Thursday, October 30, 2014

தேவதாசி நாகரத்தினம்மா -1

தியாகையரின் திருவையாறு சமாதியை கோவிலாக்கியவர்


- அருள் சத்தியநாதன்

மேடுகள் பள்ளங்களாவதும் பள்ளங்கள் மேடுகளாவதும் இயற்கை. ஒரு காலத்தில் போற்றி ஆராதிக்கப்படுபவை இன்னொரு காலத்தில் இகழ்ந்து புழுதியில் வீசப்படும். பெண்கள் இழுத்துப் போர்த்தியபடி இதுதான் எங்கள் கலாசாரம் என்று சொல்வதைக் கேட்ட அமெரிக்க உல்லாசப் பயணிகள், இதே பெண்கள்தானா இதே இந்தியாவின் கஜூராஹோ காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்? காம சூத்திரத்தை இந்திய வத்ஸாயர்தானே படைத்தார்! என்று மலைப்புடன் கேட்டிருக்கிறார்கள்.

இன்று இந்திய, தமிழ் கலாசாரங்கள் எவற்றை எல்லாம் அருவருப்புடனும் சகிப்புத்தன்மையின்றியும் பார்க்கின்றனவோ அவை அனைத்தும் ஒரு காலத்தில் இந்திய மண்ணில் ஆராதிக்கப்பட்டிருக்கின்றன. தேவதாசி முறையும் அவற்றில் ஒன்று.

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வந்த பின்னரேயே அந்நாட்டில் நிலவி வந்த ஆண் சார்பான பாலியல் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஒரு ஆண் பல தாரங்களை வைத்துக் கொள்வதும் தாசி வீட்டுக்கு சென்று வருவதும் இந்திய சமுதாயத்தில் முற்றிலும் ஏற்கப்பட்ட விஷயமே. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை வைத்துக் கொள்வதும் அல்லது தாசி வீட்டுக்கு சென்று வருவதும் அன்றைய ஆண்களுக்கு கௌரவமான விஷயங்கள். தாசி வீடு சென்று வருவதும் சாதாரண விஷயம் என்பதை கோவலன் கதை மூலமாக சிலப்பதிகாரம் நிறுவுகிறது. தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்படும்வரை செல்வந்தர்கள் தேவதாசி வீட்டுக்கு செல்வதை கௌரவத்தின் சின்னமாகவே கருதி வந்தார்கள்.

சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் இந்திரவிழா, வருடா வருடம் அரசனால் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா. ஆடல் பாடல், பாலியல் சார்ந்த கேளிக்கைகள் என்பதாக வடிவமைக்கப்பட்டிருந்த விழா அது. கோவலன் அங்கே மாதவியைக் காண்கிறான். அவளது அழகிலும் கலைத் திறமையிலும், அறிவிலும் கோவலன் மயங்கிப் போகிறான். அவளே கதி எனக் கிடக்கிறான். இது சிலப்பதிகாரம் சொல்லும் கதை. மாதவி வீடே கதி எனக் கிடக்கும் கோவலனை கண்ணகி திட்டித் தீர்த்ததாகவோ சபித்ததாகவோ சிலப்பதிகாரத்தில் செய்தி இல்லை. ஏனெனில் ஆண் தாசி வீடு போய்வருவதும் ஒன்றும் விமர்சனத்துக்குரியதல்ல. தன் மனைவி மட்டுமே என வாழ்ந்தால்தான் அன்றைய ஆணுக்கு பிரச்சினைகள் தோன்றி இருக்குமோ, என்னவோ!

ஆனால் மாதவி செல்வாக்கான ஒரு பெண்ணாகத் திகழ்ந்திருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம். இத்தகைய தேவதாசிமார் அல்லது கணிகைகள் சமூக செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார்கள். அரசர்கள், திவான்மார், ஜமீந்தார்கள், மந்திரிமார் போன்ற சமூக அந்தஸ்துடைய பெரும் புள்ளிகள் மத்தியில் செருக்கும் செல்வாக்குமாக இப்பெண்கள் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். சமூகமும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது.

இவ்வாறு செல்வாக்குடன் திகழ்ந்த தேவதாசிதான் நாகரத்தினம் அம்மா. இவர் தேவதாசி குலத்தில் பிறந்து தேவதாசியாக வாழ்ந்தவர். தேவதாசி முறை ஒழிப்பு மசோதா தமிழக சட்ட சபையில் மருத்துவர் முத்து லட்சுமியால் கொண்டுவரப்பட்ட போது, அம்மசோதாவை தடுக்கும் வகையில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டவர் இந்த நாகரத்தினம்மா. இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்படுவதை கடுமையாக எதிர்த்தார் காங்கிரஸ் தூண்களில் ஒருவரான தீரர் சத்தியமூர்த்தி. தேவதாசிகள் சமூகத்தில் இருக்க வேண்டும் என வாதாடினார் அவர். அவர் மீது நாகரத்தினம்மா கொண்டிருந்த செல்வாக்கே இம்மசோதாவை அவர் எதிர்க்கக் காரணம்.

தேவதாசி குலம் நலிந்து நலிவடைந்து கொண்டிருந்த அதன் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்த நாகரத்தினம்மா, மிகுந்த செல்வாக்கோடு இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர், இவர் பெங்களுருவைச் சேர்ந்த கன்னடப் பெண். நன்றாகத் தமிழ் பேசக்கூடிய இவர் சென்னையிலேயே வாழ்ந்தார். செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்த நாகரத்தினம்மா, தேவதாசி ஒழிப்பு சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் தேவதாசிகளின் நிலை பரிதாபகரமானது. பலர் தெருவுக்கு வந்தனர். சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் நிர்க்கதியாயினர். இன்றைக்கும் பல தேவதாசிகள் வயதான நிலையில் தமது குடும்பத்தை நம்பி வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர்.

தேவதாசிமாருக்கு நன்றாக நடனமாட வரும். சங்கீதம் பாடக்கூடியவர்களாகவும் இசைக் கருவிகளை இசைக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். திறமையுள்ளவர்கள் சிருங்கார நாடகங்களை மேடையேற்றினர். எனவே, இன்று ஒரு நடிகைக்கு இருக்கக்கூடிய கௌரவமும் கவர்ச்சியும், அபிமானமும், கூத்துக்கள் மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த அக்காலக்கட்டத்தில், இந்த வித்தை தெரிந்த தேவதாசிகளுக்கு இருந்ததை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

நாகரத்தினம்மாளுக்கு நல்ல சாரீரம். இசைக் கருவிகளையும் இசைக்க முடியும். நடனமும் வரும். கேட்பவரைக் கவர்கின்ற மாதிரி பேசத் தெரிந்தவர். அவரது பேச்சும் உடல் மொழிகளும் எதிரில் இருப்பவரை வசியம் செய்யக் கூடியதாக இருந்ததால், அவரை நாடி பெரிய மனிதர்கள் வந்தார்கள். இப்பெரிய மனிதர் தொடர்புகளால் அவருக்கு நிறைய பணம் வந்தது. நகைகள், இரத்தினங்கள் வைரங்கள், உயர் வாசனைப் பொருட்கள், ஏராளமான விலையுயர்ந்த சேலைகள் என நாகரத்தினம்மா ராஜவாழ்க்கை வாழ்ந்தார். வீடு, காணி எனப் பல சொத்துகளைச் சேர்ந்திருந்தார்.

இவ்வாறு 'பெரிய இடத்துப் பெண்|ணாக வாழ்ந்த நாகரத்தினம்மா தன் வாழ்வின் பிற்பகுதியில் இன்னொரு பரிமாணத்தை சென்றடைந்தார். திருவையாரில் சங்கீதமூர்த்தியான தியாகையரின் கல்லறை கேட்பாரற்றுக் கிடந்தது. முற்புதர்களும், பாம்பும் புற்றுகளும் நிறைந்த கழிப்பிடமாகக் காட்சியளித்த நாதப் பிரம்மமான தியாகையரின் கல்லறையைப் புதுப்பித்து, அழகிய சமாதி கோவிலாக மாற்றியமைத்தது. வேறு யாருமல்ல, தேவதாசியான நாகரத்தினம்மாவேதான்! கேட்பாரற்றுக் கிடந்த இந்த இடத்தை தன் பெயருக்கு வாங்கி, அதைக் கோவிலாக்கிய இவர், பிற்காலத்தில் திருவையாற்றில் திருப்பணி செய்து நாதப்பிரம்மத்துக்கு சங்கீத அஞ்சலி செய்தையே தன் கடமையாகக் கொண்டிருந்தார். இதனால் அவரைத் தூற்றியவர்களும் போற்றத் தொடங்கினர் என்பது விசித்திரமான உண்மை.

தியாகையர் தன் வாழ்நாளில் பெண்களை நாடிச் சென்றதாக ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை. பரத்தையர் அல்லது தேவதாசிகள் பற்றி அவர் நல் அபிப்பிராயம் கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், கர்நாடக இசையை தூக்கி நிறுத்தி, மகோன்னதமான கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் திருவையாறு கல்லறையைப் புதுப்பித்து அழிவில் இருந்து காப்பாற்றி அவ்விடத்தை ஒரு இசைக் கோவிலாக மாற்றியவர் ஒரு தேவதாசி என்பதை எப்படி வியாக்கியானம் செய்வது?

நாகரத்தினம்மா பெங்களுருவில் வாழ்ந்தபோது அவரது போசகராக விளங்கியவர் பெயர் நரஹரி ராவ். இவர் மைசூர் நீதிமன்ற நீதிபதியாக விளங்கினார். மைசூர் மகாராஜா, திவான்கள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

நரஹரி ராவும் அவர் மனைவி சீதம்மாவும் விருந்தோம்பலில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததுடன், கோட்டை வெங்கடரமணஸ்வாமி கோவிலுக்கு அருகில் (பெங்களுரு மருத்துவக் கல்லூரிக்கருகில்) இருந்த அவர்களுடைய அரண்மனை போன்ற வீடு ஏழை மாணவர்களுக்கும் சங்கீத வித்வான்களுக்கும், ஏன், உதவி தேவைப்பட்டவர்கள் அனைவருக்குமே உதவ எப்போதும் திறந்தே இருந்தது. எப்போதும் யாராவது ஒருவர் உண்ண இருந்துகொண்டே இருந்ததால், அந்த வீட்டின் அடுப்பு ஒருபோதும் அணைவதேயில்லை என்று பெயர் பெற்றது.

அத்தகைய தர்மாத்மாவும் உயர் அதிகாரியுமான ஒருவருடைய ஆதரவைப் பெற நாகரத்தினம்மா மிகுந்த பாக்கியம் செய்திருந்தாள் என்றே கூற வேண்டும். ஒரு முன்னணி நீதிபதியும் ஒரு தேவதாசியும் சிநேகமாக இருந்ததில் அவர் மனைவிக்கு ஆட்சேபமில்லை. என்பதுதான் பெரிய அதிசயம் என்பது கவனிக்கத்தக்கது. மாதவி - கோவலன் நட்பை கண்ணகி ஆட்சேபிக்கவில்லை என்பதுடன் ஒப்பிடலாம். அத்துடன் நாகரத்தினம் அடிக்கடி நீதிபதியின் வீட்டிற்கு அவர் மனைவியுடன் அளவளாவுவதற்கு வருமளவிற்கு சீதம்மாவுடன் நாகரத்தினத்துக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதி ராவே, நாகரத்தினம்மாவின் வீட்டிற்கு முடிந்த போதெல்லாம் சென்று விடுவார். வழக்கு மன்றத்தில் அன்றைய வேலை முடிந்தவுடன், அவர் தன் கோச் வண்டியில் நாகரத்தினம்மாவின் வீட்டிற்கு விரைவார். நீதிமன்றத்தின் இலச்சினைகள் பொருத்தப்பட்டு, சீருடைய மற்றும் கையில் கோலுடன் காட்சிதரும் பணியாள் பின் தொடர நெரிசல் மிகுந்த நகரப் பேட்டையிலிருந்த நாகரத்தினத்தின் வீட்டு வாசலில் வந்து நிற்கும் நீதிபதியின் வண்டி பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது தொடர்பான பலவிதமான வதந்திகள் திவான் கே. சேஷாத்ரி அய்யர் செவிகளையும் சென்று அடைந்தது. ஏற்கனவே அரண்மனை, தேவதாசிகளுக்கு அளித்து வந்த ஆதரவைக் குறைத்து வந்ததால், நரஹரி ராவ் நாகரத்தினத்திற்கு அளித்த வெளிப்படையான ஆதரவு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு இழுக்கு விளைவிப்பதாக இருக்குமென்று திவான் கருதினார். ஒருநாள் அவர் ராவிடம் இதுபற்றிக் கண்டனம் தெரிவித்து, நாகரத்தினத்திற்கு ராவ் ஆதரவு அளிப்பதைப் பற்றித் தமக்கு ஆட்சேபனை இருக்கவில்லையென்றாலும் அவருடைய அலுவலக இலச்சினைகளை அத்துடன் சம்பந்தப்படுத்தாமல் இருப்பது புத்திசாலித்தனமென்று எடுத்துக் கூறினார்.

நீதிபதி ராவும் இந்தக் கருத்தை ஏற்றார். ஏற்கனவே அவர் பெங்களுருவின் நெரிசல்களிலிருந்து ஒதுங்கி, தான் நாகரத்தினத்தின் சங்கீதத்தை இடையூறு ஏதுமில்லாமல் கேட்கக் கூடிய ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். நகரத்தின் அன்றைய எல்லைகளிலிருந்து சற்று விலகியிருந்த அடர்ந்த காட்டினிடையே அமைந்த சிறிய குன்றை அவர் தேர்ந்தெடுத்தார். அங்கு நாகரத்தினத்திற்காக ஒரு வீட்டை எழுப்பி, திவான் சேஷாத்ரி அய்யர் உட்பட நீதிமன்றத்தின் பல நீதிபதிகளையும் நாகரத்தினத்தின் கச்சேரிகளைக் கேட்க உடன் அழைத்துச் சென்றார். சில நேரங்களில் அவருடைய பேத்திமாரும் அவருடன் சென்றனர். அந்தக் குன்றும் அதில் வாழ்ந்த நாயகியும் அவர் மனத்துக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தார்கள் என்பதால், (இன்றும் அதே பெயரைத் தாங்கி நிற்கும்) 'மவுண்ட்ஜோய்' - ஆனந்தக் குன்று - என்ற பெயரை அந்த இடத்திற்கு அளித்தார். அந்தக் குன்றுடன் அவர் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததால் உள்ளுர்வாசிகளும் அதற்கு ஒரு பெயரைக் கொடுத்தனர் - நரஹரி ராயகுட்டா (நரஹரி ராவின் குன்று) என்று.

(தொடரும்) 

நன்றி- வண்ண வானவில்

Sunday, October 26, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 08

கதிர்வேல் வாத்தியாரை வாதத்திறமையால் வீழ்த்திய முகம்மது அண்ணாவியார்!


அருள் சத்தியநாதன்

முதல் இஸ்லாமிய தமிழ் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அதன் பெயர் பல்சந்தமாலை. இதன் பின்னர் பல இஸ்லாமிய புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வந்துள்ளனர். இவர்களுள் மிகச் சிறந்த கவிராயராக பேசப்படுபவர், சையது முகம்மது அண்ணாவியார். அலி நாமா (கி.பி. 1747) போன்ற புகழ்பெற்ற இஸ்லாமிய காவியங்களை இயற்றியவர் இவர். இவர் இயற்றியதுதான் மகாபாரத அம்மானை. வியாச பாரதத்தின் ஒரு பகுதியை 4100 பாடல்களில் இவர் மொழி பெயர்த்திருக்கிறார். மகா பாரதத்தின் இறுதிப் பகுதியில் தருமர் அசுவமேத யாகம் செய்கிறார். இப்பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்ற பெயரில் நூலாக இயற்றினார் சையது அண்ணாவியார்.

இவர் பேரிலான ஒரு நினைவு மலர் 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கவிஞர் கா.மு.ஷெரிப் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தனது நினைவை அவர் குறிப்பிட்டுள்ளார். அறியப்படாத அறிஞர்கள் என்ற தலைப்பில் பொ.வேல்சாமி எழுதியிருக்கும் கட்டுரையில் கா.மு.ஷெரிபின் அனுபவத்தை எடுத்துரைத்துள்ளார். அதுவே இங்கு தரப்படுகிறது.

'நான் அரசியலில் இருந்தபோது பேராவூரணிக்கு கீழ்பால் உள்ள கொற்றைக்காடு என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். இரவு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, ஒரு விவசாயி வீட்டின் முன் பகுதியில் படுத்திருந்தேன். அங்கே எழுபது வயதுடைய ஒருவர் வந்தார். வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தார். பின்னர் தனது சாரீர வளத்தைக் கூட்டிப் பாடலானார். அவர் பாடியது மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றிய நெடிய பாட்டு. அது எந்தப் பாரதத்தில் உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதிராமப்பட்டினம் அண்ணாவியார் பாடியது என்றார். நான், அது தனிநூலா? எனக் கேட்டேன்.
ஆமாம். கர்ணபர்வம் என்ற பெயரில் இப்போது நான் பாடிய அம்மானைப் பாடலை அவர்தான் பாடியுள்ளார் என்று கூறிய அம் முதியவர்,

இந்துக்களின் பதினெட்டுப் புராணங்களையும் அம்மானை அம்மானையாக அண்ணாவியார் எழுதியிருக்கிறாரே! அது உங்களுக்குத் தெரியாதா? என்றும் கேட்டார். அதிராம பட்டினம் அண்ணாவியாரின் பாட்டனார் எழுதியவையாம் அவை. இப்போதிருக்கும் அண்ணாவியருக்கே வயது தொண்ணூறுக்கு மேலாம். எனவே பாட்டனார் காலம் நூற்றாண்டுகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். எனினும் இன்றைக்கும் அவர் பாடல்கள் கிராமங்களில் பாடப்படுகின்றன. இந்த அண்ணாவியாரை அந்த கிராமவாசி தெய்வம் என்றார்!' என்று கா.மு.ஷெரிப் எழுதியுள்ளார்.

இந்த அண்ணாவியார் மதுரையைச் சேர்ந்தவர். பெற்றோரை இழந்த அவர், பட்டுக்கோட்டையை அடுத்துள்ள மதுக்கூர் என்ற ஊரில், முஸ்லிம்களின் ஆதரவில் வளர்ந்தார். அக்காலத்தில் குர்ஆனையும் பல இஸ்லாமிய நூல்களையும் அவர் கற்றார். தமிழ் கற்கும் ஆவலில், மதுக்கூரை அடுத்துள்ள முத்தாக்குறிச்சி என்ற ஊரில் திண்ணைப்பள்ளி நடத்தி வந்த வாணிப செட்டியாரின் பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்றார். பின்னர் தஞ்சையை அடுத்துள்ள அய்யம் பேட்டைக்கு வந்து, அங்கு பள்ளிக்கூடம் வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் அண்ணாவியார் (வாத்தியார்) என அழைக்கப்படலானார்.

அதிராமபட்டினத்தில் அக்காலத்தில் கதிர்வேல் வாத்தியார் தனது பாண்டித்திய செருக்கு காரணமாக பலரை மிரட்டி வந்தாராம். அவரை அடக்க அய்யம் பேட்டை அண்ணாவியார்தான் சரியான ஆள் எனக் கருதிய ஊர்மக்கள். அதிராமபட்டினத்துக்கு அண்ணாவியாரை அழைத்து வந்தனர். கதிர்வேல் வாத்தியாருக்கும் சையது முகம்மது அண்ணாவியாருக்கும் இடையே நடைபெற்ற வாதத்தில் கதிர்வேல் வாத்தியார் தோல்வியடைந்து அண்ணாவியாருக்கு சீடரானார்.

இந்த அண்ணாவியாரின் வம்சாவளியில் வந்த பேரன் சையது முகம்மது அண்ணாவியார் 1987 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்துக்கு ஓலைச் சுவடி தொகுதியொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இதில் 4100 பாடல்கள் இருந்தன. 2004 ஆம் ஆண்டு தஞ்சை பல்கலைக்கழகம் இதை நூலாக வெளியிட்டது.

இவ்வாறாக, தமிழகத்து முஸ்லிம் புலவர்களும், தனவந்தர்களும் தமிழ் இலக்கியத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் பாராமல் சேவையாற்றி வந்துள்ளனர். அன்றைய முஸ்லிம்களும் தமிழ் இந்துக்களும் நீவேறு மதம், நான் வேறு மதம் என்றும் உன் கலாசாரம் வேறு என் கலாசாரம் வேறு என்றும் எக்காரணம் கொண்டும் எங்கள் விஷயத்தில் தலையிட உரிமை கிடையாது என்றும் கோடுகள் கீறவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று எளிதாகக் கூறிவிடலாம். தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வாறான ஒரு ஆரோக்கிய நிலை காணப்படுகிறது. ஆனால், தமிழ் சமூகம் வேறு முஸ்லிம் சமூகம் வேறு என இலங்கையில் இத்தமிழ் பேசும் சமூதாயத்தை அரசியல் இரு கூறுகளாகப் பிரித்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. இது, மூன்றாம் தரப்பை நடுவில் கொண்டு நிறுத்தியதோடு மூன்றாம் தரப்பின் இஷ்டப்படி ஆடும் பொம்மைகளாக இரு தரப்பாரும் மாறிப்போன அவலத்தையும் காண்கிறோம்.

இதற்கு மேலாக, இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் இப்போக்கு நிச்சயமாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இஸ்லாமியர் தம்மைத் தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்கின்றனர். இந்தியன், தமிழன், இஸ்லாமியன் என்ற வரிசையில் தம்மை அடையாளப்படுத்துவதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் இலங்கையில் இஸ்லாமியருக்கு ஒரு அரசியல் முகம் இருக்கிறது. அது இஸ்லாமியரை, 'தமிழன்' என்ற வரையறைக்குள் அடையாளப்படுத்தவிடுவதில்லை. இலங்கையின் இஸ்லாமிய அரசியலுக்கு 'இஸ்லாமியன்' என்று முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும், நிர்ப்பந்தமும் உள்ளது. இதைப் புரிந்து கொள்ள சிங்களவர்களின் மனப்பான்மையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

வெள்ளையரின் ஆட்சியின் கீழ் நூற்றாண்டுகளைக் கழித்துவிட்ட பௌத்த சிங்கள சமூகம், தமது பெயருடன் கிறிஸ்தவ பெயர்களை ஒரு கௌரவ அடையாளமாக சேர்த்துக் கொண்டது. படித்த நகர்ப்புற மற்றும் கரையோர வாழ் சிங்கக் குடும்பங்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றின. டேவிட் அப்புஹாமி, டொன் அப்ளின், ஈட்டின் சிங்கோ, மார்டின், எலிஸ் நோனா என பெயர் சூட்டப்பட்டிருக்கும். சுதந்திரத்தின் பின்னர் பௌத்த சிங்கள மக்களிடையே ஏற்பட்ட தேசிய உணர்வு எழுச்சி கண்டதன் விளைவாக தமது பெயர்களில் காணப்படும் கிறிஸ்தவ, மேல்நாட்டு மற்றும் நவீன பெயர்களை பாவனையில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களது பாரம்பரிய குடும்பப் பெயர்களை அழைக்கும் பெயர்களாக மாற்றி அமைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். பௌத்த சிங்கள மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், அரசியல் ஆர்வம் கொண்டோர் முற்றிலுமாக தமது பாரம்பரிய குடும்பப் பெயர்களையே முதன்மைப் பெயர்களாக உபயோகித்து வருகின்றனர். இது சிங்கள தேசிய அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். தாழ்ந்த சாதியினரும் பத்திரிகை விளம்பரம் கொடுத்து தமது பெயர்களை உயர்சாதிப் பெயர்களாக மாற்றி அமைத்துக் கொள்வதையும் பார்க்கிறோம்.

இலங்கை அரசியலில் இஸ்லாமியர் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த வேண்டியதற்கான தேவை கடந்த காலத்தில் ஏற்பட்டதால் இந்நிலை நிறுத்தல் அவசியமானது. ஆனால் இந்த அரசியல் காரணங்கள் ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில் ஒரு மந்த நிலையை உருவாக்கத் துணை போனது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் அடையாள நிலை நிறுத்தல் காரணமாக தமிழ் இலக்கியம், முஸ்லிம் இலக்கியம் என இரண்டாக அழைக்கப்படும் மற்றும் இரண்டு பிரிவுகளாக இயங்கும் நிலை தோன்றியுள்ளது. இது, தமிழ் இலக்கிய ஆக்க முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எழுத்துத் திறன், எடுத்துக் கொள்ளப்படும் விஷயம் என்பனவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர எழுதியவர் தமிழனா, முஸ்லிமா என்று பார்க்கப்படுவதில்லை. அங்கே இன்று அயல்நாட்டு படைப்புகள் மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியான முக்கிய நூல்கள் எளிமையான தமிழ் மொழி பெயர்ப்பில் நூல்களாக வெளிவருகின்றன. ஆய்வு ரீதியாகவும், சுவை குன்றாமலும் மேலும் இன்றைய வாசிப்பு சூழலை மையமாகக் கொண்டும் ஏராளமான விஷயங்களில் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மக்களின் சனத்தொகையோடு வைத்து நோக்கும்போது அச்சடிக்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இருபது வருடங்களுக்கு முன் இருந்த நிலை மாறி, இலாபம் சம்பாதிக்கக் கூடிய ஒரு துறையாக தமிழக பதிப்புத்துறை இன்று எழுந்து நிற்கிறது. படைப்பாளன் என்ன சாதி, என்ன மதம் என்று எவரும் பார்ப்பதில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்னரும் சையது முகம்மது அண்ணாவியரை ஒரு புலவராக, பண்டிதராக மட்டும் பார்த்ததால்தான், கதிர்வேலு வாத்தியாரின் செருக்கை ஒடுக்க அவ்வூர் மக்கள் முகம்மது அண்ணாவியரை, அவர் தமிழரா, முஸ்லிமா என்ற பேதம் பார்க்காமல் அழைத்து வந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலை இன்றைய இலங்கைத் தமிழ் இலக்கிய சூழலில் கற்பனை செய்து பாருங்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்பது புரிந்து விடும்!

இன்றைக்கு ஒரு தமிழன் நபி பெருமானின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை பாடுவாரா, நூலாக சிறப்பித்து எழுதுவாரா? ஒரு முஸ்லிம் படைப்பாளர் மகாபாரத அல்லது கம்பராமாயண கதாபாத்திரங்களை சிறப்பித்து பாடவும் எழுதவும் முன்வருவாரா? அது எத்தகைய பின் விளைவுகளை அவருடைய சொந்த மற்றும் பொது வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உலகெங்கும் அரசியலில் மத ஆதிக்கம் ஓரளவுக்கேனும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இலங்கை அரசியலையும் மதத்தையும் குழப்பிக் கொண்டதால் அரசியல் நாறிப்போனது என்பதும் அது பொருளாதார ரீதியான பின்னடைவை உருவாக்கித் தந்தது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இதுபோலவே இன்று தமிழ், முஸ்லிம் இலக்கிய பரப்பிலும் மதம் சார்ந்த பார்வைகள் மலிந்து விட்டதால், தரமான, வாசகர்கள் விரும்பி வாசிக்கச் செய்கின்ற படைப்புகள் அரிதாகவே வெளிவருவதைக் காண முடிகிறது. தனிமனித துதி, அரசியல் செல்வாக்கு, மத பின்புலம், பண வசதி போன்ற காரணங்களினால் தகுதியற்ற படைப்புகளே மிகுதியாக வெளிவருகின்றன. ஒருவர் நூல் வெளியிட விரும்பினால், அதற்கான ஒரே தகுதி, அவரிடம் பணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. எழுத்துத்திறன், விளக்கும் நுணுக்கங்கள், எழுத்து உத்திகள் என்பன பெரும்பாலான படைப்புகளில் இல்லை. எழுத்து, இலக்கண, வசன மற்றும் கருத்துப் பிழைகள் மலிந்தவையாக இவை காணப்படுவதற்கு, சம்பந்தப்பட்ட எழுத்தாளர் தான் எழுதினால் அது எழுத்தாகத்தான் இருக்கும் என நம்புவதே காரணம். இன்னொருவரிடம் எழுத்துப் பிரதிகளைக் கொடுத்து சரிபார்க்கும் பழக்கமே எம்மிடம் இல்லை. இப்படிக் கொடுத்து சரிபார்ப்பது தமது கௌரவத்துக்கு இழுக்கு எனப் பல படைப்பாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்...)

Saturday, October 25, 2014

சிறுகதை - 01

"அம்மா நிக்கிறாவோ...?"


மு.சிவலிங்கம்

செல்போன் முனகியபடி மேசையில் வட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

பிரியா வெளி வாசலிலிருந்து ஓடிவந்து போனைப் பார்த்தாள். பெரியண்ணா சிவராஜ்...!

"சொல்லுங்கண்ணா..?"

"எவ்வளவு நேரம் போன்ல நிக்கிறன்..! நீ போன எடுக்காம எங்க சுத்துறனி..?"

'எங்கேயும் சுத்தல்ல.. கோலம் போட மண்ணாங்கட்டி அரைச்சிக்கிட்டு இருந்தேன்..!"

'அம்மா நிக்கிறாவோ..?"

'அம்மா நிக்கல்ல..! சாணி தெளிச்சி வாசல கூட்டிக்கிட்டு இருக்காங்க..!"
'அம்மாவ கொஞ்சம் கதைக்கச் சொல்லடி..!"

'இந்தா..!" வாடி.. போடி. "பேச்செல்லாம் ஒங்க டீச்சரோட வச்சிக்கங்க.. தெரியுமா..!"

பிரியா அம்மாவைக் கூப்பிட்டாள். "அம்மா..! கொழும்புல இருந்து சிவராஜ் அண்ணா பேசுறார்.. வாங்க சுருக்கா..!"

'அவங் கெடக்கிறான் போக்கத்தப் பய..! அவனால இப்ப என்னா ஆகப் போவுது..? அவுசரமாம் அவுசரம்..!"

எரிச்சலோடு சாணி தெளித்தக் குண்டான் பாத்திரத்தை வைத்துவிட்டு, அண்டா வாளியில் கைகளை அலம்பிக் கொண்டு, பிரியாவிடமிருந்து போனை வாங்கினாள்.

'அலோ.. அலோ.. ஒன்னுங் கேக்கமாட்டேங்குதே..?"

'ஹலோ.. இஞ்ச சிவராசா கதைக்கிறன்.. அம்மா நிக்கிறாவோ..?"

'அம்மா நிக்கலடா..! ஒக்காந்துகிட்டுதான் இருக்கேன்..! தொரைக்கு என்னா அப்புடி அவுசரம்..?'

'அம்மோய்..! நான் இங்கைக்க கொஞ்சம் அலுவலா இருந்திட்டன்.. டீச்சரோட பருத்தித்துறைக்குப் போய் வந்தனாங்கள்.. அவளின்ர ஒன்டவிட்டச் சகோதரன் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தாங்கள்.."

'எனக்குதான் கெரகமே சரியில்லியே...? எனக்கு என்னாத்துக்கு அந்தக் கதையெல்லாம்..? இப்ப என்னாத்துக்கு போன் எடுத்த..?"

'அம்மாவுக்கு ஆறு மாதகாலம் பணம் அனுப்பாம இருந்திட்டன்.. அங்கத்திய பக்கத்து வீட்டுப் பெடியன் ரமேஷ் இங்க புடவ கடையில நிக்கிறவன்.. அவனிட்ட ஆயிரம் ரூபா அனுப்பி வைக்கிறன்.. பொங்கல் செலவுக்கு வச்சிக் கொள்ளுங்கோ..!"

'அடச்சீ..!  நாற நாயே..! ஆயிரம் ரூவாயில நாக்கு வழிக்கவா..? தங்கச்சிக்கு இன்னமும் வேல சரி வரல்ல.. ஒங்கப்பாவும் வூட்டாளு... நானும் சாவ மாட்டாம கெடக்கிறேன்.. ஓந் தம்பி குமாரு இல்லாட்டிப் போனா குடும்பம் நக்கிப் போயிரும் நக்கி..! பாவம்.. கடவுளு மாதிரி எம்புள்ள...  அவென் குடும்பத்துக்காக இன்னமும் கலியாணம் வாணாமுன்னு இருக்கான்.. அவென் மாதிரி ஆம்பிள்ளைங்க எல்லாம்  குடும்பமாகி புள்ள குட்டிபெத்து வாழுறாங்க..! நீ நல்லா இருப்பியா..? இந்த வயசு போன காலத்துல எங்கள அம்போன்னு வுட்டுப்புட்டு கொழும்புப் பக்கம் போயிட்டியே...! ஒனக்கு எப்பிடியெல்லாம்  செலவழிச்சோம்..?.. புருசன் வூட்டுக்கு பொண்டாட்டி  வர்றமாதிரி... நீ பொண்டாட்டி வூட்டுக்கு புருசானா போயிட்டியே..?"

"அம்மா..! பொறுங்கோவன்.. அடுத்த மாதம் கொஞ்சம் சேத்து பணம் அனுப்புறன்.. இப்ப நான் கோல் எடுத்த காரணம் என்னென்டால், வரிய பிறப்பு முடிய யூலை மாதம் யெர்மணி போறம்.. டீச்சர்ட தமையன் எங்களை எடுக்கினம்.. அங்கால போன பிறகு வேல கிடைச்சதும் முடிஞ்சத செய்றன்..!"

"போன வைய்யிடா..! இந்த மாதிரி ஏழ்ப்பாணத்து பேச்சு பேச வாணாம்முன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்..? ஒம் மவன் அவந்தான்  ஏவுட்டு பேரப்புள்ள... என்னய பாத்து " அன்டின்னு"   கூப்புடுறான்..! நானு அவுனுக்கு அன்டியும் இல்ல... குண்டியுமில்ல...! அப்பாயின்னு சொல்லிக் குடு..!"

பார்வதி அம்மாளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. இருந்தாலும் பேரப் பிள்ளைகளைப் பற்றி  விசாரிப்பதற்கு ஆசைப்பட்டாள்.

"புள்ளைங்கெல்லாம் சொகமா இருக்காங்களா?"

"ஓம்!..ஓம்..!"  

"ஆமான்னு சொல்லு!"

"அம்மா.. நான் போன வைக்கிறன்!"

"சரி!"

"அடியே பிரியா..! அந்த கொழும்பு மாஸ்டரு இனிமே போன் எடுத்தான்னா எனக்கிட்ட குடுத்து தொலைக்காத..! இவ்வளவு நேரமும் வெட்டிப் பேச்சி.... டீச்சர் பொண்டாட்டி அவன வெளிநாட்டுக்கு கூட்டிக்கிட்டு போகப் போறாளாம்.!. செவனேன்னு நம்ம ஸ்கூல்ல நம்ம புள்ளைங்களுக்கு படிச்சுக் குடுத்துகிட்டு இருந்தவன டீச்சர் கொழும்புக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டாளே!.. குடும்பத்தோட ஒத்து ஒறவு இல்லாம செஞ்சிப்புட்டாளே!.. நம்ம சாதி சனத்துல எவ்வளவு புள்ளைக இருக்காளுக..!! இந்த எருமமாட்டு நாயி அவளுக ஒருத்திய கட்டியிருந்தாலும்  அத்த மாமான்னு குடும்பத்தோட குடும்பமா இருந்திருப்பாளே..!" பார்வதி அம்மாள் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்..

பாவம் பார்வதியம்மாள்.. மூன்று பிள்ளைகளுக்கும் கல்வியைக் கொடுத்ததில் சாதனை புரிந்தவள். ஐம்பது வருசங்களுக்கு மேலாக கூடை கயிறு அழுத்தி.. அழுத்தி.. உச்சந் தலைமயிர் அறுபட்டு.. அறுபட்டுப் போயிருக்கும்..! கணவன் மாதவனும் யந்திர உழைப்பாளி.. வீட்டுத் தோட்டம் பெரியளவில் இருந்தது.. கிழங்கு, கோவா, கெரட், லீக்ஸ் என்று மரக்கறி வருமானம் கை கொடுத்தது.. இரண்டு கறவைப் பசுக்களை பெருஞ் சொத்தாக வளர்த்தார்கள்.. பிள்ளைகள் மூன்றும் தலையெடுக்கும் வரை உழைப்பு ஓயவில்லை.. மாதவன் நோயில் விழவும் எல்லாமே போச்சு  என்ற கதையாகி விட்டது..

மூத்த மகன் சிவராஜூக்கு ஆசிரியர் வேலை கிடைத்து மூன்று வருசங்கள் வீட்டுக்கு உதவியாகவிருந்தான்.. அவனது முதலீடும் விவசாயத்துக்கு உதவியது.. தம்பியின் உடல் உழைப்பும்  இன்னும் ஒரு படிக்கு வருமானத்தை உயர்த்திக் கொடுத்தது.. இந்த வளர்ச்சி சிவராஜின்  கலியாணத்தோடு வீழ்ந்துப் போய் விட்டது..

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆசிரியை தங்கேஸ்வரி இவனைவிட ஐந்து வயது மூப்பு. எப்படியோ காதலென்று சொல்லாவிட்டாலும் அவளைப் பொறுத்தளவில் அது காரியக் கல்யாணமாக முடிந்தது!

கலியாணத்துக்குப் பிறகு  சிவராஜ் பெற்றோரை விட்டு, மனைவியின்  குடும்பத்துக்குள் புலம் பெயர்ந்து விட்ட துர்ப்பாக்கியவானாகி.... காணாமல் போகும் நிலைமைக்கும் இழுத்துச் செல்லப்பட்டு.... ஒரு கடத்தல் கலாச்சாரத்துக்குள்ளாகி... அதுவும் ஒருவகை அரசியலாகி... பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்குள்ளாகிய கைதியைப்போன்று அவனது வாழ்க்கையின் இடைவெளி விசாலித்துப் போய்விட்டது..! சிங்களமோ  தமிழோ.. வெளியினத்துப் பெண்களைக் கல்யாணம் செய்வதென்பது மலையகப்  "படிச்ச" மாப்பிள்ளைகளின் பிடரியில் மீசை முளைத்து விட்ட சாதனையாகி விடுகிறது..!

தோட்டப் பெற்றோரின் அடுத்தக்கட்டக் குடும்பப் பொருளாதாரம் பிள்ளைகளிடமே தங்கியுள்ளது..

முழுக்க நம்பியிருந்த மூத்த பிள்ளையின் உதவியை இழந்து விட்ட ஒருதோட்டக் குடும்பத்துக்கு முட்டுக் கொடுப்பதற்கு இரண்டாவது பிள்ளை துணையாக வேண்டும். தம்பி மூர்த்தி ஏ.எல். பரீட்சை எழுதாமலேயே மரக்கறி  விவசாயத்தில் இறங்கிக் குடும்பச் சுமையைத் தாங்குவதற்கு முன் வந்தான். அவனது தோல்வி கண்ட வாழ்க்கை தங்கச்சியை உருவாக்குவதில் வெற்றி கண்டு கொண்டிருந்தது..

சிவராஜ் என்ற பார்வதி அம்மாளின் மகன், சிவராசாவாக மாறிக் கொண்டான். சிவராசாவாக மாறியது மட்டுமல்ல, பேச்சு மொழியும் மாறிப் போய் அம்மாவை, தங்கச்சியை "அவள்.. இவள்" என்றும் "வாடி.. போடி." என்றும் பேச முற்பட்ட வாய் மொழி அட்டூழியங்கள், வம்பு சண்டையை உருவாக்க... குடும்பம் நடு ராத்திரியிலும், அக்னி நட்சத்திரத்தைக் கண்ட கதையாகிவிட்டது!

"கேவலமா இருக்கு...! அவமானமா இருக்கு...! நம்மாளு சுருட்டுக் கடைக்கு வேலைக்குப்  போனாலும் பேச்சை மாத்திக்கிறான்.... சோத்துக் கடைக்கு வேலைக்குப் போனாலும் பேச்சை மாத்திக்கிறான்..  வாத்தியாருமாருங்களும்  அப்பிடியேதான் பேசுறாங்க... அண்ணன் ஒரிஜினல் உரும்பிராய்காரனாகிட்டான்;!" மூர்த்தி இந்த இமிடேஷன்காரர்களை நினைத்து அழுவதா.. சிரிப்பதா... என்று ஏளனமாக யோசித்துக் கொண்டிருந்தான்....

செல்போன் சட்டைப் பைக்குள் ராகமிசைத்தது. அண்ணன் சிவராஜிடமிருந்துதான் அழைப்பு...

"தம்பி..! நான் சிவராசா கதைக்கிறன்.. தேயிலை த்ரீ கிலோஸ் வேணும்.. வாங்கி வடிவா பக்கெட் செய்து பொரீன் கொண்டு போற மாதிரி வை..! நாளைக்கு வீட்ட வருவன். அம்மா, அப்பா, தங்கச்சிய பாத்திட்டு போக வேணும்.."

"அண்ணே..! ஒரேயடியா வெளி நாட்டுல செட்டில் ஆகப் போறீங்க.  ஒரு நாளாவது அம்மா, அப்பாவோட வீட்ல தங்கி போனா எல்லாருக்கும் சந்தோசமா இருக்குந்தானே..!"

வீட்டில் வந்து தங்கிச் செல்வதற்கு தங்கேஸ்வரி டீச்சர் விரும்பமாட்டாள்.. அவளும் பருத்தித்துறை வடையைப்போல இறுக்கமானவள்! "அப்பாவுக்கு சுகமில்ல.. சுகம் பாக்க காசு அனுப்ப வேணும்.. தங்கச்சிக்கு எட்மிசன் பீஸ் அனுப்ப வேணும்.." என்று இழு.. இழு.. என்று ஒருநாள் இழுத்தப்போது, அவள் பத்ரகாளி அவதாரம் எடுத்து ஆடினாளே ஆட்டம்..! சிவராஜ் என்ற சிவராசாவுக்கு அந்த ஆட்டம்  நினைவுக்கு வந்து, அவனை ஆட்டம் காணச் செய்தது. 
"என்னப்பா நீங்கள்..? அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி,  எண்டு எல்லோரையும் வீல்ச் செயாரில் வைச்சல்லோ தள்ளப் பாக்கிறியள்..! அவங்கள சுயமா நடக்க விடுங்கோவன்.அப்பா.! இப்ப நீங்க எண்ட மனுசன் அப்பா!…விளங்கிச்சோ..?" சிவராஜூக்கு வியர்த்தது.

"ஐயோ தம்பி..! குறை நினைக்காத ராசா..! நான் பொரீன் போய் ஒருக்கா வீட்ட வருவன்.. நீ தேயிலையை  மட்டும் பார்சல் பண்ணிவை..! போன வக்கிறன்.."                     

Friday, October 24, 2014

உணவுகள் பலவிதம்


நத்தை மாமிசம் இவருக்கு கோழி இறைச்சி மாதிரி!


மணி  ஸ்ரீகாந்தன்

'இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான்
மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட அந்த
மதுர மல்லிப்பூ இட்லிய
மீன் கொழம்புல கொஞ்சம்
பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ளே...'

 இது சமீபத்தில் திரைக்கு வந்த 'உன் சமையலறையில்' படப் பாடல். பாடல் காட்சியில் திரையில் வண்ணமாக கண்களுக்கு விருந்து படைக்கும் உணவு பதார்த்தங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால், பாம்பு, பல்லி, கரப்பான், புழு, பூச்சி, நாய் ஆகியவற்றை வெளிநாட்டுக்காரர்கள் ருசித்து சாப்பிடும்போது நமக்கு, 'உவ்வே'னு குமட்டிக் கொண்டுதான் வரும், இது இயற்கை. நாம் வாழும் சூழல், பழக்க வழக்கம் என்பனவே நமது உணவு பழக்கத்தைத் தீர்மானிக்கிறது. வியட்நாமில் நாய் மாமிசத்தை சிறந்த புரத உணவு என சப்புக்கொட்டி சாப்பிடுகிறார்கள் என்றால் அதை நம்மால் நினைத்துத்தான் பார்க்க முடியுமா? ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார் கணபதி வசிக்குமார். டிரம்பட் கலைஞரான இவருக்கு மிகவும் பிடித்த உணவு நத்தை தானாம்! என்ன இப்போதே உங்களுக்கு குமட்டுகிறதா....? ஆற்று நத்தை, மரத்து நத்தை போன்ற சாதாரண நத்தைகளை கொதிக்கும் நீரில் அவித்து அதன் இறைச்சிகளை வெளியே எடுத்து, கழுவி சுத்தமாக்கி வெங்காயம், மிளகாய், மசாலாவோடு எண்ணெய்யில் வதக்கி எடுத்து சோற்றுடன் சப்புக்கொட்டி சாப்பிடுகிறார் இந்த மனிதர்!

"நத்தையா, அய்யோ வாந்தி வருதே, 'உவ்வே'னு பதறிப்போறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லுறேன். நீங்க கோழி, ஆடு, மீன், நண்டு என்று சாப்பிடுறதில்லயா? அது மாதிரி தாங்க  நத்தையும்... மீனும் நண்டும் சாப்பிடுவதைப் போலன்றி நத்தைகள் தாவரங்களையே சாப்பிடுது. அட கோழி சாப்பிடாத அசிங்கத்தையா நத்தை சாப்பிடுது? ஆனா கோழியை மட்டும் சப்புக்கொட்டி சாப்பிடுறீங்க. கோழிக்கு இருக்கும் அதே குடல் இரைப்பைதான் நத்தைக்கும் இருக்கும். இப்போ இங்கே பலர் சுத்த சைவம். கேக்கூட சாப்பிட மாட்டார்கள். அவர்கள் எதிரில் நின்று பொரித்த கோழிக்காலை கடித்து இழுத்தால், அவர்களுக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும்!" என்று புது வியாக்கியனத்தோடு ஆரம்பிக்கிறார் வசிக்குமார். முப்பத்தொன்பது வயதாகும் வசிக்குமார் புளத்சிங்கள, ஹல்வத்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர். டிரம்பட் வாசிப்பதோடு சாரதியாகவும் பணியாற்றும் இவர், கராத்தே கலையையும் முறையாகப் பயின்று இருக்கிறார்.
"நீர்கொழும்பு இன்டர் நெஷனல் டை குண்டோ கராத்தே நிறுவனத்தில்தான் நான் கராத்தே கற்றேன். அந்தக் கலையைக் கற்கும்போது என் உடநிலை கொஞ்சம் பாதிக்கப்பட்டது. என்னால் பத்தடி தூரம் கூட நடக்க முடியாது. மூச்சு வாங்கும். உடம்பு பலம் இழந்து நடுக்கம் ஏற்படும். அப்போதுதான் இதற்கு செம்பகப் பறவை, வெளவால் மாமிசங்களை உணவாக சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு சித்த வைத்தியர் பரிகாரம் சொன்னார். அந்தப் பறவை நத்தை சாப்பிடுவதால்தான் அதற்கு அப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட நான் அந்த அப்பாவிப் பறவையைக் கொல்வதை விட நேரடியாகவே நத்தையைச் சாப்பிட்டால் இன்னும் அதிக பயன் கிடைக்குமே என்று யோசித்தேன்.
மனதை திடப்படுத்திக்கொண்டு அதை சாப்பிடக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது எனக்கு பழகிப்போய்விட்டது. எனக்கு இது இப்போது ஸ்வீட் சாப்பிடுகிற மாதிரி" என்று சொல்லிக்கொண்டே ஒரு பெரிய நத்தையை உயிரோடு எடுத்து அதில் வடியும் திரவத்தை தனது வாய்க்கு நேரே உயர்த்திப் பிடித்துக் குடிக்கிறார்.

"இந்த ஜூஸ் வேப்பிலைச் சாறு மாதிரி ரொம்பவும் கசப்புத்தான். ஆனால் நல்ல மருத்துவக்குணம் நிறைந்தது. அதன் இறைச்சி நல்ல சுவையாக இருக்கும். சுத்தமாக எலும்பு இல்லாததால் அல்வா துண்டை வாயில் போட்ட மாதிரி இருக்கும்" என்று கூறும்போது முகத்தை சுழித்துக் கொள்கிறோம். பின்னர் தான் சமைத்த நத்தைக் கறியை சோற்றுடன் கலந்து பிசைந்து ஒரு கவளத்தை வாயில் போட்டு ருசித்துச் சாப்பிடுகிறார்.

நத்தை 'மூலம்' நோயை 50 வீதம் குறைக்கும் மருத்துவ குணம் கொண்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஒரு யுனானி மருத்துவரும் இக்கூற்றை ஆமோதிக்கிறார். நெத்திலி, இறால் உள்ளிட்டவைகளை பச்சையாக உண்ணுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். இவரின் மனைவியிடம் இதுபற்றிக் கேட்டோம். அவருக்கு கணவரின் பழக்கம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 'அவர் விரும்பினால் சமைத்துச் சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன்' என்கிறார். ஆனால் நத்தை சமைக்கப்பட்ட பாத்திரங்களை வசிக்குமாரே கழுவி வைத்துவிட வேண்டும் என்பதே அவரின் கட்டளை.
நான் இவற்றைச் சாப்பிடுவேன். இவற்றையெல்லாம் தொடவே மாட்டேன் என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் மாட்டிக் கொண்டால் அல்லது பஞ்சத்தில் சிக்கிக் கொண்டால் பற்றியெரியும் வயிற்றுக்கு இப்படியெல்லாம் சமாதானம் சொல்ல முடியுமா? கிடைப்பதைச் சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் நாம் முனைவோம். மரக்கறி உணவைச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களும் வைத்தியர்களின் யோசனைப்படி அசைவம் சாப்பிடுகிறார்கள். எனவே உணவு காலம் நேரம் அவசியத்தைப் பொறுத்தது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

Thursday, October 23, 2014

இருள் உலகக் கதைகள்-05

மனைவியை கொலை செய்ய ஈ வடிவில் வந்த கணவனின் ஆவி!


மணி  ஸ்ரீகாந்தன்

'குசுமா வீட்டுக்கு வந்தபோது பூட்டிய வீட்டில் பேச்சுக் குரல் கேட்கவே திடுக்கிட்டுப் போனாள் குசுமா. முகம் கழுவலாம் என பாத்ரூமைத் திறந்தபோது கோர முகம் கொண்ட கரிய மனிதன் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருக்கக் கண்ட குசுமா, வீலெனக் கத்தி மூர்ச்சையானாள்!'
நேரம் மாலை ஏழு மணியிருக்கும். ராஜகிரிய நகரை இருள் கவ்வ முற்பட்டுக் கொண்டிருந்த இரண்டுங்கெட்டான் நேரம் அது. வாகன மின் விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த தெரு மிகவும் பரபரப்பாக இருந்தது.

அப்போது தெற்கு பக்கத்திலிருந்து பிரதான தெருவிற்கு வரும் ஒரு ஒழுங்கையிலிருந்து ஒருவன் 'அய்யோ... அய்யோ' என்று கதறியபடி தெருவிற்கு ஓடி வந்தான். சிங்கத்திடமிருந்து உயிரைக் காப்பாற்ற மான் ஓடுவது மாதிரி அவன் ஓட்டத்தில் மரண பயம் இருந்தது. தலைதெறிக்க பிரதான வீதிக்கு ஓடி வந்த அவன் தமது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஒரு காரில் மோதுண்டு வீசியெறியப்பட்டான். பலத்த காயங்களுக்கு உள்ளான அவனை அங்கிருந்தோர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் சேர்த்தார்கள்.

அடுத்த நாள், ராஜகிரிய நகரில் சிறிசேன என்பவரை பேய் துரத்தி வந்ததாகவும் காருக்கு முன்னால் பிடித்துத் தள்ளிக் கொலை செய்ய முயன்றதாகவும் ஒரு கதை பரபரப்பாக பேசப்பட்டது. சிறிசேனவின் மனைவி மை வெளிச்சம் பார்த்தாள், என்ன நடந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. பேய் ஒரு ஈ வடிவிலேயே அவனைத் துரத்தி வந்திருக்கிறது என்று மை வெளிச்ச மாந்திரீகன் சொன்னதாக ஒரு பகீர் செய்தி அந்த பிரதேசத்தை கிடுகிடுக்கச் செய்தது.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ராஜகிரிய நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் அந்த ஒற்றை பங்களாவில் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக ஒரு செய்தி மெல்ல மெல்ல கசியத் தொடங்கியது.

குசுமாவிற்கு நாற்பத்தெட்டு வயதிருக்கும். இளம் வயதிலேயே கணவனை இழந்த அவளுக்கு மூன்று மகன்கள். தாயும், மகன்களும் அரச உத்தியோகம் பார்ப்பதால் செலவுக்கும் செல்வாக்குக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால் மகன்களுக்குத்தான் திருமணப் பாக்கியம் இதுவரைக்கும் கைகூடவில்லை. 'இதற்கெல்லாம் காரணம் இளம் வயதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட குசுமாவின் கணவன் பண்டாரதான்' என்பது அந்த பகுதி மக்களின் வாய்பேச்சு கதையாக உலவி வந்தது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இரவு நேரத்தில் அமானுஷ்யமான அலறல் சத்தங்கள் அந்த ஒற்றை பங்களாவில் கேட்பதாகவும் பிரதேசவாசிகள் கூறி வந்தார்கள். அன்றும் வழமை போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குசுமா, பங்களாவின் கேட்டைத் திறந்து உள்ளே வரும் போது வீட்டிற்குள் பேச்சுக் குரல்கள் கேட்டிருக்கிறது. மகன்மார் அதற்குள் வேலை முடிந்து வீட்டிற்குள் வந்து விட்டார்களா என்ற சந்தேகத்துடன் வீட்டின் பிரதான கதவருகில் வந்தபோது கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்த குசுமா திடுக்கிட்டுப் போனாள்.

அவசரமாக கதவை திறந்து உள்ளே சென்றபோது பேச்சுக்குரல்கள் நின்று வீட்டில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. ஆனால் வீடு முழுவதும் ரத்தவாடை வீசிக் கொண்டிருந்தது. ரத்தம் சொட்ட சொட்ட வெட்டப்பட்ட மாட்டிறைச்சியின் மணம்தான் அது என்பது குசுமாவிற்கு சட்டென புரிந்தது.

அந்த வீட்டில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் இது தீய சக்தியின் வேலைதான் என்பது குசுமாவிற்கு புரிந்தது. தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு முகம், கை கால் கழுவி விட்டு வரலாம் என்று குளியல் அறைக்குள் நுழைந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை குலை நடுங்கச் செய்தது. பாத்ரூமில் ஒரு கரிய கோரமான முகம் கொண்ட நிர்வாண மனிதன் ஷவரில் குளித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அப்படி ஒரு காட்சியை குசுமா பார்த்த அடுத்த நிமிசம் மயக்கம் போட்டு விழுந்தாள். அந்த நிமிடத்தில் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த மகன்மார்; தாய் கீழே விழுந்து கிடப்பதை கண்டு பதைபதைத்து அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தினர். தண்ணீர் தெளித்து அவளை மயக்கத்தில் இருந்து மீட்டனர்.

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட குசுமா தனது திகில் அனுபவங்களை மகன்மாரிடம் மெல்ல மெல்ல விவரித்தாள். கவனித்துக் கேட்ட மகன்மார், இதெல்லாம் தகப்பனின் தீய வேலைகளாகவே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர்.

வீட்டில் சமைக்கும் உணவுப் பண்டங்கள் கெட்டுப் போவதும் குழம்பு, கறி வகைகளில் உப்பு சுவை அற்றுப் போவதும் அந்த பங்களாவில் வழக்கமாக நடக்கும் விடயங்கள்தான். இவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

வீட்டில் சமைத்தால் தானே கெட்டுப் போகிறது என்று கடையில் இருந்து சாப்பாட்டு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டாலும் அதே நிலைமைதான். அம்மா குசுமாவும் திடீரென்று தமது தந்தையைப் போலவே பேசுவதும் மகன்மாருடன் அற்ப விஷயங்களுக்காக சண்டை பிடிப்பதும் அவ்வப்போது நடப்பவைதான். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த அமானுஷ்ய சம்பவங்களுக்கு முடிவு கட்ட இதுவரை எத்தனையோ மாந்திரீகர்கள் அந்த பங்களாவில் பரிகாரங்களை செய்திருந்தனர். ஆனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அதனால் அந்த குடும்பமே குழப்பத்தில் சிக்கித் தவித்தது. இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்ற நப்பாசையில் தேவா பூசாரியை அணுகி இருக்கிறார்கள்.

விசயத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட பூசாரி, அந்த வீட்டில் இருப்பது சாதாரண துஷ்ட ஆவி அல்ல என்பதையும் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் அரசாட்சி நடத்தி வருகிற ஆவி என்பதையும் தன் அனுபவத்தால் புரிந்துகொண்டார். இத்தகைய நாட்பட்ட ஆவியை விரட்டுவது என்பது சாதாரண காரியம் அல்ல. கொஞ்சம் பிசகினாலும் காரியம் கெட்டு அது தன்னையே திருப்பித் தாக்கிவிடும் என்பதையும் நிச்சயமாக உணர்ந்து கொண்ட தேவா பூசாரி, அந்த ஆவியை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டார்.

தமது சகாக்களான புஸ்பகுமார், ராம்கி, ஸ்டீபன் உள்ளிட்ட குழுவினரை அழைத்துக் கொண்டு ராஜகிரிய நோக்கிப் பறந்தார். அந்த பங்களாவிற்குள் தேவா பூசாரியின் நால்வர் அடங்கிய குழு நுழைந்த போது கடைசியாக வந்த ஸ்டீபன் உள்ளே காலை தூக்கி வைக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றார்.

தேவா பூசாரி என்ன நடந்தது என்று கேட்டபோது கால் இரண்டும் மரத்துப் போன மாதிரி இருக்கு என்று ஸ்டீபன் சொன்னார். "என்னுடன் வந்து இருக்கீங்க எந்த பயமும் இருக்கக் கூடாது.. தைரியமா உள்ளே வாங்க" என்று தேவா ஸ்டீபனை உற்சாகப்படுத்தி கைபிடித்து அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு சக்கர வியூகம் வரையப்பட்டு தேவா பூசாரி அதில் அமர்ந்தார்.

தேவா ஒரு முருகப் பக்தர். அவர் முருகனை நினைத்து தியாணத்தில் ஆழ்ந்தார். பேயை விரட்டும் சமயத்தில் மட்டும் அவர் உடம்பிற்குள், காளி அல்லது முனி இறங்கி விடும். அவரின் தியானம் தொடர்ந்து கொண்டிருந்த இதே சமயத்தில் ஸ்டீபனுக்கு அனுமன் அருள்  வந்திறங்கியது. அவர் வீடு முழுவதும் சென்று பேய் எங்கே பதுங்கி இருக்கிறது என்பதை நோட்டம் விட ஆரம்பித்தார். ஆனால் அந்த சித்து வித்தைகள் தெரிந்த துஷ்ட ஆவி, அந்த சமயத்தில் வீட்டிற்குள் இல்லை என்பதை தியானத்தில் இருந்த தேவா புரிந்து கொண்டார்.

அடுத்த சில நொடிகளில் வீட்டிற்குள் வேகமாக வந்த ஒரு ஈ பங்களாவின் விராந்தையை வட்டம் அடித்து விட்டு மேல் மாடியை நோக்கி விர்ரென்று பறந்தது. அது சாதாரண ஈ அல்ல என்பது தேவா பூசாரிக்கு புரியவே, அவர் உடல் ஆக்ரோசமாக ஆடத் தொடங்கியது. காளிம்மன் தேவாவின் உடம்பிற்குள் இறங்கி ஆட்டம் போடத் தொடங்கி விட்டாள்.

புஸ்பகுமாரும், ராம்கியும் பம்பரமாக சுழன்று காரியத்தில் இறங்கினார்கள். அனுமன் சாமி வந்த ஸ்டீபன் தீ பந்தத்தோடு மேல் மாடி படிக்கட்டில் ஏற முடியாமல் நின்று எதையோ வெறித்துப் பார்த்து கனத்த குரலில் ஆக்ரோஷமாகக் கத்தினார். அங்கே உதவிக்கு வந்த புஸ்பகுமார் ஸ்டீபனை மறித்து நிற்கும் அந்த கோரமுகம் கொண்ட உருவத்தை பார்த்து வெல வெலத்துப் போனார்! அடுத்த நிமிடம் அந்த உருவம் மறைந்து போக சக்கர வியூகத்திற்கு எதிரே அமர்ந்திருந்த குசுமா தலைவிரி கோலத்துடன் ஆடத் தொடங்கினாள். பண்டார குசுமாவிற்குள் வந்து விட்டான் என்பதை உறுதிப்படுத்திய பூசாரி, அந்த ஆவியிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

"என்னை என் மனைவி உதாசீனப்படுத்தினாள். கணவனாக நடத்தவில்லை. அதனால் நான் குடிகாரனாக மாறினேன். வாழ்க்கை வெறுத்து எனது இருபத்தெட்டாவது வயதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டேன். என்னை அலைக்கழித்து தற்கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த இவளைக் கொன்று என்னோடு அழைத்துப் போகவே வந்திருக்கிறேன். அதைக் கட்டாயம் செய்வேனடா!" என்று ஆக்ரோஷத்துடன் சபதம் போட்டது பண்டாரவின் இரத்த வெறி பிடித்த ஆவி! தேவா பூசாரியும் அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாரானார்.
அந்த துஷ்ட ஆவியை விரட்ட மந்திரங்களை சடசடவென உச்சரிக்க ஆரம்பித்தார். ஆக்ரோஷம் தணிந்த ஆவி இப்போது மென்மையாக பேச ஆரம்பித்தது. "என்மீது மனைவி குசுமா பாசமாக இருக்கிறாள். அதனால்தான் அவளது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருக்கும் எங்கள் இருவரின் திருமண போட்டோ இப்போதும் பத்திரமாக இருக்கிறது. இல்லையேல் நொருக்கித் தள்ளியிருப்பேன்" என்று சொன்னது ஆவி.

பூசாரியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் பூசாரியின் கவனத்தை வேறு பக்கம் திருப்பவும் ஆவிகளும் பேய்களும் பல வேஷங்களைப் போடுவது வழமை என்பது தேவாவுக்கு அத்துப்படி. அவற்றுக்கெல்லாம் மசிந்துவிடக்கூடாது. பேயோட்டுவது என்பது சதுரங்கம் ஆடுகிற மாதிரி. சிறு பிழை விட்டால் துஷ்ட ஆவியோ பேயோ தப்பிவிடும் அல்லது தன் சுயரூபத்தைக் காட்டி விடும். மாந்திரிகர்கள் தெரிந்து வைத்திருக்கும் அடிப்படை விதி இது.

ஆவியின் இந்தப் பேச்சுகளைக் கேட்டு திடுக்கிட்ட குசுமாவின் மூன்று மகன்களும் அந்தப் படத்தை அப்போதே தீயிட்டு கொளுத்தி விடுகிறோம் என்று சொல்லியதோடு தீயிட்டு கொளுத்தவும் செய்தார்கள்.

அதைப் பார்த்து பண்டாரவின் ஆவி குழப்பிபோன அந்த நொடிப் பொழுதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேவா பூசாரி, குசுமாவின் உச்சந்தலை மயிரில் ஒரு கொத்தை பிடித்து முடிச்சுப் போட்டு வெட்டி அதை போத்தலில் போட்டு அடைத்தார். கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அந்தக் காரியங்கள் அங்கே அரங்கேறின. பிறகு தமது சகாக்களோடு தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடி தேவா பூசாரி முச்சந்திக்குச் சென்று அந்தச் சந்தியில் பண்டாரவின் ஆவி அடைபட்டு கிடக்கும் போத்தல், மற்றும் பரிகார திரவியங்களையும் குவியலாக போட்டு அதைத் தீயிட்டு கொளுத்தினார். தீயின் சூட்டில் போத்தல் வெடித்து மயிர் பொசுங்கும் போது  'அய்யோ.... என்னைக் கொல்லாதீங்க, கொல்லாதீங்க!' என்ற ஒரு காதைக் கிழிக்கும் மரண ஓலம் எழுந்து அடங்கியது. அது தேவா பூசாரிக்கு மட்டுமே கேட்டது. பதினெட்டு வருட கால பண்டார ஆவியின் அழிச்சாட்டியத்தை ஒழித்துக்கட்டிய நிம்மதிப் பெருமூச்சோடு தேவா வீடு திரும்பினார்.

Saturday, October 18, 2014

சினிமானந்தா பதில்கள்- 18


விபச்சார வழக்கில் ஸ்ரீ திவ்யாவை கைது செய்து விட்டாங்களாமே? உண்மையா?
ஆர்.டிரோன், வவுனியா

அகப்பட்டது சுவேதா, அது போட்டுக் கொடுத்ததில் மாட்டினது திவ்ய ஸ்ரீ,
ஊடகவியலாளர்கள் செய்த பெயர் குழப்பத்தினால் அநியாயமாக பேசப்பட்ட அப்பாவி ஸ்ரீ திவ்யா

சினிமாவில் விபசாரம் - அது சகஜம்
வெளியில விபசாரம் - அதை மிஞ்சும்

தீபாவளி ரேசில் ஜெயிக்கப் போகும் திரைப்படம் எது?
எல். கீர்த்தனா, மஸ்கெலிய

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி 'கத்தி' பலம் மிகுந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கைமாறியுள்ளதாம். எனவே எவ்வித எதிர்ப்பும் இன்றி தீபாவளிக்கு கத்தி உறையிலிருந்து
வெளியே வருகிறது. 'ஐ' தீபாவளிக்கு வரும் என்று சொன்னபோதும் இன்னும் ஒரு பாட்டுடன் சில காட்சிகளும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த தீபாவளிக்கு ரேஸில் கத்தி ஓடப்போகிறது. பூஜை மல்லுக்கு நிற்கப்போகிறது. 'ஐ' நிலைமையை பொறுத்தே களத்தில் இறக்குமாம்.

இரண்டு பேர் மட்டும் ஓடுவது - புஸ்
எட்டுப்பேர் ஓடினால்தான் - ரேஸ்


நம்ம ஷாலினி கர்ப்பமாக இருக்கிறாராமே? உண்மையா? பிறக்கப்போவது ஆணா, பெண்ணா?
எம்.எச்.எப். சுக்னா, காத்தான்குடி
வெல்டன் 'தல' கைகுடுங்க!

கல்கண்டு, இனிப்பு எது வேணும் உங்களுக்கு

கமலின் பாபநாசம் பற்றி கூறுங்களேன்?
கமல் ரசிகை விஜி, யாழ்ப்பாணம்

பேர் சொல்லும் பிள்ளை (கமல்) யின்

பெயர் சொல்லும் படமாக அமையும்

கௌதமிக்கு பதில் துறுதுறு மீனாவே
இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்

நடிகைகள் மேக் அப் போட்டால்தான் அழகாக இருப்பார்களா? அப்போ இயற்கையில் அழகாக இருக்கும் ஒரு நடிகையை கூறுங்களேன்.
எம்.எச்.ஏ. ருமையா, கண்டி

எதுகையும் மோனையும் போலத்தான் நடிகையும் மேக் அப்பும்.

அங்கே பெயர் வாங்கிய இங்கே நடிகை
பூஜா உமாசங்கர்

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த உடனேயே அவர்களின் கதை முடிந்து விடுகிறது. என்ன காரணம்?
எம்.எம்.ரியாஸ், வெல்லம்பிட்டிய

நகைச்சுவை நவரசங்களில் ஒன்று என்று தெரியாததுதான்

இந்தக் கதையை முடிக்காமல் தொடர்ந்தது நாகேஷ் மட்டும்தான்.

நயன்தாரா இப்போது யாரை காதலிக்கிறார். என்று சொல்ல முடியுமா?
எஸ்.ரூபன், இரத்தினபுரி

நயன் காதலிக்க அல்ல, நயனை காதலிக்கத்தான் 'கியூ'

ஏதோ ஒன்று இருக்கிறது, நயனிடம்

நஸ்ரியாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ரொம்ப வயது வித்தியாசம் தெரிகிறதே?
எம்.கீதா, கொழும்பு - 14

இது குடும்பத்தார் பேசி வைத்த கல்யாணம். அப்படித்தான் இருக்கும் - இனிக்கும்

மனைவியை விட கணவனுக்கு 5 முதல் 7 வருடம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திர சம்பிரதாயம். கேரளக்காரர்கள் இதை எல்லாம் பார்க்காமலா செய்வார்கள்?

'சொய்ங் சொய்ங்' புகழ் மகிழினி மணிமாறனுடன் ஒரு சிறப்பு சந்திப்பு

"இன்னிக்கும் நான் காட்டுப் பொண்ணுதாங்க..."


நேர்காணல் -  மணி  ஸ்ரீகாந்தன்

'பெருமரத்து காத்து ஊ ஊன்னு இரைகிற ஓசை, குயிலின் அழைப்பு, கும்பலாக பறந்து வந்து காச்சுமூச்சுனு கத்திக்கிட்டே நெல்மணிகளை பொறுக்கும் குருவிகள்.... அயர்ச்சியா இருக்கும்போது உற்றுக் கவனிச்சா 'சொய்ங் சொய்ங்'னு அடிநாதமா கேட்கும்..'
"நான் குழந்தையாக இருந்த காலத்தில், எங்கம்மா வயக்காட்டுக்கு வேலைக்குப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. அங்க உள்ள வரப்பில் என்னை உட்கார வச்சிட்டு வயலில் வேலை செய்வாங்க. அப்போ விதைக்கையில், நடும்போது, களை பறிக்கிறபோது அறுப்பில் களைப்புத்தீர பாட்டுப்பாடுவாங்க. நானும் அவங்க கூடவே சேர்ந்து பாடுவேன். எனக்கு தூக்கம் வந்தா தாலாட்டுப் பாடி என்னை தூங்க வைப்பாங்க. அப்படி என் அம்மாவிடமிருந்து என் ரத்தத்தில் கலந்ததுதான் பாட்டு!" பளீரெனச் சிரிக்கிறார் மகிழினி மணிமாறன். கும்கி திரைப்படத்தின் 'சொய்ங்... சொய்;ங்' என்ற ஒன்றைப் பாடல் மூலமாக உலகத்தின் பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி உலகத் தமிழர்களின் இதயங்களில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டவர்தான் இந்த நாட்டுப்புற பாடகி!

பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கும் வேடந்தாங்கலுக்கு பக்கத்தில் இருக்கும் வலையாப்புத்தூர் கிராமம்தான் மகிழினியின் சொந்த ஊர். அமலநாதன் - மரியாள் தம்பதியினரின் மூத்த மகளாக மண்குடிசையில் பிறந்த இவருக்கு தம்பியும் தங்கையும் உடன் பிறப்புகள்.

"பாட்டுப் பாடிக்கிட்டு படிச்சதால் பத்தாவது பெயிலாகிட்டேன். அப்போ எங்கப்பாவும் தவறிட்டதால் வீட்டுல வறுமை... அம்மா, தம்பி, தங்கையை பார்த்துக்குற பொறுப்பை ஏத்துக்கிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். குழந்தைகள் காப்பகத்துல வேலை. அப்புறம் அங்கே குழந்தைகளுக்கு பறை இசையை கத்துக்கொடுக்க வந்த மணிமாறணைப் பார்த்தேன். அந்தப் பார்வை எனக்கும் அவருக்கும் புடிச்சிப்போச்சி. பிறகு வீட்டுல சொல்லி டும்டும்.... இப்போ கல்யாணம் முடிஞ்சு 14 வருஷம் ஆகுதுங்க. 'இனியன், சமரன்'னு ரெண்டு பையன்கள் ரெண்டு பேரும் பறை அடிக்கிறதிலையும், படிக்கிறதிலையும் வெளுத்துக் கட்டுறாங்க..." படபடவென்று பாடல் போலவே கனீரென்று பேசுகிறார் மகிழினி.

"காடும், வீடும் சேர்ந்ததுதானே எங்கள் கிராமம்! அதனால் இந்தக் காட்டுப் பொண்ணுக்கு இயற்கையை ரொம்ப புடிக்கும். பெருமரத்துக் காத்து 'ஊஊ'னு இரைகிற சத்தம், குயிலின் ஓசை, கும்பலாக பறந்து வந்து 'காச்சு மூச்சுண்'ணு கத்திக்கிட்டே நெல் மணிகளை கொத்தி திங்கிற குருவிகள். அயர்ச்சியா இருக்கும்போது உற்றுக் கவனிச்சுப் பார்த்தா... 'சொய்ங்.... சொய்ங்.'னு அடிநாதமா கேட்கும்.... நான் அப்படி அன்று ரசிச்சுக் கேட்ட அதே 'சொய்ங்.... சொய்ங்' சத்தம் தான் இன்று எனக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்திருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என் கணவர்தான். என் பாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவர் என் ஆர்வத்திற்கு வழியமைத்தவர் என் ஆசான், குரு எல்லாம் அவருதாங்க..." நன்றி பெருமிதத்துடன் மணிமாறனைப் பார்க்கிறார்.
மணிமாறன் புன்னகையோடு ஆரம்பித்தார்.

"அவங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தது நானாக இருக்க முடியாது... பாட்டு அவங்க கூடவே பொறந்தது. நாட்டுப்புற பாடகி என்றால் வட தமிழகத்தில் மகிழினிதான். அவங்க பாடும் பாடல்களை நான் முறைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்" என்கிறார் மிகவும் அடக்கமாக!

'சினிமா என்பது நமக்கு எட்டாக்கனிதான் என்ற ஏக்கம் எனக்கு இருந்தது என்னவோ உண்மைதாங்க. நான் சினிமாவில் பாடுவேன். ஆனா அந்த 'சொய்ங்... சொய்ங்' என்ற ஒன்றைப் பாடல் என்னை உச்சத்திற்குக் கொண்டு போகும்ண்ணு நான் கனவில கூட நினைக்கலீங்க" என்று மகிழினி கூறியபோது மணிமாறன் அவரை நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.
"ஆனா மகிழினி சினிமா வாய்ப்புக்காக தேடுதல் வேட்டை நடத்தியது கிடையாது. நான் நல்லாப் பாடுவேன், எனக்கொரு சான்ஸ் தாங்க'னு கேட்டதும் இல்ல. உண்மையைச் சொல்லப் போனால் இது காலம் தந்த பரிசு இல்லை, களம் தந்த பரிசு!" என்று மணிமாறன் நிறுத்த மகிழினி தொடர்ந்தார்.

"என் கணவர் எழுதி மெட்டமைக்கும் பாடல்களுக்கு ட்ராக் பாட நான் செல்லும் போது அங்கே ஒலிப்பதிவு கூடத்திற்கு வரும் சக கலைஞர்கள் 'உங்க குரல் நல்லா இருக்கு, சினிமாவில வாய்ப்பு கிடைத்தால் சொல்லுறோம்'னு என்கிட்டே போன் நம்பர் வாங்கிட்டுப் போவாங்க. அப்படிதான் ஒருநாள் ஒருத்தர் எங்களுக்கு கோல் பண்ணி சினிமாவில் பாடுறதுக்கு வாய்ப்பு வந்திருக்கு. உடனே சென்னைக்கு வாங்கண்ணு அழைத்தாரு.
அப்போ நாங்க கோயம்புத்தூரில் ஒரு கச்சேரிக்காக போயிருந்தோம். அதனால் அவரிட்ட நாங்க விசயத்தை சொல்ல 'அட என்னங்க நீங்க பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு கிளம்பி வாங்க'னு அட்வைஸ் பண்ணினார். அதற்கு என் கணவர், 'தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்குங்க அவங்க எங்களை மதிச்சிக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்களை ஏமாற்ற முடியாது. எங்களுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கணும் என்று இருந்தா அது இன்னொண்ணா இருக்கட்டுமே!'னு மறுத்திட்டாரு. அதுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இசையமைப்பாளர் இமான் தொலைபேசி வழியாக நேரடியாக பேசி எமக்கு வாய்ப்பை தந்தாரு. பாட்டு இந்த அளவுக்கு பிச்சுக்கிட்டு மக்கள்கிட்டே போய் சேரும்ணு நினைச்சுக்கூட பார்க்கலீங்க.. கண்மூடி திறக்கறத்துக்குள்ளே உலகம் ரொம்ப வேகமா சுத்திடுச்சு... இப்போ முப்பது பாடல்களுக்கு மேல பாடியாச்சு.. எல்லோருடைய செல்போன் ரிங்டோனும் கும்கி, வீரம் பாட்டுத்தான்..." நினைத்து நினைத்து பூரிக்கிறார் மகிழினி.

"டூவீலர்ல போகும்போது பின்னாடி உட்கார்ந்துகிட்டே வானத்தில் பறக்கிற விமானத்தை பார்த்து ரசிச்சுக்கிட்டே போவேன். நம்மளால விமானத்தை ரசிக்கத்தான் முடியும் அதுல உட்கார்ந்து பறக்க முடியாது'னு நினைச்சு மனசை சமாதானப்படுத்திப்பேன். ஆனா முதல் முதலாக என் கணவரோடு விமானத்தில் ஏறிய போது... நான் அடைந்த மகிழ்ச்சி வார்த்தையால சொல்ல முடியாதுங்க" மகிழினி ரொம்பவே நெகிழ்ந்து போகிறார்.

சாந்தி தியேட்டரில் கும்கி படத்தை 'புத்தர் கலை குழு'வினரோடு பார்த்த அனுபவம் மகிழினிக்கு புதுசாகத்தான் இருந்ததாம். தான் பாடிய பாடல் திரையில் வந்தபோது ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் இவரை கிறங்கடித்திருக்கிறது. பிரபளமாகிவிட்ட பிறகு வெளியே செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறதாம். "ஆனாலும் என்னங்க பண்ணுறது நம்மகிட்டே கார் இல்லை, பஸ் பயணம் தான். 'பஸ்சில எல்லாம் சினிமாகாரங்க வரமாட்டாங்க'னு   மக்கள் நம்புறதால் நமக்கு அது ஒண்ணும் பிரச்சினையாக தெரியலே.."  பளீரென்று சிரிக்கிறார்கள் மகிழினியும், மணிமாறனும்.

தீபாவளி சிறப்பு சந்திப்பை வேடந்தாங்கலில் நிறைவு செய்துவிட்டு கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம்.