Thursday, August 14, 2014

இருள் உலகக் கதைகள்-02

சுரேஷை பிடித்தாட்டிய நான்கு கெட்ட ஆவிகள்

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க்கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

ரமேசுக்கு இருபது வயதிருக்கும். ரொம்பவும் தைரியசாலி. அடிதடி, வெட்டுக்குத்து என்று தும்பர தோட்டத்தில் எங்கே என்ன நடந்தாலும் அங்கே ஹீரோவாக இருந்து அழிச்சாட்டியம் பண்ணுவது அவனது ஸ்டைல். ரமேசுக்கு நிழலாக இருப்பது நண்பன் சுரேஷ். ஊராரின் வசைபாடலுக்கு இலக்கான அந்த இருவரையும் அதி விரைவிலேயே விதி பிரித்து விட்டது. இறப்பர் மரத்தில் ஏறி விறகு வெட்டும்போது தவறி விழுந்து ரமேஷ் பலியானான். சுரேஷ் மட்டும் ஊரைச் சுற்றி வந்தான். ஒருநாள் நள்ளிரவு ஊர்க்கோடியில் உள்ள அரசமரத்தடியில் தமது நண்பர்களுடன் பீடி புகைத்துக் கொண்டிருந்த சுரேஷ் "அய்யோ! அய்யோ!" என்று ஊரே அதிர்ந்து போகும்படி அலறினான். தரையில் விழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறினான். அவனை ஏதாவது காத்து கறுப்புத்தான் அறைந்து விட்டதோ என்று நம்பிய அவனது நண்பர்கள் அவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஊர் பூசாரியிடம் ஓடினார்கள்.


விசயத்தைச் சொல்லி அவர் தந்த மந்திரித்த நீரை சுரேசுக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அதன் பிறகும் சுரேஷின் கதறல் நிற்கவில்லை. சுரேசுக்கு வேண்டாதவர்கள் யாரோ அவனுக்கு செய்வினை செய்து விட்டார்கள் என்று அவன் பெற்றோர் நினைத்தார்கள். உணவில் சூனிய மருந்தைக் கொடுத்து விட்டார்கள் என உறுதியாக நம்பினார்கள். ஏனெனில் ரமேசும் சுரேசும் ஒரே தட்டில் சாப்பிடுவது வழமை. அதனால் அந்த மருந்து இவனையும் தாக்கி விட்டது என்று ஊராரும் கதை பேச ஆரம்பித்தார்கள். நண்பன் மரத்தில் இருந்து விழுந்து செத்ததைப் போன்ற ஒரு தீவினை இவனையும் கவ்வும் என்றும் அதற்குள் மாற்று வைத்தியம் செய்தாக வேண்டும் என்றும் தீர்மானித்த பெற்றோர் ஒரு பூசாரியை அணுகினார்கள். பூசாரி பணத்தை வாங்கிக் கொண்டு மந்திர தந்திரங்களை செய்தபோதும் சுரேஷின் வயிற்று வலி தீருவதாக இல்லை. பல ஆயிரங்களை அள்ளி பூசாரிக்கு செலவழித்த அவன் பெற்றோர் கடைசியாக அழைத்தது வீரசிங்கம் பூசாரியை.

தமது சகாக்களோடு வீரசிங்கம் பூசாரி தும்பர தோட்டத்திற்கு சென்றார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பூசாரியின் பூஜை பட்டியலின்படி அனைத்து மாந்திரிக பொருட்களும் கொண்டுவரப்பட்டன. சிகப்பு நிறத்தில் பெரிய அட்சர சதுரம் வரையப்பட்டு அதில் வீரசிங்கம் பூசாரி அமர்ந்தார். அட்சர சதுரம் என்பது ஒரு காப்பு. ஒரு காலத்தில் திடகாத்திரமாக இருந்த சுரேஷ் எலும்பும் தோலுமாக பேசக்கூடத் திராணியற்ற நிலையில் பலவீனமாக இருந்தான். கண்கள் குழி விழுந்து மங்கிப் போயிருந்தன. பூசாரியைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து எழுந்து ஓடினான். உடனே அங்கிருந்தவர்கள் அவனைப் பிடித்து வந்து அமர்த்தினார்கள். பூசாரி அவனை கோபமாகப் பார்த்து விட்டு மந்திரங்களை உச்சரித்து பாடத்தொடங்கினார். அவரின் பாடலுக்கு தகுந்தாற்போல உடுக்கும், பறையும் சுதி சேர்ந்தது. சிறிது நேரத்திலேயே சுரேஷின் உடல் சிலிர்த்தது. அவன் அமர்ந்தபடியே ஆடத்தொடங்கினான். சில நிமிடங்களில் அவனுக்குள் இருந்த ஒரு ஆவி கிளம்பி பேசத் தொடங்கியது. அது இறந்துபோன ரமேஷின் ஆவி. "எனக்கு சாப்பாட்டுல மருந்து போட்டு கொடுத்திட்டாணுங்கடா! அந்த சாப்பாட்டை என் நண்பன் சுரேஷ் சாப்பிட்டுட்டான்.
ஆனால் இந்த நாசமாப்போன வயிற்று வலி என்னத்தான் முதல்ல வாட்டியது. அந்த வலி பொறுக்க முடியாமதான் இறப்பர் மரத்துல ஏறி குதிச்சு நான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்!" என்று அந்த ஆவி சொன்ன போதுதான் சுரேசுக்குள் இருப்பது ரமேஷின் ஆவி என்பதும் அவன் தற்கொலைதான் செய்துகொண்டான் என்பதும் கூடியிருந்தவர்களுக்கு புரிந்தது. ஆனாலும் சில நிமிடங்களில் சுரேஷ் பலவிதமான குரல்களில் 'அந்நியன்' மாதிரி பேசத் தொடங்கியதும் பூசாரி அதிர்ந்து போனார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் இருப்பதை பூசாரி தெரிந்து கொண்டார். ஆனால் எத்தனை என்பதை வீரசிங்கத்தால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு தெரிந்த ரமேஷின் ஆவியை வளைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதை மேலும் பேச வைத்தார். "நீ ஏன் நண்பனான சுரேஷ் உடலுக்குள் நுழைந்தாய்?" என்று தன்னுடைய பாணியில் கேட்டார். "நானாக வரல.... அவன்தான் என்னைக் கூப்பிட்டான்" என்று ரமேஷ் ஆவி சொல்லி கெக்கல் போட்டுச் சிரித்தது. பூசாரிக்கு அப்போது மேலும் சில விசயங்கள் தெரிய வந்தன.

"அன்று ஒரு வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியிருக்கும். தும்பரை தெருக்கோடியில் உள்ள சுடுகாட்டுப் பக்கத்தில் ஒரு நாய் நீண்ட நேரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அங்கே பரபரக்க "அய்யோ ரமேஷ்..." என்று கத்திக்கொண்டு ஓடி வந்த சுரேஷ் "என்னையும் உன்னோட கூட்டிட்டுப் போடா...." என்று கதறியிருக்கிறான். அதை இறப்பர் காட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரமேஷின் ஆவி மனம் இளகி சுரேஷின் உடலுக்குள் புகுந்திருக்கிறது. அந்த நேரத்தில்தான் இன்னொரு விசயமும் நடந்திருக்கிறது. சுரேஷின் உடம்பிற்குள் ரமேஷின் ஆவி நுழைவதை பார்த்த அவனது நண்பர்களான மேலும் இரண்டு ஆவிகள் அவனுக்கு உதவியாக சுரேஷின் உடம்பிற்குள் நுழைந்திருக்கின்றன. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஐந்து தலைமுறைகளுக்கு முன்பாக மரணித்த சுரேஷின் முப்பாட்டன் சொக்கலிங்கத்தின் ஆவிதான் அது!

"என் பேரன என்னடா பண்ணப் போறீங்கன்ணு"  கத்தியபடியே சொக்கலிங்க ஆவியும் காவல் ஆவியாக அவனுள் நுழைந்திருக்கிறது. ரமேஷின் ஆவியிடம் இருந்து விவரங்களை கரந்து எடுத்த வீரசிங்கம் பூசாரி முடிவாக ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டார். சுரேஷின் உடலில் மொத்தம் நாலு ஆவிகள் வசிக்கின்றன என்பது தெளிவானது.

ஆனாலும் அவைகள் ஆபத்தானவை அல்ல. இருந்தாலும் ஒருவரின் உடம்பிற்குள் நான்கு ஆவிகள் இருப்பது சுரேஷின் பலத்தை குறைத்துவிடும். அதனால் அவற்றை வெளியேற்றியே தீர வேண்டும் எனத் தீர்மானித்தார்.

அப்போது வெளியே வந்தது சொக்கலிங்கத்தின் ஆவி. என் பேரன் வயிற்றில மருந்து இருக்கு. அந்த மருந்தை உங்களால எடுக்க முடியும். பூசாரி என்று வீரசிங்கத்திற்கு உதவி செய்யும் தொனியில் பேசியது.

சொக்கலிங்கம் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பூசாரியாக இருந்தவராம். கத்தி மேல் ஏறி நின்று அருள்வாக்கு கொடுப்பாராம். அந்த கத்தியை அவர் மறுபடியும் கேட்கவே, குழம்பிப்போன வீரசிங்கம், பிறகு சொக்கலிங்கம் குறிப்பிட்ட இடத்திற்குப் போய் அந்தக் கத்தியை எடுத்து வர அங்கே கூடி இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு போனார்கள். பிறகு அந்த நாலு ஆவிகளையும் வெளியேற்றுவதில் பூசாரிக்கும், ஆவிகளுக்கும் இடையே பேரம் நடந்தது. தங்களை போத்தலில் அடைக்கக்கூடாது என்று ஆவிகள் நிபந்தனை விதிக்க ஆடிப்போன வீரசிங்கம், பிறகு அந்த ஆவிகளை பூசணிக்காயில் இறக்கச் சம்மதித்தார்.
ஆவிகள் ஆசைப்பட்டுக் கேட்ட ஆற்று மீனு, ரம்புட்டான், கசிப்பு என்று எல்லாவற்றையும் கொடுத்து ஒவ்வொன்றாக பூசணிக்காயில் இறக்கினார். ஆனாலும சொக்கலிங்கம்தான் பூசாரிக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டினார். பூசணிக்காயில் இறங்கும் அந்த நொடியில் படீர் என்று ஒரு சத்தம் கேட்க அங்கே பறையடித்துக் கொண்டிருந்த நபர் அப்படியே பேயடித்த மாதிரி நிற்க அவரின் பறை இரண்டாக பிளந்திருந்தது. சொக்கலிங்கம்தான் தனக்கு வேலைகாட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட பூசாரி பிறகு ஒரு வழியாக அவரையும் பிடித்து பூசணிக்காயில் இறக்கி சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று வெட்டி வீழ்த்தினார். அதன்பிறகு சுரேஷின் உடம்பிற்குள் சொக்கலிங்கத்தின் ஆசைப்படி மாடனின் அருளை உருவேற்றினார். அதன் பிறகு மூலிகை மருந்துகளை அம்மியில் அரைத்து ஒரு சிறிய உருண்டையாக பிடித்து சுரேஷிற்கு கொடுத்து விழுங்கச் சொன்னார். சுரேஷ் வயிற்றில் உள்ள மருந்தை கரைக்க இந்த மருந்துதான் சரியான வைத்தியம் என்று சொன்ன வீரசிங்கம் தமது பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

No comments:

Post a Comment