Saturday, August 30, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 06

இசை  ஹராமா  ஹலாலா?

கவிக்கோ தரும் விளக்கம்

அருள் சத்தியநாதன்


கடந்த இதழ்களில் வெளியான கட்டுரைகள், இசை இஸ்லாத்தில் ஏற்கப்பட்ட ஒன்றே என்பதையும் இந்தியாவில் பாரசீக மன்னர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் இசை மேன்மையுற்றிருந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் இஸ்லாம், ஏற்புடைய இசை, ஏற்கத்தகாத இசை என இசையை இரண்டாகப் பிரித்திருக்கிறது. இசை என்றால் இசை மட்டும்தானே, அதென்ன ஏற்கத்தக்க இசை, ஏற்கத்தகாத இசை என்று பிரிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.

இசையில் மட்டும்தான் என்றில்லை, எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. திரைப்படங்களை எடுத்துக் கொண்டாலும் குடும்பத்தோடு பார்க்கத்தக்கது, சிறுவர் பார்க்கக் கூடாதது, பெரியவர்களுக்கு மட்டும் எனப் பல தரங்கள் உள்ளன. உணவிலும் சாப்பிடத்தக்கது, சாப்பிடத்தகாதது என்றுள்ளது. செய்யக் கூடியவை, கூடாதவை என எதை எடுத்துக் கொண்டாலும் எல்லா செய்கைகளிலும் அது வருவதைப் போலவே இசையிலும் உள்ளது என்றே இஸ்லாம் பகர்ந்திருக்கிறதே தவிர இசை வேண்டவே வேண்டாம் எனக் கூறவில்லை.

கும்பகோண மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்திய கவிக்கோ அப்துல் ரஹ்மான், இசை ஏன் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அருமையான விளக்கங்களைச் சொன்னார்.

'இசைக்கு எதிராக 19 ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இந்த 19 ஹதீஸ்களையே இசை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டி, இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். ஆனால் மறை ஆய்வாளர்கள் இந்த 19 ஹதீஸ்களும் நம்புவதற்கு ஏற்றவை அல்ல. ஹதீஸ் திறனாய்வுக்கலை மதிப்பீடுகளின்படி இவை சரியானவை அல்ல. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்பாகக் காணப்படும் பெயர்களில் சில நம்புவதற்குரியதாக இல்லை' என்று அவர் கூறினார்.

இதற்கு ஆதாரமாக அவர்,

'நிச்சயமாக அல்லாஹ் பாடலையும் அதைப் பாடி விற்பதையும் அதன் பெறுமதியையும் அதனைக் கற்றுக் கொடுப்பதையும் அதனை செவிமடுப்பதையும் தடை செய்திருக்கிறான்' என்ற ஹதீஸை எடுத்துக் கொண்டார்.

இந்த ஹதீஸை அறிவித்ததாக குறிப்பிடப்படும் பெயர் ஸஈத் பின் ரஸீன் என்றிருக்கிறது. இவர் இந்த ஹதீஸைத் தன் சகோதரரிடமிருந்து பெற்று அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இருவரும் யார் என்று தெரியவில்லை.

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்பது விஷயங்களைத் தடை செய்தார்கள். அவற்றில் பாடல் என்பதும் ஒன்று' என்ற ஹதீஸ், அந்த 19 ஹதீஸ்களில் ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடர்பில் இடம் பெற்றிருக்கும் கைஸான் என்பவர் யார் என்று தெரியவில்லை.

நிச்சயமாக அல்லாஹ் என்னை உலகங்களுக்கு அருளாய் அனுப்பியுள்ளான். மேலும் அவன் இசைக் கருவிகளையும் சிலைகளையும் சிலுவைகளையும் அழித்துவிடும்படி என்னை ஏவியுள்ளான். இவற்றை விற்பதும் வாங்குவதும் கற்றுக் கொடுப்பதும் இவற்றை வைத்து வியாபாரம் பண்ணுவதும் ஹலாலாக மாட்டாது. இவற்றின் கிரயமும் ஹராமாகும் என்பது அந்த 19 ஹதீஸ்களில் ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடர்பில் இடம் பெற்றிருக்கும் அல் காஸிம் என்பவர் பலவீனமானவர் என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தாகும்.

இவ்வாறு, இசை ஹராம் என்று சொல்வதாக அமைந்திருக்கும் ஹதீஸ்களில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய கவிக்கோ, இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு ஆதாரமாகத் திகழும் ஹதீஸ்கள் அனைத்தும் உறுதியானவை என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் உறுதியான கருத்தாகும் என்று குறிப்பிட்டதோடு அதற்கான ஆதாரங்களையும் முன் வைக்க ஆரம்பித்தார்.

ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்களுடைய இல்லத்தில் அன்ஸாரிச் சிறுமிகள் இருவர் 'புஆஸ்' என்ற இடத்தில் நடந்த போரின்போது அன்ஸாரிகள் ஒருவரை ஒருவர் போற்றியும், தூற்றியும் பாடிய பாடல்களை கஞ்சிராக் கருவியை வைத்து வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுள் ஒருத்தி, 'எங்களிடையே இறைதூதர் ஒருவர் இருக்கிறார். அவர் நடக்க விருப்பத்தையும் அறிவார்' என்று பாடினாள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இதை நீ விட்டு விட்டு, முன்பு நீ பாடிக்கொண்டிருந்ததை பாடு' என்று கூறினார்கள் (புகாரீ, 5147)

இந்த ஹதீஸ் முக்கியமான இசை பற்றிய விளக்கத்தைத் தருகிறது. சிறுமியர் தம் முன்னோர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடியதை அனுமதித்த இறைத்தூதர் (ஸல்), இறைத்தூதர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்' என்று பாடியதை அனுமதிக்கவில்லை. காரணம், அது உண்மையல்ல, நாளை நடப்பதை இறைவன் ஒருவனே அறிவான். அவன் அறிவித்தாலன்றி இறைத்தூதர்களுக்கும் வருங்காலம் பற்றித் தெரியாது. அதனால்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்கள்.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இறைத்தூதர் இசையைத் தடுக்கவில்லை. அதில் தகாத பொருளை வைத்துப் பாடுவதையே தடுத்தார்கள். இதை நன்றாகப் புரிந்து கொண்டால் இசையைப் பற்றி இஸ்லாத்தின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் நீங்கிவிடும். ஏனெனில் பெருமானே பாடியிருக்கிறார்கள்.

அகழப் போரின்போது தோழர்களோடு சேர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களும் மண் சுமந்து சென்றார்கள். அகழி மண் சுமந்து சென்ற தோழர்கள்,

நாங்கள்
முஹம்மது (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி அளித்துள்ளோம்
உயிரோடு இருக்கும்வரை
எப்போதும்
அறப்போர் புரிவோம்
என்று பாடியபோது அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும்,

இறைவா மறுமையில் நன்மை தவிர
வேறு நன்மை கிடையாது
அன்ஸாரிகளுக்கும்
முஹாஜிர்களுக்கும்
வளம் வழங்குவாயாக

என்று பாடலிலேயே பதிலளித்தார்கள்.

இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் அளித்த கொடைகளில் இனிய குரலும் ஒன்று. அந்தக் குரலால் அவர்கள் இறைவனைத் துதித்துப் பாடுவார்கள். இதைப் பற்றி இறைவன் திருமறையில் எடுத்துரைக்கிறான்.

நாம தாவூத்துக்கு நம்மிடமிருந்து பெரும் அருட் பேற்றினை வழங்கியிருந்தோம். மலைகளே! நீங்களும் அவருடன் சேர்ந்து துதிபாடுங்கள் என்று நாம் ஆணையிட்டோம். (குர்ஆன் 3410)

எனவே இசையை பெரும் பேறு என்று இறைவனே சொல்கிறான். இறைவனே இசையை அனுமதிக்கும்போது ஏன் இஸ்லாம் இசையைத் தடுக்கிறது என்று கூறுகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. இறைவன் தாவூத் (அலை)க்கு வழங்கிய வேதம் ஸபூர். ஸபூர் என்றால் சங்கீதம் என்று பொருள். இதிலிருந்து இந்த வேதம் இசைப் பாடலால் ஆனது என்பதை யூகித்தறியலாம்.

இனிய குரலால் குர் ஆனை ஓதும்போது அதை செவிமடுப்போருக்கு, குர்ஆன் வாக்கியங்கள் இசைமயமான வாக்கியங்களால் ஆனவை என்பது புரியும். இதுபோதாதா, இஸ்லாம் இசையைத் தடுக்கவில்லை என்பதற்கு? இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இறை வழிபாட்டிலிருந்து மனித மனதை திசை திருப்பும், அவனது வாழ்வைக் கெடுக்கும் தீயனவற்றையே இஸ்லாம் ஹராம் என்கிறது. தீய விஷயங்களைப் பாடும்போது மட்டுமே அப்பாடல் ஹராமாகிறது. நல்ல விஷயங்களைப் பாடும்போது அது ஹராமாகாது. புத்தகங்களில் நல்ல நூல்கள், தீய புத்தகங்கள் என்று இரு வகைப்படும். தீய நூல்களை ஹராம் என அழைக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த நூல்களையும் ஹராம் என்று அழைக்கலாமா?

இவ்வாறு கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாத்தில் இசை ஹராமாகாது என்ற தனது வாதத்தை நிறுவும் வகையில் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன்வைத்தார்.

பண்டைய அராபியாவில் இசை பெரும்பாலும் விபசார விடுதிகளிலும் மதுச்சாலைகளிலுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த இசைக் கருவிகளை அராபியர்கள் தெய்வங்களாக நம்பி வழிபடவும் செய்தனர். இதன் காரணமாகவே இசையும் இசைக் கருவிகளும் ஹராம் என்ற கருத்து உருப்பெற்றது. இஸ்லாம் தோன்றி பரவிக் கொண்டிருந்த காலத்தில் இக்கருத்து முஸ்லிம்களிடம் உள்ளுர ஊறியிருந்தது. இசை தொடர்பான முரணான மார்க்கச் சட்டங்களுக்கு இதுவும் ஒரு காரணம் என்று தனது உரையில் கவிக்கோ ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

(தொடரும்)

No comments:

Post a Comment