Saturday, December 13, 2014

இருள் உலகக் கதைகள்

கூடு விட்டு கூடு பாயும் பூமணியின் ஆவி


தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை


கேட்டு எழுதுபவர்:  மணி ஸ்ரீகாந்தன்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பெருந்தோட்டப் பகுதி அது. தேயிலைச் செடிகளை விட இறப்பர் மரங்களே அங்கு அதிகம். அதனால் எப்போதும் இருள் சூழ்ந்த ஒரு சூழல், பார்க்க அச்சமாகத்தான் இருக்கும்.

நொண்டி முனி கோவில், மோகினிமலை, புளியமரம் போன்ற இடங்கள் பிரபலமானதாகவும் புதுசா ஊருக்கு வருபவர்களுக்கு ஏதோ பழைய பேய் படங்களில் வரும் இடங்கள் மாதிரியும் தோன்றுவதோடு கேட்கும்போதே அவர்கள் உடல் புல்லரித்துப் போவார்கள்.

"வெயிலில் வேலை பார்த்த களைப்பில் பகல் சாப்பாட்டைப் பிரித்து சாப்பிட்டு விட்டு கொழுந்து பறிக்கும் பெண்களைப் பார்த்து 'இருபது கிலோ எடுக்கலன்னா இன்றைக்கு அரைப்பேருதான்' என்று சத்தம் போட்டு சொல்லிட்டு புளிய மரத்தடியில் ஒருககளித்துப்படுத்தார் பெரியாண்டி கங்காணி. பிறகு எழுப்பி பார்த்த போது மனுஷன் பிணமாகத்தான் கிடந்தாராம். தோட்டத்து மருத்துவர் வந்து பெரியாண்டியை புரட்டிப் பார்த்தபோது அவர் முதுகில் ஐந்து விரல் அடையாளம் இருந்ததாம். அதனால் பெரியாண்டியை பேய் அடித்துக் கொன்றுவிட்டதாக சொல்லி புளியமரத்திற்கு பேய் புளியமரம்னு பெயர் வெச்சிட்டாங்க" என்று அந்த தோட்டத்து பெரிசுகள் சொல்லும் கதையும் சுவாரஸ்யமானதுதான்.

அன்று மாலை ஐந்தரை மணியிருக்கும். கஹவத்தை வட்டாபத்தை தோட்டத்தில் வசிக்கும் ராகவன் புதிதாக திருமணம் முடித்த தனது மனைவியோடு தலைத்தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக மாமனார் வீட்டிற்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான். தோட்டச் சந்தியில் பஸ்சை விட்டு இறங்கும்போது நேரம் ஆறு மணியைக் கடந்திருந்தது. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் நேரத்தோடு சென்று விட்டதை அறிந்து கொண்ட ராகவன். மனைவி சுமதியை அழைத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் நடந்தான். மாலை மங்கிவிட்டதால் இறப்பர் தோட்டத்தை இருள் சூழ்ந்து விட்டது. செல்போன் 'டோர்ச்' வெளிச்சத்தில் அந்தக் கல்குழி பாதையில் இருவரும் கரங்களைப் பற்றியவாறே பேசிக் கொண்டே நடந்தார்கள்.

சிறிது தூரம் சென்ற பிறகு ராகவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுமதி பதில் சொல்லாமல் மௌமாக இருக்க ஆரம்பித்தாள். எனவே ராகவன், 'ஏன் பேச மாட்டேங்குற?' என்று அவளிடம் கேட்டான். 'பின்னாடி அந்தப் பாறைமேலே ஒரு பொண்ணு உட்கார்ந்து விசும்புறதைப் பார்த்தீங்களா' என்று சுமதி வாய் திறந்தாள். அதோ அங்கே என்று சுமதி சுட்டிக் காட்டிய இடத்தை ராகவன் பார்த்தபோது அவன் கண்ணுக்கு பாறை மட்டுமே தெரிந்தது.

"அப்படி யாரும் இல்லை, சும்மா பிரமையாக இருக்கும்" என்று கூறிய ராகவன் அவள் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.

"அட சத்தியமா கண்டனே!" என்ற சுமதியை "யாரோ புது ஜோடியாக இருக்கும்" என்று ராகவன் சமாதானப்படுத்தினான்.

ஆனாலும் தன்னை யாரோ பின் தொடர்வது மாதிரி சுமதிக்குத் தோன்றியதால் ராவனின் இடுப்பைச் சுற்றி தன் வலக்கரத்தை பிணைந்து கொண்டாள். இப்படியே இருவருமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் ராகவனிடம் சுமதி "நாம நடந்து வரும்போது தூரத்தில் ஒரு பொண்ணு அழுகிற மாதிரி சத்தம் கேட்டுச்சு" என்று மீண்டும் சொன்னாள். மனைவியின் கூற்றுகள் பொய்யாகவும் இருக்காது என்று நினைத்த ராகவன், அது சாக்குருவியாக இருக்கும் என்று சமாதானம் சொல்லி மனைவியின் வாயை அடைத்தான்.

தலைத்தீபாவளி கொண்டாட்டத்தில் ராகவன் திக்குமுக்காடி போயிருந்தாலும் அவனுக்கு சாராயம் இல்லாதது ஒரு குறையாகத்தான் இருந்தது. இரண்டு நாள் எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டிருந்தவன். பொறுமைகாக்க முடியாமல் மனைவியிடம் மன்றாடி அரைப் போத்தலுக்கு பணத்தை வாங்கிக் கொண்டான். மதுபானக் கடையை நோக்கிப் பறந்தான்.

இரத்தினபுரி டவுனில் இருக்கும் மதுக் கடையில் போத்தலை வாங்கியவன், அங்கேயே மூடியைத் திறந்து கால் போத்தலை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டான். பதற்றம் மறைந்து நிம்மதி பிறந்தது அவன் மனதில். பின்னர் வீடு நோக்கி நடந்தான்.

அப்போது இரவு ஏழு மணி இருக்கும். அந்த இறப்பர் தோட்டத்து ஒற்றையடிப் பாதையை கடக்கும் போது, ஒரு பொண்ணு உட்கார்ந்து இருந்ததாக சுமதி சுட்டிக்காட்டிய அந்த பாறையை ராகவன் பார்த்தான். அங்கே அவனுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வெள்ளை நிற நீண்ட கவுன் அணிந்திருந்த ஒரு இளம் பெண் அங்கே அமர்ந்திருந்தாள். 'அட இவளத்தான் நம்ம மனைவி அன்றைக்கு பார்த்திருக்கிறா' என்று நினைத்தவாறே இந்த நேரத்தில் இவளுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டுத்தான் பார்ப்போமே என்ற முடிவுடன் ராகவன் அந்தப் பெண்ணை நெருங்கினான். தலையைக் கொஞ்சம் குனிந்திருந்த அவள் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். கண்களில் ஒரு வெறித்தனம் கனல்போல் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பார்வை ராகவனை ஏதோ செய்வது போல இருந்தது.

தேவா பூசாரி

சாராயம் வாங்கிவர டவுனுக்கு போன ராகவன், நேரம் நள்ளிரவை நெருங்கிய பின்னரும் வீடு வராததால் சுமதி கலக்கமடைந்தாள். அது அழுகையாக வெளிப்பட்டது. விஷயத்தை அறிந்த உறவினர்கள் ராகவனைத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.

விடியற்காலை மூன்று மணியளவில் தெப்பக்குளம் சுடுகாட்டு பக்கத்தில் சுயநினைவின்றி படுத்துக் கிடந்த ராகவனை சில இளைஞர்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டார்கள். சாராயம் குடிக்க டவுனுக்குப் போனவன் வீடு திரும்பும்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் சுடுகாட்டுப் பக்கத்திற்குப் போக வேண்டும் என்பது தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் குழம்பிப் போனார்கள். கண்விழித்த ராகவனோ, பிரமை பிடித்தவனாக உளறிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏதோ பேய், பிசாசுதான் பிடித்து விட்டதோ என்று வீட்டார் சந்தேகப்பட, ஒருவேளை இது பூமணியோட வேலையா இருக்குமோ என்று ஊர்ப் பெரிசுகள் சொன்ன தகவலைக் கேட்டு அனைவரும் குலை நடுங்கிப் போனார்கள்.

யார் இந்தப் பூமணி?

ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட பூமணி செத்துப்போய் முப்பது வருடங்களாகின்றன. இன்னும் அந்த ஆத்மா சாந்தியடையாமல் இருக்குமா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். அந்த ஊரில் சிலர் வழி தடுமாறிப் பாதைகளில் விழுந்து கிடப்பதும் நள்ளிரவில் கேட்கும் சலங்கைச் சத்தமும் இப்போது ஊர்க்காரர்களின் வாய்களில் பூதாகரமாக உருவெடுத்தன. இதற்கெல்லாம் பூமணிதான் காரணமாக இருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக நம்பிய ஊர் வாசிகள் இதற்கு பரிகாரம் காண வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். ஒரு பெரிய பூசாரியை அழைத்து வந்து பூமணிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த அவர்கள் தேவா பூசாரியை அழைத்தார்கள்.

தேவா பூசாரி அந்த ஊருக்குள் தமது சகாக்களோடு நுழைந்த போது அதுவரை ராகவனின் உடம்பில் இருந்த பூமணியின் ஆவி கூடு விட்டு கூடு மாறி ராகவனின் மனைவியை பிடித்து விட்டதாக ஒரு தகவல் தேவாவின் காதுகளுக்கு எட்டியது. அந்தத் தோட்டத்தில் உலா வருவது சாதாரண ஆவி அல்ல. அது எல்லா வித்தையும் தெரிந்த தீய சக்தியாகத்தான் இருக்கும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே ரொம்பவும் ஜாக்கிரதையாக களத்தில் இறங்கி தமது குலதெய்வமான முருகனை நினைத்து கை கூப்பி விட்டு, அட்சர சதுரங்கத்தில் அமர்ந்தார்.

அப்போது பூமணியின் பேயாட்டமும் தொடங்கி விட்டது. பேயை தமது பிடிக்குள் கொண்டு வர அவரின் சகாக்களான ராம்கி, புஸ்பகுமார் சத்தியராஜ் உள்ளிட்டோர் ஆவியோடு போராட ஆரம்பித்தனர். வீட்டுக்கு வெளியே வேறு ஏதும் தீயசக்திகள் இருக்கிறதா என்பதை தேவாவின் சகா ஸ்டீபன் நோட்டம் விட்டுக்கொண்டே அனுமார் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். சில மணித்தியாலம் கரைய, தேவா படிப்படியாக முன்னேறிச் சென்று தமது சக்தி வாய்ந்த மந்திரப் பிரயோகங்களின் மூலம் பூமணியைச் சுற்றி ஒரு வலையை விரிக்க ஆரம்பித்தார். இறுதியில் சுமதியின் உடம்பில் குடிகொண்டிருந்த பூமணியை தமது பிடிக்குள் கொண்டு வந்து அது வேலு உடம்பிற்குள் புகாதபடி மந்திரக் கட்டுகளை போட்டு ஒரு வட்டத்துக்குள் ஆவியைக் கொண்டு வந்தார். அதன் பின்னர் சுமதி வாயிலாக பூமணியின் ஆவி ஆக்ரோஷத்துடன் பேசத் தொடங்கியது. ஜூலை கலவரத்தில் தன்னைச் சூறையாடி கொலை செய்த காடையர்கள் அனைவரையுமே கொன்று விட்டதாகவும், ஆனாலும் தாம் வாழ்ந்த அந்த ஊரைவிட்டு வெளியேற மனமில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் அதற்காகத்தான் தற்போது சுமதியின் உடம்பில் வசிப்பதாகவும் மேலும் சிறிது காலம் வாழ ஆசைப்படுவதாகவும் பூமணியின் ஆவி சொன்னது.

தேவா பூசாரியோ, நீ தங்கி வாழ சுமதியின் உடலை என்னால் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். ஒரு பக்கம் பூமணி ஆவியுடன் பேசியபடியே பூசாரி ஆவிக்கு கடும் மிரட்டல்களை விடுத்தார். உனக்கு என்ன வேணுமோ அவற்றை எல்லாம் நீ தின்பதற்குத் தருகிறேன் என்று கூறிய அவர், பூமணி கேட்டதை எல்லாம் சாப்பிடக் கொடுத்தார். ஆவேசமாக ஆவி உணவுகளைக் கபளீகரம் செய்து கொண்டிருந்த அந்த பலவீனமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மந்திரித்த தண்ணீரை சுமதியின் முகத்தில் அடித்து பூமணியை நிலைகுலையச் செய்தார். அவளைப் பிடித்து போத்தலில் அடைத்தார். பிறகு அதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என்பதால் உடனடியாக அனைத்து பரிகாரங்களையும் செய்து முற்சந்தியில் தீயில் போட்டு அந்தப் போத்தலை எரித்தார். நெருப்பு சூட்டில் சூடேறிய போத்தல் வெடித்தது. அப்போது ஒரு தைரியசாலியே நிலைகுலைந்து போகும்வகையில் ஒரு மரண ஓலம் தேவாவிற்கு மட்டும் கேட்டது. பூமணியின் கதை முடிந்துவிட்ட திருப்தியோடு தேவா புறப்பட்டார். தலைத்தீபாவளி கொண்டாட வந்த ராகவன், சுமதி தம்பதியரும் மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

No comments:

Post a Comment