Friday, October 24, 2014

உணவுகள் பலவிதம்


நத்தை மாமிசம் இவருக்கு கோழி இறைச்சி மாதிரி!


மணி  ஸ்ரீகாந்தன்

'இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான்
மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட அந்த
மதுர மல்லிப்பூ இட்லிய
மீன் கொழம்புல கொஞ்சம்
பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ளே...'

 இது சமீபத்தில் திரைக்கு வந்த 'உன் சமையலறையில்' படப் பாடல். பாடல் காட்சியில் திரையில் வண்ணமாக கண்களுக்கு விருந்து படைக்கும் உணவு பதார்த்தங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால், பாம்பு, பல்லி, கரப்பான், புழு, பூச்சி, நாய் ஆகியவற்றை வெளிநாட்டுக்காரர்கள் ருசித்து சாப்பிடும்போது நமக்கு, 'உவ்வே'னு குமட்டிக் கொண்டுதான் வரும், இது இயற்கை. நாம் வாழும் சூழல், பழக்க வழக்கம் என்பனவே நமது உணவு பழக்கத்தைத் தீர்மானிக்கிறது. வியட்நாமில் நாய் மாமிசத்தை சிறந்த புரத உணவு என சப்புக்கொட்டி சாப்பிடுகிறார்கள் என்றால் அதை நம்மால் நினைத்துத்தான் பார்க்க முடியுமா? ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார் கணபதி வசிக்குமார். டிரம்பட் கலைஞரான இவருக்கு மிகவும் பிடித்த உணவு நத்தை தானாம்! என்ன இப்போதே உங்களுக்கு குமட்டுகிறதா....? ஆற்று நத்தை, மரத்து நத்தை போன்ற சாதாரண நத்தைகளை கொதிக்கும் நீரில் அவித்து அதன் இறைச்சிகளை வெளியே எடுத்து, கழுவி சுத்தமாக்கி வெங்காயம், மிளகாய், மசாலாவோடு எண்ணெய்யில் வதக்கி எடுத்து சோற்றுடன் சப்புக்கொட்டி சாப்பிடுகிறார் இந்த மனிதர்!

"நத்தையா, அய்யோ வாந்தி வருதே, 'உவ்வே'னு பதறிப்போறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லுறேன். நீங்க கோழி, ஆடு, மீன், நண்டு என்று சாப்பிடுறதில்லயா? அது மாதிரி தாங்க  நத்தையும்... மீனும் நண்டும் சாப்பிடுவதைப் போலன்றி நத்தைகள் தாவரங்களையே சாப்பிடுது. அட கோழி சாப்பிடாத அசிங்கத்தையா நத்தை சாப்பிடுது? ஆனா கோழியை மட்டும் சப்புக்கொட்டி சாப்பிடுறீங்க. கோழிக்கு இருக்கும் அதே குடல் இரைப்பைதான் நத்தைக்கும் இருக்கும். இப்போ இங்கே பலர் சுத்த சைவம். கேக்கூட சாப்பிட மாட்டார்கள். அவர்கள் எதிரில் நின்று பொரித்த கோழிக்காலை கடித்து இழுத்தால், அவர்களுக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும்!" என்று புது வியாக்கியனத்தோடு ஆரம்பிக்கிறார் வசிக்குமார். முப்பத்தொன்பது வயதாகும் வசிக்குமார் புளத்சிங்கள, ஹல்வத்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர். டிரம்பட் வாசிப்பதோடு சாரதியாகவும் பணியாற்றும் இவர், கராத்தே கலையையும் முறையாகப் பயின்று இருக்கிறார்.
"நீர்கொழும்பு இன்டர் நெஷனல் டை குண்டோ கராத்தே நிறுவனத்தில்தான் நான் கராத்தே கற்றேன். அந்தக் கலையைக் கற்கும்போது என் உடநிலை கொஞ்சம் பாதிக்கப்பட்டது. என்னால் பத்தடி தூரம் கூட நடக்க முடியாது. மூச்சு வாங்கும். உடம்பு பலம் இழந்து நடுக்கம் ஏற்படும். அப்போதுதான் இதற்கு செம்பகப் பறவை, வெளவால் மாமிசங்களை உணவாக சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு சித்த வைத்தியர் பரிகாரம் சொன்னார். அந்தப் பறவை நத்தை சாப்பிடுவதால்தான் அதற்கு அப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட நான் அந்த அப்பாவிப் பறவையைக் கொல்வதை விட நேரடியாகவே நத்தையைச் சாப்பிட்டால் இன்னும் அதிக பயன் கிடைக்குமே என்று யோசித்தேன்.
மனதை திடப்படுத்திக்கொண்டு அதை சாப்பிடக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது எனக்கு பழகிப்போய்விட்டது. எனக்கு இது இப்போது ஸ்வீட் சாப்பிடுகிற மாதிரி" என்று சொல்லிக்கொண்டே ஒரு பெரிய நத்தையை உயிரோடு எடுத்து அதில் வடியும் திரவத்தை தனது வாய்க்கு நேரே உயர்த்திப் பிடித்துக் குடிக்கிறார்.

"இந்த ஜூஸ் வேப்பிலைச் சாறு மாதிரி ரொம்பவும் கசப்புத்தான். ஆனால் நல்ல மருத்துவக்குணம் நிறைந்தது. அதன் இறைச்சி நல்ல சுவையாக இருக்கும். சுத்தமாக எலும்பு இல்லாததால் அல்வா துண்டை வாயில் போட்ட மாதிரி இருக்கும்" என்று கூறும்போது முகத்தை சுழித்துக் கொள்கிறோம். பின்னர் தான் சமைத்த நத்தைக் கறியை சோற்றுடன் கலந்து பிசைந்து ஒரு கவளத்தை வாயில் போட்டு ருசித்துச் சாப்பிடுகிறார்.

நத்தை 'மூலம்' நோயை 50 வீதம் குறைக்கும் மருத்துவ குணம் கொண்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஒரு யுனானி மருத்துவரும் இக்கூற்றை ஆமோதிக்கிறார். நெத்திலி, இறால் உள்ளிட்டவைகளை பச்சையாக உண்ணுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். இவரின் மனைவியிடம் இதுபற்றிக் கேட்டோம். அவருக்கு கணவரின் பழக்கம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 'அவர் விரும்பினால் சமைத்துச் சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன்' என்கிறார். ஆனால் நத்தை சமைக்கப்பட்ட பாத்திரங்களை வசிக்குமாரே கழுவி வைத்துவிட வேண்டும் என்பதே அவரின் கட்டளை.
நான் இவற்றைச் சாப்பிடுவேன். இவற்றையெல்லாம் தொடவே மாட்டேன் என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் மாட்டிக் கொண்டால் அல்லது பஞ்சத்தில் சிக்கிக் கொண்டால் பற்றியெரியும் வயிற்றுக்கு இப்படியெல்லாம் சமாதானம் சொல்ல முடியுமா? கிடைப்பதைச் சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் நாம் முனைவோம். மரக்கறி உணவைச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களும் வைத்தியர்களின் யோசனைப்படி அசைவம் சாப்பிடுகிறார்கள். எனவே உணவு காலம் நேரம் அவசியத்தைப் பொறுத்தது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment