Monday, December 8, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10

கோம்பையின் 'யாதும்' இலங்கையில் திரையிடப்பட வேண்டிய படம்


அருள் சத்தியநாதன்


'யாதும்' என்ற கோம்பை அன்வரின் ஆவணப்படம் தமிழகத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கு வெளியே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள் போன்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் வாழக்கூடிய நாடுகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட வேண்டிய அவசியத்தை படத்தின் மையக்கரு உணர்த்துகிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கின்ற போதிலும், மத்தியில் பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமிழக பா.ஜ.க. வினர் வெளிப்படையாகவே தமது இஸ்லாமிய எதிர்ப்பு
பள்ளிவாசலில் ஊர்வலம்

உணர்வை வெளியிட்டு வர ஆரம்பித்துள்ளனர். மத வெறுப்பு உணர்வுகளைத் தொடர்ந்து ஒரு சாரார் வெளிப்படுத்தி வரும்போது அது மக்கள் மனதில் விஷ வித்துக்களை விதைக்கவே செய்யும். இந்து - முஸ்லிம் உறவு முற்றிலும் சிதைந்து போகாவிட்டாலும் பிணக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. எனவே, இவ்வகையில் யாதும் ஆவணப்படம் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு, தமிழர்களும் முஸ்லிம்களும் இப்படித்தான் இருந்தார்கள், இருக்கவும் செய்கிறார்கள் - இதுதான் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத பண்பாடு என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய தேவை இன்றைக்கு அதிகமாகவே இருக்கிறது.

இலங்கையை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் தனி இனமாகவும் தனி அரசியல் பின்புலத்துடனும் விளங்குகின்றனர். இந்துக்களும் கிறிஸ்தவர்களுமே தம்மைத் தமிழர்கள் என அழைத்துக் கொள்கின்றனர். சமூக, பொருளாதார மற்றும் சமயம் சார்ந்த அபிலாஷைகள் தனித்தனியாக இருக்கின்றன. இது, பரஸ்பர சந்தேகத்தையும் காழ்ப்புணர்வையும் புரிதலற்ற தன்மையையும் இனங்கள் மத்தியில் அரசியல் பின்புலத்துடன் உருவாகுவதற்கு மிகுந்த இடமளிக்கிறது. யுத்த காலத்தில் கிழக்கிலே இதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். மோதல் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சந்தேகமும் சகிப்புத்தன்மையற்ற நிலையையும் காண முடிகிறது.
இதனால்தான் யாதும் என்ற இந்த ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இது தமிழ் நாட்டைச் சார்ந்த ஆவணப்படமாக இருந்தாலும் இலங்கை நிலைமைகளுக்கு பொருத்தமாகவே இப்படம் உள்ளது. தமிழகத்தில் இஸ்லாம் எப்படி பரவி வளர்ந்ததோ அப்படித்தான் இலங்கையிலும் இம்மதம் பரவி, வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 யாதும் ஆவணப்படத்தில், ஆரம்பகாலத்தில் இந்து, முஸ்லிம் சமூகங்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் பரஸ்பர விட்டுக் கொடுப்பு மற்றும் புரிதல்களுடன் பழகி வந்திருக்கிறார்கள் என்பது மிக எளிமையான காட்சிப்படுத்தல்கள் மற்றும் விளக்க உரைகள் மூலம் புரியவைக்கப்படுகிறது. இதைப்பார்க்கும் ஒரு இலங்கைப் பிரஜையால், ஏற்கனவே ஊடுபாவி இருக்கின்ற புரிதலையும் நெருக்கத்தையும் தேடிப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சிங்களவர்கள் முஸ்லிம்களைப் புரிந்து கொள்வதில் பல முட்டுக் கட்டைகள் உள்ளன. பெரும்பாலான சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய அடிப்படை அறிவுதானும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. சிங்கள மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது. பொங்கல், தீபாவளிப் பண்டிகைகள் பற்றி அறியாத சிங்களவர்கள் ஏராளமானோராக இருக்கிறார்கள். இவர்களின் இஸ்லாமிய அறிவு மிக மட்டமானது. இஸ்லாமியரைப் பற்றித் தமிழருக்கே போதிய தெளிவில்லை எனில் சிங்களவர்களிடமிருந்து எப்படி புரிதலை எதிர்பார்க்கலாம்?

இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் யாதும் டி.வி.டியைப் பெற்று இங்கே நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டலாம். ரூபவாஹினி, சக்தி டி.வி. போன்ற தொலைக்காட்சி நிலையங்களினூடாகக் காட்டலாம்.

புரவலர் ஹாசிம் உமர் போன்ற செல்வந்தர்கள் கோம்பை அன்வரிடமிருந்து இந்த ஆவணப்படத்தைப் பெற்று அவர் சொல்லும் இந்த அற்புதமான செய்தியை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாதோரிடமும் எடுத்துச் சொல்வது முக்கியம். பிரசார மேடைகளும், கட்டுரைகளும் செய்ய முடியாத இன ஐக்கியத்தை இந்த ஆவணப்படத்தால் செய்ய முடியும் என்பதை இதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். இது இயல்பு.

இந்தப் படத்தில் மத நல்லுறவுக்கு கோம்பை காட்டும் உதாரணங்கள் நேரிடையானவையாகவும் எளிமையானதாகவும் உள்ளன. அவை எம்முடனும் பொருந்திப் போகின்றன என்பது விசேஷம்.

மதுரையில் ஒரு கோவில். அங்கே வருடா வருடம் புட்டுத் திருவிழா நடைபெறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வரும் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற கதைதான். அந்தக் கோவிலில் புட்டுத் திருவிழா நடைபெறும் போது கோவிலில் கருவறைக்கு பக்கத்தில் ஒரு வேலி அமைக்கிறார்கள். அந்த வேலி அமைக்கும் பணியை பரம்பரையாகச் செய்து வருவது ஒரு இஸ்லாமியக் குடும்பம். வேலி அமைக்க வருபவரிடம் அன்வர் பேசுகிறார். தன் பாட்டனுக்கு முன்பிருந்தே எங்கள் குடும்பம்தான் இந்த வேலி அமைக்கும் பணியைச் செய்து வருகிறது என்றும் பாட்டனாருக்குப் பின் தன் அப்பாவும் இப்போது தானும் இந்த வேலையைச் செய்து வருவதாகவும் கூறும் அவர், திருவிழா முடிந்ததும் கோவில்; தர்மகர்த்தாவிடம் பாரம்பரிய சன்மானத்தையும் பெற்றுக் கொள்கிறார். தனக்குப் பின் தன் மகன் இதைச் செய்வான் என்று பெருமையுடன் கூறும் அவர், இது தனது குடும்பத்துக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் என்கிறார்.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் தற்செயலாகக் கண்டு பிடித்த இடம் கேரளா. மலபார் துறைமுகம் அப்போது முஸ்லிம் வணிகர்கள் வந்து போகும் பிரதான துறைமுகப் பட்டினம். அராபியரின் கடலாதிக்கத்தை முறித்து மலபாரைத் தன்வசப்படுத்தும் முயற்சியில் போர்த்துக்கேயர் ஈடுபடுகின்றனர். இப்போது மலபாரை ஆண்டு வந்தவன் சமுத்ரி மன்னன். அவன் ஒர் இந்து. போர்த்துக்கேயரை அவன் எதிர்த்துப் போராடுகிறான். இரு சாராருக்குமிடையே கடுமையான கடற்போர்கள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் சமுத்ரி போர்த்துக்கேயரை அடித்துத் துரத்தி விடுகிறான்.

சமுத்ரியின் இந்த வெற்றிக்கு அராபியரும் துணை நின்றனர். சமுத்ரியின் கடற்படைத் தளபதி ஒரு முஸ்லிம். அக்காலத்தில் மலபாரில் இஸ்லாமியரின் குடியிருப்புகளும் பண்டகசாலைகளும் இருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் சமுத்ரியின் கடற்படையில் இணைந்து போர்த்துக்கேயரை எதிர்த்துப் போரிட்டனர். எனவே வலிமையான முஸ்லிம் இளைஞர்கள் சமுத்ரி மன்னனுக்கு தேவைப்பட்டதால், கேரள இந்து குடும்பங்கள் தமது ஒரு புதல்வியை முஸ்லிம் இளைஞனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். இன்றைய பார்வையில் சிலருக்கு சமுத்ரி மன்னன் ஒரு துரோகியாகத் தென்படலாம். ஆனால் தன் நாட்டை அந்நிய படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்காகவே மன்னன் இவ்வாறு கட்டளையிட வேண்டியிருந்தது.
திராவிட கட்டப் பாணியில் அமைந்த 
கீழக்கரை பள்ளிவாசல் உட்புறத் தோற்றம்

அப்படியே தஞ்சாவூர் செல்லும் கோம்பை அன்வர், பெரிய கோவிலை அண்ணாந்து பார்க்கிறார். 'இஸ்லாமியத் தமிழனான நான் என் முன்னோர் (ராஜராஜ சோழன்) கடடிய கலைநயம் மிக்க இப்பெருங்கோவிலைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்' என்கிறார். அங்கிருக்கும் ஒரு கல்வெட்டைப் படித்துப் பார்த்து, ராஜராஜ சோழனுக்கு ஒரு இஸ்லாமியர் நெருக்கமாக இருந்திருக்கின்றார் என்பதற்கு இது ஆதாரம் என்கிறார் கோம்பை.

கோம்பையின் ஆவணப் படத்தில் ஜோ.டி குரூஸ் என்ற நாவலாசிரியர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

தனது சிறு பருவத்தில் தாத்தாவின் கிராமத்துக்குச் செல்வாராம். அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் மதியம் பொட்டணி வியாபாரி ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்தாராம். ஜோ. டி. குரூஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த முஸ்லிம் பொட்டணி வியாபாரி விடுவிடுவென வீட்டுக்குள் நுழைந்து அடுக்களைக்குச் சென்று ஒரு தட்டை எடுத்து சோறு, கறி எல்லாம் போட்டுக் கொண்டாராம். யார் இந்த ஆள் என்று வியப்போடு குரூஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாயை இழுத்து தரையில் விரித்து சாப்பிட ஆரம்பித்து விட்டாராம் அந்த வியாபாரி. அரவம் கேட்டு வந்த பாட்டி, செம்பில் தண்ணீர் எடுத்து வைத்து விட்டு சென்றாராம். சாப்பிட்டு முடிந்ததும் முன் வராந்தாவில் பாய் விரித்து குறட்டை விட்டு உறங்க ஆரம்பித்து விட்டாராம் அவர். மாலையில் எழுந்த அவர் தன் பொட்டணியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாராம்.

இச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஜோ. டி. குரூஸ், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இத்தகைய நல்லுறவு கிராமங்களில் நிலவுகின்றது என்று கூறுவதோடு முஸ்லிம்களைத் தான் சாச்சி, சாச்சா என்று அழைத்தே பழகி விட்டேன். அதுதான் நிறைவாக இருக்கிறது என்று முடிக்கிறார்.

இவ்வாறான சம்பவங்களையும் வரலாற்று தகவல்களையும் கொண்ட 'யாதும்' ஆவணப்படம் இலங்கை முஸ்லிம் மக்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம். இதை இங்கே திரையிடுவதும், டி.வி.டி.களை விற்பனை செய்வதும் நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. கும்பகோணம் மாநாட்டின் இலங்கைப் பிரதிநிதிகளாக செயற்பட்ட மருதூர் மஜீத், மருத்துவர் தாஸிம் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். கும்பகோணம் போனோம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு முடிந்துபோனது என்று கருதாமல் யாதும் ஆவணப்படத்தை இங்கே திரையிடுவதற்கு இவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment