Wednesday, November 5, 2014

சூடா ஒரு டீ!

இவர்தான் டீ மாஸ்டர் வாணி சாமி!


மணி  ஸ்ரீகாந்தன்

'நீங்கள் பருகும் டீ சுப்பராக இருக்க வேண்டும் என்றால் தேயிலை சாயமும், கெட்டிப் பசும் பாலும், சீனியும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். நுங்கும் நுரையுமாக அது உங்கள் முன் ஆவி பறக்க வைக்கப்பட வேண்டும். இந்த வித்தை எல்லோருக்கும் கை வராது. அப்படிக் கை வந்தவர் பெயர்தான் டீ மாஸ்டர்...'
தமிழகத்தையும் இலங்கையையும் மென்பான பாவனையுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கோப்பிப் பானத்துக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் இலங்கையில் டீக்குக் கிடைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கொழும்பில் இருந்து பதுளைக்கு பஸ் பிரயாணம் என்றால் பஸ் எத்தனை முறை நிறுத்தப்படுகிறதோ அத்தனை தடவைகளும் பயணிகள் இறங்கி டீ குடிக்கவே செய்வார்கள். ஒரு வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் ஒரு டீ கிடைக்கும். மேலும், கோலா பானம் தந்து உபசரிப்பதைவிட டீ தந்து உபசரிப்பதை நாம் கௌரவமாக நினைக்கிறோம்.

இந்த டீயும் ஆளாள் கைமணத்துக்கு ஏற்ற மாதிரி சுவையில் மாறுபடும். உங்கள் அம்மா போட்ட டீ மாதிரி இருக்காது உங்கள் மனைவி கைமணம் என்பது தெரிந்த விஷயம்தானே!

இதனால்தான் ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டர் முக்கியத்துவம் பெறுகிறார். ஒரு உணவகத்தின் நற்பெயருக்கு சமையல்காரரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் டீ மாஸ்டருடையது. சுவையான டீயை போடுவதற்கு மாத்திரமல்ல, அதை நான்கு பேர் பார்த்து வியக்கும் வண்ணம் அசத்தல் எக் ஷனுடன் போடுவதற்கும் தெரிந்தவரே அசல் டீ மாஸ்டர்.

விதவிதமான ஸ்டைல்களில் டீ மாஸ்டர் டீ போடுவதைப் பார்த்தபடியே சரியான அளவில் பாலும் தேயிலைச் சாயமும் சீனியும் கலந்து நுரைக்க நுரைக்கத் தரப்படும் டீயை சுவைப்பதே தனி அனுபவம்தான்!

ஆனால் டீ மாஸ்டர்களுக்கு இன்றைக்கும் கௌரவம் அளித்து வருவது சைவ உணவகங்கள்தான். நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டீ அருந்திப் பாருங்கள், சப்பென்றிருக்கும். சைவ உணவகங்கள் அல்லாத ஏனைய உணவகங்களில் டீ அவ்வளவாக ருசிப்பதில்லை. அவை டீ மாஸ்டர்மாருக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும் டீ மாஸ்டரை மேடையில் ஏற்றி வாடிக்கையாளர் பார்க்கும்படி அவரை டீ, கோப்பி போடச் செய்வது சைவ உணவகங்கள்தான்!

இந்த வகையில் எம் கண்முன் நிழலாடிய இடம்தான் ஆமர்வீதி வாணிவிலாஸ். இங்கு மட்டுமே தமிழகத்துப் பாணியில் வாடிக்கையாளர் கண்களுக்கு பளீச்சென்று தெரியும் வகையில் பெரிய பொய்லர் பக்கத்தில் நீராவி விட்டுக் கொண்டிருக்க டீ மாஸ்டர் நெற்றியில் பட்டையுடன் தரிசனம் தருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டீ மாஸ்டரின் பெயர் சாமி. ஆமர் வீதி ஏரியாவில் சாமியும் ஒரு வி.ஐ.பி.தான். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

"சாமிக்கிட்டே டீ குடிச்சா, நன்றாக இருக்கும் என்று என்னைத் தேடி வர்ரவங்க நிறையப்பேரு! அவங்க என்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நிறைவு செய்கிற மாதிரியே சுவையான டீயை சில நொடிகளிலேயே தயார் செய்து கொடுக்கிறேன்!" என்கிறார் சாமி, ஒரு கனிவான புன்னகையோடு.

"யார் வேண்டுமானாலும் டீ போடலாம். ஆனால் டீ சுவையாக இருக்க நமக்கு கைப்பக்குவமும் இருக்கணும், நமக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக நண்பர்கள் சொல்றாங்க. டீயை ருசித்து விட்டு டபள் சூப்பரா இருக்கு சாமி என்று அவங்க சொல்லும்போது மனசுக்கு ரொம்பவும் நிறைவா இருக்கு" என்று சொல்லும் சாமியின் முகத்தில் பூரிப்பு!

சாமியின் நிஜப்பெயர் பெருமாள் கனகராஜ். ஆனால் சாமின்னு சொன்னால்தால் எல்லோருக்கும் தெரியும். தனது பதினான்காவது வயதிலேயே ஹோட்டல் தொழிலுக்கு வந்தவர் இவர். இன்று தமது ஐம்பத்தாறாவது வயதை கடந்தும் பம்பரமாக சுழல்கிறார்.

"நாம் பிறந்து வளர்ந்தது எல்லாமே கண்டியில்தான். எங்கப்பா பெருமாளும் ஹோட்டல் தொழில்தான் செய்தார். அவருக்கு பிறகு இப்போது நான். டீ அடிக்கிறது ஒண்ணும் தாழ்ந்த தொழில் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவங்க சும்மாவா சொல்லி இருப்பாங்க?" என்று இவர் சொல்வதில் எந்த கருத்து வேறுபாடும் எவருக்குமே இருக்க முடியாது.

வாணி விலாசுக்கு ராஜகிரியவிலிருந்து தினமும் பால் வருகிறதாம். சுத்தமான பசுப்பாலில்தான் இங்கே டீ தயார் செய்யப்படுவதாக இவர் சொல்கிறார்.

"அதிகாலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் பொய்லரில் தண்ணீரை கொதிக்க வச்சு காலை ஆறரை மணிக்கெல்லாம் டீ போடத் தொடங்கிடுவேன். பத்து மணிக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் ஓய்வு எடுப்பேன். பிறகு இரண்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிவரை வேலை. எப்படியும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட டீ போடுவேன். இதற்கு ஒரு நாளைக்கு எண்பது லிட்டர் பால் தேவைப்படும். பால் மிஞ்சினால் அதை மோராக மாற்றி விடுவோம்" என்று ஒளிவுமறைவின்றி பேசும் சாமியின் பேச்சிலும் சுத்தம் பளிச்சிடுகிறது.

அந்தக் காலத்தில் குமாரவீதியில் 'நவீன சந்திரவிலாஸ்' என்ற ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்த சாமி, பிறகு அம்பாள் கபே ஹோட்டலிலும் அதன்பிறகு ஜூலை கலவரத்திலிருந்து இன்றுவரை வாணிவிலாசிலும் டீ மாஸ்டராக விளங்குகிறார்.

"முதல் சம்பளமாக நான் மாசம் நாற்பத்தைந்து ரூபா வாங்கினேன். இப்போ முப்பதாயிரம் வரை கை நிறைய கிடைக்கிறது" என்கிறார் சந்தோஷமாக.

சாமியின் மனைவியின் பெயர் சரோஜா. இரண்டு மகன்கள். ஒருவர் திருமணம் முடித்து கட்டாரிலும் அடுத்தவர் இலங்கை கடற்படை வீரராகவும் இருக்கின்றனர். செட்டிலான வாழ்க்கை.

"டீ போடுகிற இந்த தொழிலால்தான் என் வாழ்க்கைச் சக்கரம் இதுநாள் வரையும் தடையில்லாமல் ஓடுது. இனியும் அது தடைப்படாது என்கிற நம்பிக்கை இருக்குது. நமக்கு மேல அந்த சபரிமலை ஐயப்பன் துணை இருக்காரு" என்று சொல்லும் போதே சாமியின் முகத்தில் பக்திப் பரவசம்!
"நான் டீ போட்டால் டீ ஆடாதுங்க! அந்தளவுக்கு ஸ்ட்ராங்க இருக்கும். கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்களேன்" என்று ஒரு டம்ளர் டீயை நீட்டினார். ருசித்தோம். அதில் சுவையும் மணமும் கூடவே அன்பும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. டீ சாயம், பால், சீனி மிகச் சரியாக சேர்ந்து சுவை நரம்புகளை நீவி விட்டதை உணர்ந்து சாமிக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.

No comments:

Post a Comment