Sunday, August 31, 2014

சினிமானந்தா பதில்கள்-16
தமன்னா கத்தி சண்டை போடுகிறாராமே?
எஸ். லோஜினி, அக்கரைப்பற்று

'சுறா'வில் விஜய்யுடன் கடற்கரையில் கத்தி சண்டை போட்டாரே. அந்த சண்டை போலவா? இல்லை கத்தி (வாள்) சண்டையா? எதைச் சொல்கிறீர்கள்? எந்த சண்டை போட்டாலும் உடலை வளைத்து நெளித்து அவர் போடும்
சண்டையை பார்க்க ரசிகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தமன்னா தாராளமாக கத்தி சண்டை போடலாம். அவருடன் எவராவது கத்திச் சண்டை போட்டால்தான் தப்பு


எனக்கு நமீதா என்றால் உயிர். அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ பிடிக்க வேண்டும். நான் என்ன செய்வது?
ஆர். கிருஷ்ணராஜ், கொழும்பு - 14

அதற்குத்தான் மோர்பிங் இருக்கிறதே. நல்லவொரு கம்பியூட்டர் நிபுணரை அணுகுங்கள். அழகாக செய்து தருவார். ஆசை தீர்ந்ததா?

நேரடியாக நமீதாவுடன் படம் பிடிப்பதற்கு கடல் தாண்டி, பூமி தாண்டி இன்னும் எதையெதையோ கடக்க வேண்டும் ரொம்ப டிப்பிக்ள்ட்டு!


திருமணம் முடிந்ததும் அமலா பால் குண்டாகிவிட்டால் எப்படி தொடர்ந்து நடிப்பார்?

கே. ஸ்ருதி, கண்டி

இப்போதுதானே கல்யாணம் முடிந்திருக்கிறது. இனி நடிக்க மாட்டார் என தெரிய வருகிறது. குண்டானால் என்ன ஆகாவிட்டால் என்ன,
யார் கவலைப்படப் போகிறார்கள்?

நதியா, ரம்யா கிருஷ்ணன் பார்த்தீர்களா? அப்போதும் இப்போதும் எப்போதும்... அதேதான் (உடல் அளவைச் சொன்னோம்)

லக்ஷ்மிராய் யாரோ ஒருவருடன் ஊர் சுற்றுவதாக கேள்வி? உண்மைதானா?

எம். எச். எப். சுக்னா
காத்தான்குடி

லக்ஷ்மிராய் (இப்போது ராய்லக்ஷ்மி)க்கு கிரிக்கெட் வீரர்களை ரொம்பப் பிடிக்கும். அவர்களுடன் சுற்றுவதால் பட வாய்ப்புகளை இழக்கிறார்.

 உயரமாக, திறமையாக, செழுமையாக இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் நட்சத்திரங்கள் ஜொலிக்காது.

வடிவேலு பழைய மாதிரி நகைச்சுவை காட்சிகளில் நடிக்க மாட்டாரோ?
எஸ். சைலா, தியத்தலாவை

தயாரிப்பாளர் இருந்தால் நடிப்பார். நடிக்காவிட்டால் அவருக்குத்தானே நட்டம். ஒரு கைப்புள்ள போதும்
மீண்டும் பழைய மவுசு வந்துவிடும்.

தெனாலி.... இம்சை - 2 மாதிரி இருந்தது. ஒத்து ஊதுறதுதான் அவருக்கு நல்ல பொழைப்பு

நடிகைகள் குண்டாக இருந்தால் அழகா? ஒல்லியாக இருந்தால் அழகா?
ஆர். எச். ரியாஸ், குருநாகல்

தமிழர்களாகிய எங்களுக்கு பூசி மெழுகினாற்போல் இருந்தால்தான் பிடிக்கும். இல்லன்னா கோயில் கட்டுவாங்களா?

குட்டி குஷ்புவுக்கும் அதுனாலதான் இத்தனை மவுசு

Saturday, August 30, 2014

face பக்கம்

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 06

இசை  ஹராமா  ஹலாலா?

கவிக்கோ தரும் விளக்கம்

அருள் சத்தியநாதன்


கடந்த இதழ்களில் வெளியான கட்டுரைகள், இசை இஸ்லாத்தில் ஏற்கப்பட்ட ஒன்றே என்பதையும் இந்தியாவில் பாரசீக மன்னர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் இசை மேன்மையுற்றிருந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் இஸ்லாம், ஏற்புடைய இசை, ஏற்கத்தகாத இசை என இசையை இரண்டாகப் பிரித்திருக்கிறது. இசை என்றால் இசை மட்டும்தானே, அதென்ன ஏற்கத்தக்க இசை, ஏற்கத்தகாத இசை என்று பிரிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.

இசையில் மட்டும்தான் என்றில்லை, எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. திரைப்படங்களை எடுத்துக் கொண்டாலும் குடும்பத்தோடு பார்க்கத்தக்கது, சிறுவர் பார்க்கக் கூடாதது, பெரியவர்களுக்கு மட்டும் எனப் பல தரங்கள் உள்ளன. உணவிலும் சாப்பிடத்தக்கது, சாப்பிடத்தகாதது என்றுள்ளது. செய்யக் கூடியவை, கூடாதவை என எதை எடுத்துக் கொண்டாலும் எல்லா செய்கைகளிலும் அது வருவதைப் போலவே இசையிலும் உள்ளது என்றே இஸ்லாம் பகர்ந்திருக்கிறதே தவிர இசை வேண்டவே வேண்டாம் எனக் கூறவில்லை.

கும்பகோண மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்திய கவிக்கோ அப்துல் ரஹ்மான், இசை ஏன் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அருமையான விளக்கங்களைச் சொன்னார்.

'இசைக்கு எதிராக 19 ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இந்த 19 ஹதீஸ்களையே இசை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டி, இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். ஆனால் மறை ஆய்வாளர்கள் இந்த 19 ஹதீஸ்களும் நம்புவதற்கு ஏற்றவை அல்ல. ஹதீஸ் திறனாய்வுக்கலை மதிப்பீடுகளின்படி இவை சரியானவை அல்ல. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்பாகக் காணப்படும் பெயர்களில் சில நம்புவதற்குரியதாக இல்லை' என்று அவர் கூறினார்.

இதற்கு ஆதாரமாக அவர்,

'நிச்சயமாக அல்லாஹ் பாடலையும் அதைப் பாடி விற்பதையும் அதன் பெறுமதியையும் அதனைக் கற்றுக் கொடுப்பதையும் அதனை செவிமடுப்பதையும் தடை செய்திருக்கிறான்' என்ற ஹதீஸை எடுத்துக் கொண்டார்.

இந்த ஹதீஸை அறிவித்ததாக குறிப்பிடப்படும் பெயர் ஸஈத் பின் ரஸீன் என்றிருக்கிறது. இவர் இந்த ஹதீஸைத் தன் சகோதரரிடமிருந்து பெற்று அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இருவரும் யார் என்று தெரியவில்லை.

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்பது விஷயங்களைத் தடை செய்தார்கள். அவற்றில் பாடல் என்பதும் ஒன்று' என்ற ஹதீஸ், அந்த 19 ஹதீஸ்களில் ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடர்பில் இடம் பெற்றிருக்கும் கைஸான் என்பவர் யார் என்று தெரியவில்லை.

நிச்சயமாக அல்லாஹ் என்னை உலகங்களுக்கு அருளாய் அனுப்பியுள்ளான். மேலும் அவன் இசைக் கருவிகளையும் சிலைகளையும் சிலுவைகளையும் அழித்துவிடும்படி என்னை ஏவியுள்ளான். இவற்றை விற்பதும் வாங்குவதும் கற்றுக் கொடுப்பதும் இவற்றை வைத்து வியாபாரம் பண்ணுவதும் ஹலாலாக மாட்டாது. இவற்றின் கிரயமும் ஹராமாகும் என்பது அந்த 19 ஹதீஸ்களில் ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடர்பில் இடம் பெற்றிருக்கும் அல் காஸிம் என்பவர் பலவீனமானவர் என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தாகும்.

இவ்வாறு, இசை ஹராம் என்று சொல்வதாக அமைந்திருக்கும் ஹதீஸ்களில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய கவிக்கோ, இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு ஆதாரமாகத் திகழும் ஹதீஸ்கள் அனைத்தும் உறுதியானவை என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் உறுதியான கருத்தாகும் என்று குறிப்பிட்டதோடு அதற்கான ஆதாரங்களையும் முன் வைக்க ஆரம்பித்தார்.

ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்களுடைய இல்லத்தில் அன்ஸாரிச் சிறுமிகள் இருவர் 'புஆஸ்' என்ற இடத்தில் நடந்த போரின்போது அன்ஸாரிகள் ஒருவரை ஒருவர் போற்றியும், தூற்றியும் பாடிய பாடல்களை கஞ்சிராக் கருவியை வைத்து வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுள் ஒருத்தி, 'எங்களிடையே இறைதூதர் ஒருவர் இருக்கிறார். அவர் நடக்க விருப்பத்தையும் அறிவார்' என்று பாடினாள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இதை நீ விட்டு விட்டு, முன்பு நீ பாடிக்கொண்டிருந்ததை பாடு' என்று கூறினார்கள் (புகாரீ, 5147)

இந்த ஹதீஸ் முக்கியமான இசை பற்றிய விளக்கத்தைத் தருகிறது. சிறுமியர் தம் முன்னோர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடியதை அனுமதித்த இறைத்தூதர் (ஸல்), இறைத்தூதர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்' என்று பாடியதை அனுமதிக்கவில்லை. காரணம், அது உண்மையல்ல, நாளை நடப்பதை இறைவன் ஒருவனே அறிவான். அவன் அறிவித்தாலன்றி இறைத்தூதர்களுக்கும் வருங்காலம் பற்றித் தெரியாது. அதனால்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்கள்.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இறைத்தூதர் இசையைத் தடுக்கவில்லை. அதில் தகாத பொருளை வைத்துப் பாடுவதையே தடுத்தார்கள். இதை நன்றாகப் புரிந்து கொண்டால் இசையைப் பற்றி இஸ்லாத்தின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் நீங்கிவிடும். ஏனெனில் பெருமானே பாடியிருக்கிறார்கள்.

அகழப் போரின்போது தோழர்களோடு சேர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களும் மண் சுமந்து சென்றார்கள். அகழி மண் சுமந்து சென்ற தோழர்கள்,

நாங்கள்
முஹம்மது (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி அளித்துள்ளோம்
உயிரோடு இருக்கும்வரை
எப்போதும்
அறப்போர் புரிவோம்
என்று பாடியபோது அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும்,

இறைவா மறுமையில் நன்மை தவிர
வேறு நன்மை கிடையாது
அன்ஸாரிகளுக்கும்
முஹாஜிர்களுக்கும்
வளம் வழங்குவாயாக

என்று பாடலிலேயே பதிலளித்தார்கள்.

இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் அளித்த கொடைகளில் இனிய குரலும் ஒன்று. அந்தக் குரலால் அவர்கள் இறைவனைத் துதித்துப் பாடுவார்கள். இதைப் பற்றி இறைவன் திருமறையில் எடுத்துரைக்கிறான்.

நாம தாவூத்துக்கு நம்மிடமிருந்து பெரும் அருட் பேற்றினை வழங்கியிருந்தோம். மலைகளே! நீங்களும் அவருடன் சேர்ந்து துதிபாடுங்கள் என்று நாம் ஆணையிட்டோம். (குர்ஆன் 3410)

எனவே இசையை பெரும் பேறு என்று இறைவனே சொல்கிறான். இறைவனே இசையை அனுமதிக்கும்போது ஏன் இஸ்லாம் இசையைத் தடுக்கிறது என்று கூறுகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. இறைவன் தாவூத் (அலை)க்கு வழங்கிய வேதம் ஸபூர். ஸபூர் என்றால் சங்கீதம் என்று பொருள். இதிலிருந்து இந்த வேதம் இசைப் பாடலால் ஆனது என்பதை யூகித்தறியலாம்.

இனிய குரலால் குர் ஆனை ஓதும்போது அதை செவிமடுப்போருக்கு, குர்ஆன் வாக்கியங்கள் இசைமயமான வாக்கியங்களால் ஆனவை என்பது புரியும். இதுபோதாதா, இஸ்லாம் இசையைத் தடுக்கவில்லை என்பதற்கு? இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இறை வழிபாட்டிலிருந்து மனித மனதை திசை திருப்பும், அவனது வாழ்வைக் கெடுக்கும் தீயனவற்றையே இஸ்லாம் ஹராம் என்கிறது. தீய விஷயங்களைப் பாடும்போது மட்டுமே அப்பாடல் ஹராமாகிறது. நல்ல விஷயங்களைப் பாடும்போது அது ஹராமாகாது. புத்தகங்களில் நல்ல நூல்கள், தீய புத்தகங்கள் என்று இரு வகைப்படும். தீய நூல்களை ஹராம் என அழைக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த நூல்களையும் ஹராம் என்று அழைக்கலாமா?

இவ்வாறு கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாத்தில் இசை ஹராமாகாது என்ற தனது வாதத்தை நிறுவும் வகையில் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன்வைத்தார்.

பண்டைய அராபியாவில் இசை பெரும்பாலும் விபசார விடுதிகளிலும் மதுச்சாலைகளிலுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த இசைக் கருவிகளை அராபியர்கள் தெய்வங்களாக நம்பி வழிபடவும் செய்தனர். இதன் காரணமாகவே இசையும் இசைக் கருவிகளும் ஹராம் என்ற கருத்து உருப்பெற்றது. இஸ்லாம் தோன்றி பரவிக் கொண்டிருந்த காலத்தில் இக்கருத்து முஸ்லிம்களிடம் உள்ளுர ஊறியிருந்தது. இசை தொடர்பான முரணான மார்க்கச் சட்டங்களுக்கு இதுவும் ஒரு காரணம் என்று தனது உரையில் கவிக்கோ ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

(தொடரும்)

Friday, August 29, 2014

இருள் உலகக் கதைகள்-03

மாந்திரிகர்களுக்கு சவால் விட்ட கொலை வெறிப் பேய்!

திலக்கராஜா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

'வீட்டு முற்றத்தில் பசுவை கட்டி வைத்து வாசலில் சிறிய செம்பில் தண்ணீரை வைத்து விடுங்கள். கதவுகளை மூடி படுத்து விடுங்கள் நடுநிசியில் பசு கதறிக் கத்தும். வெளியே வரவேண்டாம். காலையில் பசு செம்புத் தண்ணீரைக் குடித்திருந்தால் அங்கே பேயின் நடமாட்டம் உண்டு என்பது நிச்சயம்....'

இருளும் வெளிச்சமுமாக விரவிக் கிடந்த மாலை நேரம் அது. வெளிச்சத்தை விழுங்க இருள் முயற்சி செய்யும் இரண்டுங்கெட்டான் ஆறரை மணியிருக்கும். இந்த மாதிரி இரண்டுங்கெட்டான் நேரத்தில் எதையுமே செய்யக் கூடாது என்பார்கள். மாலை மங்கி வருவதால் நம் புலன்களில் தடுமாற்றம் வரலாம் என்பதால் அப்படி சொன்னார்களோ அல்லது இருள் சக்திகளின் ஆட்சி ஆரம்பமாவதால் அப்படி கருதினார்களோ தெரியவில்லை.

அது புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த கோவின்ன என்ற இறப்பர் தோட்டம். இறப்பர் தோட்டத்தில் இருள் வேகமாகவே கௌவி விடும். சுமதிபால ஒரு புல்டோசர் சாரதி. தன் புல்டோசரை இயக்கி மண்ணை அள்ளிக் கொண்டிருந்தார். அழுகல் வாசனை கொண்ட மண்ணும் டீசல் நெடியும் கலந்து சுமதி பாலவின் நாசிக்குள் இறங்கி, அவன் செருமிக் கொண்டான். உடல் வியர்வையில் குளித்திருக்க, வேலையை முடித்து விட்டு குளித்து பவுடர் பூசிக் கொண்டு நாட்டுப் பக்கமாக போய் சாராயத் தண்ணியை தொண்டையில் இறக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணிக்கொண்டே கியரை மாற்றிப் போட்டான். அது சில அடிகள் முன்னே சென்று மண்ணைப் பெயர்த்து எடுத்து இன்னும் பதினைந்து நிமிடங்களில் முடித்து விடலாம்.

திலக்கராஜா பூசாரி

அப்போது டோஸர் சக்கரங்களில் ஏதோ ஒரு பொருள் சிக்கி படீர் என்று ஏதோவொன்று வெடித்த மாதிரிப் பட்டது சுமதிபாலவுக்கு. போத்தல் ஒன்று உடைந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அடுத்த வினாடியே அது நிகழ்ந்தது. தலைவிரி கோலத்துடன் வேகமாக வந்த ஒரு முகம் புல்டோசரின் சைட் கண்ணாடியில் படார் என்று மோதி மறைந்தது. சுமதிபாலவுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. ஏனெனில் நிச்சயமாக அது ஒரு மனித தோற்றம் தான். தான் கண்டது கனவல்ல என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. புல்டோசரை அப்படியே நிறுத்தி விட்டு இருள் அந்த பிரதேசத்தை முற்றாக விழுங்குவதற்கு முன்னதாகவே வீடு நோக்கி வேகமாக நடந்தான் சுமதிபால.

ஹொரனை கோவின்னை தோட்டத்தில் அந்த காட்டுப் பகுதியில் புல்டோசர் மட்டும் அனாதரவாக கிடந்தது. சிறிது நேரத்திற்குள் இருள் அந்த பிரதேசத்தை முழுவதுமாக விழுங்கி விட்டிருந்தது. கோவின்னை தோட்ட லயங்களில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளும் அணைந்து விட அந்த பிரதேசத்தை நிசப்தம் குடி கொண்டது. சில மணிநேரம் கரைந்து முடிய, மேட்டு லயத்து சரசு வீட்டுத் திண்ணையில் படுத்துக் கிடந்த தெருநாய் ஒன்று உடம்பை படபடவென ஆட்டி விட்டு ஏதா ஒன்றை வெறித்துப் பார்த்து பலமாக ஊளையிடத் தொடங்கியது. அந்த நாயின் ஊளையை செவிமடுத்த மற்ற நாய்களும் ஒன்றாக சேர்ந்து ஊளையிட அந்த பிரதேசம் நாய்களின் ஊளைச் சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. பொறுக்க முடியாத சிலர், கதவைத் திறந்து வெளியே வந்து நாய்களை அடித்துத் துரத்தினர். அப்போது அந்த லயத்தின் கோடியில் ஏதோ ஒன்று கோப்பிச் செடிகளை முறித்துக் கொண்டு வெளியேறியது. காட்டுப் பன்றியாக இருக்கும் என்று நினைத்த அந்த லயத்து வாசிகள் கதவை மூடி நிம்மதியாக உறங்கிப் போனார்கள்.

அடுத்த நாள் காலையில் எழுந்த சரசு காச்மூச் எனக் கத்திக் கொண்டிருந்தாள். அவள் வீட்டு சோற்றுப் பானையில் யாரோ மண்ணைப் போட்டிருந்தது தான் அவள் கோபத்துக்குக் காரணம்.

ஆனால் இந்த அசாதாரண நிகழ்வுகள் அன்றுடன் நிற்கவில்லை. பின்னரும் தொடர்ந்தது. அதன் பிறகும் ஒரு நாள் கருக்கல் நேரத்தில் பீலிக்கரைக்கு சின்னா தமது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு குளிக்கச் சென்றிருக்கிறான்... பீலியில் இருந்து விசையுடன் கொட்டும் நீரில் குளித்துக் கொண்டிருக்கும் தமது நண்பர்களை தனது செல்போன் கமராவில் விளையாட்டாக போட்டோ எடுத்தான் சின்னா. பின்னர் குளியல் முடிய, அனைவரும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இது இப்படியிருக்க, 27 காம்பிராக்களைக் கொண்ட அந்த லயன்களைச் சுற்றி இரவில் யாரோ நடந்து செல்வது போன்ற ஓசை அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. திறந்து பார்த்தால் யாருமே இல்லை. இதேபோல சோற்றுப் பானைகளுக்குள் மண் கிடப்பதும் அவ்வப்போது நிகழும் கதையாகத் தொடங்கியது. வீட்டுக்குள்ளும் அடையாளம் தெரியாத கைகள் மண்ணை வீசின. யாரோ செய்யும் விஷமம்தான் என்று அந்த லயத்து வாசிகள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தபோதுதான், சின்னாவுக்கு தான் பீலிக்கரையில் எடுத்த புகைப்படங்கள் ஞாபகத்துக்கு வந்தது.
அன்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த சின்னா, தனது செல்போனை எடுத்து தாம் எடுத்த படங்களில் தேவையற்றது எனக் கருதிய படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் தொடங்கினான். ஒன்றை அழித்த பின்னர் அடுத்த படத்தை செலக்ட் செய்த போது அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. தூக்கிவாரிப் போட்டது. பீலிக்கரையில் குளிக்கும் நண்பர்களுக்கு பின்னால் ஒரு பெண் நீண்ட தலைமுடியுடன் விகாரத் தோற்றத்துடன் நின்றிருக்கும் அந்தப் படத்தை பார்த்ததும் சின்னா பதறிப் போனான். வீட்டில் உள்ளவர்களுக்கும் தமது நண்பர்களுக்கும் அந்த விசித்திரமான படத்தைக் காண்பிக்க அவர்களுக்கும் படு ஆச்சரியம்! இவ்வாறான படத்தை போனில் வைத்திருப்பது ஆபத்தானது என்று வீட்டார் சொன்னதும் அந்தப் போட்டோவை சின்னா அழித்து விட்டான். ஏன் வீண் வம்பு?

ஆனால் அந்த செல்போன் பேய் படம் பற்றிய தகவல் காட்டுத் தீயாக அந்த தோட்டம் முழுவதும் பரவத் தொடங்கியது. அந்த லயங்களில் சமீப காலமாக நடைபெற்று வரும் அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து கலவரம் அடைந்திருந்த லயத்து வாசிகள் சிலர் அந்தத் தீய சக்தியை விரட்டியடிக்கத் தீர்மானித்தனர்.

அவர்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தவர் திலக்கராஜா பூசாரியே! அவரை அணுகி விஷயத்தைச் சொன்னார்கள்.

முழுக் கதையையும் கேட்ட திலக்கராஜா பூசாரிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் அவரால் அதை முழுமையாக நம்ப முடியவில்லை. அதனால் அங்கே துஷ்ட ஆவி அல்லது பேய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் ஒரு உபாயத்தை மேற்கொண்டார்.

"இரவானதும் வீட்டு முற்றத்தில் ஒரு பசுமாட்டை கட்டி வையுங்கள். வீட்டு வாசலில் ஒரு சிறிய செம்பு நிறைய தண்ணீரையும் வைத்து விட்டு படுக்கைக்குச் சென்று விடுங்கள். நள்ளிரவில் தீய சக்திகளை பசு பார்த்து விட்டால் அது மிரண்டு கதற ஆரம்பிக்கும்... தொண்டை வரண்டு போக தண்ணீர் தேடி அந்த சிறிய செம்பில் உள்ள தண்ணீரைக் குடித்து விடும். அப்படி பசு இரவில் விடாமல் கதறி, செம்புத் தண்ணீரையும் குடிக்குமானால் அங்கே துஷ்ட சக்தி ஒன்றின் பிரசன்னம் இருக்கிறது என்பது நிச்சயம்" என்று திலக்ராஜ் கூறியதை வந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.

திலக்கின் யோசனையை பரீட்சித்துப் பார்க்க அது அப்படியே பலித்தது. இரவில் கதறிய பசு, செம்புத் தண்ணீரைக் காலி செய்திருந்தது. துஷ்ட சக்தியின் பிரசன்னம் ஊர்ஜிதமானதும், கோவிண்ணவுக்கு சென்று வருவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினார் திலக்ராஜ்.

கோவின்னையில் இருப்பது சாதாரண பேய் அல்ல என்பதும் அது ரொம்பவும் சக்தி வாய்ந்த மூர்க்கமான பேய் என்பதும் மாந்திரிகருக்கு தெரிந்து போயிற்று. அப்பேயை விரட்டும்போது அது தன்னை பலியெடுக்கவும் தயங்காது என்பதால் தனியே போவது உத்தமமாகாது என்று முடிவு செய்தார் மாந்திரிகர். எனவே இருவரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்தார். அதன்படி தன் நண்பர் வீரசிங்கம் பூசாரியையும் ராஜமோகன் பூசாரியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். குறித்த தினத்தன்று மூவரும் தமது உதவியாளர்களுடன் கோவின்ன தோட்டத்தை சென்றடைந்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்த லயத்திலிருந்த இருபத்தேழு வீட்டுக்காரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

பேயோட்டும் வேலை ஆரம்பமானது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிர நிலையை அடைந்தது. ஆனால் அவர்கள் தேடி வந்த பேய் கொஞ்சமும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களின் வசியத்துக்கு அது கட்டுப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. மொத்தத்தில் பேய் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் வளர்த்த தீ கொழுந்து விட்டு எரிய அந்த அட்சர சதுரத்துக்குள் அந்த பேய் பிடிபடாமல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது. அப்போது திலக்கராஜாவின் உடம்பிற்குள் வந்த உதிரக்காளி பேசத் தொடங்கியது.

அந்த லயத்தின் கடைசி வீட்டில் இருந்த ஒரு நபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டாராம். ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஒரு முஸ்லிம் மாந்திரிகரின் உதவியுடன் ஒரு பேயை ஏவல் செய்து அதை ஒரு போத்தலில் அடைத்து எடுத்து வந்திருக்கிறார். சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு முன்னால் போத்தலை புதைத்து விட வேண்டும். ஆனால் அதை எடுத்து வந்த நபர் மாந்திரிகர் கொடுத்த அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் காரியத்தை செய்ய முடியாமல் போய்விட்டது. நேரம் முடிந்து விட்டதால் அதைப் புதைக்க முடியாமல் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பற்றைக்குள் போத்தலை மறைத்து வைத்துவிட்டு சென்று விட்டார்.

அதுதான் சில வாரங்களுக்கு முன்னால் புல்டோஸர் சக்கரங்களில் சிக்கி படீரென வெடித்த போத்தல்! அதில் இருந்து வெளியேறிய பேய், அந்தப் பகுதியில் வெறியுடன் உலவிக் கொண்டிருக்கிறது என்ற விபரத்தை உத்ரகாளியின் மூலம் மாந்திரிகள் அறிந்து கொண்டார்கள். தோட்டத்து வாசிகளும் இதைக் கேட்டு அச்சத்தால் உறைந்து போனார்கள்.

இதன் பின்னர் திலக்ராஜா பூசாரி சரசரவென காரியத்தில் இறங்கினார். இனி தாமதிக்க நேரமில்லை. பேய் சக்தியைத் திரட்டி தன்னைத் தாக்கு முன் அவர் பேயை மடக்கியாக வேண்டும்!

அப்போது வீரசிங்கம் பூசாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முகம் வெளிறிப் போனார் வீரசிங்கம் பூசாரி. அவரது மகன் அவரசமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செல்போனில் தகவல் வந்திருந்தது.

முதலில் இது சாதாரணமாகப் பட்டாலும் பின்னர் இது அப்பேயின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் தட்டியது திலக்ராஜூக்கு. ஏனெனில் சகாக்களோடு மூன்று ஆட்டோக்களில்; அவர் புறப்பட்டு வந்த போது ஆட்டோக்கள் மூன்றும் அடுத்தடுத்து பழுதடைந்தன. அவற்றை திருத்திக் கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது. இந்தத் தடங்களுக்கும் தற்போது வீரசிங்கத்தின் மகன் சுகவீனம் அடைந்ததற்கும் இந்தப் பேயின் சூழ்ச்சி காரணமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் நியாயமாகவே பட்டது. எனினும் பயப்படாமல் வீரசிங்கத்தை வழியனுப்பி விட்டு வேலையில் இறங்கினார்.

நானா அல்லது இந்தப் பேயா, இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுடன் அவர் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வரச் செய்தார். அதை தமது உதவியாளரிடம் பிடித்துக் கொள்ளும்படி சொல்லி மந்திரங்களை வேகவேகமாக உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். உச்சாடனம் உக்கிரம் பெற்றதும் பீலிக்கரை பாறை மீது முக்காடு போட்ட ஒரு கரிய உருவம் அமர்ந்திருப்பது காட்சியாகக் கண்ணாடியில் தெரிந்தது. அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த புல்டோசர் சாரதி சுமதிபால,

இந்த முகம் தான் என் புல்டோசர் கண்ணாடியில் மோதியது என்று கத்தினார். இதுதான் அந்தப் பேய் என்பதை அடையாளம் கண்டு கொண்ட திலக்ராஜ், பேயைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்தார். ஆனல் பிடி கொடுக்காமல் பேயும் நழுவி மறைந்து கொண்டிருந்தது. இது நடந்து கொண்டிருக்கையில் தன் மகனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளச் சென்றிருந்த வீரசிங்கம் பூசாரி திரும்பி வந்திருந்தார்.


மூவருமாக மந்திர வேலி அமைத்து ஒரு சதுரங்கத்துக்குள் அதை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தனர். சக்தி வாய்ந்த பேயாக இருந்ததால் மந்திர வேலியை உடைத்து வெளியேற அது ஓயாமல் முயற்சி செய்தது. பிறர் கண்களுக்கு தெரியாவிட்டாலும் அம் மூவரும் அந்த ஆபத்தான பேயுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு கணம் தோற்று நின்றாலே போதும். யாரையாவது அது காவு கொள்ளலாம்!

அப்போது திலக்ராஜூக்கு ஒரு யோசனை தோன்றியது. பேயை மீண்டும் கண்ணாடிக்குள் கொண்டு வந்து மந்திரத்தால் கட்டிக் கண்ணாடியை வெட்டினால் பேய் வசப்பட்டு விடும் என்று தோன்றியது. கண்ணாடி கொண்டுவரப்பட்டது. கண்ணாடியில் பேய் தன்னைக் காட்டியபோது விரைந்து செயல்பட்ட திலக்ராஜ் பூசாரி, கத்தியால் கண்ணாடியை ஒரே வெட்டாக வெட்டினார். கண்ணாடி துண்டு துண்டாக நொருங்கியது. பேய் தள்ளாடிய அந்த நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய திலக்ராஜா தாம் செய்து வைத்திருந்த மாவு உருவ பொம்மையில் பேயை இறக்கிக் கட்டினார். முரண்டு பிடிக்கும் அந்தப் பேயை மேலும் மந்திரங்களால் பிணைத்து அதை ஆற்றில் கரைத்து விட்டு வெற்றியோடு மூவரும் திரும்பி வந்தார்கள்.

கதை இங்கே முடியவில்லை.

திலக்ராஜா பூசாரி விடியற்காலையில் களைப்புடன் வீடு திரும்பியபோது அவருக்கு அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே தான் பாசமாக வளர்த்து வந்த ஐந்து ஆடுகள் பரிதாபமாக செத்துக் கிடந்ததைக் கண்டார். இது அந்தப் பயங்கர பேயின் பழிவாங்கல்தான் என்பதை நொடிப் பொழுதில் அவர் உணர்ந்து கொண்டார். தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தக் கொடூர பேய் தான் பாசமாக வளர்த்த ஆடுகளின் குருதியை குடித்து விட்டுச் சென்றிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன நிம்மதியில் ஓய்வெடுக்கச் சென்றார் மாந்திரிகர் திலக்ராஜ்.

இரண்டு வாரங்களின் பின்னர் கோவின்னவில் இருந்து தகவல் வந்தது, இங்கே இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று!

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 05

மாடுகள் மேய்ந்து திரிந்த திருச்சி விமான நிலையம்


அருள் சத்தியநாதன்

நான், இஸ்மாயில் என்ஜினியர், எஸ். முத்துமீரான், மருத்துவர் ஜாபிர் ஆகிய நால்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி காலையில் திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்து விட்டோம்.


இலங்கையில் ஜோக்காக பேசப்படும் இடம்தான் திருச்சி விமான நிலையம். அது ஒரு வீடு போல முன்னர் காணப்பட்டது. அங்கே போய் வரும் இலங்கைப் பயணிகள், லஞ்சம் தலை விரித்தாடும் இடம் என்றும் ஏதாவது தள்ளினால்தான் காரியம் நடக்கும் என்றும் சொல்வார்கள். எண்பதுகளில் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவர்கள், அந்த விமான நிலையத்தைச் சுற்றி மாடுகள் சுற்றித்திரியும் என்றும் ஜன்னல் வழியாக மாடு எட்டிப் பார்க்கும் என்றும் சொல்வார்கள். இதில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை நான் அறியேன்.

அப்போது இங்கிருந்து திருச்சி போகிறவர்கள், டியூரோ ஷேர்ட்டுகள், தேங்காய் எண்ணெய், லக்ஸ், சன்லைட் சோப், இரண்டு போத்தல் அதிவிசேஷ சாராயம், ஏலம், கிராம்பு என்று கொண்டு செல்வார்கள்.

லக்கேஜை பரிசோதிக்கும் சுங்க அதிகாரி, லக்ஸ் இரண்டு கட்டி, தேங்காய் எண்ணெயில் ஒரு போத்தல் என்றெல்லாம் எடுத்துக் கொள்வாராம். போத்தலைக் கண்டதும், போத்தல் எல்லாம் இங்கே கொண்டுவர முடியாது என்று சத்தம் போடுவாராம். அப்போது தமிழகத்தில் மது விலக்கு அமுலில் இருந்தது.
சட்டென போத்தல் மூடியை உடைத்து ஜன்னல் வழியாக இரண்டு போத்தல் சாராயத்தையும் வெளியே கொட்டிவிட, பதை பதைத்துப் போய்விடுவார் பயணி, ஆனால் அந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு பேசின் வைக்கப்பட்டிருக்கும் என்றும் சாராயம் முழுவதும் அந்த பேசினுக்குள்ளேயே கொட்டப்படும் என்றும் நான் எண்பதுகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். பயணியிடமிருந்து ஒன்றுமே சிக்கவில்லை என்றால், 'பீடிக்கு ரெண்டு ரூபா வைச்சிட்டு போய்யா!' என்பார்களாம்.
விமான நிலையத்தில் விமானம் நின்றதும் படி வழியாக தரையில் இறங்கி பைகளையும் சுமந்து கொண்டு தூரத்தில் தெரியும் விமான நிலையத்துக்கு நடந்துதான் செல்ல வேண்டும். 2004 ஆம் ஆண்டில் அப்படித்தான் நானும் அந்த 'வீட்டை' நோக்கி நடந்து சென்றேன். நீ இதற்கு முன் இங்கே வந்திருக்கிறாயா? என்று ஒரு அதிகாரி கேட்டார். இல்லை என்றேன். உடனே அவர் எழுந்து உள்ளே சென்றார். நான் ரூமுக்குள் எட்டிப் பார்த்தேன். நீண்ட மேசையில் செக்ரோல் அளவில் ஒரு பத்து புத்தகங்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதையோ தேடி, இது எனது முதல் திருச்சி வருகை என்பதே சரி என உறுதிப்படுத்திக் கொண்டார். ஏன் வந்தாய், எப்போது திரும்புவாய்? போன்ற கேள்விகளைக் கேட்டு விட்டு கடவுச் சீட்டில் முத்திரை குத்தி அனுப்பி வைத்தார். ஆனால் சென்னையில் இப்படி இலங்கைப் பயணிகள் நடத்தப்படுவதில்லை. ஏன் இரண்டு இடங்களில் இரண்டு விதமான கவனிப்பு என்பதை இன்றளவும் நான் அறியேன்.
சில சமயம் அது போர்ச்சூழல் காலமானதாலும், ஏராளமான இலங்கையர் அகதிகளாக திருச்சி - மதுரை பிரதேசங்களில் வசித்தாலும், இலங்கை அகதி முகாம்களின் பிரசன்னம் காரணமாகவும் இவ்வாறான கெடுபிடிகள் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

'திருச்சி விமான நிலையத்தில் போய் இறங்குவதற்கு நீ பாவம் செய்திருக்க வேண்டும்' என்று சொல்லுமளவுக்கு திருச்சி விமான நிலையம் தரமிறங்கிப் போனதற்கு காரணம் என்ன?

அறுபது, எழுபது, எண்பதுகளில் இவ்விமான நிலையத்தில் போய் இறங்கியவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழ் வர்த்தகர்களும் மலையக வம்சாவளியினரில் வசதியானவர்களும், கடத்தல் நோக்கத்துடன் சென்றவர்களுமாகவே இருந்தனர். சென்னை செல்லாமல் திருச்சி வருகிறார்கள் என்றால் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடனேயே 'பகிரங்கமாக லஞ்சம் கேட்டாலோ அல்லது பொருட்களை எடுத்துக் கொண்டாலோ இந்தப் பயணிகள் புகார் சொல்லப் போவதில்லை, இவர்களும் திருச்சி வருவதும் வேறு திட்டங்களுடன்தான்' என்று சுங்க அதிகாரிகளும் விமான நிலைய ஊழியர்களும் கருதியதாலேயே இவர்கள் கண்டபடி வேட்டையாடப்பட்டிருக்கலாம்.
மன்னாருக்கும் தூத்துக்குடிக்கும் இடையே ராமனுஜம் கப்பல் சேவையாற்றிய காலத்தில் இரு முனைகளிலுமே எல்லாவிதமான தில்லுமுல்லுகளும் அரங்கேறின. அவற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கத் தயார் நிலையில் பயணிகள் கப்பலேறச் சென்றதால் ராமனுஜம் பயணிகளும் ஒரு வகையான கடத்தல் - பிஸினஸ் செய்வதை நோக்கமாகக் கொண்டே கப்பலேறினார்கள்.

இந்த நினைவுகளுடன் திருச்சியில் இறங்கினால் எமது விமான வாயிலுடன் சுரங்க நடைபாதை பொருத்தப்படுவதைப் பார்த்த பின்னரேயே, திருச்சி விமான நிலையம் முற்றிலுமாக அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அங்கே ஒரு விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன சகல நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் பின்பற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. பழைய கட்டடம் சுத்தமாக அகற்றப்பட்டு நவீன பாணியில் விமான நிலையம் தீர்வையற்ற விற்பனை நிலையங்களுடன் காட்சியளிக்கிறது. நீங்கள் குடிவரவு அலுவல்களை முடிப்பதற்கான கியூ வரிசையில் நிற்கும் போது எதிரே வெளிச்சம் போட்டு உங்களை வரவேற்கிறது ஒரு தீர்வையற்ற மதுக்கடை! நரி முகத்தில் விழித்த மாதிரியான ஒரு கிறக்கமான ஏற்பாடு!
வருமானம் குறைவானாலும் பரவாயில்லை, மதுவிலக்கை அகற்ற மாட்டேன் என்று சொன்ன கடைசி முதல்வர் சி. என். அண்ணாதுரை. அதை படிப்படியாக நீக்கியவர் கலைஞர். "அண்ணா நாமம் வாழ்க என்று கோஷமிடுபவனின் வாயில் அடிக்கிறது நாட்டு சாராய வாசனை!" என்று மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கழகத்தில் கலகம் உருவாக்கி பிரிந்து சென்ற எம். ஜி. ஆரும் மதுவிலக்கை அகற்றி, தமிழர்களை குடிமகன்களாக்கினார். பிற்காலத்தில் சாராய உடையார் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பராக விளங்கியதும் சாராய விற்பனையின் ஒரு பகுதி அரசியல்வாதிகளைச் சென்றடைவதும் பிற்காலத்தில் சாதாரணமாகிப் போன விடயங்கள். இன்றைக்கு சாராய வருமானத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தமிழர்கள் அதிகம் குடித்தால் நிறைய வருமானம் அதனூடாக நிறைய இலவசத் திட்டங்கள் என்பது கழக பொருளாதார நிபுணர்களின் கோட்பாடாக இருக்கிறது. அதாவது குடிகார கணவனிடம் காசைப் பறித்து இலவச ஃபேனாக, மிக்சியாக, கிரைண்டராக அதை மனைவியிடம் திருப்பித் தருகிறார்கள்.

வா, வாவென வரவேற்கும் திருச்சி தீர்வையற்ற மதுக்கடையைத் தாண்டி வெளியே சென்றால் அங்கே எம்மை வரவேற்கக் காத்திருந்தார் அஸ்லம் ஹாஜியார். தாடி, மீசை, பருத்த உடலுடன் எம்மை வரவேற்ற கே. முகம்மது அஸ்லம், எங்களை தனது வாகனத்துக்கு அழைத்துச் சென்றார்.

"நீங்கள் எங்கள் கண்ணியத்துக்குரிய வெளிநாட்டு நண்பர்கள். இப்போது முதல் மாநாடு நிறைவு அடையும்வரை கண்ணியத்துடன் உங்களை பார்த்துக்கொள்வது எங்கள் கடமை. இங்கிருந்து கும்பகோணத்துக்கு இரண்டரை மணித்தியால ஓட்டம். வாருங்கள் முதலில் ஹோட்டலில் காலை சாப்பாடு உண்ணலாம்" என்று சொல்லி இரண்டுங்கெட்டான் வேளையான பத்து மணியளவில் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றார்.

"இங்குள்ள முஸ்லிம்கள் காலைச் சாப்பாட்டில் மாமிசம் உண்பதில்லை. இட்லி, தோசை, ஊத்தப்பம், சாம்பார், பொங்கல், சட்னி என்று வெஜிடேரியனாக இருப்பதே வழக்கம். நீங்கள் எப்படி?" என்றார். இலங்கையின் எல்லா மாமிச பட்சணியான குடிமகனும் காலையிலும் இறைச்சி, மீன்குழம்பு, வெட்டுபவர்களாகத் திகழ்வது சகஜம். ஏற்கனவே விமானத்தில் தந்த காலை உணவையும் ஒரு வெட்டு வெட்டியிருந்தோம். எனினும் வஞ்சகமின்றி தோசை, இட்லி வகையறாக்களை கோப்பியுடன் உள்ளே தள்ளினோம்.

அங்கிருந்து கும்பகோணம் புறப்பட்டபோது மழை தூறிக் கொண்டிருந்தது. வழியில் தஞ்சை எதிர்ப்பட்டது. என்னைத் தவிர ஏனையோர் தஞ்சை பெரிய கோவிலை தரிசித்ததில்லை. ராஜராஜ சோழனையும் தஞ்சை பெரிய கோவிலையும் தெரியாத தமிழ்பேசும் சமூகம் இருக்க முடியுமா?" திடீரென பெரிய கோவில் கோபுர உச்சியின் வட்ட வடிவ கல் எங்கள் கண்முன் தோன்றவே அதைப் பார்ப்பது என முடிவு செய்தோம்.

தமிழும் ஆங்கிலமும் சரளமாகப் பேசக்கூடிய அஸ்லம் ஹாஜி, மிகச் சரளமாக உருதுவிலும் வெளுத்துக் கட்டுகிறார். நீண்ட காலம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி இப்போது வசதிகளுடன் ஓய்வாக இருப்பவர். கும்பகோண மாநாட்டு மலர் வெளியீட்டுக் குழுவில் அங்கத்தவர். இலங்கையில் இருந்து வரும் பேராளர்களை அழைத்துச் சென்று அந்தந்த இடங்களில் தங்க வைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருந்தார். இவ்வளவு காலமாக இந்த வழியில் சென்று வந்திருக்கின்ற போதிலும் தஞ்சை பெரிய கோவிலைப் பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றவில்லையே!" என்று சொல்லி பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

பெரிய கோவிலை சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் தஞ்சை மஹாராஜா ஜவுளி நிறுவனத்தின் தலைவர் எம். எஸ். ஆசிப் அலி எமக்கு ஒரு பகல் போசன விருந்தளித்தார்.

பகல் உணவின் பின்னர் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பார்க்கச் சென்றோம். தஞ்சை கோட்டையின் ஒரு பகுதியிலேயே இது அமைந்திருக்கிறது. நூலகம், பதிவு செய்துவிட்டு வரும் ஆய்வாளர்களுக்கு மட்டுமே திறக்கும். சரபோஜி மன்னரின் கால பழம் பொருட்களை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து கும்பகோணம் கிளம்பினோம்.

எங்களை விட, பெரியவர் அஸ்லம் களைத்திருந்தார். ஏனெனில் ஏற்பாட்டுக் குழுவினர் அனைவருமே கடந்த இரண்டு மூன்று நாட்களாக இரவு பகலாக ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர்.

(தொடரும்)

Friday, August 22, 2014

முட்டுச்சந்து பெட்டிக்கடை மணி  ஸ்ரீகாந்தன்

அறுசுவை உணவுகளை ருசித்து சாப்பிட அதிநவீன உணவகங்கள்
 தலைநகரில் வந்துவிட்டாலும், முட்டுச்சந்து பெட்டிக்கடை, வீதியோர கையேந்தி உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அடுத்த வீட்டு ஆயா சுட்டுத் தரும் ஆப்பத்திற்கு எப்படி ஒரு தனி சுவை இருக்குமோ அதுமாதிரிதான் இந்த மினி உணவகங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஆட்டுப்பட்டித்தெருவில் அனேகருக்கும் மிகவும் பரிச்சயமான வி. ஐ. பி. தான் நம்ம இட்லிக்கார லெட்சுமி அம்மாள்.


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டுப்பட்டித் தெருவில் இட்லி, தோசை வியாபாரம் செய்து வருகிறார். "வயசு போயிடுச்சுன்னு சும்மா வீட்டுல உட்காரத்தான் ஆசையா இருக்கு. ஆனா முடியலை. ஏன்னா சும்மா உட்கார்ந்தா நோய் வந்திரும். இப்படி பரபரன்ணு வேலை செய்திட்டு இருந்தா நோய் நம்ம பக்கமே தலை வச்சுப் படுக்காதுங்க" என்று சொல்லிவிட்டு காய்கறிகளை நறுக்குவதில் வேகம் காட்டுகிறார் லெட்சுமி அம்மாள். காய்கறிகளை நறுக்குவதில் அவர் காட்டும் வேகத்தைப் பார்த்தால் அவருக்கு வயது எழுபதை கடந்து விட்டது என்று யாரும் நம்ப மாட்டார்கள்!


"நம்ம படிப்பு மூணாவது தாங்க.... எங்க அம்மா, அப்பா பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறில் இருந்து வரும் போதே இட்லி சட்டியோடத்தான் சிலோனுக்கு வந்திருக்காங்க. என்னோட பிறந்தவங்க மொத்தம் பதினோரு பேருங்க. நான் ஐந்தாவது. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இதே ஆட்டுப்பட்டித்தெருவில்தான். எங்க அம்மாவின் முந்தானையைப் பிடிச்சிட்டு வளர்ந்ததால் அம்மாவின் இட்லி சுடும் கை பக்குவம் நமக்கும் வந்திருச்சி. செட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி, சென்றல் ரோடுன்ணு எல்லா இடங்களில் உள்ளவங்களுக்கும் நம்மள தெரியும். நம்ம சாப்பாட்டை ருசி பார்த்தவங்கதான் எல்லோரும்..." என்று பெருமிதத்தோடு புன்னகைக்கிறார் லெட்சுமி!
மாலை ஐந்து மணிக்கெல்லாம் லெட்சுமி அம்மாளின் இட்லி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இரவு பத்து மணி வரை வியாபாரம் ஜோராக நடக்கிறது. வாரத்தில் ஞாயிறு மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்கிறார்.

"இப்போ விலைவாசி உயர்ந்து விட்டதால் இட்லி வியாபாரம் கொஞ்சம் மந்த கதியில்தான் போகிறது. இப்போ ஒரு இட்லி இருபது ரூபாவுக்கு விற்பனையாகிறது" என்று சொல்லிக்கொண்டிருந்த போது,

"அந்தக் காலத்தில் ஒரு இட்லி ஐந்து சதத்திற்கு விற்றோம். நான்தான் இட்லியை கூடையில் வைத்து இந்த தெரு முழுவதும் கூவிக் கூவி வித்துட்டு வந்தேன்" என்று இடையில் புகுந்த லெட்சுமியின் அண்ணன் ராமசாமி தேவர் நெஞ்சு நிமிர்த்தினார்.

"நாங்களெல்லாம் கட்டபொம்மன் மண்ணுக்காரங்க, சும்மாவா.." என்று கொஞ்சம் கெத்து காட்டிவிட்டு வெளியே போனார் அவர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாளின் முகத்தில் கேலிப் புன்னகை.

லெட்சுமி அம்மாளின் இட்லி வியாபாரத்தில் இப்போ எல்லாமே மெஷின்தான்.

"அட என்னங்க மெஷினு... அந்தக் காலத்தில் ஆட்டுக்கல்லில் ஆட்டி அவிக்கிற இட்லியின்  சுவை இந்த மெஷின் ஆட்டும் போது கிடைக்கலீங்க... எல்லாம் கரண்டு வந்ததால வந்த வினை. செலவுதான் அதிகம்..." என்று முகத்தில் வெறுப்புக் காட்டுகிறார்.

லெட்சுமி அம்மாளுக்கு உதவியாக அவரின் தங்கை தெய்வானை தோள் கொடுத்து வருகிறார். இதனால் லெட்சுமியின் வேலை சுமை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு நூறு நூற்றியம்பது இட்லிகள் விற்பனை ஆகிறதாம்.

"எனக்கு மூணு பிள்ளைகள். எல்லோரும் கல்யாணம் முடித்து குழந்தை குட்டின்ணு ஆகிட்டாங்க. இது என் சொந்த வீடுதான்" என்கிறார் பெருமையாக.


"என் வாழ்க்கைச் சக்கரம் இன்னைக்கு வரைக்கும் வெற்றிகரமாக ஓட இந்த இட்லி வியாபாரம்தான் காரணம். இன்றைக்கு விலைவாசி அதிகமாகி விட்டதால் இட்லி வியாபாரம் செய்வது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் செய்த தொழிலை நிறுத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. சாப்பாடு கேட்டு வர்றவங்ககிட்ட இல்லைன்ணு சொல்ல முடியலை. அதனால் வியாபாரத்தை நடத்தி வர்றோம்" என்று சொன்னவர் ஊற வைத்த உளுந்தை அரவை மெஷினில் போட்டு பட்டனைத் தட்டினார். மெஷின் கர.... கரன்னு சத்தம் போட, அதற்கு மேலும் நாம் அங்கே நிற்க முடியாமல் விடை பெற்றோம்.

Thursday, August 14, 2014

இருள் உலகக் கதைகள்-02

சுரேஷை பிடித்தாட்டிய நான்கு கெட்ட ஆவிகள்

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க்கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

ரமேசுக்கு இருபது வயதிருக்கும். ரொம்பவும் தைரியசாலி. அடிதடி, வெட்டுக்குத்து என்று தும்பர தோட்டத்தில் எங்கே என்ன நடந்தாலும் அங்கே ஹீரோவாக இருந்து அழிச்சாட்டியம் பண்ணுவது அவனது ஸ்டைல். ரமேசுக்கு நிழலாக இருப்பது நண்பன் சுரேஷ். ஊராரின் வசைபாடலுக்கு இலக்கான அந்த இருவரையும் அதி விரைவிலேயே விதி பிரித்து விட்டது. இறப்பர் மரத்தில் ஏறி விறகு வெட்டும்போது தவறி விழுந்து ரமேஷ் பலியானான். சுரேஷ் மட்டும் ஊரைச் சுற்றி வந்தான். ஒருநாள் நள்ளிரவு ஊர்க்கோடியில் உள்ள அரசமரத்தடியில் தமது நண்பர்களுடன் பீடி புகைத்துக் கொண்டிருந்த சுரேஷ் "அய்யோ! அய்யோ!" என்று ஊரே அதிர்ந்து போகும்படி அலறினான். தரையில் விழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறினான். அவனை ஏதாவது காத்து கறுப்புத்தான் அறைந்து விட்டதோ என்று நம்பிய அவனது நண்பர்கள் அவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஊர் பூசாரியிடம் ஓடினார்கள்.


விசயத்தைச் சொல்லி அவர் தந்த மந்திரித்த நீரை சுரேசுக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அதன் பிறகும் சுரேஷின் கதறல் நிற்கவில்லை. சுரேசுக்கு வேண்டாதவர்கள் யாரோ அவனுக்கு செய்வினை செய்து விட்டார்கள் என்று அவன் பெற்றோர் நினைத்தார்கள். உணவில் சூனிய மருந்தைக் கொடுத்து விட்டார்கள் என உறுதியாக நம்பினார்கள். ஏனெனில் ரமேசும் சுரேசும் ஒரே தட்டில் சாப்பிடுவது வழமை. அதனால் அந்த மருந்து இவனையும் தாக்கி விட்டது என்று ஊராரும் கதை பேச ஆரம்பித்தார்கள். நண்பன் மரத்தில் இருந்து விழுந்து செத்ததைப் போன்ற ஒரு தீவினை இவனையும் கவ்வும் என்றும் அதற்குள் மாற்று வைத்தியம் செய்தாக வேண்டும் என்றும் தீர்மானித்த பெற்றோர் ஒரு பூசாரியை அணுகினார்கள். பூசாரி பணத்தை வாங்கிக் கொண்டு மந்திர தந்திரங்களை செய்தபோதும் சுரேஷின் வயிற்று வலி தீருவதாக இல்லை. பல ஆயிரங்களை அள்ளி பூசாரிக்கு செலவழித்த அவன் பெற்றோர் கடைசியாக அழைத்தது வீரசிங்கம் பூசாரியை.

தமது சகாக்களோடு வீரசிங்கம் பூசாரி தும்பர தோட்டத்திற்கு சென்றார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பூசாரியின் பூஜை பட்டியலின்படி அனைத்து மாந்திரிக பொருட்களும் கொண்டுவரப்பட்டன. சிகப்பு நிறத்தில் பெரிய அட்சர சதுரம் வரையப்பட்டு அதில் வீரசிங்கம் பூசாரி அமர்ந்தார். அட்சர சதுரம் என்பது ஒரு காப்பு. ஒரு காலத்தில் திடகாத்திரமாக இருந்த சுரேஷ் எலும்பும் தோலுமாக பேசக்கூடத் திராணியற்ற நிலையில் பலவீனமாக இருந்தான். கண்கள் குழி விழுந்து மங்கிப் போயிருந்தன. பூசாரியைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து எழுந்து ஓடினான். உடனே அங்கிருந்தவர்கள் அவனைப் பிடித்து வந்து அமர்த்தினார்கள். பூசாரி அவனை கோபமாகப் பார்த்து விட்டு மந்திரங்களை உச்சரித்து பாடத்தொடங்கினார். அவரின் பாடலுக்கு தகுந்தாற்போல உடுக்கும், பறையும் சுதி சேர்ந்தது. சிறிது நேரத்திலேயே சுரேஷின் உடல் சிலிர்த்தது. அவன் அமர்ந்தபடியே ஆடத்தொடங்கினான். சில நிமிடங்களில் அவனுக்குள் இருந்த ஒரு ஆவி கிளம்பி பேசத் தொடங்கியது. அது இறந்துபோன ரமேஷின் ஆவி. "எனக்கு சாப்பாட்டுல மருந்து போட்டு கொடுத்திட்டாணுங்கடா! அந்த சாப்பாட்டை என் நண்பன் சுரேஷ் சாப்பிட்டுட்டான்.
ஆனால் இந்த நாசமாப்போன வயிற்று வலி என்னத்தான் முதல்ல வாட்டியது. அந்த வலி பொறுக்க முடியாமதான் இறப்பர் மரத்துல ஏறி குதிச்சு நான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்!" என்று அந்த ஆவி சொன்ன போதுதான் சுரேசுக்குள் இருப்பது ரமேஷின் ஆவி என்பதும் அவன் தற்கொலைதான் செய்துகொண்டான் என்பதும் கூடியிருந்தவர்களுக்கு புரிந்தது. ஆனாலும் சில நிமிடங்களில் சுரேஷ் பலவிதமான குரல்களில் 'அந்நியன்' மாதிரி பேசத் தொடங்கியதும் பூசாரி அதிர்ந்து போனார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் இருப்பதை பூசாரி தெரிந்து கொண்டார். ஆனால் எத்தனை என்பதை வீரசிங்கத்தால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு தெரிந்த ரமேஷின் ஆவியை வளைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதை மேலும் பேச வைத்தார். "நீ ஏன் நண்பனான சுரேஷ் உடலுக்குள் நுழைந்தாய்?" என்று தன்னுடைய பாணியில் கேட்டார். "நானாக வரல.... அவன்தான் என்னைக் கூப்பிட்டான்" என்று ரமேஷ் ஆவி சொல்லி கெக்கல் போட்டுச் சிரித்தது. பூசாரிக்கு அப்போது மேலும் சில விசயங்கள் தெரிய வந்தன.

"அன்று ஒரு வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியிருக்கும். தும்பரை தெருக்கோடியில் உள்ள சுடுகாட்டுப் பக்கத்தில் ஒரு நாய் நீண்ட நேரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அங்கே பரபரக்க "அய்யோ ரமேஷ்..." என்று கத்திக்கொண்டு ஓடி வந்த சுரேஷ் "என்னையும் உன்னோட கூட்டிட்டுப் போடா...." என்று கதறியிருக்கிறான். அதை இறப்பர் காட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரமேஷின் ஆவி மனம் இளகி சுரேஷின் உடலுக்குள் புகுந்திருக்கிறது. அந்த நேரத்தில்தான் இன்னொரு விசயமும் நடந்திருக்கிறது. சுரேஷின் உடம்பிற்குள் ரமேஷின் ஆவி நுழைவதை பார்த்த அவனது நண்பர்களான மேலும் இரண்டு ஆவிகள் அவனுக்கு உதவியாக சுரேஷின் உடம்பிற்குள் நுழைந்திருக்கின்றன. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஐந்து தலைமுறைகளுக்கு முன்பாக மரணித்த சுரேஷின் முப்பாட்டன் சொக்கலிங்கத்தின் ஆவிதான் அது!

"என் பேரன என்னடா பண்ணப் போறீங்கன்ணு"  கத்தியபடியே சொக்கலிங்க ஆவியும் காவல் ஆவியாக அவனுள் நுழைந்திருக்கிறது. ரமேஷின் ஆவியிடம் இருந்து விவரங்களை கரந்து எடுத்த வீரசிங்கம் பூசாரி முடிவாக ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டார். சுரேஷின் உடலில் மொத்தம் நாலு ஆவிகள் வசிக்கின்றன என்பது தெளிவானது.

ஆனாலும் அவைகள் ஆபத்தானவை அல்ல. இருந்தாலும் ஒருவரின் உடம்பிற்குள் நான்கு ஆவிகள் இருப்பது சுரேஷின் பலத்தை குறைத்துவிடும். அதனால் அவற்றை வெளியேற்றியே தீர வேண்டும் எனத் தீர்மானித்தார்.

அப்போது வெளியே வந்தது சொக்கலிங்கத்தின் ஆவி. என் பேரன் வயிற்றில மருந்து இருக்கு. அந்த மருந்தை உங்களால எடுக்க முடியும். பூசாரி என்று வீரசிங்கத்திற்கு உதவி செய்யும் தொனியில் பேசியது.

சொக்கலிங்கம் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பூசாரியாக இருந்தவராம். கத்தி மேல் ஏறி நின்று அருள்வாக்கு கொடுப்பாராம். அந்த கத்தியை அவர் மறுபடியும் கேட்கவே, குழம்பிப்போன வீரசிங்கம், பிறகு சொக்கலிங்கம் குறிப்பிட்ட இடத்திற்குப் போய் அந்தக் கத்தியை எடுத்து வர அங்கே கூடி இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு போனார்கள். பிறகு அந்த நாலு ஆவிகளையும் வெளியேற்றுவதில் பூசாரிக்கும், ஆவிகளுக்கும் இடையே பேரம் நடந்தது. தங்களை போத்தலில் அடைக்கக்கூடாது என்று ஆவிகள் நிபந்தனை விதிக்க ஆடிப்போன வீரசிங்கம், பிறகு அந்த ஆவிகளை பூசணிக்காயில் இறக்கச் சம்மதித்தார்.
ஆவிகள் ஆசைப்பட்டுக் கேட்ட ஆற்று மீனு, ரம்புட்டான், கசிப்பு என்று எல்லாவற்றையும் கொடுத்து ஒவ்வொன்றாக பூசணிக்காயில் இறக்கினார். ஆனாலும சொக்கலிங்கம்தான் பூசாரிக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டினார். பூசணிக்காயில் இறங்கும் அந்த நொடியில் படீர் என்று ஒரு சத்தம் கேட்க அங்கே பறையடித்துக் கொண்டிருந்த நபர் அப்படியே பேயடித்த மாதிரி நிற்க அவரின் பறை இரண்டாக பிளந்திருந்தது. சொக்கலிங்கம்தான் தனக்கு வேலைகாட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட பூசாரி பிறகு ஒரு வழியாக அவரையும் பிடித்து பூசணிக்காயில் இறக்கி சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று வெட்டி வீழ்த்தினார். அதன்பிறகு சுரேஷின் உடம்பிற்குள் சொக்கலிங்கத்தின் ஆசைப்படி மாடனின் அருளை உருவேற்றினார். அதன் பிறகு மூலிகை மருந்துகளை அம்மியில் அரைத்து ஒரு சிறிய உருண்டையாக பிடித்து சுரேஷிற்கு கொடுத்து விழுங்கச் சொன்னார். சுரேஷ் வயிற்றில் உள்ள மருந்தை கரைக்க இந்த மருந்துதான் சரியான வைத்தியம் என்று சொன்ன வீரசிங்கம் தமது பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

Tuesday, August 5, 2014

சிறப்பு சந்திப்பு

நோய் விட்டுப் போக ஒரு சிரிப்பானந்தா


மணி   ஸ்ரீகாந்தன்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் இன்றைய நகர வாழ்க்கையில் எத்தினைப் பேர் மனம் விட்டு சிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 'இயந்திர வாழ்க்கையில் வேலைப்பளுதான் வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணம் செய்து கொண்டிருக்கிறது.இதில் எங்கே போய் சிரிப்பது?' என்று நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது.
சிரிப்பு என்பது  ஒரு அரு மருந்து என்று வைத்தியக் குறிப்புகள் கூறுவதாக நாம் படித்து இருக்கிறோம். இயந்திர வாழ்க்கையில் சிரிப்பை தொலைத்து விடுவதால் கண்ட கண்ட வியாதிகளை நாமே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து கொள்கிறோம். சிரிப்பு என்பது வெறும் சினிமா ஜோக்குகளை கேட்பதால், பார்ப்பதால் மட்டும் வருவதில்லை. சிரிப்பு யோகா செய்வதாலும் அதை நாம் அனுபவித்து பயன் பெறலாம். ஆனால் சிரிப்பு யோகா பயிற்சிகள் நம் நாட்டில் நடப்பதாக நாம் அறியவில்லை ஆனால் தமிழகத்தின் சென்னையில் இருபதுக்கும் மேற்பட்ட சிரிப்பு பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகின்றன. அந்த வகுப்புகளைப் பற்றி அறிந்த வர சென்னை வரை ஒரு நடைப் போட்டோம்.

இன்றைய தமிழ் ஊடகங்களில் தனிக்காட்டு ராஜாவாக சிரிப்பு யோகாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் சிரிப்பானந்தா. பேஸ்புக் வலைத்தளத்தில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வள்ளுவர் தாடியும், சார்லி சப்லின் தொப்பியுமாக தனக்கென்று ஒரு தனி அக்மார்க் முத்திரையோடு தமது புல்லட் வண்டியில் ஆவடி, அம்பத்தூரில் ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தவரை ரவுண்டு கட்டினோம்.
"அட.. இந்த அம்பத்தூரில் எப்படி சார் நம்மள கரெக்டா  கண்டுப் புடிச்சீங்க…"னு முகமெல்லாம் சிரிப்பாக சிரிப்பானந்தா கேட்க "இந்த தாடியும், தொப்பியும் உங்களை காட்டிக் கொடுத்து விட்டது" என்று நாம் சொன்னப் போது சிரிப்பானந்தாவுக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. "அட நம்ம முகம் இலங்கை வரைக்கும் தெரிஞ்சிருச்சா..." என்று சொல்லும் போது சிரிப்பானந்தா முகத்தில் பெருமிதம் பிரகாசமாக.... அம்பத்தூரில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிரிப்பு யோகா பயிற்சி நடாத்தி வருபவர் சிரிப்பானந்தா. இவரின் நிஜப் பெயர் சம்பத். தமது 44வது வயதில் பயணிக்கும் சிரிப்பானந்தா வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது முதலீட்டு ஆலோசகராக தொழில் செய்து வருகிறார். "நம்ம தொழிலுக்கும் நம்ம பண்ணிட்டு இருக்கிற இந்த சிரிப்பு பயிற்சிக்கும் ரொம்ப தூரமுங்க... நான் ஆரம்பத்துல மார்க்கட்டிங் துறையில் வேலை செய்தேன்.
அப்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவங்களோட நகைச்சுவையாக பேச வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. நான் கொஞ்சம் சிறப்பாக பேசுவதாக மேலிடம் கருதியதால் என்னையே பேசும்படி பணிக்க நானும் அதை விருப்பத்துடன் செய்து வந்தேன். அதன் பிறகு எனக்கு டயபடிக் வந்துவிட நான் வைத்தியரிடம் போனேன். என்னை சோதித்து பார்த்த வைத்தியர் 'மனசை ரிலாக்சா வச்சுக்கங்க நகைச்சுவை கிளப்புகளுக்கு போங்க எல்லாம் சரியாகிடும்' என்று டாக்டர் சொன்னதை வேதவாக்காக ஏற்று சென்னையில் உள்ள நகைச்சுவை கிளப்புகளுக்கு சென்று வந்தேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதன் பிறகு நாமே இந்த மாதிரி ஒரு பயிற்சி வகுப்பு தொடங்களாமே என்று நினைத்து எனது குடும்பம், பக்கத்து வீட்டு நண்பர்களின் ஆதரவோடு எனது அலுவலகத்தின் சிறிய அறையில் இந்த சிரிப்பு யோகா பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பித்தேன். பத்து பேரோடு தொடங்கிய இந்த சிரிப்பு யோகாவிற்கு இப்போது 100பேர் வரை வருகிறார்கள்."என்று ஒரு நீண்ட விளக்கத்தை தந்தார் சிரிப்பானந்தா.
அன்னையுடன்…
மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் கிருஸ்ணாபுரம் பூங்காவில் சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா பயிற்சி வகுப்புகள் மாலை 4-30க்கு தொடங்கி 6-30 வரை நடைபெறுகிறது.

"ஒரு தடவை எனக்கு குளிர்காய்ச்சல் வர வைத்தியரிடம் போனேன்.என்னைப் பார்த்த டாக்டர் உங்க பெயர் என்னன்னு கேட்டாரு. 'நான் சம்பத்து' என்று சொல்ல 'இருக்க முடியாதே உங்கள பார்த்தா ஆனந்தா மாதிரி தோணுது' என்றார். 'அப்போ சிரிப்பானந்தான்னு வச்சிக்குங்க'னு சும்மா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன். பிறகு எனக்கே அந்தப் பெயர் பிடித்து விட அதையே வைத்துக் கொண்டேன். இப்போ சம்பத் மறைந்து விட்டது சிரிப்பானந்தா நிலைத்து விட்டது." என்று சிரிக்கிறார்.

2010ல் தொடங்கப்பட்ட சிரிப்பானந்தாவின் பேஸ்புக் கணக்குக்கு பிறகுதான் சிரிப்பானந்தா தமிழகத்தில் பிரபலமானதாக சொல்கிறார். தமிழகத்தின் முன்ணனி சேனல்கள், பத்திரிகைள் என அனைத்திலும் சிரிப்பானந்தாவின் பேட்டிகளும், அவரின் சிரிப்பு யோகா பற்றிய விவரண தொடர்களும் இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 'யோகாவில் ஒரு அங்கம் தான் ஹாஸ்ய யோகா. புத்தரும் தமது உபதேசத்தில் சிரிப்பு யோகாப் பற்றி வகைப் படுத்தி இருக்கிறாராம். ஆனாலும் இந்த நவீன யுகத்தில் சிரிப்பு யோகாவை டாக்டர் மத்தன் கத்தாரியா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த யோகாவில் நான்கு வகையான அங்கங்கள் இடம் பிடிக்கின்றன. அவை கைத்தட்டல் உடனான சிரிப்பு, மூச்சு பயிற்சி உடனான சிரிப்பு, குழந்தைகள் போன்று விளையாடுதல், உள்ளிட்ட சில சிறப்பு பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்கிறோம். எமது பயிற்சி வகுப்பில் சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ஆண்,பெண் இருபாலாரும் கலந்து கொள்கிறார்கள்." என்றார். இவரின் சிரிப்பு யோகாவில் ஆட்டோ சிரிப்பு, பெங்குயின் சிரிப்பு, சிம்ம சிரிப்பு, தேனீர் சிரிப்பு, கைத்தட்டல் சிரிப்பு உள்ளிட்ட பல வகைகள் காணப்படுகிறன. இந்த பயிற்சிகளை பண்ணும் போதே நமக்கு தானாகவே சிரிப்பு வந்து விடுகிறது.

"இப்படி விதவிதமாக சிரிக்கிறதால என்ன ஆகிறது என்றால், எல்லா விசயத்தையும் சீரியசாக எடுக்கிறதுக்குப் பதிலாக டேக் இட் ஈஸி பாலிசியாக   எடுத்திட்டுப் போகலாம். வாழ்க்கையை இலகுவாக எடுத்துச் செல்கிற பக்குவம் கிடைக்கிறது. உடம்பும் மனசும் இலகுவாகி இறுக்கம் குறைகிறது.இந்த சிரிப்பு யோகா பண்ணிய பிறகு நகைச்சுவை உணர்வு தானாகவே நமக்கு வந்து விடுகிறது." சிரிப்பானந்தாவின் பயிற்சி வகுப்புகளில் சினிமா நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்கள். படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்று எல்லோரும் இந்த யோகா வகுப்பில் கலந்து பயன்பெறலாம். அனுமதி அனைவருக்கும் இலவசம்தான். அன்மையில் இவரின் யோகா வகுப்புகள் நரிக்குறவர் சமூகத்தினரின் மத்தியிலும் வேலூர் பெண்கள் சிறையிலும் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிரிப்பானந்தாவிற்கு நான்கு அண்ணனும், ஒரு அக்காவும் இருக்கிறார்களாம். வீட்டில் இவர்தான் கடைக்குட்டி. ஆனாலும் இவருக்கு கல்யாணம் ஆகவில்லை. கட்டை பிரமச்சாரியாக இருக்கிறார். "நமக்கு வாழ்க்கையில எல்லாம் கிடைச்சிருக்கு ஆனா தாம்பத்தியம்தான் கிடைக்கல அது நமக்கு குறையா தெரியல சார். நான் என் குடும்பத்தோட ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று சொல்லும் சிரிப்பானந்தாவிற்கு நகைச்சுவை உணர்வு சின்ன வயசுல இருந்தே இருக்கிறதாம். அந்த அனுபவம் பற்றி அவர் கூறும் போது...

சமீபத்தில் நான் எனது பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். "என்னைத் தெரியலையா சார், நான்தான் சம்பத், ஏழாம் வகுப்பு உங்களிடம்தான் படித்தேனே", என்று சொன்னேன். அவர் ஒரு நல்ல நகைச்சுவை விரும்பி. என் முகத்தை நன்கு உற்றுப் பார்த்து, "இவ்வளவு பெரிய தாடியுடன் ஏழாம் வகுப்பில் என்னிடம் யாரும் பயின்றதாக ஞாபகம் இல்லையே!", என்று சொல்லிவிட்டு விலா வலிக்கச் சிரித்தார். நானும் சிரித்துவிட்டு, "நான் ஒன்றைச் சொன்னால் என்னை உடனே உங்களுக்கு ஞாபகம் வரும், புவியியல் பாடம் நடத்தும்போது நீங்கள் ஒரு உதாரணத்திற்கு, இப்ப நான்தான் மலைன்னு வைத்துக் கொள்ளுங்களேன் என்று ஆரம்பித்தீர்கள், உடனே நான் குறுக்கிட்டு, "இல்லை சார் உங்கள் தொந்திதான் மலைன்னு வச்சுக்கலாம்",ன்னு உங்க பெரிய தொந்தியைக் காண்பிச்சு சொல்ல, மாணவர்களெல்லாம் பயங்கரமாக சிரித்துவிட்டனர்.

நீங்கள் எபோதும் கையில் வைத்திருக்கின்ற மூங்கில் கம்பைத் தூக்கியவாறு துரத்திக் கொண்டு ஓடிவர, நான் ஒரே ஓட்டமாக வெளியே ஓடி, கிளாசுக்குள் வராமல் அப்புடியே வீட்டுக்குப் போய்விட்டேன். மறுநாள் ஸ்கூலுக்கு வந்தபோது என்னை பெஞ்சுமேல நிற்க வைத்து ஒரு அரைமணி நேரம் திட்டினீர்ளே ஞாபகம் இருக்கிறதா?" என்றேன். "ஓ படவா, அந்த சம்பத்தா நீ, வீட்டுக்கு வா இன்னும் அந்த மூங்கில் கம்பை பத்திரமாத்தான் வச்சிருக்கேன்", என்றார்.

"சார் நீங்க அந்த மூங்கிக் கம்பை மட்டுமில்ல உங்கள் தொந்தியையும் கூடத்தான் பத்திரமா வச்சிருக்கீங்க", என்றேன் நான் திரும்பவும். நாங்கள் நிற்பது ரோடு என்றும் பாராமல் தனது பெரிய தொந்தி குலுங்க அவர் சிரித்த சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆயிற்று என்று சிரித்தப்படியே எம்மிடம் விடைப்பெற்ற சிரிப்பானந்தா அவரின் புல்லட்டை ஸ்டாட் செய்ய அது உறுமியப்படி புல்லட்டாக பாய்ந்தது... நம்ம ஊரிலும் யாராவது சிரிப்பானந்தாவை பின்ன பற்றி சிரிப்பு யோகா பயிற்சிகளை ஆரம்பிக்கலாமே, நமக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க ஆசையா இருக்குதுங்க....