வசதியானவங்க அதனால எனக்கு அந்த சம்பந்தம் பிடிக்கவேயில்லை ஆனால் என்னை சுற்றியுள்ள நண்பர்கள், உறவுக்காரங்க எல்லாம் "அவங்க ரொம்ப நல்லக் குடும்பம் அந்தப் பொண்ண கட்டிட்டா நீ ரொம்ப நல்லா இருப்ப" என்று அட்வைஸ் பண்ணியதில் மனசு மாறி கடைசியில நானும் அந்தப் பொண்ண கட்டிக்க சம்மதிச்சேன்.
உண்மையிலேயே எனக்கு அமைஞ்ச பொண்ணு ரொம்ப தங்கமானவள். அவள் பெயர் ஆக்னஸ் ப்ரியா.

முப்பத்தைந்தாயிரம் ரொக்கமும், இருபத்தைந்து பவுண் நகையோடும் வந்தாங்க. அதுதான் எனக்கு அப்போ கொடுக்கப்பட்ட சீதனம்.பிறகு நான் வறுமையில் வீழ்ந்தப்போது இருபத்தைந்து பவுண் நகையையும் எனக்காக  கழட்டிக் கொடுத்தாங்க, இப்படி எல்லாப் பொண்ணுங்களும் பண்ண மாட்டாங்க, இப்போ நான் கொஞ்சம் வசதியாக வந்தப்பிறகு அவளுக்கு ஐம்பது பவுணில் நகை செய்து போட்டிருக்கேன். அவள் எனக்கு செய்த உதவிக்கு அது போதாது இன்னும் நூறு பவுணில் நகை செய்து போடணும" என்று உறுதியாக வாக்குறுதி தரும் இமான் அண்ணாச்சி, இன்னும் தன் மனைவியைத்தான் உயிருக்கு உயிராக லவ் பண்ணுவதாகவும். அதுதான் உண்மையான லவ் என்றும் சொல்லி காதலர் தின வாழ்த்துக்கள் கூறி விடைப்பெற்றார்.

இருள் உலகக் கதைகள்

காதலியைத் தேடி வந்த நிஷ்டூர ஆவி

 

 வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை


கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

அனோமாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. இருந்தாலும் கட்டுக்கலையாத உடல்வாகு பார்ப்போரை கிறங்கடிக்கத்தான் செய்யும். எதுராகலை பிரதேசத்தில் வசித்து வரும் அனோமாவின் மீது வயசுப் பயலுங்களுக்கு ஒரு கண் இருந்ததில் வியப்பிருக்க முடியாதுதான்.

அவள் வசிக்கும் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது ஒரு பாலர் பாடசாலை. தினமும் காலையில் மகளை அங்கே விட்டு விட்டு வரும் அனோமா, பிறகு பிற்பகலில் பாடசாலைக்குச் சென்று மகளை அழைத்து வருவாள். அன்றும் வழமைபோல மகளை அழைத்து வர பாடசாலை நோக்கி நடந்தாள் அனோமா.
வழமைக்கு மாறாக அன்று அந்த சிறிய குறுக்குப் பாதை ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. அலரி மலர்களின் தோட்டமாகக் காட்சியளிக்கும் அந்த 'கெரகோப்பு' (சுடுகாடு) பார்க்க ரம்மியமாக இருந்தாலும் அனோமாவிற்கு உள்ளுக்குள் மெல்லியதாக ஒரு அச்ச உணர்வு எட்டிப் பார்க்கத்தான் செய்யும். அலரி பூக்களின் வாசனையை நுகர்ந்த படி இரண்டடி நடந்த போது அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பாதைக்கு எதிர்ப்புறத்து மேட்டு நிலத்தில் புதர் மண்டிக் கிடந்த பற்றைக் காட்டிலிருந்து ஒரு கருப்பு நிற மிருகம் புறப்பட்டு மின்னலென பாதையைக் கடந்து மறைந்தது. அது பன்றியா, மாடா, நாயா என்பதைக் கூட அவளால் கணிக்க முடியவில்லை. அனோமாவின் இதயம் திக்திக் என அடித்துக் கொள்ள பிரம்மை பிடித்தவள் போல ஸ்தம்பித்துப் போனாள். பிறகு சுதாகரித்துக் கொண்ட அனோமா, அது பன்றியாகத்தான் இருக்கும் என்று தனக்குத் தாமே சமாதானம் சொல்லிக் கொண்டு நடக்க முற்பட்டபோது, அவள் தலையில் விழுந்தது ஓர் அலரிப் பூ. நடுவகிட்டில் நின்ற பூ பின்னர் புரண்டு அவளின் தோளைத் தடவி விட்டு அவளின் பாதத்திற்கருகில் விழுந்தது. அந்தப் பூ பார்க்க அழகாக இருக்கவே கீழே குனிந்து எடுக்க முயன்றாள். ஆனால் அந்தப் பூ இரண்டடி நகர்ந்து போனது. பூ காற்றினால் தான் அடித்துச் செல்லப்படுவதாக உணர்ந்த அவள் மீண்டும் அந்தப் பூவை எடுக்க முயற்சி செய்தபோது மீண்டும் அந்தப்பூ. சிறிது தூரம் நகர்ந்தது. அனோமாவிற்கு அப்போதுதான் அந்த விபரீதம் புரிந்தது. அடுத்த நிமிடமே அவள் உடல் வெலவெலத்துப்போய் மூர்ச்சையாகி நிலத்தில் சரிந்தாள்.

அனோமா மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட சிலர் அவளை வீட்டில் கொண்டு வந்து கிடத்தினார்கள். பாதுக்கை ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றும் அனோமாவின் கணவன் பியந்த பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அப்போது அனோமா எழும்பி இயல்புக்கு வந்துவிட்டாள்.

பியந்தவின் தகப்பனார் சிரிசேன அந்தப் பகுதியில் உள்ள ஒரு பௌத்த தேவாலயத்தில் பூசகராக இருப்பவர். அதனால் தமது மருமகளை காத்து கறுப்புத் தீண்டி விட்டிருக்கலாம் எனக் கருதிய அவர், மகன் வீட்டுக்கு வந்தார். தன் மருமகளுக்கு மந்திரித்த கயிற்றை கையில் கட்டி விட்டார். எதுவானாலும் இனி சரியாகி விடும் என்று சொல்லி விட்டுப் போனார் சிரிசேன. அதனால் தன் மனைவிக்கு வந்திருக்கக் கூடிய பிரச்சினை உடனடியாக நீர்த்துப் போய் விட்டதாகக் கருதி மன நிறைவு அடைந்தான் பியந்த. அடுத்த சில நாட்கள் விக்கினமின்றி கழியவே, அனோமாவும் ஏனையோரும் அந்த பூ சம்பவத்தை மறந்து விட்டனர். ஆனால் தினங்கள் கழியக் கழிய அனோமாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நள்ளிரவில் எழுந்து கூச்சல் போடத் தொடங்கினாள். கை கால்களை முறுக்கி பற்களை நறநறவென கடித்தபடி வீட்டில் உள்ளோரை குலை நடுங்கச் செய்தாள். இதைக் கண்டு பியந்த நன்றாகவே பயந்து போனான்.
தமது மனைவிக்கு வந்த பிரச்சினையைத் தீர்க்க தனக்குத் தெரிந்த மந்திரவாதிகளை அழைத்து வந்தான். அவர்களும் பல்வேறு பரிகாரங்களைச் செய்தனர். பணம் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினர். ஆனால் இந்தப் பரிகாரங்களும், தொவில்களும் அனோமாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இறுதியாக அவர் வீரசிங்கம் பூசாரியைப் பற்றி கேள்விப் படவே, அவரிடம் வந்து தன் பிரச்சினையைச் சொல்லி புலம்பியிருக்கிறார். வீரசிங்கம் அவருடன் பியந்த வீட்டை சென்றடைந்தார். வாய் கொப்பளித்து  சீனி பிளேன்டீ குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வீரசிங்கம், கொடியில் இருந்து ஒரு தளிர் வெற்றிலை பறித்து காம்பு கிள்ளி புகையிலை பாக்குடன் வாயில் அடக்கிக் கொண்டார். புளிச்சென எச்சில் துப்பி, சரி, காரியம் பார்க்கலாம் என்றார் பியந்தவிடம். சமையலறையில் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த அனோமாவை வாசல் படியில் இருந்தே உற்றுப் பார்த்தார் வீரசிங்கம். திருஷ்டிகளைப் பார்த்து பார்த்து பழகிப்போன அந்த எக்ஸ்ரே கண்களுக்கு அந்தப் பெண்ணுக்குள் ஒரு கெட்ட ஆவி குடிகொண்டிருப்பது பளிச்சென புலப்பட்டது.

