Thursday, November 20, 2014

Galle face புகழ் குட்டன்

"ஜப்பான்காரன் குண்டு போட்டதால் கோல்பேசில் எனக்கு வேலை கிடைத்தது''


நேர்காணல் - மணி ஸ்ரீகாந்தன்

இவர் ஒரு அற்புதமான மனிதர். ஏனெனில் கண்டு கொள்ளப்பட்ட கண்டுகொள்ளப்படாதவர். இவரது புகைப்படங்களும் இவரைப் பற்றிய விவர்ண கட்டுரைகளும் உலகின் பல நாடுகளின் உல்லாசத்துறை பத்திரிகைகள், சஞ்சிகைகள், வீடியோ காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முற்பகுதியில் பெரும்பாலான உள்ளூர் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தன. நூறு வருடங்களுக்கு மேல் பழைமையான கோல்ஃபேஸ் ஹோட்டலில் 68 ஆண்டுகள் வேலை செய்திருக்கும் குட்டன், அந்த ஹோட்டல் வரலாற்றில் ஒரு பகுதியாகக் கலந்திருக்கிறார். 90 வயதிலும் ஹோட்டல் வரவேற்பாளராக உள்ளே வரும் அனைவரையும் கைகூப்பி மலர்ந்த முகத்துடன் வரவேற்பது தான் இவரது தொழில். உலகம் இவரைக் கண்டு கொண்டிருந்தாலும் உள்நாட்டில் தான் கண்டு கொள்ளப்படவில்லையே என்ற ஆதங்கம் இவரிடம் உள்ளது. தனக்கென ஒரு சொந்த வீடு இல்லையே என்ற கவலை இவரிடம் உள்ளது. எவரேனும் கண்டு கொண்டு இவரது குறையை போக்கினால் இந்த 90 வது மனிதர் மகிழ்ந்து போவார்!

“குருவாயூர் பக்கத்தில் இருக்கும் ‘சொவ்வைனூர் தேசம்’ தான் நான் பிறந்த ஊர். ‘கொட்டாரப்பட்டு சாத்து குட்டன்’ என்பது தான் என் பெயர். கொட்டாரப்பட்டு என்பது என் வீட்டின் பெயர். சாத்து என்பது என் தந்தையின் பெயர்’ என்று சொல்லும் குட்டன் தான் கொழும்பிற்கு வந்த அந்த நாட்களை நினைவுகூறுகிறார்.

“என்குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். நான் இரண்டாவது. இப்போது இரண்டு பேர் இறந்துவிட நானும் எனது அக்காவும் தான் உயிரோடு இருக்கிறோம். சொவ்வைனூர் ஆரம்ப பாடசாலையில் தான் என் பாடசாலை நாட்கள் தொடங்கியது. அந்த பாடசாலையில் உட்காருவதற்கு பென்ச் போட்டிருந்தார்கள்.

ஆனால் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியரையோ, என்னோடு படித்த சக மாணவர்களையோ ஞாபகத்தில் இல்லை. அந்தப் பாடசாலையில் நான் நாலாவது வரைதான் படித்தேன். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு தொடர்ந்து படிக்க ஆசைதான்.
இளமைக் காலத்தில்
ஆனால் அதற்கு வறுமை தடையாக இருந்தது. எனக்கு பதினைந்து வயது இருக்கும் போதே அம்மாவும் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு சொவ்வைனூரிலேயே சில காலம் சுற்றித் திரிந்துவிட்டு கொழும்புக்கு வேலைக்கு போகலாம் என்று தீர்மானித்த நான் எனது நண்பனின் உதவியுடன் கொழும்புக்கு புறப்பட்டேன்.

எனது நண்பனும் என்னுடன் கூட வந்தான். அப்போது இலங்கைக்கு பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே கிடையாது. பயணச்சீட்டு மட்டும் போதும். சொவ்வைனூரிலிருந்து இருபத்தைந்து ரூபாயோடு புறப்பட்டேன். வரும்போது தமிழ்நாட்டு இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இரண்டு வாரம் தங்க வேண்டி ஏற்பட்டது.

அப்போது வெள்ளைக்காரர்கள் ஆட்சி என்பதால் வெள்ளைக்கார அதிகாரிகள்தான் இருந்தார்கள். எனக்கும் என் நண்பருக்கும் நோய் தடுப்பு ஊசி போட்டார்கள். எங்கள் உடைகளை எல்லாம் பெரிய அண்டாவில் போட்டு அவித்தெடுத்தார்கள்.

அப்படி முகாமில் இருந்தபோது நான் கொண்டு வந்த காசும் முடிந்துவிட்டது. உடனே கொழும்பிலிருக்கும் எனது அப்பாவின் தம்பிக்கு ஒரு கடிதம் எழுதி என் நிலைமையை சொன்னேன்.

அந்த கடிதத்திற்கு பிறகு எனது பெயருக்கு மண்டபம் முகாமிற்கு பதினைந்து ரூபாய் பணத்தை என் சித்தப்பா அனுப்பி வைத்திருந்தார். அதை பெற்றுக்கொண்டப் பிறகுதான் நான் கொழும்பு சென்றேன்.

அங்கே சென்றதும் எனது சித்தப்பா எனக்கு ஒரு பங்களாவில் வேலை வாங்கி கொடுத்தார். அங்கே எனக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம். அப்போது இங்கே கொழும்பில நிறைய இந்தியர்கள் வேலை செய்தாங்க. அந்த நேரத்திலதான் ஜப்பான்காரன் கொழும்பில குண்டுப் போட்டான்.
கோல்ஃபேஸ் ஹோட்டல் அன்றும் இன்றும்.
அதாவது இரண்டாம் உலகப் போரின்போது. அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கே வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்களில் பலர் இந்தியாவிற்கு சென்றுவிட்டார்கள். கொழும்பில் வேலை செய்யவே எல்லோரும் பயந்தாங்க. அப்போது தான் கோல்பேஸ் ஹோட்டல்ல ஒரு வேலை காலியாக இருப்பதாக எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார்.

எனவே எனக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்ய ஆசை. என் ஆசையை நான் வேலை செய்த அந்த பங்களா துரையிடம் சொன்னேன். அதற்கு அந்த துரை, 'நீ அங்கே வேலைக்கு சென்றால் விடுமுறை காலங்களில் எனது வீட்டில் வேலை செய்ய வேண்டும்'.

என்ற நிபந்தனையுடன் எனக்கு கோல்பேஸ் ஹோட்டல் உயர் அதிகாரியுடன் பேசி எனக்கு வேலை வாங்கி கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை வேலை செய்கிறேன். இப்போ அறுபத்தெட்டு வருடங்களாகிவிட்டன. எனக்கு இப்போது தொண்ணூறு வயதாகிவிட்டது.

ஒரே இடத்தில் ஐம்பது வருடங்கள் வேலை செய்தாவே சாதனையென்று சொல்றாங்க. நான் ஒரே இடத்தில் அறுபத்தெட்டு வருடங்கள் வேலை செய்து வருகிறேன். ஆனால் யாரும் கண்டுக்கொள்வதாக இல்லையே....” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் குட்டன்.

திருமணம் வாழ்க்கை பற்றிக் கேட்டோம்?

“நான் கொம்பனி வீதியில் இருந்தபோது எனது வீட்டுப் பக்கத்தில் ரூத்மேரி என்றப் பெண் இருந்தாள். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் இருந்தாள். எனக்கும் யாருமே இல்லை.

அப்போது எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போய்விட்டது. படுத்தபடுக்கையாகிவிட்டேன். அப்போது எனக்கு பக்கத்திலேயே இருந்து என்னை பக்குவமாக பார்த்துக்கொண்டது அந்த ரூத்மேரிதான் என்னை ஏன் அவள் அப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்றக் கேள்வி எனக்குள் எழுந்தது.

அவள் மட்டும் இல்லை என்றால் நான் கவனிப்பாரற்றுதான் கிடந்திருப்பேன். நான் கஷ்டத்திலிருந்தபோது என்னை கவனித்துக்கொண்ட அவளே எனக்கு மனைவியானால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அவ்விடத்தில் என் விருப்பத்தை நான் சொல்ல அவளும் அதற்கு சம்மதம் சொல்ல எங்கள் திருமணம் கொம்பனி வீதி இல்லத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் தான் வந்திருந்தார்கள். திருமணப் படம் பிடிக்க ஸ்டூடியோவிற்கு செல்லவில்லை. அந்தளவிற்கு வசதியுமில்லை. எங்கள் சொந்தக்காரர் ஒருவர்தான் ஒரு சிறிய கெமராவை வைத்து போட்டோ பிடித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள்.

அவர்களின் பிள்ளைகளும் திருமணம் முடித்து இப்போது மூன்று தலைமுறையை பார்த்துவிட்டேன். என் மனைவியும் இறந்து இப்போ பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன”.
என்ற குட்டனிடம் கோல்பேஸ் ஹோட்டலில் குட்டன் வாங்கிய முதல் சம்பளம் பற்றி கேட்டோம்.
 
"இருபது ரூபாவில் தொடங்கி இன்று இருபத்தைந்தாயிரத்தில் நிற்கிறது. அப்போது நான் பார்த்த கோல்பேஸ் ஹோட்டல் இப்போது இல்லை. கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னாடி கை ரிக்ஷாதான் நிற்கும். மாட்டு வண்டிகளால் தான் ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து இறக்குவாங்க.

இப்போது மாதிரி வாகனங்கள் அப்போது இல்லை. நான் கூட கை ரிக்ஷாவிலதான் இருபத்தைந்து சதம் கொடுத்து பயணம் செய்திருக்கேன். அந்த கைரிக்ஷாவில் நம்மை அமரவைத்து ஒரு மனிதன் வியர்க்க வியர்க்க இழுத்துக்கொண்டு ஓடுவான். பார்க்க பரிதாபமாக இருக்கும்.

வெள்ளைக்கார துரைமார்கள் எல்லாம் அந்த ரிக்ஷாவிலதான் பயணம் செய்வார்கள். பின்னர் நான் அந்த ரிக்ஷாவில் பயணம் செய்வதை தவிர்த்துக்கொண்டேன். நாம ஏன் அந்த ரிக்ஷாக்காரனுக்கு கஷ்டம் கொடுக்கனும் என்று ரிக்ஷா பயணத்தை அடியோடு நிறுத்திக்கொண்டேன்.

அன்றிலிருந்து கொம்பனிவீதிக்கு நடந்துதான் போவேன். அப்படி நான் காலையிலும், மாலையிலும் நடந்துபோவது எனக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இந்த வயசிலும் நான் நடந்துதான் போகிறேன்.

இப்போது நான் மாளிகாவத்தையில் வசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரையும் மாளிகாவத்தையிலிருந்து நடந்துதான் வந்தேன். இப்போது முடியவில்லை. இப்போது மாளிகாவத்தையிலிருந்து கொழும்பு பஸ் தரிப்பு நிலையம்வரை நடந்து வந்து அங்கிருந்து கோல்பேஸ் ஹோட்டலுக்கு பஸ் ஏறி வருகிறேன். இன்றுவரை என் உடல் சோர்வடைந்ததில்லை. அதற்கெல்லாம் என் நடைதான் பெரிய சக்தியாக விளங்குகிறது. அது தவிர மது, சிகரெட், வெற்றிலை என்று எந்தக் கெட்டப்பழக்கமும் எனக்கில்லை. என் உடல் திடகாத்திரத்திற்கு அதுவும் ஒரு காரணம் தான். நான் இன்று இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அன்று வாங்கிய முதல் சம்பளமான இருபது ரூபாயில் செய்த வேலையை இன்று அந்தப் பணத்தில் செய்ய முடியவில்லை. இன்று ஒரு கிலோ கோழி அறுநூறு ரூபாய்க்கு போகிறது. ஆனால் அன்று ஒரு இறாத்தல் கோழி இறைச்சியை ஐம்பது சதத்திற்கு நான் வாங்கியிருக்கிறேன்” என்று தான் பார்த்த அந்த பழைய கோல்பேஸ் பற்றி விரிவாக விளக்கினார் குட்டன்.

வாழ்க்கையில் குட்டன் எதையாவது தவற விட்டிருக்கிறாரா?

“நான் தவறவிட்டது சொந்த வீட்டைத்தான். இன்னமும் வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன். எவ்வளவு உழைத்தும் நமக்கென்று ஒரு சொந்த வீடில்லையே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது”.

ம்.. அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது?

“அப்போது எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எங்க ஊரில் பெரிய ஆளுங்க பீடி குடிப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த பீடியை வாயில் வைத்துக்கொண்டே மூக்கில் புகை விடுவது, வாயிலிருந்த புகையை வளையம் வளையமாக வானத்தை பார்த்து விடுவது என்பவற்றைக் கண்டு எனக்கும் பீடி குடிக்க ஆசை வந்து விட்டது. ஒருநாள் எங்கள் தெருவிலிருந்த ஒரு கடையில் பீடியை வாங்கி காற்சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து நேரம் பார்த்து காத்திருந்தேன். அப்போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் என் அக்கா அம்முனியை தவிர வேறு யாருமே இல்லை. வீட்டின் பின்புறத்திற்கு சென்று என் வீட்டுச் சுவரில் சாய்ந்துகொண்டு அந்த பீடியை பற்ற வைத்து புகையை உள் இழுத்து வாயிலிருந்து வளையம் விட முயற்சி செய்தேன். பீடிகுடிப்பது எனக்கு முதல் பழக்கம் என்பதால் இருமல் வந்துவிட்டது. நான் இருமுவதை அக்கா வந்து எட்டிப்பார்க்க நான் மாட்டிக்கொண்டேன். பிறகு அக்கா அப்பாவிடம் நான் பீடி குடித்த கதையைச் சொல்ல அப்பா பச்சை ஈக்கிலை எடுத்து என்னை அடித்தார்....
அது ஒரு காலம் இன்று நினைத்தாலும் இனிக்கும். என்னை அப்பாவிடம் காட்டிக்கொடுத்த என் அன்பான அக்கா கேரளாவில் இன்னமும் இருக்கிறாள் அவளுக்கு இப்போது தொன்னூற்றி நான்கு வயதாகிறது. நான் இலங்கைக்கு வந்த பின்னர் கேரளா செல்லவில்லை. ஐம்பதாண்டுகள் கழித்து என் அக்காவைப் பார்க்க கேரளாவிற்குப் போயிருந்தேன். நான் ஓடிவிளையாடிய என் வீடு, என் அக்கா, நான் பார்த்த அந்தப் பலா மரங்கள் அனைத்தும் மாறிப் போயிருந்தன. குப்பி விளக்கெரிந்த என் வீட்டில் மின் விளக்கு பளிச்சிட்டது. என் அக்காவின் பையன் வளர்ந்து பெரிய ஆளாக இருந்தான். அவர்களுக்கும் பேரன்கள் இருந்தார்கள். அதற்குப் பிறகு நான் கேரளாவிற்குப் போகவில்லை. இன்னொரு முறை என் அக்காவை பார்த்து விட வேண்டும் என்பது என் ஆசை” என்கிறார் குட்டன்.

இவர் கோல்பேஸ் ஹோட்டலில் சர்வராக வேலை செய்தபோது பார்த்த பிரபலங்கள் பற்றி கேட்டோம்.

“பண்டிட் நேரு, இந்திரா காந்தி, கேணல் கடாபி, மார்ஷல் டிட்டோ உள்ளிட்ட பலத்தலைவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சர்வராக பணிவிடை செய்யக்கிடைத்ததையும் பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன். குறிப்பாக எம். ஜி. ஆர். இலங்கை வந்தபோது இங்குதான் தங்கினார். அவரோடு நான் மலையாளத்தில் பேசிய போது அவர் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்”. என்றவரிடம் குலதெய்வம் பற்றிக்கேட்டோம். கேரளாக்காரர்களுக்கு ரொம்பவும் பிடித்த சாமி குருவாயூரப்பன்தான். எனக்கும் அவரைதான் ரொம்பவும் பிடிக்கும். எங்க வீட்டுல இருந்து குருவாயூரப்பன் கோயிலுக்கு ஒரு மைல் தூரம் தான்”.

மறக்க முடியாத நபர்கள்?

“எனக்கு அப்படிச் சொல்வதற்கு யாரும் இல்லை. வீதிவரை நண்பர்களைத்தான் நான் வைத்துக்கொண்டேன். வீட்டுக்கு நான் யாரையும் அழைத்துச் சென்றதில்லை. நானும் எவர் வீட்டுக்கும் சென்றதில்லை. எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அதனாலோ என்னவோ யாரும் என்னோடு நண்பராக சேரவில்லை. வீதியில் பேசுவதோடு சரி!” என்று பதில் சொல்லும் குட்டனிடம் வாகனம் ஓட்டத் தெரியுமா என்று கேட்டோம்.

“சின்னதில இருந்தே எனக்கு சைக்கிள் வாங்க ஒரு ஆசை. கொழும்புக்கு வந்து ஒரு பங்களாவில வேலை செய்த போது அந்த வீட்டின் துரையான 'டீ சேரம்' ரொம்ப நல்ல மனிதர். நான் சைக்கிள் கேட்டப்போது மறுக்காது வாங்கிக் கொடுத்தார். சம்பளத்தில் மாதம்தோறும் ஐந்து ரூபாய் பிடித்துக்கொண்டார். அது ஒரு ரெலி சைக்கிள். அந்தப் பங்களா தோட்டத்திலேயே இரண்டு நாளிலேயே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். நான் வாழ்க்கையில் சொந்தமாக வாங்கிய ஒரே பொக்கிஷம் சைக்கிள்தான். அந்த சைக்கிள் விலை எழுபத்தைந்து ரூபாய்”.

வாழ்க்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்னவென்று கேட்டோம்.


“வாழ்க்கை நல்லதுதான். ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைக்கிறேன். அறுபது வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் வேலை செய்து சொந்த வீடே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். இனி நான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும்? என்னைப் பார்த்து என் பேரப் பிள்ளைகள் இந்தக் கேள்வியை கேட்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் பரம்பரைக்கு நான் எதையுமே சேர்த்து வைக்காமல் போகப் போகிறேன் என்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தனது பேட்டியை முடிக்கிறார் சாத்துகுட்டன்.

(தினகரன் வாரமஞ்சரி ஜூன் 20ம் திகதி 2010 ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த நேர்காணலை கடந்த 18-11-2014 அன்று தனது 94வது வயதில் காலமான குட்டனின் நினைவாக பதிவேற்றம் செய்கிறேன்.)

No comments:

Post a Comment