Tuesday, April 15, 2014

அங்காடித்தெரு மகேஷ்சுடன் ஒரு சந்திப்பு....

"கடலை விற்க வேண்டாம் என அப்பாவிடம் நான் சொல்ல மாட்டேன்!"


மணி  ஸ்ரீகாந்தன்

அங்காடித்தெரு மகேசுக்கும் ஆருஷிக்கும் இடையில் ஏதோவாம் என்று அரசல் புரசலாக ஒரு செய்தி பரவி வந்தது. முகர்ந்து பார்த்தோம். அப்படித் தானோ என்று எமக்குப் பட்டது.

அடித்தளம், வேல்முருகன் போர்வெல் என்று தொடர்ந்து இரண்டு படங்களில் மகேசும் ஆருஷியும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள் என்பது மேலதிகத் தகவல். அவர்கள் இருவருக்குமான நட்பின் அடித்தளம் மிகவும் உறுதியாக இருப்பதாக வேறு கோடம்பாக்கத்தில் ஒரு புகை கிளம்பிக் கிடக்கிறது. உண்மையிலேயே அந்த இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சோ... என்ற உண்மையை கண்டறிய அங்காடித்தெரு மகேசைத் தேடி சென்னைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரை சென்னை கே. கே. நகரில் வைத்து ரவுண்டு கட்டினோம்.

"புகை வருதே, அப்போ பத்திக்கிச்சா இல்ல யாராவது பத்த வச்சுட்டாங்களா?" என்று ஆருஷி பற்றி அவரிடமே விசாரித்தோம்.

"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! எங்க ரெண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கு. வேற ஏதும் இல்ல. சும்மா இவங்களே கொளுத்திப் போடுறாங்க. இப்போதைக்கு எனக்கு லவ் பண்ணுற ஐடியாவே இல்லை. முதலாவதாக எனக்கு சினிமாவில் ஒரு நல்ல பேர் கிடைக்கனும் அதற்காகத்தான் உழைக்கிறேன். அப்புறம்தான் மற்றது எல்லாம்...." என்று தடாலடியாக மறுக்கிறார் மகேஷ்.

"அப்போ நெருப்பில்லாமல் புகை வருமா மகேஷ்?"

அதற்கு, "ஏன் ஸ்மோக் மெஷின்ல இருந்து கூட வரலாமே"  என்கிறார் நக்கலாக...

திருநெல்வேலி பக்கமாக ஒரு கதாநாயகனை தேடி வந்த இயக்குநர் வசந்த பாலனின் கண்ணில் சிக்கியவர்தான் இந்த மகேஷ். பாஸ்கட் போல் விளையாடிக்கொண்டிருந்த ஒரு துருக்குத்தனமான இளைஞனை திடீரென்று 'அங்காடித்தெரு' படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவாக்கிய பெருமை இயக்குனரையே சாரும்.

"நமக்கு நடிப்பு வாசனையே கிடையாதுங்க.... திடீரென்று கேமராவுக்கு முன்னாடி நிற்க வேண்டியதாக போச்சு! இயக்குனர் சொன்னபடி செய்தேன். பிறகு படத்தை திரையில் பார்த்த போது எனக்கே பிரமிப்பா இருந்தது. படிப்பிடிப்பில் எனக்கு நடிகை அஞ்சலி நிறைய நடிப்பு விசயங்களை சொல்லித் தந்தாங்க. எனக்கு சினிமாவில் ரோல் மொடல் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் சினிமாவில் நடிக்கணும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. விளையாட்டு வீரனாக வரணும்னுதான் விரும்பினேன்" என்று சொல்லும் மகேஷின் சொந்த ஊர் திண்டுக்கல். சகோதரி திருமணம் முடித்து சென்று விடவே அப்பா சுப்ரமணியம், அம்மா மகேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ்.
"எங்க ஊர் தியேட்டர்களில் எண்பதுகளில் வெளியான படங்களைத் தான் திரையிடுவாங்க. நானும் என் நண்பர்களோடு சேர்ந்து நிறைய இடைக்கால படங்கள் பார்த்திருக்கேன். சினிமா நடிகனாகி விட்டதால என் சுதந்திரம் பறிபோய் விட்டது. எங்க ஊர்ல சுதந்திரமா நடமாட முடியலை" என்று பெருமூச்சு விடுகிறார் மகேஷ்.

மகேஷின் அப்பா சுப்ரமணியம் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள லக்ஷ்மி தியேட்டர் வாசலில் கடலை விற்கிறாராம். இதுபற்றி மகேஷிடம் கேட்டோம்.

"ஆமா... எங்கப்பா என் தாத்தா எல்லோரும் அந்தக் காலத்தில் இருந்து கடலை வியாபாரதான் செய்து வந்தாங்க. இன்னைக்கும் எங்கப்பா அதே வியாபாரம் தான் செய்கிறார். நானும் சில சமயங்களில் அப்பாவோடு கடலை வண்டியில் வியாபாரம் செய்திருக்கிறேன். அந்த வியாபாரத்தை விடச் சொல்லி அப்பாவிடம் என்னால் சொல்ல முடியலை. நானும் அந்த கடலை வியாபார வருமானத்தில் சாப்பிட்டு வளர்ந்தவன் தான். அப்பாவின் விருப்பத்தை தடுக்கவும் கூடாது. என் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடும்போது அப்பா வெளியே கடலை விற்றுக் கொண்டிருப்பாராம்.

அவரை அடையாளம் காண்பவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசும் போது அது அவருக்கு ரொம்பவும் பெருமையாக இருக்குமாம்" என்று சிலிர்த்துக் கொள்கிறார் மகேஷ். இதைக் கேட்ட போது, இலங்கையன் என்ற வகையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் ஒரு நடிகன், தன் அப்பா தியேட்டருக்கு எதிரே கடலை வியாபாரம் செய்வதாகவும் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் உங்கள் மகன் நடித்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் போது அது அவருக்கு பெருமையைத் தருகிறது என்றும் மிக இயல்பாக சொன்னபோது இது இலங்கையில் சாத்தியமா? என்ற கேள்வி என்னில் எழுந்தது. சாத்தியமே இல்லை. ஏனெனில் நாம் முகமூடிகளை அணிந்து ஷோ காட்டுவதில் கில்லாடிகள்.

தற்போது கஞ்சா கருப்புவின் தயாரிப்பில் மகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் வேல்முருகன் போர்வெல் படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார். படம் வெற்றி பெற்று மகேஷ் வாழ வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment