Sunday, September 14, 2014

தேர் செதுக்கும் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்

“தேர் செய்வதில் மகிழ்ச்சிதான் ஆனாலும் இதில் முன்னேற முடியாது”

 

மணி  ஸ்ரீகாந்தன்


தமிழர்களின் கலை கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்களின் பின்னணியில் சைவ சமயமும் நின்று இயங்கி வருவதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழும் சைவமும் இரண்டறக் கலந்தது. தமிழர் சமூகத்தை ஆராய்வோர் சைவத்தைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்ய முடியாது. சைவ மதத்தின் சிறப்புகளுக்கு ஊர்களில் நிமிர்ந்து நிற்கும் ஆலயங்களே சாட்சி. இந்த ஆலயங்களின் சிறப்புகளுக்கு ஆலயங்களில் உள்ள சித்திரத் தேர்களும் காரணமாகின்றன. இந்துமதம் மிகுந்த அலங்காரங்களைக் கொண்டது. சித்திரத் தேர்களும் மிகுந்த அலங்காரங்களுடன் கோவில் திருவிழாக்களின் போது மணப்பெண்போல வீதியுலா வருகிறது என்ற வர்ணனை பொருத்தமானதே.

அம்பாள், சிவன், முருகன், பிள்ளையார் என்று ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அலங்காரங்களுடன் தேர்கள் வடிவமைக்கப்படுவது மரபாகும். பிரமாண்டமான மிரட்டும் தேர்களின் அணிவகுப்பை தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இப்போது இங்கில்லை. பெரும்பாலான பெரிய, சிறிய ஆலயங்களில் தமிழகத்திற்கு நிகரான முறையில் தேர்கள் வடிவமைக்கப்பட்டு வீதி உலா வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்தத் தேர்களின் வடிவமைப்பாளர்களான சிற்பக் கலைஞர்களும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் கூடுதல் ஆர்ச்சரியம்தான்.

"தமிழகத்திலிருந்து தேர்கள் கொண்டு வருதல், சிற்பக் கலைஞர்களை அழைத்து வந்து தேர்கள் செய்வது போன்ற நிலை இப்போது இல்லை. உள்ளுரிலேயே மிகவும் சிறப்பாக சித்திரத் தேர்கள் வடிவமைக்கிறோம். அதோடு புலம்பெயர் நாடுகளுக்கு தேர்களை செய்து ஏற்றுமதியும் செய்கிறோம்" என்று பெருமையாக பேசுகிறார் சிற்பக் கலைஞர் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்.

மட்டக்குளி, அளுத்மாவத்தை வீதியில் அமைந்திருக்கும் லக்சன் சிற்பக் கலைக்கூடத்தின் உரிமையாளர் இவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தேர் கட்டுமானப் பணியில் நிபுணத்துவம் பெற்றவரான இவரின் கலைக்கூடத்தில் தினமும் உளி ஓசை சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

ஒரு இனிய காலைவேளையில் லக்சன் கலைக் கூடத்திற்குள் நுழைந்தோம். விலையுயர்ந்த மரப்பலகைகளும், கட்டைகளும் குவிந்து கிடக்கும் அந்த விசாலமான கட்டிடத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட சிற்பாச்சாரியார்கள் மரத்தைக் கடைந்து கலை வடிவங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் உளியோடு ஒரு பலகையை செதுக்கிக் கொண்டிருந்தார் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்.

"தேர்கள், சிலைகள் வடிவமைக்க எல்லா மரங்களையும் உபயோகிக்க முடியாது. அதற்கென விஷேசமான மரங்கள் இருக்கின்றன. குறிப்பாக மருதமரம், பலா, வேம்பு வகை உள்ளிட்ட மரங்களே தேர் செய்ய உகந்தவை என்பதால் அவற்றையே பயன்படுத்தி வருகிறோம். மரங்களை மொரட்டுவைக்கு சென்று தரம் பார்த்து வாங்கி வருகிறோம். ரொம்பவும் முதிர்ச்சியான வைரம் பாய்ந்த மரங்களையே தெரிவு செய்கிறோம். அப்படித் தேர்வு செய்து எடுத்தால்தான் நீண்ட பல வருடங்களுக்கு தேர்கள் கம்பீரமாக இருக்கும்" என்றார்.

பரம்பரை பரம்பரையாக ஸ்ரீதரன் தேர் கட்டும் பணியை செய்து வருகிறார். அச்சுவேலியை பூர்வீகமாகக் கொண்ட இவரின் தந்தை சிற்பாச்சாரியார் கனசபையிடம் முறையாக சிற்ப வேலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். அதேபோல் ஸ்ரீதரனும் கலாகேசரி தம்பிப்பிள்ளையிடம் சிற்பக் கலையை பயின்றிருக்கிறார். இவரின் தாத்தா அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரும்பு வேலைகள் செய்திருக்கிறார். சூலம், வேல், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்து கோவில்களுக்கு வழங்கியிருக்கிறாராம்.

"தேர் வேலைகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் வருடத்திற்கு ஒன்று, இரண்டு தேர்கள் கிடைக்கும். அதுவும் பெருந்தேர்களாக இருந்தால் ஒரு தேரை செய்து முடிக்கவே ஒன்றரை வருடங்களாவது செல்லும். ஆலயங்களில் நிதி கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் நீண்ட காலம் எடுக்கும். நிதி தயாராக இருந்தால் ஆறு மாதத்தில் முடித்து விடலாம். என்னதான் மெஷின்கள் வந்து விட்டாலும் சிற்பங்களை கையால்தான் செதுக்கணும். அதற்கு ரொம்பவும் நேரம் எடுக்கும்"என்று ஸ்ரீதரன் மலைப்பு காட்டுகிறார்.

எந்தக் கடவுளுக்கு தேர் செய்கிறோம் என்பதற்கு அமைய அதன் மொடல் அமைக்கப்படுகிறது. அம்பாளுக்கு எண்கோண வடிவத்தில் தேர் அமைக்கப்படும். அதனை திராவிட முகவத்திரம் என்று அழைக்கிறார்கள். அதேபோல் முருகனுக்கு அறுகோணம், பிள்ளையாருக்கு வேஷக வடிவம் என்ற பெயரில் வட்ட வடிவமாகவும், சிவனுக்கு பூசாந்திரம் என்ற பெயரில் சதுர வடிவத்திலும் அமைக்கப்படுகிறதாம். எப்படியும் ஒரு பெருந்தேரின் விலை கோடிகளை தாண்டி விடுமாம்.

"இப்போது ஒரு சிங்க, குதிரை வாகனங்களே இலட்சங்களை தாண்டி விடுகிறது. அப்போது தேரின் விலை பலமடங்காக இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே" என்று அலட்டல் இல்லாமல் ஸ்ரீதர் சொன்னபோது மலைப்பாக இருந்தது. 'மரத்தில் செய்யப்படும் குதிரை, சிங்க வாகனங்களுக்கு கொடுக்கும் காசுக்கு உயிருள்ள சிங்கத்தையும், குதிரையையும் குட்டியாக வாங்கி வளர்க்கலாமே'னு  என் மனதிற்குள் ஓடியது. வெளியே சொல்லவில்லை.

"தேர்கள் கோடிகளை விழுங்குவது என்பது உண்மைதான். ஆனால் மரத்தின் விலை, செய்கூலி, வேலையாட்கள் சம்பளம் என்று பார்த்தால் எமக்கு மிகவும் குறைந்த இலாபமே கிடைக்கிறது. அண்மையில் நான்கு இலட்சத்திற்கு ஒரு தேர் செய்து கொடுத்தோம். நான்கு இலட்சத்திற்கு தேர் செய்வது என்பது முடியாத காரியம். ஆனால் நமது சைவ மதத்தின் வளர்ச்சிக்காக நானே முன் வந்து இலாப, நஷ்டத்தை பார்க்காமல் செய்து கொடுத்தேன். இப்படியும் சில காரியங்களை சமய வளர்ச்சிக்காக செய்கிறோம்" என்ற போது ஸ்ரீதரின் முகத்தில் மகிழ்ச்சி.

தடையில்லாமல் வேலை நடைபெற வேண்டும்,ஊழியர்களுக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதால் வீட்டுத் தளபாட பொருட்களையும் லக்சன் சிற்பக் கலைக்கூடம் தயாரித்து விற்பனை செய்கிறது. தேர் செய்யும் கைகள் மரத்தளபாடங்களைச் செய்தால் அவை எத்தகைய நேர்த்தியும் வேலைப்பாடுகளும் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

"கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தடையில்லாமல் வேலை செய்து வந்திருக்கிறோம்" என்று பெருமையோடு பேசும் ஸ்ரீதரனுக்கு மூன்று மகன்கள். மூவரும் கல்வி கற்று வருகிறார்கள்.

"எனக்கு பிறகு இந்த சிற்பத் தொழிலுக்கு என் மகன்கள் வருவதை நான் விரும்பவில்லை. கோவிலுக்கு பணி செய்வது மகிழ்ச்சிதான் என்றாலும், பொருளாதார ரீதியில் இதில் முன்னேற முடியாது. எனவே என் மகன்களை வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு தொழிலுக்கு அழைத்துச் செல்வது என் கடமை அல்லவா?" என்கிறார் உறுதியாக.

ஸ்ரீதரனுக்குப் பிறகு உளியை பிடிக்க அவரின் மகன்கள் தயாராக இருந்தாலும் ஸ்ரீதரன் விடமாட்டார் போலிருக்கிறதே... விடைபெற்று நடந்தோம். சிற்பக்கூடத்தின் உளிச்சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு காதுகளில் சங்கீதமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment