Sunday, October 26, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 08

கதிர்வேல் வாத்தியாரை வாதத்திறமையால் வீழ்த்திய முகம்மது அண்ணாவியார்!


அருள் சத்தியநாதன்

முதல் இஸ்லாமிய தமிழ் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அதன் பெயர் பல்சந்தமாலை. இதன் பின்னர் பல இஸ்லாமிய புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வந்துள்ளனர். இவர்களுள் மிகச் சிறந்த கவிராயராக பேசப்படுபவர், சையது முகம்மது அண்ணாவியார். அலி நாமா (கி.பி. 1747) போன்ற புகழ்பெற்ற இஸ்லாமிய காவியங்களை இயற்றியவர் இவர். இவர் இயற்றியதுதான் மகாபாரத அம்மானை. வியாச பாரதத்தின் ஒரு பகுதியை 4100 பாடல்களில் இவர் மொழி பெயர்த்திருக்கிறார். மகா பாரதத்தின் இறுதிப் பகுதியில் தருமர் அசுவமேத யாகம் செய்கிறார். இப்பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்ற பெயரில் நூலாக இயற்றினார் சையது அண்ணாவியார்.

இவர் பேரிலான ஒரு நினைவு மலர் 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கவிஞர் கா.மு.ஷெரிப் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தனது நினைவை அவர் குறிப்பிட்டுள்ளார். அறியப்படாத அறிஞர்கள் என்ற தலைப்பில் பொ.வேல்சாமி எழுதியிருக்கும் கட்டுரையில் கா.மு.ஷெரிபின் அனுபவத்தை எடுத்துரைத்துள்ளார். அதுவே இங்கு தரப்படுகிறது.

'நான் அரசியலில் இருந்தபோது பேராவூரணிக்கு கீழ்பால் உள்ள கொற்றைக்காடு என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். இரவு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, ஒரு விவசாயி வீட்டின் முன் பகுதியில் படுத்திருந்தேன். அங்கே எழுபது வயதுடைய ஒருவர் வந்தார். வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தார். பின்னர் தனது சாரீர வளத்தைக் கூட்டிப் பாடலானார். அவர் பாடியது மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றிய நெடிய பாட்டு. அது எந்தப் பாரதத்தில் உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதிராமப்பட்டினம் அண்ணாவியார் பாடியது என்றார். நான், அது தனிநூலா? எனக் கேட்டேன்.
ஆமாம். கர்ணபர்வம் என்ற பெயரில் இப்போது நான் பாடிய அம்மானைப் பாடலை அவர்தான் பாடியுள்ளார் என்று கூறிய அம் முதியவர்,

இந்துக்களின் பதினெட்டுப் புராணங்களையும் அம்மானை அம்மானையாக அண்ணாவியார் எழுதியிருக்கிறாரே! அது உங்களுக்குத் தெரியாதா? என்றும் கேட்டார். அதிராம பட்டினம் அண்ணாவியாரின் பாட்டனார் எழுதியவையாம் அவை. இப்போதிருக்கும் அண்ணாவியருக்கே வயது தொண்ணூறுக்கு மேலாம். எனவே பாட்டனார் காலம் நூற்றாண்டுகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். எனினும் இன்றைக்கும் அவர் பாடல்கள் கிராமங்களில் பாடப்படுகின்றன. இந்த அண்ணாவியாரை அந்த கிராமவாசி தெய்வம் என்றார்!' என்று கா.மு.ஷெரிப் எழுதியுள்ளார்.

இந்த அண்ணாவியார் மதுரையைச் சேர்ந்தவர். பெற்றோரை இழந்த அவர், பட்டுக்கோட்டையை அடுத்துள்ள மதுக்கூர் என்ற ஊரில், முஸ்லிம்களின் ஆதரவில் வளர்ந்தார். அக்காலத்தில் குர்ஆனையும் பல இஸ்லாமிய நூல்களையும் அவர் கற்றார். தமிழ் கற்கும் ஆவலில், மதுக்கூரை அடுத்துள்ள முத்தாக்குறிச்சி என்ற ஊரில் திண்ணைப்பள்ளி நடத்தி வந்த வாணிப செட்டியாரின் பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்றார். பின்னர் தஞ்சையை அடுத்துள்ள அய்யம் பேட்டைக்கு வந்து, அங்கு பள்ளிக்கூடம் வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் அண்ணாவியார் (வாத்தியார்) என அழைக்கப்படலானார்.

அதிராமபட்டினத்தில் அக்காலத்தில் கதிர்வேல் வாத்தியார் தனது பாண்டித்திய செருக்கு காரணமாக பலரை மிரட்டி வந்தாராம். அவரை அடக்க அய்யம் பேட்டை அண்ணாவியார்தான் சரியான ஆள் எனக் கருதிய ஊர்மக்கள். அதிராமபட்டினத்துக்கு அண்ணாவியாரை அழைத்து வந்தனர். கதிர்வேல் வாத்தியாருக்கும் சையது முகம்மது அண்ணாவியாருக்கும் இடையே நடைபெற்ற வாதத்தில் கதிர்வேல் வாத்தியார் தோல்வியடைந்து அண்ணாவியாருக்கு சீடரானார்.

இந்த அண்ணாவியாரின் வம்சாவளியில் வந்த பேரன் சையது முகம்மது அண்ணாவியார் 1987 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்துக்கு ஓலைச் சுவடி தொகுதியொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இதில் 4100 பாடல்கள் இருந்தன. 2004 ஆம் ஆண்டு தஞ்சை பல்கலைக்கழகம் இதை நூலாக வெளியிட்டது.

இவ்வாறாக, தமிழகத்து முஸ்லிம் புலவர்களும், தனவந்தர்களும் தமிழ் இலக்கியத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் பாராமல் சேவையாற்றி வந்துள்ளனர். அன்றைய முஸ்லிம்களும் தமிழ் இந்துக்களும் நீவேறு மதம், நான் வேறு மதம் என்றும் உன் கலாசாரம் வேறு என் கலாசாரம் வேறு என்றும் எக்காரணம் கொண்டும் எங்கள் விஷயத்தில் தலையிட உரிமை கிடையாது என்றும் கோடுகள் கீறவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று எளிதாகக் கூறிவிடலாம். தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வாறான ஒரு ஆரோக்கிய நிலை காணப்படுகிறது. ஆனால், தமிழ் சமூகம் வேறு முஸ்லிம் சமூகம் வேறு என இலங்கையில் இத்தமிழ் பேசும் சமூதாயத்தை அரசியல் இரு கூறுகளாகப் பிரித்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. இது, மூன்றாம் தரப்பை நடுவில் கொண்டு நிறுத்தியதோடு மூன்றாம் தரப்பின் இஷ்டப்படி ஆடும் பொம்மைகளாக இரு தரப்பாரும் மாறிப்போன அவலத்தையும் காண்கிறோம்.

இதற்கு மேலாக, இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் இப்போக்கு நிச்சயமாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இஸ்லாமியர் தம்மைத் தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்கின்றனர். இந்தியன், தமிழன், இஸ்லாமியன் என்ற வரிசையில் தம்மை அடையாளப்படுத்துவதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் இலங்கையில் இஸ்லாமியருக்கு ஒரு அரசியல் முகம் இருக்கிறது. அது இஸ்லாமியரை, 'தமிழன்' என்ற வரையறைக்குள் அடையாளப்படுத்தவிடுவதில்லை. இலங்கையின் இஸ்லாமிய அரசியலுக்கு 'இஸ்லாமியன்' என்று முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும், நிர்ப்பந்தமும் உள்ளது. இதைப் புரிந்து கொள்ள சிங்களவர்களின் மனப்பான்மையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

வெள்ளையரின் ஆட்சியின் கீழ் நூற்றாண்டுகளைக் கழித்துவிட்ட பௌத்த சிங்கள சமூகம், தமது பெயருடன் கிறிஸ்தவ பெயர்களை ஒரு கௌரவ அடையாளமாக சேர்த்துக் கொண்டது. படித்த நகர்ப்புற மற்றும் கரையோர வாழ் சிங்கக் குடும்பங்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றின. டேவிட் அப்புஹாமி, டொன் அப்ளின், ஈட்டின் சிங்கோ, மார்டின், எலிஸ் நோனா என பெயர் சூட்டப்பட்டிருக்கும். சுதந்திரத்தின் பின்னர் பௌத்த சிங்கள மக்களிடையே ஏற்பட்ட தேசிய உணர்வு எழுச்சி கண்டதன் விளைவாக தமது பெயர்களில் காணப்படும் கிறிஸ்தவ, மேல்நாட்டு மற்றும் நவீன பெயர்களை பாவனையில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களது பாரம்பரிய குடும்பப் பெயர்களை அழைக்கும் பெயர்களாக மாற்றி அமைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். பௌத்த சிங்கள மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், அரசியல் ஆர்வம் கொண்டோர் முற்றிலுமாக தமது பாரம்பரிய குடும்பப் பெயர்களையே முதன்மைப் பெயர்களாக உபயோகித்து வருகின்றனர். இது சிங்கள தேசிய அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். தாழ்ந்த சாதியினரும் பத்திரிகை விளம்பரம் கொடுத்து தமது பெயர்களை உயர்சாதிப் பெயர்களாக மாற்றி அமைத்துக் கொள்வதையும் பார்க்கிறோம்.

இலங்கை அரசியலில் இஸ்லாமியர் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த வேண்டியதற்கான தேவை கடந்த காலத்தில் ஏற்பட்டதால் இந்நிலை நிறுத்தல் அவசியமானது. ஆனால் இந்த அரசியல் காரணங்கள் ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில் ஒரு மந்த நிலையை உருவாக்கத் துணை போனது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் அடையாள நிலை நிறுத்தல் காரணமாக தமிழ் இலக்கியம், முஸ்லிம் இலக்கியம் என இரண்டாக அழைக்கப்படும் மற்றும் இரண்டு பிரிவுகளாக இயங்கும் நிலை தோன்றியுள்ளது. இது, தமிழ் இலக்கிய ஆக்க முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எழுத்துத் திறன், எடுத்துக் கொள்ளப்படும் விஷயம் என்பனவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர எழுதியவர் தமிழனா, முஸ்லிமா என்று பார்க்கப்படுவதில்லை. அங்கே இன்று அயல்நாட்டு படைப்புகள் மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியான முக்கிய நூல்கள் எளிமையான தமிழ் மொழி பெயர்ப்பில் நூல்களாக வெளிவருகின்றன. ஆய்வு ரீதியாகவும், சுவை குன்றாமலும் மேலும் இன்றைய வாசிப்பு சூழலை மையமாகக் கொண்டும் ஏராளமான விஷயங்களில் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மக்களின் சனத்தொகையோடு வைத்து நோக்கும்போது அச்சடிக்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இருபது வருடங்களுக்கு முன் இருந்த நிலை மாறி, இலாபம் சம்பாதிக்கக் கூடிய ஒரு துறையாக தமிழக பதிப்புத்துறை இன்று எழுந்து நிற்கிறது. படைப்பாளன் என்ன சாதி, என்ன மதம் என்று எவரும் பார்ப்பதில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்னரும் சையது முகம்மது அண்ணாவியரை ஒரு புலவராக, பண்டிதராக மட்டும் பார்த்ததால்தான், கதிர்வேலு வாத்தியாரின் செருக்கை ஒடுக்க அவ்வூர் மக்கள் முகம்மது அண்ணாவியரை, அவர் தமிழரா, முஸ்லிமா என்ற பேதம் பார்க்காமல் அழைத்து வந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலை இன்றைய இலங்கைத் தமிழ் இலக்கிய சூழலில் கற்பனை செய்து பாருங்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்பது புரிந்து விடும்!

இன்றைக்கு ஒரு தமிழன் நபி பெருமானின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை பாடுவாரா, நூலாக சிறப்பித்து எழுதுவாரா? ஒரு முஸ்லிம் படைப்பாளர் மகாபாரத அல்லது கம்பராமாயண கதாபாத்திரங்களை சிறப்பித்து பாடவும் எழுதவும் முன்வருவாரா? அது எத்தகைய பின் விளைவுகளை அவருடைய சொந்த மற்றும் பொது வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உலகெங்கும் அரசியலில் மத ஆதிக்கம் ஓரளவுக்கேனும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இலங்கை அரசியலையும் மதத்தையும் குழப்பிக் கொண்டதால் அரசியல் நாறிப்போனது என்பதும் அது பொருளாதார ரீதியான பின்னடைவை உருவாக்கித் தந்தது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இதுபோலவே இன்று தமிழ், முஸ்லிம் இலக்கிய பரப்பிலும் மதம் சார்ந்த பார்வைகள் மலிந்து விட்டதால், தரமான, வாசகர்கள் விரும்பி வாசிக்கச் செய்கின்ற படைப்புகள் அரிதாகவே வெளிவருவதைக் காண முடிகிறது. தனிமனித துதி, அரசியல் செல்வாக்கு, மத பின்புலம், பண வசதி போன்ற காரணங்களினால் தகுதியற்ற படைப்புகளே மிகுதியாக வெளிவருகின்றன. ஒருவர் நூல் வெளியிட விரும்பினால், அதற்கான ஒரே தகுதி, அவரிடம் பணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. எழுத்துத்திறன், விளக்கும் நுணுக்கங்கள், எழுத்து உத்திகள் என்பன பெரும்பாலான படைப்புகளில் இல்லை. எழுத்து, இலக்கண, வசன மற்றும் கருத்துப் பிழைகள் மலிந்தவையாக இவை காணப்படுவதற்கு, சம்பந்தப்பட்ட எழுத்தாளர் தான் எழுதினால் அது எழுத்தாகத்தான் இருக்கும் என நம்புவதே காரணம். இன்னொருவரிடம் எழுத்துப் பிரதிகளைக் கொடுத்து சரிபார்க்கும் பழக்கமே எம்மிடம் இல்லை. இப்படிக் கொடுத்து சரிபார்ப்பது தமது கௌரவத்துக்கு இழுக்கு எனப் பல படைப்பாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்...)

No comments:

Post a Comment