Monday, May 5, 2014

கொழும்பின் சைவ உணவக வரலாறு -5

"ருசியான உணவை சாமானியனும் சாப்பிட வேண்டும் என்பதே என் வர்த்தக லட்சியம்"


கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்

கோல்டன் கபே ராமனின் குலதெய்வத்தின் பெயர் அக்னி அம்மாள். திருநெல்வேலி மூலைக்கரைப் பட்டியில் குடியிருக்கும் காவல் தெய்வம்.

"எனக்கும், என் குடும்பத்திற்கும் நல்லது கெட்டதுன்னா எல்லாத்தையும் அக்கினி அம்மாளிடம்தான் பகிர்ந்து கொள்வேன். அவள்தான் எங்கள் குடும்பத்தைக் காக்கும் கடவுள். நான் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு அக்கினி அம்மாளின் கோயிலை மாற்றியமைக்க வேண்டும் என்று என் மனதில் ஒரு தீர்மானம் போட்டேன். அதன்படியே அக்கினி அம்மாள் எனக்கு வழிவிட, பிற்காலத்தில் என் குலதெய்வம் அக்னி அம்மாளின் கோவிலுக்கு திருப்பணி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது" என்று சொல்லும் போதே ராமனின் கண்கள் பனிக்கின்றன. சைவ உணவகம் பற்றிய சில கேள்விகளை ராமனிடம் முன் வைத்தோம்.
"உணவகங்களில் வளர்ச்சி கொழும்பில் எப்படி தொடங்கியிருக்கும்?" என்பதே நாம் தொடுத்த முதற் கேள்வி.

"உணவகங்களின் தொடக்கம், கொழும்பில் தற்செயலாக அமைந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், கொழும்பிற்கு தூர இடங்களிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு உணவை சமைத்து சாப்பிட கால அவகாசம் இல்லை. அதனால், கொழும்பில் இருந்த வீடுகளில் உணவை தயாரித்து அந்த தொழிலாளர்களுக்கு கொடுத்திருப்பார்கள். பிறகு படிப்படியாக வேலையாட்கள் அதிகரிக்கவே தயார் செய்யப்பட்ட உணவுத் தேவையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம். அதன் பிறகே சிறிய கொட்டில்களில் தொடங்கப்பட்ட உணவகங்கள் இன்று பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும" என்ற ராமனிடம்,

சகல வசதிகளுடன் கூடிய சைவ உணவகம் அமைக்கும் உத்தேசம் கொழும்பு சைவ உணவக உரிமையாளர்களுக்கு இருக்கிறதா? யாழ்ப்பாணத்தில் வசதியான முழு அளவிலான சைவ உணவகம் இல்லை. அங்கு சமைக்கும் உத்தேசம் உள்ளதா? என்பதே நாம் தொடுத்த  அடுத்த கேள்வி.

"யாழ்ப்பாணத்தில் சைவ உணவகம் நடத்த எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் என்னால் அதை பொறுப்பேற்று நடத்த முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால் ஒரு பார்ட்னருடன் இணைந்து ஒரு தொழிலை நேர்த்தியாக செய்ய முடியாது. அதனால் அதை தவிர்க்கிறேன். உயர்தரமான ஒரு சைவ உணவகம் அமைக்கலாம்தான். ஆனால் அதில் ஐந்து இடியப்பம் ஒரு சாம்பாரையும் நூற்றி ஐம்பது ரூபாவுக்கும் ஒரு தோசை இருநூற்றி ஐம்பது ரூபாவுக்கும் விற்க வேண்டியிருக்கும். அப்படி விற்றால்தான் கட்டுபடியாகும்.

அந்த உணவை ஒரு சாதாரண ஏழையால் சாப்பிட முடியாது. காரில் வந்திறங்கும் பணக்காரர்கள் மட்டுமே பயனடைவார்கள். எனவே ஏழைகள் பயனடையாத ஒரு உணவகத்தை நடத்துவதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. நான் நடத்தும் ஹோட்டலில் ஏழையும், பணக்காரர்களும் சாப்பிட வேண்டும். சாப்பாடும் தரமாக இருக்கும். அதுவே எனக்கு மகிழ்ச்சி. பணத்துக்கு ஆசைப்பட்டு பெரிய த்ரீ ஸ்டார் சைவ உணவகத்தை தொடங்கி சாதாரண மக்களின் அன்பை இழக்க நான் விரும்பவில்ல" என்கிறார் ராமன். பாருங்கள், வர்த்தகத்திலும் அவர் சோஷலிஸ்டாகவே இருக்க விரும்புகிறார்.
நம்மைப் போல அல்ல தமிழகத்தில் அவர்கள் ஒரு முறையில் சாப்பிடுவார்கள். சைவ உணவை எந்த முறைப்படி சாப்பிட வேண்டும் என்பதை சொல்லித்தர முடியுமா?

"அது ரொம்ப சின்ன விஷயம். முதலில் சாதத்தைப் போட்டு அதனோடு சாம்பார் சேர்த்து சாப்பிடணும் அதன் பிறகு ரசம், சேர்க்கணும் அப்புறம் மோர், பிறகு கடைசியாக பாயாசம் சாப்பிட வேண்டும். இதில் ஒரு விசயத்தை நீங்கள் கவனிக்கணும்.

ஒரு முழுமையான சைவ உணவு என்பது சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அவியல், பப்படம், மோர் மிளகாய், ஊறுகாய், பாயாசம் உள்ளிட்டவை அடங்கும். இந்த சாப்பாட்டு முறைதான் தமிழகத்திலும் நம் நாட்டிலும் இன்றுவரை இருந்து வருகிறது. சாப்பிடும் போது முதலில் சாம்பாரோடு, கூட்டு, பொரியல், அவியல் உள்ளிட்ட கறி ஐட்டங்களை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம். அதோடு பப்படம், மோர் மிளகாய், ஊறுகாயையும் தொட்டுக் கொள்ளுங்கள். குழம்பு வகைகளை இங்கே கறி என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் கறி என்றால் அது இறைச்சி வகையை குறிக்கிறது. எனவே தமிழகத்திற்கு செல்பவர்கள், சைவ உணவகங்களில் கறி என்று கேட்காதீர்கள். அப்புறம் பிரச்சினை ஆகிவிடும்" என்று சொல்லி சிரிக்கிறார் ராமன்.

தமிழர்களை விட சைவ உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்கள் சிங்களவர்களா? அவர்கள் அதிகம் விரும்பி உண்பது என்ன?

"ஆமாம், தமிழர்களை விட சிங்களவர்கள்தான் அதிகமாக சைவ கடைகளுக்கு வருகிறார்கள். அவர்கள் சோறு சாப்பிடுவது ரொம்பவும் குறைவு. இட்லி, தோசை, பூரி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் முக்கியமாக உணவின் தரத்தையும் கடையின் சுத்தத்தையும் ரொம்பவே எதிர்பார்ப்பார்கள். அதை நான் முடிந்தளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறேன்" என்கிறார் ராமன் பூரிப்போடு.

மரவள்ளி, பொலஸ், சர்க்கரை வள்ளி, வாழைப்பூ, கொஹில போன்ற பண்டங்களை சைவ உணவில் ஏன், சேர்ப்பதில்லை?

"அப்படி அல்ல. கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட வகைகளை சைவ உணவில் சேர்க்கிறோம். ஆனால் வாரத்திற்கு ஒரு முறைதான். நீங்கள் குறிப்பிட்டவற்றில் ஒன்று உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்கிறோம். அதனால் உங்களுக்கு அவை பற்றித் தெரியவில்லை. மேற்கூறிய உணவு வகைகளை தினசரி சாப்பாட்டில் சேர்த்தாலும் வாடிக்கையாளர்கள் முகம் சுழிப்பார்கள். அதனால் வாரத்திற்கு ஒருமுறை என்று தீர்மானித்து இருக்கிறேன். அதோடு நல்ல பொலஸ் கிடைப்பது அரிது அப்படி கிடைத்தால், சமைப்போம், கோலிபிளவர் மலிவாகக் கிடைக்கும் காலத்தில் அதனையும் சேர்த்துக் கொள்கிறோம்" என்ற ராமன், "மலிவு விலையில் தரமான உணவுகள் கிடைத்தால் சமைத்துக் கொடுக்கலாம். அதற்காக அதிக விலையில் உணவுப் பொருட்களை வாங்கி விலையையும் கூட்டி வாடிக்கையாளரை கஷ்டப்படுத்தக் கூடாது" என்று திரும்பவும் சோஷலிசம் பேசினார்.
வெஸ்ட்டன், சைனீஸ் சமையலுக்கு கற்கை நெறிகள் உள்ளன. சைவ உணவகத்துக்கு, குறிப்பாக சமையல் கலைக்கு இந்தியாவிலாவது கற்கை நெறி உள்ளதா? பார்த்துப் பழகும் அனுபவ குக்கிங்தான் இன்றைக்கும் உள்ளதா? என்ற ஒரு பெரிய சந்தேகத்தை கிளப்பினோம்.

"சைவ உணவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றுவரை ஏற்பட்டதில்லை. தமிழர் பாரம்பரிய முறையிலேயே அவை இன்று வரை சமைக்கப்பட்டு வருகிறது. அதனால் சைவ உணவிற்கான கற்கை நெறிகள் என்று ஏதும் இல்லை. இனியும் வரப்போவதுமில்லை. சைவத்தை புதுசுக்கு மாற்ற முடியாது. சைவம் என்றால் வாழை இலைதான். அதற்காக புதுசுக்கு மாறுகிறோம் என்று பிளாஸ்டிக் இலைகளை போட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூடு பறக்க வாழை இலையின் மனத்தோடு சோறு சாப்பிடவே எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ஒரு நியாயமான விளக்கம் தந்தார் ராமன்.

வாழை இலை, சோறு, சூடு, வாசம் நினைத்தாலே இனிக்கிறதா.... உடனே கோல்டனுக்கு போய் சாப்பிட்டு பாருங்க...

( சுபம்)

No comments:

Post a Comment