Thursday, December 31, 2015

மனநல மருத்துவக் கதைகள்

காதலனை புதைகுழிக்கு அழைத்த காமம் தணியாத ஆவி!

~~மகேஷ் எங்கேடா?|| ~~இங்கே தான் படுத்திருந்தான்... இங்கே எங்கேயாவது போயிருப்பான்||

அம்மா கேட்ட கேள்விக்கு அசுவராசியமாக பதில் சொல்லிவிட்டு டீயை உறிஞ்சினாள் ரேணுகா. மகேஷின் அக்கா.

~~வேலை வெட்டி இல்லாத பயல்.... எங்கே சுத்துறானோ... நேற்றும் காலையில் அவனைக் காணலை... அதான் கேட்டேன்||

அப்போது சுப்பையாவின் குரல் வாசலில் கேட்டது.

~~கல்யாணியம்மா.... கல்யாணியம்மா.... வாசலுக்கு வாங்களேன் ஒரு விஷயம் சொல்லணும்...||

~~ஏன் சுப்பையாண்ணே காலையிலே என்ன விசேஷம்?||

விசேஷமா... விசேஷம்தான்... நம்ம சுடுகாட்டில ஒங்க மகேஷ் படுத்துத் தூங்கறான்... இப்போ பாத்துட்டுத்தான் வர்றேன்> நீங்களே போய்ப் பாருங்க||

சொல்லிவிட்டுப் போய் விட்டார் சுப்பையா

பகிரென்றது கல்யாணிக்கு. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவள் ஓட> ரேணுகாவும் பின்னால் ஓடினாள்.

மயானம் கால் கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. அவர்கள் போய்ப்பார்த்தபோது சாரமும் பனியனுமாக மகேஷ் ஒரு கல்லறையின் மீது சுருண்டு படுத்துக் கிடந்தான். கல்யாணிக்கு  அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! ஏனெனில் அவன் படுத்துக் கிடந்தது சரோஜாவின் சமாதியின் மீது. அவள் அவனது காதலியாக இருந்து தற்கொலை செய்து கொண்டவள்.

மகேஷ் - சரோஜா இருவரும் பள்ளிக்காலக் காதலர்கள். விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் பூகம்பமே வெடித்தது. இக்காதலை இரு வீட்டாரும் விரும்பவில்லை. சரோஜாவை வீட்டில் பூட்டி வைத்து பின்னர் தூர இடமொன்றுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். எவ்வளவோ முயன்றும் மகேஷினால் அவளது இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான்கு மாதங்களின் பின்னர் அந்தச் செய்தி புயலென அவனைத் தாக்கியது. காதல் வேதனையையும் பிரிவையும் தாங்க முடியாத அவள் தற்கொலை செய்திருந்தாள். ஊருக்குக் கொண்டுவரப்பட்ட சடலம் அந்த மயானத்தில் புதைக்கப்பட்டது. இது நடந்து சில வருடங்கள் கடந்து விட்டன. மகேஷ் பைத்தியம் பிடித்தவன் போல சுற்றித் திரிந்து பின்னர் சமாதானமடைந்து விட்டான். படிப்படியாக சரோஜாவின் நினைவு அவனை விட்டு அகன்ற நிலையில்தான் அவள் புதைகுழியின் மீது இரவில் சென்று படுத்து உறங்குவதை அவன் ஆரம்பித்திருந்தான்.

இனி> அதிர்ச்சி அடையாமலா இருப்பார்கள் மகேஷ் வீட்டார்!

மகேஷை எழுப்பி வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். தனக்கு என்ன நடந்தது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அன்றிரவு அவனுக்கு பக்கத்திலேயே கல்யாணியும் மகேஷின் தம்பியும் படுத்துக் கொண்டார்கள்.

இரவு பன்னிரெண்டு மணி தாண்டிய நிலையில் மகேஷ் தூக்கத்தில் புலம்ப ஆரம்பித்தான். ~~அதோ அவள் நிற்கிறா... என் செல்லம்.... வாடி|| என புலம்ப ஆரம்பித்த போது கல்யாணியும்> தம்பியும் விழித்துக் கொண்டார்கள். தம்பி பாரதி லைட்டைப் போட்டான். பாயில் அமர்ந்து எதிர்ச் சுவர்ப் பக்கமாகப் பார்த்து தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தான் மகேஷ். எதிரில் யாரோ நிற்பதைப் போலவும் அவருடன் பேசுவதும் போலவும் இருந்தது உரையாடல். அது தன் இறந்த காதலியுடன் பேசுவது மாதிரித்தான் இருந்தது. பிரமை பிடித்த மாதிரி இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அவன் எழுந்து சரி> ~~நீ போ... உன் பின்னாலேயே நான் வாரேன்...|| என்று கூறியபடியே வாசல் கதவை நோக்கி நடந்தான். தாள்ப்பாளைத் திறக்க முயற்சித்த போது கல்யாணியும் பாரதியும்  அவனுடன் மல்லுக்கட்டி அவனை இழுத்து வந்து படுக்க வைத்தனர். இந்தக் களேபரத்தில் மகேஷ_க்கு விழிப்பு வந்து விட்டது.

விழிப்பு ந்ததும்> ~~என்னம்மா என்ன நடந்தது... தூங்கல்லியா?|| என்று கேட்டான். ~~தூக்கத்தில் உளறினாய் அதுதான் லைட் போட்டுப் பார்த்தோம்|| என்று சமாதானம் கூறிவிட்டு அனைவரும் படுத்துக் கொண்டனர். மகேஷ் உடனடியாகத் தூங்கிப் போனான்.

மறுநாளே கல்யாணி ஒரு பெண் மந்திரவாதியை அழைத்து வந்தாள். அவனது மாஜி காதலியின் ஆவி மோக வெறி அடங்காமல் சுற்றித் திரிவதாகவும் மகேஷைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவள் சொன்னதோடு இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டாள்!

~~நீங்கள் சரியான பரிகாரம் செய்யாமல் விட்டால் அந்தப் பழி தீர்க்கத் திரியும் பெண் ஆவி ஒருநாள் மகேஷை தன்னுடன் அழைத்துக் கொள்ளலாம். அது தவறினால் இந்தக் குடும்பத்தில் ஒருவரைப் பலி தீர்க்காமல் அடங்காது. நிறைவேறாத ஆசையுடன் துர்ச்சாவு அடைந்தவர்கள் தங்களது ஆசை நிவர்த்தியாகும்வரை நூறு ஆண்டுகளானாலும் சுற்றித் திரிவார்கள். நீங்கள் கேள்விப் பட்டதில்லையா?||

இதைக் கேட்டு மகேஷ் குடும்பம் அதிர்ந்து போனது. ~~என்ன செய்யனும் சாமி?|| என்று பணிவுடன் கேட்டாள் கல்யாணி.

~~அந்தச் சுடுகாட்டிலேயே மாந்திரிக பூசை செய்யணும். ரெண்டு கருப்பு சேவல்களை பலிகொடுத்து அந்தக் கல்லறையை இரத்த அபிஷேகம் பண்ணனும். ஆவியோட ஆசையை அடக்கி குளோஸ் பண்ணனும். இது மகா யந்திர யாகமாயிருக்கும்.... கொஞ்சம் அதிகம் செலவாகும்... என் கூட ரெண்டு சாமிகளும் வருவாங்க...

சரி என்று தலையாட்டிவிட்டு அவளை அனுப்பி வைத்தார்கள். முழு வேலையையும் செய்து முடிக்க ஐம்பதாயிரம் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும் என்று சொன்னார் சுப்பையா அண்ணன். அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தது அந்தக் குடும்பம்.

இந்த நிலையில்> இந்த ஆவி சுற்றும் வீடு பற்றிக் கேள்விப்பட்டு வீட்டுக்கு ஒரு நாள் தன் சைக்கிளில் வந்தான் அன்டனி. பாரதியின் நண்பன். கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதி என்பது அந்த வீட்டாருக்கு தெரிந்த விஷயம். அவன் பேச்சில் நியாயங்கள் இருப்பது மாதிரித் தெரிந்தாலும் மகேஷ் வீட்டார் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ~அவனுக்கு இளமை வேகம். வீடு> வாசல்> பொறுப்பு எல்லாம் வந்ததும் சரியாகிப் போவான்> நல்ல பிள்ளை| என்பாள் கல்யாணி.

கல்யாணியிடம் அவன் விரிவாகப் பேசினான். ~~உங்களிடம் பணம் கறக்க அந்தப் பெண் மந்திரவாதி முயற்சி பண்றா. அவளிடம் ஏமாற வேண்டாம். நம்ம அண்ணனுக்கு ஏதோ மனப்பிரச்சினை இருக்கு. தூக்கத்தில் நடக்குற வியாதிபோல... டவுனில் எனக்குத் தெரிந்த ஒரு மனநல டொக்டர் இருக்கிறார். ஒரே ஒரு தடவை அவரிடம் கூட்டிப் போவோம். அது சரி வரலைனா நீங்க மந்திர தந்திரத்துக்குப் போகலாம்|| என்று அவன் கூறியதை அவள் ஏற்றுக் கொண்டாள்.

மனநல மருத்துவர் முழுக் கதையையும் கேட்டார்.

~~இது ஒரு நோய்.TEMPORAL LOBE EPILEPSY என்பது மருத்துவப் பெயர். இதைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளன. தொடர்ச்சியாக சிகிச்சை பெற முற்றிலும் குணமாகி விடுவான்|| என்று சொல்லிய மருத்துவர் மருந்துகளை எழுதித் தந்தார்.

இது ஒரு வலிப்பு நோய். மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படும்போது இது வருகிறது. ஆனால் அந்த வலிப்பு சமயத்தில் என்ன செய்கிறோம் என்பது அந்த நபருக்குத் தெரியாது. இதன் தீவிரம்> அந்தந்த மனிதரின் இயல்புக்கு அமைய மாறுபடும். சிலர் இந்த நோய்வாய்ப்படும் போது கொலையும் செய்யலாம். பெண்களைப் பலாத்காரமும் செய்யலாம்.

இந்த வலிப்பு வரும்போது அந்த நபர் தூக்கத்தில் நடந்தாலும் கண்டபடி திரியமாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு மட்டும் சென்று குறிப்பிட்ட சில செய்கைகளை மட்டும் செய்துவிட்டு உறங்கிப் போவார்கள். உறக்கம் கலைந்த பின்னரேயே> எப்படி இங்கே வந்தோம் என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். 

~~மகேஷ் விஷயத்தை எடுத்துக் கொண்டால்> அவன் காதலிக்காமல் இருந்திருந்தாலும் இந்த நோய் வெளியிட்டிருக்கும். வீட்டை விட்டு வெளியே போய் எங்கேயாவது உறங்கியிருப்பான். அவனது காதல் தோல்விக்கும் இதற்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமானால்> காதலி இறந்த அதிர்ச்சி இந்த நோயை வேகப்படுத்தி இருக்கலாம். உண்மையில்> தன் காதலி கல்லறைக்குப் போய் உறங்கியது எதேச்சையானது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நோயின் அடிப்படை> தூக்கத்தில் எழுந்து வெளியே சென்று வேறிடமொன்றில் உறங்கி விடுவதுதான். இந்த நேரத்தில் செய்யும் செய்கைகள்தான் ஆளாளுக்கு வேறுபடும். இந்த நோய்க்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பரம்பரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் மருந்துகள் உள்ளன. தொடர்ச்சியாக எடுக்க முற்றாகக் குணப்படுத்தி விடலாம்|| என்று பின்னர் மருத்துவர் அன்டனியிடம் விரிவாகச் சொல்லி அனுப்பினார். 

ரிஷி

Monday, December 28, 2015

தமிழகத்தின் பன்முகப் படைப்பாளரான தமிழ்த்தேனி வானவில்லுக்கு அளித்த பேட்டி

உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்


'அனைத்து உயிருக்கும் அவனே ஆதி அவனை விடவா உயர்ந்தது ஜாதி? மனிதமும், உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை சொற்கள் உணர்த்தாது' என்பதை தாரக மந்திரமா கொண்டிருப்பவர் எழுத்தாளர் தமிழ்த்தேனீ. சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வரும் இவர் ஒரு பன்முகக் கலைஞர். ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடை நாடகங்கள், சினிமா, சின்னத்திரை என கலை உலகில் வளய வருபவர். குறிப்பாக, பெரிய பட்ஜட் மெகா படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டுபவர். ரஜினியின் சிவாஜி படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரு இசைக்கருவி கடையில் வயலின் வாங்குவாரே அந்தக் கடையின் மெனேஜராக வரும் பெரியவர்தான் இவர். இப்போது உங்களுக்கு தமிழ்த் தேனீயை ஞாபகம் வருகிறதா? திருமுல்லைவாயலில் உள்ள அவரின் வீடு வரை சென்று போட்டோக்களை மட்டும் க்ளிக் செய்துவிட்டு வந்து, அவரை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு பேசினோம். அதுவே உங்களுக்காக....


நீங்கள் ஒரு இந்துவா?

ஆமாம் பிறப்பால் இந்து, வளர்ப்பால், அனுபவத்தால் மனமுதிர்ச்சியால் ஒரு மனிதன்.

மனிதனை சாதி அடிப்படையில் பிரிக்கும் ஒரே மதம் என்ற வகையில் உங்களுக்கு ஆசூசை இல்லையா?
மனிதர்களை ஜாதி அடிப்படையில்  பிரிக்காத  மதம் ஒன்று உலகில் உண்டா? அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்போது இந்து மதத்தில் இருப்பதற்கு அசூயைப்படலாம். ஆகவே எனக்கு இந்து மதத்தில் இருப்பதற்கு  பெருமையே. எந்த  ஒரு மதம் மனிதத்தை வலியுறுத்துகிறதோ  அதுதான் என் மதம்.

சாதியற்ற மதம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அந்த மதத்தை ஆதரிக்கும் முதல் மனிதனாக நான் இருப்பேன்.

பெரியார் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பெரியாரை நான் மதிக்கிறேன். மனிதர்களுக்கு சுய மரியாதை எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நடக்கும் நடைபாதைகள் சாக்கடையாய் இருக்க, உண்ணும் உணவுப் பொருட்கள் கலப்படமாய் இருக்க, உடுத்தும் உடை கூட உச்சாணிக் கொம்பில் இருக்க சொந்தமாய் ஒரு வீடும் இல்லாமல் நடைபாதையிலே மக்கள் படுத்திருப்பது போன்ற நிலமைகளைக் காணும் போது பெரியார் சொல்லிக் கொடுத்த சுய மரியாதையை மக்களும் உணரவில்லை என்று கருதுகிறேன்.
மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியும் பெரியார் சொன்ன சுய மரியாதையைக் கற்கவில்லை. மக்களுக்கு அவர்களின் சுய மரியாதை, தன்மானம், நியாயமான உரிமைகள் ஆகியவற்றை உணர்த்த மீண்டும் ஒரு பெரியார் உருவாக வேண்டும்  என்று நினைக்கிறேன்
சிவாஜியில் தேனீபா. ஜ. க. அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்து மதம் என்பதைவிட இந்து மனம் என்பதை ஆதரிப்பவன் நான். கட்சிகளும் அரசியல்வாதிகளும்  எப்போது மனித எழுச்சி பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அந்த எழுச்சிக்காக காத்திருக்கிறேன்.

மாட்டிறைச்சி உண்பது அல்லது விற்பனை செய்யப்பட வேண்டுமா? இல்லையேல் எல்லாவகை இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட வேண்டுமா?
2008 ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் சைவ உணவுக்காரர்கள் - 7.3%, இங்கிலாந்தில் 2006 ஆம் ஆண்டு கணக்குப்படி சைவ உணவுக்காரர்கள் 6%, ஆஸ்திரேலியாவில் 3%, பெல்ஜியத்தில் 2%, க்ரோடியாவில் 3.7 %, டென்மார்க்கில்; 1.5%, ப்ரான்சில் 2 %, நெதர்லாந்தில்  4.3 %, நோர்வேயில் 2%, போலண்ட் நாட்டில் 1%, போர்சுகல்லில் 0.3% ஆக  பன்னிரண்டு நாடுகளில் மொத்தம் சைவ உணவு 34.6, அசைவ உணவு 65.4. ஆகவே உலகில்   மீதமுள்ள நாடுகளில் இருப்போரையும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட   60 சதிவிகிதத்தினர் அசைவ உணவு உண்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது இறைச்சியை எப்படி தடை செய்வது? மனிதர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை உண்டல்லவா? ஆகவே இறைச்சியை தடை செய்யக் கூடாது என்பதே என் கருத்து.

உங்கள் இயற்பெயர் என்ன?
என் இயற்பெயர்  கிருஷ்ணமாச்சாரி . ஆர்

அடிப்படையில் நீங்கள் யார்?
உலகில் உள்ள கோடானுகோடி ஜீவராசிகளில் நானும் ஒரு ஜீவராசி. ஒரு கவிஞரின் மகன். அடிப்படையில் நான் மனிதன் .

எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறீர்கள்? 
இது வரையில் ஐந்து புத்தகங்கள்.

1.வெற்றிச் சக்கரம் (52 சிறு கதைகள்)  
2.தங்கத்தாமரை(32 சிறுகதைகள் )
3. மனம் ஒரு மந்திரம்
4. வட திருமுல்லைவாயில் கொடியிடைநாயகி ஆலயம் எனும் நூலையும் 
5. குறும்புக் கவிதை எனும் நூலையும் இணையப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
 
இன்னும் மூன்று புத்தகங்களை உருவாக்கி வருகிறேன்.

உங்களுக்கு பிடித்த துறை எது?  எழுத்தா, சினிமாவா அல்லது சின்னத்திரையா?
என் மனதுக்குப் பிடித்த துறை என்பதைவிட  எனக்கு பிடித்தது எழுத்து என்று சொல்வேன் ஏனென்றால் துறை என்று எடுத்துக் கொண்டால் எந்தத்  துறையும் நேர்மையாக நாணயமாக திறமைகளை மதிப்பதாக  இல்லை.

திரைப் படங்களிலும், சின்னத் திரையிலும் நன்றாக நடிக்கக் கூடிய கதையம்சம் நிறைந்ததாக இருந்தால் நடிக்க விருப்பம் உண்டு. ஏனென்றால் நடிப்பையும் நான் ஒரு கலையாகவே மதிக்கிறேன்.

பல படங்களில் நடித்தும் ஒரு பெயர் சொல்லும்படியான இடத்தை இன்னும் பிடிக்க முடியாமல் போனதற்கு அதிர்ஷ்டமில்லை  என்பது மட்டும்தான் காரணமா?
எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை. என் உழைப்பும் முயற்சியும் போதாமை காரணமாக இருக்கலாம் அல்லது என்னுடைய பின்புலத்தில் வலுவான, வசதியான  தாங்கிகள் இல்லாமை காரணமாக இருக்கலாம்.

அல்லது முழு ஈடுபாடு இல்லையா?
முழு ஈடுபாடு எனக்கு இருந்தாலும் வாழ்க்கையின் சூழலால் குடும்பக் கடமைகளால்  முழுமையாக ஈடுபட நேரமில்லாமல் போயிருக்கலாம்.

இயல்பான நடிப்பு வரமாட்டேன் என்கிறதா?
நான் எப்போதுமே ஒளிபடக் கருவிக்கு முன்னால் மட்டுமே நடிப்பவன். வாழ்க்கையில் நடிக்காதவன். அதனால் இயல்பாக நடிப்பவன்தான்

இன்று இளங் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒரு வழியாக கதை அம்சம் கொண்ட, பரிசோதனை முயற்சிப் படங்களை வெற்றிப்படங்களாகக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது மாஸ் படத் தயாரிப்பு, மோகத்தைக் குறைக்கும் என்று நினைக்கிறீர்களா?
திரைத் துறையில் இது ஒரு ஆரோக்கியமான திருப்பம். ஆனால் நிச்சயமாக மாஸ் படத் தயாரிப்பு, மோகத்தைக் குறைக்காது பெரும்பாலான மக்கள் மாஸ் படத்தையே விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. கலையம்சம் நிறைந்த பல திரைப்படங்கள் ஓடாமையே இதற்கு சான்று.

ரஜனி அல்லது 'சுப்பர் ஸ்டார்' மோகம்; என்றைக்கு தமிழகத்தில் தணிகிறதோ அன்றைக்குத்தான் 'அம்மா மோகம்' போன்ற அரசியல் மோகமும் தணியும் என்கிறேன். இந்த முடிச்சு சரியான முடிச்சு என்று கருதுகிறீர்களா?
ஆறு படத்தில் 
நிச்சயமாக இல்லை இரண்டும் தனித் தனி மோகம், தனித்தனி முடிச்சுகள். ஆனால் இரண்டு மோகமும்  தணியாது. எப்போது இந்த இரண்டு மோகமும்  தணிந்து மக்கள் சுயமாக சிந்திக்கிறார்களோ, எப்போது நம் வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து தரப்படவில்லை என்பதை உணர்கிறார்களோ, சுதந்திரம் வாங்கி 68 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நாம் மாக்களாகவே நடத்தப்படுகிறோம், மக்களாக நடத்தப்படுவதில்லை என்பதை உணர்கிறார்களோ அப்போதுதான் நடிகர்கள் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் ஏற்படும்  தேவையில்லாத  கவர்ச்சியை மறப்பார்கள்.

தமிழனுக்கும் மதுவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒளவையாரும் கள்ளு குடித்ததாக சொல்வார்கள். கள்ளு மதுவா உணவா?
அப்படியானால் ஆங்கிலேயனுக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லையென்கிறீர்களா? அல்லது  வேறு எந்த நாட்டுக்காரர்களுக்கும் மதுவோடு தொடர்பு இல்லையென்கிறீர்களா?

தென்னை மரத்திலிருந்தோ பனை மரத்திலிருந்தோ இறக்கி உடனே குடித்தால் அதற்குப் பெயர் பதநீர். அதையே புளிக்கவைத்து அல்லது வேறு போதை தரும் பொருட்களைக் கலந்து அளிக்கும்போது கள் என்று ஆகிறது. ஆனால்  கள் உணவல்ல, போதை பானம் மட்டுமே. ஒளவையார் பதநீராகக் குடித்திருக்க நியாயம் உண்டு. கள் ஆனபின் குடிக்காமலும் இருந்திருக்கலாம்.

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?
பூரண மதுவிலக்கு  என்பது சாத்தியமே இல்லை.  மக்களுக்கு  நல்லவை பழக அதிக காலம் வேண்டும், ஆனால் தீயவை பழக குறுகிய காலமே போதும். அதுமட்டுமல்ல,  தீயவைகளைப் பழகிவிட்டால் அவற்றை விடுவது கடினம். அதனால் கள்ள மதுவை நாடி இன்னமும் கெட்டுத்தான் போவார்கள்.

இயன்ற வரையில் மது போன்ற போதை பானங்கள் மக்களை  அடிமையாக்குகிறது.  அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லதுதான். ஆனால் தவிர்க்க முடியாத அளவுக்கு ஏற்கெனவே மக்களைப் பழக்கிவிட்டார்கள் என்பதே உண்மை.

பாரதியார் பற்றிய ஆவணப்படம் தயாரித்தவர், தான் சேகரித்த சில விஷயங்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன் என்கிறார். உதாரணம் அவரது நாட்டு சாராய, கஞ்சா பழக்கம். கண்ணதாசனின் குடிப்பழக்கம் அனைவரும் அறிந்தது. நாம் ஏன் புகழ் பெற்ற மனிதர்களின் 'கெட்ட' பழக்கங்களை வெள்ளையடித்து மறைக்கிறோம்? பாரதியாரை திறமையான கவிஞன், அறிஞன் என்று பார்ப்பதைப் போல அவரை மனிதனாகக் குறைகள் உள்ள மனிதனாகப் பார்ப்பதில் தமிழனுக்கு என்ன பிரச்சினை?
ஆவணப் படம் எடுப்பவர்கள் 100 சதவிகிதம் உண்மையை எடுப்பதில்லை, மாறாக, எப்படி எடுத்தால் மக்களுக்கு பிடிக்குமோ அப்படி எடுக்கிறார்கள். ஆகவே கதாநாயகன் என்று  மகாகவி பாரதியாரை வைத்துக் கொண்டாலும், கண்ணதாசனை வைத்துக் கொண்டாலும்  கதாநாயகனாக மக்கள் மனதிலே ஒரு மாயப் பிம்பம் ஏற்படுத்த குறைகளைக் களைந்துவிட்டு  நிறைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கம் தமிழனுக்கு மட்டுமல்ல, ஜாதி மத இன மொழி நாடு பேதமில்லாமல் எல்லோருமே கடைப்பிடிக்கும் பழக்கம்தான்.

Wednesday, December 23, 2015

மாற்றுத்திறனாளி சத்திய சீராளனுடன் ஒரு உரையாடல்


உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்.

'மாற்றுத்திறனாளி என்பது நல்ல பெயர். ஆனால் இங்கே பலர் வழக்கத்தில் 'நொண்டியன், குருடன், செவிடன்' என்று அழைக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது.'

'மதம் மாறுவதால் மாத்திரம் நமக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கப்போவதில்லை. மதம் மாறினால்தான் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றால் அவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சித் தலைவராகத்தான் இருப்பார்'

'நானே நான்கு விதமான வர்ணங்களை படைத்தேன், இனி நானே நினைத்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது' என்று கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியிருக்கிறார். செய்யும் தொழில்களின் அடிப்படையில் சாதிகளை பிரித்து, அதை குலங்களாக்கியதாக மனுதர்மம் பறைசாற்றுகிறது. வர்ண சிரமத்தை அது போற்றுகிறது. அதன் பிறகு வந்த நவீன காலத்திலும் தமிழகத்தை ஆட்சி செய்த ராஜாஜி, குலக்கல்வித் திட்டதை கட்டாயமாக்கிய போது பகுத்தறிவுவாதிகள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். அது ராஜாஜியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதோடு, குலக்கல்வித் திட்டத்தையும் கிடப்பில் போட்டது.

ஆனால் இப்போதும் சில குறிப்பிட்ட தொழில்கள், சாதி வாரியாகத்தான் இயங்கி வருகின்றன. ஆனால் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். காலமும் பொருளாதாரத் தேவைகளும் இந்த சாதிக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, எந்த தொழிலையும் யாரும் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது.

"இந்த கம்பியூட்டர் காலத்தில் யாருங்க சாதி தொழில்களை செய்கிறது? இப்போ நான் முடி திருத்தும் வேலை செய்கிறேன். எனக்கும் இந்தத் தொழிலுக்கும் சம்பந்தமே கிடையாதுங்க. ஆரம்பத்தில் நான் இந்தத் தொழிலை செய்யத் தொடங்கிய போது, என் சொந்தக்காரர்கள் எல்லோரும் நிறைய விமர்சனம் செய்தாங்க.'நமக்கு இது ஒத்துவராது, நம்ம சாதித் தொழில் இது இல்லை'னு சொன்னாங்க. ஆனால் நான் கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்துவிட்டேன். இன்றைக்கு ஒரு பதினைந்து வருசமா இந்தத் தொழிலை செய்து வருகிறேன். எனக்கு சோறு போடுற சாமி இந்த தொழில் தாங்க" என்று கெத்தாக பேசுகிறார். இங்கிரிய றைகமையில் 'சத்யா சலூன்' நடாத்திவரும் சத்தியசீராளன். நாற்பத்தாறு வயதாகும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி. கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தே முடித்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
"தமிழ்நாட்டில் எங்களை மாதிரியான ஆட்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறாங்க. அதை அண்மையில் பேப்பரில் படித்து தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம நாட்டு ஊடகங்களும், ஊணமுற்றவர் என்ற வார்த்தைக்கு பதிலாக மாற்றுத்திறனாளி என்பதை பயன்படுத்தலாம். என் போன்றவர்கள் எல்லோரும் சந்தோசம் அடைவாங்க. உங்களை விட எங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் திறமை இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் இந்த மாற்றுத்திறனாளி. ஆனால் நம்ம ஊரில் 'நொண்டியன்' என்று சொல்வாங்க, அதுதாங்க மனச ரொம்ப காயப்படுத்துது" என்று சொல்லும்போது, சீராளனின் கண்களின் ஓரத்தில் சில கண்ணீர்த்துளிகள்...

இந்தத் தொழில் செய்வது உங்களை மகிழ்ச்சிப்படுத்துதா? என்று கேட்டோம். "ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க" என்று சீராளன் சொல்லி நிறுத்த அங்கே வந்த அவரின் மனைவி ஜூலி 'ஆனாப்பட்ட ஒபாமா, ஒசாமான்னு யாராக இருந்தாலும் முடிவெட்டனும்னு வந்துட்டா எங்க வீட்டுக்காரருகிட்ட தலை குனிஞ்சு தானே நிற்கனும், அதனால எனக்கும் இந்த தொழிலை இவரு செய்கிறது சந்தோசம்தான்' என்றார் மகிழ்ச்சியோடு.... சத்யா முடி வெட்ட நூறும், சேவிங் பண்ண அறுபதும் வாங்குகிறாராம்.

"டவுனில முடிவெட்டி சேவிங் பண்ண 250 ரூபா வாங்குகிறாங்க. ஆனா நமக்கு எஸ்டேட்டுல அவ்வளவு வாங்க முடியாது. குறைஞ்ச சம்பளம் வாங்குறவங்ககிட்டே அதிகமான விலை வைக்கக் கூடாது. அதோட ரொம்ப வயசானவங்க வந்தா அவங்களுக்கு இலவசமா முடிவெட்டி விடுறேன். அவங்கக்கிட்டே பணம் கேட்க மனசு வரலீங்க!, அதே அவுங்க டவுனுக்கு போனா கட்டாயம் பணம் கொடுக்கணும். நம்மகிட்டே மனசாட்சின்னு ஒண்ணு இருக்குங்களேன்னு" சொல்லும் சீராளன், "சின்னப்புள்ளைங்களுக்கு மொட்டை போடுறதுக்கு மட்டும் ஆயிரம் ரூபா வாங்குறேன். ஏனென்றால் அது ரொம்ப கவனமா வெட்டணும். அதுக்குப் பிறகு சாமிக்கு ஒரு அர்ச்சனை கொடுக்கனும். அதனால்தான் அதிகமாகவே வாங்குகிறேன். செத்த வீட்டுக்கு மொட்டை போடப் போனாலும் அதே ரேட்டுதான். இந்தக் காலத்துல நாம விலையை குறைச்சாலும் மதிக்க மாட்டாங்க, 'அவரா! ஒரு நூறு ரூபா கொடுத்தா போதும்'னு  ஏளனமா சொல்லுவாங்க, அந்தக் காரணத்திற்காகவும் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், என்னங்க பண்ணுறது!" என்று எம்மைப் பார்த்து கேட்கிறார் சீராளன்.
சத்யாவின் சலூனில் லக்ஷ்மியோடு, யேசுவையும் போட்டோக்களில் வைத்து, வழிபடுகிறார். இதுபற்றி வினவிய போது,

"அட நம்மளுக்கு எல்லாம் ஒரே மதம் தாங்க. என் மனைவி கிறிஸ்தவர் இப்போ இந்துவாக இருக்கிறார். நானும் கொஞ்ச காலமா கிறிஸ்தவமாக இருந்து விட்டு இப்போ மீண்டும் இந்துவாக இருக்கிறேன். மதம் மாறியதால் நான் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக புரிஞ்சுகிட்டேங்க. மதம் மாறுவதால் நமக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கப்போவதில்லை. மதம் மாறினால்தான் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றால், அவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சித் தலைவராகத்தான் இருப்பார். யாரோ சொல்லி கேட்டேனுங்க, அது மறுக்க முடியாத உண்மைங்க" என்ற சீராளனின் முகத்தில் பூரிப்பு பளீச்சிடுகிறது.

சத்யா சலூனில் புதுவகையான முடிவெட்டும் கருவிகள் வைத்திருக்கிறார். "இதெல்லாம் எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பா கொடுக்கிறது. அவைகளையே நான் பயன்படுத்துகிறேன். இப்போ பாருங்க பெரும்பாலான இடங்களில் மூக்குத் துவாரத்தில் வளரும் மயிர்களை கத்திரியால் வெட்டுவார்கள். ஆனால் அது ரொம்ப ஆபத்தான விசயம். ஏன்னா மூக்கில் கத்திரியை நுழைக்கும்போது சிலருக்கு தும்மல் வந்துவிடும் அந்த சந்தர்ப்பத்தில் கத்திரி மூக்கில் குத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே ஸ்பெஷலாக சிறிய வகை வெட்டு மெஷின் ஒன்று வைத்திருக்கிறேன். இது மூக்கு முடியை அழகாக வெட்டி எடுக்கும்" என்றார். சத்யா ஸ்பெஷல் கட்டுக்கு மட்டும் நூற்றி ஐம்பது ரூபா அறவிடுகிறார். "சீசனுக்கு ஒரு கட்டுங்க, சிங்கம் கட்டு, அப்புறம். மாரி, மாஸ், அஞ்சான், புலி கட்டுன்னு நிறைய வந்திடுச்சி. போட்டோக்களை போனில டவுண்டோல் பண்ணி எடுத்து அது மாதிரியே பார்த்து வெட்டிடுவேன். அது நமக்கு கைவந்த கலை கண்ணு பார்த்தா கை செய்யுங்க!" என்ற சீராளன், அழங்காரப் பொருட்கள் செய்வதிலும் பெரிய திறமைசாலிதான்.

வெட்டப்படும் முடிகளை என்ன செய்கிறீர்கள்?

"திருப்பதியில் வெட்டப்படும் முடின்னா வருஷத்துல பத்துக் கோடிக்கு அதிகமாக ஏலத்துல போகுதாம். ஆனா இங்க இதை பத்து ரூபாய்க்கும் வாங்க யாரும் தயாராக இல்லை.

Sunday, December 20, 2015

சினிமானந்தா பதில்கள் -30
தமிழகத்தில் வெளிவந்த தீபாவளிப் படங்களில் இலங்கை திரைப்படமொன்றும் உள்ளதாமே, உண்மையா?
எம். காசிம், கண்டி

உண்மைதான் 'உயிர் வரை இனித்தாய்' என்ற இந்த திரைப்படம் டென்மார்க்கில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களின் தயாரிப்பாகும்.

2014இல் நடந்த நோர்வே திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை தட்டிச் சென்ற படம்.

கடந்த 6 ஆம் திகதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 திரையரங்குகளில், (அத்தனையும் குளிரூட்டப்பட்ட மால் திரையரங்குகள்) சென்னையில் மட்டும் 4 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.

சென்னையில் படங்கள் (பெரிய நடிகர்களின் படங்களும் உள்ளடக்கம்) மழையினால் கழுவப்பட்ட போதிலும் வெளியூர்களில் 'உயிர் வரை இனித்தாய்' தீபாவளியையும் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் 'மண்' மட்டுமே இதற்கு முன் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்படத்தை திரையிட குறைந்த பட்சம் 2 கோடி முதல் 15 கோடி வரை விளம்பரத்துக்கு மட்டும் செலவிட வேண்டும். (பெரிய நடிகர் படங்கள் கூட விளம்பரப்படுத்தினால்தான் ஓடும்) என்ற நிலையில் வெறுமனே பேஸ்புக் மற்றும் போஸ்டர் விளம்பரத்தை மட்டுமே நம்பி 'உயிர் வரை இனித்தாய்' வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இலங்கைத் திரைப்படமொன்றை வெளியிடுவது சாதாரண நாட்களிலேயே சாத்தியப்படாது. அந்த நிலையில் தீபாவளி சமயத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நடிகர்கள் இருவரின் படங்களுக்குப் போட்டியாக இலங்கைப் படம்? நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விடயம், நனவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இலங்கை திரைப்படமொன்றை வெளியிடுவது எளிதானது அல்ல. திரைப்படத்தை பதிவு செய்தல், தணிக்கை செய்தல், திரையரங்குக்கு கொண்டு செல்லல், அதன் சட்டதிட்டங்களை சந்தித்தல், தமிழக ரசிகர்களுக்கான திரைமொழியை வெற்றி பெறுதல், அத்தனையையும் தாண்டியதாக வேண்டும்.

தமிழ்நாட்டில் தணிக்கை செய்யப்பட்டு திரையரங்குகள் இல்லாமல் 260 தமிழ் படங்கள் வரிசை கட்டி நிற்கையில் அங்கு திரையிடும் வாய்ப்பை 'உயிர் வரை இனித்தாய்' பெற்றிருப்பது ஒரு மைல்கல் வெற்றி.

தடம் பதித்து விட்டது. இனி அடுத்த அடி...
அடி மேல் அடி வைத்துத்தானே நடை பழக வேண்டும்.

தீபாவளிக்கு வெளியான 'தூங்காவனம்', 'வேதாளம்' படங்களின் வசூல் எப்படி?
ராஜசேகர், கொழும்பு

உங்கள் கேள்வியில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளிக்கு வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு அல்ல ஐந்து. அவை வேதாளம், தூங்காவனம் மற்றும் சல்மான்கானின் தமிழில் டப் செய்யப்பட்ட மெய் மறந்தேன் பாராயோ, மற்றும் புதுமுகங்களின் நடிப்பில் உருவான இஞ்சி மொறப்பா ஆகியவற்றுடன் டென்மார்க்கில் தயாரான இலங்கையர்களின் கைவண்ணமான உயிர்வரை இனித்தாய். இந்தப் படங்களுடன் தீபாவளிக்கு முன்னர் வெளியான நானும் ரவுடிதான் படமும் தீபாவளிப் படங்களுடன் ஓடிக் கொண்டிருந்தது.

வேதாளம், தூங்காவனம் இரண்டும் முதல் நிலை தமிழ் படங்கள். ஆக் ஷன், அதிரடி ரகம். தீபாவளியை அடுத்த மூன்று நாட்களாக இரண்டும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடின. வேதாளம் ஒரு எட்டு முன்னாள் போனதாகக் கேள்வி. முதல்நாளே 15 கோடி, 8 நாட்களில் 100 கோடி வசூலித்ததாக இணையத்தில் புழுகப்பட்டது. உண்மையான 'கலெக் ஷன்' அந்த அளவுக்கு இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தீபாவளியை அடுத்த மூன்றாவது நாள் ஆரம்பித்த பேய் மழை ஏற்படுத்திய வெள்ளம் தமிழ் நாட்டை வெள்ள நாடாக மாற்றிவிட்டது. சென்னை ஒரு நீச்சல் தடாகமாகியது.

3 வாரமாக பெய்துவரும் மழையின் பின் இயல்பு நிலை எப்போது ஏற்படுமோ? தெரியவில்லை. நீந்திச் சென்றுதான் தியேட்டரை அடைய வேண்டும். வீட்டுக்கே வெளியே வர முடியாதவாறு வெள்ளம் வீட்டைச் சுற்றியுள்ள போது படம் பார்க்கும் நிலையில் எவரும் இருப்பார்களா? எனவே தீபாவளிக்கு வந்த தமிழ்ப் படங்களை ஓடாமல் நிறுத்தி வைத்துவிட்டார் வருணபகவான்.

'வேதாளம்' வெளியிடப்பட்டுள்ள ஒரு திரையரங்கை சுற்றி வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

ஆச்சி மனோரமா முதன் முதலில் ஒரு சிங்களப் படத்துக்குத்தான் காமிரா முன் தோன்றினார் என்று வண்ண வானவில் கூறியிருந்ததே? அது எந்தப் படம்? கவிதா, ஹேவாகம பாதுக்க

மனோரமா முதன் முதல் காமிரா முன் தோன்றியது 'சுகுமலி' என்ற சிங்களப் படத்துக்குத்தான். எம். மஸ்தான் இந்தப் படத்தின் டைரக்டரும் ஒளிப்பதிவாளருமாவார். இந்தப் படத்தைத் தயாரித்தவர் எஸ். சிவசாமி. ரீட்டா ரட்னாயக்க லெடி ரணசிங்க, ஆனந்த வீரகோன், கிறிஸ்டி லெனாட் பெரேரா ஆகியோர் மனோரமாவுடன் நடித்திருந்தனர்.
சுகுமலி படத்தில்
அயேஷா வீரகோன்
தென் இந்திய சினிமாவை ஸ்ரூடியோவுக்குள் இருந்து வெளிப்புறத்துக்குக் கொண்டு வந்த முதல் ஒளிப்பதிவாளர் என்று மஸ்தான் கருதப்படுகிறார்.
'சுகுமலி' யை அடுத்து 'அசோக மாலா', 'சுஜாதா' ஆகிய சிங்களப் படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்ட போது மஸ்தான் அந்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார்.
மஸ்தான் பிற்காலத்தில் இலங்கைக்கு வந்து தீவரயோ, சூர சௌரயா, ஆத்ம பூஜா (காமினி பொன்சேகா நடித்த படங்கள்) அல்லபு கெதர ஆகிய சிங்களப் படங்களை இயக்கினார்.

Tuesday, December 1, 2015

சினிமானந்தா பதில்கள் -29

'புலி' ஊத்திக்கிச்சாமே
சாஜஹான், குருணாகலை

புலி எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பது உண்மைதான்.
குருவி, சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல் அடிக்கும் அளவுக்கு, படம் சரியாக ஓடாததால் விஜய் படத்தை சின்னதாக போட்டு படத்தில் வில்லனாக நடிக்கும் ஒத்தைக்கண்ணன் படத்தை பெரிதாக போட்டு தியேட்டர்காரர்களே போஸ்டர் அடிக்கும் அளவுக்கு போனதால் அது குழந்தைகளுக்கான படம் என்று சத்தியம் செய்தால்கூட குழந்தைகளே நம்பாத அளவுக்கு போனதுதான் இடிக்கிறது.

ஓப்பினிங் சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க, அவரது காலை பிடித்துக்கொண்டு 'நீங்க வேதாளம் நாங்க பாதாளம்' என்று விஜய் கூழைக் கும்பிடு போடுகிறார். விஜயை பிடிக்காத ரசிகர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!
ஹன்சிகாவிடம் பேசும்போது 'குழந்தை வேண்டும் ஒத்துழைப்பாயா?' என்று கூறுவது குழந்தைகள் பட வசனம் இல்லையே! படம் குழந்தைகளுக்கா அல்லது பெரியவர்களுக்காக என்பதை சிம்புதேவனுக்கு சரிவர தீர்மானித்துக்கொள்ள முடியாதது படத்தின் பெரிய குறை.

படம் வெளிவருவதற்கு முன்பே கொடுக்கப்பட்ட ஏகப்பட்ட பில்ட்அப் அதைவிட மோசமான குறைபாடாகி விட்டது.

பாகுபலியை விட அதிக கிராபிக் காட்சிகள் இருப்பதாகக் கூறியதும், படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே அதிக அளவில் லைக்குகளை பெற்றதாகவும், குழந்தைகளுக்கு படத்தில் வரும் அரச காலத்து பிரமாண்டமான அரண்மனைகள், அதிர வைக்கும் வாள் சண்டை ஆகியவை பிடிக்கும் என்பதால் 3D யில் சில பிரிண்டகள் போடப்படுவதாகவும் புலி ஸ்பெஷல் கேம் உருவாக்கப்படுவதாகவும் படம் வெளிவரும் முன்னரே கொடுத்த ஏகப்பட்ட பில்ட்அப், எதிர்பார்ப்பை எகிரவைத்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த பின் அவை எல்லாமே 'புருடா' என்பது வெளிச்சமாகி விட்டதால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். இது வாய்ச் சொல்லாகப் பரவி படம் பார்ப்பவர்களையும் தடுத்து விட்டது.

புலி படுத்து விட்டால் ரஜினியைப் போலவே விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விஜய் தயாராகி வருகிறாராம்.

மனோரமா போய்விட்டாரே!
எஸ். ராஜேந்திரன், கொழும்பு

கடந்த 50 ஆண்டுகளாக தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கேமரா முன் நின்ற ஒரே நடிகை மனோரமாதான். தனக்கென ஒரு வீடு ஒரு குடும்பம் இருந்தும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் கொடுப்பினை கிடைக்காதவர் மனோரமா. காலை டிபன் மதிய சாப்பாடு என்பது மனோரமாவுக்கு எப்போதும் படம் பிடிப்பு நடக்கும் இடத்தில்தான். தமிழ் சினிமாவில் மனோரமா ஆச்சியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

போவதற்கு முன்னரே அவரை ஐந்துமுறை போக வைத்த ஊடகங்களுக்கு இப்போது நிம்மதி கிடைத்திருக்கும். ஒரு செய்தியைக் குறைந்தது மூன்று முறையாவது சரிபார்த்து வெளியிடுவதுதான் ஊடக மரபு. பிழையான செய்தியை முந்திக்கொண்டு தருவதை விட சரியான செய்தியை பிந்திக்கொண்டு கொடுப்பதில் தப்பில்லை என்பதை புதிதாக முளைத்துள்ள இணைய ஊடகங்கள் புரிந்து கொண்டால் சரி. இப்போது கே. ஆர். விஜயா விணு சக்கரவர்த்தி ஆகியோர் அவர்களுக்கு அவலாகியிருக்கிறார்கள்.இலங்கை நடிகை மிதுனா ஏதாவது படத்தில் நடிக்கிறாரா?    எஸ்.மிதுளா,யாழ்ப்பாணம்
 
குறும்படங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார். முழு நீள இலங்கை தமிழ் படமொன்றில் நடிக்க தயார். ஆனால் தயாரிப்பாளரைத்தான் காணவில்லை.

மிதுனா
அண்மையில் வெளிவந்த மின்மினி அல்பத்தில் மிதுனா கலக்குகிறாரே! 

 ஸ்ரீதிவ்யா இனி சிவகார்த்திகேயனுடன் நடிப்பாரா?
சாரு, சுளிபுரம்

அதற்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவு. சிவா இப்போது படியேறிவிட்டார். மார்க்கெட்டில் சிவா மேலே ஸ்ரீதிவ்யா கீழே. இவர் கீழே போக மாட்டார். அவர் மேலே வருவது கஷ்டம்.  

சிவாவின் லெவலுக்கு இப்போது நயன் அல்லது அனுஷ்காதான் ஜோடியாக வேண்டும்.

Monday, November 30, 2015

தேவதாசி வரலாறு -14

பொட்டுக் கட்டும் சடங்கை வீட்டிலேயே நடத்த விரும்பும் குடும்பத்தினர் முதலில் ஒரு நல்ல நாளைத் தெரிவு செய்வார்கள். அன்றைய தினம் வீட்டைக் கழுவி அலங்கரிப்பார்கள். ஒரு திரிசூலத்தை எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரித்து தாலியையும் திரிசூலத்திலேயே தொங்க விட்டுவிடுவார்கள். இந்தத் திரிசூலம்தான் மணமகன். அதாவது தெய்வத்தின் சார்பாக தாலி கட்டும் மணமகன். சடங்கு ஆரம்பமானதும் சாமி கும்பிடுதல், பெரியோரை வணங்குதல் போன்ற சம்பிரதாய சடங்குகள் முடிவடைந்ததும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தாலியை எடுத்து அக்குடும்பத்தின் முக்கியமான ஒரு பெண்மணியிடம் அளிப்பார். அப்பெண் தெய்வத்தின் சார்ப்பாக அச்சிறுமியின் கழுத்தில் அணிவிப்பார்.

இத்துடன் பொட்டுக்கட்டும் சடங்கு நிறைவு பெறும். அக்குடும்பம் தனது பிள்ளைகளில் ஒருவரை இறை பணிக்காக கோவிலுக்கு அர்ப்பணித்து விட்டதாக ஊராருக்கு இதன்மூலம் அறிவிக்கிறது என்று இச்சடங்கை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஊருக்கு தமது பெண் பிள்ளை பற்றி அறிவிக்கும் இன்னொரு சடங்காக, சிறுமியர் வயதுக்கு வந்ததும் எடுக்கப்படும் பூப்புனித நீராட்டு விழாவையும் குறிப்பிடலாம்.

'எங்கள் வீட்டில் பிள்ளைத்தாச்சியாக ஆகக்கூடிய ஒரு பெண் இருக்கிறாள்' என்பதை ஊருக்கு சொல்வதே இச்சடங்கின் அடிப்படை அம்சமாகும். அன்றைய கால கட்டத்தில் சந்ததி விருத்தி ஒரு முக்கிய விடயமாக இருந்தது. பெண்ணுக்கான முதல் கடமை பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யுத்தம் நடக்கலாம் என்ற காலம் அது. தமிழ்நாட்டில் அரசர்கள் எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் எப்போதும் சண்டை செய்து வந்தார்கள். உலக வங்கியோ, சர்வதேச நாணய சபையோ அல்லது வங்கிகளோ இல்லாத காலம் அது. அன்று நிலவிய பொருளாதாரம் வேறு வகையானது. அதை யுத்த பொருளாதாரம் என்றே அழைக்க வேண்டும். ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டு மன்னன் மீது போர்ப் பிரகடனம் விடுத்து போருக்குச் செல்வான். போரில் வெற்றி கொண்ட மன்னன் அந்நாட்டின் கஜானாவை சூறையாடுவான். கால் நடைகளையும், குதிரைகளையும் அங்கே சேர்த்து வைக்கப்பட்டிருந்த தானியங்களையும் கைப்பற்றித் தனது நாட்டுக்குக் கொண்டு வருவான். திடகாத்திரமான ஆண்கள் அடிமைகளாக்கப்படுவார்கள். பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழகிய, எடுப்பான பெண்கள் அரசரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஏனைய பெண்களில் பலர் சேனாதிபதிகளின் இச்சைக் கிழத்திகைளாக்கப்படுவார்கள். ஏனையோர் அடிமைப் பெண்களாக வென்ற தேசத்துக்கு இட்டுச் செல்லப்படுவார்கள்.
இதுதான் அன்றைய யுத்தப் பொருளாதாரம். அண்டை நாடுகளைச் சூறையாடுவதன் மூலம் தமது நாட்டை வளம் கொழிக்கச் செய்வதே யுத்தப் பொருளாதாரம். இதனால் தமிழகமெங்கும், இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் ஓயாத யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. யுத்தம் மகிமைப்படுத்தப்பட்டது. யுத்தத்தில் வெல்வதே வீரம் எனப் பேசப்பட்டது. யுத்தத்தில் போராடுவதற்கென சமூகங்கள் உருவாக்கப்பட்டன. 'வீர மறவர்கள்' என்று தமிழில் அழைப்பார்கள். சங்கப் பாடல்களை எடுத்தோமானால் இந்த யுத்தம் எப்படி எல்லாம் மகிமைப் படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். களத்தில் வீழ்ந்தவன் நெஞ்சில் காயப்பட்டவனாக இருந்தால் அவன் வீரனாம். முதுகில் காயம் பட்டவனாக வீழ்ந்திருந்தால் அதைப் பார்க்க நேர்ந்தால், இந்தக் கோழையையா நான் பெற்றெடுத்தேன்? என்று கலங்கும் தாய், தனக்கேற்பட்ட களங்கம் போக்குவதற்காக தன் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவாளாம்!

நம் நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது சிங்கள மக்களையும் சிங்களத் தாய்மார்களையும் யுத்தத்தின்பால் ஈடுபாடு கொள்ளவும் படைக்கு ஆள் திரட்டவும் அன்றைய அரசுகள் பல விளம்பர உத்திகளைக் கையாண்டன. சங்கப் பாடல்களில் காணப்படும் போர் மகிமைப்படுத்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த உத்திகள் வெறும் தூசு என்றுதான் சொல்ல வேண்டும். இதே சமயம் இந்த சங்ககால கதைகளை எல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகளால் சுலபமாக உசுப்பேற்ற முடிந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பெரும் படுகொலைகளும், சமூக, பொருளாதார அழிப்புகளும் யுத்த தர்மம் என்ற பெயரிலும், அது ஒரு பொருளாதாரமாகவும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இவ்விதமே அறியப்பட்டது. இதனால்தான் உலகெங்கும் கிரேக்க, ரோம, அராபிய பேரரசுகள் எழ முடிந்தது.

இந்த யுத்தம் காதலுடன் தொடர்புபடுகிறது. இதனால்தான் சங்க இலக்கியங்கள் போருடன் காதலையும் மகிமைப்படுத்தின. போரையும் காதலையும் மகிமைப்படுத்தாத பௌத்தமும் சமணமும் உலகப் பெரு சமயங்களாக வளர முடியவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். கள்ளக் காதலும் களவொழுக்கமாக அங்கீகாரம் பெற்றது. ஏனெனில், பெண்கள் வயதுக்கு வந்ததும் ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. பிறக்கும் பிள்ளைகளில் ஆண் விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு அனுப்பப்பட்டான். போருக்கான மற்றும் விவசாயத்துக்கான தளவாடங்களை செய்தல் இன்னொரு முக்கிய பணி. போர் வரும்போது படையில் சேர்ந்து ஆண்கள் போரிடச் சென்றார்கள். போர் ஒரு அறமாக சொல்லி வளர்க்கப்பட்டதால் ஆண்கள் போர்களில் உற்சாகமாகவே கலந்து கொண்டிருக்க வேண்டும். இப்போதும் கூட சண்டையிடுவது ஒரு அறமாகவே போதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தத் தற்கொலைப் போராளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாயைகளை உருவாக்கி அவற்றுக்காகத் தாராளமாக உயிர்விடலாம் என்று கோட்பாடுகள் இந்த அரசியல் இயக்கங்களாலும் மதங்களாலும் உலவவிடப்படுவதும் அவற்றின் பேரில் ஈசல்களாக இளைஞர்கள் உயிர்விடுவதும் இந்த இணய யுகத்திலும் நடக்கின்றபோது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பூப்புனித நீராட்டு விழாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இப்பின்னணியில் இருந்தே பார்க்கப்பட வேண்டும். அக்காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் இருபது, இருபத்துரெண்டு வயதுவரையெல்லாம் கல்யாணத்துக்காகக் காத்திருக்கவில்லை. பெண்கள் சிறுமி பருவத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. குடும்ப மற்றும் கிராம பொருளாதாரத்தைக் காப்பாற்றும் வகையிலும் சாதி அமைப்பை பேணும் வகையிலும் சொந்த மாமன்,  மகனுக்கே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுவது இந்தியாவில் பரவலாக பின்பற்றப்படும் ஒரு பண்பு. இது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. எனவே, பெண் வயதுக்கு வந்ததை அறிவிக்க வேண்டிய அவசியம் எழுந்தது, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக் காலத்தில்.

சிறுமி பருவத்தில் பெண்கள் குழந்தை பெற ஆரம்பித்து விடுவார்கள். பத்து, 12 குழந்தைகள் பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணம். நிலத்தில் வேலை செய்ய மனித சக்தி தேவையாக இருந்தது. பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் உயிர் பிழைத்து வாழும் என்று சொல்வதற்கில்லை. நோய்களால் மரணம் ஏற்படுவது சகஜம். கொள்ளை, அம்மை நோய்கள் கிளம்பி வந்தால் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக மடிந்து விடும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் காலூன்றிய பின்னரேயே நவீன மருத்துவ முறைகளின் காரணமாக சராசரி மனிதரின் ஆயுட்காலம் வளர்ச்சி கண்டது. குடும்பங்கள் சுருங்கின.

பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சுமார் 25, 28 வயதாகும் போது குழந்தை வளர்ப்பில் இருந்து விடுதலைப் பெற்றவர்களாகி விடுவார்கள். அவர்களாலும் நிலத்தில் தமது பங்களிப்பைச் செய்ய முடிந்தது.

ஒரு பெண் ருதுவாகி, குழந்தை பெற்றுக் கொள்வதற்குத் தயாராகிவிட்டாள் என்பதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இருந்ததைப் போலவே,

எங்கள் வீட்டுப் பெண் பிள்ளையை நாங்கள் கோவிலுக்கு காணிக்கையாக்கி விட்டோம் என்று ஊருக்குச் சொல்ல வேண்டிய தேவை அன்றைய இந்திய சமூகத்தில் இருந்தது. ஏனெனில் பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணை எவரும் திருமணம் செய்யத் துணியமாட்டார்கள். பொட்டுக் கட்டி விடப்பட்ட பெண் தினமும் கோவிலுக்குச் சென்று அவளுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.

கல்வியறிவு உயர்குடி மக்கள் மத்தியில் மட்டுமே நிலவி வந்ததால், கல்வியுடன் சம்பந்தப்பட்ட கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களை உருவாக்கவும் அக்கலைகளை வளர்க்கவும் வேண்டிய தேவை இருந்தது. உயர்குடி பெண்கள் கலைகளை பயிலவும், நிகழ்த்தவும் மாட்டார்கள். ரசித்து ஆதரவு தருவதே அவர்கள் செய்யக்கூடிய தொண்டு. எனவே கல்வியறிவு பெற்ற உயர்குடி மக்களுக்கு அடுத்த நிலையில் கலைத் தேர்ச்சி பெற்ற தேவதாசியர் திகழ்ந்ததில் வியப்பில்லை. கலைகளில் சிறந்த, ஆடவும், பாடவும், அபிநயிக்கவும் தெரிந்த - தம்மை நன்கு அலங்கரிக்கவும், அன்புடன் உரையாடவும் கற்றிருந்த இந்த தேவதாசிப் பெண்களிடம் உயர்குடி மக்களான வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், சேனாதிபதிகள் என்போர் மயங்கியதில் வியப்பு இருக்க முடியாது. அன்றைக்கு அதுதான் தர்மம்.
ராஜராஜசோழன் காலத்திலேயே தேவதாசிகள் தமிழகத்தில் அறிமுகமானார்கள் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தஞ்சை பெரிய கோவிலில் நடனமாடுவதற்கு 400 பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தஞ்சையில் இவ்வளவு பெண்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு நடனம் பயிற்றுவிக்கப்பட்டது.
இப்பெண்களுக்கு தேவையான சகல வசதிகளையும் மன்னர் செய்து கொடுத்தார். இதற்கென தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே மூன்று வீதிகளை ஏற்படுத்தி வீடுகளை அமைத்தார். வடக்கில் இருந்த தெரு வடக்கு தளிச்சேரி என்றும், தெற்கில் இருந்த தெரு தெற்குத் தளிச்சேரி என்றும் அழைக்கப்பட்டன. வடக்கு தளிச்சேரியில் 96 வீடுகளும், தெற்கில் 96 வீடுகளும், மூன்றாவது வீதியில் 18 வீடுகளும் இருந்தனவாம். இவர்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டன.

தமிழக வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையில் தேவரடியார்கள் நியமிக்கப்பட்ட ஒரே கோவில் தஞ்சை பெரிய கோவில் மட்டுமே.

சேரமங்கை, எடுத்த பாதம், குந்தவை, நகரத்தாள், இளங்கோயில், ஆடவல்லாள், சீருடையாள், அறிவாட்டி, பொன்னாலமந்தாள், பூங்காலி, தில்லைக்கரசு - இவை எல்லாம் இப்பெருங்கோவிலில் நடனமாடிய பெண்களின் பெயர்கள்!  

Saturday, November 21, 2015

இருள் உலகக் கதைகள்

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

ரத்தினபுரி, தும்பர தோட்டத்தில் வசிக்கும் கந்தசாமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அடிதடி, வெட்டுக்குத்து என்று ஊரில் எந்தப் பிரச்சினை என்றாலும், அங்கே கந்தசாமியும் ஒரு ஆளாக பெயரை போட்டுக்கொள்ள முன்னால் நிற்பான். திடகாத்திரமான உடல்வாகு கொண்ட அவன், மிகத் தைரியசாலி. தினமும் நாட்டு சாராயம் போட்டால்தான் அவனுக்குத் தூக்கமும் வரும்! கந்தசாமியின் மனைவி வள்ளியின் எந்த அறிவுரையையும் அவன் சட்டை செய்வதேயில்லை.

அவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் பிறகு அவன் பேச்சை அவனே கேட்க மாட்டான் என்பது அவனது நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமான 'பஞ்ச் டயலொக்'.

மாலை மங்கினால் கந்தசாமி சாராய நெடி மூக்கில் நுழைந்தாக வேண்டும். அன்று மாலை ஆறு மணியிருக்கும். தும்பரை காட்டு குறுக்குப்பாதை வழியாக நாட்டு சரக்கு விற்கும் இடம் நோக்கி கந்தசாமி நடையைக் கட்டினான்.

தும்பரை பகுதி பெரிய எஸ்டேட் என்றாலும் பெரும்பாலான இடங்களை காடு ஆக்கிரமித்திருந்தது. அதனால், மாலை ஆறரை மணியே நள்ளிரவு 12 மணி தோற்றத்தை ஏற்படுத்தி விடும். கந்தசாமி நாட்டு சரக்கை வாங்கி வாயில் ஊற்றி மரவள்ளி அவியலை வாயில் திணித்துக் கொண்டான். பின்னர் பெட்டிக்கடையில் முறுக்கு ஐந்தை வாங்கி கையில் சுருட்டிக் கொண்டு நடந்தான். 'நள்ளிரவு நேரத்துல ஒத்தையில் வரும்போது, எண்ணெய் திண்பண்டங்கள் சாப்பிடக்கூடாது' என்று அவன் மனைவி பல தடவைகள் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. 'அப்படிச் சாப்பிட்டா என்னதான் நடக்கும் என்பதையும்தான் பார்த்திடுவோமே'ன்னு  நினைத்த கந்தசாமி, முறுக்குப் பார்சலை பிரித்து முறுக்கு ஒன்றை எடுத்து கடித்தான். அந்த இதமான இரவு வேளையில், அந்த காரமுறுக்கு ரொம்பவே சுவையாக இருக்க, அதை ருசித்து வாயில் போட்டு அரைத்தான். அப்போது தலைக்கு மேலே மரக்கிளை முறிந்து விழுவது போல ஒரு சத்தம் கேட்டது. பாதையை விட்டு சற்று விலகி அண்ணாந்து பார்த்த போது அங்கே எந்தவித சலனமும் தென்படவில்லை.
தேவா பூசாரி
மனதைத் திடப்படுத்திக் கொண்ட கந்தசாமி மேலும் உன்னிப்பாக பார்த்த போது, மரத்தில் வெளவால் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். 'அட இது தானா!'னு பயம் விலகியவன் கீழே குனிந்து முறுக்குப் பொட்டலத்தை பார்த்தபோது அதிர்ந்தான். மீதமிருந்த நாலு முறுக்கில் ஒன்றைக் காணவில்லை!

'என்ன நடந்திருக்கும்? ஒருவேளை என் மனைவி சொன்னது போல...' என்று மனதில் பலவிதமான எண்ணங்கள் காட்சிகளாக வந்து பயமுறுத்த... கந்தசாமி மனதில் மறுபடியும் தைரியம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அவன் மீண்டும் ஒரு முறுக்கை எடுத்துக் கடித்தான். அப்போது அதே மரக்கிளை மீண்டும் கீழே சரிந்து எழுந்தது. தலைக்கு மேலே என்னதான் அப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க சட்டெனத் தலையை உயர்த்தி மேலே பார்த்தான் கந்தசாமி. ஆனால் அங்கே எதையுமே வித்தியாசமாக அவனால் பார்க்க முடியவில்லை. 'இது மனப்பிரமையாக இருக்கும்' என்று நினைத்தவன், கீழே குனிந்து முறுக்குப் பொட்டலத்தைப் பார்த்தான். அங்கே மீதமிருந்த இரண்டு முறுக்கில் ஒன்றுதான் இருந்தது! உடனே அந்தப் பகுதியே அதிரும்படி அட்டகாசமாக சிரித்த கந்தசாமி, 'என்கிட்டயே உன் வேலையைக் காட்டுறீயா?' என்று கேட்டபடி மீதமிருந்த அந்த ஒரு முறுக்கையும் காலி செய்ய அதைக் கையில் எடுத்த போது கையிலிருந்த முறுக்கு படீரென்று மாயமாய் மறைந்தது. வெலவெலத்துப் போன கந்தசாமி தலைதெறிக்க ஓட்டமெடுத்தான். பேயோட்டம் ஓடியவன் வீட்டு வாசல் படியிலேயே நின்று மூச்சு வாங்கினான்.

கந்தசாமி பேயடித்தவன் மாதிரி ஓடி வந்ததைப் பார்த்த வள்ளி, என்னவென்று விசாரித்தாள். நடந்ததை திரைக்கதை மாதிரி கந்தசாமி விபரிக்க, "நீ போதையில உளறாதே" என்று அவனைத் திட்டிவிட்டு படுக்கைக்குப் போனாள் வள்ளி.

அடுத்த நாள் கந்தசாமியை குளிர்காய்ச்சல் வாட்டி எடுத்தது. மேட்டு லயத்து பரமசிவன் பூசாரியை அழைத்து வந்து முத்துப் போட்டு பார்த்தபோது, 'ஏழு கட்ட தூரத்தில் அவனை ஒரு எச்சில் பேய் தீண்டி விட்டதாக' பூசாரி சொன்னார். நேற்று கந்தசாமி சொன்ன கதையை நினைவுபடுத்திக் கொண்ட வள்ளிக்கு உடல் வெடவெடத்துப் போனது. பிறகு பூசாரி மந்திரித்து தந்த தண்ணீரை கந்தசாமிக்கு குடிக்கக் கொடுத்தாள். ஆனால் இரண்டு நாள் கழிந்த பிறகும், கந்தசாமி படுத்த படுக்கையாகவே கிடந்தான். பிறகு தெரிந்தவர்கள் ஊடாக அந்தப் பகுதியில் பிரபலமாகத் திகழும் தேவா பூசாரியை அணுகி விடயத்தைச் சொல்லி பரிகாரம் கேட்டார்கள்.

அவர் தேதி குறிப்பிட்டு தந்த நாளில் கந்தசாமிக்கு பேயோட்டும் படலம் ஆரம்பமானது. உடுக்கையை கையிலெடுத்துப் பாட ஆரம்பித்த சில நொடிகளிலேயே, கந்தசாமி புத்துயிர் பெற்றவனாக ஆவேசத்துடன் எழுந்து வந்து பேயாட்டம் போடத் தொடங்கினான். பூசாரியின் உடுக்குத் தாளத்திற்கேற்ப அவனும் ஜதி சேர்த்து ஆட ஆரம்பித்தான். ஒரு தேர்ந்த கதக்களி நடனக்காரனின் ஆட்டம் மாதிரியே கந்தசாமியின் ஆட்டம் இருக்க, அங்கே கூடி நின்றவர்கள் வாயடைத்துப் போனார்கள். 'இப்போது ஆடுவது கந்தசாமி அல்ல ஒரு தீய சக்திதான்' என்பதை தேவா பூசாரி சில நொடிகளிலேயே கண்டறிந்து கொண்டார். பிறகு சில மந்திரங்களை உச்சாடனம் செய்து தீய சக்தியை வசியம் செய்து கைப்பிடிக்குள் கொண்டுவந்தபோது, அந்தத் தீய சக்தி பேச ஆரம்பித்தது. அது சொன்ன தகவல்களின்படி, பல வருடங்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் இறந்துபோன ஒரு பெர (மத்தளம்) வாசிப்பவனின் பேராசை மனைவியின் ஆவிதான் இது என்பது நிரூபணம் ஆகியது. கந்தசாமியை தீண்டிய அந்த நாளில், அந்த தீய சக்தி அகோர பசியுடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததாம். அப்போது அதன் தலைக்கு கீழே கந்தசாமி முறுக்குப் பொட்டலத்தை அவிழ்த்த போது, அந்த தீய சக்தி தனது ஓணான் நாக்கை நீட்டி முறுக்கை கபளீகரம் செய்ததாம். கந்தசாமிக்குள் குடியிருந்த ஆவி சொன்ன விசயங்களைக் கேட்ட அனைவரும் குலைநடுங்கிப் போனார்கள்.
"டேய் பூசாரி! மரத்திலிருந்தே நாக்கை நீட்டி முறுக்கு கபளீகரம் செய்த எனக்கு, அவனின் தலையை கொய்து போட என்ன நேரம் எடுக்கப் போகுது? அவன் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுட்டேன்" என்று அந்தத் தீய சக்தி பேய்க்கூச்சல் போட்டுக் கத்தியது. 'வந்திருப்பது மனிதாபிமானம் உள்ள ஆவிதான்' என்பதை தேவா உணர்ந்து கொண்டார். பிறகு அந்த தீய சக்தியை தனது மந்திர வலையில் வீழ்த்தினார். கொடுத்த உணவுகளை ஒரே மூச்சில் விழுங்கிய அந்த துஷ்ட ஆவி, கந்தசாமியின் உடலிலிருந்து வெளியேறியது. வந்த வேலை இலகுவில் முடிந்துவிட்ட திருப்தியில் தேவா பூசாரி அனைத்துப் பரிகாரங்களையும் முடித்து விட்டுப் புறப்பட்டார்.

தேவா பூசாரியின் ஆட்டோ அந்த அதிகாலை வேளையில் தும்பரை சந்தியைக் கடந்தபோது, அங்கே நின்றிருந்த ஒரு பெரிய மரக்கிளை ஆட்டோவின் மீது விழுவதுபோல அதன் அருகே வந்து உரசிவிட்டு மேலே சென்றதாம். அது அந்த தீய சக்தியின் வேலைதான் என்பதை தெரிந்து கொண்ட அவர், 'நம்ம கிட்டவே விளையாடிப் பார்க்குது' என்று நினைத்து புன்முறுவல் பூத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தேவா பூசாரி!

யாழ்ப்பாணத்தின் அடையாளம்மணி  ஸ்ரீகாந்தன்
டெக் தொழில்நுட்பம் வளர்ந்து, உலகம் அவசரமாக இயங்கத்
தொடங்கிவிட்ட இந்த நவீன காலத்தில், நாமும் அந்த வேகத்தில் ஈடுகொடுத்து பயணிக்க வேண்டியது காலத்தின் தேவை.

இந்த மாற்றமும் வேகமும் அவசியம் என்றாலும்கூட, இயற்கை வைத்திய முறைகள், பாரம்பரிய உணவுகள், பழக்கங்கள், இயற்கை சார் விவசாயம் போன்றவற்றை 'பொருந்தி வராத பழசுகள்' என எட்டி உதைத்துவிட்டு கண்மண் தெரியாமல் போய்க் கொண்டிருக்க வேண்டயதில்லை. இப்படிச் செய்வதால், நீங்கள் அறியாமலேயே பல உடல் பிரச்சினைகளை நீங்கள் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்.
இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் நம்மைத் திருப்பித் தாக்கும் என்பது உணர்ந்து கொள்ளப்பட்டிருப்பதால் இயற்கை முறைகளுடன் இணைந்து பயணிக்கும் முறைகள் இப்போது மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் இயற்கை விவசாய முறைகள், இயற்கை வைத்திய முறைகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

நம் நாட்டிலும் இவ்வாறான இயற்கைசார் உற்பத்திகள் இருக்கின்றனவா எனத் தேடிப்பார்த்த போது, யாழ். மாவட்டத்தில் சில இடங்களில் இயற்கை சார்ந்த தொழில் முறைகள் இப்போதும் கைகொள்ளப்பட்டு வருவதை அறிந்தோம். அதில் பாரம்பரிய நல்லெண்ணெய் உற்பத்தி முக்கியமானது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை, சண்டிலிப்பாய், மாதகல், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் நல்லெண்ணெய் உற்பத்தி பாரம்பரிய முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆனைக்கோட்டை நல்லெண்ணெய்க்கு ஒரு தனி மவுசு இருக்கிறது.
தம்பிப்பிள்ளை
கணேசலிங்கம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் விசயம் தெரிந்தவர்கள், ஆனைக்கோட்டைக்கு ஒரு நடை போய் நல்லெண்ணெய் வாங்கி வருவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆனைக்கோட்டையில் மட்டுமே இயந்திரங்களுக்கு பதிலாக செக்குகளில் நல்லெண்ணெய், பிழிந்தெடுக்கப்பட்டு வடிக்கப்படுகிறது.

பாரம்பரிய முறைப்படி புளியமரம், முதிரை, இழுப்பை மரங்களில் இருந்தே செக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த செக்குகளிலேயே நல்லெண்ணெய் ஆட்டப்படுகிறது.

"புளியமரம் உரலாகவும், முதிரை உலக்கையாகவும் இழுப்பை துலாவாகவும் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாடுகளுக்கு பதிலாக சிறிய உழவு இயந்திரம் (லேன்ட் மாஸ்டர்) பயன்படுத்தப்படுகிறது" என்று எமக்கு விளக்கம் கொடுக்கிறார், தம்பிப்பிள்ளை கணேசலிங்கம்.

ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் உற்பத்தியில் நான்காவது தலைமுறையாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவரின் முப்பாட்டன் கதிரேசுவினால் 19ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த தொழில், பிறகு அவருடைய மகன் தில்லையம்பலம் கந்தையாவினால் தொடரப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக, பல தடைகளைத் தாண்டி, சுத்தமான நல்லெண்ணெய் உற்பத்தியாளர்கள் என்ற நற்பெயரை பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள் கதிரேசு குடும்பத்தவர்கள்.

Wednesday, November 18, 2015

சிறுகதைகள்

இதுவும்  அல்லாஹ்ட  கொதறத்துதான்

     

-எஸ். முத்து மீரான்-

நாளைக்கு பள்ளியில் மையதினாண்டவர்ர கந்தூரி. மக்களெல்லாம் குதுகலத்தில் இருக்கிறார்கள். இன்று கிண்ணியாவிலிருந்து என் மனைவியின் தம்பியும் குடும்பமும் வருகிறார்கள்.

எங்கள் வீட்டு வளவிற்குள் நிறையக் கொய்யா மரங்கள் நிற்கின்றன. இப்பொழுது கொய்யா மரங்கள் நிறையக் காய்த்துக் கிடக்கிறது. இரவில் இம்மரங்களில் உள்ள பழங்களை வெளவால்கள் சதா பறித்து சாப்பிடுவதால், காலையில் பழங்கள் கிடையாமல், பிள்ளைகள் வேதனையோடு போவதைப் பார்த்து எங்களுக்கும் கவலையாக இருக்கும். இதனால் எங்களோடு எங்கள் வீட்டில் உடன்பிறவாச் சகோதரன் போல் வாழும் ஹாய் எளயம்பி, வெளவாலிடமிருந்து இரவில் பழங்களைப் பாதுகாக்க மரங்களில் சகடை கட்டியுள்ளான். பெரிய தகரக் கேத்தலின் உள்ளே சின்னக் கற்கள் சிலதைப் போட்டு அதில் கயிற்றைக் கட்டி இழுக்கும் போது சத்தம் வரும். சத்தத்தின் பயத்தால் வெளவால்கள் பறந்து போய்விடும். இதைப் பகலில் ஆட்டினால் அணில்கள் ஓடிவிடும். இதை என் பிளளைகள் ஒரு விளையாட்டாக நினைத்து பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த உடனேயே, கயிற்றை பிடித்து ஆட்டிக்கொண்டே இருப்பார்கள்.

மரங்களில் சகடை கட்டிய பிறகு, இரவில் வெளவால்கள் பழங்களை சாப்பிட வருவது குறைவு. மரத்தில் பழங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. இதனால் பிள்ளைகள் காலையில் நேரத்தோடு எழும்பி கொய்யா மரங்களின் கீழ் நிற்பதைப் பார்த்து என் மனைவி "இஞ்ச.... கொய்யாப் பழம் பொறக்கின போதும் கெதியா வாங்க... பள்ளிக்குடத்துக்கு போறல்லியா? நேரத்தோட போகாட்டி வாத்தி அடிப்பான். ங்.. கெதியா வாங்க... ங் நல்லாப் பொழுதும் ஏறிப் போச்சு..." என்று பிள்ளைகளை அததட்டிக் கூப்பிட்டு விட்டு வீட்டிற்குள் வருகிறாள். தாயின் சொல்லுக்கு அடிபணிந்து, பொறக்கி எடுத்த கொய்யாப் பழங்களோடு பிள்ளைகள் வருகிறாள். இவர்களைக் கண்ட மனைவி 'ங்', செரி பழத்தைக் கொண்டு வெச்சிப் போட்டு, கிணத்தடிக்கு போய் பல்லத் தீட்டுங்க..." என்று கூறியபடி துவாயை எடுத்துக் கொண்டு அவளும் கிணத்தடிக்கு போகிறாள்.

பொழுது ஏறிக்கொண்டிருக்கிறது. வாசலில் நிற்கும் இளந்தென்னையிலிருந்து காகமொன்று மூச்சுப்பிடித்துக் கத்திக் கொண்டிருக்கிறது. "சூய்! என்ன இப்படிக் கத்துறாய்?... தம்பியும் புள்ள குட்டியோட வாறெண்டு சென்னான்... என்ன வாரானா?" என்று கேட்டபடி, கிணற்றடிக்கு போய் பிள்ளைகளைக் கழுவித்துடைக்கிறாள்.

அப்பொழுது வீட்டு வாசற்கேற்றடியில் என் மனையின் தம்பி, தன் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்து இறங்கி வருகிறான். அவனையும் அவன் குடும்பத்தையம் பார்த்து, வீடே சிரிக்கிறது. இவன் வெளியூரில் திருமணம் முடித்து அங்கேயே குடும்பத்தோடு வாழ்கிறான். இவன் ஆசிரிய பயிற்சியை முடித்து, கிண்ணியாவுக்கு கற்பிக்க சென்றவன். அங்கேயே ஒரு பிள்ளையைக் காதலித்து கலியாணம் முடித்து, இன்று இரண்டு பிள்ளைகளோடு வாழ்கின்றான். நாளைக்கு எங்கள் ஊரில் முகைதீன் ஆண்டவர்ர கந்தூரி நடைபெற உள்ளதால் குடுபத்தோடு வந்துவிட்டான்.

ஏங்க ஊரில் வருடாவருடம் கந்தூரி வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்தூரி காலத்தில் எங்களஊரே விழாக்கோலம் பூண்டு, ஊரெல்லாம் சிரிக்கும். முகைதீன் ஆண்டவர் பள்ளிக் கொடி மரத்தில் பல வர்ணக் கொடியேற்றி, பள்ளியெல்லாம் சோடித்திருப்பார்கள். கந்தூரி வைபவம், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறும். இந்த ஏழு நாட்களும் பள்ளியைச்சுற்றி, மிட்டாய்க் கடைகளோடு, காப்புச் சீப்பு, அலுமினியப் பாத்திரக் கடைகளும் வைத்திருப்பார்கள். எங்கள் ஊரிலேயே இதுதான் பெரிய கொண்டாட்டம். பனிரெண்டு நாட்களுக்கு பள்ளியில் மௌலூத் ஓதி முடித்து இறுதியில் மாடுகள் அறுத்து சோறு சமைத்து ஊரில் உள்ள எல்லோருக்கும் கந்தூரி கொடுப்பார்கள். இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் இவனும் அவன்  குடும்பமும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

கந்தூரிக்கு எதிராக ஊரில் பல துண்டுப் பிரசுரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கந்தூரி கொடுப்பது கப்று வணங்கிகளின் சிர்க்கான வேலையாம். இதை சில மௌலவிகள் ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் பிரசங்கம் செய்கிறார்கள். எனவே கந்தூரி விடயம் மிக்க பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

    அப்பொழுது எங்கள் பக்கத்து வீட்டுக்காரி பாத்துமுத்து, பதைபதைத்து வருகிறாள். இவள் ஒரு பெரிய புழுகு மூட்டை, எந்த விசயத்தையும் பெரிதுபடுத்தி, ஊரைக் கலக்கி விடுவதில் அவளுக்கு நிகர் அவள்தான். இவள் பதறி வருவதைப் பார்த்த என் மைத்துனன்

"என்ன மாமி! இப்படிப் பதறி வாற? என்ன விசயம்?" என்று கேட்கிறான். இவனின் கேள்வியை எதிர் பார்த்தவள் போல் பாத்துமுத்து

"தம்பேய்! நம்முட பள்ளில கந்தூரி குடுக்க கொண்டந்த மாடுகளை எல்லாம், லாவு ஆரோ அவுத்து வெரசி உட்டுட்டானுகளாம். வாங்கிற்கு வந்த எல்லா மாடுகளும் ஓடிப்பெயித்தாம், எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டந்த மாடுகள்.... எந்த நாசமத்து போவானுகள், இந்தச் சதிமானத்தச் செஞ்சானுகளோ....? ஊரு நல்லாக் கெட்டுப் போய்ச்சு... அங்க கடிச்சி இஞ்ச கடிச்சி, இப்ப அல்லாட பள்ளியிலயிம் கடிக்கத் தொடங்கிற்ரானுகள்.... பரம்பரை பரம்பரையா ஊரில நடந்த கந்தூரியை, இப்படிக் குடுக்காமச் செய்யிறத்திற்கு இந்த வளப்புணி நாய்களெல்லாம் ஆரு? பள்ளில பெரிய குழப்பமாக கெடக்காம்.... மரைக்கார் மாரெல்லாம், தலயப் பிச்சிக்கிக் கெடக்காகளாம்...." என்று கூறிவிட்டு,

"புள்ளேய்! ஒழுப்புளம் பிளன்டித் தண்ணி தாகா. வாயெல்லாம் எலச்சிப் பெயித்து... இதாரு! எப்ப ஊரால வந்த? ஊரில எல்லாரும் சுகமா?"என்றபடி மைத்துனனின் மனைவியைப் பார்த்து கேட்டுக்கொண்டு அடுப்படிக்கு போகிறாள். பாத்துமுத்துவின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த என் மச்சினன் கோபத்தை அடக்க முடியாமல் கொதித்து போய், "இது எல்லாத்திற்கும்; காரணம், இப்ப புதிசா ஓதிப்படிச்சி வந்த உலமாக்களும், புள்ளயளும்தான்.... இஸ்லாத்தில் ஒரு காலத்தில் எழுபத்தி மூணு கூட்டம் வருமெண்டு சென்ன கத இப்ப உண்மையாய் பெயித்து... இந்த கூட்டத்தில ஒரு கூட்டம்தான் இப்ப இதெல்லாம் செய்யிது. இஸ்லாத்தில் சிர்க்குகள் ஒழியத்தான் வேணும். கப்று வணங்குகிற கூட்டமும் ஒழியத்தான் வேணும். அல்லாஹ் செல்லாத விசயங்கள இஸ்லாமென்டு செல்லிக்கு ஒழுங்கா பல்லுத்தீட்டாம ஒருவித கோலம்; எடுத்துக்கு மனிசர நல்லா ஏமாத்தி வயிறு வளக்கிற வாப்பாமாரெல்லாம் தொலயத்தான் வேணும். சிர்க்குகள் உலகைவிட்டு அழியத்தான் வேணும். அதுக்காக வாழையடி வாழையாக ஊரில் கொடுத்துக்கந்த கந்தூரிய குடுக்காமச் செய்யிற செரியா? காலம் நல்லாக் கெட்டுப் போய்ச்சி. வட்டக்களவெட்டில பிச்ச போடாத வளப்புணியெல்லாம் இப்ப பெரிய ஆக்களாக ஊரில இருக்காணுகள். அவனுகளைத் திருத்தி அல்லா சென்னபடி சக்காத்து சதக்காவக் குடுக்கச் செல்லாம ஏதோ ஒளுப்புளம் இஸ்லாத்தப் படிச்சிக்கு வந்து இப்ப பள்ளில பெரியாளாகிற்ரானுகள். அட்ரஸ் இல்லாதவனெல்லாம் பள்ளிக்கு றஸ்டியா வந்து ஊரில பெரிய பெரிய கொழப்பமெல்லாம் செய்யிறாணுகள். முந்தியெல்லாம் இப்படி இந்த ஊரில நடந்தையா? இல்லியே.... இப்பதான் இதெல்லாம் வருகிது." என்று என் மச்சினன் மனதில் பட்டதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு பெருமூச்சை விடுகிறான். என் மனைவி வேதனையோடு தம்பியையும் அவன் பிள்ளைகளையும் பார்க்கிறாள். எவ்வளவு ஆசையோடு, பிள்ளைகுட்டிகளோடு வந்தவனுக்கு இப்படியொரு இடி விழுமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

குசினிக்குள் தேயிலையைக் குடித்துவிட்டு பாத்துமுத்து ராத்தா வருகிறாள். அவளிடம் வேதனையோடு, குந்திக்கொண்டிருந்த மச்சினன் "அப்ப நாளைக்கு கந்தூரி இல்லியாமா?" என்று தன் வேதனையை வெளிப்படுத்த, பாத்துமுத்து,

"ஆரு சென்ன? நாளைக்குத்தான் ஒரு நாளும் இந்த ஊரில குடுக்காத மாதிரி கந்தூரி குடுக்கப் போறங்க. ஓடின மாடுகளை எல்லாம் புடிச்சிக்காறதுக்கு, ஆக்கள் பெயித்தாங்க. போன மாடுகளெல்லாம் நம்முட பள்ளக்காட்டுக்க நிற்கிறதாக வெசகளமும் வந்திற்ரு.. இவனுகள்ள இந்த சலசலப்பு புலுடாக்களுக்கெல்லாம்  நம்முட ஊரான் அசைவானா? நாளைக்கு கந்தூரி மௌலத்தெல்லாம் ஒழுங்கா நடக்கும் எங்கிட பள்ளித்தாய் மரைக்கார், மீராமய்யதீன் கடும் உசாரா இருக்கிறாரு" என்று சொல்லிக் கொண்டு வெற்றிலைப் பொட்டிய எடுத்து வெற்றிலை போடுகிறாள்.

    அப்பொழுது, சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் எளயம்பி வருகிறான். கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகளில்லாமல், மனைவி இறந்த பின்னர், ஒண்டியாக வந்து எங்களோடு தங்கியவன் இப்பொழுது எங்களோடு எங்களில் ஒருவனாக வாழ்ந்து வருகிறான். இவன் ஒரு குசிப்பேர்வழி. இதனால் ஒரு கிழமையாக, இவன் எங்கள் பள்ளியில் நடக்கவிருக்கும் கந்தூரியையும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் பற்றி, வருவோரிடமும் போவோரிடமும் சதா பேசிப் பேசி மகிழ்ந்துகொண்டிருப்பான். இவனுக்கு பாத்துமுத்து ராத்தாவோடு கடும் விருப்பம். இளயதம்பியைக் கண்ட பாத்துமுத்து ராத்தா

"என்ன எளயம்பி பள்ளியடிப்பக்கம் போனியா? அங்க என்ன நடக்குது?" என்று கேட்க பாத்துமுத்து ராத்தாவின் கேள்வியை எதிர்பார்த்தவன் போல்,

"என்ர வாப்பா, எல்லாம் தடபுடலா நடக்கிது. இந்த முற கனக்க முட்டாசிக் கடையெல்லாம் வந்திரிக்கு. நாளைக்கு  பாவாமார்ர ராத்திபெல்லாம் இரிக்காம், எல்லாரையும் நேரத்தோடு வரட்டாம்.... பள்ளிய வளைச்சி குருத்து மணலெல்லாம் ஏத்தி போட்டிருக்கு..." என்று கூறிவிட்டு அவன் என் மச்சினனின் மக்களை ஆசையோடு கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறான். சோம்பிக் கிடந்த வீடு, இளையதம்பியின் வருகையின் பின்னர், மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. என் மனைவி தன் தம்பிக்கும் அவன் குடும்பத்திற்கும் பகலைக்கு சாப்பாடு சமைக்கும் வேலையில் துரிதமாகி "எளயம்பிக் காக்கா! பகலைக்கு கறி ஆக்க, நம்முட கழுத்தறுத்தான் சாவல புடிச்சி ரகுமானியாத் தைக்கா மோதினிக்கிட்ட கொண்டு போய், தக்பீர் பண்ணிக்கு வா.... பொழுதும் ஏறிக்கிரிக்கி, கெதியா கோழியப்புடிச்சிக்கு போ..." என்று கூறித் தன் வேலைகளில் மும்மூரமாகிக் கொண்டிருக்கிறாள்.
   
மச்சினன் துவாயை எடுத்துக் கொண்டு, குளிப்பதற்காக கிணற்றடிக்கு போகிறான். அவனைத் தொடர்ந்து அவனுடைய பிள்ளைகளும் குளிப்பதற்குப் போவதைப் பார்த்து என் பிள்ளைகளும் போகின்றனர். எப்பொழுதும் குளிப்பதற்கு அடம்பிடிக்கும் என் பிள்ளைகள்; குளிப்பதற்கு சந்தோசமாகப் போவதைப் பார்த்து என் மனைவி கொடுப்புக்குள் சிரிக்கிறாள். கிணற்றடி மகிழ்ச்சியில் வெடிக்கிறது.

அந்திப் பொழுது அடங்கிக் கொண்டிருக்கிறது. எளயம்பி, வீட்டில் பள்ளிக்கு கொடுப்பதற்கு சமைத்த நாரிசா சோற்றுப் பெட்டியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு போகிறான். அப்பொழுது ஜும்ஆப் பள்ளி அதிகாரி, "லாவு ஓடிப்போன மாடெல்லாம் புடிபடாம பெரிய காட்டுக்குள்ள வழிமாறி ஓடிப் பெயித்தாம். மாடுகளையெல்லாம் புடிச்சிக்கந்த பொறகுதானாம் கந்தூரி குடுக்கிறயாம்.  நாள பகலைக்கு பள்ளில கந்தூரி இல்லியாம்" என்று, கூவுண்டு போகிறான்.

நாளைக்கு பள்ளியில் கந்தூரி இல்லை என்று சொன்னவுடனேயே என்வீடு அமைதியாகி விட்டது. அப்பொழுது "என்ர செல்லல்லாவே! இது என்ன கொதறத்து வாப்பா! இந்த கந்தூரிக்கு ஒரு கோடிக்கு மேலே செலவழிச்சி போட்டானுகளே வாப்பா! இந்த காசெடுத்து ஏழைக் குமருகளுக்கு ஊடு கட்டி குடுத்திருந்தாலும் எங்கிட பள்ளிக்கும் ஊருக்கும் பறக்கத்து அடிச்சிரிக்குமே! இது இப்ப ஒருவருக்கமில்லாம பெயித்தே! அல்லா இந்த கறுமமெல்லாம் ஆரைச்சுத்துமோ!" என்று கூறியபடி பாத்துமுத்து தலையில் அடிக்கிறாள். பாத்துமுத்துவின் நிலையைப் பார்த்து வாழைப் பாத்திக்குள் படுத்துக் கிடந்த என் நாய் பொட்டு ஊளையிடுகிறது.

என் பிள்ளைகளும் மைத்துனனின் பிள்ளைகளும் சேர்ந்து சகடைக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். சகடையின் சப்தத்தில் அணில்கள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன. "இதுவும் அல்லாட கொதறத்துதான்" என்று கூறி நான் கொடுப்புக்கால் சிரிப்பதைப் பார்த்து என் மனைவி என்னை சுட்டெரிக்கிறாள்.  

Saturday, November 7, 2015

ஆறுமுகனுக்கு ஞானம் வருமா?


அக்டோபர் 30ம் திகதி மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 16வது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையான அதிகாலையிலேயே பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக அமைந்திருக்கும் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பார்கள். அதன் பின்னர் சௌமியமூர்த்தி பவனில் அதாவது இ. தொ. கா. தலைமையகத்தின் மேல் மாடியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலைக்கு பூசை நடக்கும். அதன் பின்னர் வந்திருப்போருக்கு காலை உணவு இட்லி, வடை, சாம்பார், சட்னி, மீன்கறி மற்றும் கேசரியோடு வழங்கப்படும்.

கடந்த 16 ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது. அவரது பிறந்த தினத்தன்று இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இந்த இரு தினங்களிலும் இ. தொ. கா. வைச் சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள், வர்த்தகர்கள் என சௌமியமூர்த்திபவன் நிறைந்திருக்கும். காலை உணவுக்கு தட்டேந்தி நீண்ட கியூ நின்றிருக்கும். பார்ப்பதற்கு கலகலப்பாக இருக்கும். மினிஸ்ட்ரி பெண்களையும் இங்கே வளயவரப் பார்க்கலாம். ஊடகவியலாளர்களுக்கும் இவை பொன்னானா தருணங்கள். மலையகப் பிரமுகர் பலரையும் ஒரே இடத்தில் பார்த்துவிடலாம் அல்லவா!
இந்த நிகழ்வுகள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் நிறைவு பெற்றுவிடும்.
ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி நடைபெற்ற தொண்டமான் நினைவு நாள் மறக்க முடியாதது மட்டுமல்ல@ படிப்பினையானதும்கூட. அற்றகுளத்து அரு நீர்ப்பறவை என்பார்களே, அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

காலை ஆறு மணிக்கு தொண்டமான் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் பிந்தி வந்ததால் எட்டு மணி தாண்டிய பின்னரே அது நடைபெற்றது. சௌமிய மூர்த்தி பவனில் வேலை செய்வோர் போனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்று வாசலில் நின்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மாலை அணிவிப்பு முடிவடைந்து இ. தொ. கா. தலைவர் முத்து சிவலிங்கம் ஏனையோரும் இ. தொ. கா. தலைமையகத்துக்கு திரும்பி வரும்போது ஒன்பதரையாகி விட்டது.

உள்ளே வந்த முத்து சிவலிங்கம் வாசலைப் பார்த்தபடி அமைந்திருக்கும் சௌமிய மூர்த்தியாரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் தனியாளாக நடந்து உள்ளே சென்றார். பெரும்பாலும் மேல்மாடி பூஜை அறைக்கு சென்றிருக்கலாம்.

அனைவரும் எதிர்பார்த்தது, ஆறுமுகனாரை அதாவது பேரனை. பழைய பாராளுமன்ற வளவில் அமைந்திருக்கும் தொண்டமான் சிலைக்கு மாலை அணிவிக்க தாமதமாக வந்த அவர், அப்படியே திரும்பி வீடு சென்று விட்டதால் சௌமியபவன் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இவர் மட்டுமல்ல, வரவில்லை பட்டியல் மிக நீளமானது. மாகாணசபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான் கேகாலை பாஸ்கரன், இரத்தினபுரி லலிதா ராமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், சென்னன், நுவரெலிய சதாசிவம், இவர்கள் யாருமே சௌமிய பவனுக்கு வந்திருக்கவில்லை. வர்த்தக பிரமுகர்கள் வருகை தரவில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடியவில்லை. சௌமிய மூர்த்திபவன் ஏறக்குறைய வெறிச்சோடிக் கிடந்தது. எனவே காலை சாப்பாட்டுக்கு கியூ வரிசையும் இல்லை.

Friday, November 6, 2015

தேவதாசி வரலாறு -13

அருள் சத்தியநாதன்

தேவரடியார் மரபு சட்ட ரீதியாக இந்தியாவெங்கும் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் இன்றைக்கும் பெண்குழந்தைகளை கோவில்களுக்கு நேர்ந்து விடும் வழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் தேவரடியார் மரபு தமிழகத்தில் முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் வறுமை மற்றும் அறியாமை காரணமாக பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்துவதற்கு முன்னரேயே கோவிலுக்கு நேர்ந்து விடும் சம்பவங்கள் தமிழகக் கிராமங்களிலும் எப்போதாவது நிகழ்வதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவத்தையே கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழும்போது ஊடகங்கள் மூலம் அது தெரிய வருமானால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும் கடந்த இதழில் பார்த்தோம். கிருஷ்ணவேணியை மாவட்ட ஆட்சியர் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதோடு ~பொட்டு| தாலியையும் அறுத்தெறிந்திருக்கிறார்.
அமிகெமிக்காயெல்
தான் தத்தெடுத்த இரு பொட்டு
கட்டிய சிறுமியருடன்
தமிழகத்தில் இவ்வாறு தேவரடியார் மரபு அல்லது சிறுமியர் பொட்டுக் கட்டப்படும் வழக்கம் ஒழித்துக் கட்டப்படுவதற்கு பலரும் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் வட அயர்லாந்தைச் சேர்ந்த அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகரும் ஒருவர். 1867 டிசெம்பர் 16ம் திகதி வட அயர்லாந்து மிலிஸ்லே என்ற ஊரில் பிறந்த அமி> 1895ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு> இந்தியாவில் நிலவிய தேவரடியார் மரபு பெரும் அதிர்ச்சியை அளித்தது. தமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத வயதிலேயே ஏழைச் சிறுமியர்களை கோவில்களுக்கு நேர்ந்து ~கடவுளின் குழந்தை|யாக விடப்படுவதை வன்மையாக எதிர்த்த அவர்> அவ்வாறான சிறுமியரைக் காப்பாற்றி தத்தெடுத்து காப்பகங்களில் சேர்த்து பராமரித்தார். ஒரு சமயத்தில் அவரது காப்பகத்தில் சுமார் 700 சிறுமியர் வரை இருந்தனராம். பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தேவரடியார் மரபுக்கு எதிராக இவர் எழுதிய எதிர்ப்புக் குரல் அன்றைய ஆங்கில அரசின் காதுகளில் ஒலித்தது. அமியைப் போல வேறு பல ஐரோப்பியர் மற்றும் ஆங்கிலேயர்களும் பெண்களை தேவதாசிகளாக்கும் முறைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர்.
காந்தியம்மாள்-திருக்குறுங்குடி
2001ம்-ஆண்டில் 86 வயது
தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி என்ற மருத்துவர்> இம்மரபை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடி> அதில் வெற்றி பெறவும் செய்தார். இவருக்கு பெரியார் ஈ.வே.ரா முழு ஆதரவு தந்தார். தமிழகத்தில் இம்மரபை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பெரியாரின் பகுத்தறிவு பிரசாரமும்> பெண்ணுரிமை தொடர்பாக அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துகளும் காரணமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியும் சரி> பெரியாரும் சரி இத்தேவரடியார் மரபை பெண் சுதந்திரத்துக்கு எதிரானதாகவும்> பலாத்கார விபசாரமாகவுமே பார்த்தார்கள். எதிர்த்தார்கள்.

இத்தொடரைப் படித்துவரும் சில வாசகர்கள் பொட்டுக் கட்டுதல் என்று குறிப்பிடப்படுவதை சுட்டிக்காட்டி> பொட்டுக்கட்டுதல் என்றால் என்னவென்று கேட்டிருக்கிறார்கள். எனவே பொட்டுக் கட்டுதல் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

சிறுமியர்க்கு தாலி அணிவிக்கும் சடங்கே பொட்டுக்கட்டுதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தாலி அணிவிக்கப்பட்டதும் அச்சிறுமி கடவுளைத் திருமணம் செய்து கொண்டதாக கருதப்படுவார். எனவே> அச்சிறுமியால் அல்லது வளர்ந்த பின்னர் அப்பெண்ணால் ஒரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏற்கனவே கடவுளுடன் அவளுக்குத் திருமணம் நடைபெற்று விட்டதே!

முன்னர் இப்பெண்கள் நடனத்தில் தேர்ச்சி அடைந்த பின்னரேயே பொட்டுக் கட்டும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். எனினும் எந்த வயதில் பொட்டுக் கட்டப்பட வேண்டும் என்பது ஊருக்கு ஊர்> கோவிலுக்கு கோவில் மாறுபடும். அக்காலத்தில் அதாவது தடைச்சட்டம் வருவதற்கு முன்னர்> சிதம்பரம்> திருவாரூர் திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் ஐந்தில் இருந்து எட்டு வயதுக்குள் பொட்டுக் கட்டுதல் நிகழ்ந்து விடுமாம். தஞ்சையில்> பெண் வயதுக்கு வந்தபின்னர் அதற்குரிய சடங்குகளை செய்து விட்டு அதன் பின்னர் பொட்டுக் கட்டும் சடங்கை நடத்துவார்களாம். எட்டு வயதில் நடனத்தில் தேர்ச்சி பெற முடியுமா? இதனால் பொட்டு கட்டுதலை முடித்துவிட்டு அதன்பின்னர் நடனம் வாய்ப்பாட்டு என்பனவற்றை சொல்லிக் கொடுப்பார்களாம்.

எனவே> தாலியை அணிவிப்பதுதான் பொட்டுக் கட்டுதல்.
பொட்டுக் கட்டுதலுக்கு ஒரு புராண கதை காரணமாகக் கூறப்படுகின்ற போதிலும். அதற்கு அப்பால் யதார்த்த ரீதியான காரணங்களையே தேடிப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்படும்போது> பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால்> ~நல்ல படியாக பிரசவம் நிகழுமானால் பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்து விடுகிறோம்| என்று நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அடுத்தது வறுமை. வறுமையில் வாடும் குடும்பத்தில் பெண் குழந்தை என்பது பெற்றோருக்கு சகிக்க முடியாத சுமை. எனவே> கோவிலுக்கு குழந்தையை காணிக்கையாக்கி விடுவார்கள்.

திருக்குறுங்குடி என்ற ஊரில் பொட்டுக்கட்டி விடப்பட்ட காந்திமதி என்ற தேவதாசி> தான் எப்படி தேவதாசியானேன் என்பதை விளக்குகிறார்.

~~என் தந்தை கோவிலில் வேலை பார்ப்பவர். வறுமையால் அவதிப்பட்டார். அப்போது நான் பிறந்தேன். ஒரு பெண் குழந்தை பிறந்ததைப் பார்த்த கோயிலைச் சேர்ந்தவர்கள்> ~காந்திமதியை பொட்டுக் கட்டி விட்டு விடு@ படிப்புச் செலவை கோயில் பார்த்துக் கொள்ளும்| என தந்தையிடம் சொன்னார்கள். இதை ஏற்று எனக்கு பெற்றோர் பொட்டுக் கட்டி கோவில் திருப்பணிக்காக அர்ப்பணித்தார்கள்|| என்று அவர் தான் தேவதாசியானது எப்படி என்பதை விளக்கியிருக்கிறார்.

இச்சடங்கு இரண்டு விதமாக நடக்கும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு முன்பாக நடத்தப்படும் பொட்டுக்கட்டுதல். இரண்டாவது வீட்டிலேயே நடத்தப்படும் சடங்கு. குருக்கள் வீட்டுக்கு வந்து சடங்கை நடத்திக் கொடுப்பார்.
பொட்டு கட்டுவதற்கு
பயன்படும் திரிசூலம்

Thursday, November 5, 2015

சினிமானந்தா பதில்கள் -28

ஹன்சிகாவின் இளமையின் ரகசியம் என்ன?
ரவிச்சந்திரன் தர்ஷிகா
பூண்டுலோயா
பணக்காரங்களுக்கு செல்வச் செழிப்பு மாதிரி சினிமாக்காரங்களுக்கு  'சினிமாச் செழிப்பு' ன்னு ஒண்ணு இருக்கு. ஹன்சிக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.

இதுல என்னங்க ரகசியம். எல்லாம் maxfaclor தான். முகப்பூச்சு அதாவது மேக்கப்புபாவனா திருமணம் முடித்து விட்டாரா?
சினிமாவுக்கு திரும்பவும் வருவாரா?
                                       என் சப்னா
                                                குருணாகலை

அந்தக் கதையை ஏன் கேட்கிறீங்க! கலியாணம் பேசி முடிச்சாச்சுன்னு முதல்ல சேதி வந்திச்சு. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. கலியாணப் பேச்சு
நின்னு போச்சுன்னு திடீர்னு சொல்லிட்டிட்டாங்க. பாவனாவுக்கும் யாரோ ஒரு நடிகருக்கும் லவ லவா வாம். அதனால மாப்புள்ள பாவனாவை வேண்டாம்னு சொல்லிட்டாராம். எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குதோ யாரு கண்டது!

உங்கள மாதிரி எனக்கும் பாவனாவை பிடிக்கும். இப்ப வர்ற படங்கள்ல நடிக்கிற நடிகைகள பார்க்கிறப்போ பாவனா திரும்ப நடிக்க வந்தா பொழைச்சிருக்கும்னு தோணுது. ஆனா யாரும் சான்ஸ் தருவாங்களான்னு தெரியலியே!


64 வயசுல ரஜனிக்கு கபாலி வேணுமா?
மொகம்மது கவுஸ்
புத்தளம்
ஹிட் படங்கள் கொடுக்க முடிந்தால் அறுபதிலும் நடிக்கலாம். ஆனால் ரஜனியின் அண்மைக்காலப் படங்கள் இறங்கு முகமாகத்தானே இருக்கின்றன. எந்திரனுக்கு கிடைத்த அப்லாஸ், விசில் தேவையில்லை. முள்ளும் மலரும் தந்த மன நெகிழ்ச்சியும் விழிக் கசிவும் இருந்தால் போதும் ரஜனி தொடரலாம்.

அதே வயதில் ஆர்னல்ட் டேர்மினேடர் 4 கொடுத்தார். அமெரிக்கா  ஏற்கிறதே அதுக்கு என்ன சொல்றீங்க?

மிதுனாவுக்கும் திவ்யாவுக்கும் லடாயாமே?
ராஜேஸ் கண்டி
 
அடடே உங்க காதுக்கும் எட்டிவிட்டதா? உள்ளுர் சண்டை சான்ஸ் பிடிக்கிறதுக்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் சவுரி (பொம்பள குடுமி)
புடிச்சண்டை, சான்ஸை கெடுக்கிறதுக்கு இலங்கை தமிழ்ச் சினிமாவில் இப்போ கிடுக்குப் புடிச்சண்டை.


இதுதான் ஆரம்பம். மடியில் இருப்பது இனித்தான் கொட்டும்.

Wednesday, November 4, 2015

கிரடிட் கார்ட் மோசடி


மணி  ஸ்ரீகாந்தன்

உங்கள் பணத்தை உங்களுக்கே தெரியாமல் உருவும் இணைய மோசடி! "கொழும்புக்கு போனா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க, திருட்டு பயலுங்க, சட்டைப் பொக்கட்டில் பிளேடு போட்டு பணத்தை அடிச்சிருவாங்க" என்று அந்தக் காலத்தில் கொழும்பு செல்வோரை எச்சரித்து அனுப்புவது வழக்கம். ஏனென்றால், பிக்பொக்கட் திருடர்கள் தலைநகர் முழுவதும் அதிகமாக உலாவித் திரிந்தார்கள். கொழும்பு வந்து செல்லும் பயணிகளில் பலர் பணத்தை திருடர்களிடம் பறிகொடுத்தவர்களாகத்தான் இருந்தார்கள். கொழும்பு வரும் ஒரு கிராமத்து மனிதர் எந்தவித சேதாரமும் இல்லாமல் ஊர் திரும்பினால் அது பெரிய விஷயம்தான். எழுபது, எண்பது, தொண்ணூறுகளில் இதுதான் நிலை. கொழும்பு காகங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றும் என்பதைத் தனிக்கதையாக எழுதலாம். ஆனால் இன்று பிக்பாக்கட் திருடர்கள் நூற்றுக்கு பத்து வீதமாகக் குறைந்து விட்டார்கள்.

"அந்தக் காலத்தில் ஒரு பொக்கட்டில் கையை விட்டாலே ஆயிரம், ஐநூறுனு சிக்கும். ஆனா, இப்போ நிலைமை அப்படி அல்ல... பணம் கத்தையா முட்டிக்கிட்டு தெரியிற பொக்கட்டுல கையை வைக்கவே சந்தேகமா இருக்கு. ஏன்னா, இப்போ எல்லோரும் பணத்துக்கு பதிலா கிரெடிட் காட்டுதான் வச்சிருக்காங்க. அதை எடுத்து நான் என்ன பண்ணுறது ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கு!" என்று ஒரு திருட்டு ஆசாமி எனது நண்பனிடம் புலம்பிய தகவலை அவர், அண்மையில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பிக்பாக்கெட் திருட்டு அடியோடு அழிந்து போனதற்கு கிரெடிட் கார்ட்டுதான் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலான விசயம். ஆனாலும் வாள் போய் கத்தி வந்த கதை மாதிரி, இப்போ கிரெடிட் கார்ட் திருடர்கள் புதிதாக முளைத்திருக்கிறார்கள். பரட்டை தலையோடு பக்கிரிபாலு, ரவுடி ரங்கனாக உலா வந்தவர்கள். காலம் போய், இப்போ படித்த கோர்ட் சூட் போட்ட டிப்டொப் கிரெடிட் மோசடி பேர்வழிகள் உருவில் வந்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் பொக்கட்டில் கை வைக்காமல், பிளேட் போடாமல் நமது உடமைக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் நமக்கு தெரியாமலேயே நமது பணத்தை உருவி விடுவார்கள், இந்த எத்தர்கள்!

சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபர் எனது நண்பருக்கு கொஞ்சம் பழக்கமானவராம். அவர் எனது நண்பரிடம் "நான் உங்களுக்கு ஒரு போன் பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன். வாங்க ஒன்லைன்ல ஓடர் பண்ணலாம் என்று சொல்லி ஒரு கொம்யூனிகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். போன் ஆசையில் நண்பரும் பின்னால் சென்றிருக்கிறார்.
அங்கே, கணனியைத் திறந்து நெட்டுக்குத் தாவிய அவர், ஒரு இணைய பக்தக்தைத் திறந்திருக்கிறார். அது ஒரு வெளிநாட்டு வங்கியின் இணையப் பக்கம். வங்கியின் வாடிக்கையாளர்களின் பெயர்களும், கிரெடிட் கார்ட் இலக்கமும், வைப்புத் தொகையும் அதனோடு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இரகசிய இலக்கமும் அதில் இருந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் எனது நண்பருக்கு வியர்த்துக் கொட்டியதாம்!'ஏதோ வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டோமோ' என்று உள்மனதும் சொல்லியதாம்.
பிறகு அந்த வாடிக்கையாளர் பட்டியலில் தினமும் கடன் அட்டைகளை பாவிக்கும், நிறைய செலவு செய்யும் ஒரு நபரை தெரிவு செய்திருக்கிறார். பெரிய தொகை வைப்பில் இருந்தாலும் கடன் அட்டையை அரிதாக பாவிக்கும் ஒரு நபரிடமிருந்து உருவுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்கிய மாதிரியாகி விடும். ஏனெனில் அவர் அதைக் கண்டுபிடித்து விடுவார். அடிக்கடி கடன் அட்டையை பாவிக்கும் ஒருவரிடம் சுட்டால் அதை அவர் தெரிந்துகொள்ள மாட்டார் என்பது இந்த இணைய திருட்டில் அடிப்படை விதி. அதனால் தான் தினமும் அட்டையை பாவிக்கும் ஒரு நபரை தெரிவு செய்திருக்கிறார் அந்த மனிதர். அதன் பிறகு கொழும்பில் ஒன்லைன்னில் ஓடர் செய்யும் வசதி உள்ள ஒரு வர்த்தக நிலையத்தை தெரிவு செய்து, இரண்டரை லட்சம் பெறுமதியான தங்க மாலை ஒன்றை ஆடர் செய்யத் தயாராகி இருக்கிறார். அப்போது உஷாரான நண்பர் அது பற்றி கேட்க,

"எனக்கு மாலையை ஓடர் பண்ணுறேன். அதோடு உங்களுக்கான போனையும் ஓடர் செய்வேன். இரண்டு பொருட்களும் உங்க வீட்டுக்குத்தான் வரும். நீங்கள் போனை எடுத்துக்கொண்டு மாலையை எனக்குத் தந்துவிடுங்கள்" என்றாராம். பயந்துபோன நண்பர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன்பிறகு அவர் வேறு ஒரு நண்பர் பெயரில் பொருட்களை ஓடர் செய்து தங்க மாலையை பெற்றுக்கொண்டு அந்த நண்பர் விரும்பிய பொருளை பரிசாக அளித்திருக்கிறார். இப்படி செல்வந்தர்களான வெளிநாட்டுக்காரர்களின் பணத்தை பெறுமதியான பொருட்கள் வடிவில் இரகசியமாக திருடுவதில் பலர் நிபுணர்களாக விளங்குகிறாரக்ள்.

இப்படித் திருடும் நபர்கள் அடிக்கடி இலங்கை வருவார்கள். ஏனெனில் இது அதிகம் கவனிக்கப்படாத மூன்றாம் உலக நாடு. பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஸ்ரீலங்கா என்ற ஒரு நாடு இருப்பதே தெரியாது. எனவே இங்கே வந்து பொருட்களை அதாவது தங்க ஆபரணங்களை ஓடர் செய்து பெற்றுக்கொண்டு அவற்றை விற்றுப் பணமாக்கிக் கொள்கிறார்கள். பின்னர் இங்கே ஆடம்பரமாக செலவு செய்தது போக மிகுதியை சுருட்டிக் கொண்டு தாம் வாழும் நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.

ஆனால், இப்போது அந்த மோசடி வேலையை செய்ய முடியாது என்று தெரிய வருகிறது. இணையத்தில் ஒருவருடைய கடன் அட்டையின் மீது பொருட்களை கொள்வனவு செய்யும்போதே அதன் உரிமையாளருக்கு எஸ். எம். எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. உள்ளுர் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு இப்படித் தகவல் தெரிவிப்பது மாதிரியான ஏற்பாடு மேல் நாடுகளிலும் வந்து விட்டதால் இந்த எத்தர்களுக்கு சுருட்டுவது சிரமமாகிப் போயிருக்கிறது.

மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் போதே கடன் அட்டை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அறிவித்துவிட்டு நாட்டை விட்டு புறப்படும்படி தமது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவித்துள்ளன. ஒருவருடைய கிரடிட் கார்டில் இன்னொருவர் திருட்டுத்தனமாக பொருட்களைக் கொள்வனவு செய்வாரானால் இந்த நாட்டில், இந்த நிறுவனத்தில் இவ்வளவு பெறுமதியான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற தகவல் உடனடியாக கார்ட் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அவரால் உனடியாக செயல்பட்டு ஒன்லைன் விற்பனையை தடை செய்ய முடியும். உள்ளுரை எடுத்துக் கொண்டால் நாம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்த பிறகு, கடன் அட்டையை கொடுத்து பணத்தை செலுத்தும் போது, விற்பனையாளர் கடன் அட்டையில் வாடிக்கையாளரின் பெயர், கையொப்பம் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகே மெஷினில் உரச வேண்டும். ஆனால் நடைமுறையில் சுப்பர் மார்க்கட்  அல்லது பெரிய வியாபார நிலையங்களில் பணிபுரியும் காசாளர்கள் வாடிக்கையாளர் கையெழுத்திட்டுத் தரும் ரசீதில் உள்ள கையெழுத்தையும் கிரடிட் கார்டில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.

இப்போது இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், சில மோசடி பேர்வழிகள் எழுத்துக்கள் எதுவும் பொறிக்கப்படாத கடன் அட்டையில் உள்ள சிப்பில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் கணக்கை (டவுன்லோட்) தரவிறக்கம் செய்து அதை வாடிக்கையாளர் கூட்டமாக இருக்கும் கடைகளில் நுழைந்து பரபரப்பான சூழலில் அந்த அட்டையைக் கொடுத்து பொருட்களை வாங்கி விடுவார்களாம். இதற்கு சில இடங்களில் காசாளரின் உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு இன்னொருவரின் கடன் அட்டையில் பத்து விஸ்கி போத்தல்களை வாங்குகிறார் என்றால் எட்டை எடுத்துக்கொண்டு, இரண்டை அந்தக் காசாளருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவார்களாம்.
ஏனெனில் இது தவறான கார்ட் என்பதை பார்த்த மாத்திரத்தில் காசாளரால் கண்டு பிடித்துவிட முடியும். முதலிலேயே காசாளரை சரிக்கட்டி பின்னர் திருட்டில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்து விடுவதன் மூலம் இத்திருட்டை சிலர் செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான பணம் சுப்பர் மார்க்கட்டுக்கு வந்துவிடும் என்பதால் காசாளர் கவலைப்படத் தேவையில்லை. இப்போது எல்லா வழிகளையும் கண்டு பிடித்து அடைத்து விட்டதால், மோசடி பேர்வழிகள் பாடு பெரிய திண்டாட்டமாகப் போய்விட்டிருக்கிறது. ஆனால் எத்தர்கள் ஒருபோதும் சளைப்பதில்லை. விரைவிலேயே இன்னொரு வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

வங்கியில் ஏடி எம் மில் பணம் எடுக்கும் போது, நமக்கு தேவையான தொகையை தெரிவு செய்து ஓகே செய்தவுடன் பணம் வெளியே வந்துவிடும். வந்த பணத்தை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் எடுக்காவிட்டால் அது, பழையபடி உள்ளே சென்றுவிடும். ஆனால், இப்போது அந்தமுறையை பல வங்கிகள் நிறுத்தி விட்டன. பணம் வெளியே வந்தால் வந்ததுதான். மறுபடி அது உள்ளே செல்லாது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அதை இங்கே சொல்வதற்கில்லை.

எத்தர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே சபாஷ், சரியான போட்டி!