Wednesday, December 24, 2014

தேவதாசி வரலாறு -3

தாய் வழிச் சமுதாயம் தந்தை வழியாக மாறியபோது...


அருள்  சத்தியநாதன்

மனித வரலாற்றின் ஆரம்பத்தில் தாய்வழிச் சமுதாயமே, இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் நிலவியிருந்தது. மனிதர்கள் நதிக்கரை நாகரிகத்தை ஏற்று விவசாய மற்றும் காணி உடமை சமூக வாழ்க்கைக்கு வந்த பின்னரேயே அது தந்தை வழி சமுதாயமாக மாறியது.

தாய்வழிச் சமுதாயத்தின் போது வேட்டைக் கலாசாரமே நிலவியது. வேட்டையாடுவதற்கும் வேட்டை உணவை பதப்படுத்துவதற்கும், உண்ணும் வகையில் தயார் செய்வதற்கும் பெண் தேவைப்பட்டாள். மழைகாலத்தில் வேட்டையாடுதல் குறைந்து போய், சேமித்த உணவுகளை உண்டு இளைப்பாறினர். இக்காலப்பகுதியிலேயே ஆண் - பெண் உறவு அதிகம் நிகழ்ந்தது. அச்சமயத்தில் உறவு முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படவில்லை. தாயும் மகனும், தந்தையும் மகளும் என்பதாக உறவுகள் இடம்பெற்றன. ஒரு பெண்ணுடன் எவர் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதால், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாய்வழியாகவே அறியப்பட்டன. இத்தனை குழந்தைகளும் இந்தப் பெண்ணுக்குப் பிறந்தவை என்றே அறியப்பட்டதே தவிர, இக்குழந்தைக்கு இவரே தந்தை என்று கூறப்படவில்லை. அப்படி அழைப்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் தாய்வழிச் சமூக முறை நடைமுறையில் இருந்தது. தாயின் உடமைகள் அவளது மகளுக்கு உரிமையாயின.

 மனிதர்கள் வேட்டை கலாசாரத்தை விட்டு நதிக்கரை விவசாய கலாசாரத்துக்கு மாறியதும் காட்சிகள் மாறுகின்றன. நதிக்கரை சமூகச் சூழலில் வரையறைக்குட்பட்ட சில வேலைகளை மனிதன் தொடர்ச்சியாக செய்துவர வேண்டியிருந்தது. நிலத்தைப் பதப்படுத்தல், நடுதல், காத்தல், அறுவடை, சேமிப்பு மற்றும் மீன் பிடித்தல் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை தினமும் ஒரே இடத்தில் செய்ய வேண்டியிருந்ததால் அதற்கு ஆண்கள் நெடுநேரம் வீட்டுக்கு வெளியே இருக்க நேரிட்டது. எனவே, இருப்பிடம் தொடர்பான வேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் பெண் பார்த்துக் கொண்டாள். இப்படி சாப்பிடுவதற்கான பொருள்தேடும் முக்கிய பணி ஆண்வசம் சென்றதால் பெண்வழிச் சமுதாயம் மெது மெதுவாக ஆண்வழிச் சமுதாயமாக மாறத் தொடங்கியது.

ஆங்கிலத்தில் keep the fire burning என்று சொல்வார்கள். நெருப்பை அணைந்து விடாமல் பாதுகாப்பது என்பது அக்காலத்தில் முக்கியமான விஷயம். இந்த வாக்கியத்தின் பொருள் இன்றைக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொண்டதாக மாறிப் போயிருந்தாலும் பண்டைய காலத்தில் நெருப்பு மக்கள் வாழ்வில் முக்கிய இடம் வகித்தது. காட்டு விலங்குகளை விரட்டும், உஷ்ணத்தைத் தரும், சமைக்க உதவும், சமிக்ஞையாகவும், இரவில் பாதுகாப்புத்தரும் ஒன்றாகவும் அவர்கள் வாழ்வில் நெருப்பு விளங்கியது. இதனால்தான் பண்டைய இன்றைய மதங்களில் நெருப்புக்கும் ஒளிக்கும் ஒரு முக்கிய இடம் தரப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் கஷ்டப்பட்டு பற்ற வைக்கும் நெருப்பை அணையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தது. குளிர்காலத்தில் இரவு பகலாக நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படி நெருப்பை அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கு பெண் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. ஆண் வேலைத்தளங்களில் இருக்க, நெருப்பை அணையவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் உணவுகளை நெருப்பில் சமைக்கவும் அவற்றை வாட்டி பாதுகாப்பாக வைக்கவும் பெண் வீட்டில் தங்க வேண்டியதாகிவிட்டது. தாய்வழிச் சமுதாயம், தந்தைவழிச் சமுதாயமாக மாறுவதற்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் இதுவே அடிப்படையான காரணமானது.

பெண் வீட்டில் தங்கவும், அவளுக்கென பல பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அதன் பின்னரேயே ஒரு ஆண் தனக்கென ஒரு பெண்ணை துணைவியாக வைத்துக் கொண்டு தங்கள் இருவரைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக் கொள்ளும் குடும்ப முறை தோன்றியது. தந்தையும் மகளும் சேரும் வழக்கம் ஒழிந்தது. குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகள் படிப்படியாக உருப்பெற ஆரம்பித்தன.

இப்படி உருவாகத் தொடங்கிய குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகள் ஆண்களுக்கு சாதகமானவையாகவும் பெண்களை அடிமைப்படுத்தும் வகையிலும் அமையத் தொடங்கின. மனித குழுவில் தலைமை இடத்தை வகித்த பெண், குடும்ப கட்டமைப்பு வந்ததும் தமது உரிமைகளை இழக்கத் தொடங்கினாள். இப்படி ஆணுக்கு விட்டுக் கொடுத்ததற்கு அவளது இயல்பான தாய்மைக் குணமும் காரணமாக இருந்திருக்கலாம்.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், நெறி நூல்கள், சமயங்கள், வழிபாட்டு முறைகள் என்பன பெண்களுக்கு சம உரிமை அளிக்கவில்லை. மாறாக பெண்ணை தாழ்த்தின, இழிவு படுத்தின, உணவை உற்பத்தி செய்யும் ஆணுக்கே குடும்பத்திலும், சமூக மட்டத்திலும் சமய வழிபாட்டு முறைகளிலும் முதலிடம், முதல் மரியாதை வழங்கப்பட்டது.

உணவை உற்பத்தி செய்யும் அல்லது வீட்டுக்கு வருவாயையும் பாதுகாப்பையும் வழங்கும் ஆணுக்கு பெண் கட்டுப்பட்டவள். திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது. அது ஒரு குற்றச் செயல். அவள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு அந்த ஆணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சமூக சட்டம், ஆசிய குடும்பங்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் இந்த சட்டமே இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

சமூக சட்டங்களும் மத கோட்பாடுகளும் பெண்களைத் தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளன. இளமையில் பெற்றோர் கட்டளைப்படியும், குமர்பருவத்தில் கணவன் கட்டளைப்படியும், கணவனுக்குப் பின் பிள்ளைகள் கட்டளைப்படியும் நடக்க வேண்டும் என்று கூறும் மனுநீதி, பெண்கள் தன்னிச்சையாக ஒருபோதும் நடக்கக் கூடாது என்கிறது. டொமஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர், உடல் பசியைப் போக்க விலைமகளிரும், குழந்தை பெற்று வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள மனைவியும் வேண்டும் என்று கூறுகிறார். மோசஸ் பெண்களை அசுத்தமானவள் என்கிறார். ஏவாள் செய்த மோசடியால்தானே ஏதேன் தோட்டத்தில் இருந்து பூவுலகுக்கு இருவரும் சபிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள்! சமண மதத்தில் பெண்கள் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. பௌத்தத்தில் பிட்சுணிகளுக்கு சம அந்தஸ்து கிடையாது.

கற்பு நெறி ஆண்களுக்குக் கிடையாது. ஆண் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவியரை வைத்துக் கொள்ளலாம். விபசாரிகளிடம் செல்லலாம். அதெல்லாம் கௌரவமான விஷயங்கள்தான். ஆனால் பெண் கணவனைத் தவிர வேறு யாருடனும் உறவு வைத்துக் கொள்ள முடியாது.

கணவனை இழந்த பெண்ணின் நிலை பரிதாபமானது. அவள் சமூக வாழ்வில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். வெள்ளை ஆடை அணிந்து மூளியாக இருக்க வேண்டும். தலைக்கு மொட்டை போட்டு தனி வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவேளை சாப்பிட்டு தவ வாழ்க்கையில் காலத்தை செலவிட வேண்டும் என்பது போன்ற கடுமையான சட்டங்கள் இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட, கணவனை இழந்த கிறிஸ்த பெண்கள்கூட விதவைக் கோலத்தில் சமூக முக்கியத்துவத்தை இழந்தே வாழ்கின்றனர்.

இவை அனைத்தும் தன் சமூக அந்தஸ்தை இழந்த பெண் எப்படி படிப்படியாக ஆண் ஆதிக்கத்துக்கு உட்பட்டு தன் உரிமைகளை இழந்தாள் என்பதையே சித்தரிக்கின்றன. ஆண் ஒரு பெண்ணோடு வாழ்ந்து முடிக்கும் ஒரு பிறவி அல்ல என்பதால், இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வதும் தாசி வீடு சென்று வருவதும் கௌரவமான நடத்தைகளாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவனது இந்த இச்சையின் இன்னொரு வடிவமாக எழுந்ததே தேவதாசி முறை. இது ஆணுக்கு ஒரு கௌரவமான காதல் ரசம் சொட்டும் பொழுது போக்காக அமைந்தது. நாம் நாடகம், திரைப்படம், கிளப் என்று போய் பொழுது போக்குகிறோம். மன்னர் காலத்தில் தனவந்தர்கள் மற்றும் செல்வாக்கானவர்களுக்கு பொழுது போக்காக சிருங்கார சுவையுடன் அமைந்ததே தாசி வீடும், தேவதாசியினரும்.

தாசியை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. நாட்டியம், பாடல் என அவள் கலைகளைக் கற்றிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. கோவில்களில் நடனமாடுவதற்காக தெரிவு செய்து விடப்பட்ட தேவதாசியினர் நடனமாடக் கூடியவர்களாகவும் பாடக்கூடியவர்களாகவும் இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்தவர்களாகவும் விளங்கினர். கவர்ச்சியான, எடுப்பாக ஆடைகள் அணிய அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அறுசுவை உணவுகளை சமைக்கவும், மது வகைகளை கையாளவும், வரவேற்று அன்புடன் பேசவும் உபசரிக்கவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதே சமயம், இக்கலைகளைத் தெரிந்தவர்களாக அந்தப் பெரிய மனிதர்களின் மனைவிமார் இருக்கவில்லை. எனவே வாழ்க்கையை, தமது ஓய்வு நேரத்தை சிருங்காரமாகக் கழிப்பதற்கு, கணிகை வீட்டுக்குச் செல்வதைவிட, தேவதாசி வீட்டுக்குச் செல்வதையே இவர்கள் விரும்பினர்.

தேவதாசிகளின் முதல்பணி, தாம் சார்ந்திருக்கும் கோவில்களில் நடனமாடுவதும் ஏனைய கோவில் பணிகளைச் செய்வதும்தான். எனவே கோவில்களே அவர்களுக்கு தங்க இடம் வழங்கியிருந்தது. ஆனால் ஆடலும் பாடலும், வசீகரமும், மயக்கும் கலைகளும் தெரிந்திருந்த தேவதாசிமார் நகரின் பொருத்தமான இடங்களில் சொந்த அல்லது வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். ஏறக்குறைய ஒரு வி.ஐ.பி. மாதிரியான வாழ்க்கைதான். அவருக்கு பணிவிடை செய்ய சேவகர்கள் இருந்தனர். ஒரு பிரத்தியேக உதவியாளர் கூடவே இருப்பார். இத்தகையோர் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்ந்தனர். இந்த வரிசையில் நாகரத்தினம் அம்மாள் இறுதியாக வாழ்ந்த செல்வந்த தேவதாசி எனலாம்.

கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்களே தேவதாசிகள் என்பது உண்மையானாலும் ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழ் சமுதாயத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பரத்தைக்குல மரபின் இன்னொரு வடிவமாகவே, தேவதாசியர் இதைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், தேவதாசியர் மரபை வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்)

No comments:

Post a Comment