Friday, January 30, 2015

இருள் உலகக் கதைகள்

பிரதீபை பிடித்தாட்டிய வெள்ளைக்காரன் ஆவி!

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்:  மணி  ஸ்ரீகாந்தன்

வேலை முடிந்து ஆயாசத்துடன் வீடு வந்த சுமணா வாசல் படியைத் தாண்டியதுமே அவள் நுழைந்த இடம் சமையலறை. அன்றைக்கு அவளுக்கு அப்படி ஒரு பேய்ப்பசி! என்ன இருக்கு? என மூக்கை அலையவிட்ட சுமணா அம்மா சமைத்து வைத்திருந்த கோழிக் குழம்பை சுடு சோற்றில் வழிய வழிய ஊற்றிக் கொண்டாள். சாப்பாடு தட்டோடு ஹோலில் அமர்ந்து கொண்டு வசதியாக கால்மேல் கால் போட்டுக் கொண்டாள். டிவியை ஒன் செய்துவிட்டு கோழிக் கறியுடன் சோற்றைப் பிசைந்து நாக்கில் வைத்து சுழற்றினாள். ம்... கோழிக்கறிக்கு அம்மாவின் கைமணம் மாதிரி வராது!

அம்மா பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்தாள். எனவே அந்த நேரத்தில் சுமணாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இலலை. நேரம் இரவு ஏழு முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. டிவியைப் பார்த்தபடியே தட்டில் கிடக்கும் இறைச்சி துண்டை சோற்றோடு பிசைந்து ஒரு கவளத்தை வாயில் வைத்துவிட்டு மீண்டும் தட்டைப் பார்த்தபோது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உணவுத் தட்டில் கிடந்த இறைச்சித் துண்டுகளைக் காணவில்லை. அந்த வினாடியில் சோற்றில் கிடந்த இறைச்சித் துண்டுகள் மாயமாய் மறைந்திருந்தன! சுற்றும் முற்றும் பார்த்தாள், நாய் பூனை ஏதாவது.... வாய்ப்பே இல்லை! அப்படியானால்.... அப்படியானால்.... சுமணா வீல் என்று கத்தியபடி நிலத்தில் சாய்ந்தாள்.... பிறகு சுமணாவின் தாய் அந்த ஊர் மந்திரவாதியிடம் மை பார்த்ததில் அது ஒரு எச்சிப் பேயின் வேலைதான் என்பது தெரியவந்தது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அந்தக் கடற்கரை வீதியை ஒட்டியுள்ள பகுதியில் இப்படியான அமானுஷ்ய சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது வழக்கமாம். இச்சம்பவங்கள் ஊர்வாசிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை உருவாக்கி விட்டிருந்தது. இதனால் இரவில் தனியாக நடமாடுவதை பலரும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த அமானுஷ்ய சம்பவங்களுக்குப் பின்னால் ரொபர்ட், எமி ஆகிய இந்தோனேஷிய ஆவிகளின் வேலையாகக் கூட இருக்கலாம் என்பது வயதில் மூத்த ஊர்வாசிகளின் பேச்சாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் தம்பதிகளாக குடியேறிய ரொபர்ட்டும், எமியும் அங்கே இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை ஒரு சமயத்தில் நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த விடுதிக்கு பெண்கள் வருவதும் ஆண்களை இங்கே சந்தித்து குடி கூத்து என இரவிரவாக களியாட்டங்கள் நடப்பதும் வாடிக்கை. இது ஒரு சமயத்தில் எல்லை மீறிப் போகவே ஊரில் விலைப் பெண்கள் நடமாடத் தொடங்கினர். ஊரால் கேள்வி கேட்டால் 'நாங்கள் ரொபர்ட் மஹாத்தயாவின் ஆட்கள்' என்று கூறத் தொடங்கினர். ரொபர்ட்டும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு சமயத்தில் ஆத்திரம் எல்லை மீறவே ஊர் மக்கள் ஒரு இரவில் விடுதிக்குள் புகுந்து கலாட்டா செய்து ரொபர்ட்டையும் எமியையும் அடித்தே கொன்று விட்டனர்! இது ஊரில் வயதானவர்கள் சொல்லும் கதை.

அவலச் சாவு அடைந்த அந்த ஆத்மாக்கள் துஷ்ட ஆவிகளாக உலா வருவதாகவும் பல வருடங்களாக ஒரு கதை அந்தப் பகுதியில் நம்பக்கூடிய வகையில் பரவியிருந்தது.

கஹவத்தை, பொறனுவை தோட்டத்திலிருந்து நீர்கொழும்புக்கு வேலைக்குச் சென்றவன்தான் பிரதீப். காலை எட்டு மணிக்கு கட்டடம் கட்டும் மேசன்மார்களுக்கு உதவியாளராக செல்லும் அவன் மாலை ஐந்து மணிக்கு வேலை முடிந்து தங்கும் விடுதிக்கு வந்து விடுவான். வழமை போல் அன்று வேலை முடிந்து விடுதிக்கு வந்த பிரதீப் குளித்து விட்டு தனக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டை திறந்து பார்த்து சலித்துக் கொண்டான். 'சே! டெய்லி பருப்பு, கத்திரிக்காய் சாப்பிட்டு, சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு. இன்றைக்கு ஒரு நாளைக்காவது இறைச்சி சாப்பிடலாம்' என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு ஷேர்டை அணிந்து கொண்டான். வெளியே தெரு பக்கமாக உள்ள ஹோட்டலை நோக்கி நடந்தான். அவன் தங்கியிருந்த விடுதிக்கும் ஹோட்டலுக்கும் அரை மைல் தூரம் இருக்கும். இறைச்சிக் கறியோடு இடியப்பம் பார்சலை வாங்கிக் கொண்டு மங்கிய தெரு விளக்கின் வெளிச்சத்தில் அந்தப் பாதையில் அவதானத்துடன் நடந்தான்.
முத்து பூசாரி

தூரத்தில் ஒரு நாயின் ஊளைச்சத்தம் அவன் காதுகளை வந்தடைந்த போது பிரதீப் உடல் கொஞ்சம் ஆடித்தான் போனது. அப்போது அவன் கையில் பிடித்திருந்த சாப்பாட்டு பார்சலை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்த பிரதீப் சட்டென்று திரும்பினான். அப்போது கால் இடறி நிலை தடுமாறி விழுந்தபோது இரண்டு கொள்ளிக் கண்கள் தீப்பந்தங்கள் போல மினுமினுக்க ஒரு நாய் அவனை உற்றுப் பார்த்துவிட்டு இருளில் மறைந்தது. களைத்த நாய் வாயைத் திறந்து மூச்சுவிடும் ஓசை போல ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு மூர்ச்சையாகிப் போன பிரதீப்பை அந்த தெருவாசிகள் அறையில் கொண்டு வந்து போட்டார்கள். பிரதீப்பை ஏதோ காத்துக் கறுப்பு அடித்து விட்டதை உணர்ந்த அவன் நண்பர்கள் அவனை பொறனுவையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். சித்தம் கலங்கியவனாக இருந்த பிரதீப்பை குணப்படுத்தி அவனுக்குள் இருக்கும் அந்த தீய சக்தியை விரட்ட அந்தப் பகுதியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் முத்து பூசாரியை அணுகினார்கள் முத்து பூசாரி சகல ஆயத்தங்களுடன் அந்த வீட்டுக்குள் வந்தார். கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிரதீப்பின் கட்டுகளை முத்து பூசாரி அவிழ்த்த போது பிரதீப் கைகளை பூனை பிராண்டுவது போல பாவனை காட்டி பூசாரி மீது பாய முயற்சித்தான். அவரது உதவியாளர்கள் அவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். பூசாரி உடனடியாக அவனை மந்திரக் கட்டுப்போட்டு பிரதீப்பின் ஆக்ரோஷத்தை அடக்கினார்.

பிரதீப்பின் உடம்பிற்குள் ஒரு மூர்க்கமான எச்சில் ஆவி குடியிருப்பதை தனது ஞானசக்தியால் முத்து பூசாரி உணர்ந்து கொண்டார். பூசாரியின் சகாக்களால் படையல் போட்டு அமைக்கப்பட்ட சக்கர வியூகத்தில் முத்து பூசாரி அமர்ந்து தனது தாயார் வேலாயியை நினைத்து கும்பிட்டார். அடுத்த நிமிஷம் பிரதீப்பை பூசாரியின் எதிரே அமரவைத்த போது முத்து பூசாரியின் உடல் சிலிர்த்து அவர் சாமியாட்டம் போட்டபடி உடுக்கை கையில் எடுத்து அடித்து உரக்கப் பாடினார். அப்போது பிரதீப்பின் உடம்பில் மறைந்திருந்த தீய சக்தியும் வெளியே வர நேரம் சரியாக இருந்தது. அப்போது பூசாரி கேட்ட கேள்விகளுக்கு பிரதீப்பிடமிருந்து ஆங்கிலத்திலேயே பதில்கள் வரத் தொடங்கின. பிரதீப்புக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. எனவே ஆங்கிலம் தெரிந்த ஒரு ஆவியே அவன் உடலில் குடியிருப்பதை பூசாரி உணர்ந்து கொண்டார். பூசாரிக்கும் அவ்வளவாக ஆங்கிலம் வராது என்பதால் இக்குழப்பத்தை எப்படிப் போக்குவது என்று ஒரு கணம் குழம்பிப் போனார் முத்துப் பூசாரி. பிரதீப் உடம்பிற்குள் இருப்பது ஒரு அந்நிய நாட்டைச் சேர்ந்த பேய் என்பது மட்டும் அவருக்கு புரிந்தது. உடனே தனது சித்து விளையாட்டை பயன்படுத்தி பிரதீப்பின் நாக்கை வெளியே இழுத்து அந்த நாக்கில் தமிழின் அட்சர கோட்டை சட்டென வரைந்தார் பூசாரி. மறு விநாடியே ஆங்கிலப் பேய் தமிழில் பேசத் தொடங்கியது.

"டேய் பூசாரி! நான் தாண்டா ரொபர்ட்! நான் இந்தோனேசியாக்காரண்டா, என்னையும் என் மனைவி எமியையும் கொலை செய்தவர்களை கொல்லத்தான்டா ஆவியா அலையிறோம்" என்று பேய் கர்ஜித்ததை கேட்ட ஊர்வாசிகள் குலை நடுங்கிப் போனார்கள். உடனே பூசாரி அதுக்கு நீ சம்பந்தப்பட்டவர்களைத்தானே பழிவாங்கனும்? இவன் என்ன செய்வான், பாவம் அப்பாவி! என்றார் பதிலுக்கு.
முகத்தை ஒரு வெட்டு வெட்டி கீழ்ப்பார்வையில் பூசாரியை முறைத்த அந்த ஆவி "டேய் அவன் என்னை தலையில் அடிச்ச பண்டார மாதிரி இருக்காண்டா" என்று சொல்ல, பூசாரி விடுவதாக இல்லை... பேயிடம் பேரம் பேசி அதை மிரட்டி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். தன்னை பூசாரி எரித்து விடுவார் என்று பயந்த ரொபர்ட், பிரதீப்பின் உடம்பை விட்டு வெளியேற சம்மதித்தது. ஆனாலும் முத்து பூசாரி அவனை நம்பத் தயாரில்லை.

"ஏய் நீ இந்தோனேஷியன்னா நான் சிலோன்காரன்டா என்னை ஏமாத்த நினைச்ச... அப்புறம் நீ எரிஞ்சு சாம்பலாகிடுவ, அதனால நீ இவன் உடம்பை விட்டுப் போகும்போது எனக்கு என்ன மாதிரி சமிக்ஞை தருவாய்?" என்று கேட்டார்.

