Saturday, December 6, 2014

சினிமானந்தா பதில்கள் -20

பூஜாவுக்கு கல்யாணமாமே?
எல்.ஷிராணி, பாணந்துறை.

அப்போ இப்போ என்று தையில் வருகிறதாம் டும், டும், டும். மாப்பிள்ளை தீபக் சண்முகநாதன். எங்க நாட்டுக்காரர்தான். பேஷன் வடிவமைப்பாளராக உள்ள ஒரு தொழிலதிபர். இத்தனைக்கும் பூஜா நடித்த ஒரு படத்தைக்கூட இவர் பார்த்ததில்லையாம்.
தமிழ்ப்படத்துறையில் செல்வாக்குள்ள இலங்கை நடிகை பூஜா ஒருவர்தான். சிங்களப் படவுலகம் பூஜாவை ஆரம்பத்தில் கனவுக் கன்னியாக்கியது. பின்னர் பௌத்த இளவரசியாக்கி நல்ல லாபம் கண்டது. இலங்கைத் தமிழ்ப்படமொன்றில் இவரை நடிக்க வைக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வராதது ஒரு பெரிய குறை. அவ்வாறு எடுக்கப்பட்ட ஓரிரு முயற்சிகள் (இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பு) என்ன காரணத்தாலோ இடையில் கைவிடப்பட்டன.
இனி அத்தகைய வாய்ப்பு வரும் என்று சொல்வதற்கில்லை.


நல்ல தமிழ் பேசிய நடிகர் எஸ். எஸ். ஆர். மறைந்துவிட்டாரே?
ஆர். அன்பரசு, கண்டி.

உருவம்தான் மறைந்தது, விம்பம் இருக்கிறது. மெகா டிவி. முரசு டிவி இருக்கும் வரை விம்பம் இருக்கும். கடந்த வாரம் அமுத கானத்தில் 'ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்' கேட்டேன் பார்த்தேன், ரசித்தேன். அழகு தமிழில் அவரை மிஞ்ச முடியாது என்று சிவாஜியே கூறியிருக்கிறார்.

திரையில் இப்போது நல்ல தமிழுக்கு வாகை சந்திரசேகர் இருக்கிறார்.

ரஜனிக்கு நல்ல நடிகர் விருது கிடைப்பது அவர் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிப்பது போல் இல்லையா?

எஸ். சஹானா, மாபோல

அவரை அரசியலுக்கு அழைத்தார்கள். அவர் சரி சொல்லவில்லை. இப்போது விருது வாங்க அழைக்கிறார்கள். வாங்கினால் .... சொல்லியாக வேண்டுமே!

'லிங்கா'வில் முதல்வர் வேடத்தில் நடிக்கிறார். அணைகட்ட உதவுகிறார். 'லிங்கா திரையில் வெற்றி பெறவும் எதையாவது செய்தாக வேண்டுமில்லையா?

தூண்டில் விருதை வாங்குவதா? வேண்டாமா? சிக்கலில் ரஜனி

கத்தி நூறு கோடியை தாண்டி விட்டதே?
பாலு ஆனந்த், கொழும்பு

கத்தி படத்தில் (கதை, காட்சி முதல் இசை வரை எல்லாவற்றையுமே காப்பியடித்திருக்கிறார்கள். யான் படம் டைட்டில் முதல் வணக்கம் வரை Midnight Express ஆங்கிலத்தில் படத்தின் கொப்பி, விடியும் முன் 'சலீம்' இரண்டும் கொரியப் படங்களின் போட்டோ பிரதிகள்.

ஆங்கிலப் படங்கள், கொரியப்படங்கள் MTV இசை வீடியோக்களை பார்த்து இந்தப் பணத்தை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீசுத் தமிழர்கள். எனவே Holywood படங்கள், கொரியப் படங்கள், MTV Music video க்கள் நிறைய தேவைப்படுகின்றன. எதற்கு? இங்கிலீசுத் தமிழர்கள் பார்ப்பதற்கு!

'தங்க மீன்கள், ஹரிதாஸ், 'ராமானுஜம்' ஆகிய படங்கள் வசூலில் கல்லாவை நிறைக்கவில்லை. ஆனால் மகசூலில் மக்கள் மனதை நிறைத்திருக்கின்றனவே! அந்த வகையில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு நன்றி.

இலங்கை தமிழ் சினிமா தூங்குகிறதா?
கவிதா, பாதுக்க

இல்லை, எப்போதே ஒரு முறை புரண்டு படுக்கிறது. கீறல்கள் என்பது திரைக்கு தயாராக இருக்கும் இலங்கைத் தமிழ்ப் படம். தமிழ் நாட்டின் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதில் பகவதி என்ற வில்லன் நன்றாக நடிக்கிறார். சிலோன் சின்னையா மாதிரி இருக்கிறார். இவரை தமிழ்நாட்டுப் படங்களில் நடிக்க வருமாறு கேட்டிருக்கிறார்களாம். படத்தில் மது பாலகிருஷ்ணனின் தத்துவப் பாடல் நன்றாக உள்ளது.

டென்மார்க்கில் 'ஷண்' (இலங்கை ஷண்) னின்  'காலம்' நோர்வேயில் வசீகரனின்..... ஆகிய புலம் பெயர் தமிழர்களின் படங்கள் மற்றும் பல படங்கள் தயாரிப்பில் உள்ளன. அவ்வாறான புலம்பெயர் தமிழ்ப் படம்தான்
‘A GUN & Ring' அண்மையிலும் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையில் ஒரு காட்சி காட்டப்பட்டது.

ஜோதிகா மீண்டும் நடிக்கும் படம் ஆரம்பமாகிவிட்டதா?
சர்மிலா மாத்தளை
இன்னும் இல்லை. இனித்தான் ஆரம்பமாக வேண்டும். இப்போது அதில் ஒரு சிக்கல் How old are you என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில்  ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இது கதாநாயகியை மையப்படுத்தும் படம். எனவே மாஸ் நடிகரான சூர்யா இதில் நடிப்பதாக இல்லை. வேறு நடிகர்கள் இதில் நடிக்க பின்வாங்கிய நிலையில் ரகுமான்தான் ஜோதிகாவுடன் ஜோடி சேர்கிறார். ஜோதிகா சூர்யாவுடன் நடிப்பதாக இருந்தால் மட்டும் நடிக்கலாம் என்று ஜோவின் மாமனாரான சிவகுமார் கூறியிருந்தார். ரகுமானுடன் ஜோதிகா ஜோடி சேர்வதை சிவகுமார் அனுமதிப்பதாக இல்லை.ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து பேசிப் போராடி சிவகுமாரின் அனுமதியைப் பெற்று விட்டார்கள்.இப்போது சூட்டிங் நடக்கிறது.

தீபாவளிக்கு என்றார்கள், கிறிஸ்மஸ்சும்
வருகிறது. பொங்கலுக்காவது வருமா 'ஐ'?

பாலா, வத்தளை
இயக்குநர்கள் சங்கரும் பாலாவும் தங்களுக்கு முழுத் திருப்தி கிடைக்கும்வரை re shoot பண்ணத் தயங்கமாட்டார்கள். பாலாவின் தாரை தப்பட்டை அரைவாசி படப்பிடிப்பின் பின் பாலாவுக்கு திருப்தி தராததால் மீண்டும் முதலில் இருந்து..! சங்கருக்கு பிளஸ் பாயின்ட் கிராபிக்ஸ் தான். கிராபிக்ஸ் காட்சிகள் திருப்தி அளிக்கும்வரை சங்கர் தொடர்வார்.

ஐ யில் ஒரு பாடலுக்கான வெளிநாட்டு படப்பிடிப்பு மீதமிருப்பதாகக் கூறினார்கள். இப்போது முடிந்திருக்கும். தை முடிந்து ஐ திறக்கும்

No comments:

Post a Comment