Thursday, November 6, 2014

பாதுக்கையில் இருந்து படாளம் வரை....

"விரலுடன் விரல் உரசாமல்தான் இட்லிகாரிக்கு காசு கொடுத்தோம்!"


மணி  ஸ்ரீகாந்தன்

சிறுவனாக இருந்தபோது ஐம்பதுகளின் முற்பகுதியில் தமிழகம் சென்று வந்த லெட்சுமணன் தன் அனுபவத்தை மணி ஸ்ரீகாந்தனுடன் பகிர்ந்து கொள்கிறார். லெட்சுமணனுக்கு இப்போது 75 வயது.

தென்னிந்தியாவின் இராமநாதபுர மாவட்டம், தஞ்சை, திருச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்தே பெருவாரியான தமிழ் மற்றும் மலையாள, தெலுங்கர்களான தொழிலாளர்கள் இலங்கைத் தோட்டங்களை நாடி வந்தனர். பெரும்பாலானோர் கங்காணிமாரின் பசப்பு வார்த்தைகளை நம்பி வந்து ஏமாந்தவர்கள்தான். ஆனாலும், தங்குமிடம், மானிய விலைக்கு உணவு, மருத்துவ வசதி, சம்பளமாக பணம் என்பன வழங்கப்படும் என்று கூறப்பட்டதை ஓரளவுக்கேனும் இலங்கைத் தோட்ட உரிமையாளர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். முதலில் வாழ்க்கை மிகக் கடுமையாக, பரதேசி படத்தில் வந்த காட்சிகள் மாதிரி, இருந்தாலும் பின்னர் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை பழகிப்போனது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முடியும் வரை தமிழகக் கிராமங்களுக்கு திரும்பிப் போவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் பெருவாரியான தமிழ்த் தொழிலாளர்கள் திரும்பிச் செல்லவில்லை. காரணம், இந்திய கிராம வாழ்க்கையைவிட, இங்கே கஷ்ட நஷ்டங்களுடன் கூடிய வாழ்க்கை அவர்களுக்கு 'பரவாயில்லை' என்று தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில், 1915 ஆம் ஆண்டின் பின்னர்தான் பெருமளவிலான தொழிலாளர்கள் இலங்கைக்கு படையெடுத்து வந்திருக்கிறார்கள். விஷயம் தெரியாமலா அவர்கள் இங்கே வந்திருக்க முடியும்? அது பத்திரிகை, தொலைபேசி, தபால், தந்தி, ரயில் எல்லாம் வந்துவிட்ட காலம்!

இருந்தாலும் கொஞ்சம் வசதியான தமிழ்க் குடும்பங்கள் ரயில், கப்பல் மூலம் தமிழகம் சென்று தம் கிராமங்களையும் உறவுகளையும் பார்த்து வந்தார்கள். இவர்கள் தொகை சொற்பமானதுதான். அப்படிப் பார்த்து விட்டு வந்தவர்கள் இங்கே வந்து சொன்ன கதைகள் படு சுவாரசியமானவை!

புளத்சிங்கள, ஹல்வத்துறையில் வசிக்கும் சுப்ராயன் லெட்சுமணனுக்கு தற்போது 75 வயதாகிறது. ஐம்பதுகளில் மன்னாருக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த ராமானுஜம் பயணிகள் கப்பல் மூலமாக தமிழகத்திற்கு சென்று வந்திருக்கிறார் இவர்.

"அப்போ எனக்கு பத்து வயதிருக்கும். எங்க அண்ணனுக்கு பதினைந்து வயது. எங்கம்மா சின்னக்கண்ணு எங்கள் ரெண்டு பேரையும் இந்தியாவிற்கு அழைச்சிட்டு போனாங்க. பாதுக்கை ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்கினோம். பாதுக்கையிலிருந்து படாளம் (செங்கல்பட்டு பக்கமான ஒரு கிராமம்) வரை பயணிக்க இங்கேயே டிக்கட் வாங்கும் வசதி வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது. டிக்கட் கட்டணம் ஒருவருக்கு ஒன்பது ரூபாதான்! அந்த டிக்கட்டை பயன்படுத்தி கொழும்பிலிருந்து மன்னாருக்கு ரயில் பயணம் செய்து அதன் பிறகு கப்பல் ஏறினோம். ராமேஸ்வரத்திலிருந்து சொந்த ஊருக்கு ரயிலில் பயணித்தோம். எல்லாம் ஒன்பது ரூபா டிக்கட்டில் என்றால் நம்புவீர்களா? என்று தமது இனிக்கும் ஞாபகங்களை லெட்சுமணன் அசைபோடுகிறார்.

"இப்போ மாதிரி அந்தக் காலத்து பயணங்கள் சொகுசாக இருக்கவில்லை. கொழும்பிலிருந்து கரி கோச்சியில் மன்னாருக்கு போறதே ரொம்ப கஷ்டம். வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு நம்ம சொந்த ஊருக்கு போய் சேரும்போது சட்டை கறுப்பாக மாறிவிடும். அந்தளவுக்கு சிரமமான பயணம். ராமானுஜம் கப்பலில் அடித்தளத்தில்தான் நாம் உட்கார முடியும். டீக்கடை பெஞ்சு மாதிரி அடிச்சு போட்டிருந்தாங்க. அதோட நாங்க கொண்டு போற பெட்டி படுக்கை எல்லாம் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாம் விரும்பினா அதிலேயும் ஏறி உட்கார்ந்துக்கிட்டே போகலாம். நம்ம ஆளுங்க கூட்டம் கூட்டமாக அமர்ந்து கதை பேசிக்கிட்டே வந்தாங்க. கப்பல் குலுக்கி எடுக்கும்.

அந்தக் கப்பலின் ஜன்னல்களுக்கு கண்ணாடி கிடையாது. அதனால் உப்புக்காற்று சில்லென்று உள்ளே வந்தது. லயத்தில் ஓடித்திரிந்து விளையாடிய எனக்கும் என் அண்ணனுக்கும் அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. சில பெருசுகள் வெற்றிலையை மென்று கப்பலின் பலகை சுவர்களில் துப்பி வைத்திருந்தார்கள். அதனால் அந்தக் கப்பலின் சுவர்களில் வெற்றிலைக் கறை அப்பிக் கிடந்தது. பிறகு நீண்ட நேர பயணத்தின் பின்பு தனுஷ்கோடியில் இறங்கி நடந்தோம். அது ஒரு பொட்டல்காடு. மணல் தரையில் காலை வைத்தால் சூடு தாங்க முடியவில்லை. வெயிலின் கொடூரத்தை நான் அங்கேதான் உணர்ந்தேன். மண்டபத்தில் சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே போக பின்னேரமாகிவிட்டது. அதன்பிறகு நாங்கள் மூவரும் ராமேஸ்வரத்தில் படாளம் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தோம். அரை நாள் ஓட்டத்தின்பின் படாளத்தில் இறங்கும்போது நானும் அண்ணனும் ரொம்பவே சோர்ந்துபோய் விட்டோம். பிறகு அம்மாவோடு மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு பாலாற்றில் இறங்கி நடந்தோம். பேருக்குத்தான் அது பாலாறு. ஆனால் அதில் தண்ணீர் இருக்கவில்லை. வெறும் மணல் தரையாக இருந்தது. படாளத்திற்கு பக்கத்திலிருக்கும் சித்தாம்பூர் எங்க அப்பாவின் ஊர். அதற்கு அடுத்தது ஆனூர். அது எங்க அம்மா ஊர். அப்போ அங்கே கரண்ட் வசதி ஏதும் இல்லீங்க" என்று கடந்த கால அனுபவங்களை அசை போட்டு பேசுகிறார் லெட்சுமணன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் அமைந்திருக்கும் ஊர்தான் படாளம். அங்கே வரலாற்று சிறப்புமிக்க பல கோயில்கள் அமையப் பெற்றுள்ளன. பல்லவர் கால முத்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. செங்கல்பட்டிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் படாளம் அமைந்திருக்கிறது.

"அப்போ தமிழ்நாட்டில் தீண்டாமை ரொம்பவும் உச்சத்தில் இருந்த காலம். காலையில் இட்லி விற்க வரும் அந்த உயர்சாதி ஆயாவின் முகம் இப்போவும் என் ஞாபகத்தில் இருக்கு. அவங்க இட்லி கூடையோடு எங்க அப்பா வீட்டு வாசல்ல நிற்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக எங்ககிட்டேயிருந்து தள்ளித்தான் நிற்பாங்க. தாத்தாவும் பாட்டியும் ஒரு தட்டை கொண்டு வந்து நீட்டுவாங்க. அந்தம்மா இட்லிகளை ஜாக்கிரதையாக அதில் வைக்கும். தாத்தா பணத்தை வித்தியாசமான முறையில் கொடுப்பதை நான் ஆச்சரியமாகப் பார்ப்பேன். ஏனென்றால் இலங்கையில் நாங்கள் அப்படி பணம் கொடுக்கிறது இல்லை.
தாத்தா அவள் கையில் பணத்தை கொடுக்க மாட்டார். தமது இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து இட்லிக்காரிக்கு நீட்டுவார். தாத்தா ஒரு அடி உயரத்திற்கு கையை உயர்த்தி பணத்தை அந்த ஆயா கையில போடுவார். பிறகு அது நமக்கு மிகுதி பணம் தரும்போது அதே மாதிரியாத்தான் கையை உயர்த்திப் போடுவாள். எங்க ஆச்சரியத்தை கவனிச்ச அம்மா, 'நம்ம கை அவங்க மேல பட்டா அவங்களுக்கு தீட்டாகிவிடும். ரொம்ப கவனமா நடந்துக்குங்க' என்று அம்மா எச்சரிக்கை செய்தாங்க. ஆனாலும் அது என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. தீட்டு என்றா என்ன என்பது தெரியாத காலம். ஆகவே அம்மாவின் எச்சரிக்கை என்னையும், அண்ணனையும் அந்த விபரீத முயற்சியை செய்து பார்க்கத் தூண்டியது. அன்று காலையில் இட்லிக்கார ஆயா வந்ததும் இட்லி வாங்க நானும் அண்ணனும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தோம். ஆயாவை பார்த்து சிரித்தபடியே இட்லியை அவரிடமிருந்து வாங்கும்போது நான் ஆயாவின் கையை பிடித்து விட்டேன். அடுத்த நிமிசம் ஆயா 'அய்யோ அய்யோ தொட்டுட்டானே... தொட்டுட்டானே' என்று கத்திக் கூப்பாடு போடத் தொங்கினா. எங்க வீட்டு ஆளுங்க வந்து நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாங்க. 'நீங்க பண்ணுன வேலையாள அந்த ஆயா பாவம் இன்னைக்கு எழுமிச்சைப்பழம் தேய்த்து பரிகாரம் செய்து குளிச்சிருக்கும்' என்று சொன்னாங்க. 'அப்போ நம்ம கிட்டே வாங்குற பணத்தையும் பரிகாரம் செய்து கழுவித்தான் எடுப்பாங்களா' என்று நான் கேட்க, 'வாயை மூடுடா!' என்று அம்மா திட்டினாங்க. என்று தாம் சின்ன வயதில் செய்த சாகசத்தைச் சொல்லி பெருமிதம் கொள்கிறார் லெட்சுமணன்.

"படாளம் ரயில்வே ஸ்டேசனில் ஒரு ரயில்வே மாஸ்டர் இருந்தாரு, அவரு ஒரு சிங்களவர்னு என் மாமா சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நான் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அது உண்மை என்பதை புரிந்து கொண்டேன். அந்தக்காலத்தில் ஜப்பான் கொழும்பில் குண்டு போட்டபோது பயந்துகிட்டு பலர் இந்தியாவிற்கு ஓடிப்போனாங்க. அப்படிப் போன இவர் தமிழகத்தில் அடைக்கலம் தேடியிருக்கிறார். 'என்னைப் போல நிறைய பேரு இங்க வந்து குடும்பம், குட்டின்னு ஆகிட்டோம். இப்போ இங்கேயே வேலையும் செய்கிறோம்' என்று அந்த மனிதர் என்னிடம் சிங்களத்தில் சொன்னார். நானும் அண்ணனும் அவரோடு சரளமாக சிங்களத்தில் உரையாடியதில் அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சிதான்" என்றார் லெட்சுமணன்.

"அதன் பிறகு ஒரு நாள் என்னையும், என் அண்ணனையும் எங்க மாமா ஒரு நாடகம் பார்க்க அழைச்சிட்டுப் போனார். ஒரு பெரிய பொட்டல் வெளியில் நாடகம் போட்டிருந்தாங்க. மேடை இருக்கும் இடத்திற்கும் நாங்க இருக்கும் இடத்திற்கும் ரொம்பவே தூரம் என்பதால் அதில் நடிப்பவர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. கூட்டமும் ரொம்பவே அதிகமாக இருந்தது. மாட்டு வண்டிகளில் ஏறி நின்றபடி இளம் பெண்கள் அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மாட்டு வண்டிகளில் வந்தவங்க ரொம்ப பெரிய இடத்து ஆட்கள் என்பது அவங்களோட அலங்காரத்தை பார்க்கவே புரிஞ்சது. சிறிது நேரத்தில் எங்க மாமா 'நீங்க நாடகம் பார்த்திட்டு வாங்க நான் வீட்டுக்குப் போறேன்' என்று கிளம்பிவிட்டார். நானும் அண்ணனும் நாடகத்தை மேடைக்கு அருகில் நின்று பார்க்கும் ஆசையில் கூட்டத்திற்குள் புகுந்து முன்னேறினோம். பெண்கள் அமர்ந்திருக்கும் அந்த முன்வரிசை இடத்தை நெருங்கிய  போதுதான் நாங்கள் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது! எங்களைப் பார்த்த சில பெண்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய், கம்பளங்களை சுருட்டி எடுத்து 'அய்யோ ஓடுங்க, ஓடுங்க'னு பதறியபடி எங்களைவிட்டு பல அடிகள் தூரம் புயல் காற்றில் அடிபட்டு சுழன்று  செல்பவர்கள் போல கும்பலாக புழுதியை கிளறியபடி ஒதுங்கினார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று எமக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அங்கே வந்த பெரிய மனிதர்கள் எங்களை 'ஒத்து, ஒத்து'னு கத்தியபடி ஒரு ஓரமாக நிறுத்தினார்கள். நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். பிறகுதான் அக்ரஹாரத்து பிராமணப் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இடத்தைத் தீட்டாக்கி விட்ட பாவத்தை செய்ததை உணர்ந்தோம். பிறகு அவர்கள் எங்களை விசாரித்த போது நாங்கள் சிலோனிலிருந்து வந்ததை சொல்லி எங்களை விட்டு விடும்படி அழுதோம். பிறகு திட்டி வீட்டிற்கு விரட்டினார்கள். வீட்டுக்கு வந்ததும் என்னையும் அண்ணனையும் அம்மா அடி பின்னி எடுத்தார். 'அடுத்த நாள் பஞ்சாயத்துல நிறுத்திட்டா என்னப் பண்ணுறது' என்று எங்கள் மாமா பதறிப்போய் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார். அவர் அந்த பெரிய ஆளுங்க வீட்டில் கூலி வேலை செய்பவர். அவருக்கு வேலை பறி போயிடும் என்கிற கவலை. பிறகு இங்குள்ள பழக்க வழக்கங்கள் எங்களுக்குத் தெரியாததைப் பற்றி ஊர் பெரியவர்களிடம் பேசி மன்றாடி விசயம் பஞ்சாயத்து பார்வைக்குப் போவதை தடுத்து விட்டார்கள்" என்று லெட்சுமணன் சிரித்துக்கொண்டே பெரிமூச்சு விட்டார்.

"பிறகு படாளத்தை விட்டு புறப்பட்டு வந்து ராமேஸ்வரம் முகாமில் ஒரு வாரம் தங்கினோம். கட்டிய வேட்டியிலிருந்து கோவணம் வரை அனைத்தையும் கொதிக்கும் தண்ணீர் கொப்பரைகளில் அவித்துத் தந்தார்கள். நோய் தடுப்பூசியும் போட்டு விட்டார்கள். இந்தியாவில் இருந்து சிலோனுக்கு நோய்களைக் காவிச் செல்லக்கூடாது என்பதுக்கான ஏற்பாடு இது. பின்னர் கொழும்புக்கு வந்தபோது எங்களுக்கு சொந்த ஊர் வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று மண்டப நினைவுகளை மீட்டினார்.

"என் உடைகளை கொதிக்கும் நீரில் அவித்து எடுத்து அணிந்து வந்ததில் மகிழ்ச்சிதாங்க. அந்த பெரிய சாதிக்காரன்களோடு தீட்டு என்னை பீடித்திருந்தால் அதுவும் கழுவுப்பட்டிருக்கும்தானே!" என்று கிண்டலாக சிரிக்கும் அவர், "சாதின்னு ஒரு மசுரும் கிடையாதுங்க.... எல்லாம் மனுஷன் தாங்க...." என்று கூறி புன்னகைத்தார்.

ஆனால் 'நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் இயல்பின் அடிப்படையில்' என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறானே அது எப்படி....? விடை தெரியாமலேயே அலுவலகம் திரும்பினோம்.

No comments:

Post a Comment