Thursday, November 20, 2014

Galle face புகழ் குட்டன்

"ஜப்பான்காரன் குண்டு போட்டதால் கோல்பேசில் எனக்கு வேலை கிடைத்தது''


நேர்காணல் - மணி ஸ்ரீகாந்தன்

இவர் ஒரு அற்புதமான மனிதர். ஏனெனில் கண்டு கொள்ளப்பட்ட கண்டுகொள்ளப்படாதவர். இவரது புகைப்படங்களும் இவரைப் பற்றிய விவர்ண கட்டுரைகளும் உலகின் பல நாடுகளின் உல்லாசத்துறை பத்திரிகைகள், சஞ்சிகைகள், வீடியோ காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முற்பகுதியில் பெரும்பாலான உள்ளூர் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தன. நூறு வருடங்களுக்கு மேல் பழைமையான கோல்ஃபேஸ் ஹோட்டலில் 68 ஆண்டுகள் வேலை செய்திருக்கும் குட்டன், அந்த ஹோட்டல் வரலாற்றில் ஒரு பகுதியாகக் கலந்திருக்கிறார். 90 வயதிலும் ஹோட்டல் வரவேற்பாளராக உள்ளே வரும் அனைவரையும் கைகூப்பி மலர்ந்த முகத்துடன் வரவேற்பது தான் இவரது தொழில். உலகம் இவரைக் கண்டு கொண்டிருந்தாலும் உள்நாட்டில் தான் கண்டு கொள்ளப்படவில்லையே என்ற ஆதங்கம் இவரிடம் உள்ளது. தனக்கென ஒரு சொந்த வீடு இல்லையே என்ற கவலை இவரிடம் உள்ளது. எவரேனும் கண்டு கொண்டு இவரது குறையை போக்கினால் இந்த 90 வது மனிதர் மகிழ்ந்து போவார்!

“குருவாயூர் பக்கத்தில் இருக்கும் ‘சொவ்வைனூர் தேசம்’ தான் நான் பிறந்த ஊர். ‘கொட்டாரப்பட்டு சாத்து குட்டன்’ என்பது தான் என் பெயர். கொட்டாரப்பட்டு என்பது என் வீட்டின் பெயர். சாத்து என்பது என் தந்தையின் பெயர்’ என்று சொல்லும் குட்டன் தான் கொழும்பிற்கு வந்த அந்த நாட்களை நினைவுகூறுகிறார்.

“என்குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். நான் இரண்டாவது. இப்போது இரண்டு பேர் இறந்துவிட நானும் எனது அக்காவும் தான் உயிரோடு இருக்கிறோம். சொவ்வைனூர் ஆரம்ப பாடசாலையில் தான் என் பாடசாலை நாட்கள் தொடங்கியது. அந்த பாடசாலையில் உட்காருவதற்கு பென்ச் போட்டிருந்தார்கள்.

ஆனால் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியரையோ, என்னோடு படித்த சக மாணவர்களையோ ஞாபகத்தில் இல்லை. அந்தப் பாடசாலையில் நான் நாலாவது வரைதான் படித்தேன். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு தொடர்ந்து படிக்க ஆசைதான்.
இளமைக் காலத்தில்
ஆனால் அதற்கு வறுமை தடையாக இருந்தது. எனக்கு பதினைந்து வயது இருக்கும் போதே அம்மாவும் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு சொவ்வைனூரிலேயே சில காலம் சுற்றித் திரிந்துவிட்டு கொழும்புக்கு வேலைக்கு போகலாம் என்று தீர்மானித்த நான் எனது நண்பனின் உதவியுடன் கொழும்புக்கு புறப்பட்டேன்.

எனது நண்பனும் என்னுடன் கூட வந்தான். அப்போது இலங்கைக்கு பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே கிடையாது. பயணச்சீட்டு மட்டும் போதும். சொவ்வைனூரிலிருந்து இருபத்தைந்து ரூபாயோடு புறப்பட்டேன். வரும்போது தமிழ்நாட்டு இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இரண்டு வாரம் தங்க வேண்டி ஏற்பட்டது.

அப்போது வெள்ளைக்காரர்கள் ஆட்சி என்பதால் வெள்ளைக்கார அதிகாரிகள்தான் இருந்தார்கள். எனக்கும் என் நண்பருக்கும் நோய் தடுப்பு ஊசி போட்டார்கள். எங்கள் உடைகளை எல்லாம் பெரிய அண்டாவில் போட்டு அவித்தெடுத்தார்கள்.

அப்படி முகாமில் இருந்தபோது நான் கொண்டு வந்த காசும் முடிந்துவிட்டது. உடனே கொழும்பிலிருக்கும் எனது அப்பாவின் தம்பிக்கு ஒரு கடிதம் எழுதி என் நிலைமையை சொன்னேன்.

அந்த கடிதத்திற்கு பிறகு எனது பெயருக்கு மண்டபம் முகாமிற்கு பதினைந்து ரூபாய் பணத்தை என் சித்தப்பா அனுப்பி வைத்திருந்தார். அதை பெற்றுக்கொண்டப் பிறகுதான் நான் கொழும்பு சென்றேன்.

அங்கே சென்றதும் எனது சித்தப்பா எனக்கு ஒரு பங்களாவில் வேலை வாங்கி கொடுத்தார். அங்கே எனக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம். அப்போது இங்கே கொழும்பில நிறைய இந்தியர்கள் வேலை செய்தாங்க. அந்த நேரத்திலதான் ஜப்பான்காரன் கொழும்பில குண்டுப் போட்டான்.
கோல்ஃபேஸ் ஹோட்டல் அன்றும் இன்றும்.
அதாவது இரண்டாம் உலகப் போரின்போது. அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கே வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்களில் பலர் இந்தியாவிற்கு சென்றுவிட்டார்கள். கொழும்பில் வேலை செய்யவே எல்லோரும் பயந்தாங்க. அப்போது தான் கோல்பேஸ் ஹோட்டல்ல ஒரு வேலை காலியாக இருப்பதாக எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார்.

எனவே எனக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்ய ஆசை. என் ஆசையை நான் வேலை செய்த அந்த பங்களா துரையிடம் சொன்னேன். அதற்கு அந்த துரை, 'நீ அங்கே வேலைக்கு சென்றால் விடுமுறை காலங்களில் எனது வீட்டில் வேலை செய்ய வேண்டும்'.

என்ற நிபந்தனையுடன் எனக்கு கோல்பேஸ் ஹோட்டல் உயர் அதிகாரியுடன் பேசி எனக்கு வேலை வாங்கி கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை வேலை செய்கிறேன். இப்போ அறுபத்தெட்டு வருடங்களாகிவிட்டன. எனக்கு இப்போது தொண்ணூறு வயதாகிவிட்டது.

ஒரே இடத்தில் ஐம்பது வருடங்கள் வேலை செய்தாவே சாதனையென்று சொல்றாங்க. நான் ஒரே இடத்தில் அறுபத்தெட்டு வருடங்கள் வேலை செய்து வருகிறேன். ஆனால் யாரும் கண்டுக்கொள்வதாக இல்லையே....” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் குட்டன்.

திருமணம் வாழ்க்கை பற்றிக் கேட்டோம்?

“நான் கொம்பனி வீதியில் இருந்தபோது எனது வீட்டுப் பக்கத்தில் ரூத்மேரி என்றப் பெண் இருந்தாள். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் இருந்தாள். எனக்கும் யாருமே இல்லை.

அப்போது எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போய்விட்டது. படுத்தபடுக்கையாகிவிட்டேன். அப்போது எனக்கு பக்கத்திலேயே இருந்து என்னை பக்குவமாக பார்த்துக்கொண்டது அந்த ரூத்மேரிதான் என்னை ஏன் அவள் அப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்றக் கேள்வி எனக்குள் எழுந்தது.

அவள் மட்டும் இல்லை என்றால் நான் கவனிப்பாரற்றுதான் கிடந்திருப்பேன். நான் கஷ்டத்திலிருந்தபோது என்னை கவனித்துக்கொண்ட அவளே எனக்கு மனைவியானால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அவ்விடத்தில் என் விருப்பத்தை நான் சொல்ல அவளும் அதற்கு சம்மதம் சொல்ல எங்கள் திருமணம் கொம்பனி வீதி இல்லத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் தான் வந்திருந்தார்கள். திருமணப் படம் பிடிக்க ஸ்டூடியோவிற்கு செல்லவில்லை. அந்தளவிற்கு வசதியுமில்லை. எங்கள் சொந்தக்காரர் ஒருவர்தான் ஒரு சிறிய கெமராவை வைத்து போட்டோ பிடித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள்.

அவர்களின் பிள்ளைகளும் திருமணம் முடித்து இப்போது மூன்று தலைமுறையை பார்த்துவிட்டேன். என் மனைவியும் இறந்து இப்போ பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன”.
என்ற குட்டனிடம் கோல்பேஸ் ஹோட்டலில் குட்டன் வாங்கிய முதல் சம்பளம் பற்றி கேட்டோம்.
 
"இருபது ரூபாவில் தொடங்கி இன்று இருபத்தைந்தாயிரத்தில் நிற்கிறது. அப்போது நான் பார்த்த கோல்பேஸ் ஹோட்டல் இப்போது இல்லை. கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னாடி கை ரிக்ஷாதான் நிற்கும். மாட்டு வண்டிகளால் தான் ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து இறக்குவாங்க.

இப்போது மாதிரி வாகனங்கள் அப்போது இல்லை. நான் கூட கை ரிக்ஷாவிலதான் இருபத்தைந்து சதம் கொடுத்து பயணம் செய்திருக்கேன். அந்த கைரிக்ஷாவில் நம்மை அமரவைத்து ஒரு மனிதன் வியர்க்க வியர்க்க இழுத்துக்கொண்டு ஓடுவான். பார்க்க பரிதாபமாக இருக்கும்.

வெள்ளைக்கார துரைமார்கள் எல்லாம் அந்த ரிக்ஷாவிலதான் பயணம் செய்வார்கள். பின்னர் நான் அந்த ரிக்ஷாவில் பயணம் செய்வதை தவிர்த்துக்கொண்டேன். நாம ஏன் அந்த ரிக்ஷாக்காரனுக்கு கஷ்டம் கொடுக்கனும் என்று ரிக்ஷா பயணத்தை அடியோடு நிறுத்திக்கொண்டேன்.

அன்றிலிருந்து கொம்பனிவீதிக்கு நடந்துதான் போவேன். அப்படி நான் காலையிலும், மாலையிலும் நடந்துபோவது எனக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இந்த வயசிலும் நான் நடந்துதான் போகிறேன்.

இப்போது நான் மாளிகாவத்தையில் வசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரையும் மாளிகாவத்தையிலிருந்து நடந்துதான் வந்தேன். இப்போது முடியவில்லை. இப்போது மாளிகாவத்தையிலிருந்து கொழும்பு பஸ் தரிப்பு நிலையம்வரை நடந்து வந்து அங்கிருந்து கோல்பேஸ் ஹோட்டலுக்கு பஸ் ஏறி வருகிறேன். இன்றுவரை என் உடல் சோர்வடைந்ததில்லை. அதற்கெல்லாம் என் நடைதான் பெரிய சக்தியாக விளங்குகிறது. அது தவிர மது, சிகரெட், வெற்றிலை என்று எந்தக் கெட்டப்பழக்கமும் எனக்கில்லை. என் உடல் திடகாத்திரத்திற்கு அதுவும் ஒரு காரணம் தான். நான் இன்று இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அன்று வாங்கிய முதல் சம்பளமான இருபது ரூபாயில் செய்த வேலையை இன்று அந்தப் பணத்தில் செய்ய முடியவில்லை. இன்று ஒரு கிலோ கோழி அறுநூறு ரூபாய்க்கு போகிறது. ஆனால் அன்று ஒரு இறாத்தல் கோழி இறைச்சியை ஐம்பது சதத்திற்கு நான் வாங்கியிருக்கிறேன்” என்று தான் பார்த்த அந்த பழைய கோல்பேஸ் பற்றி விரிவாக விளக்கினார் குட்டன்.

