Saturday, September 13, 2014

இருள் உலகக் கதைகள்-04

தோளைத் தட்டி உணவு கேட்ட பகாசுர ஆவி!


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-   மணி ஸ்ரீகாந்தன்

அது ஒரு முழு பௌர்ணமி நாள். ஊர் அடங்கிக் கிடக்கும் ஒரு நள்ளிரவு வேளை. இரவு 12.00 மணியை கடிகார முள் நெருங்கிக் கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து இங்கிரியை நோக்கி வந்த பஸ் கிரிகலைச் சந்தியை புயலெனக் கடந்தது.

அப்போது பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் இருவரைத் தவிர வேறு எவருமே இல்லை.'சே! இந்த இரண்டு பயணிகளும் இல்லையென்றால் ஹந்தபான்கொடை சந்தியில் நிறுத்தி குவாட்டர் வாங்கி தொண்டையை நனைத்திருக்கலாமே' நினைக்கும்போதே குணதாஸவிற்கு நாவில் நீர் சுரந்தது. 'ம் பரவாயில்லை இங்கிரியாவில் இந்த இரு பயணிகளையும் இறக்கி விட்டு திரும்ப வருவோம்' என்று நினைத்தவாறே ஆக்ஸிலேட்டரை இன்னும் பலமாக மிதிக்க பஸ் பறந்தது.

கிரிகலை சுடுகாட்டு பஸ் நிறுத்தத்தில் ஒரு வயதான மனிதர் பஸ்சை நிறுத்த கையை நீட்டினார். சாராயம் குடிக்கும் ஆவலில் இருந்த குணதாஸ, 'இந்த கிழட்டுப் பயலுக்கு இந்த அர்த்த ராத்திரியில் என்ன வேலை'னு மனதுக்குள் திட்டியபடியே பஸ்சை நிறுத்தாமல் வேகமெடுத்த சில நொடிகளில் பஸ் இங்கிரியாவை சென்றடைந்தது. பயணிகள் இருவரையும் கண்டக்டர் 'ஹிக்மன் கரலா பயின்ன' என்று கத்தியபடி இறங்கிப் போகச் சொன்னார். 'எப்போவும் இவனுங்களுக்கு அவசரம்தான்' என்று திட்டியபடி இரு பயணிகளும் இறங்கிச் சென்றனர். பஸ் மீண்டும் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தது.

'காட்டு மாட்டு சிங்கம் தூங்கிட்டா அப்புறம் அவன எழுப்பி கசிப்பு வாங்குறது ரொம்ப கஷ்டம்' என்று கண்டக்டர் கூறியதை செவிமடுத்த டிரைவர் குணதாஸ, பஸ்சின் வேகத்தை அதிகப்படுத்தினான். பஸ் மீண்டும் கிரிகல சுடுகாட்டு சந்தியை நெருங்கியது. அடுத்த சில நிமிடங்களில் வீதியின் நடுவே அதே வயது முதிர்ந்த அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். பஸ்சின் மின் விளக்கு வெளிச்சம் அவரின் முகத்தில் பட்டதில், அவரின் கண்கள் சிவப்பு நெருப்பு குழம்பாக டிரைவருக்கு பட்டது. டிரைவர் அலறியபடி பிரேக் பிடிக்க பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. டமார் என்ற சத்தம், அந்த நிசப்தமான இரவை கிழித்துக் கொண்டு கிரிகல பிரதேசத்தை அதிரவைத்தது.

"கிழவன் செத்துட்டான் போல,
நாம் இங்க நிற்க கூடாது" என்று கண்டக்டருக்கு சைகையால் சொல்லிவிட்டு சாரதி பஸ்சை ஹந்தப்பான்கொடை காட்டு மாட்டு சிங்கம் வீட்டை நோக்கி செலுத்தினான். அன்று குணதாஸவும், கண்டக்டரும் கொஞ்சம் அதிகமாகவே குடித்தார்கள். பதட்டத்தில் அவர்களுக்கு போதை ஏறவில்லை. பிறகு பஸ் ரிப்பேர் ஆகிவிட்டதாக சொல்லி பஸ்சை ஹோமாகமை டிப்போவில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்த குணதாஸ, வீட்டுக்கு வந்து படுத்தான். அடுத்த நாள் அவனுக்கு குளிர்காய்ச்சல் வாட்டி எடுக்க பித்தம் களங்கியவனாகவும் உலறி இருக்கிறான். அவனை ஏதோ காத்து கருப்பு பிடித்து விட்டதாக நினைத்த மனைவி குசுமா பன்சலைக்கு சென்று தண்ணீர் மந்திரித்து கொடுத்திருக்கிறாள்.

