Saturday, January 10, 2015

தைப் பொங்கல் சிறப்பு சந்திப்பு

தமிழுக்கு எண் வரிவடிவங்களை உருவாக்கி இருக்கும் தமிழ் புகழேந்தி


நேர் கண்டவர்: மணி ஸ்ரீகாந்தன்

'இந்திய மொழிகளில் தமிழைத் தவிர ஏனைய மொழிகளுக்கு சொந்தமாக எண்கள் உண்டு. செம்மொழியான தமிழுக்கு எண்கள் இல்லை என்பதால் எளிமையான வழிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளேன்'


'பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை அரசு அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்தும் தைரியம் எம். ஜி. ஆருக்கு இருந்தது. ஆனால் எனது தமிழ் எண் சீர்திருத்த அறிக்கையைப் பார்த்துவிட்டு இப்போது இது அவசியம் இல்லை என்று கிடப்பில் போட்டுவிட்டது தமிழக அரசு'

'யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று மகாகவி பாரதியார் பாடிச் சென்றார். உலகில் 6800 மொழிகள் உள்ளன. world watch institution  என்ற அமெரிக்க நிறுவன அறிக்கையின்படி இவற்றில் இரண்டாயிரம் மொழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வரிசையில் தமிழ்மொழி முதலிடம் வகிக்கிறது. தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், ஈப்ரு ஆகிய மொழிகளில் தமிழ் மட்டுமே வாழும் மொழியாக இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்று இருந்தாலும் அதிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக தமிழில் எண்கள் இல்லை. இதை ஒரு குறைபாடாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு மொழிக்கு எண்ணும் எழுத்தும் கட்டாயம் இருக்க வேண்டாமா? அப்போதுதான் அது முழுமையான மொழியாகத் திகழ முடியும்? தமிழ் எண்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட முழுமையாகத் தெரிவதில்லை, பெரிய அறிஞர்கள், பேராசிரியர்களுக்குக் கூடத் தமிழ் எண்களில் பரிட்சியம் கிடையாது. அதை யாரும் பொருட்படுத்துவதும் இல்லை. 'கற்றுக்கொள்ளவும் மனதில் இருத்தவும் சிரமமாக உள்ளது, புரியவில்லை' என்பதே இதற்கு சொல்லப்படும் காரணம். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கான ஒரு இலகுவான வழியைக் கட்டு பிடிப்பதற்காக பல ஆண்டுகளைச் செலவிட்டு இறுதியாக ஒரு வழியைக் கண்டு பிடித்து இருக்கிறார் ஒருவர்.
இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழக தொல்லியல், கல்வெட்டு அறிஞரான இவர் பெயர் தமிழ் புகழேந்தி. இவர், 'மொழிகள் பலவும் கற்போம் கலப்பின்றித் தமிழைப் பேசுவோம், எழுதுவோம்' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு 'தமிழர் உலகம்' என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டு வருகிறார்.

ஒரு இனிய மாலை வேளையில் வேலூர் சாய்நாதபுரத்திலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

"என்னுடைய தமிழ் ஆராய்ச்சியில் நம்மொழிக்கு எண்கள் கிடையாது என்பதை அறிந்து கொண்டேன். நாம் இப்போது பயன்படுத்துவது கிரந்த எண்கள். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் கிரந்த மொழி உருவாக்கப்பட்டபோது இந்த எண்கள் உருவாக்கப்பட்டன. இவை தமிழ் எண்கள் கிடையாது, அவற்றை எழுத்து மூலம் எழுதியுள்ளனர். ஒன்று, பத்து, நூறு என்று எண் குறியீடுகள் இல்லை. இந்தியாவில் எழுதப்படக்கூடிய எல்லா மொழிகளுக்கும் எண்கள் உள்ளன. செம்மொழியான தமிழுக்கு மட்டும் சொந்தமாக எண்கள் இல்லை. மற்ற நாட்டினர் நம்மைப் பார்த்து, 'பழமையான செம்மொழி என்கிறீர்களே, ஏன், உங்களுக்கு மட்டும் எண்கள் இல்லை?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இது பெரும் குறையாக இருக்கிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய அதை நானே வடிவமைக்க முயற்சி செய்தேன். பல வருடங்களாக முயற்சி செய்து தேடியதில் ஒரு நல்ல வடிவம் கிடைத்தது. அதாவது வார்த்தையின் முதல் எழுத்தை எண்களாகக் கொண்டு எழுதும் முறையே இது.

ஒன்று என்பதை ஒ, இரண்டு என்பதை இ, மூன்று என்பதை மு இப்படியாக வடிவமைத்தேன். இது மிகவும் எளிமையாக இருந்தது. இதை வைத்து இப்போது நாம் பயன்படுத்தும் ரோமன் எழுத்துக்கு நிகராக எழுத முடியும். கணக்குப்போட முடியும். இந்தக் கணக்கு முறையைப் பார்ப்பவர்கள் பத்து நிமிடத்தில் தமிழில் கணக்கு எழுதும் ஆற்றலை பெற்றுவிடுவார்கள்" என்று அந்த கணக்கு அட்டவணையை எம்மிடம் கையளித்த தமிழ்ப் புகழேந்தி தொடர்ந்து பேசினார்.

இந்தக் கணக்குமுறை உலகளாவிய ரீதியில் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் தமிழக அரசு பரிந்துரை செய்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியிலும் இறங்கினேன். தமிழ் வளர்ச்சிக்காக எம்மோடு கரம் சேர்த்து பாடுபடும் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் நான் தயாரித்த எண் அட்டவணையைப் பார்த்து என்னைப் பாராட்டினார். அதை ஒரு கையேடாகவும் வெளியிட்டு கௌரவம் அளித்தார். இந்த எண்முறை சிறப்பாக இருப்பதாக பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் தமிழக அரசோ நாம் விடுத்த வேண்டுகோளுக்கு 'இப்போதைக்கு இது அவசியமில்லை' என்பதாக பதில் தந்தார்கள்" என்று தமிழ் புகழேந்தி கூறி விரக்தியோடு பெருமூச்சு விடுகிறார்.
வி.ஐ.டி. வேந்தர்      
கோ.விஸ்வநாதனுடன்
அப்படியென்றால் தமிழ்மொழி அமுலாக்களில் தமிழ்நாடு அரசு போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்று சொல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினோம்.

"அக்கறை இருந்தால் இப்படிச் சொல்வார்களா... தமிழ்மொழி மீது பற்றுள்ளவர்கள் ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமிழ் வளர்ச்சியடையும். தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தியவர் எம். ஜி. ஆர்தான். அதன் பின்னரேயே உலகளாகவிய அளவில் அது பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த யாரும் தமிழ் எழுத்துக்கள் பற்றி சிந்திக்கவே இல்லை" என்று கொஞ்சம் சூடாகவே பதில் அளித்தார் தமிழ்புகழேந்தி.

சிங்கள மொழியில் D.F. போன்ற வல்லின உச்சரிப்பு இருக்கிறது. தமிழில் இன்னும் இந்தக் குறைபாடு நீடிக்கிறதே...? என்று எமது சந்தேகத்தை எழுப்பினோம்.

"தமிழ் ஒரு செழுமையான மொழி. ஆனால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்து நிவர்த்தி செய்வது காலத்தின் கட்டாயம். இப்படி தமிழில் விடுபட்ட எழுத்துக்கள் நிறைய இருக்கிறது. விடுபட்ட எழுத்துக்கள் என்பதைவிட தமிழ் அட்டவணையில் இல்லாத எழுத்தையே பயன்படுத்துகிறோம். தமிழ், சமஸ்கிருதம், கிரந்தம் உள்ளிட்ட மொழிகள் எப்போது தோன்றின என்பதை ஆய்வு செய்யும்போது ஸ.ஜ இரண்டும் தமிழ் எழுத்துக்கள்தான் என்று தெரியவந்தது. கிரந்தம் உருவாவதற்கு 700 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் ஸ.ஜ எழுத்துக்கள் உள்ளன. இதை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
தமிழ் சீர்திருத்தம் பற்றி
பெரியாருடன்
கலந்துரையாடும் எம்.ஜி.ஆர்.


இதை கிரந்தம், சமஸ்கிருதம் என்கிறார்கள். ஆய்வு செய்து பலரும் தமிழ் மொழியின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் அ.முதல் ன வரை 30 எழுத்துக்கள் என்று தொல்காப்பியத்தில் உள்ளது. அதில் ஸ.ஜ.வும் சேர்த்தால்தான் 30 எழுத்துக்கள் வரும். விடுபட்டால் வராது. இது ஒரு சான்று. அடுத்து, ஸ.ஜ வை தவிர்த்துவிட்டு தமிழை பயன்படுத்த முடியாது. இதுவும் ஒரு சான்று. இந்த வரலாற்று உண்மைகள் நமக்கு தெரியாமல் போனதற்கு காரணம் உண்டு. 600 ஆண்டுகளாக தமிழகத்தைத் தமிழர் அல்லாதவர்களே ஆட்சி செய்ததால்தான் தமிழ் மொழிக்கு இக்குறைபாடுகள் ஏற்பட்டிருக்க வேண்டும்" என்று ஆதாரங்களோடு அடித்துச் சொல்கிறார் புகழேந்தி.

"பதின்மூன்று எழுத்து சீர்திருத்தங்களின் பின்னரேயே தமிழை கணினியில் ஏற்றுவது இலகுவானதாயிற்று. தமிழாராச்சி மாநாடு, செம்மொழி மாநாடுகளில் நம்மவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள். அத்தோடு கதை சரி. பலகோடி ரூபா செலவில் நடாத்தப்படும் இம்மாநாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது நடந்ததாக இல்லை" என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் தமிழ் புகழேந்தியிடம்,

'பிரியதர்ஷனி, பிரியா போன்ற பெயர்களை சிலர் ப்ரியதர்ஷனி, ப்ரியா என்று எழுதுகிறார்களே இது தவறுதானே....?' என்று எமது சந்தேகத்தை எழுப்பினோம்.

"அது மாபெரும் தவறு. குற்றெழுத்தில் ஒரு வாக்கியம் எப்படி தொடங்கலாம்? நீங்கள் ப்ரியாவைப் பற்றி பேசுகிறீர்கள் ஸ்டாலினை மறந்து விட்டீர்களே! தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி தனது மகனின் பெயரை ஸ்டாலின் என்ற குற்றெழுத்தில் தொடங்க அனுமதித்தார் என்பது எனக்கே விளங்கவில்லை" என்று கண்களில் ஆச்சர்யம் காட்டுகிறார் இவர்.
"தமிழ் நாட்டில் தமிழ் சிறப்பாக இல்லை. மற்ற நாடுகளில் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அது நமக்கு முக்கியம் இல்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் தோன்றிய நம் நாட்டில்தான் அது சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய பிழைகளை நாம் செய்கிறோம். தந்தையின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி விட்டு தன் பெயரை எழுதுவது, ஆங்கில வார்த்தையை தமிழில் எழுதுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஆங்கிலம் உலக மொழி. நாம் அனைவரும் அதை கற்க வேண்டும். ஒவ்வொரு மொழியும் ஒரு கண் போன்றது. மொழிகளைப் பயில்வதில் தவறில்லை. ஒவ்வொருவரும் நான்கு மொழியாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று கூறிய தமிழ்புகழேந்தி தமது நேர்காணலை நிறைவு செய்தார்.

4 comments:

  1. இந்த வடிவம் எளிமையாகதான் இருக்கிறது... இதனையே ஏற்றுக்கொள்ளலாமே... அறிஞர்கள் என்ன சொல்வார்களோ...

    ReplyDelete
  2. தமிழ் புகழேந்தி என்பது சரியா? அல்லது தமிழ்ப் புகழேந்தி என்பது சரியா?

    ReplyDelete
  3. தமிழ்ப் புகழேந்திதான் சரி! தமிழ் புகழேநதி என்று எழுதும் போது தமிழ் தனித்தும் புகழேந்தி தனித்தும் நிற்கின்றன. இரண்டுக்கும் தொடர்பில்லை.

    ReplyDelete