Tuesday, December 9, 2014

லொட்டு லொசுக்கு வாங்கி விற்கும் சந்தனத்துடன் மணக்கும் உரையாடல்

‘ஓய்வுபெற்றதும் பழைய மரியாதையை வீட்டில் எதிர்பார்க்க முடியுமா என்ன?’


மணி  ஸ்ரீகாந்தன்

புளத் சிங்கள ஹல்வத்துறை பகுதியில் உள்ள ஒரு முட்டுச்சந்து பெட்டிக்கடையில் சூடு பறக்கும் பருப்பு குழம்பையும், பாணையும் ஒரு பிடி பிடித்து விட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பழைய லொட லொடா சைக்கிளில் ஏறி அமர்கிறார் நம்ம ஹீரோ சந்தனம்.ஹல்வத்துறை பகுதியில் அவரும் ஒரு விஐபி தான். காலை ஆறரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி லொட்டு லொசுக்கு என கழிவு இரும்பு சாமான்களைச் சேகரித்து விற்கும் வியாபாரத்தில் உள்ள இவருக்கு இப்போ 70 வயதாகிறது.

"நம்ம வீடு பக்கத்திலதான் இருக்கு. ஆனா காலை உணவை வீட்டில் சாப்பிட எனக்குப் பிடிக்கலை. இந்த தோட்டத்தில் நான் ஒரு முப்பது வருசமா வேலை செய்து இப்போ ஃபன்டும் எடுத்திட்டேன். ஆனால் நான் வேலை செய்த போது வீட்டில் இருந்த மரியாதையை இப்போவும் எதிர்பார்க்க முடியுங்களா? நாம ஒரு தண்ணியோ, சாப்பாடோ கேட்டா அது வர எப்படியும் அரை மணி நேரம் ஆகும். அதுக்கு இந்த மாதிரி ஒரு கடையில் உட்கார்ந்து ஆடர் போட்டா அஞ்சே நிமிசத்துல கைமேல கிடைக்குது" என்று எல்லா ஆண்களுக்கும் பொதுவான ஒரு தத்துவத்தை மென்மையாக எம்மிடம் எடுத்துப் பேசுகிறார் சந்தனம்.

"விலைவாசி ஏறிடுச்சு. பாணும், பருப்பும் டெய்லி சாப்பிட ரொம்ப செலவாகுமே...?" என்று சந்தனத்தைச் சூடாக்கினோம்.
"பாண் விலை கூடினாலும் பாண் சாப்பிடுவதை நிறுத்த முடியுங்களா? பருப்புக் கறியுடன் பாணின் சுவையே தனிதான்" என்று சொல்லிச் சிரிக்கிறார்.

ஓடிக்களைத்து, ஒன்றுக்கும் இது உதவாது என்கிற நிலையில் இருக்கும் துருப்பிடித்த சைக்கிள்தான் சந்தனத்திற்கு டிரக்டராகவும் பி.எம்.டபிள்யு ஆகவும் துணையாக இருக்கிறது.

"டயரும் பிரேக்கும் நல்லா இருந்தா போதுங்க.... லொட்டு லொசுக்க மூட்டையில கட்டி வச்சிட்டு சைக்கிளை தள்ளிக்கிட்டு நடக்கத்தானே போறேன்"னு 'அசால்ட்டாக' சொன்னவர்,

"எங்கப்பா வெள்ளைக்காரன் காலத்துல தந்தி ஒபீசுல வேலை செய்திருக்காரு. வெளிநாட்டில் இருந்து வரும் தந்திகளைக் கேட்டு வெள்ளைக்காரன்கிட்டே சொல்லுறதுதான் எங்கப்பாவோட வேலை. எங்கம்மா பேரு கன்னியம்மா. அந்தக்காலத்தில் அவங்க ரோட்டுல போனா கன்றுக்குட்டி சலங்கை கட்டி போற மாதிரி சத்தம் கேட்குமாம். அவ்வளவு நகையை அள்ளிப்போட்டுட்டுப் போவாங்களாம். அப்படி செல்வாக்கா வாழ்ந்த குடும்பத்தில் பொறந்தவன்தான் நான். அப்போ தோட்டத்தில ஐந்தாவது வரைதான் படிப்பு. நானும் அரையும் குறையுமா அதை படிச்சு முடிச்சேன். எனக்கு ஒரு பேப்பரை படிச்சு விசயம் தெரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவு இருக்கு! என்னோட பதினெட்டாவது வயதில தோட்டத்தில பேரு பதிஞ்சு புல்லுவெட்டி, பிறகு இங்கேயே தலைவராகவும் இருந்தேன். வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு மத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பலை. நமக்கு திடீர்னு காசு தேவைன்னா பிள்ளைங்ககிட்டே கையேந்தி நிற்க முடியுங்களா? நமக்கும் ஒரு தன்மானம் இருக்கே... அதனாலதான் என் மூச்சு உள்ளவரை உழைச்சிட்டே இருக்கணும்னு முடிவோட இருக்கேன்" என்று கெத்தாக பேசி நெஞ்சு நிமிர்த்துகிறார் சந்தனம்.
சந்தனத்தின் மனைவியின் பெயர் அஞ்சலை, இவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக நான்கு பிள்ளைகள். அவர்களில் ஒரு மகன் இங்கிரிய நகரில் சின்னதாக ஒரு நகைக்கடை வைத்திருக்கிறார். இதில் ஒரு ஆச்சரியமான விடயம் ஒன்று இருக்கிறது. இன்றைய நாகரீக உலகில் இளைய தலைமுறையினர் ரொம்பவும் டிப்டொப்பாக இருப்பதையே விரும்புவார்கள். தனது தாயோ, தகப்பனோ அழகாக ஆடையணிந்து இருந்தால் தான் தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அதற்கு எதிர்மாறாக இருந்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். இதற்கு முற்றிலும் மாறானவராக இருக்கிறார் சந்தனத்தின் மகன் சிவா. துருப்பிடித்த சைக்கிளில் அழுக்கு படிந்த சட்டை, சாரம், அறுந்த செருப்போடு பழைய சாமான்களைக் கட்டி உலா வரும் சந்தனத்தை தனது அப்பா என்று எல்லோரிடமும் பெருமையாக அறிமுகம் செய்கிறார். சில நேரங்களில் சிவா கடையிலிருந்து வெளியே போகும் போது தனது இருக்கையில் சந்தனத்தை அமர வைத்து விட்டுச் செல்கிறார்.

"பழைய சட்டை சாரத்தோடு கெஷியர் மேசையில் உட்காருவது எனக்கும் தர்ம சங்கடமாகத்தான் இருக்கு. ஆனா என் பையன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. நான் செய்யும் தொழிலுக்கு அவன் மரியாதை கொடுக்கிறான்" என்று தமது மகனைப் பற்றிச் சொல்லி நெஞ்சம் நெகிழ்கிறார் சந்தனம்.
காலையில் ஏழு மணிக்கு தொடங்கும் வேலை மாலை மூன்று மணிக்கெல்லாம் முடிந்து வீடு வரும் போது ஆட்டுக்கு இலை தழை கட்டையும் கட்டி சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்.

"ஒரு நாளைக்கு காலை, பகல் கடை சாப்பாடு செலவு போக இருநூறு ரூபாய் வரை இலாபம் கைக்கு கிடைக்கிறது" என்று சொல்லும் அவரிடம்,

"சில போத்தல், குப்பி வியாபாரிகள் சிறுவர்களிடம் ஐம்பது சதம், ஒரு ரூபாய் சில்லறைகளைக் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளை இலாபம் பார்ப்பதாகச் சொல்கிறார்களே" என்று கேட்டோம்....

"அந்தக்காலம் மாதிரி இப்போ இல்லீங்க... சின்னப் பையன் கையிலேயே செல்போன் வந்திடுச்சி. இரும்பு, பித்தளை என்ன விலைக்கு போகிறது என்ற விவரங்களை அவனுங்க விரல் நுனியிலே வச்சிருக்கானுங்க.. அவனுங்களை ஏமாத்த நினைச்சா நம்ம வியாபாரம் அம்பேல் ஆகிடும்" என்று கண்களில் மிரட்சி காட்டி சின்ன பசங்களுக்கு பயப்படுகிறார் சந்தனம்.
"இதுக்கு மேல உங்ககூட பேச நமக்கு நேரம் இல்லீங்க. நம்ம பொழப்ப பார்க்கணும்" என்று சொன்னவர் சைக்கிளில் ஏறி சிட்டாக பறந்தார். குன்றும் குழியுமாக இருந்த அந்த பாதையில் சந்தனத்தின் லொட லொட சைக்கிள் போடும் கட முடா சத்தம் மட்டும் ரொம்ப நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment