Saturday, June 28, 2014

புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவியுடன் கொஞ்ச நேரம்....

"நல்ல புகைப்படத்துக்கு கெமரா முக்கியமில்லை; எடுப்பவரே முக்கியம்"


மணி  ஸ்ரீகாந்தன்

எம். ஜி. ஆரும், நம்பியாரும் கட்டிப்பிடித்து சண்டைபோடும் காட்சியாகட்டும். கமலும், கௌதமியும் இணைந்த முத்தக்காட்சியாகட்டும், அந்தக் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்து பெரிய பேனர்களில் நம் கண்களுக்கு விருந்தாகப் படைப்பது ஒரு கலை. அந்தப் படங்களை 'க்ளிக்' செய்ய கைதேர்ந்த சினிமா ஸ்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் பலர் தமிழ் சினிமா உலகில் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர்தான் ஸ்டில் ரவி. எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அவர் எடுத்த ஸ்டில்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
 தமிழகத்திலும் நம் நாட்டிலும் செய்திப் பத்திரிகைகளில் ரவியின் சினிமா ஸ்டில்கள்தான் இன்றைக்கும் கண்களுக்கு விருந்து. அவர் கெமராவில் கிளிக்கிய படங்கள் ஆயிரம் ஆயிரம்... ஆனால் இதுவரை ஒரு புகைப்படக் கண்காட்சியைக்கூட அவர் நடத்தியதில்லை.

"எனக்கு கண்காட்சி நடத்துவதில் ஆர்வம் இல்லை. ஆனால், இப்போது நடத்தலாம்னு நினைக்கிறேன். எனக்கு இதுவரை விருதுகள் எதுவும் கிடைக்கலை. ஆனால் அண்மையில் ஃபேஸ்புக் ஊடாக கிடைத்த தொடர்பில் பாண்டிச்சேரி குழந்தைகள் இலக்கிய வளர்ச்சிக் கழகம் என்னைப் பாராட்டி 'ராஜ ரவிவர்மா' விருது வழங்கி கௌரவித்தார்கள்" என்று புன்னகைக்கிறார் ரவி.
மனைவி தன் குழந்தையின் கை வழியே யாருக்கு
பரிசு வழங்குகிறார் தெரியுமா?குட்டிப் பயலாக இருக்கும்
நடிகர் சூர்யாவுக்குத்தான்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் ஒரு இனிய காலை வேளையில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இல்லம் முழுக்க பரவிக்கிடக்கும் போட்டோக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அவரிடம் கேள்விகள் கேட்டு பதிலை கறப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அவரு இப்போ ரொம்ப பிஸி.

"கொஞ்ச காலம் படம் இல்லாமத்தான் இருந்தேன். ஆனா, இப்போ கொஞ்சக் காலமா ஃபேஸ்புக்ல இருப்பதால் நிறைய ரசிகர்கள் எனக்குக் கிடைத்தாங்க. அவங்களின் உதவியால் இப்போ நிறைய பட வாய்ப்புகள் கிடைச்சிருக்கு.
திருமணத்தன்று கமல்,அவரின் முதல் மனைவி
வாணி கணபதியுடன்
ஃபேஸ்புக் மூலமாக கிடைக்கும் பாராட்டுக்கள்தான் என் மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு. மேலும் எனக்கு ஏதாவது கெமரா சம்மந்தமான பொருட்கள் தேவைன்னா ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் போட்டா போதும். அமெரிக்கா, லண்டன்ல உள்ள நண்பர்கள் வாங்கி அனுப்பிடுறாங்க. இந்த வசதி வேறு எங்கு கிடைக்கும்? பேஸ்புக் வேஸ்ட், அது கெட்ட விசயம்னு சொல்றாங்க, ஆனா எனக்கு அது அப்படி இல்லை. ஃபேஸ்புக் எனக்கு கடவுள் மாதிரி என்று அடித்துச் சொல்லும் ரவியின் முகத்தில் சந்தோசம் ப்ளாஷ் அடிக்கிறது.

"எங்கப்பா அந்தக் காலத்தில் ஒரு ஸ்டில் போட்டோ கிராபரா இருந்தார், ஆனாலும் எனக்கு புகைப்படக் கலைஞனா வர விருப்பம் இருந்தது கிடையாது. ஏனென்றால் அவரோட சில பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு போய் பார்த்திருக்கிறேன். அந்த சமயங்களில் எல்லாம் படத் தயாரிப்பாளர்கள் எங்கப்பா கிட்டே பணம் வாங்கி யுனிட்காரர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுக்கிறதைப் பார்த்திருக்கிறேன். அப்போதான் இது என்ன பிழைப்புடான்னு எனக்கு அந்த துறை மீது வெறுப்பு வந்தது. பிறகு எப்படி இந்த துறைக்குள் வந்தேன்னு பார்க்கிறீங்களா...." என்று படபடக்க பேசியவர் மேலும் தொடர்ந்தார்.
ரவி எடுத்த படங்களில் வி.ஐ.பி.படமாகக்
கருதப்படுவது, இந்தப் படம்தான்.
.டிஜிட்டல் கெமரா இல்லாத
காலத்தில் எடுத்த படம்.
"ராயப்பேட்டையில் உள்ள எங்கப்பா அலுவலக மாடியில்தான் போட்டோ கிராப்பர் சுபாசுந்தரத்தின் அலுவலகம் இருந்தது. அங்கே எல்லா பத்திரிகைக்காரர்களும் வருவாங்க. நானும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கே இருந்திருக்கிறேன். வந்தவங்களுக்கு சுபாசுந்தரம் மசால் வடையும், டீயும் வாங்கிக் கொடுப்பார். அது எனக்கும் கிடைக்கும். பிறகு அந்த மசால்வடை, டீக்காக நானும் தினமும் அந்த இடத்துக்கு போய்வரத் தொடங்கினேன். சுபா சுந்தரத்திடம் டீ, வடை சாப்பிட்ட நன்றி விசுவாசத்திற்காக படங்களை கழுவும் வேலையை நான் செய்து கொடுத்தேன்.

பிறகு என்னையறியாமலேயே டெவலப்பிங், பிரிண்டிங், போட்டோ கிராபி உள்ளிட்ட விசயங்களை அவரிடம் கற்றேன். அவரோடு படிப்பிடிப்புகளுக்கு உதவியாளராகவும் சென்றேன். எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.

இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.

அந்தப் போட்டோதான் நான் பெரிய ஹீரோ ஒருவரைக் க்ளிக் செய்த முதல் தருணம். ஆனால் நான் முதன் முதலில் கெமராவைத் தொட்டு க்ளிக் செய்த போட்டோ திருநீலகண்டர் படத்தில் வரும் நடராஜர் சிலைதான்" என்று தமது கடந்த கால ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் ஸ்டில் ரவி, நடிகர் மைக்மோகனின் நெருங்கிய நண்பர்.
ரவியின் திருமணத்தில் மோகன்தான் மாப்பிள்ளை தோழன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

ரவியின் மனைவியின் சகோதரி நடிகை சுமலதா முரட்டுக்காளை படத்தில் ரஜினியுடன் நடித்தவர். சுமலாதாவின் கணவர் அம்ரிஸ் கன்னட நடிகர். அவர் இப்போது அமைச்சராக இருக்கிறார். ரவியின் ஒரே மகள் ஸ்ருதி திருமணம் முடிந்து துபாயில் இருக்கிறாராம்.

"சுபா சுந்தரத்திடம் நான் வேலை செய்து கொண்டிருந்த போது அன்னக்கிளி கதாசிரியர் ஆர். செல்வராஜ் என்னைக் கேட்காமலேயே அவரின் காமதேனு படத்திற்கான அழைப்பிதழில் ஸ்டில் ரவி என்று என் பெயரைப் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்தப் படத்தில் இளையராஜாவின் அண்ணன் ஆர். டி. பாஸ்கர் கதாநாயகராக நடித்தார். ஆனா அந்தப் படம் இடையில் நின்று போனது. அதன் பிறகு நடிகர் சிவகுமாரின் சிபாரிசில் முதலிரவு படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியாவின் சிபாரிசில் பைரவி படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு புலி வாலைப் பிடித்த கதையாக இன்னும் இந்தத் தொழிலை விட முடியாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது" என்கிறார் ரவி.

ரவியின் நண்பர் 1995 இல் இவருக்காக நடித்துக் கொடுத்த படம் 'நான் உங்கள் ரசிகன்'. இதில் ராதிகா நாயகியாக நடிக்க படத்தை டைரக்டர் மனோபாலா இயக்கி இருந்தார். ரவியின் தயாரிப்பில் வெளியான ஒரே படம் இதுதான். அதன் ஓட்டம் சுமாராக இருந்ததால் படத்தயாரிப்பை ரவி கைவிட்டார்.

"கமலுடன் நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறேன். அவருக்கு என்மீது ஒரு மரியாதை இருக்கு. அவரை ஒரு நடிகராக மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த சில போட்டோக்களை என்னிடம் காட்டுவார். எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு வெறி வரும்... அவர் மாதிரியே நானும் போட்டோக்களை இன்னும் சிறப்பாக எடுப்பதற்கு தீர்மானிப்பேன்" என்று சொன்னவர், ரஜினி பற்றி இப்படிச் சொல்கிறார்.
              
"ரஜினி 'பைரவி' யிலதான் அன்டி ஹீரோவாக அறிமுகமானார். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை அவர் படங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவருடன் நல்ல பழக்கம் உண்டு. ஒருமுறை ரஜினியின் 'சிவா' படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது ரஜினியை ஸ்டில் எடுக்க நான் தயாரானேன். ரஜினியை ஆக்ஷன் பண்ண சொன்னதும் அவர் கடுப்பானார்.

'என்ன நினைச்சுட்டீங்க! ஒவ்வொரு ஷாட்டுக்கு பிறகும் ஸ்டில் எடுக்கணுமா?' என்று முகத்தை கடுப்பாக்கிச் சொன்னதும் எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நான் மறு நிமிடமே கேமராவை படார் என்று மூடி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். இனி இவர் படத்தில் வேலை செய்யக் கூடாதுன்னு தீர்மானித்தேன். ஆனால் ஏவிஎம்மின் பிரதான வாயிலை கடப்பதற்குள், ஓடோடி வந்த ரஜினியின் உதவியாளர், சார் உங்கள கூப்பிடுறாரு என்றார். நான் ரஜினி இருக்கும் இடம் நோக்கிப் போனேன்.

உதட்டில் சிகரெட்டோடு புகை விட்டபடி அமர்ந்திருந்த ரஜினி 'என்ன ரவி கோவிச்சுட்டீங்களா?' என்றார். ஆமாம், நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு நடிச்சு பெயர் வாங்கனும்னு ஆசைப்படுறீங்களோ அதே மாதிரிதான் நானும் கஷ்டப்பட்டு ஸ்டில் எடுத்து பெயர் வாங்கனும்னு நினைக்கிறேன்' என்று நான் சொல்ல, 'மன்னிச்சுடுங்க ரவி, எனக்கு உடம்புக்கு சரியில்ல... அதுதான் கொஞ்சம் கோபப்பட்டுடேன்' என்றார் பதிலுக்கு. ரஜினி சொன்னதும் நான் சமாதானம் ஆகிட்டேன். ஒரு பெரிய நடிகர் தன்னோட தப்பை புரிஞ்சுக்கிட்டு மன்னிப்பு கேட்பது சாதாரண விசயமா?" என்று ரஜினியை பாராட்டுகிறார் ரவி. இவர் இந்தக் கால நடிகர்கள் மீது கொஞ்சம் கடுப்பில தான் இருக்கிறார்.

"அந்தக் காலத்தில் ஒரு நடிகரை பார்ப்பது ரொம்பவும் சுலபம். ஆனால் இன்னைக்கு ஒரு நடிகனின் மெனேஜரைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம். பத்திரிகையாளர்களுக்கு மரியாதை இல்லை. நான் பணியாற்றிய அந்த நாட்களை நான் பொற்காலம் என்றுதான் சொல்வேன். இன்னைக்கு பெரிய படங்களில் வேலை செய்தால் அந்தப் புகைப் படங்களை பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அதிகாரம் கூட எங்களுக்கு இல்லை. அதனால் நான் சின்ன பட்ஜட் படங்களுக்குத்தான் இப்போது வேலை செய்கிறேன். அதைக்கூட நிறையப்பேரு, என்ன நீங்க போய் சின்னப் படங்களில் வேலை செய்றீங்கன்னு குறையா சொல்றாங்க. ஆனா நான் அந்தக் காலத்தில் வேலை செய்த சின்னப் படங்கள் தான் பிறகு பெரிய படங்களாக மாறின" என்று இந்தக்கால சினிமாவுக்கு ஒரு குட்டு வைத்தார் ரவி.
நன்றி: வண்ண வானவில்
ரவியின் புகைப்படங்கள்தான் அந்தக்கால குமுதம். விகடன் அட்டைகளை அலங்கரித்தன. ரவியின் ஸ்டில்களில், ஜீவா படத்துக்காக சில்க் ஸ்மிதாவை பல வித கோணங்களில் எடுத்ததும் தென்றல் படத்தில் நடிகை அபிலாஷாவின் குளியல் காட்சிகளும் ரவிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ஸ்டில்கள்.

"புகைப்படப் பிடிப்பாளராக வருவதற்கு அதை முறையாக படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. முறையா படிச்சி வாரவங்க அதை ஒழுங்கா செய்றதுமில்ல. புதுப்புது கிரியேட்டிங்தான் முக்கியம். அதற்காக விலை உயர்ந்த கெமராதான் வேணும் என்று கிடையாது. கெமரா முக்கியமில்லை. பின்னாடி இருக்கிற ஆளுதான் முக்கியம். செல்போனில் கூட ஒரு நல்ல போட்டோவை எடுத்திடலாம். படிப்படியா ரசனை வளர்வதுதான் முக்கியம்" என்று நமது புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து விடைபெற்றார் ரவி.

No comments:

Post a Comment