Saturday, October 18, 2014

'சொய்ங் சொய்ங்' புகழ் மகிழினி மணிமாறனுடன் ஒரு சிறப்பு சந்திப்பு

"இன்னிக்கும் நான் காட்டுப் பொண்ணுதாங்க..."


நேர்காணல் -  மணி  ஸ்ரீகாந்தன்

'பெருமரத்து காத்து ஊ ஊன்னு இரைகிற ஓசை, குயிலின் அழைப்பு, கும்பலாக பறந்து வந்து காச்சுமூச்சுனு கத்திக்கிட்டே நெல்மணிகளை பொறுக்கும் குருவிகள்.... அயர்ச்சியா இருக்கும்போது உற்றுக் கவனிச்சா 'சொய்ங் சொய்ங்'னு அடிநாதமா கேட்கும்..'
"நான் குழந்தையாக இருந்த காலத்தில், எங்கம்மா வயக்காட்டுக்கு வேலைக்குப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. அங்க உள்ள வரப்பில் என்னை உட்கார வச்சிட்டு வயலில் வேலை செய்வாங்க. அப்போ விதைக்கையில், நடும்போது, களை பறிக்கிறபோது அறுப்பில் களைப்புத்தீர பாட்டுப்பாடுவாங்க. நானும் அவங்க கூடவே சேர்ந்து பாடுவேன். எனக்கு தூக்கம் வந்தா தாலாட்டுப் பாடி என்னை தூங்க வைப்பாங்க. அப்படி என் அம்மாவிடமிருந்து என் ரத்தத்தில் கலந்ததுதான் பாட்டு!" பளீரெனச் சிரிக்கிறார் மகிழினி மணிமாறன். கும்கி திரைப்படத்தின் 'சொய்ங்... சொய்;ங்' என்ற ஒன்றைப் பாடல் மூலமாக உலகத்தின் பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி உலகத் தமிழர்களின் இதயங்களில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டவர்தான் இந்த நாட்டுப்புற பாடகி!

பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கும் வேடந்தாங்கலுக்கு பக்கத்தில் இருக்கும் வலையாப்புத்தூர் கிராமம்தான் மகிழினியின் சொந்த ஊர். அமலநாதன் - மரியாள் தம்பதியினரின் மூத்த மகளாக மண்குடிசையில் பிறந்த இவருக்கு தம்பியும் தங்கையும் உடன் பிறப்புகள்.

"பாட்டுப் பாடிக்கிட்டு படிச்சதால் பத்தாவது பெயிலாகிட்டேன். அப்போ எங்கப்பாவும் தவறிட்டதால் வீட்டுல வறுமை... அம்மா, தம்பி, தங்கையை பார்த்துக்குற பொறுப்பை ஏத்துக்கிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். குழந்தைகள் காப்பகத்துல வேலை. அப்புறம் அங்கே குழந்தைகளுக்கு பறை இசையை கத்துக்கொடுக்க வந்த மணிமாறணைப் பார்த்தேன். அந்தப் பார்வை எனக்கும் அவருக்கும் புடிச்சிப்போச்சி. பிறகு வீட்டுல சொல்லி டும்டும்.... இப்போ கல்யாணம் முடிஞ்சு 14 வருஷம் ஆகுதுங்க. 'இனியன், சமரன்'னு ரெண்டு பையன்கள் ரெண்டு பேரும் பறை அடிக்கிறதிலையும், படிக்கிறதிலையும் வெளுத்துக் கட்டுறாங்க..." படபடவென்று பாடல் போலவே கனீரென்று பேசுகிறார் மகிழினி.

"காடும், வீடும் சேர்ந்ததுதானே எங்கள் கிராமம்! அதனால் இந்தக் காட்டுப் பொண்ணுக்கு இயற்கையை ரொம்ப புடிக்கும். பெருமரத்துக் காத்து 'ஊஊ'னு இரைகிற சத்தம், குயிலின் ஓசை, கும்பலாக பறந்து வந்து 'காச்சு மூச்சுண்'ணு கத்திக்கிட்டே நெல் மணிகளை கொத்தி திங்கிற குருவிகள். அயர்ச்சியா இருக்கும்போது உற்றுக் கவனிச்சுப் பார்த்தா... 'சொய்ங்.... சொய்ங்.'னு அடிநாதமா கேட்கும்.... நான் அப்படி அன்று ரசிச்சுக் கேட்ட அதே 'சொய்ங்.... சொய்ங்' சத்தம் தான் இன்று எனக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்திருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என் கணவர்தான். என் பாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவர் என் ஆர்வத்திற்கு வழியமைத்தவர் என் ஆசான், குரு எல்லாம் அவருதாங்க..." நன்றி பெருமிதத்துடன் மணிமாறனைப் பார்க்கிறார்.
மணிமாறன் புன்னகையோடு ஆரம்பித்தார்.

"அவங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தது நானாக இருக்க முடியாது... பாட்டு அவங்க கூடவே பொறந்தது. நாட்டுப்புற பாடகி என்றால் வட தமிழகத்தில் மகிழினிதான். அவங்க பாடும் பாடல்களை நான் முறைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்" என்கிறார் மிகவும் அடக்கமாக!

'சினிமா என்பது நமக்கு எட்டாக்கனிதான் என்ற ஏக்கம் எனக்கு இருந்தது என்னவோ உண்மைதாங்க. நான் சினிமாவில் பாடுவேன். ஆனா அந்த 'சொய்ங்... சொய்ங்' என்ற ஒன்றைப் பாடல் என்னை உச்சத்திற்குக் கொண்டு போகும்ண்ணு நான் கனவில கூட நினைக்கலீங்க" என்று மகிழினி கூறியபோது மணிமாறன் அவரை நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.
"ஆனா மகிழினி சினிமா வாய்ப்புக்காக தேடுதல் வேட்டை நடத்தியது கிடையாது. நான் நல்லாப் பாடுவேன், எனக்கொரு சான்ஸ் தாங்க'னு கேட்டதும் இல்ல. உண்மையைச் சொல்லப் போனால் இது காலம் தந்த பரிசு இல்லை, களம் தந்த பரிசு!" என்று மணிமாறன் நிறுத்த மகிழினி தொடர்ந்தார்.

"என் கணவர் எழுதி மெட்டமைக்கும் பாடல்களுக்கு ட்ராக் பாட நான் செல்லும் போது அங்கே ஒலிப்பதிவு கூடத்திற்கு வரும் சக கலைஞர்கள் 'உங்க குரல் நல்லா இருக்கு, சினிமாவில வாய்ப்பு கிடைத்தால் சொல்லுறோம்'னு என்கிட்டே போன் நம்பர் வாங்கிட்டுப் போவாங்க. அப்படிதான் ஒருநாள் ஒருத்தர் எங்களுக்கு கோல் பண்ணி சினிமாவில் பாடுறதுக்கு வாய்ப்பு வந்திருக்கு. உடனே சென்னைக்கு வாங்கண்ணு அழைத்தாரு.
அப்போ நாங்க கோயம்புத்தூரில் ஒரு கச்சேரிக்காக போயிருந்தோம். அதனால் அவரிட்ட நாங்க விசயத்தை சொல்ல 'அட என்னங்க நீங்க பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு கிளம்பி வாங்க'னு அட்வைஸ் பண்ணினார். அதற்கு என் கணவர், 'தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்குங்க அவங்க எங்களை மதிச்சிக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்களை ஏமாற்ற முடியாது. எங்களுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கணும் என்று இருந்தா அது இன்னொண்ணா இருக்கட்டுமே!'னு மறுத்திட்டாரு. அதுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இசையமைப்பாளர் இமான் தொலைபேசி வழியாக நேரடியாக பேசி எமக்கு வாய்ப்பை தந்தாரு. பாட்டு இந்த அளவுக்கு பிச்சுக்கிட்டு மக்கள்கிட்டே போய் சேரும்ணு நினைச்சுக்கூட பார்க்கலீங்க.. கண்மூடி திறக்கறத்துக்குள்ளே உலகம் ரொம்ப வேகமா சுத்திடுச்சு... இப்போ முப்பது பாடல்களுக்கு மேல பாடியாச்சு.. எல்லோருடைய செல்போன் ரிங்டோனும் கும்கி, வீரம் பாட்டுத்தான்..." நினைத்து நினைத்து பூரிக்கிறார் மகிழினி.

"டூவீலர்ல போகும்போது பின்னாடி உட்கார்ந்துகிட்டே வானத்தில் பறக்கிற விமானத்தை பார்த்து ரசிச்சுக்கிட்டே போவேன். நம்மளால விமானத்தை ரசிக்கத்தான் முடியும் அதுல உட்கார்ந்து பறக்க முடியாது'னு நினைச்சு மனசை சமாதானப்படுத்திப்பேன். ஆனா முதல் முதலாக என் கணவரோடு விமானத்தில் ஏறிய போது... நான் அடைந்த மகிழ்ச்சி வார்த்தையால சொல்ல முடியாதுங்க" மகிழினி ரொம்பவே நெகிழ்ந்து போகிறார்.

சாந்தி தியேட்டரில் கும்கி படத்தை 'புத்தர் கலை குழு'வினரோடு பார்த்த அனுபவம் மகிழினிக்கு புதுசாகத்தான் இருந்ததாம். தான் பாடிய பாடல் திரையில் வந்தபோது ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் இவரை கிறங்கடித்திருக்கிறது. பிரபளமாகிவிட்ட பிறகு வெளியே செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறதாம். "ஆனாலும் என்னங்க பண்ணுறது நம்மகிட்டே கார் இல்லை, பஸ் பயணம் தான். 'பஸ்சில எல்லாம் சினிமாகாரங்க வரமாட்டாங்க'னு   மக்கள் நம்புறதால் நமக்கு அது ஒண்ணும் பிரச்சினையாக தெரியலே.."  பளீரென்று சிரிக்கிறார்கள் மகிழினியும், மணிமாறனும்.

தீபாவளி சிறப்பு சந்திப்பை வேடந்தாங்கலில் நிறைவு செய்துவிட்டு கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம்.

No comments:

Post a Comment