ஆனால் கிரிகல சுடுகாட்டு சந்தியில் விபத்து நடந்ததிற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அவனைப் பார்க்க வந்த நடத்துநர் குணதாசவிடம் சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். குணதாசவுக்கு பித்தம் தெளிந்த மாதிரி இருந்தது.

இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன. குணதாஸவும் இதை மறந்து விட்டான். இந்த நிலையில்தான் கடந்த மாதம் அங்கே இன்னொரு சம்பவம் அரங்கேறியது.

பதுளை தங்கமலை தோட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிரிகல மெலிபன் ஆடைத்தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் கிரிகலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியே தொழில் செய்து வருகிறார்கள். அன்று ஆடைத் தொழிற்சாலையில் சம்பளம் கொடுக்கும் தினம். எனவே அவர்கள் கொஞ்சம் உற்சாகமாகவே வேலை செய்தார்கள். மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்ததும் இளைஞர்கள் ஐவரும் தமது தங்குமிடத்துக்கு சென்று விடுவார்கள். ஆனால் அன்று பொக்கட்டில் பணம் நிறம்பியிருந்தால் ஏதாவது செய்து அதை குறைத்துவிட வேண்டும் என்று அவர்களில் ஒருவனான தியாகு எண்ணினான்.

"மச்சான் வாடா பியர் வாங்கிட்டு வருவோம்" என்று நண்பர்களை அழைத்தான். இதை எதிர்பார்த்திருந்த மாதிரி அவர்களும் ஒரே மூச்சில் சரி என்று சொல்ல, நடை டவுனை நோக்கி நீண்டது. மதுபானக்கடையில் பியர் போத்தலை வாங்கி பையில் போட்டுக் கொண்டதோடு கார நொறுக்குத் தீனி பக்கட்டுகளையும் வாங்கி பையை நிரப்பிக் கொண்டனர். அஜித் வறுத்த மீன் துண்டுகளை வாங்கிக் கொண்டான். எண்ணெயில் பொரிந்த மீன்களின் வாசனை மூக்கில் தங்கி பசியை கிளறியது. "சீக்கிரம் வாங்கடா" என்று தியாகு அழைக்க சரசரவென கிளம்பிய அவர்கள் பஸ் பிடித்து ஏறி அமர்ந்தார்கள் சில நிமிட ஓட்டத்தின் பின் கிரிகல சந்தியில் பஸ் நின்றது. நண்பர்கள் ஐவரும் இறங்கிக் கொண்டார்கள். அப்போது இரவு எட்டு மணியிருக்கும். இருள் அந்த பிரதேசத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அங்கே இருந்த மயானத்தில் ஒரு குழி மேட்டின் மீது வைக்கப்பட்டிருந்த மினுக் மினுக்கென ஒளிவிட்டுக் கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமே கிடையாது. கரு கும்மிருட்டு! அந்த இளைஞர்களில் முரட்டு ஆசாமியான வெங்கடேஷ் கையில் இருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டு எண்ணெய் விளக்கு எரியும் திசை நோக்கி ஓடினான்.

விளக்கின் நெருப்பில் சிகரெட்டை பற்றவைத்தான். "டேய் மச்சான் இங்கே வாங்கடா இங்கே உட்கார்ந்து கொஞ்சம் குடிச்சிட்டு போவோம். இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு" என்று அழைத்தான் தன் நண்பர்களை. அவன் அழைப்பிற்கு மறுப்புத் தெரிவிக்காத நண்பர்களும் அந்த பற்றைக்குள் நுழைந்தார்கள். அந்த இடம் வெங்கடேஷ் சொன்னது போல ரொம்பவும் நன்றாகவே காணப்பட்டது. "மச்சான்! இனி நம்ம பார்ட்டிக்கு இந்த இடத்தையே வச்சுக்கலாம்டா" என்று சொன்ன தியாகு, பைக்குள் இருந்து பியர் போத்தல்களை எடுத்து வைக்க தொடங்கினான். ஐந்து நிமிடங்கள் கழிய, மது சிகரெட் புகை மணமுமாக அந்த இடத்தையே நிறைத்ததோடு அவர்களின் பேச்சும் சிரிப்பும் அம் மயான மௌனத்தைக் கலைத்தது.
அனைவருக்கும் போதை ஓரளவுக்கு ஏறியிருக்க, "அடி நீ தானே தள்ளாக்குளம், .... நான்தானே தெப்பக்குளம்..." என்ற பாடலை வெங்கடேஷ் எடுத்துவிட, நண்பர்கள் தாளத்திற்கு ஏற்றதாற்போல கையைத் தட்ட ஆரம்பித்தார்கள்.

