Friday, August 22, 2014

முட்டுச்சந்து பெட்டிக்கடை மணி  ஸ்ரீகாந்தன்

அறுசுவை உணவுகளை ருசித்து சாப்பிட அதிநவீன உணவகங்கள்
 தலைநகரில் வந்துவிட்டாலும், முட்டுச்சந்து பெட்டிக்கடை, வீதியோர கையேந்தி உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அடுத்த வீட்டு ஆயா சுட்டுத் தரும் ஆப்பத்திற்கு எப்படி ஒரு தனி சுவை இருக்குமோ அதுமாதிரிதான் இந்த மினி உணவகங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஆட்டுப்பட்டித்தெருவில் அனேகருக்கும் மிகவும் பரிச்சயமான வி. ஐ. பி. தான் நம்ம இட்லிக்கார லெட்சுமி அம்மாள்.


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டுப்பட்டித் தெருவில் இட்லி, தோசை வியாபாரம் செய்து வருகிறார். "வயசு போயிடுச்சுன்னு சும்மா வீட்டுல உட்காரத்தான் ஆசையா இருக்கு. ஆனா முடியலை. ஏன்னா சும்மா உட்கார்ந்தா நோய் வந்திரும். இப்படி பரபரன்ணு வேலை செய்திட்டு இருந்தா நோய் நம்ம பக்கமே தலை வச்சுப் படுக்காதுங்க" என்று சொல்லிவிட்டு காய்கறிகளை நறுக்குவதில் வேகம் காட்டுகிறார் லெட்சுமி அம்மாள். காய்கறிகளை நறுக்குவதில் அவர் காட்டும் வேகத்தைப் பார்த்தால் அவருக்கு வயது எழுபதை கடந்து விட்டது என்று யாரும் நம்ப மாட்டார்கள்!


"நம்ம படிப்பு மூணாவது தாங்க.... எங்க அம்மா, அப்பா பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறில் இருந்து வரும் போதே இட்லி சட்டியோடத்தான் சிலோனுக்கு வந்திருக்காங்க. என்னோட பிறந்தவங்க மொத்தம் பதினோரு பேருங்க. நான் ஐந்தாவது. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இதே ஆட்டுப்பட்டித்தெருவில்தான். எங்க அம்மாவின் முந்தானையைப் பிடிச்சிட்டு வளர்ந்ததால் அம்மாவின் இட்லி சுடும் கை பக்குவம் நமக்கும் வந்திருச்சி. செட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி, சென்றல் ரோடுன்ணு எல்லா இடங்களில் உள்ளவங்களுக்கும் நம்மள தெரியும். நம்ம சாப்பாட்டை ருசி பார்த்தவங்கதான் எல்லோரும்..." என்று பெருமிதத்தோடு புன்னகைக்கிறார் லெட்சுமி!
மாலை ஐந்து மணிக்கெல்லாம் லெட்சுமி அம்மாளின் இட்லி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இரவு பத்து மணி வரை வியாபாரம் ஜோராக நடக்கிறது. வாரத்தில் ஞாயிறு மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்கிறார்.

"இப்போ விலைவாசி உயர்ந்து விட்டதால் இட்லி வியாபாரம் கொஞ்சம் மந்த கதியில்தான் போகிறது. இப்போ ஒரு இட்லி இருபது ரூபாவுக்கு விற்பனையாகிறது" என்று சொல்லிக்கொண்டிருந்த போது,

"அந்தக் காலத்தில் ஒரு இட்லி ஐந்து சதத்திற்கு விற்றோம். நான்தான் இட்லியை கூடையில் வைத்து இந்த தெரு முழுவதும் கூவிக் கூவி வித்துட்டு வந்தேன்" என்று இடையில் புகுந்த லெட்சுமியின் அண்ணன் ராமசாமி தேவர் நெஞ்சு நிமிர்த்தினார்.

"நாங்களெல்லாம் கட்டபொம்மன் மண்ணுக்காரங்க, சும்மாவா.." என்று கொஞ்சம் கெத்து காட்டிவிட்டு வெளியே போனார் அவர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாளின் முகத்தில் கேலிப் புன்னகை.

லெட்சுமி அம்மாளின் இட்லி வியாபாரத்தில் இப்போ எல்லாமே மெஷின்தான்.

"அட என்னங்க மெஷினு... அந்தக் காலத்தில் ஆட்டுக்கல்லில் ஆட்டி அவிக்கிற இட்லியின்  சுவை இந்த மெஷின் ஆட்டும் போது கிடைக்கலீங்க... எல்லாம் கரண்டு வந்ததால வந்த வினை. செலவுதான் அதிகம்..." என்று முகத்தில் வெறுப்புக் காட்டுகிறார்.

லெட்சுமி அம்மாளுக்கு உதவியாக அவரின் தங்கை தெய்வானை தோள் கொடுத்து வருகிறார். இதனால் லெட்சுமியின் வேலை சுமை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு நூறு நூற்றியம்பது இட்லிகள் விற்பனை ஆகிறதாம்.

"எனக்கு மூணு பிள்ளைகள். எல்லோரும் கல்யாணம் முடித்து குழந்தை குட்டின்ணு ஆகிட்டாங்க. இது என் சொந்த வீடுதான்" என்கிறார் பெருமையாக.


"என் வாழ்க்கைச் சக்கரம் இன்னைக்கு வரைக்கும் வெற்றிகரமாக ஓட இந்த இட்லி வியாபாரம்தான் காரணம். இன்றைக்கு விலைவாசி அதிகமாகி விட்டதால் இட்லி வியாபாரம் செய்வது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் செய்த தொழிலை நிறுத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. சாப்பாடு கேட்டு வர்றவங்ககிட்ட இல்லைன்ணு சொல்ல முடியலை. அதனால் வியாபாரத்தை நடத்தி வர்றோம்" என்று சொன்னவர் ஊற வைத்த உளுந்தை அரவை மெஷினில் போட்டு பட்டனைத் தட்டினார். மெஷின் கர.... கரன்னு சத்தம் போட, அதற்கு மேலும் நாம் அங்கே நிற்க முடியாமல் விடை பெற்றோம்.

No comments:

Post a Comment