Friday, September 12, 2014

குமுதம் கார்டூனிஸ்ட் பாலாவுடன் ஒரு திறந்த உரையாடல்

"நான்கு பக்க செய்தியை நான்கு கோடுகளில் சொல்வதே கார்டூன்"


உரையாடியவர்:  மணி ஸ்ரீகாந்தன்

'சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்...' என்று பாரதி பாடி விட்டு சென்றாலும், 'கடவுளை உருவாக்கியவன் அறிவிலி அதற்கு குணம் கற்பித்தவன் சர்வ முட்டாள்' என்று தந்தை பெரியார் முழங்கினாலும் இன்றும் நமது தமிழகத்தில் நீ எந்த சாதி, மதம்? என்று கேட்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சாதியமைப்புக்கு எதிரானவர் பாலா.

அவரது மகனை பள்ளியில் சேர்க்க வேண்டிய வேளை வந்தது. பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறுக்கிடும் என்பது பாலாவுக்குத் தெரியும். இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என்ற தீர்மானத்துடன் தமது மகனை ஆரம்ப பள்ளியில் சேர்ப்பதற்காக அழைத்துக் கொண்டு நடந்தார் பாலா.

பள்ளியில் கொடுக்கப்பட்ட சேர்ப்பதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்தார். படிவத்தில் சாதி, மதம் தொடர்பான இடத்தை அவர் நிரப்பாமல் குறுக்குக் கோடிட்டு பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார் படிவத்தைப் பார்த்த பள்ளி நிர்வாகி, அதனை பூர்த்தி செய்யும்படி பாலாவிடம் கேட்டுக் கொண்டார். பாலா மறுத்தார்.
"பையனுக்கு சாதியும், மதமும் கிடையாது. எனவே நான் எப்படி இருக்கிறது என்று பொய் சொல்ல முடியும்? என்று பாலா கேட்க, பள்ளி அதிபருக்கும் பாலாவுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஆரம்பமானது. பேச்சு சூடாகவே, தமிழக அரசு, சாதி, மத சான்றிதழை இனி யாரும் கேட்கக் கூடாது என்று விடுத்திருக்கும் சட்டபூர்வமான அறிவித்தலின் பிரதியை எடுத்து மேசையில் போட்டார் பாலா. இதைப் பார்த்து அதிர்ந்து போன பள்ளி அதிபர், பிறகு வாயை மூடிக் கொண்டு சாதி, மதம் அற்றவனாக சிறுவன் இளமாறனை பாடசாலையில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். இதைத் தனக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகக் கருதுகிறார் பாலா.

சரி, யார் இந்த பாலா? குமுதம் இதழில் கார்டூன்கள் வெளிவருவதைக் கவனித்திருப்பீர்கள். இந்தக் கிண்டலும் உண்மையுமான கார்டூன்களைக் கீறித்தள்ளுபவர்தான் இந்தக் கார்டூனிஸ்ட் பாலா. பத்து ஆண்டுகளுக்கு மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வருகிறார் இவர்.

இவரை ஒரு காலைவேளையில் சென்னை புரசைவாக்கம் மெகா மஹாலில் வைத்து சந்தித்துப் பேசினோம். "உயர் குலத்தை சேர்ந்தவர்களை FC. OC. BC என்றும் தாழ்த்தப்பட்டவர்களை SC. SD என்றும் குறிப்பிட்டு மனிதர்களை சாதி அடிப்படையில் வகைப்படுத்துகிறார்கள். இதே சமயம் பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள் மற்றும் சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட என்போன்றவர்களின் பிள்ளைகள் எந்தப் பிரிவின் கீழ் வரமுடியும்? உங்களுக்கெனத்தான் OC(OPEN CATEGORY) பிரிவு இருக்கிறதே என்று விளக்கம் சொல்வார்கள். ஒஸி என்பது ஏனைய சாதிப் பிரிவினருக்கானதே தவிர சாதி மறுப்போருக்கான பிரிவு அல்ல. இதனால்தான் நாங்கள் எங்களுக்கென சாதியற்றவர் என்பதைக் குறிக்கும் NC என்றொரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்" என்கிறார் கார்டூன் பாலா.

சின்ன வயதிலேயே புத்தகம் வாசிப்பதில் இவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ராணி கொமிக்ஸ்சில் வரும் மாயாவின் தீவிர ரசிகனாக இருந்தவர். மாயாவியுடன் வரும் அந்த டெவில் நாயையும் மிகவும் ரசிப்பார். இவர் நாய்கள் மீது அன்புகாட்டவும் நாய்களை வளர்க்கவும் அந்த மாயாவியின் டெவில்தான் காரணமாம். அப்போதுதான் ராணி கொமிக்ஸ்சில் உள்ள மாதிரி மாயாவியை வரைந்து பார்க்க இவருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. உடனே தனது விஞ்ஞான அப்பியாசக் கொப்பியில் உள்ள வெள்ளைத் தாளைக் கிழித்து அதைத் தன் தலையில் உள்ள எண்ணெய் மீது ஒற்றி எடுத்து, அந்த எண்ணெய் படிந்த அந்தப் பேப்பரை மாயாவி படத்தின் மீது வைத்து பிரதி பண்ணியிருக்கிறார். இவர் ஓவியராக முயற்சித்தது இப்படித்தான். இவர் இப்படி கொப்பி பண்ணுவதைப் பார்த்த தாத்தா, 'இப்படி பண்ணக்கூடாது'னு  கூறியதோடு 'ஒரு நரியும், சிங்கமும் பேசிக் கொள்வது மாதிரி ஒரு படம் வரைந்து காட்டு' என்றாராம். இவர் அதை முயற்சிக்க, படம் படுகேவலமாக வந்ததாம். ஆனாலும் அதைப் பார்த்த அவர் தாத்தா, 'ரொம்பவும் பிரமாதமாக இருக்கு இதில நிறைய தப்பு இருந்தாலும் நாமே சுயமா வரையிறதுலதான் திறமை வளரும்'னு  சொல்லிப் பாராட்டி இருக்கிறார். நரியையும், சிங்கத்தையும் வரையச் சொல்லி இருந்தால் அது ஒரு ஓவியமாக இருந்திருக்கும். அவர் அந்த மிருகங்கள் பேசுவது போல வரைய சொன்னார். அப்படி மிருகங்கள் பேசுவது கார்டூனீல்தான் சாத்தியம். அந்தப் புள்ளிதான் என்னை கார்ட்டூனிஸ்ட்டாக புடம் போடக் காரணமாக இருந்தது என்கிறார் கார்டூனிஸ்ட் பாலா.

பாலா பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில் தானாம். அவரின் அப்பா மும்பை ரயில்வேயில் வேலை பார்த்ததால் அவர் அங்கே இருந்திருக்கிறார். அதன் பிறகு பாலா திருநெல்வேலியில் இருக்கும் தமது தாத்தா பாட்டியுடன் வந்து தங்கி விட்டாராம்.

"நான் திருநெல்வேலியில் வாழ்ந்த காலத்தில்தான் தீண்டாமை என்ற விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் என்று இரு தரப்பு மனிதர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதன் விளைவுதான் சாதி எதிர்ப்பும், மத எதிர்ப்பும்." என்று தமது கொள்கைக்கு காரணம் சொல்லும் அவர், மும்பை தமிழ் டைம்ஸ் பத்திரிகையில் கடமையாற்றியதையும் கூறினார். "நான் ஆரம்பத்தில் அந்தப் பத்திரிகைக்கு சின்ன சின்ன படைப்புகளை எழுதுவேன், அதோடு என்கிட்டே எப்போவும் சின்னதா ஒரு நோட் புக் இருக்கும். ரயில், டீக்கடை பெஞ்ச் என எங்கே உட்கார்ந்தாலும் எனக்கு முன்னால் அமர்ந்திருப்பவங்களை அவங்களுக்கே தெரியாமல் அப்படியே பார்த்து ஸ்கெட்ச் போட்டு நான் போகும்போது அவர்களிடம் கொடுத்து விடுவேன். அப்போது ஒரு நாள் தமிழ் டைம்ஸ்ல வேலை செய்த நண்பர் எஸ். பாலபாரதி என்னை அழைத்து எனது எழுத்துகளைப் பாராட்டினார்.
அப்போது நான் பைலில் தயாராக வைத்திருந்த எனது ஓவியங்கள் சிலவற்றை அவரிடம் காட்டினேன். உடனே அவர் 'இது வேஸ்ட்! உனக்கு ஓவியம் வராது' என்றார். அவர் அப்படி சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது. பிறகு அவர் 'உனக்கு கார்ட்டூன் வரும், முடிந்தால் ட்ரை பண்ணிப்பாரு!' என்றார். 'இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுக்கு ஆளே கிடையாது. ரொம்பவும் குறைவு. இருக்கிறவங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதில நீயும் ஒருவராக வரலாம்'னு சொன்னப்போது, எனக்கும் அதுதான் சரி என்று பட்டது. முயற்சி செய்தேன். நிறைய பயிற்சியும் செய்தேன். அதன் பிறகு அந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியதோடு கார்ட்டூனும் போட்டேன். அதற்குப் பிறகு சென்னைக்கு வந்து ஆனந்த விகடனில் எனது பத்திரிகை நண்பர்களையும் பார்த்து பேசிவிட்டு, எதேச்சையாக குமுதம் பத்திரிகை அலுவலகத்துக்குப் போனேன்.

நான் ஒரு பைலை கையில் வைத்துக் கொண்டு வருவதை பார்த்த காவலாளி, நான் வேலை கேட்டு வருவதாக நினைத்து உள்ளே விடமறுத்துவிட்டார். அப்போது அங்கே வந்த ஒருவர், 'நீங்க உங்க விண்ணப்பத்தை கொடுத்திட்டு போங்க, ஆளு தேவையா இருந்தா சொல்லி அனுப்புவாங்க' என்று சொன்னார். என்னடா இது, புதுமையா இருக்கே என்று எண்ணிக் கொண்டே, நான் வரைந்த சில கார்ட்டூன் படங்களோடு என்னைப் பற்றியும் எழுதி கொடுத்துவிட்டு வந்தேன். அதற்குப் பிறகு சில நாட்களில் குமுதம் சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் கிருஷ்ணா டாவின்சி (அவர் இப்போது உயிரோடு இல்லை) என்னை தொலைபேசியில் அழைத்தார். 'மும்பை பாலா, உங்க படங்கள் சூப்பராக இருக்கு' என்று  சொல்லி எனக்கு வேலை தரவும் சம்மதித்தார். இந்த சம்பவம் 2005 இல்தான் நடந்தது. அதற்குப் பிறகு இன்றுவரை குமுதத்தோடுதான் நம்ம வாழ்க்கை" தன்னைப் பற்றி சொல்லி புன்னகைத்தார் கார்டூன் பாலா.

"ஒரு காட்டூனிஸ்ட்டுக்கு அடிப்படைத் தகுதியாக அரசியல் அறிவு இருக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் செய்திகளை ஆராய வேண்டும். குறிப்பாக அரசியல் செய்திகளின் பின்புலம், உள்குத்து பற்றி தெரிந்திருப்பது அவசியம். படம் வரையத் தெரிந்தவர்கள் எல்லோரும் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிட முடியாது. ஜெயலலிதாவை தத்ரூபமாக வரைவது அல்ல கார்ட்டூன். நாம் வரையும் படத்தில் குறிப்பிட்ட நபரின் முகத்தில் உள்ள கோடுகள், மச்சங்கள் ஆகியவற்றை கொஞ்சம் மிகைப்படுத்தி வரைவதுதான் கார்ட்டூன். இப்போ எனக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டர்கள் யார் என்றால், கலைஞர், ஜெயலலிதா, மோடி, சோனியா, மன்மோகன், அத்வானி ஆகியோர்தான் இவர்களை ஈஸியா வரைஞ்சுடலாம். ஆனால் ஆரம்பத்துல அத்வானியை வரையிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது அதுவும் பழகி விட்டது. ஆனால் சினிமா நடிகர்களை கார்ட்டூனில் கொண்டு வருவது ரொம்பவும் கஷ்டம்தான். ஏனென்றால் அவங்க மேக்அப் போட்டு முகத்தை பளபளன்னு வைத்திருப்பதால் அவங்களை கார்ட்டூனில் சிக்க வைப்பது கஷ்டம், இப்போ என் குட்டிப் பையனே கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஸ்கெட்ச் பேனாவை எடுத்து வீடு முழுவதும் வரைஞ்சு வர்ரான்"னு  பாலா சொல்லிட்டு கேலியாக சிரிக்கிறார்.

'அப்போது கலைஞரை உங்க பையனும் விட மாட்டாருன்னு சொல்றீங்களா?' என்று கேட்டதும்,

"சும்மா இருங்க சார் ஏற்கனவே பாசக்கிளிகள் படத்தைப் பற்றி நான் போட்ட கார்ட்டூன் அவரைக் கோபப்படுத்தி முரசொலியில் கழகக் கண்மணிகளுக்கு அவர் கடிதம் எழுதும் அளவுக்கு போய் விட்டது" என்று எமது வாயை அடைத்தார்.

தமிழகத்தில் மதன், மதி, பாலா, கேஷவ் ஹாசிப்கான் உள்ளிட்ட சில கார்ட்டூனிஸ்ட்டுகளே இருக்கிறார்கள். கார்ட்டூன் துறையை தேர்ந்து எடுப்பது உலகளாவிய ரீதியிலும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

"கார்ட்டூன் என்பது ஒரு கிண்டலான விமர்சனம். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பதே கார்டூன். ஆனால் அது இன்றைக்கு முடியாமல் இருக்கிறது. அன்றைய சூழலில் ஊடக துறைக்கு ஒரு அடிப்படை தார்மீக கடமை இருந்தது. நேர்மையான அரசியல் விமர்சனம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அதனால் அதிகார மையத்தை விமர்சிக்க தயங்குகிறார்கள். கார்ட்டூன் போடுறதே பிரச்சினையான வேலையாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஒரு கார்டூனிஸ்டுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதோடு மக்கள் சார்ந்த பார்வையும் முக்கியம்.


ஆனால் நாளைய தலைமுறைக்கு இவை சுத்தமாகத் தெரியாது. ஏனென்றால் நாம் தமிழகத்தில் தமிழ் தெரியாத குழந்தைகளைத்தான் வளர்க்கிறோம். அவங்களும் படித்து நல்ல தொழில் செய்து சம்பாதித்து கார், பங்களா வாங்கி வாழ ஆரம்பிப்பார்கள். ஆனால் அவங்களுக்கு சக மனிதனை பற்றிய அக்கறை இருக்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யவோ, அவங்களுக்காக போராடவோ, குரல் கொடுக்கவோ முன்வர மாட்டார்கள். அதற்கான நேரமும் இந்த உலகமயமாக்கலில் இருக்காது. அதனால் கார்ட்டூன் துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. கார்ட்டூன் என்பது ஒரு பிரசார வடிவம். நான்கு பக்கத்தில் எழுதப்படுகிற ஒரு விடயத்தை நான்கு கோடுகளில் சொல்ல வேண்டும். எனவே, யோசித்துப் பாருங்கள், அதற்கு எவ்வளவு படிக்கவும் மூளையைக் கசக்கவும் தெரிந்திருக்க வேண்டும்" என்று கார்டூன் துறையின் முக்கியத்துவத்தையும் அதன் இன்றைய நிலை பற்றியும் விளக்கினார் பாலா.

"என் அப்பா ரயில்வேயில் வேலைபார்த்த போதே இறந்து போனதால் எனக்கு அந்த வேலையைத் தர முன்வந்தார்கள். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. 'அரசாங்க வேலையில் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கலாம்'னு என் உறவுக்காரங்க சொன்னதால அரசு வேலை மீது எனக்கு வெறுப்புதான் வந்தது. அந்த வேலையை ஏற்றுக்கொள்ளாததால் என்னை 'புத்தியில்லாதவன்'னு பரிகசித்தாங்க. ஆனால் நான்தான் விடமுடியாமல் என்  இலட்சியத்திலேயே உறுதியாக இருந்து விட்டேன்" என்று சொல்லும் போது பாலாவின் முகத்தில் பெருமிதம்.

பாலா ஒரு பொதுவுடமை வாதி என்பதால் தமிழக அரசியல்வாதிகள் பற்றிக் கேட்டோம். "இவங்க எல்லோரும் வாய்ச் சவடால் வீரர்கள். போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம்னு சொல்லி எல்லோரையும் தெருவுக்கு அழைத்து வந்து கூச்சல் போடுவாங்க. ஆனால் இதுவரைக்கும் எந்த தலைவனாவது அவங்க குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது அழைத்து வந்து போராட்டத்தில் பங்கு கொள்ள செய்திருக்கிறார்களா? உண்மையைச் சொன்னால் இவங்க போராட்டத்தை அவங்க குடும்ப உறுப்பினர்களே கண்டுக்க மாட்டாங்க. இவர்களின் போராட்டம் என்ன என்பது அவங்க வீட்டில் உள்ளவங்களுக்கே தெரியாது. வெறும் சவுண்டு சந்தானமாக வாழ்கிறார்கள்" என்று தமிழக அரசியல்வாதிகளை ஒரு பிடி பிடித்தார் பாலா.

No comments:

Post a Comment