வாழ்க்கையில் குட்டன் எதையாவது தவற விட்டிருக்கிறாரா?

“நான் தவறவிட்டது சொந்த வீட்டைத்தான். இன்னமும் வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன். எவ்வளவு உழைத்தும் நமக்கென்று ஒரு சொந்த வீடில்லையே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது”.

ம்.. அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது?

“அப்போது எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எங்க ஊரில் பெரிய ஆளுங்க பீடி குடிப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த பீடியை வாயில் வைத்துக்கொண்டே மூக்கில் புகை விடுவது, வாயிலிருந்த புகையை வளையம் வளையமாக வானத்தை பார்த்து விடுவது என்பவற்றைக் கண்டு எனக்கும் பீடி குடிக்க ஆசை வந்து விட்டது. ஒருநாள் எங்கள் தெருவிலிருந்த ஒரு கடையில் பீடியை வாங்கி காற்சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து நேரம் பார்த்து காத்திருந்தேன். அப்போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் என் அக்கா அம்முனியை தவிர வேறு யாருமே இல்லை. வீட்டின் பின்புறத்திற்கு சென்று என் வீட்டுச் சுவரில் சாய்ந்துகொண்டு அந்த பீடியை பற்ற வைத்து புகையை உள் இழுத்து வாயிலிருந்து வளையம் விட முயற்சி செய்தேன். பீடிகுடிப்பது எனக்கு முதல் பழக்கம் என்பதால் இருமல் வந்துவிட்டது. நான் இருமுவதை அக்கா வந்து எட்டிப்பார்க்க நான் மாட்டிக்கொண்டேன். பிறகு அக்கா அப்பாவிடம் நான் பீடி குடித்த கதையைச் சொல்ல அப்பா பச்சை ஈக்கிலை எடுத்து என்னை அடித்தார்....
அது ஒரு காலம் இன்று நினைத்தாலும் இனிக்கும். என்னை அப்பாவிடம் காட்டிக்கொடுத்த என் அன்பான அக்கா கேரளாவில் இன்னமும் இருக்கிறாள் அவளுக்கு இப்போது தொன்னூற்றி நான்கு வயதாகிறது. நான் இலங்கைக்கு வந்த பின்னர் கேரளா செல்லவில்லை. ஐம்பதாண்டுகள் கழித்து என் அக்காவைப் பார்க்க கேரளாவிற்குப் போயிருந்தேன். நான் ஓடிவிளையாடிய என் வீடு, என் அக்கா, நான் பார்த்த அந்தப் பலா மரங்கள் அனைத்தும் மாறிப் போயிருந்தன. குப்பி விளக்கெரிந்த என் வீட்டில் மின் விளக்கு பளிச்சிட்டது. என் அக்காவின் பையன் வளர்ந்து பெரிய ஆளாக இருந்தான். அவர்களுக்கும் பேரன்கள் இருந்தார்கள். அதற்குப் பிறகு நான் கேரளாவிற்குப் போகவில்லை. இன்னொரு முறை என் அக்காவை பார்த்து விட வேண்டும் என்பது என் ஆசை” என்கிறார் குட்டன்.

இவர் கோல்பேஸ் ஹோட்டலில் சர்வராக வேலை செய்தபோது பார்த்த பிரபலங்கள் பற்றி கேட்டோம்.

“பண்டிட் நேரு, இந்திரா காந்தி, கேணல் கடாபி, மார்ஷல் டிட்டோ உள்ளிட்ட பலத்தலைவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சர்வராக பணிவிடை செய்யக்கிடைத்ததையும் பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன். குறிப்பாக எம். ஜி. ஆர். இலங்கை வந்தபோது இங்குதான் தங்கினார். அவரோடு நான் மலையாளத்தில் பேசிய போது அவர் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்”. என்றவரிடம் குலதெய்வம் பற்றிக்கேட்டோம். கேரளாக்காரர்களுக்கு ரொம்பவும் பிடித்த சாமி குருவாயூரப்பன்தான். எனக்கும் அவரைதான் ரொம்பவும் பிடிக்கும். எங்க வீட்டுல இருந்து குருவாயூரப்பன் கோயிலுக்கு ஒரு மைல் தூரம் தான்”.

மறக்க முடியாத நபர்கள்?

“எனக்கு அப்படிச் சொல்வதற்கு யாரும் இல்லை. வீதிவரை நண்பர்களைத்தான் நான் வைத்துக்கொண்டேன். வீட்டுக்கு நான் யாரையும் அழைத்துச் சென்றதில்லை. நானும் எவர் வீட்டுக்கும் சென்றதில்லை. எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அதனாலோ என்னவோ யாரும் என்னோடு நண்பராக சேரவில்லை. வீதியில் பேசுவதோடு சரி!” என்று பதில் சொல்லும் குட்டனிடம் வாகனம் ஓட்டத் தெரியுமா என்று கேட்டோம்.

“சின்னதில இருந்தே எனக்கு சைக்கிள் வாங்க ஒரு ஆசை. கொழும்புக்கு வந்து ஒரு பங்களாவில வேலை செய்த போது அந்த வீட்டின் துரையான 'டீ சேரம்' ரொம்ப நல்ல மனிதர். நான் சைக்கிள் கேட்டப்போது மறுக்காது வாங்கிக் கொடுத்தார். சம்பளத்தில் மாதம்தோறும் ஐந்து ரூபாய் பிடித்துக்கொண்டார். அது ஒரு ரெலி சைக்கிள். அந்தப் பங்களா தோட்டத்திலேயே இரண்டு நாளிலேயே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். நான் வாழ்க்கையில் சொந்தமாக வாங்கிய ஒரே பொக்கிஷம் சைக்கிள்தான். அந்த சைக்கிள் விலை எழுபத்தைந்து ரூபாய்”.

வாழ்க்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்னவென்று கேட்டோம்.


“வாழ்க்கை நல்லதுதான். ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைக்கிறேன். அறுபது வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் வேலை செய்து சொந்த வீடே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். இனி நான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும்? என்னைப் பார்த்து என் பேரப் பிள்ளைகள் இந்தக் கேள்வியை கேட்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் பரம்பரைக்கு நான் எதையுமே சேர்த்து வைக்காமல் போகப் போகிறேன் என்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தனது பேட்டியை முடிக்கிறார் சாத்துகுட்டன்.

(தினகரன் வாரமஞ்சரி ஜூன் 20ம் திகதி 2010 ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த நேர்காணலை கடந்த 18-11-2014 அன்று தனது 94வது வயதில் காலமான குட்டனின் நினைவாக பதிவேற்றம் செய்கிறேன்.)

Sunday, November 9, 2014

face பக்கம்

face பக்கம்


தேவதாசி வரலாறு -2

உடன் கட்டையை ஒழித்த ராஜா ராம்மோகன்ராய் 

 

 அருள் சத்தியநாதன்


தேவதாசி என்பது வடமொழிச் சொல். தெய்வ சேவகம் செய்பவள் அல்லது தெய்வ அடிமை என்று அர்த்தம். இதன் தமிழ் வடிவமே தேவரடியாள். பிற்காலத்தில் இது தேவடியாள் என மருவியது. மட்டமான சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. தேவதாசி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற சிந்தனை 1925 அளவில் தமிழ் நாட்டில் (மதராஸ் பிரஸிடென்ஸி) இயக்கமாக உருவெடுத்தபோது, தேவதாசிமாரை இழிவுபடுத்துவதற்காக தேவடியாள் என்றும் அவர்கள் அனைவரும் விபசாரிகள் என்றும் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

தேவதாசி முறையின் அடிப்படைத் தத்துவம், இறை சேவகம் செய்யும் பொருட்டு திருமணமாகாத இளம் பெண்களை, அவர்கள் வயதுக்கு வருமுன்னர் அல்லது வயதுக்கு வந்த உடனேயே, கோவில்களுக்கு அர்ப்பணித்து விடுவதாகும். தேவருக்கு (கடவுளுக்கு) ஊழியம் செய்பவள் என்ற பெயர் இக்காரண அடிப்படையிலேயே உருவானது. இப்படி அர்ப்பணிப்பதை தமிழகத்தில் 'பொட்டு கட்டி விடுவது' என்பார்கள். கோவிலுக்கு காளையை நேர்ந்து விடுவது மாதிரித்தான் இதுவும்.

இப்பெண்கள் பெரும்பாலும் தேவதாசி குடும்பத்திலிருந்துதான் கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். அரிதாகவே இக்குலத்துக்கு வெளியே இருந்து பெண்கள் நேர்ந்து விடப்பட்டார்கள். தேவதாசி மரபினர் இக்கோவில்களில் இருந்து சம்பளம், படிகள், உணவுப் பொருட்கள், வசிப்பிடம், காணி எனப் பல பொருளாதார ரீதியான பலன்களைப் பெற்று வந்தனர். இது தொடர வேண்டுமானால் அவர்கள் தமது குடும்பங்களில் இருந்து தொடர்ச்சியாக பெண்களைக் கோவில்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். எனவே தாம் வளர்க்கும் தத்துப் பிள்ளைகளை பொட்டு கட்டி கோவில் சேவகத்துக்கு அனுப்பி வந்தனர். இது அக்குடும்பங்களுக்கான வருமானத்தைத் தடையின்றி கிடைக்க வழி செய்தது.

இத்தேவதாசிகள் தம்மை தாசிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. தாசிகளில் இருந்து வேறுபட்ட சமூகத்தவர் என்பதையே விடாப்பிடியாகக் கூறி வந்தனர். தந்தை பெயர் தெரியாமல் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை தத்துப் பிள்ளைகளாகவே வளர்த்தனர்.
இத்தேவதாசிகள், தமது குரல் வளம், நாட்டியத்திறன், சங்கீத ஞானம், உடல்வாகு என்பனவற்றைப் பயன்படுத்தி, ஊரில் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பணக்காரர்களின் ஆசை நாயகிகளாக விளங்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். அக்காலத்து பெரிய மனிதர்களும் தேவதாசிகளை தமது வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்வதை கௌரவமாகவே கருதினார்கள். மேலும் தேவதாசிகளை ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்வதை அவர்களது மனைவிமாரும் எதிர்க்கவில்லை. கணவனை எதிர்ப்பது அன்றைக்கு சம்பிரதாயம் அல்ல. அன்றைக்கு அப்படி ஒரு ஆணாதிக்கம் நிலவி வந்தது. மேலும், தேவதாசி ஒரு போதும் மனைவி அந்தஸ்தைக் கோரமாட்டார் என்பதையும் ஆசை நாயகியாக இருந்து பணம், பொருள் பெறுவதோடு அவளது 'இடையூறு' நின்று விடும் என்பதையும் மனைவிமார் புரிந்து வைத்திருந்தனர். கடந்த இதழில் பார்த்த நீதிபதி நரஹாரிராவின் மனைவியும் இந்தப் புரிதலுடன்தான் நாகரத்தினம் அம்மாளோடு பழகி வந்தாள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

1862 முதல் 1889 வரையிலான கால கட்டத்தில் தேவதாசிகள் தொடர்பான வழக்குகளில், தேவதாசிகளை விபசாரிகளில் இருந்து வேறுபடுத்தி அவர்கள் ஒரு தனிப்பட்ட குழுவினர் என்பதாக சென்னை நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியிருந்தது. நடத்தை கெட்ட பெண்கள் தேவதாசிகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை. தேவதாசிகள் மற்றும் விபசாரிகள் ஆகிய இருபாலாரையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவது தொடர்பாக சட்ட குழப்பங்கள் நீடித்த போதும், நீதிமன்றங்களும் அரசாங்கமும் தேவதாசிகளை ஒருபோதும் சாதாரண விலைமாதுகளாகக் கருதியதில்லை. இதற்குக் காரணம், நீண்ட காலமாகவே தேவரடியாள் முறை தென்னிந்திய சமூக மரபில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்ததும் அரசு இதை தவறானதும் தண்டனைக்குரியதாகவும் பார்க்காததுமாகும். அன்றைய சமூக வாழ்வின் இயல்பான விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்ததாலும் சாதீய கட்டமைப்பு மிக வலுவாக இருந்த அந்தக் காலகட்டத்தில் செல்வந்தர்களும், உயர் அதிகாரிகளும், உயர் சாதியினரும் தேவதாசிகள் என்ற வசதியை நன்கு பயன்படுத்தி வந்தனர். உயர் குடியினருக்கு அது ஒரு கௌரவமான விஷயம். அவர்களுக்கான விசேஷ அந்தஸ்து என்றும் அவர்கள் கருதினர். இதனால்தான், தேவதாசி முறை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானபோதெல்லாம், இந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தேவதாசி விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து விட்டார்கள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெரு முயற்சியின் விளைவாகவே தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. எனினும் இந்த தேவதாசி முறை மிகப் பழமையானது. சங்க காலத்தில் விலை மகளிர் முறை தமிழகத்தில் காணப்பட்டது. இத்தனை நீண்ட பாரம்பரியம் கொண்ட தேவதாசி முறையை ஒழித்துக்கட்டப் பாடுபட்ட முத்துலட்சுமி, 1926 இல் சென்னை சட்ட மன்றத்தில் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், இந்தியாவிலேயே முதல் பெண் சட்டசபை அங்கத்தவர் என்ற பெருமை பெற்றார். இவர் ஒரு மருத்துவர். வெளிநாடுகளில் பயின்று தன் மருத்துவ அறிவை சேவையாகக் கருதி பணியாற்றிய சமூக சீர்திருத்தவாதி. இன்னும் ஆழமாகப் போனால் அவர் ஒரு தேவதாசியின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் தேவதாசி முறையில் உள்ள வேதனைகளை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இந்து சமய கலாசாரத்தில் பல கொடிய, சமூக விரோத மற்றும் காலத்துக்கு ஒவ்வாத சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தன. அவற்றை ஆங்கிலக் கல்வி கற்று வந்த புதிய சிந்தனையாளர்கள் எதிர்த்தார்கள். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்திஜி, அம்பேத்கர், ராஜா ராஜ்மோகன் ராய் என்று பலர் தோன்றி சீர்திருத்தங்களுக்காகப் போராடினார்கள். இவர்களைவிட மூத்த சிந்தனையாளர் என்று கௌதம புத்தரைச் சொல்லலாம்.

இவர்களில் ராஜா ராஜ்மோகன் ராய், 1772 - 1833 காலப் பகுதியில் வாழ்ந்தவர். ஆங்கிலக் கல்வி கற்ற அவர், அக்காலத்தில் இந்தியாவெங்கும் நிலவிய விதவைப் பெண்கள் தங்களைத்தாமே எரித்துக் கொள்ளும் உடன்கட்டையை எதிர்த்தார். கணவனை இழந்த மனைவி, கணவனின் சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்வது அன்று வழமையில் இருந்து வந்த கொடூரமான பழக்கமாகும். இப்படி கணவனுடன் தானும் அதே சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்வது அன்று வழமையில் இருந்து வந்த கொடூரமான பழக்கமாகும். இப்படி கணவனுடன் தானும் அதே சிதையில் பாய்ந்து மாய்த்துக் கொள்வதன் மூலம் கணவருடன் தானும் சேர்ந்தே சுவர்க்கம் புக முடியும் என அந்த அப்பாவி விதவைகள் நம்பினார்கள். எரியும் நெருப்பில் புகுந்து தன்னை மாய்த்துக் கொள்வதற்கு எந்தவொரு விதவையாவது தயங்கினாலோ அல்லது மறுத்தாலோ, அவளது வீட்டார் பலாத்காரமாக அவளை சிதைக்குள் தள்ளிவிட்டனர். தென்னாட்டை விட வடநாட்டில் இக்கொடுமை பரவலாக இடம்பெற்று வந்தது. தென்னகத்தில் உடன்கட்டை என அழைக்கப்பட்ட இவ்வழக்கம் வடக்கில் சதி என அறியப்பட்டது.

சதி வழக்கத்தை எதிர்த்து இரண்டு நூல்களை எழுதிய இவர், இதை ஒழிக்க பாடுபட்டார். வைதீக இந்துக்கள் இவரைக் கடுமையாக எதிர்த்தனர். சமயத்தின் புனித கடமைகளை நிந்திப்பதாக சாடினார். கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுடன் ஒன்றிணைந்து இந்து மதத்தை ஒழிக்க சதி செய்வதாக தூற்றப்பட்டார். ஆனால் ராம்மோகன் ராய் விட்டுக்கொடுக்காமல், சதியை சட்ட ரீதியாக ஒழித்துக்கட்ட போராடினார். இதற்கு எதிராக வைதீக இந்துக்களினால் தொடுக்கப்பட்ட வழக்கை அக்காலத்தில் அதி உச்ச நீதிமன்றமாக விளங்கிய லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று வாதாடி, தீர்ப்பை தனக்கு சாதகமாக முடித்தார் ராஜா ராம்மோகன்ராய்.

இத்தனை போராட்டங்களின் பின்னரேயே உடன்கட்டை ஏறல் என்பது இந்தியாவில் முற்றாகத் தடை செய்யப்பட்டது.

இந்த பின்னணியில்தான் தேவதாசி முறையையும் பார்க்க வேண்டும். தேவதாசி மற்றும் பரத்தையர் சமூகம் என்பது தமிழகத்தில் சங்க காலத்துக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கம் இந்தியாவுக்கு சுமேரியாவில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. கி.மு. 3500க்கு முன்னர் சுமேரியர்களிடம் இந்த வழக்கம் இருந்ததாம். அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. இவர்கள் கோவில்களில் பணிவிடை செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்பெண்களுக்கு அந்நாட்டு அரசரின் மகளே தலைவியாக இருப்பாள். அவளை 'பதேசி' என்று அழைப்பார்கள். இச்சுமேரிய வழக்கம், கி.மு. ஆயிரத்து தொள்ளாயிரத்தில் இந்திய வேதப் பண்பாட்டு அம்சமாகக் கலந்திருக்க வேண்டும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எகிப்திய நாகரிகத்திலும் பெண்கள் கோவில் பூசகர்களாக விளங்கியிருக்கின்றனர். ஆனால் இந்திய வேத பண்பாட்டின் கீழ் பெண்களின் பங்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், அர்ச்சகர்களாக அவர்களால் விளங்க முடியவில்லை. எனினும் தேவ சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவரடியார்களாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் எனக் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுந்த போது, பெங்களுரு நாகரத்தினம்மா தலைமையிலான தேவதாசிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கம் தமது நிலைப்பாடுகளை அறிக்கைகளாக முன்னிறுத்தினர். 'வேசி' என தாம் அழைக்கப்படுவதை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்தனர். தேவரடியாருக்கும் பொதுமக்களிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

தாம் இந்துப் பண்பாட்டின் ஒரு பகுதி என்றும் தேவதாசி குலம் இந்துப் பண்பாட்டின் உருவாக்கம் எனவும் அவர்கள் வாதிட்டனர். கோவில்களில் இறை சேவையாற்றுவதற்காக, மனைவாழ்க்கையைத் துறந்து கடவுள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களை பொது மகளிர் என கேவலப்படுத்துவது தவறானது என்று அவர்கள் சுட்டிக் காட்டினர். இவர்களுக்கு ஏராளமான சென்னை மாகாண கோவில் தர்மகர்த்தாக்கள், பெரிய மனிதர்கள், காங்கிரஸ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட செல்வாக்கான மனிதர்கள் ஆதரவு அளித்தனர்.

1920களில் சென்னை அரசாங்க சட்ட உறுப்பினராக விளங்கிய சர். சி.பி. ராமஸ்வாமி ஐயர், காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி உட்பட பிரபலமான மனிதர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என்றே விரும்பினர். கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகிய கலைகளை பாதுகாக்கவும் வளர்க்கவும் தேவதாசிகளின் சேவை அவசியம் என அவர்கள் கருதினர். தேவதாசிகளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்பவர்களைப் பொறுத்தவரை அவ்வாறான தேவதாசியருக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே தேவதாசி வழக்கத்தை தகர்ப்பது சுலபமான காரியமாக இருக்கவில்லை.

(தொடரும்....)

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09

'யாதும்' என்ற கோம்பை அன்வரின் அற்புத ஆவணப்படம்


அருள் சத்தியநாதன்

மாநாட்டின் முதல் நாள் திறைவடைவதற்கு முன்னர் அரங்கில் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதற்கு முன்னர் மாலைப் பொழுதில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது நண்பர் சாத்தான்குளம் ஜப்பார் என்னிடம் வந்து உரையாடினார். அவர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர். அழுத்தமான கருத்துகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தக்கூடிய இவர், ஒரு நல்ல மனிதர். இஸ்லாமிய பண்புகளுக்கமைய வாழ்பவர். எழும்பூர் மதுரா டிரவல்ஸ் அதிபர் வி.கே.டி. பாலனின் சகா. அவரது இணைய வானொலியை ஜப்பார் நடத்தி வருகிறார். பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்கு சொத்துகளையும் கொடுத்து வாழ்வளிக்கும் சிறந்த பண்பைக் கொண்டவர். நான் கண்ட சிறந்த மனிதர்களில் ஜப்பாரும் ஒருவர்.
"இன்று இரவு எங்கும் ஓடி விடாதீர். இன்றைக்கு ஒரு ஆவணப்படத்தை திரையிடுகிறேன். நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று என்னிடம் ஜப்பார் சொல்லிவிட்டுப் போனார். குறும் படம், ஆவணப்படம் என்றால் நான் விரும்பிப் பார்ப்பேன். எனினும், இஸ்லாமிய மாநாட்டில் ஆவணப்படம் என்றதும் ஹஜ் யாத்திரை போன்ற வழமையான விஷயங்கள் தொடர்பான ஆவணப்படமாக இருக்கும் என்று நினைத்தேன், மறந்து போனேன், அது ஜப்பாரினால் சொல்லப்பட்டிருந்தும்கூட!

இரவில் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் முடிவுற்ற நிலையில் கூட்டமும் கலைந்து கொண்டிருந்தது. அவசர அவசரமாக மேடையேறிய ஜப்பார், 'யாதும்' என்ற பெயர் கொண்ட கோம்பை எஸ்.அன்வரின் ஆவணப்படத்தை திரையிட இருப்பதாகவும் அதைப் பார்க்கும் படியும் கேட்டுக் கொண்டார். எனினும் அப்படத்தைப் பார்க்க திரும்பி வந்து அமர்ந்தவர்கள் சொற்பம் தான். கண்ணாடி அணிந்த ஒரு இளைஞரை மேடையேற்றி இவர்தான் கோம்பை எஸ்.அன்வர் என அறிமுகம் செய்து படத்தை தொடக்கப் போகிறோம் என்றார் ஜப்பார். ஜப்பார் மேடையில் பேச, சபையோர் தம்பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க ஒரு ஏனோ தானோ சூழ்நிலையே அங்கே நிலவியது.
ஒரு வழியாக படம் ஆரம்பமானது. படம் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஓடியிருக்கும். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரம் போனதே தெரியவில்லை. முடிந்தபோது, ஐயோ முடிந்து விட்டதே, இன்னும் கொஞ்சம் நீண்டியிருக்கலாமே என்ற ஆயாசமே என்னிலும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலங்கை நீர்வழங்கல் வடிகால் சபையைச் சேர்ந்த நீர்வளப் பொறியியலாளர் இஸ்மாயிலுக்கும் தோன்றியது. ஏனெனில் அது ஒரு அற்புதமான ஆவணப்படம். புதிய தகவல்களை எங்கள் உள்ளங்களில் அள்ளிக் கொட்டியது. ஒரு தகவல் களஞ்சியத்துக்குள் போய்வந்த உணர்வை அது எமக்கு அளித்தது. அன்றிரவு அந்த ஆவணப் படத்தைப் பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள் என்றால் அது ஒரு தனியான இனம். எந்த நாட்டில் அந்தச் சமூகம் வாழ்கிறதோ அந்த நாட்டின் ஏனைய சமூகங்களோடு ஒட்டாத தாமரையிலைத் தண்ணீர் மாதிரியான இனம் அது என்பதே வேற்று சமூகத்தினரின் பொதுப் புத்தி பார்வையாக இருக்கிறது.

முஸ்லிம் அல்லாதோர் பார்வை இப்படி இருந்தால், இஸ்லாமியர்களில் பலரும், முஸ்லிம் எனப்படுவோர் தனித்துவமான, உயர்வான ஒரு இனம். ஏனையோரை விட உயர்ந்த சமூகம், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட சமுகமாகும் எங்களுடையது என்பதான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

மத ரீதியாக எல்லா சமூகங்களும் தம்மை மட்டுமே உயர்வாகக் கருதுவதும் ஏனைய சமூகத்தினரை வெறும் 'பேயர்' களாகப் பார்ப்பதும் ஒரு விடாப் பிடியான சமூக நோயாகவே இருந்து வருகிறது. இதே சமயம் எல்லாச் சமூகங்களிலும்  'எல்லா மதங்களும் ஒன்றுதான். அவரவர் மதம் அவரவருக்கு. மத நம்பிக்கையில் தீவிரவாதம் கூடாது. ஏனெனில் எல்லா மதங்களுமே அடிப்படையில் ஒரே மாதிரியான வாழ்வியல் அறங்களையே சொல்லி வருகின்றன. இதில் குரோத பார்வைக்கே இடமில்லை. அவரவர் மதங்களை அனுஷ்டிக்க இடம் விட்டு மனிதர்கள் என்ற அளவில், அந்தத்தளத்தில், அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதும் அர்த்த புஷ்டியானதுமான அணுகுமுறையாக இருக்கும்' என்ற மனப்பான்மை கொண்டவர்கள் கணிசமான அளவில் இருக்கவே செய்கிறார்கள். இப்படி நினைப்பவர்களில் பலர் வெகு சாதாரண மனிதர்களாக பரவிக் கிடக்கிறார்கள். இதனால்தான் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீவிரவாத கருத்துகளும் நடவடிக்கைகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகின்றபோதிலும், தீவிரவாதிகள் எதிர்பார்க்கின்ற வகையில் மதமோதல்கள் பற்றி எரிவதில்லை.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கிளப்பி விடப்படுகின்ற கருத்துகள். மிகத் தீவிரம் கொண்டவையாக இருந்தாலும் அதே தீவிரத்தன்மையுடன் அது பற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் அவசியத்தை அறிந்து வைத்திருப்போர் சாதாரண மக்களாக இருப்பதே.

மதத் துவேஷத்தை சமூக மட்டத்தில் குறைப்பதற்கு, மதங்களின் இயல்பான தன்மைகளைத் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். இச்சமூகங்கள் தேசிய மட்டத்தில் எவ்வாறெல்லாம் ஊடுபாவி, தேசிய - சமூக ஸ்திரத்துக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். இவ்வாறான அறிவுறுத்தல்களும், வெளிப்படுத்தல்களும் மதம் சார்ந்த சமூகங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தால் தான் வெளியில் இருந்து வரக்கூடிய மதக்குரோத சக்திகள் வலுவிழந்து போக முடியும்.

இதைத்தான் கோம்பை அன்வர் 'யாதும்' என்ற தனது ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
விநாயக சதுர்த்தி ஆரம்பமாகி விட்டது என்றால் தமிழகம், குறிப்பாகச் சென்னை, பதற்றம் கண்டு விடும்.  பொலிஸ் படை குவிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு யார் யாரெல்லாம் எந்தெந்த வீதிகள் வழியாக பிள்ளையார் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்பதை பொலிசாரே தீர்மானிக்கின்றனர். மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை வைக்க, எந்தத் தெரு வழியாக ஊர்வலம் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்க இந்த முஸ்லிம்கள் யார்? என இந்துக்கள் சினம் கொள்ள...
சென்னைக்கு இது வருடா வருடம் பெய்து போகும். கோடை மழைதான்.

நாங்கள் தூக்கிப் பிடிப்பதே சரி என எண்ணிக் கொண்டிருப்போருக்கு அப்படி அல்ல என்பதை அழுத்தமாக கோம்பை அன்வர் தன் 'யாது'மில் சொல்லி இருக்கிறார். தீவிரவாத இந்து சிந்தனைக்கு மட்டுமல்ல, தீவிரவாத இஸ்லாமிய கருத்துக்களுக்கும் அவர் 'யாது'மில் வேட்டு வைக்கிறார்.

எளிமையாகச் சொல்வதானால், எனது கொள்கை, எனது நம்பிக்கை என்பது விஜய் ரசிகர், தல ரசிகர், சூர்யா ரசிகர் என்பது வரை வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இரு நண்பர்கள் ஹோட்டலுக்குச் சென்று ஒருவர் மாமிசம் கலந்த உணவையும் மற்றவர் தனிச் சைவ உணவையும் வாங்கி ஒரே மேசையில் எதிரும் புதிருமாக அமர்ந்து சாப்பிட்டு கிளம்பிச் செல்கிறார்கள். கோழிக் கறி எடுத்தவன் ஒருபோதும் இதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார் என்று சைவ உணவுக்காரனிடம் நீட்டப் போவதில்லை. செத்துப்போன உடலை இவன் மிருகம் மாதிரி தின்கிறானே என நினைத்து சைவ உணவுக்காரன் முகம் சுளிக்கப் போவதில்லை. இது இயல்பு வாழ்க்கை.

இந்த எளிய உண்மை சாதாரண மக்களுக்குப் புரிகிறது. எனினும் இந்த உண்மை புரிந்திருந்தாலும் விஷ வித்துக்களை விதைத்து அறுவடை செய்ய நினைப்பவர்கள் அதைச் செய்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் தான் நமது எல்லைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தார்கள், அவர்கள் சுதேச மக்களுடன் எவ்வளவு நெருக்கமாக அண்ணன் தம்பி உறவுடன் பழகினார்கள், இந்து - முஸ்லிம் உறவு எவ்வளவு நெருக்கமானது, இயல்பானது என்பதை சாட்சிகளுடன் நிறுவும் படமே யாதும்.

நறுமண பொருள் வணிகம் என்பது 2,500 வருடங்கள் பழமையானது. இலங்கை, இந்திய நாடுகளை, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய தீபகற்ப நாடுகளுடன் இணைந்தது இந்த நறுமண பொருள் வர்த்தகமே. இதில் உள்ள இலாபத்தை உணர்ந்து கொண்டதாலேயே 16 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய நாடுகள் இப்பாரம்பரிய வர்த்தகத்தை முறித்து தமது ஆதிக்கத்தின் கீழ் இதைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன. இது, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றுவதில் முடிவடைந்தது. இது நமக்குத் தெரிந்த வரலாறு.

அராபியர்களின் இந்த நறுமணப் பொருள் வணிகத்தின் வாயிலாகவே இஸ்லாம் மேற்கு ஆசியாவில் பரவியது. அப்படியே தமிகழத்திலும் வேருன்றியது. இந்த வேர்களை நோக்கிய அன்வரின் பயணமே இந்த ஆவணப்படம். இஸ்லாத்தின் வருகையால் தமிழகத்தில் உருவான தமிழ் முஸ்லிம் சமூகத்தின் தொன்மையையும், இரு சமயத்தவர் மத்தியில் நிலவிய கொடுக்கல் - வாங்கல்களையும், அகழ்வாராய்ச்சி, வரலாற்று ஆய்வாளர்களின் பேட்டிகள் தமிழ் இஸ்லாமிய இலக்கியம், கலாசாரம் என்பனவற்றின் ஊடாகப் பயணிப்பதன் மூலம் நிறுவியிருக்கிறது இந்த ஆவணப்படம்.

தனியொரு மனிதராக இவ்வளவு சிரமமான காரியத்தை சிறப்பாக முடிக்க முடிந்திருப்பது, கோம்பையின் விடா முயற்சி மற்றும் கொள்கை உறுதி என்பனவற்றையே வெளிப்படுத்துகிறது. இந்த ஆவணப்படம் ஒரு முடிவு அல்ல, இன்னும் விரிவாக ஆய்வு செய்து இத்தேடலை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் கோம்பை. போதிய நிதியைத் தேடி அதையும் செய்து முடிப்பேன் என்கிறார்.

கோம்பை, அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர். பார்க்க அமைதியான, முகத்தில் எந்தப் பெருமிதத்தையும் காட்டாதவராக, இந்தப் புகழுக்கும் பெருமைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர் மாதிரி தோற்றமளிக்கிறார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏ. ஆர். ரஹ்மான்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லிவிட்டுப் போகிறவர். கோம்பை அப்படிக் கூடச் சொல்லவில்லை. வெறும் களைப்பான ஒரு புன்னகை மட்டும்தான்.

இவரை நம்மூரில் சிலருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அரைகுறை பிரசவங்களை நிகழ்த்திவிட்டு, முட்டையிட்ட கோழிபோல கொக்கரிப்பவர்கள் ஞாபகத்துக்கு வரவே செய்தார்கள்!

(தொடரும்)

Saturday, November 8, 2014

இருள் உலகக் கதைகள் திலக்கராஜா பூசாரி சொன்ன பேய்க் கதை
 
கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பேச்சியம்மன் கோவில் வளாகம் மாலை மங்கிவரும் ஒரு அந்தி வேளையில்... ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. கோட்டானின் அலறல் சத்தத்தைத் தவிர அந்த பகுதியில் வேறு ஓசையே இல்லை.

'ஆட்கள் வருவதற்கு முன்னமே குளத்தில் இறங்கி குளிக்க வேணும்' என்ற அவசரத்தில் திவ்யா பேச்சியம்மன் கோவிலை அண்டியுள்ள குளத்தை நோக்கி வேகமெடுத்தாள். நிலத்தில் உதிர்ந்து காய்ந்து கிடந்த மாமரத்து இலை சருகுகள் திவ்யாவின் காலில் பட்டு சரசரவென ஓசை எழுப்பி அந்த நிசப்தமான சூழலை சிதைத்தது.

ஆள் அரவமற்ற குளம் திவ்யாவை வரவேற்க 'அப்பாடா ஒருத்தரும் இல்லை' என்ற நிம்மதி பெருமூச்சுடன் ஆடைகளை களைந்த திவ்யா பாவாடையை மார்பு வரை உயர்த்திக் கட்டினாள். குளத்திற்குள் இறங்கினாள். சில்லென்ற அந்த குளிர் காற்று உடம்பிற்கு இதமாகத்தானே இருக்கும்... மூச்சை பிடித்து தண்ணீருக்குள் மூழ்கினாள். சிறிது நேரத்திற்குள் திவ்யாவிற்கு மூச்சு முட்ட மீண்டும் மேலெழுந்தாள். தலைமயிரில் தங்கியிருந்த நீர் திவ்யாவின் முகத்தில் வழிந்தோடின. கண்களை மறைத்திருந்த நீர் முழுவதும் வடிந்ததும் குளத்திற்கு எதிரே உள்ள பற்றைக்காடு பளிச்சென்று கண்களில் பட்டது... அப்போதுதான் திவ்யாவிற்கு தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்ற எச்சரிக்கை உணர்வு துளிர் விட்டது. 'இது சும்மா பிரம்மை' என்று மனதை ஆறுதல் படுத்தியவள் மீண்டும் குளத்தில் மூழ்கினாள். நீருக்குள் மூழ்கினாலும் திவ்யாவின் உள்ளுணர்வு அவளுக்கு ஏதோ ஒரு ஆபத்து காத்திருப்பதாக எச்சரித்தது. மனசு படபடக்க நீர் மட்டத்திற்கு மேலே தலையை திவ்யா தூக்கியபோது அவள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'வீல்' என கத்தினாள். அந்த பற்றைக் காட்டின் மத்தியில் முகம் எரிந்தது போன்ற ஒரு கோர முகம் கொண்ட ஒரு பெண் அமர்ந்திருப்பதை திவ்யா கண்டு உடல் நடுங்கிப்போன சில நிமிடங்களில் அந்த உருவம் படீரெனக் காணாமல் போனது.

இனியும் இங்கே இருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்த திவ்யா, துணியை சுருட்டி எடுத்தவள் நீர் சொட்ட சொட்ட வீடு நோக்கி ஓடினாள். அவள் அப்படி ஓடி வருவதை வழியில் கண்ட வாலிபர்கள் ஊ....ஊ... என்று சத்தம் போட்டு சிரித்தார்கள்.

வீட்டுக்கு வந்த திவ்யா, சுவாமி படத்திற்கு முன்னே சென்று தொட்டுக் கும்பிட்டு விபூதியையும் பூசிக் கொண்டாள். நடந்த விசயத்தை வீட்டில் சொன்னால் அம்மா திட்டுவா என்ற பயத்தில் சொல்லாமலே விட்டு விட்டாள்.

பதினாறு வயது நிரம்பிய திவ்யா ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்டவள். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு எல்லோரையும் எதிர்த்து கேள்வி கேட்கத் தொடங்கினாள். சில நேரங்களில் மயக்கம் போட்டு கீழே விழுந்தும் விடுவாள். நித்திரையில் இருக்கும்போது 'அய்யோ உடம்பு எரியுதே' னு கதறி கூப்பாடு போட்டிருக்கிறாள்.

தமது மகளை ஏதோ ஒரு ஆவி பீடித்திருக்க வேண்டும் என்று நினைத்த திவ்யாவின் அம்மா மட்டக்களப்பு மாந்திரீகரிடம் திவ்யாவை அழைத்துச் சென்றிருக்கிறார்.... அந்த மாந்திரீகரின் மந்திர தந்திரங்களாலும் திவ்யாவை குணப்படுத்த முடியாமல் போக சில மாதங்களின் பின் திவ்யாவின் தாயார் திலக்கராஜா பூசாரியை தேடி வந்திருக்கிறார். தமது மகளின் நிலையை எடுத்துச் சொல்லி கண்ணீர் விட்டாள்.

இந்த திவ்யா விஷயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட திலக்கராஜா பூசாரி, தமது உதவி ஆட்களோடு மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டிருக்கிறார்.

வாழைச்சேனை பேச்சியம்மாள் கோவிலை கடக்கும் போது அந்த கோவிலில் ஒரு உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அங்கே சாமியாடிக் கொண்டிருந்த மாந்திரீகர்கள் தங்களின் நெற்றியில் கத்தியால் கீறி ரத்தத்தை எடுத்து பூமியில் கோடு போட, அடுத்த நிமிசமே அங்கே தீய சக்திகளின் பிடியில் இருந்த சிலர் சுருண்டு வீழ்ந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் திலக்கராஜா பூசாரிக்கு உடல் வெல வெலத்துப்போய் விட்டதாம். "நம்மை விட பெரிய சித்து விளையாட்டு மாந்திரீகர்கள் இந்த ஊரிலேயே இருக்கிறார்களே பிறகு ஏன் திவ்யாவை விழுங்கியிருக்கும் அந்த தீய சக்தியை ஒண்ணும் பண்ண முடியாமல் இருக்கு" என்று திலக்கராஜா நினைத்து பெருமூச்சு விட்ட அடுத்த நிமிசமே அங்கே வந்த ஒரு மாந்திரீகர் 'எங்களுக்கு முடியாததை நீ பண்ணலாம்னு நினைக்கிறியா? போ! போய் செய்து பாரு!' என்று அவர் சொல்ல, திலக்கராஜா உடல் சிலிர்த்து போனார். ஆனாலும் அவர் தைரியத்தை விடவில்லை. 'ஆட்டத்திற்கு வந்துட்டோம் வாழ்வா, சாவாண்ணு ஆடி பார்த்திடுவோம்' என்று மனதை திடப்படுத்தியவர் திவ்யாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.
திலக்கராஜா அந்த வீட்டுக்குள் காலடி வைத்தபோது அந்த ஊரின் தெருக்கோடியில் யாரோ கெக்கல் போட்டு சிரிக்கும் சத்தம் அவருக்கு மட்டும் தெளிவாகக் கேட்டிருக்கிறது. அதை யாரிடமும் அவர் சொல்லவில்லை.

பரிகார பூஜை பொருட்கள் கொண்டுவரப்பட்டு அட்சர கோடும் வரையப்பட, திலக்கராஜா ஒரு பெரிய சாட்டையுடன் அதில் அமர்ந்து ருத்ர காளியை மனமுருகி வேண்டத் தொடங்கினார்.

அவர் மந்திரங்களை உச்சரிக்க, திவ்யா ஆடத் தொடங்கினாள். அந்த ஊரில் நிறைய சாமியார்கள் இருப்பதினால் இந்த சாமி என்னதான் செய்யப்போகுதாம்? என்பதை வேடிக்கை பார்க்கவென ஏளனத்தோடு பூசாரிகளும், ஊர்வாசிகளும் அங்கே வந்திருந்தார்கள். சில மணி நேரத்திலேயே திவ்யாவின் உடம்புக்குள் மூன்று பேய்கள் இருப்பதை பூசாரி உறுதி செய்தார்.

திவ்யாவிற்கு மூன்று வயதாக இருக்கும்போது அவளின் தந்தை வில்சன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் மீது கொள்ளைப் ப்ரியம் கொண்ட திவ்யா, தந்தையின் கல்லறைக்குச் சென்று அவருக்கு பிடித்த உணவுப் பொருட்களை வைத்து வழிபட்டு வருவதை வழமையாகக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் ஆவிகள் திவ்யாவின் உடம்பிற்குள் நுழைந்திருக்கின்றன. இதைப் புரிந்துகொண்ட பூசாரி ஆவிகளை வெளியே அழைத்தார். அவர் அழைக்கும்போது தூரத்தில் 'அய்யோ.... அய்யோ...' என்று யாரோ கூக்குரல் எழுப்புவது திலக்கராஜாவிற்கு கேட்டது. தான் ஒரு மரணப் போராட்டத்தில் இருப்பதையும் உயிரோடு விளையாடுவதையும் அவர் உணர்ந்து கொண்டதால் அவரின் உடல் ஜிலீர் என்று சில்லிட்டது. ஆனாலும், தமக்கு ருத்திரகாளியே துணை என்ற ஒரு மனதுடன் காரியத்தில் இறங்கினார்.

திவ்யாவின் உடம்பிலிருந்து முதலில் வெளியே வந்தது மீனாட்சியின் ஆவி. அவள் குடும்ப பிரச்சினையால் உடலில் தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்தவள். 'திவ்யாவின் உடம்புக்குள் ஏன் வந்தாய்' என்று பூசாரி காரணம் கேட்க, 'டேய் பூசாரி! ஏனென்றா கேட்கிறாய்? இவள் செய்தது நியாயமாடா... அவள் அப்பனுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு போடுறா! ஆனா, பக்கத்தில் பட்டினியாக் கிடக்கும் நமக்கும் கொஞ்சம் தர மாட்டாளா என்று ஏக்கமா காத்திருந்தேன்டா! இந்த மதர்ப்பு புடிச்சவ என்னை கண்டுக்கவே இல்லை. அதனால்தான் அவளை பழிதீர்க்க அவளோட உடம்பிற்குள் புகுந்தேன்' என்று மீனாட்சி ஆவி சொன்னது. பூசாரி அந்த ஆவியை தமது பிடிக்குள் கொண்டு வந்தார்.

அடுத்ததாக வெளியே வந்தது. திவ்யாவின் தந்தையின் ஆவி. அதாவது வில்சன்.

'என் மகளை ஒழுங்கா கவனிக்கிறாங்க இல்லை. வீதியால போனா பயல்கள் கிண்டல் பண்ணுறாங்க... ஒரு மாதிரியா நோட்டம் விடுகினம். அதனால் அவ பாதுகாப்புக்காத்தான் நான் உள்ளே வந்தேன், இப்போ அவளை என்னோட அழைச்சிட்டு போறதா முடிவு செய்திட்டேன்' என்று சொல்லியது தந்தை ஆவி.

'அப்படி சொல்லுடா வில்சா' என்று ஒரு ஆவி குறுக்கே வர அதை அதட்டி விசாரித்தார் பூசாரி. அது வில்சனின் தாயார் மேரியம்மாளாம்.

"என் பேத்திய நம்ளோட கூட்டிட்டுப் போயிடுவோம்" என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவின் அம்மாவுக்கும் அவளின் பாட்டிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வராமலா இருக்கும்?

"அடேய் நீ செத்தும் எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டியாடா பாவி" என்று திவ்யாவின் பாட்டி கத்த வில்சன் ஆவிக்கும் ஆத்திரம் வந்துவிட்டது.

'அடியேய்! உன்னால் தான்டி நான் செத்தேன். நீ என்னை உன் மகளோட வாழ விட்டியா? எங்க குடும்ப சண்டைக்கு நீ தானடி காரணம்' என்று போட்டுத்தாக்க வில்சனுக்கு உதவியாக அவனின் அம்மா மேரியம்மாவும் குரல் கொடுக்க இக்குடும்பச் சண்டை திலக்கராஜாவிற்கு போதும் போதும்மென்றாகி விட்டதாம்.

பிறகு ஒரு வழியாக பட்டினிகிடந்த மீனாட்சி ஆவியிடம் பேரம்பேசி அவளுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து அவளின் பசியை அடக்கி அவளை பிடித்து கட்டிய பூசாரி, மேரியம்மாவையும் சமாதானப்படுத்தி அவளுக்கு பிடித்த சுருட்டு, பீடியை கொடுத்து அவளையும் மடக்கினார். கடைசியாக பிடிபடாமல் பூச்சாண்டி காட்டியவர் வில்சன் மட்டுமே. 'தமது மகளுக்கு பாதுகாப்பு இல்லை வெளியே போக முடியாது' என்று முரண்டு பிடிக்க "இனி திவ்யாவிற்கு நான்தான் பாதுகாப்பு" என்று பூசாரி வாக்கு கொடுத்து வில்சனை வெளியேறிச் செல்ல வற்புறுத்தினார். ஒரு வழியாக வில்சனின் ஆவி வெளியேற சம்மதித்தது. 'உன்ன எப்படி நம்புவது நீ வெளியேறி விட்டாய் என்பதற்கு ஏதாவது அறிகுறி காட்டுவாயா?' என்று பூசாரி கேட்டார்.
'நான் இவள் உடலை விட்டு போகும்போது வீட்டு முற்றத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து பச்சை மட்டை முறிந்து விழும். அதுதான் சமிக்ஞை' என்றது ஆவி. உடனே பூசாரி

'நீ இங்குள்ளவர்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்திருக்கிறாய், அதனால் அந்த கஷ்டத்தை நீயும் உணர வேண்டும். அப்போதுதான் இனி நீ வேறு யார் உடம்பிலும் நுழைய மாட்டாய்' என்று கூறி ஐம்பது கிலோ எடையுள்ள ஒரு பாறாங்கல்லை திவ்யாவின் தலையில் தூக்கி வைத்து குளக்கரை நோக்கி நடக்கச் செய்தார். கல்லை சர்வசாதாரணமாக தூக்கிச் சென்ற திவ்யா கல்லை குளக்கரைக்குச் சென்று கீழே போட்டாள். அந்த நேரத்தில் திவ்யாவின் வீட்டுக்கு முன்னால் பச்சை மட்டை முறிந்துவிழ, வில்சனின் ஆவி வெளியேறிவிட்டது என்பதை பூசாரி உறுதிப்படுத்திக்கொண்டார். வெளியேறிய அந்த ஆவியையும் பிடித்து மாவினால் செய்து வைத்திருந்த உருபொம்மையில் இறக்கி மூன்று பேயையும் நீரில் கரைத்து சமாதி கட்டினார். இப்போது திவ்யா திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்வதாக பூசாரி கூறுகிறார்.

Thursday, November 6, 2014

பாதுக்கையில் இருந்து படாளம் வரை....

"விரலுடன் விரல் உரசாமல்தான் இட்லிகாரிக்கு காசு கொடுத்தோம்!"


மணி  ஸ்ரீகாந்தன்

சிறுவனாக இருந்தபோது ஐம்பதுகளின் முற்பகுதியில் தமிழகம் சென்று வந்த லெட்சுமணன் தன் அனுபவத்தை மணி ஸ்ரீகாந்தனுடன் பகிர்ந்து கொள்கிறார். லெட்சுமணனுக்கு இப்போது 75 வயது.

தென்னிந்தியாவின் இராமநாதபுர மாவட்டம், தஞ்சை, திருச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்தே பெருவாரியான தமிழ் மற்றும் மலையாள, தெலுங்கர்களான தொழிலாளர்கள் இலங்கைத் தோட்டங்களை நாடி வந்தனர். பெரும்பாலானோர் கங்காணிமாரின் பசப்பு வார்த்தைகளை நம்பி வந்து ஏமாந்தவர்கள்தான். ஆனாலும், தங்குமிடம், மானிய விலைக்கு உணவு, மருத்துவ வசதி, சம்பளமாக பணம் என்பன வழங்கப்படும் என்று கூறப்பட்டதை ஓரளவுக்கேனும் இலங்கைத் தோட்ட உரிமையாளர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். முதலில் வாழ்க்கை மிகக் கடுமையாக, பரதேசி படத்தில் வந்த காட்சிகள் மாதிரி, இருந்தாலும் பின்னர் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை பழகிப்போனது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முடியும் வரை தமிழகக் கிராமங்களுக்கு திரும்பிப் போவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் பெருவாரியான தமிழ்த் தொழிலாளர்கள் திரும்பிச் செல்லவில்லை. காரணம், இந்திய கிராம வாழ்க்கையைவிட, இங்கே கஷ்ட நஷ்டங்களுடன் கூடிய வாழ்க்கை அவர்களுக்கு 'பரவாயில்லை' என்று தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில், 1915 ஆம் ஆண்டின் பின்னர்தான் பெருமளவிலான தொழிலாளர்கள் இலங்கைக்கு படையெடுத்து வந்திருக்கிறார்கள். விஷயம் தெரியாமலா அவர்கள் இங்கே வந்திருக்க முடியும்? அது பத்திரிகை, தொலைபேசி, தபால், தந்தி, ரயில் எல்லாம் வந்துவிட்ட காலம்!

இருந்தாலும் கொஞ்சம் வசதியான தமிழ்க் குடும்பங்கள் ரயில், கப்பல் மூலம் தமிழகம் சென்று தம் கிராமங்களையும் உறவுகளையும் பார்த்து வந்தார்கள். இவர்கள் தொகை சொற்பமானதுதான். அப்படிப் பார்த்து விட்டு வந்தவர்கள் இங்கே வந்து சொன்ன கதைகள் படு சுவாரசியமானவை!

புளத்சிங்கள, ஹல்வத்துறையில் வசிக்கும் சுப்ராயன் லெட்சுமணனுக்கு தற்போது 75 வயதாகிறது. ஐம்பதுகளில் மன்னாருக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த ராமானுஜம் பயணிகள் கப்பல் மூலமாக தமிழகத்திற்கு சென்று வந்திருக்கிறார் இவர்.

"அப்போ எனக்கு பத்து வயதிருக்கும். எங்க அண்ணனுக்கு பதினைந்து வயது. எங்கம்மா சின்னக்கண்ணு எங்கள் ரெண்டு பேரையும் இந்தியாவிற்கு அழைச்சிட்டு போனாங்க. பாதுக்கை ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்கினோம். பாதுக்கையிலிருந்து படாளம் (செங்கல்பட்டு பக்கமான ஒரு கிராமம்) வரை பயணிக்க இங்கேயே டிக்கட் வாங்கும் வசதி வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது. டிக்கட் கட்டணம் ஒருவருக்கு ஒன்பது ரூபாதான்! அந்த டிக்கட்டை பயன்படுத்தி கொழும்பிலிருந்து மன்னாருக்கு ரயில் பயணம் செய்து அதன் பிறகு கப்பல் ஏறினோம். ராமேஸ்வரத்திலிருந்து சொந்த ஊருக்கு ரயிலில் பயணித்தோம். எல்லாம் ஒன்பது ரூபா டிக்கட்டில் என்றால் நம்புவீர்களா? என்று தமது இனிக்கும் ஞாபகங்களை லெட்சுமணன் அசைபோடுகிறார்.

"இப்போ மாதிரி அந்தக் காலத்து பயணங்கள் சொகுசாக இருக்கவில்லை. கொழும்பிலிருந்து கரி கோச்சியில் மன்னாருக்கு போறதே ரொம்ப கஷ்டம். வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு நம்ம சொந்த ஊருக்கு போய் சேரும்போது சட்டை கறுப்பாக மாறிவிடும். அந்தளவுக்கு சிரமமான பயணம். ராமானுஜம் கப்பலில் அடித்தளத்தில்தான் நாம் உட்கார முடியும். டீக்கடை பெஞ்சு மாதிரி அடிச்சு போட்டிருந்தாங்க. அதோட நாங்க கொண்டு போற பெட்டி படுக்கை எல்லாம் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாம் விரும்பினா அதிலேயும் ஏறி உட்கார்ந்துக்கிட்டே போகலாம். நம்ம ஆளுங்க கூட்டம் கூட்டமாக அமர்ந்து கதை பேசிக்கிட்டே வந்தாங்க. கப்பல் குலுக்கி எடுக்கும்.

அந்தக் கப்பலின் ஜன்னல்களுக்கு கண்ணாடி கிடையாது. அதனால் உப்புக்காற்று சில்லென்று உள்ளே வந்தது. லயத்தில் ஓடித்திரிந்து விளையாடிய எனக்கும் என் அண்ணனுக்கும் அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. சில பெருசுகள் வெற்றிலையை மென்று கப்பலின் பலகை சுவர்களில் துப்பி வைத்திருந்தார்கள். அதனால் அந்தக் கப்பலின் சுவர்களில் வெற்றிலைக் கறை அப்பிக் கிடந்தது. பிறகு நீண்ட நேர பயணத்தின் பின்பு தனுஷ்கோடியில் இறங்கி நடந்தோம். அது ஒரு பொட்டல்காடு. மணல் தரையில் காலை வைத்தால் சூடு தாங்க முடியவில்லை. வெயிலின் கொடூரத்தை நான் அங்கேதான் உணர்ந்தேன். மண்டபத்தில் சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே போக பின்னேரமாகிவிட்டது. அதன்பிறகு நாங்கள் மூவரும் ராமேஸ்வரத்தில் படாளம் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தோம். அரை நாள் ஓட்டத்தின்பின் படாளத்தில் இறங்கும்போது நானும் அண்ணனும் ரொம்பவே சோர்ந்துபோய் விட்டோம். பிறகு அம்மாவோடு மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு பாலாற்றில் இறங்கி நடந்தோம். பேருக்குத்தான் அது பாலாறு. ஆனால் அதில் தண்ணீர் இருக்கவில்லை. வெறும் மணல் தரையாக இருந்தது. படாளத்திற்கு பக்கத்திலிருக்கும் சித்தாம்பூர் எங்க அப்பாவின் ஊர். அதற்கு அடுத்தது ஆனூர். அது எங்க அம்மா ஊர். அப்போ அங்கே கரண்ட் வசதி ஏதும் இல்லீங்க" என்று கடந்த கால அனுபவங்களை அசை போட்டு பேசுகிறார் லெட்சுமணன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் அமைந்திருக்கும் ஊர்தான் படாளம். அங்கே வரலாற்று சிறப்புமிக்க பல கோயில்கள் அமையப் பெற்றுள்ளன. பல்லவர் கால முத்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. செங்கல்பட்டிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் படாளம் அமைந்திருக்கிறது.

"அப்போ தமிழ்நாட்டில் தீண்டாமை ரொம்பவும் உச்சத்தில் இருந்த காலம். காலையில் இட்லி விற்க வரும் அந்த உயர்சாதி ஆயாவின் முகம் இப்போவும் என் ஞாபகத்தில் இருக்கு. அவங்க இட்லி கூடையோடு எங்க அப்பா வீட்டு வாசல்ல நிற்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக எங்ககிட்டேயிருந்து தள்ளித்தான் நிற்பாங்க. தாத்தாவும் பாட்டியும் ஒரு தட்டை கொண்டு வந்து நீட்டுவாங்க. அந்தம்மா இட்லிகளை ஜாக்கிரதையாக அதில் வைக்கும். தாத்தா பணத்தை வித்தியாசமான முறையில் கொடுப்பதை நான் ஆச்சரியமாகப் பார்ப்பேன். ஏனென்றால் இலங்கையில் நாங்கள் அப்படி பணம் கொடுக்கிறது இல்லை.
தாத்தா அவள் கையில் பணத்தை கொடுக்க மாட்டார். தமது இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து இட்லிக்காரிக்கு நீட்டுவார். தாத்தா ஒரு அடி உயரத்திற்கு கையை உயர்த்தி பணத்தை அந்த ஆயா கையில போடுவார். பிறகு அது நமக்கு மிகுதி பணம் தரும்போது அதே மாதிரியாத்தான் கையை உயர்த்திப் போடுவாள். எங்க ஆச்சரியத்தை கவனிச்ச அம்மா, 'நம்ம கை அவங்க மேல பட்டா அவங்களுக்கு தீட்டாகிவிடும். ரொம்ப கவனமா நடந்துக்குங்க' என்று அம்மா எச்சரிக்கை செய்தாங்க. ஆனாலும் அது என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. தீட்டு என்றா என்ன என்பது தெரியாத காலம். ஆகவே அம்மாவின் எச்சரிக்கை என்னையும், அண்ணனையும் அந்த விபரீத முயற்சியை செய்து பார்க்கத் தூண்டியது. அன்று காலையில் இட்லிக்கார ஆயா வந்ததும் இட்லி வாங்க நானும் அண்ணனும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தோம். ஆயாவை பார்த்து சிரித்தபடியே இட்லியை அவரிடமிருந்து வாங்கும்போது நான் ஆயாவின் கையை பிடித்து விட்டேன். அடுத்த நிமிசம் ஆயா 'அய்யோ அய்யோ தொட்டுட்டானே... தொட்டுட்டானே' என்று கத்திக் கூப்பாடு போடத் தொங்கினா. எங்க வீட்டு ஆளுங்க வந்து நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாங்க. 'நீங்க பண்ணுன வேலையாள அந்த ஆயா பாவம் இன்னைக்கு எழுமிச்சைப்பழம் தேய்த்து பரிகாரம் செய்து குளிச்சிருக்கும்' என்று சொன்னாங்க. 'அப்போ நம்ம கிட்டே வாங்குற பணத்தையும் பரிகாரம் செய்து கழுவித்தான் எடுப்பாங்களா' என்று நான் கேட்க, 'வாயை மூடுடா!' என்று அம்மா திட்டினாங்க. என்று தாம் சின்ன வயதில் செய்த சாகசத்தைச் சொல்லி பெருமிதம் கொள்கிறார் லெட்சுமணன்.

"படாளம் ரயில்வே ஸ்டேசனில் ஒரு ரயில்வே மாஸ்டர் இருந்தாரு, அவரு ஒரு சிங்களவர்னு என் மாமா சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நான் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அது உண்மை என்பதை புரிந்து கொண்டேன். அந்தக்காலத்தில் ஜப்பான் கொழும்பில் குண்டு போட்டபோது பயந்துகிட்டு பலர் இந்தியாவிற்கு ஓடிப்போனாங்க. அப்படிப் போன இவர் தமிழகத்தில் அடைக்கலம் தேடியிருக்கிறார். 'என்னைப் போல நிறைய பேரு இங்க வந்து குடும்பம், குட்டின்னு ஆகிட்டோம். இப்போ இங்கேயே வேலையும் செய்கிறோம்' என்று அந்த மனிதர் என்னிடம் சிங்களத்தில் சொன்னார். நானும் அண்ணனும் அவரோடு சரளமாக சிங்களத்தில் உரையாடியதில் அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சிதான்" என்றார் லெட்சுமணன்.

"அதன் பிறகு ஒரு நாள் என்னையும், என் அண்ணனையும் எங்க மாமா ஒரு நாடகம் பார்க்க அழைச்சிட்டுப் போனார். ஒரு பெரிய பொட்டல் வெளியில் நாடகம் போட்டிருந்தாங்க. மேடை இருக்கும் இடத்திற்கும் நாங்க இருக்கும் இடத்திற்கும் ரொம்பவே தூரம் என்பதால் அதில் நடிப்பவர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. கூட்டமும் ரொம்பவே அதிகமாக இருந்தது. மாட்டு வண்டிகளில் ஏறி நின்றபடி இளம் பெண்கள் அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மாட்டு வண்டிகளில் வந்தவங்க ரொம்ப பெரிய இடத்து ஆட்கள் என்பது அவங்களோட அலங்காரத்தை பார்க்கவே புரிஞ்சது. சிறிது நேரத்தில் எங்க மாமா 'நீங்க நாடகம் பார்த்திட்டு வாங்க நான் வீட்டுக்குப் போறேன்' என்று கிளம்பிவிட்டார். நானும் அண்ணனும் நாடகத்தை மேடைக்கு அருகில் நின்று பார்க்கும் ஆசையில் கூட்டத்திற்குள் புகுந்து முன்னேறினோம். பெண்கள் அமர்ந்திருக்கும் அந்த முன்வரிசை இடத்தை நெருங்கிய  போதுதான் நாங்கள் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது! எங்களைப் பார்த்த சில பெண்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய், கம்பளங்களை சுருட்டி எடுத்து 'அய்யோ ஓடுங்க, ஓடுங்க'னு பதறியபடி எங்களைவிட்டு பல அடிகள் தூரம் புயல் காற்றில் அடிபட்டு சுழன்று  செல்பவர்கள் போல கும்பலாக புழுதியை கிளறியபடி ஒதுங்கினார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று எமக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அங்கே வந்த பெரிய மனிதர்கள் எங்களை 'ஒத்து, ஒத்து'னு கத்தியபடி ஒரு ஓரமாக நிறுத்தினார்கள். நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். பிறகுதான் அக்ரஹாரத்து பிராமணப் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இடத்தைத் தீட்டாக்கி விட்ட பாவத்தை செய்ததை உணர்ந்தோம். பிறகு அவர்கள் எங்களை விசாரித்த போது நாங்கள் சிலோனிலிருந்து வந்ததை சொல்லி எங்களை விட்டு விடும்படி அழுதோம். பிறகு திட்டி வீட்டிற்கு விரட்டினார்கள். வீட்டுக்கு வந்ததும் என்னையும் அண்ணனையும் அம்மா அடி பின்னி எடுத்தார். 'அடுத்த நாள் பஞ்சாயத்துல நிறுத்திட்டா என்னப் பண்ணுறது' என்று எங்கள் மாமா பதறிப்போய் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார். அவர் அந்த பெரிய ஆளுங்க வீட்டில் கூலி வேலை செய்பவர். அவருக்கு வேலை பறி போயிடும் என்கிற கவலை. பிறகு இங்குள்ள பழக்க வழக்கங்கள் எங்களுக்குத் தெரியாததைப் பற்றி ஊர் பெரியவர்களிடம் பேசி மன்றாடி விசயம் பஞ்சாயத்து பார்வைக்குப் போவதை தடுத்து விட்டார்கள்" என்று லெட்சுமணன் சிரித்துக்கொண்டே பெரிமூச்சு விட்டார்.

"பிறகு படாளத்தை விட்டு புறப்பட்டு வந்து ராமேஸ்வரம் முகாமில் ஒரு வாரம் தங்கினோம். கட்டிய வேட்டியிலிருந்து கோவணம் வரை அனைத்தையும் கொதிக்கும் தண்ணீர் கொப்பரைகளில் அவித்துத் தந்தார்கள். நோய் தடுப்பூசியும் போட்டு விட்டார்கள். இந்தியாவில் இருந்து சிலோனுக்கு நோய்களைக் காவிச் செல்லக்கூடாது என்பதுக்கான ஏற்பாடு இது. பின்னர் கொழும்புக்கு வந்தபோது எங்களுக்கு சொந்த ஊர் வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று மண்டப நினைவுகளை மீட்டினார்.

"என் உடைகளை கொதிக்கும் நீரில் அவித்து எடுத்து அணிந்து வந்ததில் மகிழ்ச்சிதாங்க. அந்த பெரிய சாதிக்காரன்களோடு தீட்டு என்னை பீடித்திருந்தால் அதுவும் கழுவுப்பட்டிருக்கும்தானே!" என்று கிண்டலாக சிரிக்கும் அவர், "சாதின்னு ஒரு மசுரும் கிடையாதுங்க.... எல்லாம் மனுஷன் தாங்க...." என்று கூறி புன்னகைத்தார்.

ஆனால் 'நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் இயல்பின் அடிப்படையில்' என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறானே அது எப்படி....? விடை தெரியாமலேயே அலுவலகம் திரும்பினோம்.

Wednesday, November 5, 2014

சூடா ஒரு டீ!

இவர்தான் டீ மாஸ்டர் வாணி சாமி!


மணி  ஸ்ரீகாந்தன்

'நீங்கள் பருகும் டீ சுப்பராக இருக்க வேண்டும் என்றால் தேயிலை சாயமும், கெட்டிப் பசும் பாலும், சீனியும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். நுங்கும் நுரையுமாக அது உங்கள் முன் ஆவி பறக்க வைக்கப்பட வேண்டும். இந்த வித்தை எல்லோருக்கும் கை வராது. அப்படிக் கை வந்தவர் பெயர்தான் டீ மாஸ்டர்...'
தமிழகத்தையும் இலங்கையையும் மென்பான பாவனையுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கோப்பிப் பானத்துக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் இலங்கையில் டீக்குக் கிடைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கொழும்பில் இருந்து பதுளைக்கு பஸ் பிரயாணம் என்றால் பஸ் எத்தனை முறை நிறுத்தப்படுகிறதோ அத்தனை தடவைகளும் பயணிகள் இறங்கி டீ குடிக்கவே செய்வார்கள். ஒரு வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் ஒரு டீ கிடைக்கும். மேலும், கோலா பானம் தந்து உபசரிப்பதைவிட டீ தந்து உபசரிப்பதை நாம் கௌரவமாக நினைக்கிறோம்.

இந்த டீயும் ஆளாள் கைமணத்துக்கு ஏற்ற மாதிரி சுவையில் மாறுபடும். உங்கள் அம்மா போட்ட டீ மாதிரி இருக்காது உங்கள் மனைவி கைமணம் என்பது தெரிந்த விஷயம்தானே!

இதனால்தான் ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டர் முக்கியத்துவம் பெறுகிறார். ஒரு உணவகத்தின் நற்பெயருக்கு சமையல்காரரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் டீ மாஸ்டருடையது. சுவையான டீயை போடுவதற்கு மாத்திரமல்ல, அதை நான்கு பேர் பார்த்து வியக்கும் வண்ணம் அசத்தல் எக் ஷனுடன் போடுவதற்கும் தெரிந்தவரே அசல் டீ மாஸ்டர்.

விதவிதமான ஸ்டைல்களில் டீ மாஸ்டர் டீ போடுவதைப் பார்த்தபடியே சரியான அளவில் பாலும் தேயிலைச் சாயமும் சீனியும் கலந்து நுரைக்க நுரைக்கத் தரப்படும் டீயை சுவைப்பதே தனி அனுபவம்தான்!

ஆனால் டீ மாஸ்டர்களுக்கு இன்றைக்கும் கௌரவம் அளித்து வருவது சைவ உணவகங்கள்தான். நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டீ அருந்திப் பாருங்கள், சப்பென்றிருக்கும். சைவ உணவகங்கள் அல்லாத ஏனைய உணவகங்களில் டீ அவ்வளவாக ருசிப்பதில்லை. அவை டீ மாஸ்டர்மாருக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும் டீ மாஸ்டரை மேடையில் ஏற்றி வாடிக்கையாளர் பார்க்கும்படி அவரை டீ, கோப்பி போடச் செய்வது சைவ உணவகங்கள்தான்!

இந்த வகையில் எம் கண்முன் நிழலாடிய இடம்தான் ஆமர்வீதி வாணிவிலாஸ். இங்கு மட்டுமே தமிழகத்துப் பாணியில் வாடிக்கையாளர் கண்களுக்கு பளீச்சென்று தெரியும் வகையில் பெரிய பொய்லர் பக்கத்தில் நீராவி விட்டுக் கொண்டிருக்க டீ மாஸ்டர் நெற்றியில் பட்டையுடன் தரிசனம் தருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டீ மாஸ்டரின் பெயர் சாமி. ஆமர் வீதி ஏரியாவில் சாமியும் ஒரு வி.ஐ.பி.தான். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

"சாமிக்கிட்டே டீ குடிச்சா, நன்றாக இருக்கும் என்று என்னைத் தேடி வர்ரவங்க நிறையப்பேரு! அவங்க என்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நிறைவு செய்கிற மாதிரியே சுவையான டீயை சில நொடிகளிலேயே தயார் செய்து கொடுக்கிறேன்!" என்கிறார் சாமி, ஒரு கனிவான புன்னகையோடு.

"யார் வேண்டுமானாலும் டீ போடலாம். ஆனால் டீ சுவையாக இருக்க நமக்கு கைப்பக்குவமும் இருக்கணும், நமக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக நண்பர்கள் சொல்றாங்க. டீயை ருசித்து விட்டு டபள் சூப்பரா இருக்கு சாமி என்று அவங்க சொல்லும்போது மனசுக்கு ரொம்பவும் நிறைவா இருக்கு" என்று சொல்லும் சாமியின் முகத்தில் பூரிப்பு!

சாமியின் நிஜப்பெயர் பெருமாள் கனகராஜ். ஆனால் சாமின்னு சொன்னால்தால் எல்லோருக்கும் தெரியும். தனது பதினான்காவது வயதிலேயே ஹோட்டல் தொழிலுக்கு வந்தவர் இவர். இன்று தமது ஐம்பத்தாறாவது வயதை கடந்தும் பம்பரமாக சுழல்கிறார்.

"நாம் பிறந்து வளர்ந்தது எல்லாமே கண்டியில்தான். எங்கப்பா பெருமாளும் ஹோட்டல் தொழில்தான் செய்தார். அவருக்கு பிறகு இப்போது நான். டீ அடிக்கிறது ஒண்ணும் தாழ்ந்த தொழில் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவங்க சும்மாவா சொல்லி இருப்பாங்க?" என்று இவர் சொல்வதில் எந்த கருத்து வேறுபாடும் எவருக்குமே இருக்க முடியாது.

வாணி விலாசுக்கு ராஜகிரியவிலிருந்து தினமும் பால் வருகிறதாம். சுத்தமான பசுப்பாலில்தான் இங்கே டீ தயார் செய்யப்படுவதாக இவர் சொல்கிறார்.

"அதிகாலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் பொய்லரில் தண்ணீரை கொதிக்க வச்சு காலை ஆறரை மணிக்கெல்லாம் டீ போடத் தொடங்கிடுவேன். பத்து மணிக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் ஓய்வு எடுப்பேன். பிறகு இரண்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிவரை வேலை. எப்படியும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட டீ போடுவேன். இதற்கு ஒரு நாளைக்கு எண்பது லிட்டர் பால் தேவைப்படும். பால் மிஞ்சினால் அதை மோராக மாற்றி விடுவோம்" என்று ஒளிவுமறைவின்றி பேசும் சாமியின் பேச்சிலும் சுத்தம் பளிச்சிடுகிறது.

அந்தக் காலத்தில் குமாரவீதியில் 'நவீன சந்திரவிலாஸ்' என்ற ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்த சாமி, பிறகு அம்பாள் கபே ஹோட்டலிலும் அதன்பிறகு ஜூலை கலவரத்திலிருந்து இன்றுவரை வாணிவிலாசிலும் டீ மாஸ்டராக விளங்குகிறார்.

"முதல் சம்பளமாக நான் மாசம் நாற்பத்தைந்து ரூபா வாங்கினேன். இப்போ முப்பதாயிரம் வரை கை நிறைய கிடைக்கிறது" என்கிறார் சந்தோஷமாக.

சாமியின் மனைவியின் பெயர் சரோஜா. இரண்டு மகன்கள். ஒருவர் திருமணம் முடித்து கட்டாரிலும் அடுத்தவர் இலங்கை கடற்படை வீரராகவும் இருக்கின்றனர். செட்டிலான வாழ்க்கை.

"டீ போடுகிற இந்த தொழிலால்தான் என் வாழ்க்கைச் சக்கரம் இதுநாள் வரையும் தடையில்லாமல் ஓடுது. இனியும் அது தடைப்படாது என்கிற நம்பிக்கை இருக்குது. நமக்கு மேல அந்த சபரிமலை ஐயப்பன் துணை இருக்காரு" என்று சொல்லும் போதே சாமியின் முகத்தில் பக்திப் பரவசம்!
"நான் டீ போட்டால் டீ ஆடாதுங்க! அந்தளவுக்கு ஸ்ட்ராங்க இருக்கும். கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்களேன்" என்று ஒரு டம்ளர் டீயை நீட்டினார். ருசித்தோம். அதில் சுவையும் மணமும் கூடவே அன்பும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. டீ சாயம், பால், சீனி மிகச் சரியாக சேர்ந்து சுவை நரம்புகளை நீவி விட்டதை உணர்ந்து சாமிக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.

Tuesday, November 4, 2014

சினிமானந்தா பதில்கள்- 19

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் உள்ள நெருக்கம் என்ன?
எஸ். லதாபிரமிளா, தெமோதர

முதல் காதல் எப்போதும் மறக்காது. முதல் காதலனையும் எப்போதும் மறக்க முடியாது. திரையுலகத்துக்கு வந்தபின் முதல் காதலனாக அமைந்தவர்
சிம்புதான். அந்த அனுபவம் தந்த சுகம், சிம்புவை நினைத்து நயனை உருகவைக்கிறது. அதுதான் அத்தனை நெருக்கம்.

பொருத்தம் இருப்பவருடன்தானே நெருக்கம்
இதில் லதாவுக்கு ஏன் வருத்தம்?

மாதவனின் திரை வாழ்க்கை முடிந்து விட்டதா?
சபீக்கா, ஹபுகஸ்தலாவ

யார் சொன்னது? இப்போதுதானே கொடி கட்டிப் பறக்கிறது! 'அலை பாயுதே' வில் இருந்த சொக்லட் போய் மாதவன் இப்போது இல்லை. இப்போது இருப்பது மெருகேறிய மாதவன். 3 இடியட்ஸ், தாமு
வெட்ஸ் மானு  படங்கள் மூலம் பொலிவுட்டில் கொடி கட்டிய மாதவன் Night of the Living deed-Origuns  மூலம் ஹொலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தமிழில் 'இறுதிச் சுற்று' படத்தில் நடிக்கிறார். இதில் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளராக வருகிறார். ஏனோ தமிழில் மட்டும் மாதவனுக்கு கொடி கட்ட முடியவில்லை.

தாமு வெட்ஸ்ட் மானு (ஹிந்தி) இரண்டாம் பாகத்தில்
தாடியும் மீசையுமாக வரும் மாதவனைத்தான் படத்தில்
காண்கிறீர்கள்.


உதயநிதி, அதர்வா, சிவகார்த்திகேயன் இவர்களில் யார் பெஸ்ட்?
கே.வி.கனு, நீலாவணை

மூவரும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுற மாதிரி 4, 5 தமிழ் படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார்கள். இது போதாது. தமிழ் நாட்டில் இருந்து
அடுத்த மாநிலம் தாவனும். ஆல் இந்தியா பாயனும். சர்வதேசம் தாண்டனும். அதற்கு அப்புறம் தானே யாரு பெஸ்ட் என்பதைச் சொல்லலாம்.

உதயநிதி (OK OK), அதர்வா (பரதேசி), சிவகார்த்திகேயன் (வ.வா.ச) பாதிப்பு இல்லாம வெற்றிப் படம் கொடுத்தாதான் அடுத்த படி ஏறலாம். அதுக்குள்ள உச்சியை தொடுறத்துக்கு சினிமா உலகம் என்ன தாழ் தள சொகுசு பேரூந்துன்னு நினைச்சேளா?


விஜய் நடிக்கிற எந்தப் படமும் ஹிட் ஆகுதில்லயே... ஏன்?
ராஸ்வி, புத்தளம்

மற்றைய நடிகர்களது படங்களின் வெற்றி தோல்விகளின் விகிதாசாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் விஜய் படங்கள் நன்றாகத்தான் ஓடுகின்றன.
அதனால்தானே விஜய்க்கு இத்தனை செல்வாக்கு.... அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கும் போட்டி.....

சூப்பர் ஸ்டார் ரஜனியையும் உலக நாயகன்
கமலையும் தவிர்த்துப் பார்த்தால் ஏனைய நடிகர்களில்
ஏ (விக்டரி) ஸ்டார் விஜய்தான் (சினிமாவில் மட்டும்)


மொழுக் மொழுக்கென்று இருக்கும் ஹன்சிகாவுக்கு எத்தனை வயது?
பஹாரா - ரம்புக்கனை

ஆண்களின் சம்பளத்தையும் நடிகைகளின் வயசையும் கேட்கக் கூடாதுன்னு
ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதா பஹாரா... இப்படி 'பகீர்'னா கேட்குறது?

சின்ன வயசுதான். ஒருமுறை பொதுத் தேர்தலில் வோட்டு போடுற சந்தர்ப்பம் கிடைச்சிருக்கும். போட்டாரான்னுதான் தெரியல

நம்ம தளபதி விஜய்க்கு படங்களை தெரிவு செய்து கொடுப்பது அவரது அப்பாவாமே. உண்மையா?
கேசவன், பன்னாலை

உண்மைதான் S.C.C குடும்பமே ஒரு கலைக் குடும்பம்தான்.

விஜய்யின் மிகப் பெரிய விமர்சகர் யார் தெரியுமா?
அவரது மகன் சஞ்சேய்தான்.

சஞ்சய் ஆட்டுவித்தால்
விஜய் ஆடுவார் என்பது தெரியுமா?

கமலின் வாரிசு இனி ஆர்யாவுடன் நடிக்க மாட்டாராமே?
எம். டிலானி, வவுனியா

நல்ல கதை, நல்ல டைரக்டர், கதாநாயகி வேடம், நல்ல சம்பளம், இத்தனையும் இருந்தால் ஏன் மாட்டேன் என்கிறார்? ஆர்யா என்ன அத்தனை மோசமானவரா? இல்லையே. அருமையாக  பிரியாணி செய்து சக நடிகர்களை அசத்தி விடுவாராமே.

பெண்கள் இல்லை என்றால் ஆம் என்று ஒரு அர்த்தம்
இருக்கிறது. நடிகர் கமலின் வாரிசும் பெண்தானே!


என் கனவில் பழைய நடிகைகள்தான் வருகிறார்கள். புது நடிகைகள் கனவில் வர என்ன செய்யலாம்?
என். விஜயன், கண்டி

அன்ன இடை, சின்ன இடை (சரோஜாதேவி) புன்னகை (கே.ஆர். விஜயா) அரசி, பூவிலே பிறந்த பூவை (தேவிகா) 16 வயது தங்கச் சிலை (J.J) ஆகியோர் கனவில் வர கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. என்ஜோய் பண்ணுங்க.

அந்தக் காலம் நெளிவு, சுழிகள் நிறைந்தது.
திரும்பியும் வளைந்தும் பயணம் செய்யலாம்.
இந்தக் காலம் ....... நேர்ப்பாதை
ஒரே வேகத்தில் பறக்க வேண்டும்.
எது பிடிக்கிறது உங்களுக்கு?