Friday, May 9, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 03

சபையோரைக் கட்டிப்போட்ட   சூஃபி இசைப்பாடல்கள்


அருள் சத்தியநாதன்

இதுவரை நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்ற சர்ச்சையை கையில் எடுத்துக்கொண்டு, இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்ற நிலைப்பாட்டை அடித்துச் சொல்லி நிறுவிய மாநாடு இந்த கும்பகோண மாநாடு என்பதில், அதில் கலந்து கொண்ட அனைவருமே பெருமைப்படலாம்.
ஏனைய மாநாடுகளைப் போலல்லாது மூன்று நாட்களும் இசையை அடிப்படையாகக் கொண்டதாக, இஸ்லாமிக் இசையின் வகிபாகத்தின் ஆழ அகலங்களை ஆராயும் மாநாடாக நடத்தியதில் அதன் ஏற்பாட்டாளர்கள் நெஞ்சுரம் மிக்கவர்களாகவும் தனிச் சிறப்புக் கொண்டவர்களாகவும் மிளிர்கிறார்கள் என்று உரைப்பதில் எவருக்கும் எந்தத் தயக்கமும் இருக்க முடியாது. இப்படி ஒரு யோசனையை முன்வைத்த கவிக்கோவை பாராட்ட வேண்டும்.

இரண்டாம் நாள் இரவு இஸ்லாமிய இசை வடிவங்கள் அரங்க நிகழ்வுகளாக மேடையேற்றப்பட்டன. இஸ்லாத்தில் இசை ஹராம் என்று ஒரு வாதம் இருக்கும் அதே சமயம், இசையில் இஸ்லாம் பிரிக்க முடியாதபடி எந்த அளவுக்கு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இந்த இசை வடிவங்களை செவி குளிரக் கேட்டபோது எமது அறிவுக்குப் புலப்பட்டது.

புர்தாஷரீஃப்,  ஃபக்கீர்ஷா பாடல்கள், தாயிராகளி, திருமண பைத், சூஃபி ஞானப்பாடல்கள், உருது ரிபாயி முர்ஷித், ரபியுல் வசந்தம், இந்துஸ்தானி வாசத்தில் இஸ்லாமிய தமிழிசை என அடுக்கடுக்காக அவை மேடையேறின. இலங்கையில் இருந்து சென்ற இஸ்லாமியர்கள் இவற்றில் சிலவற்றைக் கேட்டிருக்கலாம். கேள்வி ஞானம் இருக்கலாம். ஆனால் இந்த இசை நிகழ்ச்சிகளை அனேகமாக அவற்றின் உச்ச சிறப்புகளோடு மேடையில் காணவும் கேட்கவும் கிடைத்த பொன்னான வாய்ப்பு இதுவாகவே அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
ஃபகீர் பாடல் இசைக்கும் பாடகர்கள்
 சென்னை, இர்பானியா ராத்திப் ஜமாத், ரிபாயி குழுவினர் நிகழ்த்திய ரிபாயி முர்ஷித் என்ற உருது சூஃபி இசையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பாடல்களை சுமார் ஒரு மணித்தியாலகத்துக்கும் மேலாக உச்சஸ்தாயி குரலில், சொல்லில் அடங்கா ரபான் இசை அதிர்வுகளுடன் அந்த இளைஞர்கள் பாடிய போது அதை செவி மடுத்த சபையினர் இறங்கிப் போயினர். லயத்துக்கு ஏற்ப சபையோர் கைதட்டத் தொடங்கினர். சிலர் மேடையேறி ரூபா நோட்டுகளை வீசினர். அக்கட்டத்தையே இசை ஒரு பேரானந்தத்துக்குள் இட்டுச் சென்றது. இத்தனைக்கும் பெரும்பாலானோருக்கு ஒரு வரி உருதுகூட புரிந்திருக்காது. ஆனால் நல்லிசை என்பது மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் நாடி, நரம்புகளை சுண்டி இழுத்து இருக்கைகளில் உறைந்து போகச் செய்தது.

மூன்றுநாள் மாநாட்டிலும் உடல் சுகவீனமுற்ற நிலையிலேயே கவிக்கோ பங்கு பற்றியிருந்தார். ஆனால் இரண்டாம் நாள் இரவு இந்த இசை நிகழ்ச்சி முடிவுற்று பரிசளிப்பு, பாராட்டுகள் முடிவடையும் வரை அவர் அமர்ந்திருந்தார். பின்னர், தான் மெய்யுருகிப் போனேன் என்றும் சாவு வருமானால் இந்த நேரத்தில் வரட்டும் சந்தோஷமாகப் போகிறேன் என்று தான் எண்ணியதாகவும் அவர் கூறியதாக ஒருவர் என்னிடம் கூறினர். அங்கே பாடப்பட்ட சூஃபி ஞானப் பாடல்கள் ஒரு துள்ளாட்ட கதியில் வேகமாக நம்மை இழுத்துச் செல்வது போலத் தோன்றினாலும் உண்மையில் அவை இறைவனை இரைஞ்சும் பாடல்களாக இருப்பதே வழக்கம் என்று உருதுவில் பரிச்சயமான ஒருவர் கூறினார். கவிக்கோ அப்துல் ரஹ்மான் பக்கத்தில் இருந்தவர்களிடம் இப்படிக் கூறினாராம்:
மாநாட்டு மலர் வைக்கப்பட்டிருக்கும் பையை
இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர்
சாஜஹான் கவிஞர் அன்வர்டீனிடம் வழங்குகிறார்.
 'இவர்களுக்கு உருது புரிந்திருந்து பாடல்களின் அர்த்தம் தெரிந்திருந்தால் இப்படிக் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கமாட்டார்கள். இவை மனிதனின் வேதனைகளைத் தெரிவித்து இறைவனின் அருளுக்காக இரைஞ்சும் பாடல்கள்' என்றாராம். அவருக்கு உருது வரும்.

இரண்டாம் நாள் இரவு குளிர்க்குளிர நிறைய இசையை அனுபவித்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிய அனைவருமே நெஞ்சம் நிறைந்திருந்தனர். இது, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.

மூன்றாம் நாள் மேலும் ஒரு படி மேலே சென்ற ஏற்பாட்டாளர்கள், மாநாடு நடைபெற்ற டி. எஸ். மஹாலின் முன்பாக இருந்த திடலில் ஒரு இசைமேடை அமைத்தார்கள். நம்மூரில் ஒரு திறந்தவெளி இசை நிகழ்ச்சியை நடத்த என்னென்ன அரங்கு, உபகரண ஏற்பாடுகள் தேவையோ அத்தனை நவீன உபகரணங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. மூன்றாம் நாள் மாநாடு நிறைவுற்றதும் இரவு ஒன்பது மணிக்கு மேல், இஸ்லாமிய பாடல்கள் மட்டும் இசைக்கப்படும் மேற்கத்திய இசைக்கருவிகளுடன் கூடிய, ஒரு இன்னிசை நிகழ்ச்சி நடுநிசி வரை நடைபெற்றது. எமது பி. எச். அப்துல் ஹமீத் இந்நிகழ்ச்சிக்கு அறிவிப்பாளராக இருந்து சிறப்பு செய்தார். இசையமைப்பாளர் தாஜ்நூரின் 'அன்பே இஸ்லாம்' என்ற இசைத்தொகுப்பு இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த இன்னிசை விருந்துக்கு இசை வழங்கி வரும் தாஜ்நூரே ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ. ஆர். ரேஹானா இதில் கலந்து கொண்டு பாடினார். மிரமிக்கச் செய்யும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே பார்வையாளர்களாக வீற்றிருந்தோரில் பலருக்கு இது முதல் அனுபவமாக இருந்திருக்கலாம்.

இசை முரசு ஈ. எம். ஹசீபா இஸ்லாமிய பாடல்களைத் தன் கணீர் குரலில் பாட ஆரம்பித்த போது அவரை இகழ்ந்தவர்கள் பலர். மதத்துக்கு விரோதமாக செயல்பட்டு பணம் சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் பின்னாளில் அவரை விமர்சித்த வாய்களே 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்று முணுமுணுக்கத் தொடங்கின. பாடல் புனைதல், இசையமைத்தல், பாடுதல் ஆகிய துறைகளில் ஈடுபட்ட எல்லா இஸ்லாமியரும் இந்தப் பிரச்சினைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

இஸ்லாமியப் பாடல்களை, இசை முரசை ஞாபகப்படுத்தும் வகையில், வெற்றிகரமாகப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நமது கலைக்கமலும் இத்தகைய எதிர்ப்புகளை எதிர் கொண்டிருக்கலாம்.

இசை ஹராமா, ஹலாலா என்ற சர்ச்சை தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்ற போதும், இந்த சந்தேகங்களுக்கு அப்பால் இஸ்லாம் பரவிய எல்லா நாடுகளிலும் இஸ்லாமியர் மத்தியில் இசை பிரிக்க முடியாத இடத்தை மிக நீண்ட காலமாக வகித்து வந்திருக்கிறது. வகிக்கவும் செய்கிறது. அவ்வாறானால், ஏற்கனவே உலகெங்கும் நிலவி வருகின்ற ஒன்றைத்தான் இந்த கும்பகோணம் இஸ்லாமிய மாநாடு, தமிழர்கள் மத்தியில் ஒரு ஆய்வுப் பொருளாக அறிமுகம் செய்து, இஸ்லாத்தின் இசை மரபு என்ற பொருளில் பல்வேறுபட்ட கோணங்களிலான ஆய்வுகளை முன்வைத்தது.

இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது. தாவரங்களே இசையை விரும்பும் போது இஸ்லாமியர்களை அது ஈர்க்காமல் இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதாக இம்மாநாடு வடிவமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாடு தொடர்பாக இஸ்லாமிய இலக்கியக் கழகம் வெளியிட்டிருந்த ஆய்வுக் கோவையில் 93 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்ததோடு இதில் இடம்பெறாத கட்டுரைகள் பலவற்றை மாநாட்டு மலரிலும் இடம்பெறச் செய்திருந்தார்கள். இம்மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இக்கட்டுரைகள் இஸ்லாத்தில் இசைமரபு பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசுவதாய் உள்ளன. இக்கட்டுரைகளைப் படிக்கும் ஒருவரால் இசை வழியாக இஸ்லாம் ஆற்றியிருக்கும் இலக்கிய பணிகளை விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

சூஃபி பாடல்களை இசைத்து மயக்கிய
பாடகர்கள்
இஸ்லாமியரின் இந்திய வருகை 12, 13 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் நிகழ்கிறது. டில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலம் மற்றும் முகாலய பேரரசு காலப்பகுதியிலும் இந்திய இசை மரபில் அரேபிய இசை வடிவத்தின் தாக்கம் நிகழ்கிறது. இதன் விளைவாக இந்துஸ்தானி இசை மரபு உருவாயிற்று என்று தனது சூபி இசை பற்றிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறர் ஹெச். ஜி. ரசூல். இந்த இந்துஸ்தானி இசையை பாடும் இந்து மதக் கலைஞர்கள் பண்டிட்டுகள் எனவும் இஸ்லாமியர்கள் உஸ்தாத்துகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்த இசை வடிவம் பேணப்படுகிறது. கவ்வாலி (Qawwali) கஸல் (Ghazals) ஆகிய காவிய இசை வடிவங்களுக்கு இது வித்திட்டது.
13 ஆம் நூற்றாண்டில் அமீர் குஸ்ரு, வேதகால இசையிலிருந்து அடிப்படைகளை உள்வாங்கியும், பாரசீக இசை மரபின் நுட்பங்களை ஒன்றிணைத்தும் கவ்வாலி இந்துஸ்தானி  இசை வடிவத்தையும், சிதார் நரம்பு இசைக் கருவியின் பயன்பாட்டையும் ஒன்றுபடுத்தினார். பாரசீக இசை மரபை தெற்காசிய இசை மரபுடன் இணைந்தொரு புது வடிவமாய் கவ்வாலி இசை வடிவம் அறிமுகமானது.

அக்பர் ஆட்சிக்காலத்தில் இசையும் நடனமும் முக்கியத்துவம் பெற்றன. அக்பர் அரசவை இசைக் கலைஞன் தன்சேன் நிகழ்த்திய ராக ஆலாபனைகள் வரலாற்று குறிப்புகளில் இடம்பெற்றன. இந்து மற்றும் முஸ்லிம் மன்னர்களின் வீழ்ச்சியின் பின்னரும் இந்துஸ்தானி இசை பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்துஸ்தானி ராக அடிப்படையின் கூறுகளாக ஏழு சர்கம்கள் (ஸரிகமபதநிஸ) அமைகின்றன. கர்நாடக இசையில் இது ஏழு ஸ்வரங்களாகின்றன.

இவ்வாறு பயனுள்ள பல தகவல்களை ரசூல் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)   

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 04

No comments:

Post a Comment