Wednesday, May 7, 2014

பேயை கரைக்கலாமா, அடைக்கலாமா? 02

பேயை கரைப்பதன் மூலமே அதை ஒழித்துக் கட்டலாம்

பிடிக்கப்பட்ட பேயை கரைக்கலாமா, போத்தலில் அடைக்கலாமா என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. பேய், ஆவி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பேயை ஓட்டுவதற்கான சரியான வழிமுறை அதுவா, இதுவா என்ற கேள்வி, இந்த நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாவினால் செய்யப்பட்ட மனித உருவில் ஒரு மனிதரைப் பீடித்திருக்கும் பேயை அல்லது ஆவியை இறக்கி அதை முறைப்படி தண்ணீரில் கரைப்பதன் மூலம் பேயை ஒழித்துக் கட்டலாம் என்பது ஒரு வகையான பேயோட்டும் முறை. இதை விமர்சிப்பவர்கள், இது சரியல்ல பேயை தலைமயிரில் ஏற்றி அம்மயிரை கத்தரித்து போத்தலில் போட்டு அடைத்து ஆழமான குழியில் போட்டு மூடுவதே சரி என்கிறார்கள்.

மாவில் இறக்கி கரைப்பதுதான் சரி என்ற பக்கத்தைச் சேர்ந்த பூசாரி திலக்ராஜ் என்ன விளக்கத்தை வைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

தண்ணீர் விசேஷ சக்தி கொண்டது. ஒரு சாயத்தை நீரில் கரைத்தால் அதன் பின்னர் அதைத் திருப்பிப் பெற முடியாது. தண்ணீரில் கரைந்தது, கரைந்ததுதான். நீருக்கென நிறமோ, வாசனையோ, வடிவமோ கிடையாது. அது கடலுடனும் வானத்துடனும் தொடர்பு கொண்டது. இதனால்தான் நல்ல கருமமோ பாப கர்மமோ எதுவானாலும் அதை தண்ணீர் சாட்சியாக செய்கிறார்கள். பித்ருக்களுக்கு பிண்டம் கொடுப்பதும் அந்திம கிரியைகள் செய்வதும், அஸ்தியை கரைப்பதும், பாவ விமோசனம் பெறுவதும் தண்ணீரை பயன்படுத்தித்தான். தண்ணீரில் செய்யப்படும் கருமங்கள் மேலுலகில் பலன் தரக்கூடியவையாகக் கருதப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் பேயை, துஷ்ட ஆவியை தண்ணீரில் கரைப்பதே அதை ஒழித்துக்கட்டுவதற்கான சரியான வழி என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

புதைப்பதை எடுத்துக் கொள்வோம். இன்றைக்கு மயானத்தில் ஐந்து அடி ஆழத்துக்கு குழி தோண்டுவது என்பது சாதாரண காரியம் அல்ல. பொலிஸ் வரை சென்று நம்பும்படி விளக்கம் சொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியே புதைத்தாலும் அந்த இடம் புதை குழிக்காக தோண்டப்படாது என்று நிச்சயமாக சொல்ல முடியாது. யாராவது புதை குழிக்காக தோண்டி போத்தல் வெளியே வந்து திறக்கப்படுமானால்....?
மயிரைப் பிடித்து மரத்தில் ஆணியால் அறைவது இன்னொரு வழி. ஆணி கழன்று போகும் வாய்ப்பு உள்ளது. மேலும் பேய் வாழும் இடம் என்றும் பேய் மரம் என்றும் பெயர் ஏற்பட்டு மக்கள் அச்சப்பட வாய்ப்பு உள்ளது. நாம் கைகொள்ளும் கரைக்கும் முறை தவறிப்போக எந்த வாய்ப்புமே கிடையாது. அந்த மாவை மீன் சாப்பிடடு அதன் வழியாக பேய் மனிதனை பீடிக்கும் என்று ஐயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேய் அல்லது ஆவி என்பன இறந்த உடலில் வாழ்வதில்லை. தரைக்குக் கொண்டு வரப்படும் மீன் இறந்து விடுகிறது. எனவே அதை புசிப்பவனை பீடிக்க வாய்ப்பு இல்லை. தண்ணீரில் வாழும் தவளை, பாம்பு போன்றவை பேய்களால் பீடிக்கப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே எடுத்துக்கொள்ளும் வேலை சுத்தமாகவும் முழு நிவாரணம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதால்தான், மாவினால் செய்யப்பட்ட மனித உருவில் கட்டப்பட்ட பேய் அல்லது ஆவியை தண்ணீரில் கரைத்து அதற்கு ஒரு முடிவு தேடுகிறோம்.

இது என தாத்தா காலத்து முறை. இதற்காக நான் ஏனைய முறைகளைத் தவறு என்று சொல்லவரவில்லை. அது அவரவர் விருப்பம். முழு நிவாரணம் தரக் கூடியது என்பதை பரீட்சித்துப் பார்த்து அனுபவ மூலமாகக் கிடைத்த ஆதாரத்தை வைத்தே இதை செய்து வருகிறேன்.

No comments:

Post a Comment