Sunday, May 4, 2014

வேடந்தாங்களில் அதிரும் பறை 04

"காஞ்சி சங்கர மடம் ஒரு காலத்தில் பௌத்த மடமாக இருந்ததாம்"


மணி  ஸ்ரீகாந்தன்

'நெருப்புச் சூட்டில் பறை மேளம்
நேசத்தோடு சிரிக்குது
நெஞ்சு கூட்டில் உந்தன் முகம்
நெதமும் என்னை வதைக்குது
வட்ட நிலா வட்டப்பறை வட்டப்பொட்டு
அதை வச்சிட மாட்டியா என்னை தொட்டு'


என்ற மணிமாறனின் பாடல் வரிகளோடு, மகிழினியின் குரலும், பறையோசையும் காஞ்சிபுரம் வேடந்தாங்கல் பகுதியை அதிரவைத்துக் கொண்டிருக்க,

புத்தர் கலைக்குழு என்ற பெயர் எப்படி வந்தது என்ற எமது சந்தேகத்தை மணிமாறனிடம் கேட்டோம்.
"நான் வாழ்கிற இந்த காஞ்சிபுரம் மாவட்டம் பௌத்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டிருப்பதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளனகாஞ்சி சங்கரமடம் முற்காலத்தில் பௌத்த பீடமாக இருந்ததாகவே சொல்கிறார்கள். அதோடு உலகத்தினுடைய மானுட சிந்தாந்தத்தை வலியுறுத்திய தலைவனாக புத்தர் விளங்குகிறார்.

இன்றைக்கு மணிமாறன் பேண்ட், சட்டை போட்டு ஏன் நீங்க்ள கூட காலுக்கு காலணி போட்டு நாற்காலியில் சரிசமமாக நாம் உட்கார்ந்து பேசுவதற்கு டாக்டர் அம்பேத்கார்தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் இன்று தமிழ் நாட்டில் ஒரு மூலையில் செத்த மாட்டுக்கு தோல் உரித்திருப்பேன். அல்லது மலம் அள்ளியிருப்பேன். அந்த மகத்தான புத்தனை தமது ஆசான் என்கிறார் அம்பேத்கார். அம்பேத்காருக்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். அவரின் உறவினர் பெயர் ரெட்டை மலை சீனிவாசன். அவரின் வீடு இங்கிருந்து (வேடந்தாங்கல்) 7 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறது. இப்படி யார் யாரெல்லாம் சாதி என்கிற சிறைக்கம்பியை உடைத்து என்னை வெளியே எடுத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் புத்தனை பிடித்திருக்கிறது. அதனால் எனக்கும் பிடித்தது. இங்கே இருக்கிற இசைக்குழுக்கள் மாரியம்மா, செல்லியம்மா, ஒண்டி வீரன், கருப்புசாமின்ணு பெயர் வைக்கும் போது நான் ஏன் புத்தர்ணு வைக்கக் கூடாது?
நிறையப் பேர் ஜீசஸ் கலைக்குழுன்ணு வச்சிருக்கலாமே என்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவுக்கு புத்தன் தாத்தா. இந்திய பெருநிலத்தில் பிறந்தவன். இயேசு இந்தியாவுக்கு வந்த போது பௌத்தத்தை அறிந்து கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதோடு புத்தன் என் சொந்தக்காரன். என் பாட்டன். அவரின் பெயரை வைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று மணிமாறன் சொன்ன போது அவரின் முகத்தில் ஒரு பூரிப்பு பிரகாசமாக...

நீங்கள் கடந்து வந்த பாதையில் அவமானங்களை சந்தித்திருக்கிறீர்களா...? என்று கேட்டோம்.

"நான் கடந்து வந்த பாதை கரடு முரடானது. அதில் அவமானங்கள்தான் அதிகம். அவமானத்தின் அடையாளம் என்று ஆதி கருவியை சாதிக் கருவியாக ஒதுக்கிய இந்த சமூகத்திடமே மீண்டும் அந்த பறையைக் கொண்டு சென்றிருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு அவமானங்களைக் கடந்திருப்பேன்!" என்று சொல்லி பெருமூச்சோடு நிறுத்திய மணிமாறன் சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
"அசிங்கத்தையும் ஆபாசத்தையும் பேசினால் ஆயிரம் பேர் கூடுவார்கள் கேட்பதற்கு. ஆனால் அம்பேத்கர் பற்றி பேசினால் இரண்டு தலைதான் தெரியும். எனினும் நான் இந்த சமூகத்தை விடவில்லை. என்னை விட்டால் இவர்களுக்கு ஒரு நாதியும் இல்லை என்று நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கிறேன். அவமானங்களால் நான் சோர்ந்து விடவில்லை" என்று சொல்லும் போது அந்த வார்த்தைகளில் இந்த பாழாய்ப் போன சமூகத்தை சிந்தனையோட்டத்தை மாற்றத் துடிக்கும் ஒரு வெறி தீயாக எரிவதைப் பார்க்க முடிகிறது.
 புத்தர் கலைக்குழுவின் பறை இசைப்  பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் முதல் பயிற்சியே, மாட்டுத் தோலை தொட்டு எடுத்து வட்டத்தில் வைத்துக் கட்டுவதுதான்.

"இறந்த மாட்டின் துர்நாற்றம் அடிக்கும். தோளிலிருந்து பிறப்பதுதான் பறை என்பதையும், அதனை கட்டுவது எவ்வளவு சிரமமானது என்பதையும் புரிய வைப்பதற்காகத்தான் அப்படி ஒரு பயிற்சியைக் கொடுக்கிறேன். அந்தப் பாடத்தை பூர்த்தி செய்த பிறகுதான் அவர்கள் கையில் சிண்டு குச்சியும், அடிக்குச்சியையும் கொடுத்து பறை முழங்க வைப்போம்" என்று சொல்லும் மணிமாறனுக்கு பக்க பலமாக அவரின் மகன்கள் இனியனும், சமரனும் இருக்கிறார்கள். பறை இசையில் அப்பாவை மிஞ்சு விடுமளவுக்கு பறையை பிய்த்து உதறுகிறார்கள்.

"பறையில் எந்தளவிற்கு அடி, அடி என்று சொல்கிறேனோ அந்தளவிற்கு படி, படின்ணு சொல்கிறேன். அதே மாதிரி நன்றாக படிக்கிறார்கள். படிப்பில் பட்டம் பெற்ற பின்பும் பறை இசைப்பார்கள்" என்று நம்பிக்கையோடு பேசும் அவர் பறை ஆட்டத்திற்கான சில தாள வகைகளையும் குறிப்பிட்டார்.

'தக்கு உக்கு தா
தக்கு உக்கு தக்கதின்
ஜங் ஜங் நகுரி நகா'

இவற்றோடு ஒத்தையடி என்பது,

'தும் தக்கு.....தா.....தக்கு
தா தக்கு.... தா.... ஜன ஜன
தும் தக்கு..... தா.....தக்கு.....தா'

அவரின்  தாளக்கட்டு
கேட்பவரை ஆட்டம் போடத்தான் செய்கிறது.
எமது இந்த உரையாடலுக்கு இடையில் இணைந்து கொண்டவர், வனவேந்தன். ஓசூரிலிருந்து தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

"நான் அண்மையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு போயிருந்தேன். அங்கே விடுதலை பத்திரிகையை பார்த்த போது அதில் மணிமாறனின் பறை  இசை பற்றிய விளம்பரம் வந்திருந்தது. இந்த இசையை எனக்கு பிறகு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் என் மகனையும் அழைத்து வந்தேன்" என்று சொல்லும் வனவேந்தன் ஒரு பெரியாரிஸ்ட். அதாவது பகுத்தறிவுவாதி.

பறை கற்க வந்திருந்த மதுரையை சேர்ந்த சமுத்திர பாண்டியன், "நான் இப்போ இரண்டாவது தடவையாக பறை இசை படிக்க வந்திருக்கேன். வேப்பேரி
பெரியார் திடலில் நடந்த பறை வகுப்பிலும் கற்றேன். இன்னும் நிறைய பறை நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும்" என்று ஆர்வத்தோடு பேசும் அந்த இளைஞனை பார்க்க எமக்கு வியப்பாக இருந்தது. தமிழகத்தில் மணிமாறன் செய்து வரும் சேவையை பாராட்டியபடி வேடந்தாங்கலில் இருந்து பறந்தோம்.

(முற்றும்)

No comments:

Post a Comment