அப்போது தியாகுவை யாரோ பின்னாலிருந்து தோளில் தட்டினார்கள்.

'மே மல்லி.. மட பொட்டக் தென்ட' என்று சிங்களத்தில் அக்குரல் கேட்டது. "சும்மா இருடா நாதாரி!" என்று தியாகு திரும்பிப் பார்க்காமலேயே திட்டி விட்டு போத்தலை வாயில் வைத்து ஒரு மிடறு விழுங்கினான். அந்த டீமில் தியாகுவிற்கு மட்டும் சிங்களம் பேச வராது. அதனால் அவனை நண்பர்கள் சிங்களத்தில் திட்டி கடுப்பேற்றுவது வழக்கம். போத்தல்களை காலி செய்த நண்பர்கள் கொஞ்சமாகத் தள்ளாடியபடியே தமது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஏதேதோ பேசியபடியே அவர்கள் நடக்க, திடீரென்று தியாகு அவர்களைப் பார்த்து, "அடோ சப்ததஹான்ட எபா!" (அடேய் சத்தம் போடாதீங்க) என்றான். அவனை சமாதானப்படுத்திய நண்பர்கள் தமது இருப்பிடத்தை சென்றடைந்தார்கள். போதையில் வந்த அவர்கள் உடை மாற்றிக் கொண்டு உறங்கச் சென்றார்கள். தியாகு மட்டும் சிங்களத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டிருந்தான். பொறுமை காத்த வெங்கடேஷ் ஒரு இடத்தில் பொறுமை இழந்து செருப்பை எடுத்து தியாகுவை விலாசித் தள்ளினான்.

மறுநாள் பொழுது விடிந்த பிறகும் தியாகுவின் அழிச்சாட்டியம் தொடர்ந்தது. சிங்களம் பேசத் தெரியாத தியாகு எப்படி சிங்களம் பேசுகிறான்? என்ற குழப்பம் நண்பர்களுக்கு.

முதல் நாளிரவு மயானத்தில் அமர்ந்து தண்ணியடித்தது ஞாபகத்துக்கு வர, இது ஏதோ தீய சக்தியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட நண்பர்கள் இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வீரசிங்கம் பூசாரியை தேடிச் சென்றார்கள்.

வீரசிங்கம் வீட்டு வாசலுக்கு அந்த ஐவரும் வந்தபோது தீய சக்தி குடிகொண்டு இருக்கும் தியாகுவை மட்டும் அவர் அடையாளம் கண்டுகொண்டார். அன்று போயாதினம் என்பதால் வீரசிங்கம் எந்த பரிகாரமும் செய்வதில்லையாம். ஆனாலும் அவர்களின் நிலமையை அறிந்து கொண்டு குலசாமி கருப்புசாமியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு முதல் வேலையாக ஒரு முட்டையை தியாகுவின் தலையில் வைத்து அதன்மேல் சூடத்தை கொளுத்தி மந்திரித்து கெட்ட சக்தியை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார். பிறகு தியாகுவின் முதுகு பக்கமாக வந்த வீரசிங்கம், சட்டையை விலக்கிக் காட்டச் சொன்னார். அவர் நினைத்தது சரிதான். தியாகுவின் முதுகில் ஐந்து விரல் அடையாளம் தெளிவாகத் தெரிந்தது! அதைப் பார்த்ததும் நண்பர்கள் மிரண்டு போனார்கள்.

இந்தப் பேயை எப்படியாவது விரட்டி விடுங்கள் என்று நண்பர்கள் பூசாரியை வேண்டினார்கள். அடுத்த நாளே அதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லி அதற்கான பூஜை பொருட்களோடு மறுநாள் வருமாறு சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அடுத்த நாள் இரவு ஏழு மணிக்கெல்லாம் பேயோட்டும் படலம் தொடங்குகிறது.

தியாகுவை பேச வைப்பதற்கான மந்திரங்களை தொடர்ந்து உச்சாடனம் செய்து, மந்திரச் சொற்களுக்கு உருவேற்றி ஸ்தாயியை உச்சத்துக்குக் கொண்டு போனபோது தியாகு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆக்ரோஷம் கொண்டவனாக மாறினான்.

"என்ன எல்லோரும் சுதுமாமா ஒன்றுதான் அழைப்பார்கள்... நான் சாகும்போது எழுபத்தைந்து வயது. பிள்ளைகள் ஒழுங்கா கவனிக்காமல் உணவு கூடத் தராமல்தான் நான் இறந்தேன். இப்போது என் மனைவிகூட அதே நிலைமையில்தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா, அவளை காப்பாத்துங்க சாமீ!" என்று தியாகுவிற்குள் இருக்கும் ஒரு கிழட்டு ஆவி சிங்களத்தில் பேசத் தொடங்கியது.

"இரவு நேரத்தில் கூட இவன்கள் செய்யும் அட்டகாசத்தால் என்னால் தூங்க முடியல்ல. என்னை தொந்தரவு செய்றாங்க. எனக்கு பசி. அதனால் அவங்க சாப்பிடுறதுலயும், குடிக்கிறதிலயும் கொஞ்சம் தரும்படி கேட்டேன், ஆனா இவனுங்க என்ன கண்டுக்கவே இல்லை. அதுதான் கோபம் பொறுக்க முடியாமல் அடிச்சிட்டேன். பாவிப் பயலுங்களுக்கு இந்த சின்ன வயசுல அப்படி என்ன குடி வேண்டிக்கிடக்கு? என் பக்கத்துல நின்னுக்கிட்டு யாரு யாரோ பொம்பளைக்கெல்லாம் போன்போட்டு கொஞ்சுறானுங்க.. இவனுங்களுக்கு லவ் பண்ண என் இடமா கிடைக்குது?" என்று சுதுமாமாவின் ஆவி, சிங்களத்தில் பேசிக்கொண்டே போனது கேட்டுக் கொண்டிருந்த நண்பர்களுக்கு குலை நடுங்கிப்போனது.

திடீரென "அந்த படவா ராஸ்கல்தான் என்னை செருப்பால் அடிச்சான்" என்று சொல்லிய ஆவி, வெங்கடேஷை முறைத்தது. வெங்கடேஷ் அந்த இடத்தை மெதுவாக காலி செய்தான். ஆவியின் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த வீரசிங்கம் பூசாரி, ஆவியை மடக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். உணவுக்கு ஏங்கிச் செத்த கிழவன் என்பதால் உணவு பதார்த்தங்களை கொண்டுவரச் சொன்னார். இறைச்சி, ரோல்ஸ், சாராயம், சிகரெட் எல்லாம் தியாகுவின் முன் வைக்கப்பட்டன. தியாகுவில் குடி கொண்டிருக்கும் ஆவி, உணவுகளை மளமளவென கபளீகரம் செய்து சாராயத்தையும் மடமடவென குடித்தது. நடுநடுவில் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டே சென்றது. இது ஒரு ஆபத்தில்லாத உணவின் மீது பேராசை கொண்ட ஆவி என்பதை புரிந்து கொண்ட வீரசிங்கம் பூசாரி, சாப்பாட்டின் பின்னர் வேகம் குறைந்த ஆவியிடம் நான்கு நண்பர்களையும் ஆவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட ஆவி சமாதானமாகி தியாகுவின் உடம்பை விட்டு வெளியேற சம்மதித்தது. இதையடுத்து கறுப்பு சேவலை தலையைச் சுற்றி எடுத்து வெட்டி பலியாகக் கொடுத்துவிட்டு ஆவியை பூசணிக்காயில் இறக்கினார் பூசாரி.

இப்போது நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் கதை இதோடு முடியவில்லை. அந்த நண்பர்கள் தங்கி இருக்கும் அறையில் இப்போது இரவு நேரத்தில் ஒரு கறுப்பு நிழல் நடமாடுவதைக் கண்டிருக்கிறார்கள். அறைக்கு வந்து ஏதாவது செய்யுங்கள் என்று அவர்கள் வீரசிங்கம் பூசாரியிடம் வந்து கூறியிருக்கிறார்கள்.

அது தனியார் விடுதி என்பதால் அங்கே சென்று பேயோட்டுவது என்பது சாத்தியப்படாது என்பதால் அந்த வேண்டுதலை ஏற்க பூசாரி மறுத்துவிட்டார்.

பதிலாக, பூஜித்து உருவேற்றப்பட்ட ஒரு பொருளை அங்கே காவலுக்கு நிறுத்துவது பற்றி நண்பர்களிடம் பூசாரி கூறி அதற்கான வேலைகளை தற்போது செய்து வருகிறார்.

No comments:

Post a Comment