Friday, August 29, 2014

இருள் உலகக் கதைகள்-03

மாந்திரிகர்களுக்கு சவால் விட்ட கொலை வெறிப் பேய்!

திலக்கராஜா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

'வீட்டு முற்றத்தில் பசுவை கட்டி வைத்து வாசலில் சிறிய செம்பில் தண்ணீரை வைத்து விடுங்கள். கதவுகளை மூடி படுத்து விடுங்கள் நடுநிசியில் பசு கதறிக் கத்தும். வெளியே வரவேண்டாம். காலையில் பசு செம்புத் தண்ணீரைக் குடித்திருந்தால் அங்கே பேயின் நடமாட்டம் உண்டு என்பது நிச்சயம்....'

இருளும் வெளிச்சமுமாக விரவிக் கிடந்த மாலை நேரம் அது. வெளிச்சத்தை விழுங்க இருள் முயற்சி செய்யும் இரண்டுங்கெட்டான் ஆறரை மணியிருக்கும். இந்த மாதிரி இரண்டுங்கெட்டான் நேரத்தில் எதையுமே செய்யக் கூடாது என்பார்கள். மாலை மங்கி வருவதால் நம் புலன்களில் தடுமாற்றம் வரலாம் என்பதால் அப்படி சொன்னார்களோ அல்லது இருள் சக்திகளின் ஆட்சி ஆரம்பமாவதால் அப்படி கருதினார்களோ தெரியவில்லை.

அது புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த கோவின்ன என்ற இறப்பர் தோட்டம். இறப்பர் தோட்டத்தில் இருள் வேகமாகவே கௌவி விடும். சுமதிபால ஒரு புல்டோசர் சாரதி. தன் புல்டோசரை இயக்கி மண்ணை அள்ளிக் கொண்டிருந்தார். அழுகல் வாசனை கொண்ட மண்ணும் டீசல் நெடியும் கலந்து சுமதி பாலவின் நாசிக்குள் இறங்கி, அவன் செருமிக் கொண்டான். உடல் வியர்வையில் குளித்திருக்க, வேலையை முடித்து விட்டு குளித்து பவுடர் பூசிக் கொண்டு நாட்டுப் பக்கமாக போய் சாராயத் தண்ணியை தொண்டையில் இறக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணிக்கொண்டே கியரை மாற்றிப் போட்டான். அது சில அடிகள் முன்னே சென்று மண்ணைப் பெயர்த்து எடுத்து இன்னும் பதினைந்து நிமிடங்களில் முடித்து விடலாம்.

திலக்கராஜா பூசாரி

அப்போது டோஸர் சக்கரங்களில் ஏதோ ஒரு பொருள் சிக்கி படீர் என்று ஏதோவொன்று வெடித்த மாதிரிப் பட்டது சுமதிபாலவுக்கு. போத்தல் ஒன்று உடைந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அடுத்த வினாடியே அது நிகழ்ந்தது. தலைவிரி கோலத்துடன் வேகமாக வந்த ஒரு முகம் புல்டோசரின் சைட் கண்ணாடியில் படார் என்று மோதி மறைந்தது. சுமதிபாலவுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. ஏனெனில் நிச்சயமாக அது ஒரு மனித தோற்றம் தான். தான் கண்டது கனவல்ல என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. புல்டோசரை அப்படியே நிறுத்தி விட்டு இருள் அந்த பிரதேசத்தை முற்றாக விழுங்குவதற்கு முன்னதாகவே வீடு நோக்கி வேகமாக நடந்தான் சுமதிபால.

ஹொரனை கோவின்னை தோட்டத்தில் அந்த காட்டுப் பகுதியில் புல்டோசர் மட்டும் அனாதரவாக கிடந்தது. சிறிது நேரத்திற்குள் இருள் அந்த பிரதேசத்தை முழுவதுமாக விழுங்கி விட்டிருந்தது. கோவின்னை தோட்ட லயங்களில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளும் அணைந்து விட அந்த பிரதேசத்தை நிசப்தம் குடி கொண்டது. சில மணிநேரம் கரைந்து முடிய, மேட்டு லயத்து சரசு வீட்டுத் திண்ணையில் படுத்துக் கிடந்த தெருநாய் ஒன்று உடம்பை படபடவென ஆட்டி விட்டு ஏதா ஒன்றை வெறித்துப் பார்த்து பலமாக ஊளையிடத் தொடங்கியது. அந்த நாயின் ஊளையை செவிமடுத்த மற்ற நாய்களும் ஒன்றாக சேர்ந்து ஊளையிட அந்த பிரதேசம் நாய்களின் ஊளைச் சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. பொறுக்க முடியாத சிலர், கதவைத் திறந்து வெளியே வந்து நாய்களை அடித்துத் துரத்தினர். அப்போது அந்த லயத்தின் கோடியில் ஏதோ ஒன்று கோப்பிச் செடிகளை முறித்துக் கொண்டு வெளியேறியது. காட்டுப் பன்றியாக இருக்கும் என்று நினைத்த அந்த லயத்து வாசிகள் கதவை மூடி நிம்மதியாக உறங்கிப் போனார்கள்.

அடுத்த நாள் காலையில் எழுந்த சரசு காச்மூச் எனக் கத்திக் கொண்டிருந்தாள். அவள் வீட்டு சோற்றுப் பானையில் யாரோ மண்ணைப் போட்டிருந்தது தான் அவள் கோபத்துக்குக் காரணம்.

ஆனால் இந்த அசாதாரண நிகழ்வுகள் அன்றுடன் நிற்கவில்லை. பின்னரும் தொடர்ந்தது. அதன் பிறகும் ஒரு நாள் கருக்கல் நேரத்தில் பீலிக்கரைக்கு சின்னா தமது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு குளிக்கச் சென்றிருக்கிறான்... பீலியில் இருந்து விசையுடன் கொட்டும் நீரில் குளித்துக் கொண்டிருக்கும் தமது நண்பர்களை தனது செல்போன் கமராவில் விளையாட்டாக போட்டோ எடுத்தான் சின்னா. பின்னர் குளியல் முடிய, அனைவரும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இது இப்படியிருக்க, 27 காம்பிராக்களைக் கொண்ட அந்த லயன்களைச் சுற்றி இரவில் யாரோ நடந்து செல்வது போன்ற ஓசை அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. திறந்து பார்த்தால் யாருமே இல்லை. இதேபோல சோற்றுப் பானைகளுக்குள் மண் கிடப்பதும் அவ்வப்போது நிகழும் கதையாகத் தொடங்கியது. வீட்டுக்குள்ளும் அடையாளம் தெரியாத கைகள் மண்ணை வீசின. யாரோ செய்யும் விஷமம்தான் என்று அந்த லயத்து வாசிகள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தபோதுதான், சின்னாவுக்கு தான் பீலிக்கரையில் எடுத்த புகைப்படங்கள் ஞாபகத்துக்கு வந்தது.
அன்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த சின்னா, தனது செல்போனை எடுத்து தாம் எடுத்த படங்களில் தேவையற்றது எனக் கருதிய படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் தொடங்கினான். ஒன்றை அழித்த பின்னர் அடுத்த படத்தை செலக்ட் செய்த போது அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. தூக்கிவாரிப் போட்டது. பீலிக்கரையில் குளிக்கும் நண்பர்களுக்கு பின்னால் ஒரு பெண் நீண்ட தலைமுடியுடன் விகாரத் தோற்றத்துடன் நின்றிருக்கும் அந்தப் படத்தை பார்த்ததும் சின்னா பதறிப் போனான். வீட்டில் உள்ளவர்களுக்கும் தமது நண்பர்களுக்கும் அந்த விசித்திரமான படத்தைக் காண்பிக்க அவர்களுக்கும் படு ஆச்சரியம்! இவ்வாறான படத்தை போனில் வைத்திருப்பது ஆபத்தானது என்று வீட்டார் சொன்னதும் அந்தப் போட்டோவை சின்னா அழித்து விட்டான். ஏன் வீண் வம்பு?

ஆனால் அந்த செல்போன் பேய் படம் பற்றிய தகவல் காட்டுத் தீயாக அந்த தோட்டம் முழுவதும் பரவத் தொடங்கியது. அந்த லயங்களில் சமீப காலமாக நடைபெற்று வரும் அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து கலவரம் அடைந்திருந்த லயத்து வாசிகள் சிலர் அந்தத் தீய சக்தியை விரட்டியடிக்கத் தீர்மானித்தனர்.

அவர்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தவர் திலக்கராஜா பூசாரியே! அவரை அணுகி விஷயத்தைச் சொன்னார்கள்.

முழுக் கதையையும் கேட்ட திலக்கராஜா பூசாரிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் அவரால் அதை முழுமையாக நம்ப முடியவில்லை. அதனால் அங்கே துஷ்ட ஆவி அல்லது பேய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் ஒரு உபாயத்தை மேற்கொண்டார்.

"இரவானதும் வீட்டு முற்றத்தில் ஒரு பசுமாட்டை கட்டி வையுங்கள். வீட்டு வாசலில் ஒரு சிறிய செம்பு நிறைய தண்ணீரையும் வைத்து விட்டு படுக்கைக்குச் சென்று விடுங்கள். நள்ளிரவில் தீய சக்திகளை பசு பார்த்து விட்டால் அது மிரண்டு கதற ஆரம்பிக்கும்... தொண்டை வரண்டு போக தண்ணீர் தேடி அந்த சிறிய செம்பில் உள்ள தண்ணீரைக் குடித்து விடும். அப்படி பசு இரவில் விடாமல் கதறி, செம்புத் தண்ணீரையும் குடிக்குமானால் அங்கே துஷ்ட சக்தி ஒன்றின் பிரசன்னம் இருக்கிறது என்பது நிச்சயம்" என்று திலக்ராஜ் கூறியதை வந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.

திலக்கின் யோசனையை பரீட்சித்துப் பார்க்க அது அப்படியே பலித்தது. இரவில் கதறிய பசு, செம்புத் தண்ணீரைக் காலி செய்திருந்தது. துஷ்ட சக்தியின் பிரசன்னம் ஊர்ஜிதமானதும், கோவிண்ணவுக்கு சென்று வருவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினார் திலக்ராஜ்.

கோவின்னையில் இருப்பது சாதாரண பேய் அல்ல என்பதும் அது ரொம்பவும் சக்தி வாய்ந்த மூர்க்கமான பேய் என்பதும் மாந்திரிகருக்கு தெரிந்து போயிற்று. அப்பேயை விரட்டும்போது அது தன்னை பலியெடுக்கவும் தயங்காது என்பதால் தனியே போவது உத்தமமாகாது என்று முடிவு செய்தார் மாந்திரிகர். எனவே இருவரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்தார். அதன்படி தன் நண்பர் வீரசிங்கம் பூசாரியையும் ராஜமோகன் பூசாரியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். குறித்த தினத்தன்று மூவரும் தமது உதவியாளர்களுடன் கோவின்ன தோட்டத்தை சென்றடைந்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்த லயத்திலிருந்த இருபத்தேழு வீட்டுக்காரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

பேயோட்டும் வேலை ஆரம்பமானது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிர நிலையை அடைந்தது. ஆனால் அவர்கள் தேடி வந்த பேய் கொஞ்சமும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களின் வசியத்துக்கு அது கட்டுப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. மொத்தத்தில் பேய் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் வளர்த்த தீ கொழுந்து விட்டு எரிய அந்த அட்சர சதுரத்துக்குள் அந்த பேய் பிடிபடாமல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது. அப்போது திலக்கராஜாவின் உடம்பிற்குள் வந்த உதிரக்காளி பேசத் தொடங்கியது.

அந்த லயத்தின் கடைசி வீட்டில் இருந்த ஒரு நபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டாராம். ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஒரு முஸ்லிம் மாந்திரிகரின் உதவியுடன் ஒரு பேயை ஏவல் செய்து அதை ஒரு போத்தலில் அடைத்து எடுத்து வந்திருக்கிறார். சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு முன்னால் போத்தலை புதைத்து விட வேண்டும். ஆனால் அதை எடுத்து வந்த நபர் மாந்திரிகர் கொடுத்த அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் காரியத்தை செய்ய முடியாமல் போய்விட்டது. நேரம் முடிந்து விட்டதால் அதைப் புதைக்க முடியாமல் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பற்றைக்குள் போத்தலை மறைத்து வைத்துவிட்டு சென்று விட்டார்.

அதுதான் சில வாரங்களுக்கு முன்னால் புல்டோஸர் சக்கரங்களில் சிக்கி படீரென வெடித்த போத்தல்! அதில் இருந்து வெளியேறிய பேய், அந்தப் பகுதியில் வெறியுடன் உலவிக் கொண்டிருக்கிறது என்ற விபரத்தை உத்ரகாளியின் மூலம் மாந்திரிகள் அறிந்து கொண்டார்கள். தோட்டத்து வாசிகளும் இதைக் கேட்டு அச்சத்தால் உறைந்து போனார்கள்.

இதன் பின்னர் திலக்ராஜா பூசாரி சரசரவென காரியத்தில் இறங்கினார். இனி தாமதிக்க நேரமில்லை. பேய் சக்தியைத் திரட்டி தன்னைத் தாக்கு முன் அவர் பேயை மடக்கியாக வேண்டும்!

அப்போது வீரசிங்கம் பூசாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முகம் வெளிறிப் போனார் வீரசிங்கம் பூசாரி. அவரது மகன் அவரசமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செல்போனில் தகவல் வந்திருந்தது.

முதலில் இது சாதாரணமாகப் பட்டாலும் பின்னர் இது அப்பேயின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் தட்டியது திலக்ராஜூக்கு. ஏனெனில் சகாக்களோடு மூன்று ஆட்டோக்களில்; அவர் புறப்பட்டு வந்த போது ஆட்டோக்கள் மூன்றும் அடுத்தடுத்து பழுதடைந்தன. அவற்றை திருத்திக் கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது. இந்தத் தடங்களுக்கும் தற்போது வீரசிங்கத்தின் மகன் சுகவீனம் அடைந்ததற்கும் இந்தப் பேயின் சூழ்ச்சி காரணமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் நியாயமாகவே பட்டது. எனினும் பயப்படாமல் வீரசிங்கத்தை வழியனுப்பி விட்டு வேலையில் இறங்கினார்.

நானா அல்லது இந்தப் பேயா, இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுடன் அவர் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வரச் செய்தார். அதை தமது உதவியாளரிடம் பிடித்துக் கொள்ளும்படி சொல்லி மந்திரங்களை வேகவேகமாக உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். உச்சாடனம் உக்கிரம் பெற்றதும் பீலிக்கரை பாறை மீது முக்காடு போட்ட ஒரு கரிய உருவம் அமர்ந்திருப்பது காட்சியாகக் கண்ணாடியில் தெரிந்தது. அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த புல்டோசர் சாரதி சுமதிபால,

இந்த முகம் தான் என் புல்டோசர் கண்ணாடியில் மோதியது என்று கத்தினார். இதுதான் அந்தப் பேய் என்பதை அடையாளம் கண்டு கொண்ட திலக்ராஜ், பேயைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்தார். ஆனல் பிடி கொடுக்காமல் பேயும் நழுவி மறைந்து கொண்டிருந்தது. இது நடந்து கொண்டிருக்கையில் தன் மகனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளச் சென்றிருந்த வீரசிங்கம் பூசாரி திரும்பி வந்திருந்தார்.


மூவருமாக மந்திர வேலி அமைத்து ஒரு சதுரங்கத்துக்குள் அதை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தனர். சக்தி வாய்ந்த பேயாக இருந்ததால் மந்திர வேலியை உடைத்து வெளியேற அது ஓயாமல் முயற்சி செய்தது. பிறர் கண்களுக்கு தெரியாவிட்டாலும் அம் மூவரும் அந்த ஆபத்தான பேயுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு கணம் தோற்று நின்றாலே போதும். யாரையாவது அது காவு கொள்ளலாம்!

அப்போது திலக்ராஜூக்கு ஒரு யோசனை தோன்றியது. பேயை மீண்டும் கண்ணாடிக்குள் கொண்டு வந்து மந்திரத்தால் கட்டிக் கண்ணாடியை வெட்டினால் பேய் வசப்பட்டு விடும் என்று தோன்றியது. கண்ணாடி கொண்டுவரப்பட்டது. கண்ணாடியில் பேய் தன்னைக் காட்டியபோது விரைந்து செயல்பட்ட திலக்ராஜ் பூசாரி, கத்தியால் கண்ணாடியை ஒரே வெட்டாக வெட்டினார். கண்ணாடி துண்டு துண்டாக நொருங்கியது. பேய் தள்ளாடிய அந்த நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய திலக்ராஜா தாம் செய்து வைத்திருந்த மாவு உருவ பொம்மையில் பேயை இறக்கிக் கட்டினார். முரண்டு பிடிக்கும் அந்தப் பேயை மேலும் மந்திரங்களால் பிணைத்து அதை ஆற்றில் கரைத்து விட்டு வெற்றியோடு மூவரும் திரும்பி வந்தார்கள்.

கதை இங்கே முடியவில்லை.

திலக்ராஜா பூசாரி விடியற்காலையில் களைப்புடன் வீடு திரும்பியபோது அவருக்கு அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே தான் பாசமாக வளர்த்து வந்த ஐந்து ஆடுகள் பரிதாபமாக செத்துக் கிடந்ததைக் கண்டார். இது அந்தப் பயங்கர பேயின் பழிவாங்கல்தான் என்பதை நொடிப் பொழுதில் அவர் உணர்ந்து கொண்டார். தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தக் கொடூர பேய் தான் பாசமாக வளர்த்த ஆடுகளின் குருதியை குடித்து விட்டுச் சென்றிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன நிம்மதியில் ஓய்வெடுக்கச் சென்றார் மாந்திரிகர் திலக்ராஜ்.

இரண்டு வாரங்களின் பின்னர் கோவின்னவில் இருந்து தகவல் வந்தது, இங்கே இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று!

No comments:

Post a Comment