Thursday, July 10, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 04

இஸ்லாமியர் தம்மைத் தமிழராகக் கருதுவதை நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம்

அருள் சத்தியநாதன் 

கும்பகோணம் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய எட்டாவது மாநாடு ஒரு மாநில மாநாடா, உலக மாநாடா, அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா, எங்களை எல்லாம் அழைக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்ததன் காரணம் என்ன? என்றெல்லாம் கேள்விகளும், சொல்லாடல்களும், கோபமும், காழ்ப்புணர்வும் இலங்கையில் வெளிப்பட்டன. எங்களை ஏன் அழைக்கவில்லை? என்பதே இச்சர்ச்சையின் மையப் பொருளாக இருந்தது என்பதை, தொடர்ச்சியாக இதை பத்திரிகைகளில் வாசித்தவர்களுக்கு விளங்கியிருக்கும். ஏனெனில் ஒரு எல்லையைத் தாண்டாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவதாகவே வாதங்கள் அமைந்திருந்தன.

சர்ச்சை எங்கே எழுப்பப்பட்டிருக்க வேண்டுமென்றால், அது மாநாடு முடிந்த பின்னரே, எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்கள், கருப்பொருள், ஏற்பாடுகள் மீதாக இருந்திருக்க வேண்டும். இது சாப்பாடு தயாராவதற்கு முன்னரேயெ சாப்பாட்டில் உப்பில்லை, உறைப்பில்லை, பண்டங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றம் கண்டு பிடிப்பதற்கு சமமானதாகவே இருந்தது. சாப்பாட்டை உண்ட பின்னர் அல்லவா நிறைகுறைகளைச் சொல்ல முடியும்!

இம்மாநாட்டை குறை சொன்னவர்கள் ஜனவரி மாதமே அதை ஆரம்பித்து விட்டார்கள். மாநாடு நடைபெற்றதோ பெப்ரவரியில். எனவே எங்களை ஏன் அழைக்கவில்லை என்ற குறுகிய கண்ணோட்டத்துக்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. எனினும் இம்மாநாடு இசை பற்றியது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மாநாட்டில் என்னென்ன நிகழ்ச்சிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை தமது தமிழகத் தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். எனவே இஸ்லாத்தில் இசை ஹராமா, ஹலாலா என்ற அந்த ஒரு விஷயத்தையே தமது எதிர்ப்பு ஆயுதமாக எடுத்திருக்கலாம். இப்படி ஒரு விஷயத்தை இலக்கிய மாநாட்டில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? விவாதிப்பதற்கும் ஆராய்வதற்கும் வேறு விஷயங்களே கிடையாதா? என்ற பொருளில் இவர்கள் தமது எதிர்ப்பை பத்திரிகை வாயிலாகச் சொல்லியிருந்தால் அது ஏற்புடையதாகவும், விமர்சனப் பார்சையாகவும், நாரதர் கலகம் நன்மைக்கே என்பதுபோல பயனான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் எதிர்ப்பின் மையப் புள்ளி, எங்களை அழைக்காமல் அவமானப்படுத்தி விட்டீர்களே! என்பதாக இருந்ததே காரணம்.

இசைக்கென ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடத்தப்படுவது அவசியமா? என்ற கேள்வி தமிழகத்தில், உண்மையிலேயே, எழுப்பப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்த காலத்திலிருந்தே இந்தியாவுக்கு இஸ்லாமிய இசை வந்து சேர்ந்துவிட்டது. பாரசீகத்தில் இருந்தும், மங்கோலியா, ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்தாகி விட்டது. இந்துஸ்தானி என்ற இசை மரபையே அது தோற்றுவித்தது. தமிழக இசை மரபும் இலக்கிய மரபும் வளங்குன்றிய காலத்தில் ஆபத்பாந்தவனாக நின்று இசையையும் இலக்கியத்தையும் காத்தது. எண்ணற்ற இஸ்லாமிய புலவர்களையும் இசை பாடிகளையும் உருவாக்கியது. வடநாட்டில் இஸ்லாமிய இசை மரபு மிகுந்த வளம் செறிந்ததாகவும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய ஒன்றாகவும் திகழ்கிறது.

இசை ஹலால்தான் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அடித்துச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும், இசை அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் இன்னமும் இஸ்லாமியர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதாவது கோடு எங்கே கிழிக்கப்பட வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவில்லை. இதனால்தான் தமிழகத்தில் இதற்கென ஒரு தெளிவுபடுத்தும் மாநாடு நடத்தப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு முக்கியத்துவம் மிக்க மாநாட்டைத்தான் கவிக்கோ கும்பகோணத்தில் நடத்திக் காட்டினார். இதன் அருமை புரியாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள், எங்களை ஏன் அழைக்கவில்லை என்ற சிறு வட்டத்துக்குள் இருந்தபடி குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.
மாநாட்டு உணவகத்தில்
 இலங்கையில் இருந்து தமிழகம் செல்லும் இஸ்லாமியர்கள் அங்கே ஒரு பிரச்சினையை சந்திப்பது வழக்கம். தமிழகத்தின் இஸ்லாமிய அமைப்புகளிடம் அவர்கள் தம்மை நாங்கள் முஸ்லிம் இனம் அல்லது இலங்கை இஸ்லாமியர் என்று அறிமுகம் செய்வார்கள். இந்த அறிமுகம் தமிழக இஸ்லாமியருக்கு புதுமையாகப்படும். "இலங்கை இஸ்லாமியர் என்ற ஒன்று இருக்கிறதா? நாங்கள் எம்மை அப்படி அழைப்பதில்லை. நாங்கள் எம்மைத் தமிழராகவே கருதுகிறோம். முதலில் இந்தியர். இரண்டாவது தமிழர், அதாவது இனத்தால், மூன்றாவதாக மதத்தால் நாங்கள் இஸ்லாமியர் என்றே எங்களை அடையாளப்படுத்துகிறோம். ஒரு அமெரிக்கரை, ஜப்பானியரை அல்லது கொரியரை எடுத்துக் கொண்டால் அவர் முதலில் தன்னை தன் நாட்டின் பிரஜையாக மட்டுமே அடையாளப்படுத்துவார். சமயத்தால் அல்ல" என்று அவர்கள் கூறுவது வழக்கம்.

இப்படி தமிழகத்து இஸ்லாமியர் கேட்கும் போது இலங்கை முஸ்லிம்களுக்கு தர்ம சங்கடமாகப் போய்விடும். நம்மவர்கள் தாம் ஏன் தம்மைத் தமிழர் என அழைக்காமல் இஸ்லாமியர் என அழைக்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

"எங்கள் நாட்டில் சிங்கள இனமே பெரும்பான்மை. இச்சிங்களவர்களில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள். தம்மை சிங்கள பௌத்தர்கள் என அழைப்பதில் அவர்கள் பெருமிதம் அடைவதோடு தாமே நாட்டின் ஆதிக் குடியினர் என்பதையும் அதன் வழியாக அடையாளப்படுத்த முயல்கின்றனர். இச்சிங்கள இனத்துக்கும் இங்கே வாழும் தமிழர்களுக்கும் இடையே இன ரீதியான பிரச்சினைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரு இனங்களுக்கு இடையிலான மோதலில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தமது உரிமைகளையும் நலன்களையும் இழந்து விடக்கூடாது என்ற கவலை இங்கே எழுகிறது. எனவே நாங்கள் எங்களைத் தனியாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதை, தனி அரசியல் ரீதியான அடையாளமாக முன் நிறுத்துகிறோம். இப்போது கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு அரசியலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இலங்கை அரசியலில் எம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றை எல்லாம், இந்தத் தனி அடையாளத்தின் மூலமே செய்ய முடிந்திருக்கிறது. இது, எம்மை முஸ்லிம் இனம் என அழைப்பதன் மூலமே சாத்தியம் ஆகியிருக்கிறது" என்பதாக இலங்கை முஸ்லிம்கள் சொல்லும் காரணத்தை தமிழக இஸ்லாமியர் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு கொள்கைகள், கண்ணோட்டங்கள், வழிபாட்டு முறைகள் (தரீகா வழிபாடு) என இரு தேசத்து இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையில் மாறுபாடுகள் காணப்பட்டாலும், அன்பு, நட்பு, விருந்தோம்பலில் இரு சமூகங்களும் ஒன்றிணைகிறார்கள்.
படத்தில் குல்லாய் வெள்ளை சாரத்துடன் காணப்படுபவர்
கீழக்கரை வர்த்தகரும் சமூக சேவையாளருமான ரிபாய் காக்கா,
தர்ஹாக்களின் நம்பிக்கையாளரான இவர் உபசரிப்பதில் கிங்.
விருந்தோம்பலில் கிழக்கு மாகாணத்து இஸ்லாமியர் பெயர் பெற்றவர்கள் என்பது பிரசித்தமானது. அது போலவேதான் தமிழக இஸ்லாமிய சமூகத்தினரும். ஆனால் எந்த நாடானாலும் சரி, ஒருவரைக் கண்டதும் கேட்கப்படும் முதல் கேள்வி, சாப்பிட்டீர்களா? டீ குடிப்போமா? என்பதாகவே இருக்கும். உணவுக்கும் உணவைப் பகிர்வதிலும் முக்கியத்துவம் காட்டுவது இச்சமூகத்தின் இயல்பு. சில சமயம, ஓவராகவே உபசரித்து தப்பித்தால் போதும் என்று விழி பிதுங்கும் நிலைக்கும் நம்மை ஆளாக்கி விடுவதும் உண்டு. அசைவ சமையல் என்றால் இஸ்லாமிய முறை சமையல்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அராபிய, துருக்கிய, இந்தோனேசிய நளபாகங்களை விடுத்து, தென்னிந்திய, வட இந்திய உணவுகளை எடுத்துக் கொண்டாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட ஐட்டங்கள் உள்ளன, ருசி பார்ப்பதற்கு. சாதாரண இலங்கை வாசிக்குத் தெரிந்தது எல்லாம் பிரியாணி, வட்டிலப்பம் மட்டுமே!

கும்பகோணத்து மாநாட்டுக்கு செல்கையில், 'இந்த உபசரிப்பில் இருந்து தப்பிப் பிழைப்பது எப்படி' என்று யோசிக்க வேண்டியிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் ஏர்வாடி, நாகபட்டினம், காயல்பட்டினம் என்று சுற்றி வந்த போது முன் பின் பார்த்தறியாத, பெயர் தெரியாத ஆனால் படுசுவையான வகை வகையான உணவுகளை ருசி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. காயலின் விஸ்தாரமான வீட்டுக் கூடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கையில் காயல் ஸ்பெஷல் பிரியானி, விசேமாக சமைக்கப்பட்ட கோழி, ஆட்டு மாமிச வகைகள், பெரிய அளவிலான இடியப்பம் (மூன்று சாப்பிட்டாலேயே போதும்!), பாலப்பம், சப்பாத்தி, பராட்டா, பெயர் தெரியாத பல்வகை குழம்புகள் என உணவு ஊர்வலம் வந்து கொண்டேயிருக்க... இறுதியாக வெண்நிறமான வட்டிலப்பத்தையும் (இந்த பக்குவம் இங்கே காணக்கிடைக்காதது) மொத்தமான கோழிக்கூடு வாழைப்பழத்தையும் இறக்கிவிட்டு சிரமத்துடன் எழும்பி நிற்கும்போது உப்பிய வயிறு தாங்காமல் கால்கள் தடுமாறும். ஆனால் மனம் சோம்பிப் போகும். ஏன் தெரியுமா?

உபசரிப்பதற்கு இப்படி எல்லாம் மெனக்கெடுகிறார்களே, ஏன் இந்த அளவுக்கு உபசரிக்க எங்களால் முடியவில்லை? அல்லது மெனக்கெட முடிவதில்லை? என்று எழும் சிந்தனைதான் இம்மனச் சோர்வுக்குக் காரணம். இம்முறையும் குறைவற்ற, நிறைவான உபசரிப்பை நான் முற்றாக கும்பகோணத்தில் அனுபவித்தேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment