Sunday, May 18, 2014

ஏய், இந்தக் கட்டுரையை மிஸ் பண்ணிடாதிய....

"ஆங்கிலத் தமிழ் தான் டீவிக்கு எடுப்படும் என்கிறதை உடைச்சிருக்கோம்ல...."


இமான் அண்ணாச்சியுடன் ஒரு கலகல

மணி  ஸ்ரீகாந்தன்


'ஏய் மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவிய' என்ற நையாண்டி கலந்த நெல்லை தமிழில் 'குட்டிச்சுட்டி' நிகழ்ச்சியை அமர்க்களப்படுத்தி வருபவர் நமது இமான் அண்ணாச்சி.

பிரதி ஞாயிறு தோறும் சன் தொலைக்காட்சியின் வழியே உலகத்தமிழர்களின் இல்லங்களில் ஜம்மென்று அமர்ந்து கொண்டு சுட்டிக் குழந்தைகளை கலாய்க்கும் அண்ணாச்சி, கே. கே. நகர் சிவன் பார்க் பெஞ்சில் கம்முன்ணு உட்கார்ந்திருந்த போது வளைத்துப் பிடித்தோம். "என்னது இலங்கையில இருந்து வர்றீங்களா....? நம்ம புகழ் சிலோன் வரைக்கும் பரவிடுச்சா?" என்று கண்களில் ஆச்சர்யம் காட்டிய அண்ணாச்சி,
"முதல்ல இலங்கை முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு என்னோட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். மிக விரைவில் இலங்கைக்கு வந்து சுட்டிகளை பார்க்கணும்னு நினைக்கிறேன்"னு மகிழ்ச்சியோடு ஆரம்பித்தார் அண்ணாச்சி.

"இப்போ இருக்கிற குழந்தைகள் எப்படி?" என்று கேட்க,

"எனக்கு நாலு வயசுல தெரியாத விசயங்கள் எல்லாம் இப்போ உள்ள குழந்தைகளுக்கு தெரியுது. உன்னிப்பா அவதானிக்கிறாங்க, ரொம்ப அறிவு. போன வாரம் ஒரு சின்னப் பையன் கிட்ட 'தம்பி தீபாவளிக்கு என்ன செய்வாங்கன்ணு?' கேட்டேன் அதற்கு அவன், 'பொங்கல் செய்வாங்க' என்று சொன்னான். அதற்குப் பிறகு பொங்கலுக்கு என்ன செய்வாங்க என்று கேட்க 'தொட்டுக்க சட்னி செய்வாங்கன்ணு' பட்டன்ணு சொல்லிப்புட்டான் நானே ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்" என்று ஒரு சம்பவத்தை விபரித்தவர், குழந்தைகளுடனான ஒளிப்பதிவு அனுபவம் பற்றி பேசத் தொடங்கினார்.

"குழந்தைகளை தெரிவு செய்வது எல்லாம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கையில் தான் இருக்கு! அவங்க நல்லா பேசுற, துடுக்குத் தனமா இருக்கிற குழந்தைகளை கண்டுபிடித்து என்னிடம் அனுப்புவார்கள். குறிப்பாக ஒளிப்பதிவு தொடங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாகத்தான் நான் அந்த குழந்தைகளைப் பார்ப்பேன். குழந்தைகளுக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. நேரடியாக நிகழ்ச்சிக்கு போயிடுவோம், குழந்தைகளை பேச வைத்து விசயங்களை கறப்பதில் தான் நாம் திறமையைக் காட்டணும். அரை மணிநேர நிகழ்ச்சிக்காக ஆறு மணிநேரம் வரை குழந்தைகளோடு கஷ்டப்படணும். என்னடா குழந்தைகளோட பேசுறது கஷ்டமாணு நீங்க கேட்பது புரிகிறது.
ஆனா, எனக்கில்ல என் கஷ்டம் தெரியும்! கேமரா ஸ்டாட்டுன்ணு சொல்லி பேச தொடங்கும் போதுதான் எனக்கு உச்சா வருதுன்ணு ஒரு பையன் சொல்வான். சரி ஒருத்தன் தானே போய் வாடான்ணு சொல்லி அவனை கதிரையில் இருந்து இறக்கி விட்டுட்டு நிமிர்ந்து பார்த்தா மத்த கதிரையில உட்கார்ந்து இருக்கிறதுகளும் கையை தூக்கி ஒரு விரலை காட்டுங்க. அப்புறம் என்னா, எல்லாத்தையும் அவங்க அவங்க அம்மாக்கள் அழைச்சிட்டு போய் திரும்ப கூட்டிட்டு வந்து உட்கார வைப்பாங்க. அதுக்குப் பிறகு பேச தொடங்குவேன். திடீர்னு ஒரு குழந்தை அண்ணாச்சி எனக்கு தாகமா இருக்குன்ணு சொல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுப்போம். அந்த பிள்ளை தண்ணீர் குடிக்கிறத பார்த்தா மத்ததுக சும்மா இருக்குமா? அதுகளுக்கும் அப்பத்தான் தாகம் வரும். பிறகு எல்லோரும் தண்ணீர் குடிச்சு முடிய நிகழ்ச்சியை தொடங்குவோம்.

"நான் இரண்டு குழந்தைகளிடம் பேசி விட்டு மூணாவதா இருக்கிற குழந்தைகிட்ட பேசலாம்ணு நினைச்சி திரும்பினா, அது கதிரையிலேயே தூங்கிட்டு இருக்கும். அப்புறம் அந்தக் குழந்தையை எழுப்பி முகத்தை கழுவி விளையாட்டு காட்டி அதை பழைய நிலைமைக்கு கொண்டு வர ரொம்ப நேரம் எடுக்கும். பிறகு நிகழ்ச்சியை தொடருவோம். நான் ஒரு குழந்தையோட பேசிட்டு இருந்தா பக்கத்துல இருக்கிற குழந்தை மற்ற குழந்தையோட பேசி சிரிச்சிட்டு இருக்கும். சத்தம் போடாம இரும்மாணு சொல்லி அமைதிப்படுத்தி ஒளிப்பதிவு செய்ய போதும் போதுமென்றாகிவிடும். சில துறுதுறுத்த குழந்தைகள் அந்த உயரமான கதிரையிலிருந்து இறங்கி அவங்க அப்பா அம்மாக்கிட்ட ஓடிடும். சிலதுகள் அப்படி இறங்கும் போது கீழே விழுந்து அடிப்பட்டு கத்திக் கதறி.... அப்பப்பா.... அது மட்டுமா சில பையன்களோடு பேசிட்டு இருக்கும் போது திடீர்ன்னு வயித்துல குத்திட்டு எப்படி நம்ம பஞ்சின்னு கேட்பாணுங்க.... என்று சொல்லும் போதே அண்ணாச்சிக்கு மூச்சு வாங்கியது.

"உங்கள சிரிக்க வைக்க நான் படுற பாட்டை பாத்தீங்களாய்யா....?" என்கிறார் பரிதாபமாக...

"என்னோட இந்த கருப்பு நிறத்திற்கு எந்தப் புள்ளயாவது என்னை நெருங்குமா....? ஆனா இன்றைக்கு நான் எங்கு போனாலும் 'ஹாய் அண்ணாச்சி'னு கத்திட்டு குழந்தைகள் என்னிடம் ஓடி வருது. இதற்கெல்லாம் காரணம் குட்டிச்சுட்டி நிகழ்ச்சிதான். நான் நூறு படம் நடிச்சிருந்தா கூட இந்த புகழ் கிடைச்சிருக்காது" என்று சொல்லும் போதே அண்ணாச்சியின் முகத்தில் சந்தோசம்... மின்னுகிறது.

"ஏய் மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவிய" என்ற அந்த வரிகள் உங்களுக்கு சொந்தமானதா?

"சத்தியமா அது நம்மளோடதுதான். நிகழ்ச்சி தயாரிப்பாளர் 'டோன்ட் மிஸ் இட்'னுதான் சொல்லச் சொன்னாரு. நான்தான் நம்ம ஸ்டைலில் 'ஏய் மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவிய' என்று சொன்னேன். அதுவே ஓகே ஆயிருச்சு. ஆனா நான் பேசுறது திருநெல்வேலி தமிழ் கிடையாது. இது அண்ணாச்சியோட தமிழ். திருநெல்வேலி தமிழில் பேசினா யாருக்கும் புரியாது. அதனால் நான்தான் சினிமாவுக்காக கொஞ்சம் ஜிக்ஜாக் வேலையெல்லாம் பண்ணி இப்படி பேசுறேன்" என்று கூறியவர்,


"சிலோனுக்கும், திருநெல்வேலிக்கும் ஏதோ ஒரு சொந்தம் இருக்குங்க"என்று ஆரம்பித்தார்.

"ஏன்னா எங்க ஊருக்கு பக்கத்து ஊர்தான் நாகர்கோவில். கடலோர பிரதேசம். அங்கே ஒருமுறை வந்து பாருங்க... அவங்க பேசுற தமிழில் யாழ்ப்பாண வாடை அடிக்கும்.... நான் ஒருமுறை சுவிட்ஸர்லாந்துக்கு போனேன். அங்கே எல்லாமே இலங்கைத் தமிழர்கள்தான். நான் பேசிய தமிழை புரிஞ்சுகிட்டாங்க. ஆனா என்னோடு வந்த எங்க ஊர்க்காரர் பேசிய தமிழை அவங்களால புரிஞ்சுக்க முடியல.
 "அவர் என்ன கதைக்கிறார் விளங்கல்ல" என்று சுவிஸ் தமிழர்கள் சொன்னதை அண்ணாச்சி அப்படியே பேசி நடித்துக் காட்டினார்.

அண்ணாச்சியின் நிஜப் பெயர் இமானுவேல். கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமான போதுதான். அவரின் பெயர் இமானுவேல் என்பது சுருங்கி இமான் ஆகி இப்போ அண்ணாச்சியாக மாறிவிட்டதாம்.

"இப்போ சென்னைக்கு வந்து இருபத்தொரு வருடங்கள் ஆகிவிட்டது. பசி, பட்டினின்ணு நாலு வருசம் கஷ்டப்பட்டேன். சைதாப்பேட்டையில் ஒரு நண்பருடன் தங்கி இருந்தேன். மதுக்கடை, மளிகைக் கடைகளில் வேலை செய்தேன். அவங்க லீவு தர மாட்டாங்க. அதனால் என்னோட சினிமா ஆசையை நிறைவேற்ற அந்த கடைகளில் வேலை செய்தால் முடியாதுன்ணு நினைச்சு கையில இருந்த காசில் 1500 ரூபாவுக்கு தகுந்த மாதிரி ஒரு பழைய மூணு சக்கர சைக்கிள் வாங்கி ஐநூறு ரூபாயில் முதலீடு போட்டு மொத்தமாக இரண்டாயிரம் ரூபாயில் என் பயணத்தை தொடங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு அழுக்கு லுங்கியும், முண்டாபணியனும் போட்டுக்கிட்டு சென்னைத் தெருக்களில் கூவிக் கூவி காய்கறி விற்றேன். சுமார் பதினெட்டு வருடங்கள் அந்த காய்கறி சைக்கிள்தான் எனக்கு சோறு போட்டது. மூணு வருசத்திற்கு முன்பு வரை அந்த சைக்கிள்தான் என்னோட வாழ்க்கையாக இருந்தது" என்று சொன்ன போது அண்ணாச்சியின் கண்கள் கலங்கின.

அண்ணாச்சியின் மனைவியின் பெயர் ஆர்க்னஸ் பிரியா. அண்ணாச்சியின் ஒரே ஒரு மகளின் பெயர் ஜெபி சைனி. நான்காவது படிக்கிறாராம்.
"நான் கஷ்டப்பட்ட சமயத்தில் எனக்கு தோள் கொடுத்தவள் மனைவிதான். கஷ்டத்திற்காக தன்னோட நகை எல்லாம் கழற்றிக் கொடுத்தாள். அவளின் 25 பவுண் நகையும் அடகு கடைக்கு போயிடுச்சி. கடைசியில் தாலியையும் அடகுக் கடையில வச்சேன். இப்போதான் எல்லாத்தையும் மீட்டெடுத்து மனைவியிடம் ஒப்படைச்சி இருக்கேன் என்ற போது அவரின் வார்த்தைகளில் இருந்த, மனைவிக்கு மரியாதையை புரிந்து கொள்ள முடிந்தது.

சன் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு அறிவிப்பாளர் ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது அண்ணாச்சி மட்டும்தானாம். "அதோட ஒரு அழகான பொண்ணும், ஒரு அழகான பையனும் நுனி நாக்கில் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசித்தான் டீவி நிகழ்ச்சி பண்ண முடியுங்கிறத உடைச்சி கருப்பா, ரொம்பக் கேவலமா இருக்கிற எங்களைப் போன்றவர்களும் ஏரியா தமிழ் பேசி மக்கள் விரும்புகிற மாதிரி நிகழ்ச்சி பண்ண முடியும் என்கிறதை நிருபிச்சிருக்கோம்ல.... என்கிறார் பூரிப்போடு. உண்மைதான். தமிழக சூழலில் இது ஒரு சாதனை தான்.

No comments:

Post a Comment