"நான் சரியாக விடியற்காலை மூன்று மணிக்கு உடம்பை விட்டு வெளியேறும் போது வீட்டின் முன்னால் உள்ள பலா மரத்து கிளை உடைந்து விழும்" என்று கூறினான். பூசாரிக்கு வாக்குக் கொடுத்தப்படியே தீய சக்தி வெளியேறும் போது அதற்கு ஒரு முழுக் கோழி தீயில் வாட்டி கொடுக்கப்பட்டது. கண் மூடித் திறக்கும் வேளைக்குள் முழுக் கோழியையும் அந்தத் தீய ஆவி கபளீகரம் செய்ததைப் பார்த்து கூடியிருந்தவர்கள் அசந்தே போனார்கள்! கோழி எலும்புகள் மட்டும் சடசடவென கீழே விழுந்தன. அடுத்த நிமிடமே பலா மரக்கிளையும் முறிந்து விழுந்தது! பேய் தள்ளாடிய அந்தக் கணத்தை பயன்படுத்தி பிரதீப்பின் உச்சி தலைமயிரை கத்தரித்து போத்தலில் போட்டு அடைத்த பூசாரி அதை முச்சந்தியில் போட்டு எரிக்க சகாக்களோடு ஊர் எல்லையை நோக்கிப் புறப்பட்டார்.

"ஏய் முத்து பூசாரி என்னை எரிச்சுடாதே... என் காதல் மனைவி 'எமி' என்னை எதிர்பார்த்து நீர்கொழும்பில் காத்திருக்கா என்னை விட்டுடுயா" என்று ரொபர்ட் ஆவி கெஞ்சத் தொடங்கியது. அந்தத் துஷ்ட ஆவியின் மாய்மாலத்தை காதில் வாங்காத முத்துப் பூசாரி மனதை திடப்படுத்திக் கொண்டு எரியும் தீயில் போத்தலைப் போட்டார்!

பேய்களுடன் டீல்!


கஹவத்தை பகுதியில் முத்துப் பூசாரியும் ஒரு பிரபலமான நபர்தான். பூவான் மருதை என்பது இவரின் நிஜப் பெயர். தாம் அடக்கும் பேய் மற்றும் துஷ்ட ஆவிகளின் கொடூரத் தன்மைகளை அறிந்து அவற்றை எரிப்பதா, புதைப்பதா, கரைப்பதா என்பதை தீர்மானித்துக் கொள்வாராம். பேய்களை பிடித்து போத்தலில் அடைத்து அவற்றின் கதைகளை முடிக்கப் போகும்போது முத்து பூசாரியிடம் பேய்கள் மன்றாடி உயிர்பிச்சை கேட்குமாம். சில நேரங்களில் மனமிரங்கும் முத்து, அந்த ஆவி அல்லது பேய் ஆபத்து அற்றவையாக இருக்குமானால் பிழைத்துப் போகட்டும் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு விட்டு விடுவாராம். அப்படி பூசாரி பேய்களை வெளியே விட்ட விசயத்தை சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்களுக்கு சொல்வதில்லை. சில பேய்களிடம் வியாபார டீல் பேசி, தமது பேய்விரட்டும் வேலைகளுக்கு உதவுவதாக அவைகள் சம்மதித்தால் ஒப்பந்தம் போட்டு அவைகளை வெளியே விடுவதும் உண்டாம். முத்து மட்டுமல்ல, ஏனைய வித்தை தெரிந்த பூசாரிமாரும் பேய், ஆவிகளுடன் பேசி தமது வேலையாளாக வைத்துக் கொள்வது வழக்கம்தான். சில நேரங்களில் பூசாரியின் சகாக்கள் "பூசாரி, நமக்குத்தான் வேலை குறைவாக இருக்கிறதே! எரிக்கப் போகும் அந்தப் பேயை திறந்து விட்டால், அவை மீண்டும் யாரையாவது பிடிக்கும். நமக்கு பேய் ஓட்டும் வேலையும் கிடைக்குமே"  என்று யோசனை சொல்வதுண்டு. ஆனால் முத்து பூசாரி செய்யும் தொழிலை தெய்வமாக மதிப்பதால் தம்மை நம்பியோருக்கு துரோகம் செய்வதில்லையாம்

No comments:

Post a Comment