Thursday, July 10, 2014

இருள் உலகக் கதைகள் 01

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை


 கேட்டு எழுதுபவர் - மணி ஸ்ரீகாந்தன்

'ராமசாமியின் உடலில் குடிபுகுந்த ஆவியின் நோக்கம், ராமசாமியின் மனைவியின் உயிரைக் குடிப்பதே. ராமசாமி ஒரு சமயம் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டதாலும் பின்னர் அவளை மறந்து விட்டு இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டதாலும் அதற்குப் பழி தீர்க்கும் வகையில் ராமசாமியின் உடலில் புகுந்திருந்தது அந்த துஷ்ட ஆவி'

அன்றைக்கு வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி இருக்கும். அன்று அமாவாசை என்பதால் காரிருள் களுத்துறை புளத்சிங்கள பகுதியை விழுங்கிக் கொண்டிருந்தது. காடும், இறப்பர் மரங்களும் எனப் பகலிலேயே கருமை காட்டும் பகுதியை அமாவாசை ஆக்கிரமிக்கும் போது அமானுஷ்யம் தாண்டவமாடத் தொடங்கிவிடுவது வழமை.

சந்திக்கடையில் ஐந்து முட்டைகளை வாங்கிய ராமசாமி பீடியை பற்ற வைத்துக் கொண்டான். ஒரு தம் இழுத்து சுவாரசியமாக புகையை வளையமாக விட்டான். பின்னர் அங்கிருந்து மேட்டுலயம் நோக்கி நடக்கத் தொடங்கினான். ராமசாமிக்கு அந்த பாதை படு பரிச்சயமானது. அவனுக்கு அந்த மையிருட்டு ஒரு பொருட்டல்ல. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமே அவனுக்கு போதும். புக்கென தொண்டை வரை கிளம்பி வந்த நாட்டுச் சரக்கு மீண்டும் வயிற்றில் அடங்கியது. வீட்டுக்கு இன்னும் மூன்று மைல் நடக்க வேண்டும். அவன் நிதானமாக நடந்தான்.

ராமசாமிக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். அண்மையில்தான் அவனுக்கு திருமணம் நடந்தது. அவ்வப்போது அவள் முகம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.

அடி வயிற்றில் இருந்து தவளைகள் போடும் கர்ண கடூர கூப்பாடு சத்தத்தைத் தவிர அந்த பிரதேசத்தில் வேறு எந்த ஓசையும் இல்லை. தோட்ட சுடுகாட்டை நிதானமாகக் கடந்தான் ராமசாமி. சில விநாடிகளில் ஏதோ ஒரு வாடை வீசுவதை அவனது நாசி உணர்ந்தது. வெரலிக்காய் மர பூக்களின் மணமா என ராமசாமி மூச்சை இன்னும் ஆழமாக இழுத்து முகர்ந்தான். அது பச்சை முட்டையின் மணம்தான்! முட்டை மணம் எப்படி எனக் குழம்பிய அவன் கையில் வைத்திருந்த முட்டைப் பொட்டலத்தை தொட்டுப் பார்த்தான். அப்போது  மின்னல் தாக்கியது போல அவன் உணர்ந்தான். பொட்டலத்தில் இருந்த ஒரு முட்டை உடைந்து ஒழுகிக் கொண்டிருந்தது. எதிலும் மோதாமல் எப்படி முட்டை இப்படி உடைந்தது... என்ற கேள்வி ராமசாமிக்கு சந்தேகத்தை எழுப்ப குழம்பியவாறே வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டுக்குள் வியர்வையுடன் நுழைந்த அவன், மனைவியிடம் முட்டைகளைக் கொடுத்தான். அவன் கைகால் கழுவி வருவதற்குள் முட்டையைப் பொரித்து சோற்றில் வைத்து மேசையில் வைத்தாள் அவள். அதை ருசித்து சாப்பிட்டு விட்டு பாயில் சுருண்டான் ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியையே கிடுகிடுக்கச் செய்யும் வகையில் ஒரு அலறல் சப்தம் கேட்டது. அது ராமசாமியின் மனைவியின் குரல். பக்கத்து லயக் காம்பராக்களில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழும்பி ராமசாமியின் காம்பரா நோக்கி ஓடினார்கள். அதன் பின்னரேயே, ராமசாமி திடீரென தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்த விசயம் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்த ராமசாமி அப்பாவியாக, "எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் செய்யலை. இவள் கழுத்தை நான் நெரிப்பேனா?" என்று கூறி அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.

ஆனால் அதன் பின்னரும் அச்சம்பவம் அடிக்கடி அந்த வீட்டில் அரங்கேறத் தொடங்கியது. நடுச்சாமத்தில் ராமசாமி காணாமல் போய் விடுவதும் மறுநாள் வீடு வருவதுமாக இருந்தான். ஆனால் இவ்வாறு வித்தியாசமாக அவன் நடந்து கொள்வது பற்றி அவனுக்கு எந்த ஞாபகமும் இருக்கவில்லை.

எனவே ராமசாமியை ஏதோ பேயோ ஆவியோதான் பிடித்திருக்க வேண்டும் என அவன் மனைவி நினைத்தாள். மாந்திரிகர்களை வரவழைத்து பரிகாரம் தேடினாள். ஆனால் எல்லாம் சில நாட்களுக்குத்தான். மீண்டும் ராமசாமி உச்சாணிக் கொம்பில் ஏறினான். இதையடுத்து வீரசிங்கம் பூசாரியிடம் விவகாரம் வந்தது.

வீரசிங்கம் பூசாரி தன் உதவியாளர்களுடன் புளத்சிங்கள தோட்டத்துக்குச் சென்றார்.

ராமசாமி வீட்டு வாசற்படியை மிதித்ததுமே அந்த வீட்டில் ஏதோ ஒரு பலம்வாய்ந்த தீய சக்தியின் நடமாட்டம் இருப்பதை அவரது உள்ளுணர்வு புரிந்து கொண்டது. பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்த அவர் ராமசாமியை பிடித்தாட்டுவது யாருடைய ஆவி என்பதைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இறங்கினார். ஆனால் அது லேசுப்பட்ட காரியமாக இருக்கவில்லை. பேயோட்டும் பூஜையின் போது ராமசாமியை பீடித்திருக்கும் பேய் அவன் மேல் வருவதும் பின்னர் ஓடி விடுவதுமாகக் கண்ணாம்பூச்சி காட்டிக் கொண்டிருந்ததால் வீரசிங்கம் பூசாரிக்கு விஷயம் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருந்தது.

ஒரு சமயத்தில் ராமசாமி மேல் வந்த பேய் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பத்து வயது பையனைக் கூப்பிட்டது. ஆனால் பையனை அனுப்ப அவன் பெற்றோர் மறுக்கவே, "நீங்க பயப்படாமல் அவனை அனுப்புங்க... நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பூசாரி தைரியம் அளித்தார். பையன் ராமசாமிக்கு அருகே தயங்கித் தயங்கி வரவே, ராமசாமி பையனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டான். ராமசாமி தேம்பி அழ ஆரம்பித்தான். வீரசிங்கத்துக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு முடிச்சு அகப்பட்டிருக்கிறது என்பதும் அதை அவிழ்த்தால் மேலே போக முடியும் என்பதும் பூசாரிக்கு தெளிவாகப் புரிந்தது.

இந்தப் பையனுக்கும் ராமசாமிக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று அங்குள்ளவர்களிடம் பூசாரி கேட்டார். அங்குள்ளவர்களோ, ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க. அவன் பண்டாவின் பையன் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், ஒரு தகவலை போட்டு உடைத்தார்.

"சாமி, சில வருஷங்களுக்கு முன்னால் ராமசாமியும், பண்டாவும் நல்ல நண்பர்கள். ஒன்றாகத்தான் திரிவாங்க, குடிப்பாங்க. ஒரு நாள் பண்டாவோட மனைவியை ராமசாமி கூட்டிட்டு ஓடிப் போயிட்டான். அதுக்குப் பிறகு பண்டா முழு நேர குடிகாரனாகி செத்துப் போயிட்டான்" என்று பழைய கதையை கிண்டி எடுத்ததும் வீரசிங்கத்துக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ராமசாமி உடம்புக்குள் பண்டாவின் ஆவி இருப்பது உறுதியாகி விட்டது. பல தந்திரங்கள், வித்தைகளைப் பயன்படுத்தி பண்டாவின் ஆவியை ஒரு வழியாக மடக்கிப் பிடித்தார் வீரசிங்கம். ஆனாலும் பண்டாவின் ஆவியால் பேச முடியவில்லை. ஏனென்றால் பண்டா சாகும் போது பேச முடியாமல்தான் செத்திருக்கிறானாம்.
வீரசிங்கம் பூசாரி
உடனே பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி சோனக்காளியை கூப்பிட்டு அவனைப் பேச  வைக்கப் பணித்தார். அதன் பின்னரேயே தான் அவன் வாயைத் திறந்தான்.

"என்னைத் தனிமையில் தவிக்க விட்டுட்டு என்னோட மனைவியைக் கூட்டிட்டு போனது மட்டுமில்லாது பிறகு அவளையும் தவிக்க விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணியிருக்கிறான் இந்த ராமசாமி. அவனை நான் சும்மா விட மாட்டேன்! அவனோட மனைவியை கொல்லத்தான் அவன் உடம்பில் புகுந்திருக்கிறேன். அவளைக் கொல்லாமல் நான் போக மாட்டேன்" என்று ராமசாமி உடம்பில் இருந்த பண்டாவின் ஆவி ஆக்ரோஷத்துடன் கத்திக் கதறிச் சொன்னதைக் கேட்டு சுற்றி இருந்த ஊர்க்காரர்கள் அதிர்ந்தே போய்விட்டார்கள்!

பிறகு பண்டா சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டால் அது பண்டாவின் ஆவிதான் என்பதை ருசுப்படுத்தலாம் என அங்கிருந்தவர்கள் சொன்னதை பூசாரி ஏற்றுக் கொண்டார். பண்டாவின் ஆவியும் பேசத் தொடங்கியது.

பண்டா தன்னுடைய தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விசயத்தையும் லயத்தில் ஒரு வீட்டை எரித்ததையும் வீடுகளை உடைத்து திருடியதையும் ஆவி ஒப்புக் கொண்டது. கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

நடுச்சாமத்தில் காணாமல் போகும் ராமசாமி காலையில் திரும்பி வருவான் அல்லவா? அவன் இரவில் எங்கே சென்று வருகிறான்? பண்டாவின் மனைவி வீட்டுக்கு சென்று வருவதாக ஆவி ஒப்புக் கொண்டது.

இதெல்லாம் முடிய, பூசாரி அவனை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே பூசாரி அருள் வந்து ஆடத்தொட்கினார். ஒரு புதைகுழி மீது அமர்ந்தார். இதைப் பார்த்த பண்டாவின் ஆவிக்கு கோபம் வந்தது.

"நீ என் குழி மீதுதான் உட்கார்ந்திருக்கிறாய்" என்றது ஆவி. அப்போதுதான் அது பண்டாவின் புதைகுழி என்ற விஷயமே பூசாரிக்கு தெரியவந்தது. கடைசியாக பண்டாவின் ஆவி இன்னொரு அதிர்ச்சியான ஒரு உண்மையைக் கக்கியது. அந்த லயத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களை பலாத்காரப்படுத்தியிருக்கிறானாம் பண்டா. எங்கே அவன் அந்தப் பெண்களின் பெயர்களை சொல்லி பிரச்சினை ஆகிடக் கூடாதே என்பதற்காக பூசாரி ஆவியின் பேச்சை திசை திருப்ப வேண்டியதாயிற்று. பூசாரி அந்தப் பயங்கர ஆவியிடம், திரும்பிப் போ எனக் கட்டளையிட்டார்.

அப்போதுதான் ராமசாமியின் உடம்பில் மேலும் இரண்டு ஆவிகள் குடிகொண்டிருப்பது பூசாரிக்கு தெரியவந்தது. அது அவனோட நண்பனான சுரேஷ_ம் அவனுடைய கள்ளக்காதலி கண்ணாத்தாவும் என்பதை அறிந்த பூசாரி அந்த இரு துர் அவிகளையும் இலகுவாக விரட்டி விட்டு முடிவாக பண்டாவிடம் 'டீல்' பேசினார். அது ஒரு கெட்ட ஆவி என்பதால், தான் ராமசாமியின் உடலை விட்டு போவதாக இருந்தால் அதற்குப் பதிலாக தான் ருசிப்பதற்கு ஒரு பெண் காணிக்கையாக வேண்டும் என்று நிபந்தனை போட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போனார் வீரசிங்கம் பூசாரி. அவரது வாழ்க்கையில் எந்தவொரு பேயோ ஆவியோ காணிக்கையாக பெண்ணைக் கேட்டதே கிடையாது. தான் மிகக் கொடூரமான ஒரு துர் ஆவியுடன் மோதிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் கொஞ்சம் பிசகினாலும் அது தன்னையும் தாக்கி விடும் என்பதையும் பூசாரி உணர்ந்து கொண்டார்.

"அடேய்! உன்னை வெளியே கொண்டு வந்த எனக்கு உன்னை அனுப்பி வைக்கிற வழியும் தெரியும்டா!" என்று கர்ஜித்த பூசாரி, கொத்தாக அவன் தலைமயிரைப் பிடித்து அறுத்தெறிந்தார். பண்டாவின் ஆவியை இருப்பத்தொரு ஊசிகளில் ஏற்றி அவற்றை தன் உள்ளங்கையில் குத்திக் கொண்டார். உடனே ராமசாமியின் உடம்பில் இருந்த பண்டாவின் துஷ்ட ஆவி கதறிக் கொண்டு ஓடிப்போயிற்று.

இப்போது ராமசாமியும் அவன் மனைவி பிள்ளைகளும் ரொம்ப சந்தோசமா குடும்பம் நடத்துவதாகக் கேள்விப்பட்டேன் என்றார். இந்த உண்மைக் கதையைக் கூறிய வீரசிங்கம் பூசாரி.

No comments:

Post a Comment