Tuesday, July 29, 2014

ராஜகுரு சேனாதிபதியின் ஞாபக வீதியில்….

"ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...''

மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை வானொலித் துறையில் மறக்க முடியாத பெயர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். 1960முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். வானொலி மீதுள்ள பற்றின் காரணமாகவே வானொலி அறிவிப்பாளரானதாகக் கூறும்இவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். தன் சேவைக் காலத்தில் இவர் ராஜகுருவாகவே நடந்து கொண்டார் என்றால் மிகையல்ல. இலங்கை வானொலி பெற்றெடுத்த வலம்புரிச் சங்கு இவர். சிலாபத்தில் தனியாக வாழ்ந்து வரும் இவரின் வாழ்க்கை பயணத்தில் சில பகுதிகளை நமக்காக அவரின் நினைவலைகளிலிருந்து ஒலிபரப்புகிறார்.

‘என் தங்கச்சி பெயர் நோனம்மா. பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கை அதாவது சிவாஜி, சாவித்திரி மாதிரி தான் நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். என் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் தங்கையை அழைத்துச் செல்வேன். ஒரு நாள் என் அம்மாவை என் தங்கை திட்டினாள். நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. அப்போது என் அம்மா, என்ன உன் தங்கச்சி திட்டுறத வேடிக்கை பார்க்கிறியா?
என்றார் என்னிடம். உடனே எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என் தங்கையை என் கோபம் தீருமட்டும் அடித்தேன். பாவம் என் தங்கை! துடித்துப் போய்விட்டாள். அந்த சம்பவத்திற்குப் பின் அவள் என்னோடு பேசுவதில்லை. நானும் கதைப்பதில்லை. வீட்டில் அவள் தான் சமையல் செய்வாள். சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு நான் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் கதவு நிறையில் சாய்ந்து கொண்டிருப்பாள். அவள் அப்படி நின்றால் அவள் என்னை சாப்பிட கூப்பிடுகிறாள் என்று அர்த்தம். என் தங்கையை நான் அப்படி அடித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டேன்.

 என் தங்கையை அடித்ததை எண்ணி நான் என் மனசுக்குள் அழுத நாட்கள் அனேகம். பிறகு என் தங்கைக்கு பிடித்தவனையே அவளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். எல்லாமே பாசமலர் படத்தில் வருவது போல.... சில காலங்களுக்கு பிறகு என் தங்கையின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கிளம்ப ஆரம்பித்தன.

துரதிஷ்ட வசமாக அவள் இறந்துவிட்டாள். என் தங்கையின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றும் காலையில் அவள் படத்துக்கு முன்பாகத்தான் கண் விழிக்கிறேன்.” என்று தனது பாசத்துக்குரிய தங்கையின் நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்ட கணகரட்னத்திடம் அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.
“நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.
 ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கணகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.
பிறகு நான் அறிவிப்பாளராக ரேடியோ சிலோனுக்கு பணியாற்ற வந்தபோது, அங்கே மயில்வாகனம் இருந்தார். அவர் என்னை சிலாபக்காரர், கரையர், மீன்பிடிக் கிராமத்தான் என்பதாக மதிப்பிட்டு அப்படியே வெளியே சொல்லியும் வந்தார். ரேடியோ சிலோனிலும் அப்படித்தான் ஏனையோரிடத்தில் அறிமுகம் செய்தும் வந்தார்.

“இவர் ஒரு கரையர் பையன்” என்று சொல்வது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உண்மையில் நான் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது மயில்வாகனத்திற்கு தெரியாது. இவரது வாயை எப்படி மூடுவது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிறகு தான் என் பெயருக்கு முன்னால் ‘ராஜகுரு சேனாதிபதி என்பதை சேர்த்துக்கொண்டேன்” என்று தமது ஊரையும், பெயரையும் பற்றி விபரித்த கணகரட்னத்திடம் முதல் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. என் அம்மாதான் என்னை அங்கே அழைத்துச் சென்றாள். அங்கே நான் நாலாவது வரை கல்விக் கற்றேன்.

எனக்கு அகரம் கற்பித்தவர் யார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் பாக்கியநாதன், திருமதி பாக்கியநாதன் ஆகியோர் அங்கே படிப்பித்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்மீது நல்ல பிரியம். நான் அரிவரி படித்த அந்தக் கட்டடத்தை இடித்து விட்டு இப்போது சமுர்த்தி நிலையத்தை அங்கே அமைத்திருக்கிறார்கள்.


அதற்குப் பிறகு சென் மேரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே எஸ். எஸ். சி. வரைப் படித்தேன். அங்கே என்னோடு ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த கந்தசாமி, மெளலானா, அபுல் ஹசன், டக்ளஸ் ஆகியோரை இன்றும் நினைக்கிறேன்” என்றவரிடம், பாடசாலை நாட்களில் நாடகங்கள் நடித்திருக்கியர்களா? என்று கேட்டோம்.
“எனக்கு சின்ன வயசிலேயே கிரிக்கெட் விளையாடுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். ஐந்தாவது படிக்கும்போது ‘அமணனும் குமணனும்’ என்ற நாடகத்தில் புலவர் வேடத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு நான் நாடங்கள் நடிக்கவில்லை.”

வானொலி பிரவேசம் எப்படி அமைந்தது?
   
“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி வீட்டை விட்டு வெளியே போ என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

 அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”
நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்குறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.
கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி,தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”

மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம், குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய்வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.

Friday, July 25, 2014

சினிமானந்தா பதில்கள் -15

சிம்பு, நயன் மீண்டும் நெருக்கமாகிவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே? உண்மையா?
 ஆர்.சுதாகரன், வவுனியா.

இளம் வயதினர், துடிப்பு மிகுந்தவர்கள்,
நல்ல நண்பர்கள், மனமார்ந்த காதலர்கள்
சக நடிகர்கள், கிசுகிசுவுக்கு ஏற்றவர்கள்
இருவரும் நெருக்கமாக இல்லாவிட்டால்தான் தப்பு
யூத்பவர்..... சேர்ந்து இனிக்கும்
இல்லை பிரிந்து கசக்கும்.....

கேரள நடிகைகள் செல்லப் பிராணியாக யானை வளர்க்கிறார்களாமே?
எஸ்.எஸ்.அஸ்வினி, இரத்தினபுரி.

கேரளாவில் மரம், செடி, கொடிகள், நிறையவே உள்ளன. அதனால் கேரள நடிகைகள் யானை வளர்க்கிறார்கள்.
தமிழ் நாட்டில் தண்ணீர் இல்லாததால் நெல் வளர்ப்பதே சிரமமாக உள்ளது. அதனால்தான் தமிழ் நாட்டில் நடிகைகள் நாய் வளர்க்கிறார்கள்.
திருமணம் முடித்த பின் எல்லா நடிகைகளும்
(மார்க்கெட் போனபின்) குழந்தை வளர்ப்பார்கள்.

ஜோ.. மீண்டும் படம் நடிக்கப் போகிறாராமே?
எஸ்.பவித்திரா, பொகவந்தலாவ

ஜோ... மட்டுமில்லை தியாவும் நடிக்குதாம்.
ஆனால் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை.
இயக்குனர் பாண்டிராஜ் இப்போதுதான் ஜோவுக்கு கதை தேடுகிறார்.

திருமணத்துக்கு பிறகு அமலா பால் நடிப்பாரா?
சஸ்னா, காத்தாக்குடி.

நடிக்கிறேன் என்கிறார் அமலா.
வேண்டாம் என்கின்றனர் விஜய் குடும்பத்தினர்.
காலம் பதில் சொல்லும்.

லக்ஷ்மி மேனன் - விஷால் காதல் உண்மையா?
ஜெ.காஞ்சனா, ஒஸ்போர்ன்

நல்லா ஏமாந்தீக போங்க! விஷால் நடிக்கும் ஒவ்வொரு படத்திலயும் இப்படித்தான் காதல் வரும். மலைக்கோட்டையில் பிரியாமணி, சபதத்தில் நயன்தாரா, பாண்டி நாடு படத்தில் லக்ஷ்மி மேனன் அதேபோல் நான்
சிகப்பு மனிதனிலும் லக்ஷி. மனிதனில் உதட்டு முத்தம் வேறு. படத்தை ஒட்டுவதற்காக செய்யப்பட்ட'ஜிகுபுகு' இதில் கொஞ்சம் மீறிவிட்டது. அதுதான் இந்த கிசு கிசு பிறக்க காரணமாகியது
சினிமாவில் இதெல்லாம் சகஜம்

அடுத்த சுப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்கிறார்களே?
விஜய் ரசிகை கௌசல்யா, மஸ்கெலியா

குமுதம் பத்திரிகையின் கணிப்பு அது! ஆனந்த விகடன் சினிமா எக்ஸ்பிரஸ் சுப்பர் ஸ்டார்கள் வேறு யாரோ யாரோவாம்!
வானவில்லை பொறுத்தவரை
ரஜனிதான் எப்போதும் சுப்பர்
மற்றோர் அப்பப்போ சுப்பர்


நடிகைகளின் திருமணங்கள் ஏன் நிலைப்பதில்லை?
ஆர். விஜிதா, கொக்கட்டிச் சோலை

விஷால் காதலைப்பற்றி மேலே சொன்னோமே. அதுபோலத்தான் இதுவும் ஒப்பந்த திருமணங்கள் என்று இவற்றை சொல்லலாம். மலையாள திரையுலகில் ஒரு நடிகர் விவாகரத்து செய்த நடிகையை மற்றொரு நடிகர் காத்திருந்து கரம் பிடிப்பது சாதாரணமாகிவிட்டது.
வீட்டில் இருக்கும்போது அவர்
வெளியே நடிக்கும் போது அவரவர்
பார்ட்டியில் கூடும்போது எவரெவர்
நடிகையின் வாழ்க்கை இது நீர் பாரீர்

Thursday, July 10, 2014

இருள் உலகக் கதைகள் 01

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை


 கேட்டு எழுதுபவர் - மணி ஸ்ரீகாந்தன்

'ராமசாமியின் உடலில் குடிபுகுந்த ஆவியின் நோக்கம், ராமசாமியின் மனைவியின் உயிரைக் குடிப்பதே. ராமசாமி ஒரு சமயம் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டதாலும் பின்னர் அவளை மறந்து விட்டு இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டதாலும் அதற்குப் பழி தீர்க்கும் வகையில் ராமசாமியின் உடலில் புகுந்திருந்தது அந்த துஷ்ட ஆவி'

அன்றைக்கு வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி இருக்கும். அன்று அமாவாசை என்பதால் காரிருள் களுத்துறை புளத்சிங்கள பகுதியை விழுங்கிக் கொண்டிருந்தது. காடும், இறப்பர் மரங்களும் எனப் பகலிலேயே கருமை காட்டும் பகுதியை அமாவாசை ஆக்கிரமிக்கும் போது அமானுஷ்யம் தாண்டவமாடத் தொடங்கிவிடுவது வழமை.

சந்திக்கடையில் ஐந்து முட்டைகளை வாங்கிய ராமசாமி பீடியை பற்ற வைத்துக் கொண்டான். ஒரு தம் இழுத்து சுவாரசியமாக புகையை வளையமாக விட்டான். பின்னர் அங்கிருந்து மேட்டுலயம் நோக்கி நடக்கத் தொடங்கினான். ராமசாமிக்கு அந்த பாதை படு பரிச்சயமானது. அவனுக்கு அந்த மையிருட்டு ஒரு பொருட்டல்ல. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமே அவனுக்கு போதும். புக்கென தொண்டை வரை கிளம்பி வந்த நாட்டுச் சரக்கு மீண்டும் வயிற்றில் அடங்கியது. வீட்டுக்கு இன்னும் மூன்று மைல் நடக்க வேண்டும். அவன் நிதானமாக நடந்தான்.

ராமசாமிக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். அண்மையில்தான் அவனுக்கு திருமணம் நடந்தது. அவ்வப்போது அவள் முகம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.

அடி வயிற்றில் இருந்து தவளைகள் போடும் கர்ண கடூர கூப்பாடு சத்தத்தைத் தவிர அந்த பிரதேசத்தில் வேறு எந்த ஓசையும் இல்லை. தோட்ட சுடுகாட்டை நிதானமாகக் கடந்தான் ராமசாமி. சில விநாடிகளில் ஏதோ ஒரு வாடை வீசுவதை அவனது நாசி உணர்ந்தது. வெரலிக்காய் மர பூக்களின் மணமா என ராமசாமி மூச்சை இன்னும் ஆழமாக இழுத்து முகர்ந்தான். அது பச்சை முட்டையின் மணம்தான்! முட்டை மணம் எப்படி எனக் குழம்பிய அவன் கையில் வைத்திருந்த முட்டைப் பொட்டலத்தை தொட்டுப் பார்த்தான். அப்போது  மின்னல் தாக்கியது போல அவன் உணர்ந்தான். பொட்டலத்தில் இருந்த ஒரு முட்டை உடைந்து ஒழுகிக் கொண்டிருந்தது. எதிலும் மோதாமல் எப்படி முட்டை இப்படி உடைந்தது... என்ற கேள்வி ராமசாமிக்கு சந்தேகத்தை எழுப்ப குழம்பியவாறே வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டுக்குள் வியர்வையுடன் நுழைந்த அவன், மனைவியிடம் முட்டைகளைக் கொடுத்தான். அவன் கைகால் கழுவி வருவதற்குள் முட்டையைப் பொரித்து சோற்றில் வைத்து மேசையில் வைத்தாள் அவள். அதை ருசித்து சாப்பிட்டு விட்டு பாயில் சுருண்டான் ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியையே கிடுகிடுக்கச் செய்யும் வகையில் ஒரு அலறல் சப்தம் கேட்டது. அது ராமசாமியின் மனைவியின் குரல். பக்கத்து லயக் காம்பராக்களில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழும்பி ராமசாமியின் காம்பரா நோக்கி ஓடினார்கள். அதன் பின்னரேயே, ராமசாமி திடீரென தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்த விசயம் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்த ராமசாமி அப்பாவியாக, "எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் செய்யலை. இவள் கழுத்தை நான் நெரிப்பேனா?" என்று கூறி அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.

ஆனால் அதன் பின்னரும் அச்சம்பவம் அடிக்கடி அந்த வீட்டில் அரங்கேறத் தொடங்கியது. நடுச்சாமத்தில் ராமசாமி காணாமல் போய் விடுவதும் மறுநாள் வீடு வருவதுமாக இருந்தான். ஆனால் இவ்வாறு வித்தியாசமாக அவன் நடந்து கொள்வது பற்றி அவனுக்கு எந்த ஞாபகமும் இருக்கவில்லை.

எனவே ராமசாமியை ஏதோ பேயோ ஆவியோதான் பிடித்திருக்க வேண்டும் என அவன் மனைவி நினைத்தாள். மாந்திரிகர்களை வரவழைத்து பரிகாரம் தேடினாள். ஆனால் எல்லாம் சில நாட்களுக்குத்தான். மீண்டும் ராமசாமி உச்சாணிக் கொம்பில் ஏறினான். இதையடுத்து வீரசிங்கம் பூசாரியிடம் விவகாரம் வந்தது.

வீரசிங்கம் பூசாரி தன் உதவியாளர்களுடன் புளத்சிங்கள தோட்டத்துக்குச் சென்றார்.

ராமசாமி வீட்டு வாசற்படியை மிதித்ததுமே அந்த வீட்டில் ஏதோ ஒரு பலம்வாய்ந்த தீய சக்தியின் நடமாட்டம் இருப்பதை அவரது உள்ளுணர்வு புரிந்து கொண்டது. பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்த அவர் ராமசாமியை பிடித்தாட்டுவது யாருடைய ஆவி என்பதைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இறங்கினார். ஆனால் அது லேசுப்பட்ட காரியமாக இருக்கவில்லை. பேயோட்டும் பூஜையின் போது ராமசாமியை பீடித்திருக்கும் பேய் அவன் மேல் வருவதும் பின்னர் ஓடி விடுவதுமாகக் கண்ணாம்பூச்சி காட்டிக் கொண்டிருந்ததால் வீரசிங்கம் பூசாரிக்கு விஷயம் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருந்தது.

ஒரு சமயத்தில் ராமசாமி மேல் வந்த பேய் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பத்து வயது பையனைக் கூப்பிட்டது. ஆனால் பையனை அனுப்ப அவன் பெற்றோர் மறுக்கவே, "நீங்க பயப்படாமல் அவனை அனுப்புங்க... நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பூசாரி தைரியம் அளித்தார். பையன் ராமசாமிக்கு அருகே தயங்கித் தயங்கி வரவே, ராமசாமி பையனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டான். ராமசாமி தேம்பி அழ ஆரம்பித்தான். வீரசிங்கத்துக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு முடிச்சு அகப்பட்டிருக்கிறது என்பதும் அதை அவிழ்த்தால் மேலே போக முடியும் என்பதும் பூசாரிக்கு தெளிவாகப் புரிந்தது.

இந்தப் பையனுக்கும் ராமசாமிக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று அங்குள்ளவர்களிடம் பூசாரி கேட்டார். அங்குள்ளவர்களோ, ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க. அவன் பண்டாவின் பையன் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், ஒரு தகவலை போட்டு உடைத்தார்.

"சாமி, சில வருஷங்களுக்கு முன்னால் ராமசாமியும், பண்டாவும் நல்ல நண்பர்கள். ஒன்றாகத்தான் திரிவாங்க, குடிப்பாங்க. ஒரு நாள் பண்டாவோட மனைவியை ராமசாமி கூட்டிட்டு ஓடிப் போயிட்டான். அதுக்குப் பிறகு பண்டா முழு நேர குடிகாரனாகி செத்துப் போயிட்டான்" என்று பழைய கதையை கிண்டி எடுத்ததும் வீரசிங்கத்துக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ராமசாமி உடம்புக்குள் பண்டாவின் ஆவி இருப்பது உறுதியாகி விட்டது. பல தந்திரங்கள், வித்தைகளைப் பயன்படுத்தி பண்டாவின் ஆவியை ஒரு வழியாக மடக்கிப் பிடித்தார் வீரசிங்கம். ஆனாலும் பண்டாவின் ஆவியால் பேச முடியவில்லை. ஏனென்றால் பண்டா சாகும் போது பேச முடியாமல்தான் செத்திருக்கிறானாம்.
வீரசிங்கம் பூசாரி
உடனே பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி சோனக்காளியை கூப்பிட்டு அவனைப் பேச  வைக்கப் பணித்தார். அதன் பின்னரேயே தான் அவன் வாயைத் திறந்தான்.

"என்னைத் தனிமையில் தவிக்க விட்டுட்டு என்னோட மனைவியைக் கூட்டிட்டு போனது மட்டுமில்லாது பிறகு அவளையும் தவிக்க விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணியிருக்கிறான் இந்த ராமசாமி. அவனை நான் சும்மா விட மாட்டேன்! அவனோட மனைவியை கொல்லத்தான் அவன் உடம்பில் புகுந்திருக்கிறேன். அவளைக் கொல்லாமல் நான் போக மாட்டேன்" என்று ராமசாமி உடம்பில் இருந்த பண்டாவின் ஆவி ஆக்ரோஷத்துடன் கத்திக் கதறிச் சொன்னதைக் கேட்டு சுற்றி இருந்த ஊர்க்காரர்கள் அதிர்ந்தே போய்விட்டார்கள்!

பிறகு பண்டா சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டால் அது பண்டாவின் ஆவிதான் என்பதை ருசுப்படுத்தலாம் என அங்கிருந்தவர்கள் சொன்னதை பூசாரி ஏற்றுக் கொண்டார். பண்டாவின் ஆவியும் பேசத் தொடங்கியது.

பண்டா தன்னுடைய தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விசயத்தையும் லயத்தில் ஒரு வீட்டை எரித்ததையும் வீடுகளை உடைத்து திருடியதையும் ஆவி ஒப்புக் கொண்டது. கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

நடுச்சாமத்தில் காணாமல் போகும் ராமசாமி காலையில் திரும்பி வருவான் அல்லவா? அவன் இரவில் எங்கே சென்று வருகிறான்? பண்டாவின் மனைவி வீட்டுக்கு சென்று வருவதாக ஆவி ஒப்புக் கொண்டது.

