Sunday, November 9, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09

'யாதும்' என்ற கோம்பை அன்வரின் அற்புத ஆவணப்படம்


அருள் சத்தியநாதன்

மாநாட்டின் முதல் நாள் திறைவடைவதற்கு முன்னர் அரங்கில் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதற்கு முன்னர் மாலைப் பொழுதில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது நண்பர் சாத்தான்குளம் ஜப்பார் என்னிடம் வந்து உரையாடினார். அவர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர். அழுத்தமான கருத்துகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தக்கூடிய இவர், ஒரு நல்ல மனிதர். இஸ்லாமிய பண்புகளுக்கமைய வாழ்பவர். எழும்பூர் மதுரா டிரவல்ஸ் அதிபர் வி.கே.டி. பாலனின் சகா. அவரது இணைய வானொலியை ஜப்பார் நடத்தி வருகிறார். பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்கு சொத்துகளையும் கொடுத்து வாழ்வளிக்கும் சிறந்த பண்பைக் கொண்டவர். நான் கண்ட சிறந்த மனிதர்களில் ஜப்பாரும் ஒருவர்.
"இன்று இரவு எங்கும் ஓடி விடாதீர். இன்றைக்கு ஒரு ஆவணப்படத்தை திரையிடுகிறேன். நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று என்னிடம் ஜப்பார் சொல்லிவிட்டுப் போனார். குறும் படம், ஆவணப்படம் என்றால் நான் விரும்பிப் பார்ப்பேன். எனினும், இஸ்லாமிய மாநாட்டில் ஆவணப்படம் என்றதும் ஹஜ் யாத்திரை போன்ற வழமையான விஷயங்கள் தொடர்பான ஆவணப்படமாக இருக்கும் என்று நினைத்தேன், மறந்து போனேன், அது ஜப்பாரினால் சொல்லப்பட்டிருந்தும்கூட!

இரவில் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் முடிவுற்ற நிலையில் கூட்டமும் கலைந்து கொண்டிருந்தது. அவசர அவசரமாக மேடையேறிய ஜப்பார், 'யாதும்' என்ற பெயர் கொண்ட கோம்பை எஸ்.அன்வரின் ஆவணப்படத்தை திரையிட இருப்பதாகவும் அதைப் பார்க்கும் படியும் கேட்டுக் கொண்டார். எனினும் அப்படத்தைப் பார்க்க திரும்பி வந்து அமர்ந்தவர்கள் சொற்பம் தான். கண்ணாடி அணிந்த ஒரு இளைஞரை மேடையேற்றி இவர்தான் கோம்பை எஸ்.அன்வர் என அறிமுகம் செய்து படத்தை தொடக்கப் போகிறோம் என்றார் ஜப்பார். ஜப்பார் மேடையில் பேச, சபையோர் தம்பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க ஒரு ஏனோ தானோ சூழ்நிலையே அங்கே நிலவியது.
ஒரு வழியாக படம் ஆரம்பமானது. படம் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஓடியிருக்கும். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரம் போனதே தெரியவில்லை. முடிந்தபோது, ஐயோ முடிந்து விட்டதே, இன்னும் கொஞ்சம் நீண்டியிருக்கலாமே என்ற ஆயாசமே என்னிலும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலங்கை நீர்வழங்கல் வடிகால் சபையைச் சேர்ந்த நீர்வளப் பொறியியலாளர் இஸ்மாயிலுக்கும் தோன்றியது. ஏனெனில் அது ஒரு அற்புதமான ஆவணப்படம். புதிய தகவல்களை எங்கள் உள்ளங்களில் அள்ளிக் கொட்டியது. ஒரு தகவல் களஞ்சியத்துக்குள் போய்வந்த உணர்வை அது எமக்கு அளித்தது. அன்றிரவு அந்த ஆவணப் படத்தைப் பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள் என்றால் அது ஒரு தனியான இனம். எந்த நாட்டில் அந்தச் சமூகம் வாழ்கிறதோ அந்த நாட்டின் ஏனைய சமூகங்களோடு ஒட்டாத தாமரையிலைத் தண்ணீர் மாதிரியான இனம் அது என்பதே வேற்று சமூகத்தினரின் பொதுப் புத்தி பார்வையாக இருக்கிறது.

முஸ்லிம் அல்லாதோர் பார்வை இப்படி இருந்தால், இஸ்லாமியர்களில் பலரும், முஸ்லிம் எனப்படுவோர் தனித்துவமான, உயர்வான ஒரு இனம். ஏனையோரை விட உயர்ந்த சமூகம், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட சமுகமாகும் எங்களுடையது என்பதான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

மத ரீதியாக எல்லா சமூகங்களும் தம்மை மட்டுமே உயர்வாகக் கருதுவதும் ஏனைய சமூகத்தினரை வெறும் 'பேயர்' களாகப் பார்ப்பதும் ஒரு விடாப் பிடியான சமூக நோயாகவே இருந்து வருகிறது. இதே சமயம் எல்லாச் சமூகங்களிலும்  'எல்லா மதங்களும் ஒன்றுதான். அவரவர் மதம் அவரவருக்கு. மத நம்பிக்கையில் தீவிரவாதம் கூடாது. ஏனெனில் எல்லா மதங்களுமே அடிப்படையில் ஒரே மாதிரியான வாழ்வியல் அறங்களையே சொல்லி வருகின்றன. இதில் குரோத பார்வைக்கே இடமில்லை. அவரவர் மதங்களை அனுஷ்டிக்க இடம் விட்டு மனிதர்கள் என்ற அளவில், அந்தத்தளத்தில், அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதும் அர்த்த புஷ்டியானதுமான அணுகுமுறையாக இருக்கும்' என்ற மனப்பான்மை கொண்டவர்கள் கணிசமான அளவில் இருக்கவே செய்கிறார்கள். இப்படி நினைப்பவர்களில் பலர் வெகு சாதாரண மனிதர்களாக பரவிக் கிடக்கிறார்கள். இதனால்தான் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீவிரவாத கருத்துகளும் நடவடிக்கைகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகின்றபோதிலும், தீவிரவாதிகள் எதிர்பார்க்கின்ற வகையில் மதமோதல்கள் பற்றி எரிவதில்லை.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கிளப்பி விடப்படுகின்ற கருத்துகள். மிகத் தீவிரம் கொண்டவையாக இருந்தாலும் அதே தீவிரத்தன்மையுடன் அது பற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் அவசியத்தை அறிந்து வைத்திருப்போர் சாதாரண மக்களாக இருப்பதே.

மதத் துவேஷத்தை சமூக மட்டத்தில் குறைப்பதற்கு, மதங்களின் இயல்பான தன்மைகளைத் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். இச்சமூகங்கள் தேசிய மட்டத்தில் எவ்வாறெல்லாம் ஊடுபாவி, தேசிய - சமூக ஸ்திரத்துக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். இவ்வாறான அறிவுறுத்தல்களும், வெளிப்படுத்தல்களும் மதம் சார்ந்த சமூகங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தால் தான் வெளியில் இருந்து வரக்கூடிய மதக்குரோத சக்திகள் வலுவிழந்து போக முடியும்.

இதைத்தான் கோம்பை அன்வர் 'யாதும்' என்ற தனது ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
விநாயக சதுர்த்தி ஆரம்பமாகி விட்டது என்றால் தமிழகம், குறிப்பாகச் சென்னை, பதற்றம் கண்டு விடும்.  பொலிஸ் படை குவிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு யார் யாரெல்லாம் எந்தெந்த வீதிகள் வழியாக பிள்ளையார் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்பதை பொலிசாரே தீர்மானிக்கின்றனர். மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை வைக்க, எந்தத் தெரு வழியாக ஊர்வலம் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்க இந்த முஸ்லிம்கள் யார்? என இந்துக்கள் சினம் கொள்ள...
சென்னைக்கு இது வருடா வருடம் பெய்து போகும். கோடை மழைதான்.

நாங்கள் தூக்கிப் பிடிப்பதே சரி என எண்ணிக் கொண்டிருப்போருக்கு அப்படி அல்ல என்பதை அழுத்தமாக கோம்பை அன்வர் தன் 'யாது'மில் சொல்லி இருக்கிறார். தீவிரவாத இந்து சிந்தனைக்கு மட்டுமல்ல, தீவிரவாத இஸ்லாமிய கருத்துக்களுக்கும் அவர் 'யாது'மில் வேட்டு வைக்கிறார்.

எளிமையாகச் சொல்வதானால், எனது கொள்கை, எனது நம்பிக்கை என்பது விஜய் ரசிகர், தல ரசிகர், சூர்யா ரசிகர் என்பது வரை வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இரு நண்பர்கள் ஹோட்டலுக்குச் சென்று ஒருவர் மாமிசம் கலந்த உணவையும் மற்றவர் தனிச் சைவ உணவையும் வாங்கி ஒரே மேசையில் எதிரும் புதிருமாக அமர்ந்து சாப்பிட்டு கிளம்பிச் செல்கிறார்கள். கோழிக் கறி எடுத்தவன் ஒருபோதும் இதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார் என்று சைவ உணவுக்காரனிடம் நீட்டப் போவதில்லை. செத்துப்போன உடலை இவன் மிருகம் மாதிரி தின்கிறானே என நினைத்து சைவ உணவுக்காரன் முகம் சுளிக்கப் போவதில்லை. இது இயல்பு வாழ்க்கை.

இந்த எளிய உண்மை சாதாரண மக்களுக்குப் புரிகிறது. எனினும் இந்த உண்மை புரிந்திருந்தாலும் விஷ வித்துக்களை விதைத்து அறுவடை செய்ய நினைப்பவர்கள் அதைச் செய்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் தான் நமது எல்லைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தார்கள், அவர்கள் சுதேச மக்களுடன் எவ்வளவு நெருக்கமாக அண்ணன் தம்பி உறவுடன் பழகினார்கள், இந்து - முஸ்லிம் உறவு எவ்வளவு நெருக்கமானது, இயல்பானது என்பதை சாட்சிகளுடன் நிறுவும் படமே யாதும்.

நறுமண பொருள் வணிகம் என்பது 2,500 வருடங்கள் பழமையானது. இலங்கை, இந்திய நாடுகளை, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய தீபகற்ப நாடுகளுடன் இணைந்தது இந்த நறுமண பொருள் வர்த்தகமே. இதில் உள்ள இலாபத்தை உணர்ந்து கொண்டதாலேயே 16 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய நாடுகள் இப்பாரம்பரிய வர்த்தகத்தை முறித்து தமது ஆதிக்கத்தின் கீழ் இதைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன. இது, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றுவதில் முடிவடைந்தது. இது நமக்குத் தெரிந்த வரலாறு.

அராபியர்களின் இந்த நறுமணப் பொருள் வணிகத்தின் வாயிலாகவே இஸ்லாம் மேற்கு ஆசியாவில் பரவியது. அப்படியே தமிகழத்திலும் வேருன்றியது. இந்த வேர்களை நோக்கிய அன்வரின் பயணமே இந்த ஆவணப்படம். இஸ்லாத்தின் வருகையால் தமிழகத்தில் உருவான தமிழ் முஸ்லிம் சமூகத்தின் தொன்மையையும், இரு சமயத்தவர் மத்தியில் நிலவிய கொடுக்கல் - வாங்கல்களையும், அகழ்வாராய்ச்சி, வரலாற்று ஆய்வாளர்களின் பேட்டிகள் தமிழ் இஸ்லாமிய இலக்கியம், கலாசாரம் என்பனவற்றின் ஊடாகப் பயணிப்பதன் மூலம் நிறுவியிருக்கிறது இந்த ஆவணப்படம்.

தனியொரு மனிதராக இவ்வளவு சிரமமான காரியத்தை சிறப்பாக முடிக்க முடிந்திருப்பது, கோம்பையின் விடா முயற்சி மற்றும் கொள்கை உறுதி என்பனவற்றையே வெளிப்படுத்துகிறது. இந்த ஆவணப்படம் ஒரு முடிவு அல்ல, இன்னும் விரிவாக ஆய்வு செய்து இத்தேடலை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் கோம்பை. போதிய நிதியைத் தேடி அதையும் செய்து முடிப்பேன் என்கிறார்.

கோம்பை, அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர். பார்க்க அமைதியான, முகத்தில் எந்தப் பெருமிதத்தையும் காட்டாதவராக, இந்தப் புகழுக்கும் பெருமைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர் மாதிரி தோற்றமளிக்கிறார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏ. ஆர். ரஹ்மான்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லிவிட்டுப் போகிறவர். கோம்பை அப்படிக் கூடச் சொல்லவில்லை. வெறும் களைப்பான ஒரு புன்னகை மட்டும்தான்.

இவரை நம்மூரில் சிலருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அரைகுறை பிரசவங்களை நிகழ்த்திவிட்டு, முட்டையிட்ட கோழிபோல கொக்கரிப்பவர்கள் ஞாபகத்துக்கு வரவே செய்தார்கள்!

(தொடரும்)

No comments:

Post a Comment