"நாளையே பேயோட்டும் வேலையை ஆரம்பித்து விடலாம் மஹாத்தயா" என்றவர் பூஜைக்கான ஏற்பாடுகளை பியந்தவிடம் விவரமாகச் சொல்லி, பூஜை பொருட்களுக்கான ஒரு லிஸ்டையும் தந்தார். அனோமாவின் வீட்டில் 'தொவி'லுக்கான ஏற்பாடுகள் அப்போதே ஆரம்பமாகின.

மறுதினம் தமது சகாக்களோடு அனோமாவின் வீட்டுக்குச் செல்ல வீரசிங்கம் பூசாரி தயாராகிக் கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"பூசாரி, அனோமா செய்கிற சேட்டை தாங்க முடியலை... ஆகவே எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக வாங்க சாமி" என்று அழாக்குறையாக வேண்டிக் கொண்டார் அனோமாவின் கணவன்.

வீரசிங்கம் மறுநாள் சகாக்களோடு அந்த வீட்டைச் சென்றடைந்தார். வீரசிங்கத்தின் சகாக்கள் அனோமாவின் வீட்டில் பூஜைப் பொருட்களை முறையாக அடுக்கி சக்கர வியூகம் அமைத்த அடுத்த நிமிஷம் வீரசிங்கம் அதில் நடுநாயகமாக அமர்ந்து தமது குலதெய்வத்தை நினைத்து கும்பிட்டார். அப்போது அவரின் உடல் சிலிர்த்தது. அடுத்த சில நிமிடங்களில் அனோமாவை அழைத்து வந்து அச்சர கோட்டிற்கு எதிரே அமர வைத்தார்கள். வீரசிங்கம் இஷ்ட தேவதைகளை அழைத்து அனோமாவை உடம்பிற்குள் குடியிருக்கும் துர்தேவதைகளை கண்டுபிடிக்க கட்டளை பிறப்பித்தார். ஆனாலும் அவரின் எந்த வேலையும் அங்கே எடுபடவில்லை. அனோமா சாதாரணமாகவே இருந்தார். எந்த மாறுதலும் அவளிடம் தென்படவில்லை. வீரசிங்கத்தின் பலமணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.

அப்போது நேரம் நள்ளிரவை கடந்து விட்டிருந்தது. வீரசிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஞாபகம் வந்தவராக திடீரென்று எழுந்த வீரசிங்கம் அனோமாவின் வீட்டின் பூஜை அறைக்குள் நுழைந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது! அங்கிருந்த புத்தர்சிலை பாதத்தில் 'அட்டப் பிரிக்கர'என்று அழைக்கப்படும் பிச்சை பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. தமது மந்திர வேலைகள் பலிக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்பதை புரிந்து கொண்ட அவர், உடனடியாக தனது மாந்திரிக வேலைகளை வீட்டுக்கு வெளியே செய்யத் தீர்மானித்தார். அடுத்த அரைமணி நேரத்தில் வீரசிங்கத்தின் சகாக்கள் அந்த வீட்டுக்கு வெளியே
பந்தல் போட்டு சக்கர வியூகத்தை அமைத்து அதில் வீரசிங்கத்தை அமர வைத்தார்கள்.

அதன் பிறகு பூசாரியின் மந்திர உச்சாடனங்கள் அந்தப் பகுதியை அதிர வைத்த போது அனோமா பேயாட்டம் போடத் தொடங்கினாள். முதலில் அவள் உடம்பிலிருந்து ஒரு கிழவியின் ஆவியே வெளி வந்து பேசியது.

"நான் ஒரு நாள் இங்கிரிய சந்தைக்குப் போய் மீன் வாங்கிட்டு வரும்போது கல் தடுக்கி கீழே விழுந்தேன். ஆசையாக வாங்கி வந்த மீனை சமைச்சு சாப்பிடாமலேயே என் உயிர் பிரிந்தது. அதனால் சாப்பாடு ஆசையால்தான் இவள் உடம்பில் குடியிருக்கேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க" என்று கிழவி அரற்றினாள்.

கிழவி இதைச் சொல்லி அடங்கவும் இரண்டாவதாக ஒரு இளைஞனின் ஆவி வெளிப்பட்டது. அது தனது பாட்டிக்கு துணையாக இருப்பதற்காகவே இந்த உடம்புக்குள் நுழைந்ததாகவும் பாட்டி போகும் போது தானும் கிளம்பி போய் விடுவதாகவும் பூசாரியிடம் ஒப்புதல் அளித்தது. அதனால் வீரசிங்கத்திற்கு அந்தப் பேய்களை விரட்டுவது இலகுவாகிப் போனது.

ஆனால் அனோமா ஆட்டத்தின்போது காட்டும் ஆவேசம், பற்களை கடித்து உடம்பை முறுக்குவதைப் பார்த்தாள் மிகவும் ஆபத்தான ஒரு தீய சக்தி அவளின் உடம்பிற்குள் மறைந்திருப்பதையும் அது தனக்கு பூச்சாண்டி காட்டுவதையும் தனது மந்திர சக்தியால் கண்டு கொண்டார் பூசாரி. அந்தத் தீய சக்தியை வெளியே கொண்டு வர சில சக்தி வாய்ந்த தெய்வங்களை உதவிக்கு அழைக்க வேண்டியிருந்தது. அப்போது அனோமா அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தாள். பூசாரியை வெறித்தனமாக முறைத்துப் பார்த்த அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால் அவள் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அனோமா வாயில் இருந்து காற்று வந்ததே தவிர சத்தம் வரவில்லை. பூசாரி மிகவும் குழம்பிப் போனார். பிறகு பூசாரி போட்ட மிரட்டல் சத்தத்திற்கு மிரண்டு போன அவள் மண்ணில் சிங்கள மொழியில் எழுத ஆரம்பித்தாள். 'டேய் பூசாரி! என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா? நான் தான்டா ரங்க! என்ன உன்னால ஒண்ணும் பண்ண முடியாதுடீ!' என்று அனோமா நிலத்தில் எழுதியதை படித்த பூசாரியும் ஊர் வாசிகளும் அதிர்ந்து போனார்கள்.

