Friday, August 29, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 05

மாடுகள் மேய்ந்து திரிந்த திருச்சி விமான நிலையம்


அருள் சத்தியநாதன்

நான், இஸ்மாயில் என்ஜினியர், எஸ். முத்துமீரான், மருத்துவர் ஜாபிர் ஆகிய நால்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி காலையில் திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்து விட்டோம்.


இலங்கையில் ஜோக்காக பேசப்படும் இடம்தான் திருச்சி விமான நிலையம். அது ஒரு வீடு போல முன்னர் காணப்பட்டது. அங்கே போய் வரும் இலங்கைப் பயணிகள், லஞ்சம் தலை விரித்தாடும் இடம் என்றும் ஏதாவது தள்ளினால்தான் காரியம் நடக்கும் என்றும் சொல்வார்கள். எண்பதுகளில் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவர்கள், அந்த விமான நிலையத்தைச் சுற்றி மாடுகள் சுற்றித்திரியும் என்றும் ஜன்னல் வழியாக மாடு எட்டிப் பார்க்கும் என்றும் சொல்வார்கள். இதில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை நான் அறியேன்.

அப்போது இங்கிருந்து திருச்சி போகிறவர்கள், டியூரோ ஷேர்ட்டுகள், தேங்காய் எண்ணெய், லக்ஸ், சன்லைட் சோப், இரண்டு போத்தல் அதிவிசேஷ சாராயம், ஏலம், கிராம்பு என்று கொண்டு செல்வார்கள்.

லக்கேஜை பரிசோதிக்கும் சுங்க அதிகாரி, லக்ஸ் இரண்டு கட்டி, தேங்காய் எண்ணெயில் ஒரு போத்தல் என்றெல்லாம் எடுத்துக் கொள்வாராம். போத்தலைக் கண்டதும், போத்தல் எல்லாம் இங்கே கொண்டுவர முடியாது என்று சத்தம் போடுவாராம். அப்போது தமிழகத்தில் மது விலக்கு அமுலில் இருந்தது.
சட்டென போத்தல் மூடியை உடைத்து ஜன்னல் வழியாக இரண்டு போத்தல் சாராயத்தையும் வெளியே கொட்டிவிட, பதை பதைத்துப் போய்விடுவார் பயணி, ஆனால் அந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு பேசின் வைக்கப்பட்டிருக்கும் என்றும் சாராயம் முழுவதும் அந்த பேசினுக்குள்ளேயே கொட்டப்படும் என்றும் நான் எண்பதுகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். பயணியிடமிருந்து ஒன்றுமே சிக்கவில்லை என்றால், 'பீடிக்கு ரெண்டு ரூபா வைச்சிட்டு போய்யா!' என்பார்களாம்.
விமான நிலையத்தில் விமானம் நின்றதும் படி வழியாக தரையில் இறங்கி பைகளையும் சுமந்து கொண்டு தூரத்தில் தெரியும் விமான நிலையத்துக்கு நடந்துதான் செல்ல வேண்டும். 2004 ஆம் ஆண்டில் அப்படித்தான் நானும் அந்த 'வீட்டை' நோக்கி நடந்து சென்றேன். நீ இதற்கு முன் இங்கே வந்திருக்கிறாயா? என்று ஒரு அதிகாரி கேட்டார். இல்லை என்றேன். உடனே அவர் எழுந்து உள்ளே சென்றார். நான் ரூமுக்குள் எட்டிப் பார்த்தேன். நீண்ட மேசையில் செக்ரோல் அளவில் ஒரு பத்து புத்தகங்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதையோ தேடி, இது எனது முதல் திருச்சி வருகை என்பதே சரி என உறுதிப்படுத்திக் கொண்டார். ஏன் வந்தாய், எப்போது திரும்புவாய்? போன்ற கேள்விகளைக் கேட்டு விட்டு கடவுச் சீட்டில் முத்திரை குத்தி அனுப்பி வைத்தார். ஆனால் சென்னையில் இப்படி இலங்கைப் பயணிகள் நடத்தப்படுவதில்லை. ஏன் இரண்டு இடங்களில் இரண்டு விதமான கவனிப்பு என்பதை இன்றளவும் நான் அறியேன்.
சில சமயம் அது போர்ச்சூழல் காலமானதாலும், ஏராளமான இலங்கையர் அகதிகளாக திருச்சி - மதுரை பிரதேசங்களில் வசித்தாலும், இலங்கை அகதி முகாம்களின் பிரசன்னம் காரணமாகவும் இவ்வாறான கெடுபிடிகள் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

'திருச்சி விமான நிலையத்தில் போய் இறங்குவதற்கு நீ பாவம் செய்திருக்க வேண்டும்' என்று சொல்லுமளவுக்கு திருச்சி விமான நிலையம் தரமிறங்கிப் போனதற்கு காரணம் என்ன?

அறுபது, எழுபது, எண்பதுகளில் இவ்விமான நிலையத்தில் போய் இறங்கியவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழ் வர்த்தகர்களும் மலையக வம்சாவளியினரில் வசதியானவர்களும், கடத்தல் நோக்கத்துடன் சென்றவர்களுமாகவே இருந்தனர். சென்னை செல்லாமல் திருச்சி வருகிறார்கள் என்றால் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடனேயே 'பகிரங்கமாக லஞ்சம் கேட்டாலோ அல்லது பொருட்களை எடுத்துக் கொண்டாலோ இந்தப் பயணிகள் புகார் சொல்லப் போவதில்லை, இவர்களும் திருச்சி வருவதும் வேறு திட்டங்களுடன்தான்' என்று சுங்க அதிகாரிகளும் விமான நிலைய ஊழியர்களும் கருதியதாலேயே இவர்கள் கண்டபடி வேட்டையாடப்பட்டிருக்கலாம்.
மன்னாருக்கும் தூத்துக்குடிக்கும் இடையே ராமனுஜம் கப்பல் சேவையாற்றிய காலத்தில் இரு முனைகளிலுமே எல்லாவிதமான தில்லுமுல்லுகளும் அரங்கேறின. அவற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கத் தயார் நிலையில் பயணிகள் கப்பலேறச் சென்றதால் ராமனுஜம் பயணிகளும் ஒரு வகையான கடத்தல் - பிஸினஸ் செய்வதை நோக்கமாகக் கொண்டே கப்பலேறினார்கள்.

இந்த நினைவுகளுடன் திருச்சியில் இறங்கினால் எமது விமான வாயிலுடன் சுரங்க நடைபாதை பொருத்தப்படுவதைப் பார்த்த பின்னரேயே, திருச்சி விமான நிலையம் முற்றிலுமாக அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அங்கே ஒரு விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன சகல நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் பின்பற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. பழைய கட்டடம் சுத்தமாக அகற்றப்பட்டு நவீன பாணியில் விமான நிலையம் தீர்வையற்ற விற்பனை நிலையங்களுடன் காட்சியளிக்கிறது. நீங்கள் குடிவரவு அலுவல்களை முடிப்பதற்கான கியூ வரிசையில் நிற்கும் போது எதிரே வெளிச்சம் போட்டு உங்களை வரவேற்கிறது ஒரு தீர்வையற்ற மதுக்கடை! நரி முகத்தில் விழித்த மாதிரியான ஒரு கிறக்கமான ஏற்பாடு!
வருமானம் குறைவானாலும் பரவாயில்லை, மதுவிலக்கை அகற்ற மாட்டேன் என்று சொன்ன கடைசி முதல்வர் சி. என். அண்ணாதுரை. அதை படிப்படியாக நீக்கியவர் கலைஞர். "அண்ணா நாமம் வாழ்க என்று கோஷமிடுபவனின் வாயில் அடிக்கிறது நாட்டு சாராய வாசனை!" என்று மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கழகத்தில் கலகம் உருவாக்கி பிரிந்து சென்ற எம். ஜி. ஆரும் மதுவிலக்கை அகற்றி, தமிழர்களை குடிமகன்களாக்கினார். பிற்காலத்தில் சாராய உடையார் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பராக விளங்கியதும் சாராய விற்பனையின் ஒரு பகுதி அரசியல்வாதிகளைச் சென்றடைவதும் பிற்காலத்தில் சாதாரணமாகிப் போன விடயங்கள். இன்றைக்கு சாராய வருமானத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தமிழர்கள் அதிகம் குடித்தால் நிறைய வருமானம் அதனூடாக நிறைய இலவசத் திட்டங்கள் என்பது கழக பொருளாதார நிபுணர்களின் கோட்பாடாக இருக்கிறது. அதாவது குடிகார கணவனிடம் காசைப் பறித்து இலவச ஃபேனாக, மிக்சியாக, கிரைண்டராக அதை மனைவியிடம் திருப்பித் தருகிறார்கள்.

வா, வாவென வரவேற்கும் திருச்சி தீர்வையற்ற மதுக்கடையைத் தாண்டி வெளியே சென்றால் அங்கே எம்மை வரவேற்கக் காத்திருந்தார் அஸ்லம் ஹாஜியார். தாடி, மீசை, பருத்த உடலுடன் எம்மை வரவேற்ற கே. முகம்மது அஸ்லம், எங்களை தனது வாகனத்துக்கு அழைத்துச் சென்றார்.

"நீங்கள் எங்கள் கண்ணியத்துக்குரிய வெளிநாட்டு நண்பர்கள். இப்போது முதல் மாநாடு நிறைவு அடையும்வரை கண்ணியத்துடன் உங்களை பார்த்துக்கொள்வது எங்கள் கடமை. இங்கிருந்து கும்பகோணத்துக்கு இரண்டரை மணித்தியால ஓட்டம். வாருங்கள் முதலில் ஹோட்டலில் காலை சாப்பாடு உண்ணலாம்" என்று சொல்லி இரண்டுங்கெட்டான் வேளையான பத்து மணியளவில் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றார்.

"இங்குள்ள முஸ்லிம்கள் காலைச் சாப்பாட்டில் மாமிசம் உண்பதில்லை. இட்லி, தோசை, ஊத்தப்பம், சாம்பார், பொங்கல், சட்னி என்று வெஜிடேரியனாக இருப்பதே வழக்கம். நீங்கள் எப்படி?" என்றார். இலங்கையின் எல்லா மாமிச பட்சணியான குடிமகனும் காலையிலும் இறைச்சி, மீன்குழம்பு, வெட்டுபவர்களாகத் திகழ்வது சகஜம். ஏற்கனவே விமானத்தில் தந்த காலை உணவையும் ஒரு வெட்டு வெட்டியிருந்தோம். எனினும் வஞ்சகமின்றி தோசை, இட்லி வகையறாக்களை கோப்பியுடன் உள்ளே தள்ளினோம்.

அங்கிருந்து கும்பகோணம் புறப்பட்டபோது மழை தூறிக் கொண்டிருந்தது. வழியில் தஞ்சை எதிர்ப்பட்டது. என்னைத் தவிர ஏனையோர் தஞ்சை பெரிய கோவிலை தரிசித்ததில்லை. ராஜராஜ சோழனையும் தஞ்சை பெரிய கோவிலையும் தெரியாத தமிழ்பேசும் சமூகம் இருக்க முடியுமா?" திடீரென பெரிய கோவில் கோபுர உச்சியின் வட்ட வடிவ கல் எங்கள் கண்முன் தோன்றவே அதைப் பார்ப்பது என முடிவு செய்தோம்.

தமிழும் ஆங்கிலமும் சரளமாகப் பேசக்கூடிய அஸ்லம் ஹாஜி, மிகச் சரளமாக உருதுவிலும் வெளுத்துக் கட்டுகிறார். நீண்ட காலம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி இப்போது வசதிகளுடன் ஓய்வாக இருப்பவர். கும்பகோண மாநாட்டு மலர் வெளியீட்டுக் குழுவில் அங்கத்தவர். இலங்கையில் இருந்து வரும் பேராளர்களை அழைத்துச் சென்று அந்தந்த இடங்களில் தங்க வைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருந்தார். இவ்வளவு காலமாக இந்த வழியில் சென்று வந்திருக்கின்ற போதிலும் தஞ்சை பெரிய கோவிலைப் பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றவில்லையே!" என்று சொல்லி பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

பெரிய கோவிலை சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் தஞ்சை மஹாராஜா ஜவுளி நிறுவனத்தின் தலைவர் எம். எஸ். ஆசிப் அலி எமக்கு ஒரு பகல் போசன விருந்தளித்தார்.

பகல் உணவின் பின்னர் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பார்க்கச் சென்றோம். தஞ்சை கோட்டையின் ஒரு பகுதியிலேயே இது அமைந்திருக்கிறது. நூலகம், பதிவு செய்துவிட்டு வரும் ஆய்வாளர்களுக்கு மட்டுமே திறக்கும். சரபோஜி மன்னரின் கால பழம் பொருட்களை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து கும்பகோணம் கிளம்பினோம்.

எங்களை விட, பெரியவர் அஸ்லம் களைத்திருந்தார். ஏனெனில் ஏற்பாட்டுக் குழுவினர் அனைவருமே கடந்த இரண்டு மூன்று நாட்களாக இரவு பகலாக ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர்.

(தொடரும்)

No comments:

Post a Comment