Saturday, October 25, 2014

சிறுகதை - 01

"அம்மா நிக்கிறாவோ...?"


மு.சிவலிங்கம்

செல்போன் முனகியபடி மேசையில் வட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

பிரியா வெளி வாசலிலிருந்து ஓடிவந்து போனைப் பார்த்தாள். பெரியண்ணா சிவராஜ்...!

"சொல்லுங்கண்ணா..?"

"எவ்வளவு நேரம் போன்ல நிக்கிறன்..! நீ போன எடுக்காம எங்க சுத்துறனி..?"

'எங்கேயும் சுத்தல்ல.. கோலம் போட மண்ணாங்கட்டி அரைச்சிக்கிட்டு இருந்தேன்..!"

'அம்மா நிக்கிறாவோ..?"

'அம்மா நிக்கல்ல..! சாணி தெளிச்சி வாசல கூட்டிக்கிட்டு இருக்காங்க..!"
'அம்மாவ கொஞ்சம் கதைக்கச் சொல்லடி..!"

'இந்தா..!" வாடி.. போடி. "பேச்செல்லாம் ஒங்க டீச்சரோட வச்சிக்கங்க.. தெரியுமா..!"

பிரியா அம்மாவைக் கூப்பிட்டாள். "அம்மா..! கொழும்புல இருந்து சிவராஜ் அண்ணா பேசுறார்.. வாங்க சுருக்கா..!"

'அவங் கெடக்கிறான் போக்கத்தப் பய..! அவனால இப்ப என்னா ஆகப் போவுது..? அவுசரமாம் அவுசரம்..!"

எரிச்சலோடு சாணி தெளித்தக் குண்டான் பாத்திரத்தை வைத்துவிட்டு, அண்டா வாளியில் கைகளை அலம்பிக் கொண்டு, பிரியாவிடமிருந்து போனை வாங்கினாள்.

'அலோ.. அலோ.. ஒன்னுங் கேக்கமாட்டேங்குதே..?"

'ஹலோ.. இஞ்ச சிவராசா கதைக்கிறன்.. அம்மா நிக்கிறாவோ..?"

'அம்மா நிக்கலடா..! ஒக்காந்துகிட்டுதான் இருக்கேன்..! தொரைக்கு என்னா அப்புடி அவுசரம்..?'

'அம்மோய்..! நான் இங்கைக்க கொஞ்சம் அலுவலா இருந்திட்டன்.. டீச்சரோட பருத்தித்துறைக்குப் போய் வந்தனாங்கள்.. அவளின்ர ஒன்டவிட்டச் சகோதரன் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தாங்கள்.."

'எனக்குதான் கெரகமே சரியில்லியே...? எனக்கு என்னாத்துக்கு அந்தக் கதையெல்லாம்..? இப்ப என்னாத்துக்கு போன் எடுத்த..?"

'அம்மாவுக்கு ஆறு மாதகாலம் பணம் அனுப்பாம இருந்திட்டன்.. அங்கத்திய பக்கத்து வீட்டுப் பெடியன் ரமேஷ் இங்க புடவ கடையில நிக்கிறவன்.. அவனிட்ட ஆயிரம் ரூபா அனுப்பி வைக்கிறன்.. பொங்கல் செலவுக்கு வச்சிக் கொள்ளுங்கோ..!"

'அடச்சீ..!  நாற நாயே..! ஆயிரம் ரூவாயில நாக்கு வழிக்கவா..? தங்கச்சிக்கு இன்னமும் வேல சரி வரல்ல.. ஒங்கப்பாவும் வூட்டாளு... நானும் சாவ மாட்டாம கெடக்கிறேன்.. ஓந் தம்பி குமாரு இல்லாட்டிப் போனா குடும்பம் நக்கிப் போயிரும் நக்கி..! பாவம்.. கடவுளு மாதிரி எம்புள்ள...  அவென் குடும்பத்துக்காக இன்னமும் கலியாணம் வாணாமுன்னு இருக்கான்.. அவென் மாதிரி ஆம்பிள்ளைங்க எல்லாம்  குடும்பமாகி புள்ள குட்டிபெத்து வாழுறாங்க..! நீ நல்லா இருப்பியா..? இந்த வயசு போன காலத்துல எங்கள அம்போன்னு வுட்டுப்புட்டு கொழும்புப் பக்கம் போயிட்டியே...! ஒனக்கு எப்பிடியெல்லாம்  செலவழிச்சோம்..?.. புருசன் வூட்டுக்கு பொண்டாட்டி  வர்றமாதிரி... நீ பொண்டாட்டி வூட்டுக்கு புருசானா போயிட்டியே..?"

"அம்மா..! பொறுங்கோவன்.. அடுத்த மாதம் கொஞ்சம் சேத்து பணம் அனுப்புறன்.. இப்ப நான் கோல் எடுத்த காரணம் என்னென்டால், வரிய பிறப்பு முடிய யூலை மாதம் யெர்மணி போறம்.. டீச்சர்ட தமையன் எங்களை எடுக்கினம்.. அங்கால போன பிறகு வேல கிடைச்சதும் முடிஞ்சத செய்றன்..!"

"போன வைய்யிடா..! இந்த மாதிரி ஏழ்ப்பாணத்து பேச்சு பேச வாணாம்முன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்..? ஒம் மவன் அவந்தான்  ஏவுட்டு பேரப்புள்ள... என்னய பாத்து " அன்டின்னு"   கூப்புடுறான்..! நானு அவுனுக்கு அன்டியும் இல்ல... குண்டியுமில்ல...! அப்பாயின்னு சொல்லிக் குடு..!"

பார்வதி அம்மாளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. இருந்தாலும் பேரப் பிள்ளைகளைப் பற்றி  விசாரிப்பதற்கு ஆசைப்பட்டாள்.

"புள்ளைங்கெல்லாம் சொகமா இருக்காங்களா?"

"ஓம்!..ஓம்..!"  

"ஆமான்னு சொல்லு!"

"அம்மா.. நான் போன வைக்கிறன்!"

"சரி!"

"அடியே பிரியா..! அந்த கொழும்பு மாஸ்டரு இனிமே போன் எடுத்தான்னா எனக்கிட்ட குடுத்து தொலைக்காத..! இவ்வளவு நேரமும் வெட்டிப் பேச்சி.... டீச்சர் பொண்டாட்டி அவன வெளிநாட்டுக்கு கூட்டிக்கிட்டு போகப் போறாளாம்.!. செவனேன்னு நம்ம ஸ்கூல்ல நம்ம புள்ளைங்களுக்கு படிச்சுக் குடுத்துகிட்டு இருந்தவன டீச்சர் கொழும்புக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டாளே!.. குடும்பத்தோட ஒத்து ஒறவு இல்லாம செஞ்சிப்புட்டாளே!.. நம்ம சாதி சனத்துல எவ்வளவு புள்ளைக இருக்காளுக..!! இந்த எருமமாட்டு நாயி அவளுக ஒருத்திய கட்டியிருந்தாலும்  அத்த மாமான்னு குடும்பத்தோட குடும்பமா இருந்திருப்பாளே..!" பார்வதி அம்மாள் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்..

பாவம் பார்வதியம்மாள்.. மூன்று பிள்ளைகளுக்கும் கல்வியைக் கொடுத்ததில் சாதனை புரிந்தவள். ஐம்பது வருசங்களுக்கு மேலாக கூடை கயிறு அழுத்தி.. அழுத்தி.. உச்சந் தலைமயிர் அறுபட்டு.. அறுபட்டுப் போயிருக்கும்..! கணவன் மாதவனும் யந்திர உழைப்பாளி.. வீட்டுத் தோட்டம் பெரியளவில் இருந்தது.. கிழங்கு, கோவா, கெரட், லீக்ஸ் என்று மரக்கறி வருமானம் கை கொடுத்தது.. இரண்டு கறவைப் பசுக்களை பெருஞ் சொத்தாக வளர்த்தார்கள்.. பிள்ளைகள் மூன்றும் தலையெடுக்கும் வரை உழைப்பு ஓயவில்லை.. மாதவன் நோயில் விழவும் எல்லாமே போச்சு  என்ற கதையாகி விட்டது..

மூத்த மகன் சிவராஜூக்கு ஆசிரியர் வேலை கிடைத்து மூன்று வருசங்கள் வீட்டுக்கு உதவியாகவிருந்தான்.. அவனது முதலீடும் விவசாயத்துக்கு உதவியது.. தம்பியின் உடல் உழைப்பும்  இன்னும் ஒரு படிக்கு வருமானத்தை உயர்த்திக் கொடுத்தது.. இந்த வளர்ச்சி சிவராஜின்  கலியாணத்தோடு வீழ்ந்துப் போய் விட்டது..

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆசிரியை தங்கேஸ்வரி இவனைவிட ஐந்து வயது மூப்பு. எப்படியோ காதலென்று சொல்லாவிட்டாலும் அவளைப் பொறுத்தளவில் அது காரியக் கல்யாணமாக முடிந்தது!

கலியாணத்துக்குப் பிறகு  சிவராஜ் பெற்றோரை விட்டு, மனைவியின்  குடும்பத்துக்குள் புலம் பெயர்ந்து விட்ட துர்ப்பாக்கியவானாகி.... காணாமல் போகும் நிலைமைக்கும் இழுத்துச் செல்லப்பட்டு.... ஒரு கடத்தல் கலாச்சாரத்துக்குள்ளாகி... அதுவும் ஒருவகை அரசியலாகி... பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்குள்ளாகிய கைதியைப்போன்று அவனது வாழ்க்கையின் இடைவெளி விசாலித்துப் போய்விட்டது..! சிங்களமோ  தமிழோ.. வெளியினத்துப் பெண்களைக் கல்யாணம் செய்வதென்பது மலையகப்  "படிச்ச" மாப்பிள்ளைகளின் பிடரியில் மீசை முளைத்து விட்ட சாதனையாகி விடுகிறது..!

தோட்டப் பெற்றோரின் அடுத்தக்கட்டக் குடும்பப் பொருளாதாரம் பிள்ளைகளிடமே தங்கியுள்ளது..

முழுக்க நம்பியிருந்த மூத்த பிள்ளையின் உதவியை இழந்து விட்ட ஒருதோட்டக் குடும்பத்துக்கு முட்டுக் கொடுப்பதற்கு இரண்டாவது பிள்ளை துணையாக வேண்டும். தம்பி மூர்த்தி ஏ.எல். பரீட்சை எழுதாமலேயே மரக்கறி  விவசாயத்தில் இறங்கிக் குடும்பச் சுமையைத் தாங்குவதற்கு முன் வந்தான். அவனது தோல்வி கண்ட வாழ்க்கை தங்கச்சியை உருவாக்குவதில் வெற்றி கண்டு கொண்டிருந்தது..

சிவராஜ் என்ற பார்வதி அம்மாளின் மகன், சிவராசாவாக மாறிக் கொண்டான். சிவராசாவாக மாறியது மட்டுமல்ல, பேச்சு மொழியும் மாறிப் போய் அம்மாவை, தங்கச்சியை "அவள்.. இவள்" என்றும் "வாடி.. போடி." என்றும் பேச முற்பட்ட வாய் மொழி அட்டூழியங்கள், வம்பு சண்டையை உருவாக்க... குடும்பம் நடு ராத்திரியிலும், அக்னி நட்சத்திரத்தைக் கண்ட கதையாகிவிட்டது!

"கேவலமா இருக்கு...! அவமானமா இருக்கு...! நம்மாளு சுருட்டுக் கடைக்கு வேலைக்குப்  போனாலும் பேச்சை மாத்திக்கிறான்.... சோத்துக் கடைக்கு வேலைக்குப் போனாலும் பேச்சை மாத்திக்கிறான்..  வாத்தியாருமாருங்களும்  அப்பிடியேதான் பேசுறாங்க... அண்ணன் ஒரிஜினல் உரும்பிராய்காரனாகிட்டான்;!" மூர்த்தி இந்த இமிடேஷன்காரர்களை நினைத்து அழுவதா.. சிரிப்பதா... என்று ஏளனமாக யோசித்துக் கொண்டிருந்தான்....

செல்போன் சட்டைப் பைக்குள் ராகமிசைத்தது. அண்ணன் சிவராஜிடமிருந்துதான் அழைப்பு...

"தம்பி..! நான் சிவராசா கதைக்கிறன்.. தேயிலை த்ரீ கிலோஸ் வேணும்.. வாங்கி வடிவா பக்கெட் செய்து பொரீன் கொண்டு போற மாதிரி வை..! நாளைக்கு வீட்ட வருவன். அம்மா, அப்பா, தங்கச்சிய பாத்திட்டு போக வேணும்.."

"அண்ணே..! ஒரேயடியா வெளி நாட்டுல செட்டில் ஆகப் போறீங்க.  ஒரு நாளாவது அம்மா, அப்பாவோட வீட்ல தங்கி போனா எல்லாருக்கும் சந்தோசமா இருக்குந்தானே..!"

வீட்டில் வந்து தங்கிச் செல்வதற்கு தங்கேஸ்வரி டீச்சர் விரும்பமாட்டாள்.. அவளும் பருத்தித்துறை வடையைப்போல இறுக்கமானவள்! "அப்பாவுக்கு சுகமில்ல.. சுகம் பாக்க காசு அனுப்ப வேணும்.. தங்கச்சிக்கு எட்மிசன் பீஸ் அனுப்ப வேணும்.." என்று இழு.. இழு.. என்று ஒருநாள் இழுத்தப்போது, அவள் பத்ரகாளி அவதாரம் எடுத்து ஆடினாளே ஆட்டம்..! சிவராஜ் என்ற சிவராசாவுக்கு அந்த ஆட்டம்  நினைவுக்கு வந்து, அவனை ஆட்டம் காணச் செய்தது. 
"என்னப்பா நீங்கள்..? அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி,  எண்டு எல்லோரையும் வீல்ச் செயாரில் வைச்சல்லோ தள்ளப் பாக்கிறியள்..! அவங்கள சுயமா நடக்க விடுங்கோவன்.அப்பா.! இப்ப நீங்க எண்ட மனுசன் அப்பா!…விளங்கிச்சோ..?" சிவராஜூக்கு வியர்த்தது.

"ஐயோ தம்பி..! குறை நினைக்காத ராசா..! நான் பொரீன் போய் ஒருக்கா வீட்ட வருவன்.. நீ தேயிலையை  மட்டும் பார்சல் பண்ணிவை..! போன வக்கிறன்.."                     

No comments:

Post a Comment