Saturday, September 13, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 07

மேடை வேஷம் போடத் தெரியாத மலேசிய சீனி முகம்மது

அருள் சத்தியநாதன்

பகல் பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருக்கும். புசுபுசுவென வெப்பம் மர இடுக்குகள் வழியாக இறங்கிக் கொண்டிருந்தது. இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு மண்டபத்தின் குளிர்ச்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்து படிகளில் இறங்கியபோது இடப்பக்க மாமர நிழலில் சிலருடன் நின்று கதைத்துக் கொண்டிருந்தார் மலேசிய கவிஞர் சீனி முகம்மது. கையில் சிகரட், வாயில் வட்ட வட்டமாக புகை வலயங்கள்.

என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். இலங்கை பேராளர்களுக்கு தனி ரிஸோர்ட் ஒதுக்கப்பட்டிருந்ததைப் போலவே மலேசிய பேராளர்களுக்கும் தனி ஹோட்டல் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, சீனியைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த போதிலும் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. ஒரு இணைப்புப் பாலம் இல்லாமல் போனதும் காரணமாக இருந்திருக்கலாம்.

சற்று முன் தான் அவர் தலைமையிலான கவியரங்கு நிறைவு பெற்றிருந்தது. தலைமை வகித்த அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் கவிதை மொழியிலேயே சொன்னார். அக்கவிதை வரிகளை அவர் வசனக் கவி வரிகளாகச் சொல்லாமல், இராகத்துடன் பாடியே சொன்னார்.

ஒரு கவி அரங்குக்கு தலைமை தாங்குபவர் தன் கருத்துகளை உரை நடை வடிவில் வசனங்களாகவும் வசன கவிதையாகவும் வெளிப்படுத்தாமல், இராகத்துடன் பாடியதைக் கேட்டது, இதுவே முதல் தடவை.

மாமர நிழலடிக்குச் சென்று இந்த வித்தியாசமான அணுகுமுறையைப் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டினேன்.

அவர் சந்தம் வைத்து பாடிப்பாடி கவி அரங்கை நடத்தியதை முதல் தடவையாகக் கேட்டபோது அது எனக்கு என்னவோ மாதிரியும் கிறுக்குத் தனமாகவும் பட்டது. ஏனெனில் கவியரங்குகளில் நமக்கு பழகிப்போனது வசன நடை கவிதைகள்தானே! ஆனால் தொடர்ந்து அவர் கவியரங்கு தலைவராக நின்று சொல்ல வேண்டியதை அப்போது அப்போதே கவி வரிகளாக புனைந்து பாடியதைப் பார்த்ததும் சீனி முகம்மது உண்மையாகவே ஒரு விஷயம் தெரிந்து கவிஞர் என்பதாக எனக்கு புலப்பட்டது. மணியோசை எழுப்பும் இனிமை ஒன்று அவர் குரலில் விரவிக் கிடந்ததையும் திரும்பத் திரும்ப பாடமாட்டாரா என்ற ஆர்வத்தையும் உண்மையாகவே அது ஏற்படுத்தியது.

மரத்தடியில் நின்ற அவரிடம் என் எண்ணங்களை அப்படியே சொன்னேன். மகிழ்ச்சிப் புன்னகை உதிர்த்த அவர் என்னைப் பற்றி விசாரித்தார்.

"இவங்க என்னா கவிதையா படிக்கிறாங்க? எழுதி வச்சுக்கிட்டு வசனமா வாசிக்கிறாங்க... இது எப்படி கவிதையாகும்? வார்த்தைகளை உடைச்சுப் போட்டுட்டா கவிதையாகுமா? கவிதைனா தம்பி, அது மனசுல இருந்து வரணும். இராகத்தோட வர்ற மாதிரி சொற்கள் அமையணும். கவிதைனா வாசிக்கிறது இல்லையே, அது பாடறது.. அதைத்தாங்க நான் செஞ்சேன்" என்று என்னிடம் எளிமைப்படச் சொன்னதை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

அவரை டிரவுசர், நீளக்கை ஷேர்ட்டோடு தான் எப்போதும் பார்த்தேன். பொதுவாகவே இலக்கிய விழாக்கள் என்றால் தமது வழமையான உடைகளை களைந்து விட்டு நம்மவர்கள்  'இலக்கிய ஆடை'களை அணிந்து கொள்வதே வழக்கம். தமிழர்களானால் பட்டு வேஷ்டி, ஷர்ட் அல்லது ஜிப்பா. முஸ்லிம்களானால் ஷர்வானி, குல்லா, பஞ்சாபி, அரசர்கள் அணியக்கூடிய முன்பக்கம் வளைந்த காலணிகள் என்று மேடை வேஷம் போட்டுக் கொள்வார்கள். கும்பகோண மாநாட்டிலும் இம்மேடை வேஷங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் சீனி முகம்மது இந்த மேடை வேஷத்தை அணியவில்லை.

ஏன் என்று அவரிடமே கேட்டேன்.

புன்னகைத்தார்.

"தம்பி நான் இந்த ஆடைகளை எல்லாம் என்றைக்குமே உடுத்தியதில்லை. நான் எப்போவும் ஷேர்ட் டிரவுசர்தான். அந்த உடுப்புகள் எல்லாம் போட்டால் பாரமா கசகசன்ணு உடம்புக்கு வசதியா இருக்காது. எது வசதியோ அதைத்தானே செய்யணும்?' என்றார் சீனி.

அட, வித்தியாசமாகப் பேசும் இந்த மனிதரை முதலிலேயே வளைக்காமல் விட்டுட்டோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

சீனி மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தபோது இவை எல்லாம் மனதில் நிழலாடியது. ஐயோ பாவமே என்றிருந்தது. அதன் பின்னர் தான் அவர் முறையாகத் தமிழ் பயின்றவர். தொல்காப்பியம் கற்றவர், தொல்காப்பிய வகுப்புகள் நடத்தியவர் என்ற தகவல்கள் எல்லாம் வெளிக்கிளம்பின. அவரது இலக்கிய ஆழம் புரிபட்டது.

அவர் புகைத்தபடியேதான் என்னுடன் பேசினார். தன் பொக்கட்டில் கைவிட்டு சிகரட் பெக்கட்டை எடுத்து புகைக்கிறீர்களா என்று என்னிடம் சீனி கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தாலும் மண்டை காயும் அந்த வெயிலில் நான் புகைக்க சம்மதித்திருக்க மாட்டேன்.

ஆனால் அவர் மறைந்து விட்ட இன்றைய சூழலில் அதை நினைத்துப் பார்க்கும்போது, அவரிடம் நானே சிகரட் கேட்டு வாங்கி அவரது 'பட்'டில் இருந்தே நெருப்பைக் கொளுத்தி ஒரு புகை வலயம் விட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் இப்போது என்னில் எழுகிறது.

எல்லாவற்றையும் லேட்டாகத்தானே யோசிக்கிறோம்!


டில்லியில் இருந்து ஒரு சுற்றுலா பஸ்சில் ஆக்ராவுக்கு ஒருமுறை சென்றேன் தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு. நாம் பயணிக்கும் பஸ்சிலேயே சென்று விட முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவிலேயே பஸ் நிறுத்தப்பட்டு பட்டறியால் ஓடும் காரில் ஏறித்தான் தாஜ்மஹால் நுழைவு வாயிலை சென்றடைய வேண்டும். சுற்றுலா பஸ் டிரைவர் எங்களை பட்டறி வாகனத்துக்காக இறக்கிவிட்ட பின்னர், தோளில் போட்டிருந்த சால்வையை சாலையோர குழாயில் நனைத்து உதறி தலையில் கட்டிக்கொண்டான்! "நீங்களும் வாங்களேன் போவோம்" என அவனை ஆங்கிலத்தில் அழைத்தேன் (எனக்குத்தான் இந்தி தெரியாதே!) அவன் உடைந்த ஆங்கிலத்தில் என்ன சொன்னான் தெரியுமா?

"அதெல்லாம் நான் பார்த்தாகி விட்டது. போங்கள் போங்கள் போய்ப் பாருங்கள்... அதில் பார்க்க என்ன இருக்கிறது? ஒரு சிவன் கோவிலை இடித்துத்தானே தாஜ்மஹாலைக் கட்டியிருக்கிறார்கள்?" என்றான் என்னிடம்.

வட நாட்டில் இந்து - முஸ்லிம் மதக்குரோதமும் மத வெறுப்பும் நிறையவே, வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய காயம் இன்றைக்கும் இரத்தமும் சீழுமாக அவர்கள் மத்தியில் இருக்கிறது. இந்துத்துவ பா. ஜ. கா, மோடியின் தலைமையில் வலிமையுடன் டில்லியில் அமர்ந்திருப்பது மத ஒற்றுமை இழைகளை மேலும் சிதைக்க உதவும் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் இக்கருத்தியலுக்கு அப்பால், இவ்விரு சமூகங்களுக்கு இடையிலும் சகிப்புத்தன்மையுடன் கூடிய மிக நெருக்கமானதும் பிரிக்க முடியாததுமான பிணைப்பு இன்றளவும் நிலவி வரும் அற்புதத்தையும் இதே இந்தியாவில் தான் காண முடிகிறது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிணக்குகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மிகவும் குறைவு. பிட்டும் தேங்காய்ப்பூவும் என்று கிழக்கிலே ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் சொல்வார்கள். இது தமிழகத்துக்குத்தான் மிகவும் பொருத்தம். இங்கே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு மாமன் மச்சான் போன்றது.

'யாதும்' என்ற தேடல்கள் மிக்க ஒரு மைல் கல் ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் கோம்பை எஸ். அன்வர் தன் படத்தில் ஒரு சம்பவம் பற்றி கூறுகிறார்.
அவரது சிறுவயது பருவத்தில் இந்துவான ஒரு வளையல் வியாபாரி அன்வரின் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைவாராம். வந்தவர் சடசடவென சமையலறைக்குச் சென்று தட்டை எடுத்து சோறு கறி எல்லாம் போட்டு சாப்பிட்ட பின்னர் ஒரு குட்டித் தூக்கமும் போட்டு விட்டுப் போவாராம். அவருக்கு அந்த இஸ்லாமியர் வீட்டில் அப்படி ஒரு உரிமை! தமிழகத்தில் மத வேற்றுமை வாதம் இருக்குமானால் அது அரசியல் ரீதியானது மட்டுமே. கோம்பை அன்வரின் ஆவணப் படம் பற்றி தனி அத்தியாயத்தில் பார்க்க வேண்டும். களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கியம் இருளில் மூழ்கிக் கிடந்தபோது தமிழ் இலக்கியத்தை வாழ வைத்தவர்கள் முஸ்லிம்களே என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வடக்கிலே சிறந்த பல சூஃபி ஞானிகள் தோன்றினர். இதன் இந்து வடிவம் அல்லது சூஃபி மரபு பிற்காலத்தில் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி தயானந்தா, சுவாமி ராம் ரிராத் போன்றோர் தலைமையேற்ற 19 ஆம் நூற்றாண்டுக்குரிய இயக்கங்களாலும் 20 ஆம் நூற்றாண்டில் சுவாமி ரங்கநாதனானந்தா, சுவாமி சித்தானந்தா ஆகியோராலும் முன்னெடுக்கப்பட்டதாக பிரணவ்குல்லர் என்ற வடநாட்டு ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

ஆகவே, இஸ்லாமியம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் தொகுதியாகவும் இந்திய வாழ்வு மற்றும் இலக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது என்றெழுதுகிறார் இவர்.

இதே நெருக்கம் தமிழகத்திலும் காணப்படுகிறது.

திருவாசகத்தில் முதல் பகுதியாக விளங்கும் சிவபுராணத்தை பெரும் புலவர்கள் எல்லாம் அகவல்பா எனக் குறிப்பிட்டு வந்தபோது, அது தவறு என்பதை நிரூபித்து, சிவபுராணம் கலிவெண்பாவினால் பாடப்பெற்றது என்பதை நிறுவியவர் ஒரு இஸ்லாமியர். கா. பீர்காதரொலி ராவுத்தர் என்பது இவர் பெயர். 1868 இல் எட்டாம் திருமுறையான திருவாசகத்தை பதிப்பித்தவரும் இவரே என்பது மேலதிகத் தகவல்.

பழந்தமிழ் நூல்களை பதிப்பிப்பதற்கு வணிகர்களான இஸ்லாமியர்களே பொருளுதவி செய்திருக்கும் தகவல்களையும் பார்க்க முடிகிறது.

வியாச பாரதத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் ம. வீ. இராமனுஜாசாரியார். இந்நூலை வெளியிடுவதற்கு, ஆடுதுறை தோல் கிடங்கு எம். ஜி. முகம்மது அப்துல்லா ஸாஹிப் பகதூர் பல சமயங்களில் பொருளுதவி செய்ததாக நன்றியுடன் குறிப்பிடுகிறார் இராமானுஜாசாரியார்.

குறுந்தொகையை பதிப்பித்த சௌரிப் பெருமாளரங்கன் இந்நூல் பதிப்பு வேலைகளுக்கு அவர் பணியாற்றிய கல்லூரி முதல்வரான ஸ்ரீமன் முகம்மது இப்ராஹிம் குரைஷிஸாஹேப் B.A.L.T. பொருளுதவி புரிந்ததாகவும், தமக்கென வாழாமல் பிறர்க்குரியாளரான இவர் பல பிரதிகளைத் தாமே விலை கொடுத்து பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டு புகழாரம் சூட்டுகிறார்.

மகாபாரத அம்மானையை இயற்றியவரும் ஒரு முஸ்லிம் கவிஞர். சையது முகம்மது அண்ணாவியார் என இவர் அழைக்கப்பட்டார்.

(தொடரும்)

No comments:

Post a Comment