"நீ எதற்காக இந்தப் பெண்ணோட உடம்பில் தங்கியிருக்க? உன்னால் பேச முடியாதா?" என்று பூசாரி கேட்டதற்கு, 'என்னோட முறைப் பொண்ணுதான் இந்த அனோமா. நான் அவளை ஒரு தலையாக காதலித்தேன். ஆனால், நான் என் காதலை அவளிடம் சொல்வதற்கு முன்பாகவே அவளை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். அதனால் நான் மனம் விரக்தியடைந்து இறப்பர் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டேன். அப்படி நான் தொங்கும் போது என் கழுத்து உடைந்து விட்டது. அதனால் என் பேச்சு போய் விட்டது' என்று ரங்க எழுதியதை ஊர் மக்கள் உண்மைதான் என்றும் ஆனால் அனோமாவை அவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்த விசயம் யாருக்கும் தெரியாது என்றும் பூசாரியிடம் கூறினார்கள். ரங்கவின் கொட்டத்தை அடக்கி அந்த ஆவியை வெளியேற்றுவதற்கு பூசாரி மேற்கொண்ட பிரயத்தனங்கள் பலனளிக்கவில்லை. ஆவி வெளியேற சம்மதிப்பதாக இல்லை. 'நான் போகும் போது அனோமாவைக் கூட்டிட்டுத்தான் போவேன்' என்பதில் அது உறுதியாக இருந்தது.

முதல் நாள் இரவு தொடங்கிய பேயோட்டும் வேலை, அடுத்த நாள் பகல் 12 மணியை கடந்த பின்னரும் ரங்கவின் துஷ்ட ஆவி அனோமாவை விடுவதாக இல்லை. பூசாரியும் களைத்துப் போனார். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் பூசாரி திணறிக் கொண்டிருந்தார்.

"அம்மா, அப்பா, எப்படி சுகமா இருக்கீங்களா? நான் தினமும் நம்ம வீட்டுக்கு முன்பாக இருக்கிற ரம்புட்டான் மரத்தில்தான் உட்கார்ந்திருப்பேன். நான் சாகிறதுக்கு முன்னர் இருபதாயிரம் சீட்டு பணம் எனக்குக் கிடைத்தது. அதை அவசர தேவையா கேட்ட என் நண்பன், டேவிட்டுக்கு கொடுத்தேன். அவன் அதை திருப்பிக் கொடுத்திட்டானா?" என்று ரங்க எழுதியதை வாசித்த அவன் பெற்றோர்கள், கண்ணீர் சிந்தியபடி 'அவன் அதில் பத்தாயிரம்தான் கொடுத்தான். மிச்சத்தை இன்னும் தரவில்லை' என்று சொன்னார்கள்.

கூட்டத்தில் நடக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேவிட்டுக்கு உடல் உதறல் எடுத்தது. அடுத்த நிமிடம் அனோமா அவனை சுட்டிக்கட்டி அவனை அழைத்த போது அவன் குலை நடுங்கிப் போனான். பின்னால் இருந்தவர்கள் அவனைப் பிடித்து ஆவியிடம் தள்ளிவிட நடுங்கியபடி வந்தவனை முறைத்த ஆவி ,

"நீ சீக்கிரமே அந்த பணத்தை என் அம்மா, அப்பாவிடம் கொடுத்து விடு, இல்லையேல் உன்னை சும்மா விடமாட்டேன், அம்மா நான் கட்டிய டொய்லட் பாதியில் அப்படியே கிடக்கு அதை டேவிட் தரும் பணத்தைக் கொண்டு கட்டி முடித்து விடுங்கள்' என்று ரங்கவின் ஆவி எழுதியதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள்.

அந்த நேரம் வீரசிங்கத்தின் மனதில் ஒரு யோசனை மின்னலடித்தது. அவர் ரங்கவின் பெற்றோரை ஒரு பக்கமாக அழைத்து அவனது பலம், பலவீனம் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல உணவிலும் சாராயத்திலும் விருப்பு கொண்டவன் என்பதை அறிந்து கொண்ட அவர், உணவும், சாராயமும் கொடுத்து ரங்கவை மடக்க திட்டமிட்டார். உடனடியாக அவனுக்கு பிடித்த உணவு அயிட்டங்கள் வரவழைக்கப்பட்டு பெரிய படையல் போடப்பட்டது. பெரிய மெகா போத்தலில் கள்ளும், சாராயமும் வைக்கப்பட்டது. ரங்கவின் ஆவி அந்த உணவு குவியலை சில நிமிடங்களிலேயே கபளீகரம் செய்து முடித்திருந்தது. இரண்டரை லீட்டர் மெகா போத்தலில் இருந்த கள்ளை ஒரே மூச்சில் குடித்த விதம் கூடியிருந்தவர்களை அச்சத்தில் உறைய வைத்தது. ரங்க சாப்பாட்டில் மெய் மறந்து இருந்த நேரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூசாரி, ரங்கவின் வீட்டிற்கு முன்னாள் இருந்த ரம்புட்டான் மரத்தை வெட்டி சாய்க்கச் செய்தார்.
அந்த வேலையை அவரின் சகாக்கள் கச்சிதமாக முடித்திருந்தார்கள். அனோமாவின் வீட்டிற்கு முன்னாள் மரக் கட்டைகளை அடுக்கி பெரிய தீ வளர்க்கப்பட்டிருந்தது. உண்ட மயக்கத்தில் இருந்த ரங்கவின் ஆவியை மிரட்ட ஆரம்பித்த பூசாரி அனோமாவின் உடம்பை விட்டு ரங்காவின் ஆவி போகாவிட்டால் தீயில் தள்ளி எரித்து விடுவதாக எச்சரித்தார். இனிமேலும் தமது வேலைகள் பூசாரியிடம் பலிக்காது என்பதை புரிந்து கொண்ட அந்த தீய ஆவி, பூசாரியிடம் மண்டியிட்டது. அந்த சில நிமிடங்களில் அனோமாவின் உச்சந்தலை மயிர் கத்தரிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டது. ரங்கவின் ஆவியோடு, இருந்த மற்ற இரண்டு ஆவிகளின் கதையையும் பூசாரி முடித்தார். இரண்டு நாள் வேலை ஒரு வழியாக முடிந்து விட்டதை நினைத்து அப்பாடா என பூசாரி பெருமூச்சு விட்டார். ஆவியை புதைக்கும் பரிகார வேலைகளை சுடுகாட்டில் முடித்து விட்டு அனோமாவின் வீட்டிற்கு பூசாரி வந்த போது மயக்க நிலையில் இருந்த அனோமா நினைவு திரும்பி எழுந்திருந்தாள். தனது கணவனிடம்,

"எனக்குச் சரியான பசி, உயிர் போகுது... உடனே சாப்பாடு வேணும்" என்று கேட்க, அவளின் கணவன் ஆச்சர்யத்தோடு பூசாரியை பார்த்தான்.

அவ்வளவு உணவையும் மதுவையும் கபளீகரம் செய்தது ரங்க. இப்போ பசி எடுப்பது அனோமாவிற்கு. அவளுக்கு உணவை கொடுங்கள் பாவம் என்றார் வீரசிங்கம்.

இப்போது அனோமா கணவர், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதாக பூசாரி சொல்கிறார்.

Thursday, February 19, 2015

தேவதாசி வரலாறு -4

பல்லவர் காலத்தில் எழுச்சி பெற்ற தேவதாசிகள்


அருள் சத்தியநாதன்


சமூகத்தில் பரத்தன்மை, மிகப் பண்டைய கால முதலே இருந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவராக வாழ வேண்டும் என்ற கோட்பாடு மிகப் பிற்காலத்திலேயே வழக்கத்துக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் பரவிய பின்னர் வந்த சிந்தனை என்றும் சொல்லலாம். ஏனெனில், பாலியல் தொடர்பு சம்பந்தமாக அம்மதம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பாவத்துக்கு பெண்ணே காரணம் என்று போதித்தது. பிரம்மச்சரியத்தை ஊக்குவித்தது. காமம் சாத்தானின் வேலை எனப் போதித்தது.

எனினும் ஒரு ஆணுடன் அல்லது பெண்ணுடன் மாத்திரமே காலம் முழுவதும் கழிக்க வேண்டும் என்ற விதி, உண்மையில் மனித இயல்புடன் ஒத்துப்போவதாக இருக்கவில்லை. எனவே களவொழுக்கம் பிறந்தது. மனைவி இருக்கையில் அவள் அறியாமல் பிற பெண்களுடன் ஆண் தொடர்பு வைத்துக் கொண்டான். காலப் போக்கில் அதற்கு சமூக அங்கீகாரமும், கௌரவமும் கிடைத்தது. ஆண்களுக்கு இந்த 'சேவை'யை ஆற்ற ஒரு தனிக்குலமும் தோன்றியது. பிற்காலத்தில் இதை ஒரு கலையாகவும் சிருங்கார சுவையுடனும் முன்னெடுத்துச் செல்ல இன்னொரு சமூகப் பிரிவு கடவுள் பெயரால் உருவானது. அதுதான் தேவதாசி குலம்.

இங்கே இன்னொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் போதாது என ஆண் வெளியே சென்றது போலவே திருமணமான பெண்ணும் பிற ஆண்களை நாடிச் சென்றாள். ஆனால் இது குடும்ப மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இறுதிவரை சமூக அங்கீகாரம் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. நாகரிக முதிர்ச்சியும் சுதந்திரமும் கொண்ட மேற்கத்திய சமூகங்களினாலும், இன்றைக்கும்கூட பெண் கணவன் அல்லாத பிற ஆணுடன் பாலியல் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான எளிமையான காரணம், ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் கணவனுக்கு 'துரோகம்' செய்ய அனுமதி கிடையாது என்பதுதான்.

ஒரு பெண் கணவனுடன் மாத்திரமே பாலியல் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டுக்கு எதிராகக் கிளம்பிய பெண்ணின் சமூகக் குரலே தேவதாசி குலம் இந்தியாவில் தோன்றுவதற்குக் காரணம் என்ற உளவியல் காரணத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தேவதாசி குடும்ப வரையறைக்குள் வரமாட்டாள். அவள் திருமணம் செய்வதில்லை. ஆனால் எவரை வேண்டுமானாலும் கணவரைப் போல கருதி வாழ முடியும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும். அக்குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்களே தவிர, தந்தை வழியாக அல்ல. பரத நாட்டியத்தை பரத முனிவர் தோற்றுவித்தார் என்றும் அது தெய்வீகக் கலை என்றும் வர்ணிக்கப்பட்டாலும் இவை ஆதாரமற்ற கட்டுக்கதைகளே. விநாயகர் தந்தத்தை  ஒடித்து பாரதக்கதை எழுதினார் என்றும் பாற்கடலைக் கடைந்து அமுது எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுவதில் எவ்வளவு உண்மை இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையே, பரதம் தெய்வீகக் கலை என்பதிலும் உள்ளது. பரத்தையர் ஆடிய நடனம் என்பதாலேயே அதற்கு பரத நாட்டியம் என்ற பெயர் வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தேவதாசி முறை உச்சத்தில் இருந்தது எனக் கூறப்படுகின்ற போதிலும் அதற்கு முன்னர் பல்லவர் காலத்திலும் இம்முறை பரவலாக நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

தஞ்சை பெரிய கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் இறை சேவைக்காக தானமாக வழங்கப்பட்டனர். திருப்பள்ளி எழுச்சி முதல் இரவு நடை சாத்தப்படுவது வரையிலான கோவில் காரியங்களில் இக்கோவில் மகளிர் பங்கெடுத்துக் கொண்டனர்.

இப்பெண்கள் ஆடிய நடனம் ஒரு ஒழுங்குமுறை கொண்டதாக இருக்கவில்லை. இன்றைய பரத நாட்டிய நடனமணிகள் அணியும் ஆடைகளைப் போன்ற ஆடைகளை அவர்கள் அணியவில்லை. அரசனையும், கோவிலுக்கு வரும் பிரதானிகளையும் பக்தர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஆட வேண்டியிருந்தது.

ஆண்டவனுக்கு அளிக்கப்படும் எதுவும் மாசு மறுவற்றதாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் பூக்கள், பறவைகள் பறப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது பனிப்புஷ்பயங்களாக. நெருப்பு வடிவில் மோசேசுக்கு காட்சிதரும் கடவுள், 'உன் காலணிகளைக் கழற்றிவிட்டு வா' என்று கூறியதாக பைபிளில் உள்ளது. இந்த வகையிலேயே பூப்பெய்திய பெண்களை 'புது மலர்களாக' அரசர் காலத்தில் 'ஆண்டவன் சேவை'க்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விலை மகளிர் என்ற பதம் பரத்தையர்களைக் குறிப்பது போலவே தேவதாசியர் ஆடல் மகளிர் என அழைக்கப்பட்டனர்.

தென்னாட்டு கோவில் வரலாற்றில் தேவதாசியர் கோவில்களில் நடனமாடுவது நீண்ட கால பாரம்பரியம் கொண்ட வழக்கம். இன்றைக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்துவதும், குத்து நடனத்துக்காக பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. திறப்பு விழாக்கள், வைபவங்கள், விளம்பரங்களில் பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். எந்த மனநிலையில் ஆண்கள் அல்லது ஆதிக்க சக்தியினர் பெண்களைப் பயன்படுத்துகிறார்களோ அவ்வாறே அன்றும் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த மனநிலையை புரிந்து கொண்டால் தேவதாசி மரபு எப்படி, ஏன் உருவாகியிருக்க வேண்டும் என்பதை எளிதாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தென்னாட்டை எடுத்துக் கொண்டால் சங்க காலத்தில் இருந்து ஆடல் மகளிரை சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான சான்றுகள் உள்ளன. இவ்வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கிறது. அஸாமில் 'நாடிஸ்' என்றும், மகாராஷ்புரத்தில் 'பாசவி' என்றும், உத்தர பிரதேசத்தில் 'பாவினி' என்றும் ஒரிசாவில் 'மகிரி' என்றும், கர்நாடகத்தில் 'சூலி' என்றும், ஆந்திராவில், 'விலாசினி', 'மாதங்கி', 'கூலி' என்றும், கேரளாவில் 'மகாரிஷ்' என்றும் கோவாவில் 'நாயகின்' என்றும் தேவதாசியர் அழைக்கப்படுகின்றனர்.

அக்காலத்தில் இந்து கோவில்களில் மட்டுமல்லாது பௌத்த கோவில்களிலும் தேவரடியார் சேவை புரிந்து வந்திருக்கிறார்கள். குஜராத்தில் நான்காயிரம் விகாரைகளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடல் மகளிர் பணியாற்றி வந்ததாகவும் அவர்கள் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியதாகவும் சான்ஜிகுவா என்ற சீன யாத்திரிகர் பதிவு செய்திருக்கிறார்.

கி. பி. 1024 இல் கஜினி முகமது டில்லி சோமநாதர் ஆலயத்தை சூறையாடியபோது அங்கே 500 நடன மகளிர் இருந்ததாக ஒரு செய்தி உள்ளது.
சுசீந்திரம் கோவிலில் 72 தேவதாசியர் பணியாற்றி வந்ததாக புக்னன் என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். திருச்செந்தூரில் 121 தேவதாசி குடும்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் மறக்குடித்தெரு என்ற வீதியில் வசித்து வந்ததாகவும் அக்கோவிலின் தாமிரப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். வைசாலி மன்னர் பல்லால தேவர் காலத்தில் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் தேவதாசியரே வசித்து வந்ததாகவும், ஆந்திராவின் நாகலாபுரத்தில் நூற்றுக்கணக்கான தேவதாசியர் வாழ்ந்து வந்தனர் என்றும் 'தேவதாசியர் மரபு' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழன் காலத்திலேயே தேவரடியார் மரபு தமிழகத்தில் தோற்றம் பெற்றது என்று கூறப்படுகின்ற போதிலும் வரலாற்றாய்வாளர்கள் அதை மறுக்கின்றனர். பல்லவர் காலத்தில் இருந்தே தேவரடியார் மரபு கோவில்களில் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
பல்லவர் காலத்திலும், ராஜராஜசோழன் காலத்திலும் அதன் பின்னரும் இந்த ஆடல் மகளிர் இரு பிரிவினராக அறியப்பட்டனர். ஒரு பிரிவின் பெயர் ராஜதாசி. மற்ற பிரிவு தேவதாசி. அரசவையில் நடனமாடும் பெண்கள் தேவதாசிகளாக இருந்தாலும் அவர்கள் ராஜதாசிகள் என்றே அழைக்கப்பட்டனர். ராஜதாசியாவதற்கு நல்ல நடன தேர்ச்சியும் குரல்வளமும் அழகும் இருக்க வேண்டும். ஆனால் அரசன் முன்னிலையில் நடனமாடும் பெண்கள் கோவில்களில் நடனமாட முடியாது என்றொரு கட்டுப்பாடு இருந்தது. அன்றைய சமூக அமைப்பில் கடவுளுக்கு அடுத்த இடத்தில் அரசன் இருந்ததால் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் ஆண்டவன் முன்னிலையில் நடனமாட முடியாது என்ற கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.

பல்லவர் காலத்தின் பின்னர் தென்னாட்டில் களப்பிரர் வருகை இடம் பெறுகிறது. களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனக் குறிப்பிடுவார்கள். சமயம் நலிவுற்றதால் இருண்ட காலம் எனக் குறிப்பிடப்படுவதாக சொல்லப்பட்டாலும் இதற்கு ஒரு எதிர்வாதமும் இருக்கிறது.

கன்னடர்களே களப்பிரர் என அழைக்கப்பட்டனர். தமிழகத்தை களப்பிரர் மன்னர்கள் ஆட்சி செய்தபோது சைவ, வைணவ சமயங்கள் நலிவுற்றன. களப்பிரர் அரசர்கள் பௌத்த மற்றும் சமய சமயங்களையே ஆதரித்தனர். அவை தமிழர் மத்தியில் எழுச்சி பெற்றன. இவ்விரு சமயங்களும் பெண்களை மகிமைப்படுத்தவில்லை. முக்தி மார்க்கத்துக்கு இடர் என அவை போதித்தன. எனவே தேவதாசி முறை களப்பிரர் காலத்தில் ஊக்குவிக்கப்படவில்லை. ஆறாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் அரசனின் காலத்திலும் அதன் பின்னருமே சைவமும் வைணவமும் புத்தெழுச்சி பெற்றதோடு வாடிக் கிடந்த கோவில்களும் மீண்டும் கலைக்கூடங்களாக மாறின.

சேரி பரத்தை, காதற் பரத்தை, காமக் கிழத்தி என்பதாக அழைக்கப்பட்ட பரத்தையர், பல்லவர் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றனர். அவர்கள், தத்தை, விகுருதை, பிரத்தியை, பக்தை, இருதை, அலங்காரி, உருத்திரகணிகை என ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டனர். உருத்திரகணிகை குலத்தவரே கோவில்களில் பணியாற்றும் தகுதி பெற்றனர்.

(தொடரும்)

Wednesday, February 18, 2015

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11

இலங்கை முஸ்லிம்கள்: முழுமையான வரலாறு நம்மிடம் இருக்கிறதா?


அருள் சத்தியநாதன்

கோம்பையாரின் யாதும் ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு உறங்கச் சென்ற போது பல விஷயங்கள் மனதில் எழும்பின. கேள்விகள் பிறந்தன.

கோம்பை அன்வர் என்ற ஒரு ஊடகவியலாளர் தன் சொந்த முயற்சியால் ஒரு தமிழ் முஸ்லிம் தன் வேர்களைத் தேடிப் பயணிப்பது போல ஒரு ஆவணப் படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க முடிந்திருக்கிறது. இதனால் அவருக்கு பொருட் செலவு ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒன்றும் செல்வந்த குடும்பத்தில் இருந்து வந்தவருமல்ல. இப்படத்தைத் தன்னால் வெற்றிகரமாக சந்தைப்படுத்த முடியுமானால் இதன் அடுத்த பாகத்தையும் எடுத்து முடிப்பேன் என்றும் அயரமாட்டேன் என்றும் கூறுகிறார் கோம்பை.
கோம்பை அன்வர்
இந்த ஆவணப்படம் ஆதாரபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். கொச்சின், மதுரை, தஞ்சை என பயணப்பட்டு, பல ஆதாரங்களை சேகரித்திருக்கிறார். பலரையும் பேட்டி கண்டு ஆதாரங்களை அவர்கள் வாய் வழியாகக் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில், பல சரித்திர புத்தகங்களைப் புரட்டி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை எளிமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பா. ஜ. க. வினர் தமிழகத்தில் வெளிப்படையாகவே மத வெறுப்பைக் கக்கும் இவ்வேளையில் இந்த ஆவணப்படம் அதற்கு எதிரான வலுவான ஆயுதமாகத் திகழ்வதாகவே கருத வேண்டியிருக்கிறது.

இலங்கையில் செறிந்தும் பரந்துமாக முஸ்லிம் சமூகம் வசித்து வருகிறது. இலங்கையுடனான இஸ்லாமிய தொடர்பு மிகப் பழையது. கிரேக்கர்களும், சீனர்களும் இலங்கை வருவதற்கு முன்னரேயே அராபியர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வந்துபோக இருந்திருக்கிறார்கள். எப்படியோ இலங்கைக்கு வருவதற்கான கடல்வழி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. வாசனைத் திரவியங்கள், முத்து, ரத்தினக் கற்கள், தந்தம் போன்றவற்றை எடுத்துச் சென்று கொழுத்த இலாபத்தில் அவற்றை மேற்கு நாடுகளுக்கு விற்று வந்தார்கள். இந்திய உபகண்டம் மற்றும் ஆபிரிக்கக் கண்டம் இரண்டும் அராபியருக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டித் தந்தன.
போர்த்துக்கேயர் தற்செயலாக இந்தியாவையும் இலங்கையையும் கண்டு பிடிப்பதற்கு முன்வரை இந்து சமுத்திர கடலாதிக்கம் அராபியர் வசமே இருந்தது. மலபாருடனான அராபிய தொடர்பு இஸ்லாத்துக்கு முற்பட்ட கால முதல் இருந்து வந்திருக்கிறது என்றால் அதே காலப்பகுதியில் அவர்கள் இலங்கையுடனும் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கைத் தீவுக்கு வெளியார் தொடர்பு, தென்னிந்தியர்களுக்கு அப்பால், அராபியர்களுடனேயே இருந்திருக்க வேண்டும். கிரேக்கர், சீனர் மற்றும் எகிப்தியருடனான உறவை விட அராபியருடனான சிங்கள மன்னர்களுக்கு இருந்த உறவு மிகவும் சினேகபூர்வமாகவும் நெருக்கம் மிகுந்ததாகவும் இருந்திருக்க வேண்டும். அராபியர்கள் இந்நாட்டுக்கு அடிக்கடி வந்து போகின்றவர்களாகவும், அரசனுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்றித் தரக்கூடியவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள மன்னர்களுடன் அவர்களால் நெருக்கமான உறவை பேண முடிந்திருக்கிறது. நாட்டின் உட்பகுதிக்குள் சென்றுவர முடிந்திருக்கிறது. சிங்கள கிராமவாசிகளுடன் நட்புணர்வை அவர்களால் பேண முடிந்திருக்கிறது. இது சாதாரண விஷயமல்ல.
காலி துறைமுகத்தில் கப்பலை நிறுத்திவிட்டு படகுகள் மூலம் அவர்கள் களுத்துறைக்கு வந்து களுகங்கை ஊடாக அரபு வர்த்தகர்கள் இரத்தினபுரியை சென்றடைந்திருக்கிறார்கள். மன்னாருக்கு வந்த அரபு வர்த்தகர்கள் புத்தளம் வரை செல்வாக்கோடு வர்த்தக ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். மன்னார் அல்லது புத்தளத்தில் இருந்து கண்டி இராச்சியத்துக்கு அவர்கள் சென்று கண்டி அரசனோடு வர்த்தக உறவை பேணி வந்திருந்ததினால், களுத்துறையில் இருந்து களுகங்கையூடாக இரத்தினபுரிக்கு வரவு, இரத்தினபுரியில் இருந்து அடர்ந்த கானகத்தின் ஊடாக பயணித்து 'ஆதாம் மலை'யை சென்றடையவும் அவர்களுக்கு கண்டி அரசன் அனுமதி வழங்கியிருக்கிறான். ஏனெனில் சிங்களக் கிராமங்களுக்கு வெளியார் செல்வதும் வியாபாரத் தொடர்புகளை நேரடியாக மேற்கொள்வதும் அக்காலத்தில் சாத்தியமான விஷயமல்ல.
ஆதாம் மலை
ஆதாம் மலையைக் கண்டு பிடித்து அதில் ஏற வழியை உருவாக்கியவர்கள் அராபியர்களாகவே இருக்க வேண்டும். இலங்கையை கடல் வழியாக அண்மிக்கும் போது சிவனொளிபாதமலையின் கம்பீரத் தோற்றமே முதல் அடையாளமாகத் தெரிந்திருக்கிறது. மணல் குன்றுகளை மட்டும் பார்த்து வளர்ந்தவர்களை இம்மலைச் சிகரம் ஈர்த்ததில் அதிசயமில்லை. மலைச் சிகரத்தில் ஒரு பெரும் காலடிச் சுவடு பாறைப் பதிவாக இருப்பதை உள்ளுர் கிராமவாசிகளின் ஊடாகத் தெரிந்து கொண்ட அவர்கள் கப்பல் சங்கிலிகளைப் பயன்படுத்தி மலையில் ஏறி அப்பாதச் சுவட்டைப் பார்த்திருக்க வேண்டும்.

இதன் பின்னரேயே ஆதாம் மலைக் கதை தோற்றம் பெற்றிருக்கிறது. இம்மலையுடன் தொடர்பு கொண்ட புத்தர், இந்திரன், சிவன் கதைகள் எல்லாம் பின்னர் தோன்றியவையே. தமது மதத்தில் குறிப்பிடப்படும் ஆதாம் என்ற முதல் மனிதனின் காலடிப்பதிவே இது என நம்பிய அரபு வர்த்தகளுக்கு, ஆதாம் மலை சஞ்சாரத்தினால் இரண்டு நன்மைகள் கிட்டின. அவர்களால் சுலபமாக இரத்தினபுரிக்கும் உட்புற கிராமங்களுக்கும் வரக்கூடியதாக இருந்ததோடு சிங்கள கிராமவாசிகளுடன் நட்பைக் கட்டி எழுப்பவும் முடிந்தது. இரண்டாவதாக, இரத்தினபுரியை விட்டுச் செல்லும்போது அவர்களால் பெருமளவு யானைத் தந்தங்கள், இரத்தினக் கற்கள் வாசனைத் திரவியங்கள் மற்றும் கானக உயிரினங்கள், விலையுயர்ந்த மரங்கள் என்பனவற்றையும் ஒவ்வொரு தடவையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடிந்தது.

இலங்கைக்கு வந்த வெளிநாட்டாரிலேயே, உள்ளுர் மக்களுடன் சினேகபூர்வமாக, ஒத்தாசையுடன் கூடிய அணுகுமுறையையும் கொண்ட உறவைப் பேணி வந்த ஒரே இனம், முஸ்லிம் வர்த்தகர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் கரையோரப் பகுதிகளில் பண்டகசாலைகளை மட்டுமே அமைத்தார்கள். உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். கோட்டை அமைக்க வேண்டும், இத்தனை கிராமங்கள் வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை சிங்கள அரசர்களிடம் முன்வைக்கவில்லை. உள்ளுரில் நிகழ்ந்த போர்களில் படைவீரர்களாகவும், குதிரை வீரர்களாகவும், பராமரிப்பாளர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சிங்கள மன்னர்கள் நடத்திய போர்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை அந்நியப்படுத்தி பார்க்கவில்லை. தமக்கு கிடைத்த வளமாகவே முஸ்லிம்களைக் கருதி வந்தார்கள். இத்தனைக்கும் முஸ்லிம்களின் மதமும், பழக்க வழக்கங்களும் உடைகளும், பேசும் மொழியும் எவ்வகையிலும் சுதேசிகளின் பழக்க வழக்க, பாரம்பரிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதாக இருக்கவில்லை. நாம் அடிக்கடி சொல்வோமே, வேற்றுமையில் ஒற்றுமை என்று, அதைச் சரியாக நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்றைய முஸ்லிம்களே என்று குறிப்பிடுவது, மிகைக் கூற்றாகாது.

சிங்கள - முஸ்லிம், சிங்கள - தமிழ் உறவுகள் பற்றி இப்படி ஏராளமான தகவல்கள் உள்ளன. பல ஆய்வுக்கு உரியவை. கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ முடிந்தது ஏன்? அதற்கான அன்றைய சூழ்நிலைகள் யாவை? என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன. கண்டிக்கும் கேகாலைக்கும் இடையே மாவனல்லையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதற்கு, வணிகர்களாக கண்டி இராச்சியத்துக்கு வந்த இஸ்லாமியர்களை கண்டி மன்னர் மாவனல்லையில் குடியேற்றியதே காரணம் எனக் கூறப்படுகிறது. கொழும்பு அல்லது புத்தளத்தில் இருந்து கண்டிக்கு பொருட்களை ஏற்றி வரும் முஸ்லிம் வர்த்தகர்கள் மாவனல்லையில் பொருட்களை சேகரித்து வைக்கக் கூடிய மற்றும் இடையில் தங்கிச் செல்லக் கூடிய இடமாகவும் மாவனல்லை திகழ்ந்திருக்கிறது.

கோம்பை அன்வர் இலங்கையில் 'வேர் தேடும்' ஒரு பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு இம்மண்ணில் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

கோம்பையை விடுவோம். 'இலங்கை முஸ்லிம்களின் வரலாறு' என்ற ஒரு வரலாற்று நூல் இங்கே எழுதப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. முழுமையான ஒரு வரலாற்று நூல் தமிழில் எழுதப்பட்டிருக்குமானால் அது பற்றி அறிந்தவர்கள் எமக்குத் தெரிவிக்கலாம். ஆனால் கண்டி முஸ்லிம்கள் வரலாறு, மாத்தளை முஸ்லிம் வரலாறு என்பது போன்ற பிரதேசவாரியான தகவல் திரட்டுகள் நூல் மற்றும் கட்டுரை வடிவில் உள்ளன. ஆனால் இதை ஒரு ஆய்வாக மேற்கொண்டு அராபியர்களின் முதல் வருகை, சிங்கள மன்னர்களுடனான தொடர்புகள், அவர்களின் வழித்தோன்றல்கள் கிழக்கு பகுதிக்கு குடிபெயர்ந்த காரணம், இலங்கையின் ஆரம்பகால வணிகத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு, யுத்தங்களில் அவர்களின் பங்களிப்பு, பெரும்பாலான தொடர்புகள் சிங்கள மன்னர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் இருந்தாலும் பெருந்தொகையானோரின் தாய்மொழியாக தமிழாக இருப்பதன் காரணம் என்பது போன்ற பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?

இஸ்லாமிய இலக்கிய மாநாடு கொழும்பில் ஒரு தடவை நடத்தப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணிகளுடனான அல்லது அவற்றை ஆய்வுக்குட்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகள் அம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெறவும் போகின்றன. இவற்றிலாவது, இலங்கை முஸ்லிம்களின் தோற்றம், வணிகம், நல்லுறவு தொடர்பிலான காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நான் அறியவில்லை.

இரண்டு மணித்தியாலங்களுக்குள் கோம்பை அன்வர், தென்னாட்டுக்கு அராபியர் வருகை, வணிகம், இலக்கிய முயற்சிகள், இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றியெல்லாம் காட்சி வழியாக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். அவ்வாறான ஒரு முயற்சியை காட்சி ரூபமாக இல்லாவிட்டாலும் எழுத்து வழியாகவும் மேற்கொள்ளலாம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறான ஒரு முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான எல்லாத் தகுதியும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கிறது.

(தொடரும்)

Sunday, February 15, 2015

சினிமானந்தா பதில்கள் -22

மகேஸ்பாபுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா?
கவிதா, ஹேவாகம, பாதுக்க

உங்களைப் போன்ற பலருக்கு மகேஸ்பாபுவை பிடித்திருக்கிறது. அவரை அல்பத்தில் போடுங்கள் என்றும் அவரைப் பற்றி கேள்வி கேட்டும் 'வானவில்'லுக்கு பல கடிதங்கள் வருகின்றன. தமிழில் விஜய் எப்படியோ அது போல்தான் தெலுங்கில் மகேஸ். 'கில்லி', 'போக்கிரி' ஆகிய படங்களின் ஒரிஜினல் ஹீரோ இவர்தான்.
சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த மகேஸ_க்கு இப்போது 39 வயது. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக காமிரா முன்தோன்றிய இவர் இப்போது தெலுங்கில் நம்பவர் வன். 'பிரின்ஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் மகேஸ் பாபுவின் மனைவி நர்மதா ஸ்ரோத்கார் முன்னாள் நடிகை.

தமிழில் நேரடியாக படம் பண்ணுவதற்கு சரியான கதையைத் தேடி வருகிறார் 'பிரின்ஸ்'. இந்த செய்தி தமிழ் திரையுலகின் தல, தளபதியின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகக் கேள்வி.

ராகவா லாரன்ஸின் 'கங்கா' எப்போது திரைக்கு வரும்?
ஜனனி, மாத்தளை


ராகவா லாரன்ஸ_க்கு முனி நல்ல பெயர் தந்தது முனி. 2, காஞ்சனா அதனையும் மிஞ்சியது. 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட முனி 3, கங்கா இப்போதுதான் முடிந்திருக்கிறது.

தமிழில் இது பேய்க்காலம் என்பதால் சித்திரைக்கு திரைக்கு வருகிறது முனி 3,  கங்கா. இம்முறை பயமுறுத்துபவர் டாப்ஸி.


தனுஷ் இந்தியில் ஒரு படம்தானே நடித்தார்? வேறு படம் கிடைக்கவில்லையா?
ஷாருன்னிஸா, புத்தளம்

முதல் இந்திப் படத்தின் மூலமே ஹிட்டடித்தவர் தனுஷ். 'ராஞ்சனா'வில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இப்போது மூத்த நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'சமிதாப்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ_டன் ஜோடி சேர்பவர் அஷ்ரா (கமலின் இளைய மகள்). இது அஷ்ராவின் முதல் படம் (அறிமுகம்). படத்தை தயாரித்து இயக்குபவர் பால்கி என்ற பாலகிருஷ்ணன். இளையராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் ஒரு நடிகர். அவரது புகழுக்கு அவரது பின்னணிக் குரலே காரணம். அந்த புகழ்பெற்ற பின்னணிக் குரலை வழங்குபவர் அமிதாப். இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல் தனுஷின் முன்னேற்றத்தை பாதிக்கிறது. இருவரும் எப்படி சமாதானமாகின்றனர் என்பதே 'சமிதாப்' படத்தின் கதை.

தனுஷ் இனி வருடத்துக்கு ஒரு இந்திப் படம் செய்யலாம். வடக்கில் அவருக்கு தனியிடம் நிரந்தரமாகி வருகிறது.

வெற்றி மாறனின் தயாரிப்பில் அவரது உதவியாளர் மணிகண்டனின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட 'காக்கா முட்டை' படம் திரைப்பட விழாக்களில் நல்ல பெயர் வாங்கியுள்ளது இதுபோன்ற வேறு தமிழ் திரைப்படங்கள் தமிழில் உள்ளனவா?
எஸ். ராஜேந்திரன், கொழும்பு

இருக்கு. ஆனால் அது எல்லாம் திரைப்பட விழாக்களுக்கு போகும் அளவுக்கு அதிர்ஷ்டமில்லாதவை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு தமிழ்ப்படம்தான் 'அப்பா வேணாம்ப்பா.' கடந்த ஆண்டில் வெளியான 217 நேரடி தமிழ்ப் படங்களில் சிறப்பான படங்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 10 படங்கள்தான் தேறும். ஆனால் இந்த பட்டியலில் இடம்பெறும் தனித்து நின்று மிகச் சிறப்பான சமூக விழிப்புணர்வு தீமையை வலியுறுத்தி மிகக் (ஆகக்) குறைந்த பட்ஜெட்டில் தயாரானது இந்தப் படம்.
இந்தப் படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? மூக்கில் விரலை வைக்காதீர்கள். வெறுமனே நான்கு லடசம் ரூபாதான். ஆனால் படத்தை வெளியில் கொண்டு வருவதற்குள் அது பத்து லட்சமாகி விட்டதாம்.

குடியால் பல குடும்பங்கள் கெட்டிச் சுவராகிப் போய்க் கொண்டிருப்பதை விளக்கும் படம்தான் 'அப்பா வேணாம்ப்பா.'

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரில் மட்டும் பகல் 11 மணி காட்சியாக சில நாட்கள் மட்டும் ஓடியது. தியேட்டர் வாசலில் நின்று படம் பார்த்தவர்களுக்கு நன்றி சொல்கிறார் இயக்குநர், நடிகர் வெங்கட்ரமணன்.

நம்பிக்கையுடன் பார்த்து வந்த வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர்.

குடிசைத் தொழில் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் தரத்தில் எந்தக் குறையும் இல்லை. செலவைக் குறைப்பதற்காக இவரே நடித்து பாடல் இயற்றி திரைக்கதையையும் அமைத்து இயக்கியிருக்கிறார்.

மதுபானக்கடை என்ற பெயரில் குடிக்கலாம் என்று சொல்லிய படம் வெற்றிகரமாக ஓடியது அதேவேளை குடிக்காதே என்று சொல்லும் 'அப்பா வேணாம்ப்பா'வை பார்க்க தியேட்டரில் ஆட்கள் இல்லை. இதுதான் சினிமா!

Sunday, February 1, 2015

எஸ். பொ. ஒரு சண்ட மாருதம்

எஸ். பொவின் வாழ்க்கையை ஆவணமாகப் பதிவு செய்திருக்கும் ஈழவாணி


சத்யா

தமிழக சினிமா உலகில் புகுந்து உள்ளே உள்ளே தேடிப் பார்த்தீர்களானால் பல இலங்கைத் தமிழர்கள் படங்களின் உருவாக்கத்துக்கு பின்னின்று பணியாற்றிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வீர்கள். அவர்களும் 'நான் சிலோன்காரன்' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை, சினிமாத்துறையினரும் அதைக் கண்டுகொள்வதில்லை. இல்லையேல் இந்த சீமான் கைபட்டு ஒரு பூஜா உருவாகி மலர்ந்திருக்க முடியுமா?
உங்களுக்கு வாணி ஜெயாவைத் தெரியுமா? நிச்சயம் தெரிந்திருக்காது. சரி, ஈழவாணியைத் தெரியுமா? உங்களில் சிலர் கைதூக்குவதை என்னால் பார்க்க முடிகிறது. வவுனியாவில் பிறந்து வளர்ந்து கொன்வன்டில் படித்து.. பேராதனை பல்கலையில் தமிழ் பீ. ஏ எடுத்து, கொழும்பு  பல்கலையில் ஜெர்னலிசம் தேறி....

இயெஸ்... இயெஸ் ஞாபகத்தில் இருக்கிறாள், பார்வைக்கு சடாரென வெட்டித் தெரியும் உருவ அமைப்புள்ள அந்தப் பெண் என்று சொன்னால் பாஸ் மார்க் வாங்கி விடுவீர்கள்.

இவர் 2003 இல் செந்தனல் என்ற வார சஞ்சிகையை நடத்தி இருக்கிறார். இயல்பிலேயே எழுத்தும் கவிதையும் வரக்கூடிய இவருக்கு அழகப்பா பல்கலைக்கழகம் மல்டி மீடியா பாடத்தில் இவருக்கு எம். ஏ. கொடுத்தது. அங்கே பூவரசி சஞ்சிகையை நடத்திக் கொண்டிருக்கும் இவர், இன்றைக்கு பெரும்பாலும் சென்னைவாசி. பூவரசி மீடியா என்ற தொடர்பாடல் துறை நிறுவனமொன்றை நடத்திக் கொண்டிருக்கும் இவர், குறும்படங்கள் ஆவணப்படங்கள் இயக்குவதில் பெயர் பெற்றவர்.

நிர்வாண முக்தி என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ஈழவாணி, தலைப்பிழந்தவை, ஒரு மழைநாளும், விலக்கப்பட்ட தாள்கள் என்ற தலைப்புகளில் கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து நாட்டார் பாடல்கள் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

இவர் தயாரித்துள்ள ஆவண மற்றும் குறும் படங்ள் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பேசுவதில் முனைப்பாக இருக்கும் என்பதோடு ஈழவாணியின் ஆழ அகலத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன என்பதை பார்த்தவர்கள் சொல்லும் ஒரு விஷயம்.
எஸ்.பொவுடன்
2012 இல் இவர் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய 'அம்மா வருவா' என்ற குறும் படத்தை எடுத்தார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பொருளாதார ரீதியான உதவிகள் மட்டும் போதவே போதாது, அவர்கள் மீண்டு வருவதற்கு மனரீதியான ஆதரவை வழங்க அனைவருமே முன்வர வேண்டும் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்வதாக                                'அம்மா வருவா...' அமைந்திருந்தது. இதன் வெளியீட்டு விழாவுக்கு பாலு மகேந்திராவே நேரில் வந்து வாழ்த்திப் பேசியிருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஈழவாணி.

ஈழ அகதிகள் பற்றிய இவரது ஆவணப்படம் இரண்டு மணித்தியால காட்சி நீளம் கொண்டது. தமிழகத்தில் உள்ள பல அகதி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் உரையாடி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அகதிகள் பற்றி வெளிவந்திருக்கும் தகவல் களஞ்சியங்களில் முதன்மையானது என்பதைத் தைரியமாகக் குறிப்பிட முடியும்.

இந்த அகதிகளில் மிகப் பெரும்பாலானோர் தமிழகத் தமிழர்களாகவே மாறிப்போய் விட்டார்கள். இலங்கை அவர்களுக்கு அந்நிய தேசமாகிவிட்டது. அதற்காக இந்தியா அவர்களை முற்றிலும் அணைக்கவும் இல்லை. எனவே அவர்கள் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளவயதில் திருமணம், சேர்ந்து வாழ்தல், கணவனையோ மனைவியோ விட்டு விட்டு இன்னொரு துணையைத் தேடிக் கொள்வதால் பிள்ளைகள் திக்கற்றவர்களாவது, அரசு வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்து காலம் தள்ளுவது, இளம்பராய துஷ்பிரயோகங்கள் என பல கோணங்களில் நம்மவர்களை இது ஆராய்கிறது.
பாலுவுடன்,ஈழவாணி
 ஒன்றரை மணித்தியால கால எல்லை கொண்ட 'ஈழநாட்டியம்' என்ற ஆவணப்படம் இவரது இன்னொரு மைல்கல் படைப்பு.

நாம் பரத நாட்டியத்தையே தமிழர் நாட்டியமாக கருதி வருகிறோம். ஆனால், நமக்கென பாரம்பரிய நடனம் வடபுலத்தில் இருக்கிறது, நாம்தான் அதை மறந்து விட்டோம் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதாக உருவாக்கப்பட்டதே இந்த ஆவணப்படம். பலரும் பாராட்டிய திரை ஓவியம் இது. ஈழவாணியின் முத்திரை இது.

"ஆனால் நான் முத்திரையாகக் கருதுவது எஸ். பொ. பற்றி நான் தயாரித்த வரலாற்றில் வாழ்கிறார் 'எஸ். பொ' என்ற ஆவணப்படம்தான்" என்கிறார் ஈழவாணி. இது மூன்று மணித்தியால நீளம் கொண்டது, ஆழமும் அகலும் விசாலமும் கொண்ட ஒரு பிரமாண்டத்தை மூன்று மணித்தியாலயத்துக்குள் அடக்க நான் பட்ட பாடு! எஸ். பொ. ஒரு சண்ட மாருதம்" என்கிறார் வாணி.

"எஸ். பொ. இலங்கை இலக்கிய உலகம் தந்த மிகப்பெரும் ஆளுமை. அப்படி ஒருவர் திரும்பக் கிடைப்பாரா, சந்தேகம்தான். அவருடன் பழகக் கிடைத்தது என் பாக்கியம். அவரை ஆவணப்படமாக எடுக்க முடிந்ததை என் வாழ்நாளின் உச்சம் எனவும் பெரும் பாக்கியம் என்றும் கருதுகிறேன். ஆனால் நான் எடுத்த படத்தை அவர் முழுமையாகப் பார்க்காமலேயே மறைந்து விட்டதுதான் எனக்கு வருத்தம். அவர் எனக்கு ஆசானாக இருந்தார். என் கலை இலக்கிய பயணத்தில் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். குரு என்றால் அவரைத்தான் சொல்வேன்" என்று நெகிழ்கிறார் ஈழவாணி.
"அவர் இலங்கையை விட்டகன்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. இதனால் இலங்கையின் இளைய தமிழ்த் தலைமுறையினருக்கு எஸ். பொ.வைத் தெரியாது. இந்தப் படம் அவரை அவர்களுக்கு அறிமுகம் செய்யும். ஐம்பது அறுபது கால கட்டத்தில் தன்னை ஒரு இலங்கை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி போராளியாக வெளிப்படுத்திய எஸ். பொ. வின் ஆளுமையை முடிந்த அளவில் நான் காட்சிப்படுத்தி இருக்கிறேன்" என்று சொல்லும் ஈழவாணி, தற்போது ஒரு முழு நீள தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார்.

எண்பதுகளில் அகதிகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் வரும் தந்தையும் மகளும் தமது குடும்பத்தைத் தேடி இலங்கை வருவதைப் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை ஈழவாணி இயக்குகிறார். தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை பரதேசி புகழ் செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

"இது உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக இருக்கும். இப்படம் இலங்கை வாழ்வியல், அழகியலைப் பேசும். கேரளா, டெல்லி, இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கும். உலகெங்கும் இப்படம் திரையிடப்படும்" என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஈழவாணி.

வெல்வோம் என்ற நம்பிக்கை உண்டு என்று ஆணித்தரமாகக் கூறும் ஈழவாணியின் இந்த முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.