இதெல்லாம் முடிய, பூசாரி அவனை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே பூசாரி அருள் வந்து ஆடத்தொட்கினார். ஒரு புதைகுழி மீது அமர்ந்தார். இதைப் பார்த்த பண்டாவின் ஆவிக்கு கோபம் வந்தது.

"நீ என் குழி மீதுதான் உட்கார்ந்திருக்கிறாய்" என்றது ஆவி. அப்போதுதான் அது பண்டாவின் புதைகுழி என்ற விஷயமே பூசாரிக்கு தெரியவந்தது. கடைசியாக பண்டாவின் ஆவி இன்னொரு அதிர்ச்சியான ஒரு உண்மையைக் கக்கியது. அந்த லயத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களை பலாத்காரப்படுத்தியிருக்கிறானாம் பண்டா. எங்கே அவன் அந்தப் பெண்களின் பெயர்களை சொல்லி பிரச்சினை ஆகிடக் கூடாதே என்பதற்காக பூசாரி ஆவியின் பேச்சை திசை திருப்ப வேண்டியதாயிற்று. பூசாரி அந்தப் பயங்கர ஆவியிடம், திரும்பிப் போ எனக் கட்டளையிட்டார்.

அப்போதுதான் ராமசாமியின் உடம்பில் மேலும் இரண்டு ஆவிகள் குடிகொண்டிருப்பது பூசாரிக்கு தெரியவந்தது. அது அவனோட நண்பனான சுரேஷ_ம் அவனுடைய கள்ளக்காதலி கண்ணாத்தாவும் என்பதை அறிந்த பூசாரி அந்த இரு துர் அவிகளையும் இலகுவாக விரட்டி விட்டு முடிவாக பண்டாவிடம் 'டீல்' பேசினார். அது ஒரு கெட்ட ஆவி என்பதால், தான் ராமசாமியின் உடலை விட்டு போவதாக இருந்தால் அதற்குப் பதிலாக தான் ருசிப்பதற்கு ஒரு பெண் காணிக்கையாக வேண்டும் என்று நிபந்தனை போட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போனார் வீரசிங்கம் பூசாரி. அவரது வாழ்க்கையில் எந்தவொரு பேயோ ஆவியோ காணிக்கையாக பெண்ணைக் கேட்டதே கிடையாது. தான் மிகக் கொடூரமான ஒரு துர் ஆவியுடன் மோதிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் கொஞ்சம் பிசகினாலும் அது தன்னையும் தாக்கி விடும் என்பதையும் பூசாரி உணர்ந்து கொண்டார்.

"அடேய்! உன்னை வெளியே கொண்டு வந்த எனக்கு உன்னை அனுப்பி வைக்கிற வழியும் தெரியும்டா!" என்று கர்ஜித்த பூசாரி, கொத்தாக அவன் தலைமயிரைப் பிடித்து அறுத்தெறிந்தார். பண்டாவின் ஆவியை இருப்பத்தொரு ஊசிகளில் ஏற்றி அவற்றை தன் உள்ளங்கையில் குத்திக் கொண்டார். உடனே ராமசாமியின் உடம்பில் இருந்த பண்டாவின் துஷ்ட ஆவி கதறிக் கொண்டு ஓடிப்போயிற்று.

இப்போது ராமசாமியும் அவன் மனைவி பிள்ளைகளும் ரொம்ப சந்தோசமா குடும்பம் நடத்துவதாகக் கேள்விப்பட்டேன் என்றார். இந்த உண்மைக் கதையைக் கூறிய வீரசிங்கம் பூசாரி.

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 04

இஸ்லாமியர் தம்மைத் தமிழராகக் கருதுவதை நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம்

அருள் சத்தியநாதன் 

கும்பகோணம் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய எட்டாவது மாநாடு ஒரு மாநில மாநாடா, உலக மாநாடா, அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா, எங்களை எல்லாம் அழைக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்ததன் காரணம் என்ன? என்றெல்லாம் கேள்விகளும், சொல்லாடல்களும், கோபமும், காழ்ப்புணர்வும் இலங்கையில் வெளிப்பட்டன. எங்களை ஏன் அழைக்கவில்லை? என்பதே இச்சர்ச்சையின் மையப் பொருளாக இருந்தது என்பதை, தொடர்ச்சியாக இதை பத்திரிகைகளில் வாசித்தவர்களுக்கு விளங்கியிருக்கும். ஏனெனில் ஒரு எல்லையைத் தாண்டாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவதாகவே வாதங்கள் அமைந்திருந்தன.

சர்ச்சை எங்கே எழுப்பப்பட்டிருக்க வேண்டுமென்றால், அது மாநாடு முடிந்த பின்னரே, எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்கள், கருப்பொருள், ஏற்பாடுகள் மீதாக இருந்திருக்க வேண்டும். இது சாப்பாடு தயாராவதற்கு முன்னரேயெ சாப்பாட்டில் உப்பில்லை, உறைப்பில்லை, பண்டங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றம் கண்டு பிடிப்பதற்கு சமமானதாகவே இருந்தது. சாப்பாட்டை உண்ட பின்னர் அல்லவா நிறைகுறைகளைச் சொல்ல முடியும்!

இம்மாநாட்டை குறை சொன்னவர்கள் ஜனவரி மாதமே அதை ஆரம்பித்து விட்டார்கள். மாநாடு நடைபெற்றதோ பெப்ரவரியில். எனவே எங்களை ஏன் அழைக்கவில்லை என்ற குறுகிய கண்ணோட்டத்துக்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. எனினும் இம்மாநாடு இசை பற்றியது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மாநாட்டில் என்னென்ன நிகழ்ச்சிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை தமது தமிழகத் தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். எனவே இஸ்லாத்தில் இசை ஹராமா, ஹலாலா என்ற அந்த ஒரு விஷயத்தையே தமது எதிர்ப்பு ஆயுதமாக எடுத்திருக்கலாம். இப்படி ஒரு விஷயத்தை இலக்கிய மாநாட்டில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? விவாதிப்பதற்கும் ஆராய்வதற்கும் வேறு விஷயங்களே கிடையாதா? என்ற பொருளில் இவர்கள் தமது எதிர்ப்பை பத்திரிகை வாயிலாகச் சொல்லியிருந்தால் அது ஏற்புடையதாகவும், விமர்சனப் பார்சையாகவும், நாரதர் கலகம் நன்மைக்கே என்பதுபோல பயனான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் எதிர்ப்பின் மையப் புள்ளி, எங்களை அழைக்காமல் அவமானப்படுத்தி விட்டீர்களே! என்பதாக இருந்ததே காரணம்.

இசைக்கென ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடத்தப்படுவது அவசியமா? என்ற கேள்வி தமிழகத்தில், உண்மையிலேயே, எழுப்பப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்த காலத்திலிருந்தே இந்தியாவுக்கு இஸ்லாமிய இசை வந்து சேர்ந்துவிட்டது. பாரசீகத்தில் இருந்தும், மங்கோலியா, ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்தாகி விட்டது. இந்துஸ்தானி என்ற இசை மரபையே அது தோற்றுவித்தது. தமிழக இசை மரபும் இலக்கிய மரபும் வளங்குன்றிய காலத்தில் ஆபத்பாந்தவனாக நின்று இசையையும் இலக்கியத்தையும் காத்தது. எண்ணற்ற இஸ்லாமிய புலவர்களையும் இசை பாடிகளையும் உருவாக்கியது. வடநாட்டில் இஸ்லாமிய இசை மரபு மிகுந்த வளம் செறிந்ததாகவும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய ஒன்றாகவும் திகழ்கிறது.

இசை ஹலால்தான் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அடித்துச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும், இசை அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் இன்னமும் இஸ்லாமியர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதாவது கோடு எங்கே கிழிக்கப்பட வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவில்லை. இதனால்தான் தமிழகத்தில் இதற்கென ஒரு தெளிவுபடுத்தும் மாநாடு நடத்தப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு முக்கியத்துவம் மிக்க மாநாட்டைத்தான் கவிக்கோ கும்பகோணத்தில் நடத்திக் காட்டினார். இதன் அருமை புரியாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள், எங்களை ஏன் அழைக்கவில்லை என்ற சிறு வட்டத்துக்குள் இருந்தபடி குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.
மாநாட்டு உணவகத்தில்
 இலங்கையில் இருந்து தமிழகம் செல்லும் இஸ்லாமியர்கள் அங்கே ஒரு பிரச்சினையை சந்திப்பது வழக்கம். தமிழகத்தின் இஸ்லாமிய அமைப்புகளிடம் அவர்கள் தம்மை நாங்கள் முஸ்லிம் இனம் அல்லது இலங்கை இஸ்லாமியர் என்று அறிமுகம் செய்வார்கள். இந்த அறிமுகம் தமிழக இஸ்லாமியருக்கு புதுமையாகப்படும். "இலங்கை இஸ்லாமியர் என்ற ஒன்று இருக்கிறதா? நாங்கள் எம்மை அப்படி அழைப்பதில்லை. நாங்கள் எம்மைத் தமிழராகவே கருதுகிறோம். முதலில் இந்தியர். இரண்டாவது தமிழர், அதாவது இனத்தால், மூன்றாவதாக மதத்தால் நாங்கள் இஸ்லாமியர் என்றே எங்களை அடையாளப்படுத்துகிறோம். ஒரு அமெரிக்கரை, ஜப்பானியரை அல்லது கொரியரை எடுத்துக் கொண்டால் அவர் முதலில் தன்னை தன் நாட்டின் பிரஜையாக மட்டுமே அடையாளப்படுத்துவார். சமயத்தால் அல்ல" என்று அவர்கள் கூறுவது வழக்கம்.

இப்படி தமிழகத்து இஸ்லாமியர் கேட்கும் போது இலங்கை முஸ்லிம்களுக்கு தர்ம சங்கடமாகப் போய்விடும். நம்மவர்கள் தாம் ஏன் தம்மைத் தமிழர் என அழைக்காமல் இஸ்லாமியர் என அழைக்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

"எங்கள் நாட்டில் சிங்கள இனமே பெரும்பான்மை. இச்சிங்களவர்களில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள். தம்மை சிங்கள பௌத்தர்கள் என அழைப்பதில் அவர்கள் பெருமிதம் அடைவதோடு தாமே நாட்டின் ஆதிக் குடியினர் என்பதையும் அதன் வழியாக அடையாளப்படுத்த முயல்கின்றனர். இச்சிங்கள இனத்துக்கும் இங்கே வாழும் தமிழர்களுக்கும் இடையே இன ரீதியான பிரச்சினைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரு இனங்களுக்கு இடையிலான மோதலில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தமது உரிமைகளையும் நலன்களையும் இழந்து விடக்கூடாது என்ற கவலை இங்கே எழுகிறது. எனவே நாங்கள் எங்களைத் தனியாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதை, தனி அரசியல் ரீதியான அடையாளமாக முன் நிறுத்துகிறோம். இப்போது கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு அரசியலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இலங்கை அரசியலில் எம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றை எல்லாம், இந்தத் தனி அடையாளத்தின் மூலமே செய்ய முடிந்திருக்கிறது. இது, எம்மை முஸ்லிம் இனம் என அழைப்பதன் மூலமே சாத்தியம் ஆகியிருக்கிறது" என்பதாக இலங்கை முஸ்லிம்கள் சொல்லும் காரணத்தை தமிழக இஸ்லாமியர் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு கொள்கைகள், கண்ணோட்டங்கள், வழிபாட்டு முறைகள் (தரீகா வழிபாடு) என இரு தேசத்து இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையில் மாறுபாடுகள் காணப்பட்டாலும், அன்பு, நட்பு, விருந்தோம்பலில் இரு சமூகங்களும் ஒன்றிணைகிறார்கள்.
படத்தில் குல்லாய் வெள்ளை சாரத்துடன் காணப்படுபவர்
கீழக்கரை வர்த்தகரும் சமூக சேவையாளருமான ரிபாய் காக்கா,
தர்ஹாக்களின் நம்பிக்கையாளரான இவர் உபசரிப்பதில் கிங்.
விருந்தோம்பலில் கிழக்கு மாகாணத்து இஸ்லாமியர் பெயர் பெற்றவர்கள் என்பது பிரசித்தமானது. அது போலவேதான் தமிழக இஸ்லாமிய சமூகத்தினரும். ஆனால் எந்த நாடானாலும் சரி, ஒருவரைக் கண்டதும் கேட்கப்படும் முதல் கேள்வி, சாப்பிட்டீர்களா? டீ குடிப்போமா? என்பதாகவே இருக்கும். உணவுக்கும் உணவைப் பகிர்வதிலும் முக்கியத்துவம் காட்டுவது இச்சமூகத்தின் இயல்பு. சில சமயம, ஓவராகவே உபசரித்து தப்பித்தால் போதும் என்று விழி பிதுங்கும் நிலைக்கும் நம்மை ஆளாக்கி விடுவதும் உண்டு. அசைவ சமையல் என்றால் இஸ்லாமிய முறை சமையல்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அராபிய, துருக்கிய, இந்தோனேசிய நளபாகங்களை விடுத்து, தென்னிந்திய, வட இந்திய உணவுகளை எடுத்துக் கொண்டாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட ஐட்டங்கள் உள்ளன, ருசி பார்ப்பதற்கு. சாதாரண இலங்கை வாசிக்குத் தெரிந்தது எல்லாம் பிரியாணி, வட்டிலப்பம் மட்டுமே!

கும்பகோணத்து மாநாட்டுக்கு செல்கையில், 'இந்த உபசரிப்பில் இருந்து தப்பிப் பிழைப்பது எப்படி' என்று யோசிக்க வேண்டியிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் ஏர்வாடி, நாகபட்டினம், காயல்பட்டினம் என்று சுற்றி வந்த போது முன் பின் பார்த்தறியாத, பெயர் தெரியாத ஆனால் படுசுவையான வகை வகையான உணவுகளை ருசி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. காயலின் விஸ்தாரமான வீட்டுக் கூடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கையில் காயல் ஸ்பெஷல் பிரியானி, விசேமாக சமைக்கப்பட்ட கோழி, ஆட்டு மாமிச வகைகள், பெரிய அளவிலான இடியப்பம் (மூன்று சாப்பிட்டாலேயே போதும்!), பாலப்பம், சப்பாத்தி, பராட்டா, பெயர் தெரியாத பல்வகை குழம்புகள் என உணவு ஊர்வலம் வந்து கொண்டேயிருக்க... இறுதியாக வெண்நிறமான வட்டிலப்பத்தையும் (இந்த பக்குவம் இங்கே காணக்கிடைக்காதது) மொத்தமான கோழிக்கூடு வாழைப்பழத்தையும் இறக்கிவிட்டு சிரமத்துடன் எழும்பி நிற்கும்போது உப்பிய வயிறு தாங்காமல் கால்கள் தடுமாறும். ஆனால் மனம் சோம்பிப் போகும். ஏன் தெரியுமா?

உபசரிப்பதற்கு இப்படி எல்லாம் மெனக்கெடுகிறார்களே, ஏன் இந்த அளவுக்கு உபசரிக்க எங்களால் முடியவில்லை? அல்லது மெனக்கெட முடிவதில்லை? என்று எழும் சிந்தனைதான் இம்மனச் சோர்வுக்குக் காரணம். இம்முறையும் குறைவற்ற, நிறைவான உபசரிப்பை நான் முற்றாக கும்பகோணத்தில் அனுபவித்தேன்.

(தொடரும்)

face பக்கம்

Monday, July 7, 2014

சினிமானந்தா பதில்கள்-14

சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவரும் உண்மையில் திருமணம் செய்தவர்களா?

எஸ். எம். ஆராதனா
அவிசாவளை

'சரவணன் - மீனாட்சி|யை விடாமல் பார்த்தவர்களில் நானும் ஒருவன் (முதலாம் பாகம் மட்டும்). சரவணன் (செந்தில்), மீனாட்சி (ஸ்ரீஜா)
உண்மையான காதலர்கள், கணவன் - மனைவி போல் அத்தனை தத்ரூபம்.

செந்தில் (சரவணன்) உண்மையிலேயே ஸ்ரீஜாவை காதலித்தாராம். ஸ்ரீஜாவுக்கும் சம்மதம்தான். ஆனால் செந்தில் (தமிழகம்) ஸ்ரீஜா (கேரளம்) வெவ்வேறு ஜாதி. எனவே செந்திலுக்கு பெண்கொடுக்க ஸ்ரீஜாவின் பெற்றோர் மறுத்துவிட்டனராம்.

தல அஜித் அடுத்து என்ன படம் நடிக்கிறார்? அந்த படத்திலாவது வெள்ளை முடிக்கு 'டை' அடிப்பாரா?

அல்ஜிரா சுஜா, காத்தான்குடி

அஜித்தின் அடுத்த படம் 'சத்யா'. அஜித்துக்கு இதில் இரட்டை வேடம். ஒன்று நரை முடி, மற்றது டை முடி.

மன்னிக்கவும் சத்யா
சர்ச்சைக்குள்...
காரணம், அனுஷ்காவாம்

நடிகை நமீதா தமிழ் படம் ஏதாவது நடிக்கிறாரா?

எம். ஐ. எல். பசீதா
காத்தான்குடி

நமீதா படம் நடித்தாலே போதும். அதற்குள் ஏன் தமிழ்,
வேறு மொழி என்று பிரிக்கிறீர்கள்?

பா. ஜ. க. வில் சேர்ந்திருந்தால் இன்றைக்கு
நமீதா எம். பி!
கிடைத்த வாய்ப்பை கோட்டை
விட்டுவிட்டாரே!


'தெகிடி' படம் பார்த்தேன். படம் சூப்பர். அதில் நடித்த அசோக் செல்வன் பற்றி சொல்லுங்கள். 

ஷஸ்னா
வெளிமடை

'தெகிடி' எனக்கும் பிடித்தது. கிடைத்த பாத்திரத்தை அசோக் செல்வன் நிறைவாகச் செய்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தவர் அசோக் செல்வன். ஆனால் அவரது அமைதியான சுபாவத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட அமர்க்களங்களுக்கு மத்தியில் அவர் நிலையான ஒரு இடத்தைப் பிடிப்பது சந்தேகமே.


தன்னுடன் எப்போதும் 10, 12 பௌன்சர்களை (குண்டர்கள்) கூட்டி வந்து இசை விழாக்களில் ஆர்ப்பாட்ட அமர்க்களம் செய்தும், தமிழ் மொழிக்கே சிறப்புத் தரும் திருக்குறளை நையாண்டி செய்தும், தமிழர்கள் எவரும் பயத்தினால் வாய் திறக்க முடியாமல் அடாவடித்தனம் செய்யும் காலம் இது.

தமிழ் சினிமாவில் நிலையான இடம் பிடிக்க ஆர்ப்பாட்ட அமர்க்களத்துடன் கூடிய ஆளுமை மிக்க வில்லனாக, கதாநாயகர் மாறினால்தான் முடியும்.

'மதகதராஜா' இன்னும் ஏன் வெளிவரவில்லை?

சஜீவன்
கைதடி

'படத்துக்கு எம். ஜி. ஆர் (மதகதராஜாவின் சுருக்கம்)
என்று பெயர் வைத்ததும் ஒரு சிக்கல்தான்.

அம்மா யுகத்தில் இது சரியா?


ஹன்ஸிகாவுக்கு எப்போது திருமணம்?

சிப்னா
அட்டாளைச்சேனை - 7

பாப்பாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா விரும்பவில்லையே?

மைனருக்கு திருமணமா?
சட்டமே இடம் தராதே

நயன்தாரா தற்போது யாரை லவ் பண்ணுகிறார் என்று சொல்ல முடியுமா?

கார்த்திக்
இரத்தினபுரி

இப்போதைக்கு 'மீண்டும் சிம்பு'

 அப்போதைக்கு???

நமக்கெதற்கு வம்பு?

நஸ்ரியா இனி படம் நடிக்க முடியாதாமே?

கே. தனுஷன்
கிளிநொச்சி

ஏன் முடியாது? நடிக்குமாறு
பகத் பாஸில் சொல்லிவிட்டாரே

ஜெய்யுடன் மட்டும்
நடிக்கக்கூடாது என்று உத்தரவாம்!